‘ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு நாவல்தான்’ என்று சாதாரணமாக சொல்வதை எல்லோரும் கேட்டிருக்கலாம். அதாவது ஒருத்தர் தான் வாழ்ந்த வாழ்க்கையை எழுதிவிட்டால் அதுவே நாவலாகி விடும் என்கிற பொருளில். ஆனால் இந்தக் கூற்றில் மற்றொரு அர்த்தமும் வெளிப்படுவதாக எனக்குப் படுகிறது. அதாவது ஒவ்வொருத்தர் வாழ்க்கையும் ஒரு புனைவுதான் என்று சொல்வதாகப் படுகிறது. எப்படியென்றால் நம் வாழ்க்கையை வடிவமைப்பது நாமல்ல. வாழ்க்கை குறித்து ஏற்கெனவே உற்பத்தி செய்து காப்பாற்றுப்பட்டு வருகின்ற கருத்தாக்கப் புனைவுகளின் வழிதான் நாமும் வாழ்ந்துவிட்டுப் போய்ச் சேர்கிறோம். எல்லாவற்றையும் நாம்தான் தேர்ந்தெடுக்கிறோமென்று நினைத்து இயங்குகிறோம். ஆனால் தேர்ந்தெடுத்தலின் விதிமுறைகள் நம் கைக்குள் அடங்குவதாக இல்லை. அது நமக்கு வெளியே தன்னிச்சையான ஓர் இயக்கம் கொண்டிருப்பதாகப் படுகிறது. அந்தத் தன்னிசையான வெளி என்பது நம்முடைய மரபணுக்கள், மொழி, பண்பாடு, மதம், கலை இலக்கியம், நாம் வாழும் காலம் முதலியவற்றின் கூட்டுக் கலவையில் உருவாகி இயங்குவதாகத் தோன்றுகிறது. சிவகாமியின் ‘உண்மைக்கு முன்னும் பின்னும்’ என்று சுயவரலாற்று நாவல் என்று கூறப்படுகின்ற ஒரு பாணியில் எழுதப்பட்டுள்ள இந்த நாவலை வாசித்து முடித்த போது, எனக்கு இப்படித்தான் தோன்றியது. தன்காலச் சமூக நிகழ்வுகள் எனும் பேரியாற்று வெள்ளத்தில் விழுந்த ஒரு மிதவையாக நீலா அய்யேயெஸ் இழுத்துச் செல்லப்படுகிறார்;.

“காட்டுப்பூவோடு பூவாய் வளர்ந்த பெண் இவ்விதம் மாறியது எப்படி? அவளை வழிநடத்துபவை அவளுக்குத் தோன்றும் கனவுகளா?” (ப.27) என்று ஓரிடத்தில் கேட்கிறார் கதைசொல்லி. அந்தக் கனவுப்படித் தன்னைப் பேயை எதிர்க்கும் அளவிற்குத் துணிச்சல் உள்ளவராகக் கருதிக் கொள்ள ஆரம்பிக்கிறார் (ப.27). தன்னை ‘அசாதாரணமான பலம்’ மிக்கவளாகப் புனைந்து கொள்ளுகிறார். ‘எதற்கும் அடிபணியாத ஆன்மா’ தனக்குள் இருப்பதாக எண்ணிக் கொள்ளுகிறார். ஆனால் இப்படிப்பட்டவர்தான் எதைத் தொட்டாலும் அதற்கு முழுமையாகத் தன்னை ஒப்புக்கொடுத்து விடுகிறார். தலைமுறை தலைமுறையாக சாதிய ஒடுக்குமுறையின் பாதிப்பு ஒரு தொன்மம் போல பதிந்து கிடக்கும் ஒரு சமூகத்தில் இந்த சாதி மூளைச்சதைக்குள் முள்ளெனப் பாய்ந்து ஒவ்வொருத்தருடைய பார்வையையும் கோணத்தையும் உருவாக்குவதோடு, அப்படித்தான் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் விதிக்கிற ஒரு சமூகத்தில், - எழுதத் துவங்கிய நீலா, அச்சூழலுக்குள் முழுமையாக உள்ளிழுக்கப்படுகிறார்.

‘அதன் உக்கிரம் தீ தன்னைத் தீண்டியவர்களை உண்ணுவது போல முழுவதுமாக அதில் எரிந்து போனாள்’ (30) என்கிறார் கதைசொல்லி. “அதுவாகவே தன்னைப் பாவிக்கும் ஒருவகை பாணியாகிவிட்டாள். தர்க்கம் சில சமயங்களில் மூச்சடைத்துப் போகுமளவிற்குத் தன்னை அதற்குள் கடத்திக் கொண்டு போய்விட்டாள்” என்றும் ‘தன்னைத் தியாகம் செய்யவும் தயாராகி விட்டாள்’ என்றும் எழுதுகிறார். இப்படிப்பட்ட நீலாவைக் குறித்து,

‘நீலா அற்பமான துகள். மரணம், அவநம்பிக்கை, மனித அவலங்கள் நிறைந்த பெண். பிறப்பும் சூழலும் உதவி செய்யாத அதிர்ஷ்டமில்லாதவள். ஆனாலும் என்ன, தான் தேர்ந்தெடுத்த பாதையில் தனக்காகவும் பிறருக்காகவும் துணிச்சலுடன் பயணம் கிளம்புகிறாள்’
என்று எழுதும் போது தன் தர்க்கத்திற்குள் பிடிபடாத சூழல் தன்னை வழிநடத்துகிறது என்பதை உணர்ந்தாலும் ஏற்றுக் கொள்ள விரும்பாமல் எல்லாம் என் தேர்வுதான் என்கிற தன் முனைப்பின் வீச்சில் இயங்குகிற ஒரு ஆன்மாவாக நீலாவை அறிய நேர்கிறது.

 நீலாவாகப் படர்க்கையில் தன் கதையை எடுத்துரைக்கும் போது, சிவகாமி அய்யேயெஸ் வேறு. கதைசொல்லி சிவகாமி வேறு. கதைமாந்தராக வரும் நீலா அய்யேயெஸ் வேறு. இந்த ‘வேறு’கள்தான் ஓர் எழுத்தைப் புனைவெழுத்தாக வடிவமைக்கும் ஆதார சக்திகளாகும். மொழி எனும் குறியீட்டு உலகத்திற்குள் நுழையும் போதே, புனைவுகளுக்குள் பிரவேசிக்கத் தொடங்கி விட்டோம் என்றுதான் பொருள்.

**

 இந்த நாவல் நீலா என்ற கதைமாந்தரின் சுயவரலாற்றைச் சொல்வதான ஒரு பாவனையின் மூலமாக, உண்மையில் அம்பேத்கார் நூற்றாண்டைக் கொண்டாடிய 90-களுக்குப் பிறகு உருவான தலித் இயக்கங்களின் வரலாற்றையும், அவற்றின் அரசியலின் உள் முரண்பாடுகளையும், தலித் தலைமைகளின் கீழ் எழுச்சியுற்ற இந்தத் தலித் அரசியலை ஆதிக்கச் சாதியினரும் அதிகார அரசும், அரசு அதிகாரிகளும் எவ்வாறு தனக்குள் ஆழமாகப் பதிந்துகிடக்கும் சாதிவெறியோடு அணுகுகின்றனர் என்பதையும் தாழ்த்தப்பட்ட பிரிவினரிடமிருந்து உயர்ப் பதவிக்கு வரும் அதிகாரிகள் எப்படி எங்கே எதற்காக எந்நிலையில் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் ‘தன்னுடைய பார்வையில்’ பதிவு செய்து கொண்டு போகிற ஓர் ஆவணமாகவும் அமைந்துள்ளது. (ஆவணமும் புனைவுகளில் இருந்து தப்பிக்க முடியாது)

 இந்தச் சாதியச் சமூகத்தில் தலித்துகள் குறித்த இழிவு மனப்பான்மை கட்டமைக்கப்பட்டு அது தொடர்ந்து சமூகத்தின் கூட்டு நனவிலி மனம் வரைக்கும் மதம் கடந்தும் கொண்டு செல்லப்பட்டு ஆழமாகப் பதிக்கப்பட்டுள்ளது என்பதைக் ‘கோழிச் சண்டை’ என்ற தலைப்பில் கச்சிதமான ஒரு சிறுகதையாய்ப் புனைந்துள்ளார். இந்தக் கதை தலித் அரசியலின் தேவைக்கான ஆதாரப்புள்ளியைச் சுட்டிக் காட்டுகிறது என்பது மட்டுமல்ல, இந்த நாவல் எழுத்தின் தேவையையும் வலியுறுத்தப் பயன்படுகிறது. நீலாவின் வீட்டோடு தங்கி வேலை செய்யும் நஸ்ரீனும் அவரது குடிகாரக் கணவன் ரஹ்மானும் அடிக்கடிச் சண்டை போட்டுக் கொள்ளுகின்றனர். அவர்களின் வசைச் சொற்களாகப் பறையனென்ற சாதிச் சொல்லை இழிவாகப் பயன்படுத்துவதை நீலா குடும்பத்தினர் அனைவருமே கேட்க நேர்கிறது. அதுமட்டுமல்ல, சமையல் செய்து கொண்டிருக்கிறார் நஸ்ரீன். நீலா சமையலறைக்குள் வருகிறார். வந்த எஜமானி அம்மாவிடம் புகார் செய்வது போல நஸ்ரீன் பேசுகிறார்:-

“எவ்வளவோ இந்த மனுசன் அடிச்சிருக்காரு. கண்டபடி கடிச்சு வச்சிருக்காரு. ஆனா ஒரு நாளும் இப்படிப் பேசியதில்ல. சண்டையில போடா பறப்பயலேன்னு நான் குத்திக் காட்டினேன். அந்த ரோசத்தில்தான் எங்கம்மாவைத் திட்டினது. அந்தாளுதான் பறையனா இருந்து முஸ்லிமுக்கு மாறுனது. அதுகூட கொஞ்ச நாளைக்கு முன்னாலத்தான் தெரியும். தெரிஞ்சிருந்தா கல்யாணம் கட்டிக் குடுத்திருக்க மாட்டாவ. என்னைப் போய்ப் பறச்சிங்கறான். என்னப் பாத்தா பறச்சி மாதிரியாமா தெரியுது? எனக்கு ரொம்பக் கஷ்டமா இருக்கும்மா. நீங்களே சொல்லுங்கம்மா?”

இதோடு அந்தக் காட்சியை முடிக்கிறார் கதை சொல்லி. நீலாவுக்கு எப்படி இருந்திருக்கும்? இதே மாதிரியான ஒரு காட்சியை நானும் ‘ஒரு தலித் ஒரு அதிகாரி ஒரு மரணம்’ என்கிற நாவலில் பதிவு செய்திருப்பேன். புதிதாகச் சேர்ந்த ஒரு கணக்குப் பேராசிரியர் நல்ல சிவப்பாக இருந்தததால், அவர் தலித்தாக இருக்க முடியாது என்ற உறுதியான நம்பிக்கையில், அவரிடமே மற்றொரு வன்னியப் பேராசிரியர், ‘புதுசா வந்திருக்கீங்க, இந்தத் தலித் வாத்திகிட்ட ஜாக்கிரதையா இருங்க. ரெம்பதான் ஆட்டம் போடுறாங்க. அவங்க வால ஒட்ட நறுக்கி வைக்கணும்’ என்று சொல்லுகிறார். கேட்டுக் கொண்ட அந்தத் தலித் பேராசிரியரும் “அப்படீங்களா?’ ஆமா! ஆமா! நறுக்கத்தான் செய்யணும்” என்று சொல்லிக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுகிறார். இந்த மாதிரி தலித்துகள் இந்தச் சமூகத்தில் படுகிற அவமானங்கள் ஒன்றா இரண்டா?

***

 ஒரு குறிப்பிட்ட கருத்தாடலுக்குப் பேராதரவு கூடி வருகிற சமூக வரலாற்றுச் சூழலில், பல்வேறு தலைவர்கள் உருவாவதும், ஒவ்வொரு தலைவர்களும் தங்களை நிலைநிறுத்திக் கொள்ள – ஞாயப்படுத்திக் கொள்ள – பல்வேறு உத்திகளைக் கையாளுவதும் மனிதர்களின் அரசியல் வரலாற்றில் நிகழ்ந்த வண்ணம்தான் இருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக வெடிக்கிற சூழலில் எத்தனை பிரிவுகள், எத்தனை தலைவர்கள். ஒவ்வொருத்தரும் தங்களை நிலைநிறுத்த பட்ட பாடு. பலி கொடுத்த உயிர்க் கொலைகள்! சமீபத்தில் நாமறிந்த உதாரணம் இது. தலித்துகளின் எழுச்சி ஏற்பட்ட சூழலில் இதே போல பல்வேறு தலித் இயக்கங்கள். தெற்கே பெருவாரியாக உள்ள குறிப்பிட்ட சாதி சார்ந்த மக்களைத் திரட்டி ஒரு தலைவர். அதேபோல் வடக்கே ஒரு தலைவர். மேற்கே ஒரு தலைவர். இன்னும் பற்பல இயக்கங்கள். தலைவர்கள். நீலாவும் “மற்றவர்” என்று தான் தொடங்கிய ஒரு பத்திரிக்கையை மையமிட்டு ஒரு தலைமையைக் கட்டமைக்க முயலுகிறார். சாதி பேரில் நடக்கும் கீழ்மைகளை எதிர்த்துப் போராடுவதற்காகவே அர்ப்பணித்துள்ளதாகத் தன்னைக் கருதிக் கொள்ளும் நீலா, அதற்கான ஓர் அமைப்பை உருவாக்க முயலுகிற முயற்சிகளுக்குத் தடையாக இருப்பவை என்று தான் கருதுகிற அனைத்தையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார்.

தனது அர்ப்பணிப்பு சார்ந்த முயற்சிகளுக்கு வடக்கேயும் தெற்கேயும் இருக்கிற இரண்டு அமைப்புகளும் பொருத்தமாகத் தோன்றவில்லை. போதாமை மிக்கதாக அவருக்குப் படுகிறது. அந்த “இரண்டு அமைப்பின் தலைவர்களும், ஒரு நல்ல காட்சியின் தவிர்க்கப்பட வேண்டிய இடைவேளை” என்று அந்த அமைப்பைச் சார்ந்த தீவிரமான தொண்டர்கள் நிறைந்த ஒரு கூட்டத்திலேயே துணிந்து விமர்சிக்கிறார். இந்தத் துணிச்சல் தானொரு அய்யேயெஸ் அதிகாரி என்பதனால் மட்டும் வெளிப்பட்டதாகச் சொல்ல முடியாது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான அமைப்பை மிக மேன்மையான முறையில் கட்டமைக்க வேண்டும் என்ற தன் தணியாத ஆர்வத்துடிப்பின் வெளிப்பாடு என்றும் கருதலாம். கூடவே தானொரு தனி அமைப்பைக் கட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டின் விளைவு என்றும் கருதலாம்.

 நீலாவாலேயே மக்கள் நடுவில் செல்வாக்குப் பெற்றுவிட்டவை எனக் கருதப்படுகின்ற இரண்டு இயக்கங்களும் தவிர்க்கப்பட வேண்டிய இடைவேளை என்று தான் கொள்ளுவதற்குக் கீழ்க்கண்ட காரணங்களைச் சொல்லுகிறார்:-

அ) தலித் மக்கள் மீது ஏவப்படும் வன்கொடுமைக்கு எதிராக எழ வேண்டும் என்கிற ஒன்றைத் தவிர அவ்வியக்கங்கள் வேறு முக்கியமான தலித் பிரச்சனைகள் எதையும் முன்னிறுத்தியுள்ளனவா?
ஆ) தன் கட்சிக்காக உழைக்கும் தொண்டர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்கிறதா?
இ) தலித் மக்களின் வாழ்வாதாரமான நிலத்தைக் கைப்பற்றுவதற்கு இவ்வியக்கங்கள் திட்டம் வைத்திருக்கின்றனவா?
ஈ) திராவிடக் கட்சிகள் போலவே மாநாடு நடத்துவது, அவைகளுடன் கூட்டணி வைத்துத் தேர்தலில் சீட்டுக்கள் பெறுவது என்பன தவிர வேறு செயல்திட்டங்கள் உள்ளனவா?
உ) தலித் இயக்கங்கள் பெண்களுக்குப் போதுமான இடமளிக்கவில்லை.

இப்படித் தனது கோணத்தில் விமர்சிக்கும் நீலா, இந்த விமர்சனங்களுக்கு அந்தத் தலைவர்கள், அந்த இயக்கம் சார்ந்த அறிவாளிகள் எல்லாம் அளித்த பதில் யாது? அல்லது அவற்றை எவ்வாறு எதிர்கொண்டார்கள்? என்பன குறித்தெல்லாம் பெரிதும் பேசாமல் தன் கதையைத் தன் பார்வையில் மேலெடுத்துச் செல்வதிலேயே பெரிதும் கவனம் கொள்ளுகிறார். தன் பார்வையில் மட்டும் எல்லாவற்றைக் குறித்தும் பேசுதல் என்பது ஒரு சுயவரலாற்று எழுத்து முறையில் நிகழ்ந்துவிடக் கூடிய ஒன்றுதான். ஓரிடத்தில் தன்னை, மற்றவர்கள் எப்படி விமர்சிப்பார்கள் என்பதையும் கூடப் பதிவு செய்கிறார்தான். அதுவும்கூட நீலாவின் பார்வையைத் தாண்டிப் பதிவாகிவிடவில்லை. மேலும் தன்னையும் தன் வாழ்வையும் தன் பதவியையும் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட விளிம்புநிலைப் பார்வை என்ற திசைநோக்கியே திருப்பிவிடத் தெரிந்த, அதைவிட அதற்கு வேண்டிய உரம் வாய்ந்த துணிச்சலும் உழைப்பும் கொண்ட நீலா அப்பார்வைக்கேற்பத் தலித் அரசியலோடு மட்டும் தன்னைச் சுருக்கிக் கொள்ளாமல் எப்படி பழங்குடியினர், திருநங்கையர், சுயபால் உணர்வினர் ஆகியோருக்காகவும் இயங்கினார் என்பதும் நாவலுக்குள் அழகாகப் பதிவாகியுள்ளது. இத்தகைய இடங்களில் நீலாவின் பிரச்சனையே தானொரு மேன்மையான கலை இலக்கியவாதி என்பதைக் கொன்று தூர எறிய முடியாமல் அரசியல்வாதியாக முயல்வதுதான் போலுமென்று எனக்குப் படுகிறது.

மொத்தத்தில் பழையன கழிதலும், ஆனந்தாயி என அற்புதமான நாவல்கள் எழுதிய கை என்பதனால் சாதாரணமானதாக இருந்தாலும் அவர் மொழியில் அதைத் தொடும் போது அசாதாரணமான ஒன்றாக மாறி விடுகிறது. அவரது மொழியும் கதை சொல்லும் முறையியலும் நாவலின் மிகப்பெரிய பலம். இந்தப் பலத்தினால் தலித் இயக்கங்களுக்கு வெளியே இருப்பவர்கள் ஆனாலும் நாவலை வாசிக்கத் தொடங்கினால் அவர்களுக்குள்ளும் இது தண்ணீர்ப் போலப் பாய்ந்து பரவி விடும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

சிவகாமி, உண்மைக்கு முன்னும் பின்னும், உயிர்மை பதிப்பகம், சென்னை, 2012. பக்.344. விலை.ரூ.270.

-பேராசிரியர் க.பஞ்சாங்கம்