கவிதை என்பது என்ன? என்ற கேள்விக்காந முழு நிறைவாந விடையை இன்றுவரை எவரும் கண்டதில்லை என்பர் அறிஞர். ஆயினும் கவிதை எது என்பதற்கு அமைதியான நேரத்தில் நினைவுக்கு கொண்டுவரப்படும் ஆழ்ந்த உணர்ச்சியின் வெளிப்பாடே கவிதை என்பார் ஓட்ஸுவர்த்து. வாழ்க்கையிந் திறனாய்வே கவிதை என்பார் மேத்திவ் ஆர்னால்டு. கவிதையின் நோக்கம் அறிவுறுத்தலும் இன்புருத்தலும் என்பர் இலக்கிய திறனாய்வாளர். அவ்வகையில் அன்பின் பெயரால் என்ற ரிஷியின் கவிதைத் தொகுப்பில் அறிவுறுத்தலுக்கான கூறுகளும், மகிழ்வுறுத்துதலுக்கான கூறுகளும், சமூகத்தில் காணப்படும் நடப்பியல் நிகழ்வுகளும், சமூக அவலங்களும் கவித்துவ தரிசன காட்சியாக விரித்துரைக்கப்படுகின்றன.   எங்கனம் என்பதை பகிர்தலே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

புதுப்புனல் வெளியிட்டுள்ள ரிஷியின் ஆறாவது கவிதைத் தொகுப்பான இந்த நூலில் 29 கவிதைகள் இடம் பெற்றுள்ளன. ”மணிமேகலைக்கு என்ற முதல் கவிதை சிறுகதையாக விறியக் கூடிய கூறுகளைக் கொண்ட கவிதையாகும். அல்லது கவிதைக்குள் ஒரு சிறுகதை என்ற அனுபவத்தை வாசகருக்கு ஏர்ப்படுத்தும் போக்கினைத் தன்னகத்தே கொண்டது இந்த முதல் கவிதை என்றும் கூற இடம் அளிக்கிறது. கவிதையில் கவி மனம் மணிமேகலைக்கும் கவிஞருக்குமான பந்தம் குறித்து விசாரிப்பதும், அட்சயபாத்திரத்திலிருந்து அள்ளித் தந்தபடி

 நீ என்னை நோக்கி முன்னேற எழுந்து ஓடிவிட வேண்டும் போலும்,

உன்னை எதிர்கொண்டு வணங்கவேண்டும் போலும்

மனதில் ஒரு பரிதவிப்பு என்று கவிஞர் மொழிவதும், ” அத்தனை நெருக்கத்தில் அட்சயப்பாத்திரத்தைப் பார்த்ததில்

பித்தானது நெஞ்சம்!

பாய்ந்து அதைப் பறித்துக் கொண்டு போய்

இல்லாதாருக்கெல்லாம் வேண்டுமளவு தரவேண்டுமென

பரபரக்கும் மனமே” என கவிஞர் ஏங்குவதும் ஆகிய அனுபவங்களைப் பெறும் வ்வாசக மனம் தன்னையும் அறியாமல் கவிதைக்குள் கதையைத் தேடத் தொடங்குகிறது. ”இச்சைகளில் நாமெல்லோரும் பிச்சைக்காரர்களே”.

“மிச்சம் மீதி வைக்காமல் வாழ்க்கையை வாழ்ந்து பார்த்து விட

யாருக்கும் முடிவதில்லை” போன்ற கவிதை வரிகள் அனுபவப் பொன்மொழிகள்.

 “ நீ வழங்கிய சோறு ஒரு குறியீடாக...

ஒருசேரக் குவிந்த என் உள்ளங்கைகளில்

நிரம்பியவை திடமோ, திரவமோ அல்ல;

அருவங்கள்!

காற்றைப்போல் இருப்பு கொண்டவை; இழந்த பல

நேற்றுகளை மீட்டெடுத்துத் தருபவை!”என்பது போன்ற கவிதை வரிகள் அட்சயப் பாத்திரத்தினை காலத்தின் குறியீடாகவும், சோற்றினை முன்னோரின் வாழ்வியல் அனுபவங்கள், இலக்கியம், வரலாறு, மெய் இயல், நுண் கலைகள், மருத்துவம், அறிவியல் கோட்பாடுகள்முதலியவற்றை மீட்டுறுவாக்கம் செய்தளித்தலிந் தேவைக்கான குறியீடாகவும், மணிமேகலையை கால தேவதையின் குறியீடாகவும் கருத தோன்றுகிறது. மற்றொரு கோணத்தில் மணிமேகலையை கலைவாணி என்றும், அட்சய பாத்திரத்தை படைப்புக்காந கலைப் பேழை என்றும், கவிஞருக்கு மணிமேகலையால் வாரி வழங்கப்படும் சோற்றினை பல்துறை எழுத்தாளுமை எனவும் வாசக மனம் பிரதியை தன் நோக்கில் பொருள் பெயர்த்துக்கொள்ள இடம் அளிக்கிறது கவிதை. அட்சயப்பாத்திரத்தைக் கண்ட கவியின் உள்ளமோ”யாம் பெற்ற இன்பம்

பெறுக இவ்வைய்யகம்” என்ற திருமூலரின் பொன்மொழிக்கொப்ப, பிறருக்கும் வழங்கவேண்டும் என்ற பொதுநல பேராசை கொண்டு அட்சயப் பாத்திரத்தையே மணிமேகலையிடமிருந்து பாய்ந்து பறித்துக் கொண்டு போய் இல்லாதாருக்கெல்லாம் வேண்டுமளவு தரவேண்டுமென விழைகிறது.

 மணிமேகலை கைய்யிலிருந்த அட்சயப்பாத்திர சோற்றுக்கதையும், ஏசு பிரான் அப்பங்களைக் கொண்டு பல்லாயிரம் மக்களுக்கு உணவளித்த கதைகளும் பசிப் பிணி நீக்கலின் தேவையை மொழியும் குறியீட்டுக் கதைகளே.

மேலே சுட்டப்பட்ட இரு கதைகளையும் அறிவுப் பசி, கலைப் பசி என்பனவற்றுக்கான குறியீடாகவும் நாம் கருதவும் இடம் உண்டு. மணிமேகலைக்கு என்ற கவிதை அட்சயப்பாத்திரம், அப்பக்கூடைகள் முதலிய தொன்மங்களை வாசகர் இந்த இரண்டாம் கோணத்தில் அணுகுவதர்க்கான திறவுகோலாக அமைந்துள்ளது என்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோல வெளிப்படையானது.

 அகழ்வு என்ற விதையில் இடம் பெறும் குளம் காட்சிப் படிவமாகவும் கருத்துப் படிவமாகவும் விரிகிறது. கவிதைக்குள் நவீன சமுதாயத்தில் இடம் பெற்றுள்ள அத்தநை போலித் தனங்களும் பொய்ப் புரட்டு புனைசுருட்டுகளும் அங்கத உத்தி முறையில் சாடப்படுகின்றன.  “சாதாரணக் கண்களுக்கு எட்டாத அளவில்

செயற்கைச் செம்புலம், மஞ்சள் புலம், ஊதா புலம்

இன்னும் எண்ணிறந்த நுண்நிறங்களில் கட்டமைக்கப்பட்டு,

முன்புலமும், பின்புலமும் கெட்டிப்படுத்தப்பட்டு,

வெட்டி வேர் பரப்பப்பட்டு, கொட்டி நீர் நிரப்பப்பட்டு,

குளங்களாக்கப்படும் இவற்றில்

யாரும் குளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டாலும்

எல்லோராலும் தம்மைக் கழுவிக்கொள்ள இயலாது.” என்ற வரிகளில் குறிப்பாக படிமம், குறியீடு, அங்கதம், முரண் முதலிய உத்திகள் ஒரு கலவையாக பின்னி பிணைந்துள்ளமை இக்கவிதைக்கு தனித்துவத்தை தருவதாக தென்படுகிறது. நவீன மனிதனின் சுயநலம், இம்மனிதன் வாழும் சமுதாயத்தில் காணப்படும் ஏற்றத் தாழ்வுகள், சமுதாயத்தில் இரண்டாம் தர குடிகளாக அவலத்துக்கு உரியவர்களாக விளங்கும் பிச்சைக்காரர்கள், முதியோர், நடைபாதை வாசிகள், பெண்கள், நலிவுற்றவர்கள் என இழிவானவர்களாக நடத்தப்படும் சக மநிதர்களின் அவலத்தையும் வாய்ப்பும் வசதிகளும் உடையோர் குற்றவாளிகளாகவே இருப்பினும்தண்டனைகளிலிருந்து நயவஞ்சகமாய் நழுவிவிடும் எதார்த்த நிலைப்பாட்டையும் துலாம்பரமாக வெளிப்படுத்துகிறது கவிதை.

பொம்மிக் குட்டியின் கதை கவிதையில் நவீன குழந்தையின் வாழ்க்கைகூட எந்திரத் தனமாக மாறிவிட்டதையும், குழந்தை கண்ணன் தன் நேசம், வெறுப்பு, ஆற்றாமை உள்ளிட்ட உணர்ச்சிகளுக்கான வடிகாலாக பொம்மிக்குட்டியை பயன்படுத்துவதில் குழந்தை உளவியல் பொதிந்துள்ள உண்மையும் வெளிப்படுகிறது. பெற்றோரும் பெரியோரும் குழந்தைகளுக்கு பொம்மைகளை வாங்கிக் கொடுப்பதால்மட்டும் குழந்தைகள் நிறைவு காணார்; குழந்தைகளோடு பெற்றோர் நேரம் ஒதுக்கி பழகவேண்டும்; குழந்தைகளின் எண்ண எழுச்சிகளை புரிந்துகொள்ளவேண்டும்; பெற்றோர் தாங்கள் குழந்தைகளை உளப்பூர்வமாக நேசிப்பதை அவர்களுக்கு செயல்கள்வழி வெளிப்படுத்தவேண்டும் என்பது போன்ற கருத்துக்களை கவிதை பூடகமாக வாசகராகிய நமக்கு உணர்த்துகிறது.

 மறுக்கப்படும் வாழ்க்கை கவிதையில் சுனாமியால் விளைந்த சோகம், தேச பாதுகாப்புக்காக உழைக்கும் இந்திய ராணுவ வீரர்களை நாய்களென வசை பாடுதல், விடுதலை பாக் கவி பாரதியை பயந்தாங்கொல்லியாக சித்திரித்தல் வன்புணர்ச்சிக்காளாக்கப்பட்ட ஏழைப் பெண்ணொருத்தியின் கண்ணீர், கல்லூரி வாசலில் காவலரால் இரக்கமின்றி அடித்து துவம்சம் செய்யப்படும் மாணவன், குட்டிக்குட்டி ஆடையில் குதித்துக் கொண்டிருக்கும் நடிகை, சின்னத் திரை தொடர்களுக்குள் வாழ்வைத் தொலைக்காமல் தொலைத்துத்த் தேடும் கானல்நீர் மனிதாபிமானிகளின் நிலைப்பாடு, வண்கொடுமைகளையும் வெடிகுண்டு மழைக் கலாச்சாரத்தையும் கண்டு நகைக்க மனிதரை பழக்கப்படுத்தி வைத்துள்ளன இந்த காட்சி ஊடகங்கள் என காட்சி ஊடகங்களின் பொருப்பின்மையையும், தேர்தலில் வெற்றிக் கனியை மட்டுமே பறிக்க கனவு காணும் அரசியல்வாதி, ஏழைக் குடியானவனின் உழைப்பை பொருட்படுத்தாத போக்கு என மக்களின் படு பாதாளத்தை நோக்கிச் செல்லும் கீழ்மையிலும் கீழான ரசனைத் தன்மை என்பவற்றை எல்லாம் சாடுகிறார் நைய்யாண்டியாக கவிஞர். கவிதையை வாசிக்கும் வாசகருக்கோ இப்படியே தொலைக் காட்சிகளின் செயல்பாடுகள் தொடர்ந்தால் தமிழ் சமுதாயமும் அதன் எதிர்காலமும் ஏதாகுமோ? ஐய்யகோ என விம்மிக் கதரும் நிலையே மிச்சமாகும் போலிருக்கிறது.

 ஆயுதப்போர் முடியட்டுமே இன்று மாலைக்குள் என்ற கவிதையில்” ஈழத்து தமிழ் சகோதரரின் அவலநிலை மாறவேண்டும்; சிங்கள ஆட்சி அதிகாரத்தின் கொடுங்கோன்மை தீரவேண்டும்; ஈழத் தமிழ்மக்கள்

சரிநிகர் சமானமாய்

சமாதான பூமியில்

வாழ்வாங்கு வாழ வேண்டும்.” என்ற கவிஞரின் ஏக்கமும் வேட்கையும் வெளிப்பட்டுள்ளது. ஆனால்? ஈழத்து தமிழ் சகோதரர்கள் நம்மைப்போல என்று ஓர் அமைதி நிறைந்த வாழ்வை காண்பாரோ? புத்தரின் கொள்கைகளுக்கும் அந்த மகானின் போதனைகளுக்கும் இலங்கையில் என்று உண்மை செயல்வடிவம் கிடைக்குமோ? கால தேவனே பொருப்பு..

 சிலரின் கைகளில் விமர்சனம் என்ற கவிதையில் போலி விமர்சகரின் பொய்முகங்களை கவிஞரின் பேனா முனை தோலுறித்துக் காட்டுகிறது வெகு இலாகவகமாகவும் நையாண்டியாகவும். ஆனால் “நானே விமர்சன ராஜா எனக்கே எனக்கான முறையில் கவிதையை விமர்சன கத்தியால் கிழித்தெரிவேன்” என்ற அகம்பாவ அரைகுறை விமர்சன மூட்டைகளுக்கு எச்சரிக்கையூட்டும் சரியான சாட்டை சொடுக்கு கவிதை இது.  

எழுதப்படா விதிகள்

 என்ற கவிதையிலும் ஆட்சியாளரின் அரசியல் பின்னணிக்கான போக்கும் எளிய மக்களின் நிலையும் நவிலப்படுகிறது. முழங்கப் பழகுவோம் என்ற கவிதையில் பலரும் கூடியுள்ள பொது சபையில் அவை நாகரிகத்தை கிஞ்சித்தும் அறியாத அல்லது அறிய விரும்பாத மேடை ஏரி நாகரிகக் கோமாளிகள் கவிஞரால் கேலி செய்யப்படுகின்றனர். கவிஞரின் கவிதையை வாசிக்கும்போது

அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்

 வகையறியார் வல்லதூஉம் இல்

 அவையின் தன்மை அறியாமல் சொற்களைப் பயன்படுத்துகிறவர்களுக்கு அந்தச் சொற்களின்

 வகையும் தெரியாது; பேசும் திறமையும் கிடையாது என்ற திருக்குறலே வாசகரின் மனத்தில் நிழலாடுகிறது.

குறள் 713 கலைஞர் உரை

பாவம் குடிமக்கள் என்ற கவிதையிலும் அரசியல் சாடலும் மக்களின் கைய்யால் ஆகா தனமுமே வெளிப்படுத்தப் படுகிறது. 'பாவம் குடிமக்கள்' என்று பாவனையாய்

கண்ணில் நீர்மின்ன,

எழுதித் தரப்பட்டதை மனனம் செய்து ஒப்பித்தவாறு

மளமளவென்று மேலேறிச் சென்றவண்ணம்,

அடிவாரத்தில் தளர்ந்து நின்றுகொண்டிருக்கும்

எம்மைப் பார்த்து

அவ்வப்போது எப்படி அத்தனை அன்போடு

புன்னகைக்கிறீர்கள்? என்ற குடி மக்களின் கேள்வியோ ஆள்வோரைப் பொருத்தவரை செவிடன் காதில் ஊதிய சங்காக காற்றில் கறைந்த கற்பூர மணமாக! காணாமல் போதலே நிதரிசன உண்மை.

எப்பொருள் மெய்ப்பொருள் என்ற கவிதையில் சுயம் ஒவ்வொருவருக்கும் அவசியம் என்கிற அழுத்தமான கருத்து நுட்பமாக பொதிந்து வைக்கப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது.

பத்து நிறங்களைக் கொண்டது வானவில்,

 பறவைகள் பேசுவதை எங்களால் புரிந்து கொள்ள முடியும்!

 இல்லை என்ற சொல் எங்கள் அகராதியிலேயே இல்லை,

 எண்ணியது எண்ணியாங்கு முடிப்போம்,

என்பது போன்ற கருத்துக்களை ஏற்க்கும் ஒருவரின் மனசுக்கு நல்லது என பாராட்டு கூறத் தோன்றுகிறது. புண்ணியாத்மாக்கள் நீங்கள் என மொழிந்து பழி நீங்க வாழ்வதே எங்கள் லட்சியம்" என்றுரைக்க

வழிகாட்டியாய் உம்மைக் கொள்வோம் நிச்சயம்", என்ற கவிஞர், "அப்படியெனில், நாங்கள் சொல்வதையெல்லாம்

 நம்புகிறாய் தானே ? என்ற கேள்விக்கு ஒரு கனம் யோசித்து விட்டு

"எப்படியும் மாட்டேனே என பதில் அளிப்பதாக அமைந்த கவிதையில் நம்மை சொல் சாதூரியத்தால் ஏமாற்றும் பொய் புளுகு மூட்டையாளர் இடம் எச்சரிக்கையாகவே இருக்கவேண்டும். அத்தகையவர்களது சொற்களை முழுமையாக கேட்டுவிட்டு ஏற்பது போல நிராகரிப்பதே உண்மை அறிவாளரின் அடையாளமாக இருக்கும் என்பதற்காகவே எப்பொருள் மெய்ப் பொருள் என்னும் தலைப்பு கவிதைக்கு இடப்பட்டிறுக்கிறது போலும். இந்த கவிதையிலும் ஒரு வித அங்கத தொனி இடம் பெற்றுள்ளது வெளிப்படை. வள்ளுவரின் மெய்யுணர்தல்அதிகார சாரத்தின் தாக்கம் கவிஞரிடையே பிரதிபலிப்பதை காணலாம் குறள் 355.

 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

 மெய்ப்பொருள் காண்பது அறிவு

தன்மை என்ற கவிதையின் வழி வெளிப்படும் ஆத்தும சுய தரிசனம் அளப்பறியது. சக மனிதருக்கு செய்யும் சிற்சில எளிய உதவிகளுக்காக உதவியவர் அந்த மனிதரை அவரது சுயம் கெடும்படியாக தம் விருப்பம் போல நடத்த கருதுதல் என்பது உதவியை பெற்றவருக்கு எத்தனை எத்தனை அவமானம். உதவியவரின் விருப்பத்தை மறுத்தால் அவர் அலட்சியமாய் வழங்கும் "நன்றி கெட்டது"

என்று நாவால் கல் வ்வீசும் அநாகரிகப் போக்கு. னம் வாழ்விலும் அவ்வப்போது நிகழும் நடப்பியல் அனுபவமே.

ஓட்டம் பறத்தலாகி மிதத்தலாகும்

உற்சவப் பொழுதில்

பெருகும் இதம்

விருதுகளுக்கப்பால் என்ற கவித்துவ வரிகளில் எதர்க்காகவும், யார் இடமும் தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் தம் சுயத்தை இழக்காமல் தன்னம்பிக்கையோடு இயங்கும் ஒரு கம்பீர கவிஞரின் பீடுநடை வாசகராகிய நம்மை பெருமிதம் கொள்ளச் செய்கிறது. எத்தகைய சூழலிலும் நம் தனித்தன்மையை சுயத்தை இழத்தலாகாதென்ற அற்புத பாடம் கவிதை வழி தரப்படுகிறது வாசகருக்கு.

நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதி பாடல் வரியை தலைப்பாக கொண்ட கவிதையில் ஈழத்து தமிழ் சகோரதரை ஹிம்சிக்கும் சிங்கள ஆட்சியாளன் ராஜபட்சேவின் குரலே கவிதையில் உறத்து கர்ஜிக்கும் சிம்ம குரலாக தென்படுகிறது. உறத்து பேசும் அந்தக் குரலில் இடம் பெறும் கீழ் கண்ட வாசகங்கள் ஈழத்தில் நடந்த நடந்து வரும் கொடுங்கோண்மையை விரித்துரைக்கும் சாட்சிய மொழிகள்.

அகண்ட உலகமே அக்கடா என்று பார்த்துக் கொண்டிருக்க

உங்களுக்கு மட்டும் ஏன் இந்த துக்கிரித்தனம்?

யாம்

எம் மக்களைக் குட்டுவதும்

வெட்டுவதும்

நசுக்குவதும்

பொசுக்குவதும்

மதிப்பழிப்பதும்

மிதித்தழிப்பதும்

யாவும்

அதியன்பினால் மட்டுமே.

திரும்பத்திரும்ப நான் திட்டவட்டமாய்ச் சொல்லியும்

நம்பாமல் உள்ளே எட்டிப்பார்க்க முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள்,

நடப்புண்மை அறிய முயலும் கயவர்கள்

காவுகொள்ளப்பட்டு விடுவர்.

அச்சுறுத்துவதாக எண்ண வேண்டாம்.

அக்கறையோடு எச்சரிக்கிறேன்_

அன்பின் பெயரால்

படித்த நிலையில் வாசகர்கள் நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட ஈழத்து நிலைமையை நினைத்துவிட்டால் என பொரும வேண்டியுள்ளது. நினைக்க தெரிந்த மனமே, மக்கள் சேவை, தெளிவுறவே அறிந்திடுதல், எல்லோரும் இந்நாட்டு மன்னர் முதலிய கவிதைகளிலும் அரசியல் மேலாதிக்க வாதிகளின் அட்டூழியங்களும் அவற்றை வேறு வழி ஏதும் இல்லாமையால் சகித்துக்கொண்டிருக்கும் எளிய மக்களிந் நிலையும் கவிதைகளுக்குள் சொல் ஓவியங்களாக அருவறுக்கும் அவலக் காட்சிகளாக விறித்துரைக்கப்படுகின்றன.

தொலைக்காட்சி- 1 தொலைக்காட்சி- 2 முதலிய கவிதைகளிலும் ஊடகவியலாளரின் வாணிக நோக்கும் பெண்கள் நுகர்வுப் பண்டமாக்கப்படும் போக்கும், சின்னஞ்சிறு குழந்தைகளின் மனதில்கூட பார்த்தீனிய வித்துக்களையும் வேலிக்கருவேல முள் விதைகளையும் இந்த சதுரப் பெட்டிகளாகிய தொலைக்காட்சிகள் விதைத்துள்ள போக்கிநையும் காண்கிறோம்.

நீர்நிலம் கவிதை கால மாற்றம் சூழல் மாற்றம் என்பனவற்றிந் பிரதிபலிப்பு. ஒரு காலத்தில் மனிதரின் நம்பிக்கையும் வாழ்வாதாரமுமாக இருந்த நீரும் நிலமும்கூட வாணிகப் பொருளாகமட்டுமே இன்று கருதப்படுகீந்றன. மனிதன் இயற்க்கையை வெல்லக் கருதி இயற்கைக்கு எதிராக போராட இயற்கையும் மனித குலத்துக்கு எதிராக தன் விளையாட்டுப் போக்கினை காட்டுவதை இன்று மனித குலம் கண்டும் இயற்கையை நேசிக்கா நிலையை காண்கிறோம். சூழல் மாசின் கொடுங்கோண்மையை கூற மேற் சுட்டிய கவிதைத் தலைப்பே சாட்சியாகும்.

நோய்நாடி என்ற கவிதையிலும் சிறு கதைக்கான கூறு ஒளிந்து கிடப்பதாகத் தென்படுகிறது வாசகருக்கு. மின்சார ரயில்வண்டி நிலையத்தில் நாம் பயணிக்கையில்எத்தனை எத்தனை விதமான கைய்யேந்திகளை பாதையோர படிக்கட்டுகளில் காண்கிரோம். அவர்கள் எழுப்பும் அவலக் குரல்களை கேட்கிறோம். அந்த கூக்குரல்கள் எந்திரமயமாந நம் வாழ்க்கையில் சிக்குண்ட நம் செவிகளில் மின்வண்டி சத்தம் போலவோ சோப்பு நீர் குமிழி போலவோ காற்றில் கறைந்துநம் கவனத்தைக் கடந்து மறைந்துவிடுகின்றன. ஆனால் கவிஞரின் உள்ளமோ ஏழை மூதாட்டி ஒருத்தி மின்ரயில்வண்டி நிலையத்தில்,

படியேறியிறங்கும் சந்திப்புப் புள்ளியில் படுத்திருக்கும் அவல நிலையை கண்டு ஏங்குகிறது. அந்த மூதாட்டியின் நோய் கொண்ட உடலினைப் பற்றியும் அந்த கிழ மனுஷி எத்தகய வாழ்வை வாழ்ந்தவளாக இருந்திருப்பாள் என்பது பற்றியும் எண்ணமிட்டு அவளுக்காகவும்கூட சக மனுஷி என்ற வகையில் துளி பேனா மையை சிந்தி ஆறுதல் தேட முயல்கிறது.

 கதைசொல்லும் தீபாவளி என்ற கவிதையில் இடம் பெறும் சிறுமியிந் அவலமும், குழந்தையை அவமானப் படுத்துகிறோமென்ற எண்ணமும் அற்று குழந்தையை அழவைத்து மகிழும் கீழ்மைகுணம் கொண்டோரின் வக்கிரமும், சுனாமியைக்கூட நகைச்சுவையாக்கி கவி எழுதி ஆனந்தம் காணும் அற்ப குணத்தோரும் சித்திரிக்கப்படுகின்றனர். யுத்த பூமியில் வெடிகுண்டு சத்தத்தினை கேட்டுக் கேட்டு நொந்த மனம் பட்டாசு சத்தத்தைகேட்டு என்ன என்ன முறையில் பாடு படுமோ? என்பதான அங்கலாய்ப்பும், முந்தைய தீபாவளிக்கும் இன்றைய தீபாவளிக்குமான இடைப்பொழுதில் ஏற்ப்பட்ட இழப்புகள் முதலியவற்றைப் பற்றி எல்லாம் பேசும் கவிதை பண்டிகை என்பது எல்லோருக்கும் எப்போதும் நிம்மதியயும் நிறைவையும் மகிழ்வையும் அளிப்பதில்லை என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறது. இந்தக் கவிதையைப் பற்றி யோசிக்கையில் மழைக் குடை நாட்கள் தொகுப்புக்காக எழுதிய பற்கள் முளைத்த பண்டிகைகல் என்ற கவிதையை மீண்டும் நினைத்துக் கொள்ளவேண்டியுள்ளது.

 கவிஞரும் ஒரு பட்டாசுக் கடை விரிக்கும் பெருவிருப்பு

எனக்குள் விசுவரூபமெடுக்கிறது ஒரு பட்டாசு கடை வைத்து

அதில் வாங்கப்படும் பட்டாசுகளின் திரிகளில் தீயிட, பீறிட்டுக் கிளம்பும்

இன்னிசையில் மனம் வெளுக்க வழிசெய்திருப்பாள் முத்துமாரீ மத்தாப்புகளின் வர்ணஒளிர்வில் துலங்கும் ஞானக்கண்கள் !

ஏழைச் சிறுவனின் கையில் தொங்கிக் கொண்டிருக்கும் ’சாட்டை’யின்

கீழ் நுனி தகதகத்து எரிய இன்னும் எரியாதிருக்கும் பகுதி

நீண்டுகொண்டே போகும் !

ஒரு இன்சொல்லுக்கும், புன்சிரிப்புக்கும் இலவசமாய்த்

தரப்படும் தின்பண்டங்கள் !

என்ற வரிகளில் தீமைகளைத் தீ கொண்டு தீக்கும் நம்பிக்கைக் கீற்றும், குழந்தைகளின் இன் சொல்லுக்கும் புந்நகைக்கும் புன்முறுவலுக்கும் தாம் தரக் காத்திருக்கும் இனிப்புத் தின்பண்டங்களால் அன்பையும் நேசத்தையும் பகிர்தலே பண்டிகையின் பயன் என்ற கருத்தினையும் வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

750ஆவது ‘எபிஸோட், யார் அறிவாளி ஆகிய இரு கவிதைகளிலும் பெண்மையின் நிலைப்பாடே பேசப்படுவதாக தென்படுகிறது. இரு கவிதைகளிலும்கூட கதைகள் விரிவதற்கான அனுபவ கூறுகள் தென்படுகின்றன.

உயர்ந்த உணர்ச்சிகளை சிறந்த கற்பனையின் அடிப்படையிள் குறிப்பாக வெளிப்படுத்துவதே கவிதை என்று மொழிவார் ரஸ்க்கின். இந்த கவிதைத் தொகுப்பு மேற் சுட்டிய கூற்றுக்கு நல்லதொரு விளக்கமாகத் திகழ்கிறது. கவிதைத் தொகுப்பில் அரசியல், ஆள்வோரின் அதிகாரத்துவ மனோபாவம், ஈழத் தமிழரின் அவல நிலை, சமூக அவலங்கள், காட்சி ஊடகங்களின் பொருப்பின்மை, எளியோர், பெண்கள், நளிவுற்றோர், முதியோர் குழந்தைகள், விவசாயிகள் ஆகியோரின் பாதுகாப்பற்ற நிலை உள்ளிட்ட கருப் பொருட்கள் கைய்யாளப்பட்டுள்ளன. படிமம், குறியீடு, அங்கதம், முரண் உள்ளிட்ட கவிதை உத்திகள் கவிதைகளில் இயல்பாக இடம் பெற்றுள்ளன. தொட்டனைத்தூரும் மணர் கேணிபோல் இக்கவிதைத் தொகுப்பினை கற்றிடும்தோறும் புதுப் புதுப் பொருளாழம் மிக்க கருத்துக்களும் நயங்களும் இடம் பெறுதலை வாசக மனம் அனுபவிக்க முடிகிறது.