பெ.அய்யனார் 1963-ல் பிறந்தவர். மதுரை மாவட்டத்துக்காரரான இவர் சுமார் 25 ஆண்டுகளாக நவீன இலக்கியத்துடன் தொடர்புடையவர். இவர் எழுதியதுதான் ‘மேன்ஷன் கவிதைகள்’ என்ற தொகுப்பு. இதில் 45 கவிதைகள் உள்ளன. எளிமை, நேர்படப் பேசுதல், வித்தியாசமான கருப்பொருள் இவர் கவிதைகளின் இயல்பு எனலாம்.

‘கொம்புகள்’ என்ற கவிதை மனிதனின் ‘ஈகோ’ பற்றிப் பேசுகிறது.
 
 நகரத்து மனிதர்கள்
 கொம்புடன்தான் பிறப்பார்கள் என
 நம்பிக்கை வருமளவு
 கொம்பு மனிதர்கள்

என்பதே முக்கிய குறிப்பாகிறது.

 கதவைத் தட்டினால்
 கொம்புகளை ஆட்டிக் கொண்டே
குதூகலமாய் வரவேற்றான்.

என்பது புதிய, வேடிக்கையான படிமம். இக்கவிதையில் சம்பந்தப்பட்டவருக்கே கடைசியில் கொம்பு முளைத்து விடுகிறது என முடிகிறது. கவிதை என்பதன் மிக முக்கியமான அடையாளமான கவிதை மொழி வாய்க்காதது குறிப்பிடத்தக்கது. எளிமையோடு ஓர் அழுத்தமும் இருந்தால்தான் கவிதை காத்திரமாக இருக்கும்.

வாலிப மனத்தின் கவலையைச் சொல்கிறது. ‘தனிமை எனும் மிருகம்’

 மனத்தின் இடுக்குகளில்
 மறைந்திருக்கும்
 உன் முகத்தைத்
 துழாவி எடுக்க முடியவில்லை
 ஒரு போதும்.

என்பதில் பெண் தோழமை இன்னும் வாய்க்காத சுத்த (?) பிரம்மசர்ய மனம் பதிவாகியுள்ளது. மன வாயில் திறந்துள்ள நிலையை நாம் உணர முடிகிறது.

தனிமனித சுதந்திரத்தை வலியுறுத்தும் கவிதை ‘என் கைகளை விட்டு விடுங்கள்’.

 மனத்தில் இருக்கும் வரைபடத்துடன்
 நகரின் மூலை முடுக்குகளில்
 கால்கள் தடுமாற
 காயங்களுடன் கூட
 தட்டுத் தடுமாறி
 எப்படியேனும்
 திரும்பி விடுவேன்

என்ற வரிகளில் காணப்படும் பூடகத் தன்மையில் அடிமைத் தளையின் இறுக்கம் தெரிகிறது.

‘இலையுதிர் காலம்’ – வித்தியாசமான புதிய படிமம் ஒன்றைத் தருகிறது.

 யாரோ –
 அண்ட சராசரங்களை
 உலுக்கி
 நட்சத்திரங்களையும்
 சூரியனையும்
 நிலாவையும்
 உதிர்த்தார்கள்
 என் தலைமேல்

என்பதில் இந்தப் படிமத்தில் அசாதாரண, பிரம்மாண்ட கற்பனை காணப்படுகிறது. கனவுத் தன்மையும் புனைவுத் தன்மையும் சங்கமிக்கின்றன.

‘தொலைந்து போன கடிகாரம்’ –தத்துவக் கவிதை. இதில் சூரியன் மனிதனுக்கு அறிவுரை அல்லது வாழ்வியல் உண்மையைக் கூறுவது போல் அமைந்துள்ளது.

 கடிகாரம் தொலைந்தால்
 கவலை வேண்டாம்
 இருந்தது போல் இருங்கள்
 கடிகாரமில்லா விட்டாலும்

இப்புத்தகத்தின் முன்னுரையில் பவுத்த அய்யனாரை கவிதை எழுதத் தூண்டியவர் அபி என்ற குறிப்பு காணப்படுகிறது. ‘அம்மாவுக்கு’ என்ற கவிதையைப் படித்த போது அதில் அபியின் தாக்கம் தெரிகிறது.

‘முகங்கள்’ – மரபணு சார்ந்து பேசுகிறது.

 முகத்தைத் திறக்க
 ஓயா முயற்சி
 முகத்தைத் திறந்தாலும்
 என் முகம் எங்கே

என்ற வரிகளைப் படித்தவுடன் ஆனந்த் எழுதிய ‘எல்லாமும் எப்போதும்’ கவிதை நினைவிற்கு வருகிறது.

‘எச்சில்’ – கவிதையில் மொழிச் செறிவு நன்றாக அமைந்துள்ளது: புதிய சிந்தனைகள் வளம் சேர்க்கின்றன.

 என்னை விழுங்கி
 எச்சிலாய்த் துப்பினாய்
 அசூசையாய்ப் பார்த்தனர்
 அனைவரும்

என்பதின் உட்பொருள் வீர்யம் கொண்டுள்ளது.

 நூறு சம்மட்டிகள் வீசி
 உன்னை நொறுக்கி
 உன் துகள்களால்
 நிரம்பும் என் மனப் பள்ளங்கள்

என்ற வரிகள் காட்டும் படிமம் மிகவும் கொடூரமாக இருக்கிறது. அதே நேரத்தில் அவள் அவனில் நிரம்பி வழிவது பதிவாகியுள்ளது. இத்தொகுப்பின் ஆகச் சிறந்த கவிதை இது என்பது என் எண்ணம்!

‘பயம்’ மற்றும் ‘நகர் முழுக்கப் பயம் நிரம்பியுள்ளது’ என்ற கவிதையின் சாரம் பின்னாளில் கமல் நடித்த படத்தில் வசனமாய் வருகிறது.

மொத்தத்தில் பவுத்த அய்யனார் கவிதைகளில் பல, மொழிவளம் இன்றி உரைநடையாய் நிற்கின்றன. சில அழகாக உள்ளது. கவிதைக்கான கர்ப்ப காலம் முறையாக கவனிக்கப்பட்டால் நல்ல கவிதைகளின் எண்ணிக்கை அதிகமாகும்.