அறிவும், திறமையும் அதிகமாகத் தேவைப்படும் உயர்நிலைப் பணிகளில் பார்ப்பனர்களும் மற்ற உயர்சாதிக் கும்பலினரும் அளவிற்கு அதிகமாகவே நிரம்பி வழிகின்றனர். அறிவும் திறமையும் குறைவாக உடையவர்கள் செய்ய வேண்டிய பணிகள் என்று கூறப்படும் அதிகாரம் இல்லாத, ஊதியம் குறைந்த, உடலுழைப்பு மிகுந்த பணிகள் தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப் பட்ட வகுப்பு மக்களே செய்ய வேண்டி உள்ளது. ஆனால் அனைத்து நிலையிலும் அறிவும் திறமையும் உடையவர்கள் அனைத்து வகுப்பு மக்களிலும் இருக்கின்றனர். இதிலிருந்து பார்ப்பனர்களும் உயர்சாதிக் கும்பலினரும் தான் ஒடுக்கப்பட்ட மக்களை வஞ்சித்து வருகின்றனர் என்பதை எளிதாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் வஞ்சிக்கப்ட்ட நிழ்வுகளைத் தொகுத்துக் கூறுவது தான் இந்நூல்.

   இந்நூலின் முன் அட்டையில் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் ஒன்றிணைய வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கூறிய வாசகங்கள் உள்ளன. ஆகவே இந்நூல் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்று என்ற எண்ணத்துடன் படிக்கத் தொடங்க முடிகிறது.     

இந்நூல் பிற்படுத்தப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளைப் பட்டியலிட்டுக் கொடுக்கிறது. வெள்ளையன் வெளியேறிய காலத்தில் இருந்து தொடங்கிய அந்நிகழ்வுகளைப் பற்றிப் படிக்கும் பொழுது, இவற்றைப் பற்றி எல்லாம் தொ¢ந்து கொள்ளாமல் இருப்பதே இவர்களுடைய பிற்படுத்தப்பட்ட தன்மையை வெளிப்படுத்துகிறது என்று உணர முடிகிறது. பிற்படுத்தப்பட்ட மக்கள் வஞ்சிக்கப்படுவதற்கு எதிராக நடந்த போராட்டங்கள் பார்ப்பன ஆதிக்க அரசியல் கட்சிகளும், அதிகார வர்க்கமும், நீதித் துறையும் எப்படி எல்லாம் சிதைத்து வந்தள்ளன என்ற விவரங்களும் இந்நூலில் பட்டியலிடப்பட்டு உள்ளன.     

வளர்ந்த பிரிவினரை (creamy layer) இட ஒதுக்கீட்டு வாய்ப்பில் இருந்து நீக்குவதில் தவறில்லை என்றும் அப்படிச் செய்வது பிற்படுத்தப்பட்ட மக்களில் உள்ள மற்ற மக்களுக்கு வாய்ப்பு கொடுக்கும் என்றும் பார்ப்பனர்களும், உயர்சாதிக் கும்பலினரும் கூப்பாடு போடுகின்றனர். ஆனால் அப்படிச் செய்வது, பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்தாமல் வஞ்சிக்கும் சூழ்ச்சியே என்பது இந்நூலில் விளக்கப்பட்டு உள்ளது.     

மேலும் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எத்தகைய தீமைகளை விளைவிக்கின்றன என்பதும் இந்நூலில் விளக்கபட்டு உள்ளன. பார்ப்பனரல்லாத நீதிபதி ஒருவர் ஒடுக்கப்பட்ட மக்களுக்குச் சார்பாக எழுப்பிய வாதங்களுக்கு, எவ்வித விடையோ விளக்கமோ தராமல் புறக்கணித்து விட்டு மற்ற பாப்பன நீதிபதிகள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான தீர்ப்பை அளித்த விவரமும் இந்நூலில் உள்ளது.     

ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் சிதைக்கப்பட்ட விவரங்களைத் தெரிவிக்கும் அதே நேரத்தில், பிற்படுத்தப்பட்ட மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதையும், அதைச் செய்து கொண்டு இருப்பவர்களைப் பற்றிய விவரங்களும் இந்நூலில் கொடுக்கப்பட்டு உள்ளன.     

இன்று சாதிச் சங்கங்கள் தேவை இல்லாத பிரச்சினைகளில் தலையிட்டும் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டும் மக்களிடையே வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டு இருக்கினறன. ஆனால் அவர்கள் உண்மையில் செய்ய வேண்டிய பணிகள் பற்றி இந்நூலில் கூறப்பட்டு உள்ளன. அதன்படி நடந்து கொண்டால் சாதிகளுக்கு இடையில் சண்டை சச்சரவுகள் இருக்காது என்பது மட்டுமல்ல; எல்லா சாதியினரும் தங்களுடைய உரிமைகளைப் பெற்று சமாதானமாக வாழ முடியும். திறமைக் குறைவான உயர்சாதிக் கும்பலினர் உயர்நிலைப் பணிகளில் அமர்ந்து கொண்டு நாட்டு நிர்வாகத்தை நாசப்படுத்திக் கொண்டு இருக்கும் கொடுமைகளுக்கும் ஒரு முடிவு வரும்.

பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்.     

48 பங்கங்களைக் கொண்ட இச்சிறிய நூலின் விலை ரூ.20/.

இந்நூலின் ஆசிரியர்: கலசம் (கலச.இராமலிங்கம்).
இந்நூலை வெளியிட்டவர்கள்: புதுவாழ்வுப் பதிப்பகம், 4(11) சி.என்.கே.சந்து, சேப்பாக்கம், சென்னை - 600 005. தொடர்பு எண். 944460804.

- இராமியா