பெண்களுக்கு பல பருவம்; பல நிலை. பூப்படைவதும் ஒரு பருவம்; ஒரு நிலை. சிறுமி என்னும் நிலையிலிருந்து ஒரு முன்னேற்றம். பூப்படையும் வரை ஆண், பெண் வேறுபாடு உடலமைப்பில் தெரியாது. பூ பூப்பது போல பூப்பும் இயற்கையானது.

சிறுமிகள் பூப்படையும் போது அவர்களை வீட்டிலிருந்து விலக்கி வைத்து அல்லது வீட்டுக்குள்ளேயே ஓர் ஓரம் ஒதுக்கி வைத்து பதினோராம் நாள் அல்லது வசதிப்பட்ட நாளில் ஊரை, உற்றாரை, சுற்றத்தாரை அழைத்து சடங்கு செய்து பின்னர் வீட்டுக்குள் அனுமதிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. வசதிக்கு ஏற்றாற்போல் நிகழ்த்தப்படுகிறது. ருது மங்கள விழா என்றும் அழைக்கப்படுகிறது.

'பூப்பு நீராட்டு விழா தேவையா?' என ஒரு கருத்து நிலவி வருகிறது. இந்நிலையில் கவிஞர்களிடம், அறிஞர்களிடம், வழக்குரைஞர்களிடம், மருத்துவர்களிடம் இருந்து கருத்துக்களைக் கட்டுரைகளாகப் பெற்று ஒரு தொகுப்பாக்கித் தந்துள்ளார் பி.இரெ.அரசெழிலன். "மனித குல வளர்ச்சிப் போக்கில் நாகரிக சமுதாயம், அறிவார்ந்த சமுதாயம் என நமக்கு நாமே மெச்சிக் கொள்கிற இந்த 2011ஆம் ஆண்டிலும் 21ஆம் நூற்றாண்டு கணினி யுகம் என்று வளர்ந்து விட்ட இன்றைய நாளிலும் இது போன்ற மத, மூட விழாக்களைக் கொண்டாடுவதானது நாம் அறிவார்ந்த சமூகத்தினர்தானா என எண்ணிப் பார்க்க வேண்டும்" என 'ஏன் இந்த வெளியீடு?' என்னும் தலைப்பில் எழுதிய முன்னுரையில் வினா எழுப்பியுள்ளார்.

கட்டுரையாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் மறுத்துள்ளனர். இருவர் மட்டும் நடுநிலை வகித்துள்ளனர். "அடிமைப்படுத்தும் அடையாளங்கள் என்பதில் அய்யமின்றி ஒட்டு மொத்த பெண் விடுதலை விரும்பிகளும் பூப்பு நீராட்டுச் சடங்குகளை எதிர்க்கிறோம்" என அனைவர் சார்பாகவும் புதிய மாதவி குரல் கொடுத்துள்ளார். "வீட்டுப் பெண்களிடம் வெறும் புலிக் கதையைப் பற்றிப் பேசிப் பேசி பூப்பு நீராட்டு விழா நடத்தாமல் அவளையே புலியாக மாற்றும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் உண்டு"  
என்று உணர்த்தியுள்ளார் மேசா.முனைவர் நா.நளினி தேவி. "ஊருக்கு மட்டும் அறிவுறுத்தல், மேடை முழக்கம், இயக்க வீச்சு என்று நின்று விடாமல் செயலிலும் எதிர்ப்பைக் காட்ட வேண்டும்" என்று தூண்டியுள்ளார்.
அடுத்து "தன்மதிப்புள்ள பெண்கள், பெற்றோர்கள் யாவரும் பெண்ணை இழிவுபடுத்தும் 'பூப்பு நீராட்டு விழா'வினைத் தம் வாழ்வில் இருந்து தூக்கி எறிய வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார் சா.மா.அறிவுக் கண்ணு. கலை இலக்கியா "இயல்பானவற்றை இயல்போட இருக்க விட்டால் பெண் பிள்ளைக‌ளின் மன அழுத்தம் கொஞ்சம் குறையும், யோசியுங்கள். தேவையற்ற பூப்பு விழாவை நிறுத்துங்கள்" என்று உத்தரவிட்டுள்ளார். "சடங்கு  நடத்துவது காட்டுமிராண்டித் தனம் என்ற சிந்தனை இளைஞர்கள் மத்தியில் பரப்பப்பட வேண்டும்" என்று ஓவியா கூறியுள்ளார். த.பானுமதி ஒரு படி மேலே சென்று "சட்டத்திற்கும் எதிரான ஒரு நிகழ்வாகவும் கருதப்பட வேண்டும்" என்று ஆலோசனை வழங்கியுள்ளார். "அவமானகரமானது" என்று எச்சரித்துள்ளார் அஜிதா.

முங்காரி இதழில் நூலரங்கம் பகுதியில் 'பூப்பு நீராட்டு விழா தேவையா?' என்னும் இத்தொகுப்பின் மீது விமரிசனம் எழுதிய  குன்றம் மு.இராமரத்நம் ஆறு புகார்களை எடுத்துக் கொண்டு குறுக்கு விசாரணை நடத்தியுள்ளார். "பூப்பு நீராட்டு தேவையில்லை என்ற முன் முடிவுக்காரர்கள்" என அனைவரையும் ஒரே நேர்க் கோட்டில் வைத்து குற்றம் சாட்டியுள்ளார். 

'தீட்டென்று மஞ்சள் நீராட்டு விழா எடுப்பது தேவையில்லை'  என்பதை ஒரு புகாராகக் கூறி அதை மறுத்து தீட்டே என்கிறார். 'தீட்டு என்பது விலக்கத் தக்கது' என்பது மறுப்பிற்குரியது, மாதவிடாய்க் காலத்தில் ரத்தப் போக்கின் காரணமாக பெண்கள் மிகுந்த களைப்பு ஏற்படும் என்பதால் பெண்களுக்கு ஓய்வு தேவை என்றே ஓரிடத்தில் இருக்கச் செய்கிறார்கள். அதற்கு பெயர் விலக்கு அல்ல; ஓய்வு என்கிறார். 'விளம்பரப் படுத்த நீராட்டு விழா நடத்துவது அவமானம்' என்பதையும் ஒரு புகாராக எடுத்துக் கொண்டு பெண்ணின் விவரம் தந்து வரன் தேடுவது போலவும் சுயம்வரம் நடத்துவது போலவும் நீராட்டு விழா நடத்துவதும் ஒன்றே என்கிறார். வரன் தேடுவதும் வரம் நடத்துவதும் பெண்ணுக்கு திருமண வயதான பிறகாகும்; மனம் பக்குவப்பட்ட நிலையிலாகும். இதனோடு அதை ஒப்பிடக் கூடாது. பூப்பு நீராட்டுவது சிறிய வயதிலேயே நடத்தப்படுகிறது. முன்பு பால்ய விவாகம் இருந்தது. அதனால் அது தேவையாக இருந்தது. ஊரைத் திரட்டி சொல்ல வேண்டி இருந்தது. தற்கால நிலையில் சிறுமி பூப்படைவதை வெளியில் சொல்ல முடியாது. சொல்லக் கூடாது.

ஆண்வழிச் சமூகம் பெண்ணை பலவீனமாகக் கருதி அடிமைப்படுத்தியே வந்துள்ளது. 'பூப்போடு தொடங்குகிறது பெண்ணை அடக்கி ஆளும் நடவடிக்கை' என்பதும் அவ்வகையில் ஆனதே என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சிறுமியாக இருந்த போது துள்ளித் திரிந்தவள், ஓடி விளையாடியவள் பூப்பு அடைந்த பின்  'அடக்கப்' படுகிறாள். அப்போதிருந்தே பெண்ணடிமை தொடங்குகிறது. 'பாதுகாப்பு நடவடிக்கையாக பெற்றோர்கள் பெண்ணை கட்டுப்பாட்டுக்குள்  வைத்தார்கள்' என 'பழைய பல்லவி'யைப் பாடியுள்ளார். மேலும் 'பெண்ணின் காம உணர்வுக்கு வடிகாலாக தக்க வயதில் அவளுக்குத் தகுதியான மாப்பிள்ளை தேடி மணமுடித்தார்கள்' என்னும் வாதத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. கற்பு என்பது பொது போல காமமும் பொதுவே. பெண்ணை மட்டும் குற்றம் சாட்டுவது முறையல்ல. சுதந்திரம் தருவதால் பெண்கள் தவறு செய்யவே வாய்ப்புகள் ஏற்படும் என்னும் பொருளில் 'சுதந்திர மனுக்ஷி'  என்னும் கவிதையையே எழுதியுள்ளார். முற்றிலும் தவறானது.
'கற்பு' இது
எங்களைச் சுற்றிக் கிழிக்கப்படும்
கடைசி எல்லைக் கோடு.
கோட்டைத் தாண்டிய நான்
இப்பொழுது சுதந்திர பூமியில்.
தாகம் பசி போல
மோகமும் ஒன்றுதான்.
அதற்கு நான்
சுயேட்சையாக ஆளை
தேர்வு செய்கிறேன். புணர்கிறேன்
அடுத்த தடவைக்கு
அதே ஆள் என்பது அவசியமில்லை.   

என பெண்ணின் சுதந்திரத்தைத் தவறாக பேசியுள்ளார். இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆண்கள் பெண்களைப் போகப் பொருளாகவும் தான் ஈட்டும் சொத்துக்கு வாரிசுகளை (ஆண் மக்களை) பெற்றுத் தரும் இயந்திரமாகவே நடத்துகிறார்கள் என்பதை மாற்றிக் கூறி பெண்களைக் குறை கூறியுள்ளார். இது வாதத்துக்கு வாதம் போல் உள்ளது. பெண்களுக்கு ஏற்படும் எல்லாத் தொல்லைகளுக்கும் முக்கியக் காரணம் ஆணாதிக்கமே என்பதற்கான மறுப்பும் எதிர்வாதமாகவே உள்ளது. ஒரு முன் முடிவுடனே குன்றம் எழுதியுள்ளார் என்பது வெளிச்சமாகிறது.

தாய் மாமன் சீர் செய்வது ஒரு முறை; வழக்கம். ஆண்களுக்கு சொத்து பெண்களுக்கு சீர் என்பது அப்போதைய நடைமுறை. அதனால் சீர் செய்யப்பட்டது. தற்போது பெண்களுக்கு சொத்தில் பங்குண்டு என்று சட்டமே இயற்றப்பட்டுள்ளது. இதை மறுத்தோ வரவேற்றோ பேசாமல் தாய் மாமன் சீர் பற்றிய செய்தியைக் கூறி விட்டு தாய் மாமனை தரகு மாமாவுடன் ஒப்பிட்டிருப்பது உறவைக் கொச்சப்படுத்தும் முயற்சியாகும்.

பூப்பு நீராட்டு விழா தேவை இல்லை என்று விவாதத்தில் வைக்கப்பட்ட கருத்தக்களை மறுத்து பழமையான வாதத்தையே முன் வைத்த அய்யா குன்றம் அவர்கள் முடிவில் பூப்பு நீராட்டு தேவையா தேவையில்லையா என்பதைக் குறிப்பிடாமல் குடும்பம், கட்டுப்பாடு என்று திசை மாறி சென்றுள்ளார்.

பெண்கள் பூப்படைவது ஓர் இனிமையான நிகழ்வுதான். நீராடுவது தவறில்லை. அதற்காக ஊரை, உற்றாரை, உறவினரைத் திரட்டி நடத்த வேண்டியதில்லை. அக் காலத்தில் நகரம் விரிவடையாத நிலையில் தொழில் நுட்பம் பெருகாத சூழலில் ஒரு கிராமத்திறகுள்ளே நெருங்கிய உறவுகளை வைத்து நடத்தப் பட்டது. உறவுகளைத் திரட்டி நடத்தப்பட்டதாலே பூப்பு நீராட்டு விழாவிற்கு கிராம அளவில் 'தெரட்டி' என்று அழைக்கப்பட்டது. திரட்டியே மருவி தெரட்டி ஆனது. அப்போது பால்ய விவாகமும் நடத்தப்பட்டது. அதனால் உறவுகளுக்குத் தகவல் தெரிவிக்கும் ஒரு நிகழ்வாக இருந்தது. பெண்களுக்கு படிப்பும் மறுக்கப்பட்டது. தற்போது பெண்கள் போதுமான அளவு படிக்கிறார்கள்; படிக்க விரும்புகிறார்கள். பொருளாதார நிலையிலும் தன்னிறைவு அடைகிறார்கள். அதன் பிறகே திருமணம் என்னும் சிந்தனை எழுகிறது. இதனால் சிறுமியாக உள்ள போது பூப்படைவதை நீராட்டு விழா நடத்தி அறிவிக்க வேண்டியதில்லை. ஒன்றும் புரியாத நிலையில் பலர் முன் அமரச் செய்து சடங்கு செய்வது சிறுமியின் மனநிலைக்குள்ளும் ஒரு பாதிப்பை உண்டாக்கும்.

சிற்றிதழ் ஆசிரியாரக இருந்து கொண்டு தமிழ்ச் சிற்றிதழ்ச் சங்கத் தலைவராக பொறுப்பில் பணியாற்றிக் கொண்டு படைப்புகளைத் தந்து கொண்டு படைப்பாளர்களையும் ஊக்குவித்து வரும் குன்றம் மு.இராமரத்நம் பூப்பு நீராட்டு விழா தேவை என்னும் அளவில் எழுதியிருப்பது வருத்தத்தை அளிக்கிறது. பெண்களிடையேயும் அவர் மீது ஒரு கோபத்தையே ஏற்படுத்தும். பெண்ணியத்துக்காக பெண்கள் போராடி வரும் வேளையில், ஆண்கள் குரல் கொடுத்து வரும் சூழலில் குன்றம் அவர்களின் போக்கு விவாதத்திற்கு உரியதாக உள்ளது. குன்றம் மு.இராமரத்நம் அவர்கள் தன் கருத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.

"ஆணாதிக்க அழுக்குக் கலாச்சாரப் பூச்சுக்கள் சுரண்டி எறியப் பட வேண்டும். இத்தகைய அழிவுப் பூச்சையும் சுரண்டி எறிந்த பின்தான் பெண் மகத்தான மனிதப் பிறவியாக ஒளிர முடியும். அத்தகைய அழிவுப் பணியில் ஈடுபடுத்திக் கொள்ள இந்த நூல் ஒரு தூண்டுதலாக இருக்கும் என்பதில் அய்யமில்லை" என அணிந்துரையில் பேராசிரியர் சரசுவதி எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது. அய்யாவிற்கும் இந்த நூல் ஒரு தூண்டுதலாக அமைய வேண்டும்.