பெண்ணியம் என்னும் சொல் இன்று உலகளாவிய பயன்பாட்டில் உள்ளது. உலகிலுள்ள அனைத்துப் பெண்களின் முன்னேற்றத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்டு எழுந்த ஓர் இயக்கத்தைக் குறிப்பதே பெண்ணியமாகும். பெண் என்பவள் எல்லா வகையிலும் ஆணுக்கு நிகரானவளே. அவளை எந்த நிலையிலும் அடக்கி வைக்கக் கூடாது. அதே போல் அவளைச் சமூகப் பண்பாட்டு நிலைகளிலிருந்து தனிமைப்படுத்திப் பார்ப்பதற்கியலாது. பெண் என்பவள் அனைத்துத் தகுதிகளுடனும் இப்பூமியில் வாழப் பிறந்தவள். அடங்கப் பிறந்தவள் அல்ல என்பதனை மையமாகக் கொண்டதும் பெண்ணியமாகும் . மற்ற சமூகப் பெண்களை விட பல்வேறு வகையிலும் கூடுதலாக இன்னல்களை அனுபவித்து வரும் தலித் பெண்ணிய வரலாறு என்பது மற்ற பெண்ணியச் சிந்தனைகளிலிருந்து மாறுபட்டது.

தலித் பெண்ணியம்

ஆணாதிக்க வலையில் சிக்கிய எல்லாத் தரப்பு மகளிரிடமும் அடிமைத் தனம் வேரூன்றி இருந்தாலும் ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்வில் அதன் உச்சத்தைக் காணமுடிகின்றது. நம் நாட்டில் தலித் இனப் பெண்கள் பிற இனப்பெண்களைக் காட்டிலும் கல்வி, பொருளாதாரம், சுற்றுப்பற விழிப்புணர்வு, உடல்நலம் பற்றிய அக்கறை எனப்பல நிலைகளில் பின்தங்கியுள்ளனர். இத்தகைய அடிமைத்தனத்தைப் புரிந்து கொள்ளத் தெரியாத தலித் பெண்களுக்கு அதிலிருந்து அவர்களை மீட்டு விழிப்புணர்வூட்டி தன் உணர்வுடன் வாழவைப்பதே தலித் பெண்ணியமாகும்.

பழையன கழிதல்

அறியாமையில் வீழ்ந்து அடக்குமுறைகளை எதிர்க்க இயலாமல் ஏற்றுக் கொள்ளும் நேற்றைய பெண்கள் நிலைமாறி, கல்வியறிவு பெற்று உரிமைக்கும் எழுச்சிக் குரல் கொடுக்கும் காலமாற்றம் வந்துவிட்டது.

பாமாவின் ‘வன்மம்’ நாவலில் வரும் “அவுக தெருவுலருந்து டீச்சருக, டாக்டருக, வக்கீலுக, காலேசு வாத்தியாருக அப்பிடி இப்பிடின்னு நெறய்யாப் படிச்சுட்டாக அதானெ இப்ப நம்மகிட்ட வேல வெட்டிக்கு வரமாட்டானுக” (வன்மம்.ப.76.) எனும் பகுதியின் வழி தலித் பெண்களின் கல்வி வளர்ச்சியால் அடிமைத் தொழிலை விட்டு, பொருளாதார முன்னேற்றப் பாதையில் அவர்கள் செல்வதை அறிய முடிகிறது.

உயர் வர்க்கத்தின் அடக்குமுறை

தலித் பெண்களின் பிரச்சனைகளும், அனுபவங்களும் நிச்சியமாக தலித் ஆண்களின் பிரச்சனைகளிலிருந்தும், அனுபவங்களிலிருந்தும் வித்தியாசப்பட்டு உள்ளதால் தான் தலித் பெண்ணியம் என்ற கருத்தாக்கமே உருவாயிற்று என அ.மார்க்ஸ் குறிப்படுகிறார்.

வன்மம் நாவலில் தலித் இனமக்களை மேல் வர்க்கத்தினர் போலீசாரைக் கொண்டு அடக்க முற்படுகின்றனர். போலீசாரும் தலித் இனப் பெண்களைத் தங்களின் அதிகாரத்தால் ஆட்டிப்படைக்கின்றனர். இதனை, “அழுகக் கூட உடாமை, போலீசுக்காரணுக அம்புட்டுப் பேத்தயும் அரட்டி மெரட்டி போலீசு வண்டில ஏத்துனாக, ஏத்திட்டு போனா, பஸ்ஸாண்டுல யாருமே இல்ல” (வன்மம்.ப.102.) என்று கூறும்பொழுது உயர் வர்க்கத்தின் அடக்குமுறைக்குத் தலித் பெண்கள் ஆளாவதை அறியமுடிகின்றது. மேலும,; தலித் இனப் பெண் என்பதால் போலீசாரின் அடக்குமுறை அதிகமாகிறது. உயர் அதிகாரியிடம் புகார் செய்த காரணத்தினால் கர்ப்பிணிப் பெண் என்றும் பாராமல் போலீசார் அடிக்கினறனர். அதனால் அவளுடைய கர்ப்பம் கலைகிறது. இதனை,

“போலீசுக்காரனுக செல்லக்கிளிய பூட்சு காலுட்ட அடிவகுத்துல எத்தி, “சர்க்கிள்கிட்ட பொகாரு செய்றியோ? வாயக் கிழிச்சுருவோம் இனி பேசுனா, சொல்லிக்கிட்டே திரும்பியும் எத்துனான். கூட வந்தவனுக லத்திக் கம்புட்ட பிட்டாணில அடுச்சான். அப்பிடியே வந்து சுருண்டு படுத்திட்டா செல்லக்கிளி. அந்நியாரமே, வகுத்துல சுரீர்னு வலி எடுக்க கரு கலஞ்சு செயிலுக்குள்ளய அபார்சன் ஆகி படாதபாடு பட்டா....”(வன்மம். பக்.104-105) என்று கூறுகையில் தலித் பெண்களின் வேதனைகளை அறியமுடிகிறது.

மனச்சோர்வு, அழுத்தம்

பெண் விடுதலையில், பெண்களுக்கு ஏற்படும் அதிகமான மனச்சோர்வுக்குக் காரணம் செல்வாக்குச் செலுத்தும் சமூகக் கலாச்சாரமாகும். பல கலாச்சாரங்களில் பெணகள், இரண்டாம் தரக் குடியுரிமையுடையவர்களாகவும், ஆண்களைவிடத் தாழ்ந்தவர்களாகவும் கருதப்படுகிறார்கள். இப்பாலின வேறுபாடானது பெண்களின் மன நலத்தைப் பெரிதும் நாசமடையச் செய்கின்றது. குடும்பச் சுமைகள், சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள், உடல் மற்றும் பாலியல் வன்முறைகள் ஆகியன பெண்களுக்கு மனச்சோர்வையும், மனஅழுத்தத்தையும் உண்டாக்குகின்றன. உயர் வர்க்கத்தினர், தலித் இனப் பெண்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதைப் பொறுக்க முடியாமல், வேறொரு தலித் இன ஆண்களிடம் சொல்லித் தூண்டிவிடுகின்றனர்.

“என்னடா, அந்தக் கூத்தாடிப் பெயலுக விடிய விடியக் கூத்தடிச்சிக் கிட்டுக் கெடந்தானுக போல”,

“அந்த கூத்தெ ஏங்கேக்குறிய ஐயா. சம்பந்தம் உட்ட கெழவிக கூட கூச்சமில்லாம அம்புட்டுப் பேருக்கும் முன்னால கும்மியடிச்சுக் கும்மாளம் போடுறாளுக. கண்றாவி” என்று பேசுவதன் மூலம் தலித் பெண்கள் கலை நிகழ்ச்சிகளில் பங்கு கொள்வதைக் கேலி செய்யப்படுவதை அறிய முடிகிறது.

உயர் வர்க்கப் பெண்களால் ஒடுக்கப்படல்

ஒரு தலித் பெண்ணுக்குப் ‘பெண்’ என்ற நிலையைக் காட்டிலும் தலித்பெண் என்கிற நிலையிலே அடையாளம் கட்டமைக்கப்படுகிறது. அவள் பெண்ணாக இருப்பதைக் காட்டிலும் தலித் பெண்ணாக இருப்பதாலேயே பிரச்சனைகள் ஏற்படுகின்றன என அ.மார்க்ஸ் கூறுவதனை கவனத்தில் கொள்ள வேண்டியதாய் உள்ளது.

தலித் இனப் பெண்கள் இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்றால் கூட உயர் வர்க்கப் பெண்களால் அடக்குமுறை செய்யப்படுகின்றனர். இயற்கை உபாதையென்பது அனைத்து இன மக்களுக்கும் இயல்பான ஒன்று. ஆனால் தலித் இனப் பெண்கள் இயற்கை உபாதையிலும் அடக்குமுறைக்கு ஆட்படுவது இந்நாவலில் வெளிப்படுகிறது.

“சவரியம்மாதான் தைரியமாப் பேசுனா. மத்தவுகள்ளாம் அப்பிடியே சுருண்டுக்கிட்டாக, இத்தனை வருச காலமா நாங்க ரவையில மேற்கதான் வெளிக்குப் போவோம். இப்ப அதுமாதிரிப் போயி ஒக்காந்தா, அந்தத் தெரு பொம்பளைக கல்லக்கொண்டு எருஞ்சு வெரட்டுறாளுக, கேட்டா, அது அவுகஎடமாம், நாங்க போயி இருக்க கூடாதாம். அவளுகளுக்கு வீசுதாம். ஏ, இம்புட்டு நாளும் வீசாம மணந்தா கெடந்துச்சு, இப்ப மட்டும் இப்படி வம்புச் சண்டைக்கு வாராளுக. சாம யாமத்துல வெளிக்கு வந்தா பொம்பளைப் புள்ளக எங்குட்டயா போக முடியும்”(வன்மம்.ப.103). என்பதன் வழி தலித் இனப்பெண்கள் இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்லும் பகுதியில் கூட உயர் வர்க்கப் பெண்களால் ஒடுக்கப்படுவதனை அறிய முடிகிறது.

விழிப்புணர்வு, துணிவு, ஒற்றுமை

அடிமைத் தளையிலிருந்து விடுபடுவதற்கு விழிப்புணர்வும் துணிவும் ஒற்றுமையும் அவசியமாகும். விழிப்புணர்வைப் பெற அடிப்படையாக அமைவது கல்வியாகும். அவ்வகையில் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் பெண்களை மீட்க ரோஸ்மேரி ஆயத்தமானாள். சிறையிலுள்ள பெண்களுக்கு உதவிகளைச் செய்து அவர்கள் விடுதலை பெற வேண்டிய ஏற்பாடுகளைச் செய்கின்றாள். பெண்கள் காவல்நிலையம் செல்லுதல் இழுக்காக கருதப்பட்ட காலம் போய் பெண்களுக்காக பெண்களே உதவிகளையும் அவர்கள் விடுதலை பெற உழைப்பதையும் காணமுடிகின்றது. இதனை,

“ரோஸ்மேரி டேசன்ல போயி பொம்பளைகளப் பாத்தா, அவுகளுக்குத் தைரியஞ் சொல்லிட்டு, ஊர்ல பொம்பளைகளாச் சேந்து குடுத்த ரூபாயில அவுகளுக்குத் தேவையானதை வாங்கிக் கொடுத்தா. மொத்தம் பதினாறு பேத்துல ஆறு பேர உட்டுட்டாக.(வன்மம்.ப.108). எனும் வழி பெண்கள் இன்று எல்லா நிலைகளிலும் முன்னேறி வந்துள்ளதை அறியமுடிகிறது.

பெண்கள் காரியம் செய்தல்

காலம் தோறும் பெண்கள் இறப்பின் போது கூடப்பிறந்த அண்ணனோ, தம்பியோ, தாயோ, தந்தையோ, கணவனோ, குழந்தையோ யார் இறந்தாலும் வீதிவரை வந்து காரியம் செய்வது விட்டு போயிவிடுவார்கள். இறந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடத்திற்கு பெண்கள் செல்லத் தடை உண்டு. ஆனால், இந்நாவலில் இறந்தவர்களைப் பெண்கள் தாங்களாகவே குழிவெட்டி அடக்கம் செய்கின்றனர்.

“ரோஸ்மேரி பஸ் ஸ்டாண்டுக்கு மாட்டு வண்டிய ஓட்டிக்கிட்டுப் போயி மூணு பொணத்தையும் வாங்கி வண்டியிலேயே வச்சு கொண்டாந்தாக. தெருவுக்குள்ள வரவும் பொம்பளைக பூராம் வாயுல வகுத்துல அடுச்சிக்கிட்டு அழுதாக, போலீசுகாரனுக இத்தினிக்கூட எரக்கமில்லாம அழுகக்கூட உடமாட்டேனுட்டாக, பொம்பளைகளைக் கூட்டுகிட்டு வண்டிய ஓட்டிக்கிட்டு கல்லறைக்குப் போயி பெரிய குழியா ஒரு குழிய பொம்பளைகளா வெட்டி மூணு பொணத்தையும் ஒரு குழிக்குள்ள போட்டு பெதச்சிட்டு வந்தாக”.(வன்மம்.ப.105).எனும் வழி பெண்கள் சுடுகாட்டுக்குச் சென்று இறுதிச் சடங்குகள் செய்ததனை அறியமுடிகிறது.

நிறைவாக

· காலச் சுழற்சியில் மாற்றங்கள் வேகமாக நடைபெறுகையில் சமூகத்தோடு நெறிப்பட்ட வாழ்க்கையை வாழ தலித் பெண்களுக்குக் கல்வி அவசியம் என்பதனை அறிய முடிகின்றது.

· பெண் என்ற நிலையிலும் தலித் என்ற நிலையிலும் இரட்டை அடக்குமுறைக்கு ஆளாவதை காணமுடிகிறது.

· பெண் என்பதால் ஆணினத்தாலும் தலித்பெண் என்பதால் உயர் சாதி ஆண்கள்மட்டுமின்றி, பெண்களாலும் அடக்குமுறைக்கு ஆளாவதை நாவலில் காணமுடிகிறது.

· மேல் வர்க்கத்தினர் மட்டுமின்றி அதிகாரம் படைத்தவர்களாலும்(போலீசார்) தலித் பெண்கள் ஒடுக்கப்படுவதை அறியமுடிகிறது.

· பிற நிகழ்வுகளில் பங்கேற்கும் பொழுது பிறரின் பேச்சுக்கு ஆளாவதால் தலித் பெண்களுக்கு மனச்சோர்வும் மனஅழுத்தமும் ஏற்படுகின்றதை இந்நாவலில் பல இடங்களில் அறிய முடிகிறது.

-          சௌ.சுரேஷ்குமார், முனைவர் பட்ட ஆய்வாளர், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்