நாளி என்ற பழங்குடி சொல்லுக்கு ஓடை என்று பொருளாம்.

பழங்குடி இனங்கள் என்றால்…?

                தனக்கென தனித்த பொருளாதார-பண்பாட்டு வாழ்வை உடைய நிலையான மக்கள் சமூகம். இவர்களின் சொந்த நிலபரப்பு காடு, மலை மற்றும் இவை சார்ந்த இடங்கள். இப்படி சொந்த வாழ்வாதார பகுதியைக் கொண்ட மக்கள் சமூகத்தை குறிக்க முகவரி இருக்க வேண்டும். இந்த நாட்டவர், இந்த தேசத்தவர் எனப்பட வேண்டும். கேடுகெட்ட இந்திய முறைப்படி இந்த மாநிலத்தவர் என்றாவது சொல்லப்பட வேண்டும்.

                ஆனால் நாளியில் உள்ள பழங்குடி இனங்களை என்னவென்று சொல்ல வேண்டி இருக்கிறது – தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் உள்ள காடுகளில் வாழும் மக்கள் என சொல்கிறோம். ஏதோ வெளியில் இருந்து தஞ்சமடைய வந்தவர்களாக, அகதிகளாக, வந்தேறிகளாக, நமது நிலத்தை ஆக்கிரமிப்பவர்களாக பொருள்படும் வகையில் சொல்லப்படுவது என்ன ஞாயம்?

                இயற்கையைப் பாதுகாத்து, இயற்கையோடு இயைந்து, இயற்கையாய் வாழும் இப்பழங்குடி இனங்களை நம்மைச் சார்ந்த ஆட்சியாளர்கள், அதிகார வர்க்கங்கள் அழித்து வருவதைத்தான் நாளி மூலம் நமக்கு உணர்த்துகிறார்கள் இரா.முருகவேள் மற்றும் இலட்சுமணன்.

                பழங்குடி இனங்கள் மீதான ஆக்கிரமிப்புப் போர் என்பது நாம் பெருமை பீற்றிக்கொள்கிற பேரரசுகள் காலம் தொட்டே நடப்பதை நாளி நமக்குச் சொல்கிறது. அது வெள்ளை ஏகாதிபத்தியத்தாலும் தொடரப்படுகிறது.

                இதன் உச்சமாக மிச்சமிருப்பவர்களையும் துடைத்தழிக்க இந்திய அதிகார வர்க்கமும், அதன் பொருளாதர அடியாள் படைகளும் கூடி நிற்கின்றன. இந்த கொலைகாரப் படைகள் கருணாமூர்த்திகளாக பார்க்கப்படுவதுதான் கொடுமை.

                இன்று காடுகளின் பாதுகாவலர்களாக, பல்லுயிர் தன்மையுள்ள பசுமை காடுகளுக்கு போராடுபவர்களாக, புலிகள் காப்பகத்தாராக காட்டிக்கொள்கிறார்கள் அல்லவா அவர்கள்தாம் பழங்குடி இனங்களை அழிக்கத் துடிக்கும் அய்ந்தாம் படையினர். இவர்களைக் கொண்டுதான் பழங்குடி இனங்களுக்கு சொந்தமான காடுகளில் தனது முற்று முழு அதிகாரத்தை நிறுவத்துடிக்கிறது இந்திய ஆளும் வர்க்கம்.

                இவர்கள் காடுகளை கைப்பற்றி பொய்த்துப்போன மழையை மீண்டும் மண்ணுக்கு தரவாத் துடிக்கிறார்கள்? இல்லை, மழையை மீட்க வேண்டுமானால் நாம்தான் அரசிடம் இருந்தும், அதிகார வர்க்கத்திடம் இருந்தும் காடுகளை மீட்க வேண்டும். தேயிலைத் தோட்டங்களாக, யூக்கலிப்டஸ் மற்றும் தேக்குமரத் தோட்டங்களாக மாற்றப்பட்ட பொய்க்காடுகளை அழித்து உண்மையான காடுகளை உருவாக்க வேண்டும். காடு உருவாக்கும் கலையும், தொழில் அறிவும் கைவறப்பெற்ற பழங்குடி மக்களிடம் அவைகளை ஒப்படைக்க வேண்டும்.

                வேறு எதற்காக அதிகார வர்க்கம் காடுகளை கைப்பற்ற துடிக்கிறது? இதற்கு பின்னால் உலக பணக்கார தொழில் நிறுவன மாஃபியாக்கள் உள்ளனர். ஆம் இன்று உலகில் ”கார்பன் ட்ரேடிங்” என்ற உலகை முட்டாளாக்கும் வணிகம் ஒன்று நடைபெறுகிறது.

                அதாவது இன்றைய நவீன தொழில்நுட்ப ஆலைகள் அளவுக்கு அதிகமான நச்சுக்கழிவுகளையும், வெப்பத்தையும் வெளியேற்றுகின்றன. ஆதலால், புவி வெப்பமடைதல் தீவிரமாகிறது. பனிப்பாறைகள், ப‌னிமலைகள் உருகுவதும் அதனால் பல தீவுகளும், நாடுகளும் மூழ்குவதற்கான அபாயம் அதிகரிக்கிறது. இந்த நிலையை உலகில் விழிப்படைந்த மக்கள் சமூகங்கள் எதிர்க்கின்றன. குறிப்பாக அய்ரோப்பிய நாடுகளில் பலமான எதிர்ப்பு உள்ளது. இது ஏகாதிப்பத்திய எதிர்ப்பை உருவாக்கக்கூடியது.

                இதனை உணர்ந்த அய்ரோப்பிய நாடுகளின் தொழில் நிறுவனங்கள் தங்களால் வெளியேற்றப்படும் வெப்பத்தின் அளவை குறைத்துக் கொள்வதாகவும், அதற்கான மாற்று முறைகளையும், சில சீர்திருத்தங்களையும் செய்வதாக முன் வந்தன. ஆனால், அமெரிக்க நாடுகளின் நிறுவனங்கள் மட்டும் தங்களால் கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொள்ள முடியாது என்றும், தங்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பை நிவர்த்தி செய்ய தங்களது நாட்டுக்கு வெளியே இயற்கையை பராமரிப்பதாகவும் காடுகளை உருவாக்குவதாகவும் கூறின.

                இப்போது ஏற்கனவே அதிக அளவில் காடுகளை உடைய நாடுகள், அதே நேரத்தில் அமெரிக்க அளவில் தொழில் நிறுவனங்களால் பூமியை மாசுப்படுத்தாத நாடுகள் அமெரிக்காவோடு பேரம் பேசத் தொடங்கின. நாங்கள் அதிக அளவில் காடுகளை வைத்துள்ளோம்; உங்கள் நாடு வெளியேற்றும் வெப்பத்தில் இருந்து இந்த உலகை பாதுகாப்பதில் பெருமளவில் பங்காற்றி வருகிறோம்; ஆகவே நீங்கள் ஏற்படுத்தும் இழப்புக்கானத் தொகையை எங்களிடம் உள்ள காடுகளின் அளவிற்கேற்ப எங்களுக்கு தரவேண்டும் என கோரின.

                இதை அமெரிக்க உள்ளிட்ட பெருந்தொழில் நிறுவன நாடுகள் ஏற்றுக்கொண்டு தரவும் செய்கின்றன. இதுதான் கார்பன் ட்ரேடிங் எனும் மாசுப்படுத்தலை நிவர்த்தி செய்தல் என்ற உலகை முட்டாளாக்கும் வணிகமாகும்.

                சரி, இப்படி காடுகளின் பேரால் கொள்ளையடிப்பவர்கள் ஏன் பழங்குடி இனங்களை காடுகளில் இருந்து வெளியேற்றத் துடிக்கிறார்கள்?

                காடுகளை பராமரிக்க பணம் தருகிற எசமானர்கள் காடுகளின் மீது படிப்படியாக தன் உரிமையை நிலைநாட்டத் துடிக்கிறார்கள். முதலில் காடுகளை நவீன சுற்றுலா இடங்களாக மாற்ற உத்தரவிடுகின்றார்கள். இது இத்துறையில் அவர்கள் மூலதனமிடவும், நினைத்த நேரத்தில் அவர்கள் இங்கு வந்து மகிழ்ச்சிக் கூத்தாடவும் தேவைப்படுகிறது. அவை எல்லாவற்றையும் விட காடுகள் பல கனிமங்களைக் கொண்ட செல்வக் களஞ்சியமாகும். அதை கண்டடையவும், கைப்பற்றவும் தடையாய் இருக்கிற பழங்குடி இனங்கள் வெளியேற்றப் படவேண்டுமென நிர்பந்திக்கிறார்கள்.

                ஆக உலகை மாசுப்படுத்தி நாசப்படுத்தும் அமெரிக்க முதலான எசமானர்களின் பாவம் நீக்கி பரிகாரம் காண இங்கு காடுகள் வளர்க்க‌வும், அவர்கள் கூத்தாடி மோட்சம் பெற காடுகளை உல்லாசபுரிகளாக மாற்றவும், ஒரு காலத்தில் தேயிலை, சவுக்கு, தேக்கு, யூக்லிப்டஸ் தோட்டங்களுக்காக காடுகளைக் கைப்பற்றியது போல் இப்போது அதன் அனைத்து வளங்களையும் அடைவதற்காக – அதாவது காடுகளுக்கும் அதன் சொந்த மக்களான பழங்குடி இனங்களுக்கும் இறுதி சமாதி கட்டுவதற்காக துடிக்கிறது அதிகார வர்க்கம்.

                நாளி – தன் ஒவ்வொரு நகர்விலும் மக்கள் எதிரிகளை நமக்கு அடையாளப்படுத்துகிறது. இரசாயனங்களைக் கொட்டி மண்புழுவையும், தவளையையும், வெட்டுக்கிளியையும் அழித்து கொசுக்களையும், நோய்க் கிருமிகளையும் பெருகச்செய்து மருத்துவக் கொள்ளைக்கு வழி கோலியவர்கள்; புற்றீசல் போல் தொலைத் தொடர்பு, தொழில்நுட்பக் கோபுரங்கள் அமைத்து சிட்டுக்குருவி இனத்தையே அழித்தவர்கள்; காடுகளை தனியார் உடமையாக்கி மின் வேலியிட்டு வனவிலங்குகளை அழித்து வருகிறவர்கள்; நகரங்களை குப்பைமேடாக்கி கொண்டிருப்பவர்கள் எல்லாம் புலிகள் காப்பகம், பசுமை கானகம் என வேதாந்தம் பேசி காடுகளை அழிக்கத் துடிக்கும் கதையை நாளி நமக்கு புரிய வைக்கிறது.

                விவசாயத்தை வளர்த்தெடுப்பதாக இந்த வள்ளல்கள் செய்த கொடுமையினால் மண் கெட்டு விவசாயிகள் செத்து மடிவது தான் மிச்சம். இதே நிலைதான் நாளை காடுகளுக்கும் நடக்கும்.

                இதைத்தான் நாளி நமக்கு பாடமாக சொல்கிறது. பழங்குடி இனங்களைக் காப்பாற்றக் கோருகிறது. நாதியற்றவர்களுக்கு ஆதரவளிக்கும் கருணையல்ல இது. பழங்குடிகள் இப்பூமிப் பந்தின் பாதுகாவலர்கள். அவர்களின் தனித்த வாழ்வை, தனித்த சமூக அமைப்பை பாதுகாப்பதென்பது காடுகளையும், மலைகளையும் பாதுகாப்பதாகும். அதுவே இவ்வுலகையும் ஒட்டுமொத்த மனித குலத்தையும் பாதுகாப்பதாகும்.

                நாளி நமக்கு பல பொருளாதார அடியாட்களை அடையாளப் படுத்துகிறது. இயற்கை பாதுகாவலர்கள் என வேடமிட்டுத் திரியும் ஏகாதிபத்திய கைக்கூலிகளை சுட்டிக்காட்டுகிறது.

                ஆகவே நாளி பார்ப்பதற்கல்ல – போராடுவதற்கு! 

- குணா, தமிழக மக்கள் சனநாயகக் கூட்டமைப்பு