ஆதி அந்தம் இல்லாத கால ஓட்டத்தை எழுத்தில், ஏட்டில் வடிப்பதே வரலாற்று ஆவணம் ஆகிறது. இந்த ஆழிசூழ் உலகில், எல்லைக் கோடுகளுக்குள் செதுக்கப்பட்டு உள்ள நாடுகளின் பூகோள அமைப்பு, அந்நிலங்களில் வாழும் மக்களின் மொழி, இனம், நாகரீகம், பண்பாடு, பழக்கவழக்கம், அமைந்த அரசுகள், நேர்ந்த யுத்தங்கள், இவற்றை அறிந்துகொள்ள முனையும் தேடலுக்கு விடையாகவும், அறிவுத் தாகத்துக்கு நன்னீராகவும் எழுத்து விற்பன்னர்கள் படைத்து உள்ள நூல்கள், மனித குலத்துக்குப் பயன்படும் கருவூலங்கள் ஆகும்.

kilakkin_kathai_450ஹெரடோடஸ், பிளினி முதல், எச்.ஜி. வெல்ஸ், ஜவஹர்லால் நேரு வரை வரைந்த சரித்திர நூல்கள், சுவாசிக்கும் காற்றைப் போல மனிதனுக்குப் பயன் ஊட்டுபவை ஆகும். எழுத்துச் சிகரங்களில் சாதனைக் கொடி நாட்டிய அப்பேரறிவாளர்கள் நெஞ்சில் கிளர்ந்த தொலைநோக்கும், அறிவில் பூத்த நுண்மாண் நுழைபுலமும், தென் தமிழ்நாட்டில், தகைசால் பகுத்தறிவு நெறி தழைத்த ஒரு குடும்பத்தில் பிறந்த இளைஞனின் எண்ணத்தில், மதி நுட்பத்தில் புதைந்து இருந்த உண்மை, அவரது எழுத்துச் சுடர்களில், வெளிச்சத்துக்கு வந்ததை, அறிமுகப்படுத்தும் நூல்தான், ‘கிழக்கின் கதை’ ஆகும்.

ஆம்; அருணகிரிநாதன் எனும் இந்த வாலிப வைரம்தான், இளம் ஏந்தல்தான், நூறு நூல்களில் அறிய முடியும் அரிய செய்திகளை, குறட்பாவின் ஈரடியில், கருத்துக் குவியல்களைத் தருவது போல், அறிவு விருந்தை அள்ளிப் படைக்கிறார்.

தொன்மை நாகரிகங்களும், மனித குலத்தின் பெரும்பான்மை ஏற்று உள்ள சமயங்களும் பிறப்பெடுத்த ஆசியக் கண்டத்தின் 22 நாடுகளின் வரலாற்றுக்கு உள்ளே, நூற்றாண்டுகளின் பரப்புகளைக் கடந்து நம்மைப் பயணிக்க வைக்கும் எழுத்துத் தேர்தான், ‘கிழக்கின் கதை’ ஆகும். 
மெக்காலே கல்வி முறை அரங்கேறிய நாளில் இருந்து அண்மைக்காலம் வரை, பள்ளிக்கூடங்களில், பல்கலைக்கழங்களில், சரித்திரப் பாடம் என்பதே, தேதி மாதங்களைக் கணக்கிடுகின்ற காலண்டரைப் போல, கால வெள்ளம் ஏந்தி வந்த சம்பவங்களைக் குறிப்பிடுவதாக மட்டுமே இருந்து வருகிறது.

மனிதநேயக் கண்ணோட்டமும், சமூகச் சிந்தனையும், இந்த எழுத்தாளனின் குருதியில் சிவப்பு அணுக்களைப் போல அவரது உணர்வோடு பின்னி இருப்பதால், ஒவ்வொரு நாட்டைப் பற்றிச் சொல்லும்போதும், இதுவரை நடந்தது, இன்று நடப்பது பற்றியும் அன்றி, அம்மக்களின் மரபுகள், பண்பாடு, பழக்கவழக்கங்கள் குறித்தும் புதிய பரிமாணங்களைக் காட்டுகிறார்.

மஞ்சள் நதிக்கரையில் மலர்ந்த சீன நாகரிகம் பற்றிய சிந்தனையைக் கூர் தீட்டும் செய்திகளைப் படிக்கும்போதே, திகைப்பு மேலிடுகிறது.

நதியின் பெயர் என்ன? பெயருக்கு என்ன காரணம்? அது தொடங்கி முடியும் தொலைவு, பயன்பெறும் வட்டாரம், உலக நதிகளின் வரிசையில் அது வகிக்கும் இடம், இதனை உள்வாங்கும்போதே, அதிசயமாம் சீன நெடுஞ்சுவரின் தோற்றத்தையும், சிறப்பையும் சொன்ன வேகத்திலேயே, சீனர்கள் தந்த வெடிமருந்து, அச்சு எழுத்து, ஆமை ஓடுகளில் சீன எழுத்து என பண்டைய சீனாவை நம் கண்ணில் காட்டி, அரசுகள், பேரரசுகள் உதித்ததும், உலர்ந்ததுமான தகவல்கள், கன்பூஷியஸ், லாவோ சே எனும் சிந்தனையாளர்களின் தத்துவங்களைப் பற்றிய விளக்கமும் தந்து, அபினிப் போரையும், தைபிங் புரட்சியையும் படம் பிடித்தவாறே, பாக்ஸர் கலகம், ஊசாங் கலகம், சின்ஹாய் கிளர்ச்சி என வெடித்த மக்கள் எழுச்சியைக் காட்டியவாறே, இருபதாம் நூற்றாண்டின் வைகறையில், ‘சீனத்தின் தந்தை’யாக எழுந்த சன்-யாட்-சென் னின் அரசியல் போராட்டச் சரிதத்தையும்,

கோமிண்டாங் எனும் தேசிய மக்கள் கட்சி, 1921 ஆம் ஆண்டில், பாரிஸ் பட்டணத்தில் பயின்ற சூ யென் லாய் உள்ளிட்ட சீன மாணவர்கள், ‘இளம் சீனப் பொது உடைமைக் கட்சி’ அமைத்ததையும்,

சீனத்தில் பொது உடைமைக் கட்சி மலர்ந்ததையும், மா சே துங்கின் தலைக்கு உலை வைக்க வளைத்த சியாங்கே ஷேக் போட்ட மரண வளையத்தை உடைத்து மேற்கொண்ட நெடும்பயணமும்,

1949 அக்டோபர் 1 இல், பீகிங் ராஜ மாளிகையில், செங்கொடி உயர்ந்ததையும், தொடர் விளைவான கலாச்சாரப் புரட்சி, தியானென்மென் துயரம், அகிலத்தையே ஆட்கொள்ள முனையும் இன்றைய சீனம் என அனைத்தையும், அருணகிரி சொல்லும் கதையிலேயே கேட்கிறோம்.

உலகின் மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட இருபெரும் நாடுகளான இந்தியாவும், சீனாவும் கரம் கோர்த்தது, அறுபதுகளின் தொடக்கத்தில் சீனம் இந்திய இமயச் சரிவில் ஆக்கிரமிப்புக் கால் பதித்தது, போர் மூண்டது, இந்தியப் பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டது, நம் தன்மானத்துக்கு அறைகூவல் விடும் ‘அக்சாய்சின்’ பிரச்சினை, தீராத் தலைவலியாகி விட்ட திபெத், இப்பின்னணியில் இப்போதைய இந்திய சீனக் கைகுலுக்கலையும் காட்டுகிறார்.

ஈரானில் எழுந்த புரட்சித் தீயை, அமெரிக்காவின் சதிராட்டத்தை விவரிக்கும் ஆசிரியர், போர்க்களங்களும், இரத்தச் சிதறல்களுமாகவே அமைந்துவிட்ட ஆஃப்கானிஸ்தானத்தை, தூக்கில் இடப்பட்ட நஜிபுல்லா, உடைக்கப்பட்ட பாமியன் புத்தர் சிலைகள், தலிபான்களின் அச்சறுத்தல், பின்லேடனின் பிரவேசத்தை, கண்முன் நிறுத்துகிறார்.

தமிழகம் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே படையெடுத்துச் சென்றதாலும், வணிகம் நடத்தியதாலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் குறிப்பாக, தாய்லாந்து, கம்போடியா, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் ஏற்படுத்திக் கொண்ட கலாச்சார உறவுகளையும், அடையாளங்களையும், மனதில் ஆழப் பதியும் வண்ணம் விளக்கி இருக்கிறார்.

கம்போடியாவில் இரத்தக் குளியல் நடத்திய ‘கெமர் ரூஜ்’ அமைப்பை இயக்கிய போல்பாட்டையும், ஆதிக்க அரசியல் போட்டிகளையும் விவரிக்கிறார்.

இந்தியாவின் வடகிழக்கு முற்றத்தில், எழில் குலுங்கும் சின்னஞ்சிறு நாடுகளான நேபாளத்தையும், பூடானையும், நமக்கு அறிமுகப்படுத்தும் அருணகிரி, இரண்டு ஆண்டுகள், தாம் தங்கி இருந்த பூடானுக்கு உள்ளே நம் கையைப் பிடித்து அழைத்துப் போகிறார்.

மலேசியா, சிங்கப்பூர், மியான்மர், வங்கதேசம், பாகிஸ்தான் எனும் பக்கத்து நாடுகளின் அரசியல் தட்பவெட்ப நிலையை ஆய்வு செய்ததோடு, அந்த நாடுகளின் வரலாறையும் வகையாகச் சொல்லி விட்டார்.

கிழக்கு எனும் மணிமகுடத்தில், ஒளிரும் மாணிக்கக் கற்களுள் ஒன்றான ஜப்பானை, கிரேக்கத்து பீனிக்ஸ் பறவையாக, அணுகுண்டு வீச்சுக்குப் பின், சிறகு விரித்து அகிலத்தைத் திகைக்க வைத்த ஜப்பானை, தத்ரூபமாக நமக்குக் காட்டுகிறார்.

மொத்தத்தில் ‘கிழக்கின் கதை’, ஓர் அற்புதமான வரலாற்று ஆவணம்!

இந்துமாக் கடலில் தமிழகத்தின் தென் முனையில், அலைக்கரங்களால் பிரிக்கப்பட்டு, வரைபடத்தில் திட்டு போலக் காட்சி அளிக்கும் இலங்கைத் தீவில், இரத்தத்தாலும், கண்ணீராலும் எழுதப்பட்ட ஈழத்தமிழரின் போராட்ட தியாக வரலாற்றை, தக்க சான்றுகளுடன் அவர் பதித்து உள்ளதைப் படிக்கும்போதே, மனம் பாரமாகக் கனக்கிறது; சோகமாக விம்முகிறது.

கல்வி நிலையங்களிலும், கல்லூரிகளிலும், பல்கலைக்கழகத்துச் சிந்தனைப் பட்டறைகளிலும், பாடப் புத்தகமாக ஆக்கப்பட வேண்டிய இந்த அரிய படைப்பைத் தந்து உள்ள, என் உயிரனைய தம்பி அருணகிரிநாதன், பெயருக்கு ஏற்றாற்போல், அருவியின் பிரவாகமாய் தன்னுள் கிளர்ந்ததை, நெஞ்சுருக்கும் திருப்புகழ் ஆக்கிய அத்தவ அடிகள் போல், தன் சிந்தனை முத்துக்களை, கிழக்கின் கதை எனும், மாணிக்க மரகதப் பேழையாக ஆக்கி உள்ள வித்தகத்தை எண்ணிப் பேருவகைப் பெருமிதத்தில் திளைக்கிறேன்.

தமிழர்களின் இல்லந்தோறும், நூலகந்தோறும், கிழக்கின் கதை அலங்கரிக்கட்டும்!

அருணகிரியின் ஆற்றல் வான்மழையாய் வளரட்டும்.

பயன்தரும் இத்தகு நூல்கள் பல, அவரால் தமிழகம் பெறட்டும். இந்த இலட்சிய இளைஞனின் இனிமையான பாசத்தோழமை, என் வாழ்க்கையின் பெரும் பேறு ஆகும்!