"காற்றால் நடந்தேன்" கவிதைத் தொகுப்பு என் கைகளில் கிடைத்தபோது, நான் ஒரு பெரிய நாவலை வாசிக்கத் துவங்கியிந்தேன். அதை முடித்த வேகத்தில் சீனு ராமசாமியின் கவிதைகளுக்குள் பயணித்தேன். கவிதைகள் எல்லாவற்றையும் வாசித்துவிட்டேன்.

"அவளைப் பருகிய குற்றத்தை" தண்டிக்கிற அருணாசல வாத்தியாரும் , ஷேக்ஸ்பியரும் குற்றவாளி என்று சொல்வது புதிதாக இருக்கிறது. ஒரு சம்பவத்தை ஆழமான புதுமையான நோக்கில் ஆய்கிறபோது வந்தடைகிற அனுபவம் வேறாகிவிடுகிறது. பார்வை கோணப் புதுமை.

வாழ்ந்து முடித்த தாம்பத்யத்தின் ஆணாதிக்கத்தை, மேஜிகலாக சொல்கிற புறக்கணிப்பு என்கிற கவிதை.

 "அவன் வந்த போது மட்டும்

 கல்லறைக்குள்

 அவள் திரும்பிப்படுத்தாள்"

செத்தாலும் அயக்காத ஜென்ம வாழ்க்கை.

மகள் பிறந்த தருண இனிமை எல்லாத் தகப்பனுக்கும் பொதுவானது. ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் பிரசவமாகி வந்த மகளை வரவேற்பதற்கும் வர்ணிப்பதற்கும் தனியான மனம் வாய்க்கப் பெற வேண்டும். இவரின் கவிதைகளில் வாய்த்திருக்கிறது.

வீட்டு நாய் கூட தன் உடமையை, உணவை, பாதுகாத்துக்கொள்கிற, மீட்டெடுக்கிற போர்க்குணத்தை வெளிப்படுத்துகிறபோது, வாசக மனம் வெட்கமடைகிறது. இந்தத் துணிவு கூட நம்மிடமில்லையே...

கிராமத்துத் தம்பியை உடன் வைத்துக் கொள்ள முடியாத மனச்சோகத்தைச் சொல்கிற "வருகை" நெஞ்சுக்குள் அறைகிறது. நகர வாழ்வின் நரகக்குணம் உணரமுடிகிறது.

 “நான் அவளிடம்

 கற்கத்தொடங்கியிருப்பது

 அவளறியாதது"

என்ற சொல்லாடல் சிறப்பாக இருக்கிறது.

 “மகள் பேச்சு" என்கிற கவிதையில் எல்லா இளந் தகப்பன்களின் வார்த்தைப்படுத்தப்படாத அனுபவம் வசப்பட்டிருக்கிறது,

"காதலற்ற வாழ்வில்

 நடமாடித்திரிவதைவிடவும்

 இப்பிரிவு உன்னதம்"

என்பதற்கான கவிதையின் விளக்கம் வித்தியாசமானது.

 “உன் காதலை மறைக்க

 ஆயுதம் தந்தவன்

 என்ற முறையில்"

நல்ல துவக்கம். புதியகோணம் 

மகள் பிறந்த மழலை இல்லத்தில் எல்லா சாதாரணமும் அசாதாரணமாகி... எல்லா நுண்ணிய அழகுகளும் இமாலயப் பேரழகுகளாகி வருகிற யதார்த்தத்தைச் சொல்கிறது உருவ ஒற்றுமை.

சீனிப்புகையாக வெளியேறுகிற கரும்புக்காட்டின் நறுமணத்தில் இரும்புக்காட்டின் தீயில் விவசாயியின் கருகல் வாசம் வீசுகிறது.

 “மரம்

 மரமாகி

 விடவில்லையென்பதை

 உணர்த்துகிற கடைசிவெட்டு

 வெட்டுகிற கானகம்"

கவிதை மல்லாந்து விழுகிற மரத்தை தாவர உயிராகவும், உயிர்செத்த மரக்கட்டையாகவும் இருவகை உருவகம் செய்கிறது.

நட்பு மனித மனத்தின் இருள் முகத்தை வெளிச்சப்படுத்துகிறது, கவிதைச் சொல்லாடல்களில்.

நோக்கம் கவிதையின் உணர்வு அடர்த்தி திகைக்க வைக்கிறது. சின்னச் சின்னச் சொற்களில் ஒரு பெண்ணின் சோக மயமான வாழ்வின் சிதைவு நெஞ்சில் அறைகிறது.

 “தத்தளித்தேன்

 பின் நீச்சல் வந்தது

 உடல்

 கடல்

 மறந்தேன்

 ஆனந்த சயனம்"

அசாதாரணச் செறிவு, கவிதையை கவிதையாக்குவது கலவி என்கிற தலைப்புதான்.

உடல், கடல் பிரமிப்பு ஊட்டுகிற உவமை புதுமையாக உள்ளது.

அனுபவமற்ற புள்ளியிலிருந்து துவங்குவதை தத்தளித்தேன் என்ற சொல் உணர்த்துகிறது.

 “எதிர்வினையற்றே

 இருந்தவளின் எதிர்வினையான

 விசும்பிக்கத்தினாள்"

என்பதை சாத்தியப்படுத்துகிற உச்ச கட்ட புணர்வினை உணர்த்துகிறது மஞ்சள் வண்ணம் கவிதை.

 “கம்மல்

 மூக்குத்தி

 தாலிக்கொடி

 மூன்றும்

 மீட்கப்படும் இந்நாளில்"

கழட்டிய நிகழ்வின் சோகத்தை நினைத்துப் பார்ப்பது வித்தியாசமான யதார்த்தம்.

 “பிரயோகம்" வித்யாசமான கவிதை, வன்முறைகளின் அன்பு, கோபத்தின் அன்பு!

ஆஹா ..... முதிர்ந்த ஞானத்தில் எழுந்த கவிதைச் சொல்லாடல்.

"நீதி"யும் வித்தியாசமான ஞானச்சித்தரிப்பு

"புகழ் விரும்பி" பல பிரபலங்களின் ரகசிய மன அனுபவங்கள்

"ராமனுக்கு 14 ஆண்டு

 எனக்கு

 இந்த

 கான்கிரீட் காடு"

நகரவாழ்வை , நரக வாழ்வென உணர்த்துகிற கச்சிதமான சித்தரிப்பு.

“நாடற்ற கைகள்" நெஞ்சில் அறைகிற கோபக்கவிதை நம்மை விமர்சிக்கிற நமது வரிகள்.

“பிள்ளை வரம் வேண்டி பெண் தெய்வங்களும் அலைந்திருக்குமா ..?" என்ற கேள்வியில் தெளிவாகிற தெய்வ அலைச்சல்.

“எனது ஆட்டம்" கோணலான குடும்ப வாழ்க்கைகளின் கோர முகத்தைக் காட்டுகிறது.

எல்லாக்கவிதைகளும் வாசித்து முடித்த கணத்தில் பேரனுபவமாக நெஞ்சு நிறைகிறது.

சில கவிதைகளின் வாக்கிய அமைப்புகள் வாசிப்புக்குரியவையாக இல்லை. சற்றே குழப்பம் தருகிறது.

பெரும்பாலான கவிதைகளில் தனிமனிதனின் சகல விதமான சமூக, மனஉள்வெளி, வாழ்வியல் அனுபவங்கள் ஏற்படுத்திய உணர்வுகள் நேர்மையுடன், உண்மையுடன் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஒரு தேர்ச்சி மிகுந்த முதிர்வு நிறைந்த சொல்லாடல். மொழி நடையில் ஓர் அறிவார்த்த தோரணை இயங்குகிறது.

வாசிப்பவனிடம் சற்றே வாசிப்புத்தேர்ச்சியை கோருகிற கவிதைத் தொகுப்பு.

முக்கடல் சங்கமம் பார்த்துவிட்டு திரும்புகிறவனின் அம்மா ஊதிப் பெருகிய அடுப்புப்புகைக்குள் அல்லாடுகிறதை உணர்த்துகிற கவிதையின் இயல்புத்தன்மையில் தரிசனமாகிற வாழ்வியல் நிலவரம் சோகமாக படர்கிறது.

ஒவ்வொரு கவிதையும் ஒவ்வொரு அனுபவத்தை, உணர்வைப் பகிர்கிறது; பந்தி வைக்கிறது.

மலினமாகாத எளிமை, எல்லா கவிதைகளிலும் வெளிப்பட்டாலும் புதிய தெறிப்பான சொற்களும், புதிய கோணங்களும் கவிதைகளை அறிவுசார்ந்த அனுபவமாக்குகிறது.

உணர்ச்சி அலைக்கழிப்புகளும், சமுதாயச்சிக்கல்களும் தீர்க்கிற உன்னதத்தை இவரின் அடுத்த கவிதைத் தொகுப்பில் எதிர்பார்க்கலாம்.