மூளையும் நாக்கும் புணர்ந்து பிரசவிக்கும் சொற்களின் மேல் அதிக நம்பிக்கை வைக்காத ச.முருகபூபதியின் உடல்மொழி நிகழ்த்துக்கலை, சூர்ப்பணங்காக மாறிய இரவது. உடல்களை சமைப்பதும் பின் கலைப்பதுமான கலை நிகழ்வின் உதிரும் உடலிகளில் இயக்குநரின் வசிய நடமாட்டம். தொன்மச்சடங்குகளை மறக்காத இயக்குநர் இன்றும் பெண் தனது சிறைக்குள் வலியுடன் உள்ளதை ஆதித்தாயின் வலியிலிருந்துதான் தொடங்குகிறார். அந்த வழியே பேசும் பெண் வலிகளை கவிதையாக்குகிறார். வாதையின் சதவீதம் அதிகமாகிறது. பொது உடலின் அவஸ்தைகளை அறிந்துகொள்ள இயக்குனருக்கு பார்வையாளர்களின் உடல்களும் தேவைப்படுகிறது. அதனை எவ்விதத் தடையுமின்றி தன் பிரதி மூலம் எடுத்துக்கொள்கிறார். கலைஞர்களின் உரையாடல் பார்வையாளர்களுடன்தான் நிகழ்கிறது.

கூந்தல் வழியும் நல்லதங்காளின் வாதையில் தொடங்கி வலி தீரும் நம்பிக்கையில் முடியும் கதை சொல்லியின் காட்சிகளில் இசைக்கப்படும் பெண்வலிகளின் தொகுப்பு. முதல் காட்சியிலேயே பார்வையாளன் மார்பில் அமுதம் சுரக்கும் அதிர்வு. 'பசிக்குதும்மா' என்ற ஓலத்தின் இடையே 'ஏம்மா கெணத்துக்கு கூட்டி வந்தே' பிள்ளைகளின் துன்பம் கண்டு பதறும் பார்வையாளனிடம் துளிர்க்கிறது தாய்மை.

தோள்சீலைப்  போராட்டத்தில் அறுத்தெறிந்த முலைகள், ராணுவ அடக்குமுறைக்கு எதிராக விரிந்த நிர்வாணம், தேடித் தேடி யோனிகள் சிதைத்த ஈழ அணங்குகளின் இறுதி அலறல் என்று காலமாய் பதிவான பெண்படும் சித்ரவதைகள் அரங்கில் கண் எதிரே. கண்ணீரை மட்டுமே அடையாளமாகக் கொண்டு யுக நொடிகள் நகர்த்தும் பெண் தன் உப்பு உடலை உதற முடியாமல் நிகழ்த்தும் பயணக்கரிப்பு திசையெங்கும் விசிறி படிந்து கண்களெல்லாம் உறுத்துகிறது.

சர்வாதிகார ஆண் சுழற்றும் சவுக்குச்சொடுக்கலுக்கு முன்னால் பெண்ணவளின் மொழியை,வலியைப் பேச முடிவதில்லை. அருவமாக நிலத்தில் எழுதும் துயரத்தினை தூரிகை உடைத்து சிரிக்கும் சமூகம். காற்றில் எழுதும் கைகளில் சுற்றிச் சுழலும் சாட்டைப் பளீர். வானத்தில் எழுதுகிறாள் தன் மீது படிந்த  வன்மப் பதிவை. இப்பிரபஞ்சம் கடக்கும் இனி அவளின் எல்லை.

அடுப்பு சிறைக்குள் அடைபட்டு கிடக்கும் விதி எங்களுக்கில்லையென அரண் உடைக்கும் அணங்குகளின் கரங்களில் ஆயுதங்களாக ஆண் சமூகம் அவள் கையில் திணித்த விளக்குமாறும், முறமும், ஓலைப் பெட்டியும், உலக்கையும். உனக்கான ஆயுதத்தினை உன் எதிரியே தீர்மானிக்கிறான் என்ற சிந்தனை  பெண்ணுலகில் இப்படித்தான் செயல் வடிவம் பெறுகிறது. கொடுமை. நெல் குத்தி உமி நீக்கும் உலக்கைகள் ஓங்கி உயிர் நீக்கும் நிலம் அதிர அணங்குகள் நிகழ்த்தும் யுத்த ஒத்திகையில் அரங்கில் நிசப்தத்திற்க்கான அறிவிப்பு.

நாடக மையம் பெண்.கொண்டாடும் இயக்குநரின் யாசிப்பில் 'உழுத புழுதி மேல உப்பு கொண்டு போற புள்ள' கவிதைப்பாடலும், இசையும் நடன நரம்புகளில் பாயும் மின்சாரம். ஆனாலும் வாதை வரிகள். முதலில் இசையுடன் வரும் 'உப்பு எங்கே' காட்சிக் கவிதை நிகழ்வும் தொடர்ந்து இசையில்லாமல் நிகழும் சடங்கில் இயக்குநரின் இசை மந்திரம்.

இயக்குநரின் வண்ணக் கண்களான சந்தானபூபதியின் ஒளியமைப்புக் காட்சிகளில் அணங்கு நீல நிறத்தில் தேவதையாக, உக்கிரச் சிவப்பில் காளியாக சன்னதம் கொள்கிறாள். இயக்குநர் உலவவிட்ட உடலிகளின் நிழல்களின் நிகழ்த்துக் கலையினை ஒளியமைப்பாளர் வெள்ளை வெளிச்சத்தில் உருவாக்கி அடர்த்தி கூட்டுகிறார். நிழல்களின் கதையினைக் காண கண் கோடி வேண்டும்.

நாடக மொத்த பலமும் கலைஞர்கள் உடம்பில். இயக்குநரின் மாயக்குலவையின் ஒலியினுள் நுழைந்து தங்கள் விலா எலும்பின் நெகிழ்வை நீளச்செய்து அணங்குகளாக உலவும் நடிகர்கள் கருணையும் உக்கிரமும் புனைய உருமாறுகிறார்கள். 'தொடையிடுக்கின் குருதி கொண்டு விரட்டுவோம் நீசப்படைகளை'என கர்ஜிக்கும்போதும், 'எங்கள் சர்ப்ப வேர்களை சாகடித்துவிட்டு நிகழாது உங்கள் நெடும்பயணம்' என சபிக்கும்போதும் கண்களிலிருந்து கால் நகம் வரை நான் கண்டது நடிகர்களையல்ல. அணங்கு நடையில் பாதங்கள் பூமியில் இல்லாமல் அந்தரத்தில் மிதக்கும் உடல்மொழி வித்தையை மிக அற்புதமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். விமல்,ரஞ்சன்,முத்துகுமார்,லிவிங் ஸ்மைல் வித்யா, இன்னும் இன்னும் பல அணங்குகள் தங்களின் முழு அர்ப்பணிப்புடன். 'உழுத நிலத்து மேல' கவிதைக்குரல்கள் இசையுடன் இணையும் காட்சியில் லிவிங் ஸ்மைல் வித்யாவின் நடன அசைவுகள் ஆச்சர்யம். அடக்கி வைக்கப்பட்ட அணங்கின் நுண்ணுணர்வுகள் சிறு ஊற்றெனப்புறப்பட்டு வெடித்து சீறிப் பாய்கிறது பெண்ணீர் வீழ்ச்சியாய். அங்கே நீர்வீழ்ச்சி எழுச்சியாகிறது.

எல்லாவற்றுக்கும் உச்சமாய் வருகிறது சற்றே நிதானமான நாடக இறுதி. கர்ப்பக்குடம் தாங்கிய அணங்குகள் அசைந்தசைந்து தங்கள் வலியை நீக்க அக்கர்பக்குடங்களே சிசுக்களாகி அச்சிசுக்களே நீள் முலைகளாக உருக்கொள்ளும் கவிதைக் காட்சியில் பார்வையாள இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒவ்வொரு ஆணும் தனக்குள்ளும் தாய்மையை உணரும் தருணம். நீள் முலைகளைத் தாங்கிய பேருடலில் சுரக்கும் பால் உறிஞ்ச தவழ்ந்துவரும் குழந்தைகள் என பெண்மை, தாய்மை, குழந்தைமை, சங்கமிக்கும் நொடியில் காண்பவன் மனம் நெகிழ்ச்சியில் குழைந்து ஆண்யோனி கண் விழிக்கிறது.உடைகிறது அவனின் கர்ப்பக்குடம்.

அணங்குகளாய் மாறி கலைஞர்கள் வெளிப்படுத்திய தாய்மையின் ஈரம் உலர்வதற்குள் என் மன நெகிழ்வை அவர்களின் உச்சந்தலையில் முத்தமிட்டு பதிந்தேன். தேரிக்காடுகளில் அலைந்த சூர்ப்பணங்குகளின் வாசனை உறைந்திருக்கும் எனது உதடுகள் இனிச் சாபம் நீங்கிவிடும்.

ஆனாலும்..........காணிபிளாத்தியான முருகபூபதியின் நவீன நாடகமொழி மூலம் தனது நோய் தீர்க்க விழையும் பெரும்பசிக்காரனுக்கு சூர்ப்பணங்கு தந்தது பாதி மருந்தே........

- கணேசகுமாரன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)