இலங்கையின் கிழக்குப் பிரதேசம் பல கவிஞர்களையும், கலைஞர்களையும் தன்னகத்தே கொண்டு அவர்களை இலக்கியத்தில் அணி சேர்த்திருக்கின்றது. அந்தவகையில் சிறுகதைகள், கவிதைகள் பலவற்றைப் படைத்து எம்மத்தியில் மிகவும் பரிச்சயமான ஓர் எழுத்தாளர் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி  அவர்கள் "ஒரு தென்னை மரம்" என்ற சிறுகதைத் தொகுதியை அண்மையில் வெளியிட்டிருக்கின்றார். அவர் ஏற்கனவே வெளியிட்ட குடையும் அடை மழையும் என்ற கவிதைத் தொகுதியின் சொந்தக்காரர்.

Oru_thennai_maramஒரு தென்னை மரம், மனப்பால், புது மனிதனாகியும், பெண்ணாய்ப் பிறப்பதற்கு, நேர்மைக்கு இடமேது, வீடு, முத்திரை தந்த முத்திரை, மத்திய கிழக்கு மாப்பிள்ளை, கிணறு, இவர்களா இப்படி, அதுதான் சட்டம், வேம்பு இனித்தது, காசா லேசா, அதுதான் வீடு, புத்தகங்கள், சரியான தண்டனை, அந்தஸ்து, அது எப்போது என்ற பதினெட்டு சிறுகதைகளை உள்ளடக்கி ஹாஜரா வெளியீடாக 203 பக்கங்களில் இந்தச் சிறுகதைத் தொகுதி வெளிவந்திருக்கின்றது.

துப்பாக்கி பிடித்த விமானப்படை அதிகாரியான கிண்ணியா ஏ.எம்.எம். அலி அவர்களது உள்ளத்தில் துடிப்பான கருவூலம் ஊற்றெடுப்பதற்கு அவர் பிறந்த மண்ணின் வாசனையும், வாசிப்பும், தேடலும்,  முயற்சியுமே காரணங்களாகின்றன. கிண்ணியாவில் பேசுகின்ற தமிழுக்கு தனிச் சுவையுண்டு. பேச்சுத் தமிழ் கொஞ்சும். எவரது பேச்சுக்களிலும் உவமையழகும், அடைமொழிகளும், முதுமொழிகளும் புரளும். கலாபூஷணம் கிண்ணியா ஏ.எம்.எம். அலி அவர்கள் ஒரு மரபுக் கவிஞர். அவரது கவிதைகளை நமது அனைத்து தேசியப் பத்திரிகைகளும் பிரசுரித்தன. அவரது கவிதைகள் மனதினிலே ஒரு கிளர்ச்சியைத் தோற்றுவிக்கும். அவர் கவிதை சொல்லும் அழகும், கையாளும் திறனும் அபாரமானது என்கிறார் இப்புத்தகத்துக்கு அணிந்துரை வழங்கியிருக்கின்ற கலாபூஷணம் கேணிப்பித்தன் ச. அருளானந்தம் அவர்கள்.

முதல் கதையான ஒரு தென்னை மரம் சகோதரிகள் இருவருக்கிடையில் ஏற்படும் வாக்குவாதத்தை மையப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. பிரச்சனைக்குக் காரணமாக இருந்தது ஒரே ஒரு தென்னை மரம் தான். சகோதரிகளான கதீஜா, ஹாஜரா என்ற இருவருக்கும் ஒரே காணி இரண்டு பங்காக பிரித்துக் கொடுக்கப்பட்டாலும்
இடைநடுவே நின்று இருவருக்குள்ளம் இந்தத் தென்னை மரம் பிளவுகளை ஏற்படுத்திப்போகிறது. அக்கா, தங்கை இருவருக்குமிடையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனை சகலன்மார்களிருவருக்கு இடையிலும் ஏற்படக் கூடாதென்பதில் அக்கறை காட்டும் ஹாஜராவின் கணவன் மனிதத் தன்மையுடன் அந்த மரத்தை விட்டுக்கொடுக்குமாறு மனைவி ஹாஜராவுக்கு சொல்லும் புத்திமதி அவர்மேல் மிக்க மரியாதையை ஏற்படுத்துகிறது.

அத்துடன் கதையின் பிரதான பாத்திரங்களில் ஒன்றான சாரிபு ஹாஜியார் மகள்மார் இருவரின் இந்தச் சண்டையினால் மனமுடைந்து போவது வாசகர் மனங்களையும் கவலையால் நிரப்பிவிடுகிறது. பகலில் சண்டையை மூட்டி நின்ற தென்னை மரம், இரவு பெய்த அடைமழையில் தன் வேரறுந்து நிலத்தில் வீழ்ந்து கிடக்கிறது. அந்தக் காட்சியை வாசிக்கையில் சகோதரிகளின் ஒற்றுமையை நாமேன் கலைக்க வேண்டும் என்று மரம் தன்னைத்தானே மாய்த்துக்கொண்டதான கற்பனை என்னில் உருவெடுத்தது.

வீடு என்ற கதை சீதனத்தை அடியொட்டி புனையப்பட்டிருக்கின்றது. இளைய மகள் பரீதாவின் கணவன் திடீரென வீட்டை விட்டுப்போகின்றான். அந்த சோகம் பரீதாவின் வதனத்தில் நன்கு புலப்படுகின்றது. தாய் பாத்திமா தனது கணவர் அகமதுவின் சம்பளம் போதாது என்பதால் வீட்டு கஷ்டங்களைப் பற்றி மகளிடம் கூறிவிடுகின்றார். இதுபற்றி பரீதா தன் கணவரிடம் கூற இந்தப்பிரச்சனை விசாலமாகி பரீதாவையும் தன் கணவரையும் பிரித்துவிடுகிறது.

இதற்குரிய மூலகாரணம் சீதனமாய் வீடு கொடுக்கப்படாததே என்பதும் கதையினிடையே தெளிவுபடுத்தப்படுகின்றது. திருமணம் முடிக்கையில் மணப்பெண்ணின் வீட்டார் மணமகனுக்கு கட்டாயம் வீடுகொடுக்க வேண்டும் என்ற நிலையில் இன்னும் இரண்டு வருடங்கள் கழித்து வீட்டை கட்டித்தருகிறேன் என்று சொன்ன அகமது, பரீதாவின் திருமணம் முடிந்து இன்று ஒன்றரை வருடங்களாகியும் அதை செய்யும் முயற்சியிலாவது ஈடுபடாமல் இருப்பதே மகள் - மருமகளின் பிரச்சனையின் காரணமாக திகழ்ந்துவிடுகிறது.

இறுதியின் மருமகனின் தந்தையின் வீட்டுக்குச் செல்லும் பரீதாவின் பெற்றோர் இன்னும் கொஞ்ச கால்த்தில் தாம் வீட்டைக் கட்டி முடித்துவிடுவதாக வாக்களிக்கின்றனர். அந்த இடத்தில் எல்லோரையும் போல் அல்லாமல், மனசாட்சியுடன் சம்பந்தி தாரீக் நடந்துகொள்ளும் விதமே இக்கதைக்கு உயிரூட்டுகிறது எனலாம். என்னவெனில் சம்பந்தி அகமதுவிடம் வாக்களிக்கிறார் இவ்வாறு...

"இந்த முறை நான் ஹஜ்ஜூக்குப் போகப்போறன். போறத்துக்கு இடையில சில காரியங்கள் செய்ய வேண்டிக்கிடக்கு. அதிலே முதல் காரியம்தான் இந்தப் பிள்ளைகள் ரெண்டுபேரையும் நான் என்ட வளவுக்குள்ள கட்டிப்போட்டிருக்கிற வீட்டில குடியேத்தப்போறேன். நீ வசதிவந்து வீடு கட்டும் வரைக்கும் அதுகள் என்ட வீட்டிலேயே இனி குடியிருக்கட்டும்". மத்திய கிழக்கு மாப்பிள்ளை என்ற சிறுகதை காலத்துக்கு ஏற்ற கருவாக
இருப்பது பாராட்டத்தக்கது.

இன்று எங்கு பார்த்தாலும் வெளிநாட்டு மோகம். இதில் பரீனா என்ற அபலைப் பெண்ணின் ஆதங்கம் சொல்லப்பட்டிருக்கின்றது. வெளிநாட்டில் வருடக்கணக்காக இருக்கும் விரல்விட்டு எண்ணக்கூடிய சில ஆண்கள் அங்குள்ள சூழ்நிலைகளுக்கேற்ப தங்களை மாற்றிக்கொள்கிறார்கள். அல்லது மாறிப் போகிறார்கள். அப்படியிருக்க அவர்களைப் பற்றி கொஞ்சமாவது விசாரித்து அறியாமல் கை நிறைய பணம் இருக்கும் என்ற ஒரேயொரு காரணத்துக்காக தங்கள் பிள்ளைகளை அவர்களுக்கு மணமுடித்துக் கொடுக்கின்றார்கள.

மத்திய கிழக்கு மாப்பிள்ளை என்ற இந்தக் கதையிலும் அப்படித்தான். கல்யாணமாகி மூன்று மாதங்களின் பின்னர் வெளிநாட்டுக்கு போய்விட்ட கணவன் திரும்பவும் மூன்று வருடங்களின் பின்புதான் நாடு திரும்புகிறான். இதற்கிடையில் குழந்தையை வளர்க்க தனிமையில் அல்லல்படும் பரீனா, வெளிநாடடுக் கணவர்கள் பற்றி பத்திரிகையில் வரும் சேதிகளைப் படித்துப் பதறிப்போகிறாள். ஆக இறுதியில் அவள் பயந்தது போலவே சம்பவம் நிகழ்ந்துவிடுகிறது. ஆம். குழந்தையை வளர்க்க கஷ்டம் என்றால் தன்னிடம் தந்துவிடும்படியும் இனி பரீனாவுடன் வாழ விருப்பமற்றதால் வெளிநாட்டுக் காதலை கல்யாணத்தில் தொடரப்போவதாகவும் மடல் வருகின்றது. நூலாசிரியர் சொல்வது போல இந்தக் காலத்தில் கல்யாணம் சிப்பிசிரட்டை விளையாட்டாகவே இருக்கிறது.

வளர்ந்துவிட்ட விஞ்ஞான யுகத்தில் பெண்களின் சமையல் வேலைகளும் இலகுவாய்த்தான் மாறிப்போயிருக்கின்றன. 'கிரைண்டர், வொஷிங் மெஷின்' என்று ஏகப்பட்டவை சந்தையில் குவிந்து கிடைக்கின்றன. அதே மாதிரியான விவகாரம்தான் கிணறு. இன்றைய காலத்தில் எல்லா வீடுகளையும் குழாய் நீர் ஆக்கிமித்திருக்கிறது. கிணற்றில் நீரள்ளிக் குளிப்பதைவிட 'ஷவரில்' நின்று குளிப்பது எவ்வளவு சுகம் என்று எண்ணுபவர்கள்தான் அதிகமல்லவா? ஆனால் மாதம் முடிய 'பில்' வரும்போதுதான் கஷ்டம் விளங்கும். கிணறு என்ற கதையிலும் நாதர்ஷா மனைவி மக்களின் தூண்டுதலால் 'பைப் லைன்' எடுத்தாலும் வரப்போகும் 'பில்'லைப் பற்றி உள்ளுர பயந்துகொண்டே இருந்தார். புதிய முறை மனைவி முதல் அனைவரும் கிணறு பக்கம் கூட செல்லாமல் எடுத்ததெற்கெல்லாம் குழாய் நீரை பயன்படுத்த அந்த மாதம் ஐநூறு ரூபாய் 'பில்' வருகிறது. இதில் சுவாரஷ்யமான வரி ஒன்று இறுதியில் இருக்கிறது. அதாவது 'இப்போது பூனைக்கு பெல் கட்டுவதும் நாதர்ஷாதான். தண்ணீருக்கு பில் கட்டுவதும் நாதர்ஷா தான்'.

இவர்களா இப்படி என்ற சிறுகதையும் சமூகத்தில் புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சினையை கருப்பொருளாகக் கொண்டது. யாக்கூப் தம்பதியரின் ஐந்தாவது மகளுக்கு திருமணம் செய்ய வேண்டும். மூத்த புதல்விகள் மூவரும் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அவள் நல்ல அழகியாக இருந்தாலும் வீடு இல்லாததால் சீதனம் கொடுக்க வழியின்றி அவளது திருமணம் தள்ளிப்போகிறது. எதிர்பாராத தருணமொன்றில் மில்லுக்கார காசீம் ஹாஜியாரின் இளைய புதல்வன் யாக்கூபின் மகளை திருமணம் முடிக்க ஆசைப்படுகின்றான். அதை எல்லோரும் ஆமோதிக்கிறார்கள். ஆனால் பிரச்சினை வேறு உருவத்தில் வருகிறது. அதாவது மூன்றாவது பெண் தாய்வீட்டுக்கு ஓடி வருகிறாள். தங்கைக்கு அந்தப் பையனை திருமணம் முடித்துக்கொடுக்க வேண்டாம் என்கிறாள்.

அதற்காண காரணத்தை அறிந்த யாக்கூப் தம்பதியருக்கு அந்தச ;செய்தி இடியாய் இறங்குகிறது. அவள் தாயிடம் சொல்லும் காரணம் என்னவென்றால், மூன்றாவது நான்காவது மருமகன்மார் இருவருடைய தங்கைக்கும் மில்லுக்கார காசீம் ஹாஜியாரின் இளைய மகனை கேட்டிருக்கிறார்கள். அவன் மறுத்திருக்கிறான். தமது தங்கையை வேண்டாம் என்றவன் மனைவியின் தங்கைக்கும் தேவையில்லை என்கிறார்கள். என்ன மனிதர்கள் இவர்கள்? சரியாகப் பார்த்தால் அக்காவின் கணவர் என்ற பொறுப்பிலிருந்து அவர்கள்தான் திருமணம் செய்துகொடுத்திருக்க வேண்டும். ஆனால் இப்போது வந்த வரனையும் கெடுத்துவிட்டார்களே. ஒரு மகளை கரைசேர்க்கப் போனால் இரு மகளின் வாழ்வு பட்டுப்போய்விடும். இந்த அவலம் வேறு யாருக்கும் நிகழ்ந்துவிடக் கூடாது.

மனிதர்கள் தமது வாழ்வை மட்டுமே யோசிக்கிறார்கள். பிறரின் வாழ்க்கை எப்படிப் போனாலும் பிரச்சினையில்லை என்று நினைக்கிறார்கள். அவ்வாறு இல்லாமல் மனிதநேயத்துடன் எல்லோரும் இருந்தால் பூமிப்பந்து ஆனந்தமாக சுற்றும். நூலாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்.

நூலின் பெயர் - ஒரு தென்னை மரம் (சிறுகதை)
நூலாசிரியர் - கிண்ணியா ஏ.எம்.எம். அலி
தொலைபேசி - 077 2765174
வெளியீடு - ஹாஜரா வெளியீட்டகம்
விலை - 350 ரூபாய்