21ஆம் நூற்றாண்டு, சிறுவர் நூற்றாண்டு என்று சொல்லும் அளவிற்கு சிறுவர் உலகம் மீதுள்ள கணிப்பீடுகள் அதிகரித்து வந்துள்ள நூற்றாண்டிது. சிறுவர்களுக்கான விஞ்ஞானம், விளையாட்டு,உளவியல், ஊடகங்கள் என்று வளர்ந்து விரிந்து கொண்டிருக்கும் இன்றைய பூகோளத்தில் சிறுவர் இலக்கியம் என்ற பொருட்பாடு உலகமொழிகளில் முக்கியப் படுத்தப்படுவது இன்று நின்றுகவனிக்கப் படவேண்டிய ஒன்று.

 சிறுவர் இலக்கியம் என்ற வகையில் கதைகள் பாடல்கள், நாவல்களும் கலைகள் என்ற வகையில் நாடகங்கள்,ஆட்டங்கள்,கூத்துக்கள் மற்றும் சிறுவர் சஞ்சிகைகள் கையேடுகள் பத்திரிகைகள், ஒலிபரப்புகள், ஒளிபரப்புகள்,வகைசார்ந்த வகைகள், சிறுவர்களுக்காக வளர்ச்சியடைந்த நிலையில் கிண்ணியா எஸ்.பாயிஸா அலியின் தங்கமீன் குஞ்சுகள் என்ற இந்த சிறுவர்பாடல் வெளிவந்திருக்கிறது.

 Faiza_Ali_400இவரது இரண்டாவது படைப்பான இந்நூல் திருகோணமலை மாவட்டத்தின் சிறுவரிலக்கியத்தின் புதிய வரவாகவும்,பதிவாகவும் வெளிவந்திருக்கிறது. முஸ்லிம் பெண்ணெழுத்தாளர் வரிசையில் பாயிஸாஅலியின் படைப்புக்கள் திருகோணமலைப் பிரதேசத்திற்கு மட்டுமன்றி முழுத் தேசியத்துக்கும் முக்கியத்துவம் வாய்ந்த படைப்புக்களாகவும் அவை மதிக்கப் படக் கூடியவை. குழந்தைகளின் உளவியலைப் புரிந்துகொண்டு அவர்களது எண்ணப்பாடுகளுக்கும் நவீன வளர்ச்சிக் கேற்பவும் பாடல்களை இந்நூலில் படைத்திருக்கும் பாயிஸா அலியின் பாடல்கள் மூன்று கனதிகளைக் கொண்டதாக அமைந்திருக்கின்றன.

 1.மரபுக் கதைகளைப் பாடலாக்கியமை.
 2.விஞ்ஞான உண்மைகளைப் பாடலாக்கியமை.
 3.சமூக நாட்டத்தை ஊட்டும் கருத்துக்களைப் பாடலாக்கியமை.

 இப்பாடல்கள் சிறுவர்களுக்கு ஏற்ற முறையில் சின்னச் சின்னச் சொற்களால், அவர்களது உள்ளங்களாகிய நிலங்களில் விதைக்கக் கூடிய நற்கருத்துக்களாய், ஓடிவிளையாடி சேர்ந்து பாடும் வடிவங்களாய் படைக்கப் பட்டிருப்பது பாராட்டப் படவேண்டியது.

 திருகோணமலையில் சிறுவர் இலக்கியத்தைப் படைக்கத் தொடங்கிய பண்டிதர் பீதாம்பரனார் தொடக்கம் இன்று படைத்துவரும் ச.அருளானந்தம், இக்பால், சசிகலா, ஜெனீரா அமான், எஸ்.ரமணி போன்றோர் வரிசையில் பாயிஸா அலியின் படைப்புக்கள் சொல்லப்படக் கூடியவை. இவ்வாறான நூல்களை எழுதி வெளியிடுவோருக்குப் பக்கபலமாக நாமெல்லொரும் ஊக்குவிக்க வேண்டும். இன்னும் பல தரமான நூல்களைப் பாயிஸா அலி அவர்கள் எழுதி வெளியிட வேண்டுமென வாழ்த்துகிறேன்.

திருமலை நவம்
தலைவர்
திருகோணமலை மாவட்ட கலை இலக்கிய ஒன்றியம்
திருகோணமலை.

கிடைக்குமிடம்:
லங்கா புத்தகசாலை
F.L. 14.1
டயஸ் பிளேஸ்
குணசிங்கபுரம்
கொழும்பு 12
தொலைபேசி இல. 0112341942