இருபது வருங்களுக்கு மேலான இலக்கிய பரிச்சயம் கொண்ட திரு. பொன்.வாசுதேவனின் கவிதைகள் உணர்தலை மொழியாகக் கொண்டவை. உணர்வுகளை மொழி முழுமையாக சொல்லிவிட முடியாது எனினும் மொழியின் மூலமாகவே உணர்தலின் மூலத்தை, அதற்கு அப்பாற்பட்ட மொழியைப் பேச முடியும். மயிலிறகால் மனதை வருடுவதன் மூலம் ஆசிரியர் வெற்றி பெற்றிருக்கிறார்.

      aganazhikai_vasudevanபிரியத்தை தேடுவது மென்மனதின் ஆதாரம். இருத்தலுக்கான நெகிழ்வு அது. நம் மீது வழியும் பிரியங்களை தாண்டி எதையோ தேடிக்கொண்டே இருக்கிறோம். கணக்கு கூட்டல்கள் அற்ற பிரியம் இவர் கவிதைகளின் அடிநாடி. கூடவே மனதின் விகாரத்தை மெல்ல தீண்டும் சவுக்கின் நுனி.

"தனியுச்சியில் புதையுண்டு தருணம் நோக்கி காத்திருக்கிறேன் வலைக்குள் உன்னை இருத்த"

தினசரி வாழ்வில் காத்திருக்கும் இயல் அல்லது இயந்திர மனம். பொருத்தப்படாத எதிர்மனம். பொம்மை விளையாட்டில் ஆசிரியர் பயன்படுத்தும் மொழி, "படரும் ஓசை எனக்கு", "சருமம் கருக", "ஒரு சொல் இல்லை", "உள் பேசும் நான்". அருமை.

மனதின் அடுத்தடுத்த சாளரங்களை திறக்கும் பாடு பொருள். நினைவில் அதிரும் அன்பு. மன அலையில் மிதக்கும் அன்பு. இனம் சேரும்  தவிப்பு. ஆரம்பமும் அடுத்த நிகழ்வுகளும் நகர்வது தெரிந்த துல்லியம். மெல்லிய காற்றில் அசையும் இறகு போல் மனம் அலையும் வெளி. நித்திய வாழ்வின் இரக்கமற்ற பொழுதுகள். மனவெளியில் இணையோடு சுழன்றாடும் களிவூஞ்சல்.

இதமான பிரியத்தில் நிழல் தேடும் நெஞ்சம். நீண்டு கிடக்கும் காலத்தின் ஆழத்தில், கடந்து போய்விட்ட உறவுகளின் வெற்றிடத்தை நிரப்ப ஏங்கும் காத்திருப்பு. "மாய்ந்த துயரங்களின் கல்லறைகளில் களிப்பை முகிழ்க்கிறது உன் காலடித்தடங்கள்", "சரி பார்த்துகொள்கிறேன் என்னை நான்", மெல்ல கடந்து வரும் வாழ்வின் அர்த்தத்தை தீண்டுமுன்பு மனதை தீண்டிச் செல்லும் சவுக்கின் நுனி.

"என்னிடம் வந்த இந்த நாளில்", நாள் என்பதன் மறை பொருள் இதம் தரும் பிரியம் என்றும் கொள்ளலாம். தளிர் நடை பயின்று வரும் மழலை போல கள்ளமற்ற பிரியம். மனதுடன் ஒட்டி உறவாடி, கடந்தவற்றின் வெறுமையை இட்டு நிரப்பி, மலர் தரும் இதமாய், மழலையின் மெய்தீண்டலாய், துயில வைக்கும் தாலாட்டாய் வாழ்வை நிறைக்கிறது. நிரந்தரமற்றதே அன்பு என்று மெல்ல மெல்ல விட்டகலும் அன்பு.

எப்போதும் குறைபடும், கோள் சொல்லும் மனிதமனம், யாருக்காகவும் இல்லாமல் தன் இயல்பாய் மலரும் மலர். கடவுளின் படைப்பை சொல்லும் ஒற்றை மழைத்துளி. அக விடுதலையின் அற்புத நிமிடங்களை "இறைமையின் மொழியில்" பேசுகிறார் ஆசிரியர்.

ஒரு ஆண் என்றென்றைக்குமாய் தன் தாயின் முலைச்சூட்டை தேடிக்கொண்டே இருக்கிறான். பிரியமாக, நட்பாக, காமமாக அவன் தேடுவது பாதுகாப்பு உணர்வை. "முலைச்சூடு".

அருவி நீராடல் தரும், உணர்வுகள் மேலெழும் அக விடுதலை, பால்யம், இளமை, பிரிவு, பிரியம், துரோகம், இதமான கடந்தவைகள், அருவியின் பாய்ச்சலோடு மனதின் உண‌ர்வற்ற நிலை தரும் பார்வையும். வ‌ற்றிய உடலில் இருந்து வற்றாது பெருகும் மனம், எல்லா நியாயங்கள், கேள்விகள், பதில்கள், தீர்மானங்களை உடைத்து புதிதாய் துளிர்க்கும் துளிர்.

வார்த்தைகளற்ற மவுனத்தின் வலி. நட்பின் லவ் அண்ட் ஹெற்றேட் மனநிலை, சிறுகுழந்தை போல் ஏங்கி அழுது கொட்டி ஆற்றும் இணையின் மீதான கோபமும் வருடலும். உணர்வுகளின் அடிப்படையில்  கொள்ளும் பிரியங்கள் இரண்டு பக்கமும் கூரான கத்தி. மனம் தொடும்போது மலர்தலும், உரசும்போது சதையை கீறும் வலியும், பற்றிக்கொள்ள விழையும் பிரியமே ஜெயிப்பதால் ஆரம்பித்த இடத்திற்கே வந்து விடுவதையும் அழகாக சொல்லும் கவிதை "உன் கோபமும் என் கோபமும்".

இந்த கவிதை சொல்லியின் கவிதைகள் பிரியத்தை அடிப்படையாக கொண்டவை. மழை இவர் கவிதைகளில் சாரலாக, அடர் மழையாக, தொடர் மழையாக, நனையும் நினைவாக, படியில் நின்று வாழ்வை மழையின் மூலம் புரட்டி பார்க்கும் வலியாக கூடவே வாழ்கிறது.

எல்லா பிரியங்களும் அதனளவில் சிறப்பானவையே. ஆனால் அதன் ஆழம் எனபது முரட்டுத்தனமும், மூர்க்கமும் கொண்டது. மன முதிர்வுகள் செல்லுபடியாகா இடம். சமன் செய்யவேண்டியவர்களின் நிலையை அழகாய் சொல்லும் கவிதைகள்.

எழுதி தீர்த்துவிட முடியாமைகள், வதைபடும் மனதின் மெல்லிய அதிர்வுகள், உடலும் மனமும் குவிகிற புள்ளி, உணர்தலை உள்வாங்கிகொள்ளும் நுட்பமான நொடிகள் என்று இயல்பான வெளிப்பாடு.

அன்பு எனபது தீரா தாகம், அதன் ருசி அறிந்த பின் நிரம்பியது தெரிந்தாலும் தேடல்கள்தான். புணர்ச்சி எனபது மனம் விழையும் காமம் எனில் அது அணையா தீ. "யாராவது உரக்கச் சொல்லிவிடுங்கள்" எனவும் "மோக‌ப்பெருவெளியில் உருகி வழிகிறது என் உலகம்" என சத்தமாகவும், தலைப்பு கவிதையான, "ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனையில்" மிக மென்மையாகவும் சொல்லிச் செல்கிறார்.

வலிந்து எழுதப்பட்ட வாழ்வனுபவங்களாக இல்லாமல், இயல்பாக வெளிப்படும் மனதின் வலி மிகுந்த மொழிகள், திரு,அகநாழிகை.பொன்.வாசுதேவனின் கவிதைகள். வாழ்வின் எல்லா நிலைகளிலும் அவர் கவிதைகள் பேசுவது மென்மொழிகளையே. படிக்கும்போதும் உணரும்போதும் நாம் கொள்ளும் வாதைகள்தான் அவர் தொனி. ஆனால் அதை திருப்பி சொல்லும்போது அந்த கவிதைகளின் மென்மொழி நசுங்கிவிடுமோ எனும் அர்த்தம் சிதைந்து விடுமோ எனும்  மென்மை.

                 ஞாயிற்றுகிழமை மதியபூனை... மயில் பீலி.

- இந்திரா பாலசுப்ரமணியன்