இலங்கை தேசிய நூலக அபிவிருத்திச் சபையின் அனுசரணையுடன் சர்வீனா வெளியீட்டகத்தினால் வெளியிடப்பட்ட புதிய பாதை எனும் இளைஞர் இலக்கிய நூல் அண்மையில் வெளியீடு செய்யப்பட்டது. 32 பக்கங்களை உள்ளடக்கி வெளிவந்திருக்கும் இத்தொகுப்பில் 32 கவிதைகள் இடம்பிடித்திருக்கின்றன.

'புதிய பாதை எனும் இத்தொகுதியை இளைஞர் சமுதாயத்திற்குத் தேவையான பல கருத்துக்களை உள்வாங்கிப் படைத்துள்ளேன். ஆக்கப் பாதையில் ஆக்க பூர்வமான சிந்தனைகளைத் தூண்டுவதுடன் அவர்களின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்க வைப்பதே எனது நோக்கமாகும்' என்கிறார் நூலாசிரியரான தம்பலகாமம் சிவசக்தி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையின் அதிபர் திரு. ஞானராசா அவர்கள். இது இவரது இரண்டாவது தொகுதியாகும். முதல் தொகுதி சிறுவர் பா அமுதம் என்ற மகுடத்தில் வெளிவந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

puthiya_paathai_450தன்னம்பிக்கை, பயன்பெற வழி, இளைஞர் நாம், காதல் கலை, வெறுக்காதீர், நாட்டு வளம், தொழில் செய்வீரே, தகவல் தொழில்நுட்பம், பொறுப்புணர்ச்சி, கிராம முன்னேற்றம், வெளிநாடு, புதிய பாதை, தொழிற் கல்வி, கலைக்கூடம், உழைப்பும் ஊதியமும், மாதர் சங்கம், ஒற்றுமை, சமாதானம், துணிவே துணை, எதிர்ப்பும் எதிரியும், உதவி செய்ய முன்வாரீர், வாசிக்க வேண்டும், எழுத்துப் பயிற்சி, மதித்து நடத்தல், அகந்தை கூடாது, கோபம் குறைப்போம், மது அருந்தாதே, நடைப் பயிற்சி, தலைமை தாங்குதல், பயிர்ச்செய்கை, புகை பிடிக்காதீர், பொறுமையின் பெருமை எனும் தலைப்புக்களில் இக்கவிதைகள் இடம் பெறுகின்றன.

தன்னம்பிக்கை என்ற முதல் கவிதையானது நமது முன்னோர்கள் பற்றி எடுத்தியம்புகிறது. அவர்கள் பாடுபட்டு செய்த பணிகளைக் காட்டி நிற்கிறது.

 'முயற்சியும் பயிற்சியும் பெற்று
 முன்னேற்றப் பாதை நோக்கி
 வியத்தகு சாதனை செய்தார்
 விளங்கிடுவீரே அதனை நீரும்..
  
 அயலவர் சுற்றம் அவரை
 ஆதரித்து தொண்டு ஆற்றி
 துயரினை நீக்கி வைத்தாரே
 தூய்மையைக் கடைபிடித்தாரே'

கற்ற கல்வியைக் கொண்டு பயனடைந்தால் மாத்திரமே அந்தக் கல்வி பெருமைக்குரியதாகிறது. இதுபோல அந்தக் கல்வியானது பிறருக்கு உதவாவிட்டால் அது பிரயோசனமற்றதாகி விடும். இதை கீழுள்ள வரிகளில் நிதர்சனமாகக் காணலாம்.

 'பாடுபட்டுப் பட்டம்பெற்று
 பலருக்கு உதவி செய்து
 கூடுவிட்டுப்போகும் முன்னே
 கூடி நாம் வாழ்ந்திடுவோம்...

 ஏடுதூக்கிப் பயின்றவைகள்
 ஏட்டுச் சுரைக்காய் ஆகிடாமல்
 ஓடுகின்ற நீரைப் போல
 ஒழுங்கில் செயலமைய வேண்டும்'

நாம் செய்யும் நல்ல செயற்பாடுகள்தான் மற்றவர் முன் எம்மை பற்றின நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தும். நாம் பிறருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டுமே ஒழிய பிறரிடம் எமது நாமம் இகழ்ச்சிக்குரியதாக அமைந்துவிடக் கூடாது. கடந்த நாட்களில் அறியாமல் நாம் செய்த பிழைகளை இன்றிலிருந்து விட்டு விட்டு நல்லவர்களாக மாற வேண்டும் என்று ஒவ்வொருவரும் நினைத்தால் உலகத்திலுள்ள கெட்டவன் ஒருவன் திருந்தி விட்டான் என்று நம்மை நாமே பாராட்டிக்கொள்ளலாம்.

 'சென்ற நாட்கள் போய்விடட்டும்
 செய்தவை போகட்டும்
 இன்று புதிதாய் பிறந்ததாக
 இளைஞர் நாம் விழிப்போம்

 நன்று என்று நான்குபேரும்
 நம்மைப் போற்றவே
 இன்று தொடக்கம் அணிவகுத்து
 இளைஞர் நாம் வெல்வோம்'

என்ற கவி வரிகள் மேற்சொன்ன கருத்தில் அமைந்திருக்கிறது.

காதல் என்பது இரு உள்ளங்கள் சம்பந்தட்பட்ட அழகிய விடயம். காதலின் தூய நோக்கம் அறியாமல் காதல் எனும் பெயரில் இன்று நடக்கும் நாகரீகமற்ற விடயங்கள் ஏராளம் உண்டு. சாதி, மதம், பணம் எல்லாவற்றையும் கடந்தது காதல் என்ற உணர்வு. உலகில் எல்லா ஜீவராசிகளும் காதல் செய்கின்றன. ஒருகாலமும் காதல் பின்வருமாறு இருக்கக்கூடாது என்கிறார் திரு. ஞானரசா அவர்கள். அதாவது

 'சாதி சமயப் பிரிவு பார்த்து
 சரிந்து வீழ்வதா?
 பாதியிலே முறி;த்து விட்டுப்
 பறந்து செல்வதா?...

 கூதலுக்குப் போர்வையாக
 கூடி இருப்பதும்
 பாதகத்தைச் செய்து பதுங்கி
 பயந்துநடப்பதும் காதலில்லையே...'

இன்றைய இளைஞர்களில் பலர் வேலைவெட்டிகள் எதுவுமின்றி வீணாக தமது பொழுதுகளைப் போக்க வல்லவர்களாக இருக்கின்றனர். தாய் தந்தையின் தயவில் வாழும் பலர் தொழில் ஒன்றை கட்டாயம் தேடிக் கொள்ள வேண்டும் என்று அக்கறைக் காட்டுவதில்லை. அவர்கள் தத்தமது செலவுகளையாவது சமாளித்துக்கொள்ளுமளவுக்கு அவர்களின் மனநிலை இன்னும் வளரவில்லையா? வேறு சிலர் தாம் செய்கின்ற தொழில்களை வெளியில் கூறுவதற்கு தயங்குவார்கள். இத்தகையவர்களைப் பார்த்து நூலாசிரியர் கேட்கும் இந்தக்கேள்வி நியாயமானது.

 'என்ன தொழில் எனினும்
 எல்லாம் தொழில் என்றே
 சொன்ன உண்மை காக்க
 சோர்வு நீக்கி வருவீரே...'

 '... வேலை செய்யாதிருந்து
 வெட்டி பேச்சு பேசி
 சாலை பார்த்து இருந்தால்
 சாவு எழுந்து அழைக்கும்'

இன்றைய நவீன யுகமானது தொழில்நுட்பப் புரட்சியில் கொடி கட்டிப்பறக்கிறது. உலக விடயங்கள் விரல்நுனியில் இருக்கும் காலமிது. இணையம் என்றும், கைத்தொலைப்பேசி என்றும் நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வேகம் கூடிக்கொண்டே போகிறது. தொழிற்சாலைகளிலும் மக்களின் வேலைகளை விட இயந்திரங்களின் பாவனை தான் பல்கிப்பெருகிக்கொண்டு வருகின்றது. வளர்முக நாடுகளில் ரோபோ மூலம் சமையலறை வேலைகளைக்கூட பூர்த்தியாகச்செய்கின்ற வழிமுறைகளைக் கையாண்டிருக்கின்றார்கள். இதைப்பற்றி தகவல் தொழில்நுட்பம் என்ற கவிதையில் மிக அழகாக கூறப்பட்டுள்ளது.

பொறுப்புணர்ச்சி என்ற கவிதையில் வரும் அடிகள், மட்டம் தட்டிப் பேசுவோரைப்பற்றியும் கூறப்பட்டுள்ளது. அதாவது மட்டம் தட்டிப்பேசுபவர்கள் முன்னிலையில் நாம் சபதம் பூண்டு நல்வாழ்க்கை வாழ முயற்சிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. திட்டமிட்ட செயலாலும், தீர்மான உறுதிப்பாட்டாலும் செய்கின்ற கருமங்களை திறம்படச்செய்யலாம் என்று கூறப்பட்டுள்ளது. பொறுப்புணர்ச்சி ஏற்படுவதற்கு முதலில் பொறுமை வேண்டும் என்ற உன்னத கருத்தை இந்தக்கவிதை இயம்பி நிற்கிறது.

கிராமப்புறங்களில் 'சங்கம்' என்றதொரு அமைப்பை ஏற்படுத்தி அதன் மூலம் கிராமத்தின் பொருளாதார வளர்ச்சிகளை  முன்னேற்றும் பல வேலைத்திட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதை அவதானிக்கலாம். அதன் மூலம் வீடுகளை நிர்மாணித்து, பாதைகளை அமைத்து மக்களுக்கான வசதிகளை செய்துகொடுக்கின்றார்கள். மேலும் பண்ணைகளை வைத்தும், விவசாயங்கள் செய்தும் தமது வாழ்வியல் தராதரத்தை மேம்படுத்திக்கொள்கின்றனர். இத்தகைய நல்ல விடயங்களுக்காக சிரமதானத்திலும் ஈடுபட்டு சிறியளவிலேனும் மருத்துவ வசதிகள், பாடசாலை வசதிகளை பெற்றுக்கொள்ளவே அந்த மக்கள் ஆசைப்படுகின்றனர். இவர்களின் இந்த அடிப்படை வசதிகள் தொடர்பான விடயங்களை வைத்து எழுதப்பட்டதாக கிராம முன்னேற்றம் என்ற கவிதை காணப்படுவதை அவதானிக்கலாம்.

வெளிநாட்டு முகவர்களைப் பார்த்து 'வெளிநாடு' என்ற கவிதை பின்னப்பட்டுள்ளது. அவர்களின் கவனயீனத்தாலும்,  பொறுப்பற்ற தன்மையாலும் வெளிநாட்டுக்குப் போய் சீரழிகின்ற பலரின் வாழ்க்கை பரிதாபத்துக்குரியது. அத்தகையவர்கள் வெளிநாடுகளில் படும் துன்பம் சொல்லி மாளாதது. குழந்தைகளை விட்டு, கணவனை விட்டு, மனைவியை விட்டுச்சென்ற எத்தனைப்பேர் இன்று அயல்நாடுகளில் அநியாயமாக துன்புறுத்தப்படுகின்றனர். அவ்வகையான மனதை உருக்கும் செய்திகள் நாளாந்தம் நடக்கின்றன. தன்னிடம் இருப்பதை வைத்து சமாளிக்கத் தெரியாமல், வெளிநாட்டு மோகத்தில் அலைபவர்களை கண்டிக்கிறார் நூலாசிரியரான ஞானராசா அவர்கள். அவர் கோபமாப் பாடும் வரிகளைப் பாருங்கள்.

 'இல்லையென்றால் அங்கே செல்வீர்
 இருந்தால் முயற்சி இங்கு செய்வீர்
 தொல்லை தீர்க்கும் வழியைக்கண்டு
 தொடர்வீர் பயணம் வெல்வதாக'

புத்தகத்தின் தலைப்பான புதிய பாதை என்ற கவிதையில் பல அறிவுரைகளை சொல்லியிருக்கிறார் நூலாசிரியர். இது இளைஞர்களுக்கு மட்டுமான அறிவுரை அல்ல. அவ் அறிவுரைகள் அனைவரும் கடைப்பிடித்து ஒழுக வேண்டியவையாகும். அன்பு காட்டுதல், பகையற்று வாழ வேண்டும், கோள் சொல்லுதல் கெட்ட பழக்கம் போன்றவை பற்றியும் அவ்வறிவுரைகள் அமைந்திருக்கின்றன.

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமலிருப்பதே பெரும் புண்ணியமாகும். அதை விடுத்து பதவி பணத்துக்காக யாருக்கும் பாதகம் செய்யக்கூடாது. ஏழை எளியவர்களை மதிக்கத்தெரிந்தோரே உண்மையான அறிவாளியாவார். அதுபோல சத்தியம் செய்தலானது அதை எப்படியேனும் நிறைவேற்ற வேண்டும் என்பதை கட்டாயப்படுத்துகிறது. மேற்சொன்ன விடயங்கள் யாவற்றைப்பற்றியும் அழகிய வரிகளில் ஓசை நயத்துடன் எதிர்ப்பும் எதிரியும் என்ற கவிதையில் கூறப்பட்டுள்ளது.

வாசிப்பின் மகோன்னதம் பற்றியும், எழுத்துப்பயிற்சியால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் இதிலுள்ள கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன. பகட்டுப்பெருமைகள் அற்று பிறரை மதித்து வாழல், மதுவினால் ஏற்படும் கேடுகள், எல்லோரிடத்திலும் இருக்க வேண்டிய கட்டாயப் பண்புகளில் ஒன்றான தலைமை தாங்குதல் இன்னும் இதர விடங்களைப் பற்றியும் ஏனைய கவிதைகளில் அழகிய முறையில் கூறப்பட்டுள்ளன. இந்தப்புத்தகம் மிகவும் பயனுள்ளதாகும். அனைவரும் வாசித்து மகிழக்கூடிய வகையில் அதனை எழுதிய திரு. ஞானராசா அவர்களுக்கு எமது பாராட்டுக்கள.; அவரது தமிழ்த்தொண்டு மேலும் சிறந்துவளர மனமார வாழ்த்துகிறோம்.

பெயர் - புதிய பாதை (இளைஞர் இலக்கியம்)
நூலாசிரியர் - செ.ஞானராசா
முகவரி - 993, Anbuvalipuram, Trincomalee, Sri Lanka.
தொலைபேசி - 026 3267891, 077 5956789 
வெளியீடு - சர்வீனா வெளியீட்டகம்
விலை - 125/=