கவிதை பொதுவானது. ஆண், பெண் என இருபாலரும் எழுதி வருகின்றனர். ஆண் எழுதுவதை விட பெண்ணுக்குக் கூடுதல் பொறுப்பு இருக்கிறது. பெண் என்பவள் தன் தினசரி கடமைகளையும் கவனித்துக் கொண்டு அதிலிருந்து வெளிப்பட்டு தன் அனுபவங்களை, அவஸ்தைகளை, வலிகளை, வேதனைகளை, கவிதையாக உருகொள்ளச் செய்கிறாள்.

பெண்களுக்கு பலவித தொல்லைகள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். உரசுதலும் உராய்தலும் கூட ஒரு வகையில் உபத்திரவமே. மனம் விரும்பாத போது முடியும் உறுத்தலாகவே இருக்கும். எல்லையைத் தாண்டும் போது எரிமலையாகிறாள் பெண்.

உனது கைரோமம் கூட
எனது கனவுலகை உறுத்துகிறது.
உன் கைமுடி உறுத்துகையில்
நீ மணிமுடி தாpத்தாய்
வேறுவழியின்றி
என் மூன்றாம் அடியை
உன் தலை மேல் வைத்து
வாமிணி யானேன்.

பெண் எப்போதுமே அடிமையாக இருக்க மாட்டாள் என உணர்த்துகிறார். வாமனனே தலைமேல் வைத்தான் என்பது புராணம். இத்தொன்மத்தை பயன்படுத்தி பெண் பாலாக்கி எழுதியுள்ளார்.

ஒவ்வொருவருக்கும் இலட்சியமும் உறுதியும் நம்பிக்கையும் வேண்டும். தடைகள் வந்தாலும் இலட்சியத்தை கைவிடக்கூடாது.

என் பாதங்களில்
யானைகள் படுத்தாலும்
எனது எதிர்காலத்தை
ஏந்தியபடி
உன்னோடு வரும் என் உயிர்

கவிஞரின் நம்பிக்கை இக்கவிதை மூலம் வெளிப்பட்டுள்ளது. பெண் உறுதியுடன் வாழ வேண்டும் என்கிறது.

பெண்ணுக்கு பொறுமை அதிகம். சகிப்புத் தன்மையும் மிகுதி. சேவை மனபான்மையும் கூடுதல். அன்பு அவசியம். அவணைப்பும் தேவை. அவள் விரும்புவதும் அதுவே.

என் உயிர் வீதியில்
நீ கொட்டிய வெறுப்புச் சரலைகளை
பொறுமைத் தார் ஊற்றி
மேவிக் கொள்கிறேன்
இன்னும் நீ எதற்குக் கூப்பிட்டாலும்
ஒரே ஆவலுடன்தான் ஓடி வருகிறேன்
நீ என்னிடம் பேசுகிறாய்

அன்பை நேசிக்கும் ஒரு பெண்ணாகக் கவிஞரைக் காட்டுகிறது

கோபத்தால் குறி தவறிய உன்
வார்த்தைகள் என்னைக்
காயப்படுத்தவில்லை
இருந்தும்
நீ குறிபார்த்ததையே நினைத்து
காயப்படுகிறது என் மனசு

என்னும் கவிதை சிறியதாயினும் சிறப்பு. குறிக்கு தப்பினாலும் குறி வைத்ததையே தப்பு என்கிறது. குறி வைத்ததைக் குறி வைத்து தாக்குகிறது. குறிப்பால் உணர்த்துகிறது. குமுறலைக் காட்டுகிறது.

தூக்கம் பற்றிய இன்னாரு சிறுகவிதை

ஆயுளின் சுருக்கம் பற்றி
எதுவுமே தெரியவில்லை - என்னைப்
பாதி பிணமாக்கும்
தூக்கத்திற்கு

தூக்கத்தை இறப்புக்கு ஒப்பிட்டுள்ளார். தூக்கத்தை ‘மரணத்தின் ஒத்திகை’ என்பது நினைவுக் கூர்தலுக்குரியது.

வாழ்க்கை விரட்டிக் கொண்டேயிருக்கும். உறங்குதல் அரிது. கண்களுக்குள் உறக்கம் எப்போதும் இருக்கும். வாசிக்கும் உள்ளம் உறக்கம் தழுவாது.

உறங்கவே கூடாத சிறுவாழ்வில்
உறங்கித் தொலையும்
கண்களுள்
விரித்து வைக்கப்பட்டுள்ளது
புத்தகம்.

கையில் விரித்து வைத்த புத்தகம் கண்களில் தெரியும். இதையே ‘கண்களுள் - விரித்து வைக்கப்பட்டுள்ளது - புத்தகம்’ என காட்சிப்படுத்திக் காட்டியுள்ளார்.

உலகத்தை அழிக்கும் சக்திகளில் ஒன்றாக உள்ளது பிளாஸ்டிக். மண்ணை மலடாக்குகிறது. விதைகளை தடுக்கிறது. பூமியெங்கும் பரவி கிடக்கிறது.

பிளாஸ்டிக் பைகளில் படபடக்கும்
பூமியின் மரண மூச்சில்
வேதனை ஓங்காரமிடுகிறது

என கவிஞர் பூமியின் துயரை எடுத்துக்காட்டுகிறார். பிளாஸ்டிக்கின் தன்மையைக் குறிப்பிடுகிறார்.

பெண் என்பவள் வீட்டைப் பொறுத்தவரை ஒரு வேலைக்காரியே. வீட்டில் அவள் பணி என்றும் ஓயாது. உழைத்துக் கொண்டேயிருப்பாள்.

மீண்டும் சமைக்கனும்
மீண்டும் துவைக்கனும்
மீண்டும் துலக்கனும்
மீண்டும் மீண்டும்
சலிப்பில் உயிர் பிழிகிறது.

பெண்ணாக பிறந்து குடும்பத்தில் உழலும் ஒரு பெண்ணின் நிலையை விவரித்துள்ளார். ஒரு பெண்ணாக அழுத்தமாக கூறியுள்ளார். தொடர்ந்து இன்னொன்றில்

பெண்ணிற்கு புத்தி சொல்லும்
இரும்பு மரபினிடம்
குடும்ப வன்முறைச் சட்டம்
புரிய வைக்குமோ
புருசனின் அனைத்திலும்
பெண்ணிற்கு சம அதிகாரமுண்டென்று

என பெண்ணுரிமையும் பேசியுள்ளார். ‘குடும்ப வன்முறைச் சட்டம்’ பெண்களின் பாதுகாப்புக்காக அரசு கொண்டு வந்தது. சட்டம் கொண்டு வராவிட்டாலும் சம உரிமை உண்டு என்பதை கவிதை வலியுறுத்துகிறது. பெண்ணியம் பேசியுள்ள ஒரு கவிதை

என்னை சிறை வைக்க
காரணம் வேறென்ன வேண்டும்?
சமையலில் ருசியில்லை
ஆம்பளைய மதிப்பதில்லை
சம்பாதிப்பவன் கக்ஷடம் புரியாமல்
கறிவேப்பிலைய காயப்போட்டுட்டா

பெண்ணை சமூகம் எவ்வாறு வைத்துள்ளது என்பதற்கு இக்கவிதை ஓர் எடுத்துக்காட்டு.

நெல்மணி மனிதரை வாழவைக்கும். நெல்மணியை வைத்தே பெண்சிசுகளைக் கொல்வது மகா கொடுமை.

வளர்த்து விட்டேன் நெல்மணியாய்
என்றோ பிறக்கும்
எந்தன் குழந்தையின்
தொண்டையிலும்
உறுத்தாமல் நான் இருக்க வேண்டும்

ஒரு நெல்மணி பேசுவதாய்த் தன் உணர்வை வெளிப்படுத்தியுள்ளார். நெல்மணிக்கு இருக்கும் கருணை மனிதர்களுக்கு இல்லாதது கவலையளிக்கிறது.

நீண்டதொரு இடைவெளியில்
துவண்டு கருகிய குழந்தைக்கு
அக்கரை மார்பு
சுரக்கிறதா
வற்றிப்போனதா?
இடைவெளிகள் எப்போதும்
ஒரே விதமான
வலியைத்தான் தருகின்றன

தாய்மையின் குணத்தை வெளிப்படுத்தியுள்ளது. ‘அக்கரை மார்பு’ என்பது எடுத்துக் காட்டத்தக்கது. கவிதையும் தாய்மையும் சரிவிகித்தத்தில் வெளிப்பட்டுள்ளன.

உறவுகள் வித்தியாசமானது. சொந்தங்கள் சுவராஸ்யமானது. புறம் பேசும். குறை கூறும். புரிந்து கொள்ள முடியாது.

அவலத்தோடு
காயம்பட்ட உயிரோடு
திரும்பிப் பார்க்கையில்
கடுமையான முட்கவசம் போடுகிறார்கள்.
போதும் வாழ்க்கையெனக்
கண் அயர்ந்தாலும்
ஆயுதங்களைக் கொண்டு
தலைக்கு மேல் ஓங்குகிறார்கள்.

என்ன வகைப் பாசம் இது? உறவுகளால் ஏற்பட்ட வலியைக் கூறியதுடன் உற[களின் மீதான வெறுப்பையும் உமிழ்ந்துள்ளார்.

விருப்பு வெறுப்புகளை
மதிக்காத இடத்தில்
உணர்வுகளுக்கு
காது கொடுக்காத சுவர்களுக்கடியில்
நாய்ப்பல்லாக மட்டுமே
பேசத் தெரிந்த மொழிக்கிடையில்
வேதனையோடு
அயர்ந்து கிடக்கிறேன் தோழி

என தோழியிடம் கூறுவதாகவும் பிறிதொன்றில் கவலைப்பட்டுள்ளார்.  கவிதைகளை சிறப்பாக கட்டமைக்கும் கவிஞர் ஹைக்கூக்களையும் உருவாக்குகிறார் என்பதற்கு இத்தொகுப்பில் ஹைக்கூக்களும் இடம் பெற்றுள்ளன.

கூட்டம் கலைவதே இல்லை
யார் பேசினாலும்
சுடுகாட்டில்

நெடுவரிசைக் கன்னிகளில்
கரட்டான்கள் தாவுகின்றன
ராமனுக்கு உதவாமல்

கோபுரத்து அரசந்தளிர்
மறந்து விட்டது
பூர்விகம் மூன்றும் மூன்று விதமாய் இருக்கின்றன.

சொற்கள் குறைவானாலும் பொருளில் பன்முகத் தன்மையைக் காணமுடிகிறது. வடிவம் குறையாயிருந்தாலும் வெளிப்பாடு நிறைவாயுள்ளது. ஹைக்கூவில் தொடர்ந்து முயற்சிப்பது iளூக்கூ உலகை வளப்படுத்தும். பலப்படுத்தும்.

ஆயிரம் உறவுகள் இருந்தாலும் அம்மாவிற்கும் மகளுக்குமான உறவு அலாதியானது. தொப்புள் கொடியிலிருந்து தொடர்வது. அன்னை மடியே ஆறுதல் தரும். அன்னை வரவை மனம் எதிர் பார்க்கும். அவள் அன்பை எதிர் நோக்கும்.

நான் எதையெல்லாம்
அவளுக்காக அடைகாத்திருக்கிறேன் என
அவளுக்குத் தெரிவதே இல்லை.
எப்போது வந்து அவள்
எவ்வளவு தங்கினாலும் நான் காத்தவை பொரிவதில்லை.

ஒரு தாயின் அன்புக்காக ஏங்கும் ஒரு மகளின் குரலில் அருமையாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘என் அந்தப்புரத்திற்கு ஒரு கடவுளைக் கேட்டேன்’ மூலம் கலை இலக்கியா தன் கவிதையுலகத்திற்கு ஓர் இடத்தைக் கோரியுள்ளார். அவருக்கு ஓரிடம் உண்டென்று கவிதைகளே முன்னிற்கின்றன. கலை இலக்கியா பேசியிருப்பது அவர் அனுபவம் என்றாலும் காட்டியிருப்பது அவர் உலகம் என்றாலும் அவர் எழுப்பிய குரல்கள் அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொரு குடும்பத்திற்குள்ளும் சிக்கி சிதைவுறும் பெண்களின் ஒற்றைப் பிரதிநிதியாய்க் கவிஞர் காட்சியளிக்கிறார். கவிஞரின் மொழிநடை தனித்துவமாய் இயங்குகிறது. வாசகர்களை வசப்படுத்தி விடுகிறது. கலை இலக்கியாவின் கலைப்பயணம் தொடர வேண்டும். 

 வெளியீடு:  காதை 19 சீனிவாச ரெட்டி தெரு தி. நகர் சென்னை - 600 017
 விலை - ரூ. 50.00
 

- பொன். குமார்