அக்ரில் மலையில் இருக்கும்
அந்தக் கதிரவனை
அந்தக் காற்றை
அந்தப் புயலை
அத்துடன் அந்தப் பனியையும்
அதன் போக்கிற்கே விட்டுவிடு
உன் தலைக்கு மேல் ஆடும்
அப்பறவைகளை விட்டுவிடு
சிலவேளை,
பெண்களும் ஆண்களும் பிள்ளைகளும்
இருக்கும் இடத்துக்கு
நீண்ட நாட்களுக்கு முன்
எரியூட்டப்பட்ட
அந்தக் கிராமத்துக்கு
பறந்து கொண்டிருக்கும்
அந்த வல்லூறு
உனக்கு வழிகாட்டலாம்
நீண்ட நாட்களுக்கு முன்
இடம்பெயர்ந்த
கோழிகளை.. பூனைகளை.. நாய்களைப் பார்!
எரியுண்ட பிணவாடையடிக்கும் காற்றை,
விளையாட்டுப் பொருட்களை,
மாவை, வெண்ணையை – அத்துடன்
தலைமயிரையும் தொட்டுப் பார்!
தனது குழந்தையின் பிணத்தைத்
தூக்கிக் கொண்டுச் செல்லும்
அவனிடம் போய்க் கேள்
பிணங்களைப் பற்றி அவன் என்ன
நினைக்கிறான் என்று
அல்லது
வாழ்க்கையைப் பற்றி அவன் என்ன
நினைக்கிறான் என்று
அல்லது
அவன் தான் எங்கே போக
நினைக்கிறான் என்று
அவன் உடம்பு நடுங்குவதை உணர்!
நம்பிக்கை இழந்த அவனது முகத்தைப் பார்!
அவனிடம் கேள்
எல்லோரும் எங்கேயென்று
மணம் முடிக்கும் வயதுடைய அவனது
மகள் எங்கேயென்று
அவனிடம் கேள்
அவன் பிறந்த கிராமத்துக்கு
இராணுவ வீரர்கள் நெருப்பு மூட்டும் போது
வீட்டில் படுத்துக் கிடந்த
வயதுபோன அம்மா எங்கேயென்று
அவனிடம் கேள்
நூற்றியிருபது பிணங்களை எப்படி ஒரேநாளில்
ஒரே புதைக்குழிக்குள் புதைக்க முடிந்ததென்று
அவனிடம் கேள்
அவன் இறுதியாக எப்பொழுது சாப்பிட்டான் என்று
அல்லது
அவனுக்குப் பசிக்கிறதா என்று
இவையொன்றுமே அவனுக்கில்லை
ஆனால் சிறிதுநேரத்தில்
அவன் அக்கிராமத்தை நோக்கிப் போகும் வழியில்
கையில் ஒரு துண்டு பாணுடன் கிடக்கும்
ஒரு மூதாட்டியின் பிணம்
மனதில் மகிழ்ச்சி இனித்தான்
தனது கண்காட்சி உண்மையாகப் போகிறது
அவனது கைகள் படக்கருவியை எடுத்து
இயங்கத் தொடங்குகின்றன
வடக்கு அல்லது தெற்கு…
கிழக்கு…மேற்கு
அவள் பார்வை இருக்க வேண்டும் என்பதற்காக
புரட்டிப் புரட்டி
அணிந்திருக்கும் ஆடையைக் கூடத்தான்
குர்தானியரின் ஆடை
இக்காட்சி
மேற்கின் காட்சிக்கு மிக உகந்ததென
மனநிறைவு அவனுக்கு
.....................................................
அடில் அடாம்
மொழிபெயர்ப்பு: மல்லீசுவரி ஆதவன்

அண்மையில் செய்தித்தாள் ஒன்றில் புகைப்படக் கலைஞராக தொழிற் செய்யும் ஒருவர் கிழக்குத் துருக்கிக்கு அனுப்பப்பட்டார். அவர் மிகவும் புகழ் பெற்றவர். உலகத்தின் மிகச் சிறந்த புகைப்படக் கலைஞரென அறியப்பட்டவர். அவரது புகழ் சிறக்க இதுவும் ஒரு நல்ல வாய்ப்பு.

படைப்பாளி பற்றி: 

  அடில் அடாம் துருக்கிய குர்திசு இனத்தைச் சேர்ந்தவர். அவர் அங்காராவுக்கு அண்மையிலுள்ள ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தார். 1982களிலிருந்து அவர் டென்மார்க்கில் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். பல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் எழுதி வெளியிட்டுள்ளார். அவரது படைப்புகள் எல்லாமே தனது தாய்நாடு, இனம் பற்றியதாகவே இருக்கிறது.

Pin It