ரமேஷ் பிரேதனின் 'சாராயக் கடை' கவிதைகள்

பாரதியின் பாடல் பெற்ற தலமான சித்தானந்த சுவாமி கோவிலுக்குச் சற்று தள்ளி சங்கரதாஸ் சுவாமிகளின் கல்லறையிருக்கும் சுடுகாட்டுக்கு எதிரே கிழக்குக் கடற்கரைச் சாலையோரத்திலிருக்கும் சாராயக்கடைக்கு ரமேசுடன் போவதுண்டு. [சாராயம் அருந்துவதில்லையென்றாலும் சாராயக் கடைகளுக்கு அவ்வப்போது செல்வதுண்டு சிற்பங்களை ரசிப்பதற்காகவே கோவிலுக்குச் செல்வதுபோல]. மதில்களில் விளையாடும் குரங்குக் குட்டிகளும் காலடியில் உரசிச் செல்லும் பன்றிகளும் பத்தடி தூரத்தில் வெட்ட வெளியில் மலம் கழிக்கும் ஆடவருமென அவ்விடத்தின் வாழ்க்கை நியதிகளே தனியானதாயிருக்கும். இருப்பதற்கு நிலமும் செரிப்பதற்கு உணவுமில்லாத அதுபற்றிய கவலை சிறிதுமில்லாத உடல்களை அங்கே காணமுடியும். ஒவ்வொருமுறையும் இரண்டு ரூபாய் பணத்திற்காகவோ உண்ணும் மரவள்ளிக்கிழங்கிலாவது மணிலாக் கொட்டையிலாவது பங்கு கேட்பதற்காகவோ எவரேனும் அந்நியர் வந்து நிற்பார். நம்மைக் கவனிக்க வைக்க அவர் செய்யும் பாவனைகளில் ஓரங்க நாடகத்தின் அத்தனை நுணுக்கங்களுமிருக்கும்.

சாராயக் கடை என்பது தென்னங்கீற்றுகளால் வேயப்பட்ட ஊரின் மிக விசாலமான கூரையைக் கொண்ட குடிசை. வண்ண வண்ண சீரியல் விளக்குகளாலும் பச்சைக் குழல் விளக்குகளாலும் அலங்கரிக்கப் பட்டிருக்கும் அவ்விடத்தில் பழைய தத்துவப் பாடல்கள் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். எப்பொழுதேனும் பெரும்போதையில் நாவறண்டு முனகும் எவனுக்கேனும் பெயர் தெரியாத கர்ணனொருவன் தன் சோடா பாட்டிலின் பானத்தைத் தாரைவார்த்துக் கொண்டிருப்பான். கவிதைகளை வாசிப்பதில் கிடைக்கிற அலாதியான கணங்களைச் சாராயக் கடையின் நிகழ்வுகளை வேடிக்கை பார்க்கும் தருணங்களில் எட்டிவிட முடியுமென்று தோன்றுகிறது. மது விடுதிகள் பெருகிவிட்ட நிலையில் காலத்திற்கேற்ப சாராயக் கடைகள் புதுப்பிக்கப் பட்டாலும் கூட ஓடுகள் வேயப்பட்ட கூரை, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி முதலான சிலவற்றைத் தவிர அப்படியொன்றும் பெரிதாய் மாற்றமில்லை.

வில்லியனூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் வடக்கு பார்த்திருக்கும் சாராயக்கடையில் சொற்ப நாணயங்களுடன் உள்நுழைந்து சாராயத்தை ரமேசும் ரத்தப் பொறியலை நானும் உட்கொண்ட கவித்துவமான தருணம் சாராயக்கடை என்ற வார்த்தையை உச்சரிக்கும் ஒவ்வொரு கணத்திலும் நினைவுக்கு வருகிறது. மேட்டுப்பாளயத்திலிருந்து உழவர்கரை செல்லும் குறுக்குச் சாலையில் கிழக்கு பார்த்திருக்கும் சாராயக்கடையில் ஒருமுறை ரமேஷ் ஒரு பெண்ணைக் காட்டினார். அப்பொழுது மணி இரவு எட்டு முப்பது. குளித்து வெகுநாட்களான எண்ணெய் பார்க்காத செம்பட்டைத் தலையுடன் துப்பட்டா இல்லாத பச்சைச் சுடிதார் அணிந்திருந்த அவளுக்கு மிஞ்சிப்போனால் பதினைந்து வயதிருக்கலாம். இருபதடி உயரத்து மரமேடையில் கடைக்கு வெளியில் வரை வழிந்தோடும் அதீத ஓசையுடன் இயங்கிக் கொண்டிருந்த வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியில் கண்புதைத்து மோன நிலை எய்தியிருந்தாள். ரமேஷ் கேட்டார் "இவளது இன்றைய இரவு எப்படிக் கழியும்? உனது புனைவு வெளியை அவள் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து தொடங்கி விரிக்க முடியுமா?". ரமேஷ் பிரேதனின் சாராயக்கடை குறித்த வாசிப்பிற்கான முன்தயாரிப்புகளை இந்தப் புள்ளியிலிருந்து குறிப்பெடுத்துக் கொள்வது உசிதமாயிருக்குமென்று நம்புகிறேன்.

மேலோட்டமாகப் பார்க்கையில் பான்சியான பொதுப்புத்தியை அதிர்ச்சி மதிப்பின் மூலம் கவரும் தன்மை கொண்ட சாராயக்கடை என்ற தலைப்பு ஆழ்ந்து வாசிக்கையில் புதுச்சேரியின் வரலாற்றை உட்கொண்டிருக்கிற நிலவியலை உட்கொண்டிருக்கிற அரசியல் சொல்லாடலாக விரிந்து விடுகிறது. ஒடுக்கப்பட்டவர்களை ஒதுக்கப்பட்டவர்களை மறக்கப்பட்டவர்களை நினைவுக்குக் கொண்டு வரும் வார்த்தையாக சாரயக்கடை அமைந்து விடுகிறது (எ.கா. சாராயக் கடை - நெம்பர் 18- வில்லியனூர் கொம்யூன்). மேட்டுக் குடியின் பாசிச மனோநிலைக்கு எதிராகப் புறக்கணிக்கப்பட்டவனின் வன்மத்தோடு ஒலிக்கும் குரலாக இதனை வாசிக்க முடியும்.

தன் பூர்வ அடையாளங்களுடன் ஆடையற்றுத் திரிகிற ஆதிக் குடிகளாயினும் சரி பின்நவீன சூழலின் அத்தனை வன்மங்களுக்கும் ஆட்பட்டுள்ள ஓர் தேசிய இனமாயினும் சரி போதை இல்லாத சமூகம் என்று எதுவுமே உலகில் இல்லை. ஒவ்வோர் இனமும் தத்தமக்கெனத் தோதுப்படுகிற போதை வஸ்துக்களை உருவாக்கிக்கொள்கிறது. நம் சங்க இலக்கியத்தில் ஆடவரும் பெண்டிரும் அரசனோடு சேர்ந்து மதுவருந்திய நிகழ்வை ஒளவ்வையின் பாடல் தெரிவிக்கிறது.

ஆனால் இன்றோ மதுவிலக்கின் மூலம் பாசிச மனோநிலையின் வன்மம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. ஒருவனுடய குடிப் பழக்கத்தின் உண்மை இன்மைகளை வைத்தே அவனது புனிதத் தன்மையும் குணத்தின் மேன்மையும் தீர்மானிக்கப்படுகிறது. இந்நிலையில் அனைவருக்குமானதாகக் கொண்டாடப்பட்ட போதை எதிர்மனித, எதிர்சமூகச் செயல்பாடாக மாற்றப்பட்டதன் வரலாற்றுப்பின்னணியில் நிகழ்த்தப்பட்ட வன்முறைகளைக் கேள்விக்குட்படுத்துகிறது இத்தொகுப்பு. கொஞ்சம் கொஞ்சமாய் இந்தப் புள்ளியிலிருந்து வழிந்து மனித குல வரலாற்றின் அடிமைத்தனங்களை வரையும் கோட்டுச்சித்திரமாக மாறிவிடுகிறது.

ஒவ்வொரு நகர்வுக்கும் பொருளுண்டு

ஆண்டானுக்கும் அடிமைக்குமிடையே
அறம் ஓர் ஊறுகாய் மட்டை

என்று சொல்லி ஒட்டுமொத்த மனிதகுல வரலாற்றையும் கொட்டிக் கவிழ்த்து விடுகிறது. மதுவகைகளிலே கூட வர்க்க பேதம் பாதுகாக்கப்பட்டு சாராயம் தீண்டத் தகாதவர்களின் பானமாகிவிட்ட நிலையில் சூரியன் சந்திரன் மழை என மேன்மையானவை கொண்டாடப் படுவது போல சாராயமும் (சாராயத்தின் மூலம் விளிம்புகளும்) கொண்டாடப்பட வேண்டியதன் தர்க்கக் காரணிகளை இது முன்வைக்கிறது (எ.கா. மாமது போற்றுதும்).

அறிவுமனத்தின் தலையாய கண்டுபிடிப்பு என சக உடலை ஒடுக்குதலும் கண்காணித்தலுமான அரசியலைத் தான் சொல்லமுடியுமென்று தோன்றுகிறது. அதற்கெதிரான கலகமாகத் தீவிர அறிவுமறுப்பை நிகழ்த்திப் பார்க்கும் இத்தொகுப்பு இதுவரை அறம் என்று சொல்லப்பட்டு வந்த பெருங்கதையாடலுக்கெதிரான வன்மத்தைக் கையாள்கிறது (எ.கா. கோவலன் புலம்பித் தீர்த்த காதை). மனித குல வரலாற்றில் இதுவரை உடலை ஒடுக்கியும் கண்காணித்தும் வந்த மொழியைக் கொண்டே போதையின் மூலம் கலவியின் மூலம் பைத்தியத்தன்மையின் மூலம் பலவிதமான மரணங்களின் மூலம் கட்டற்ற வெளிக்குள் உடலை இயக்கும் அரசியலை இது நிகழ்த்துகிறது. அறிவு மறுப்பென்பது அறிவிலி மனத்தின் செயல்பாடல்ல; அது அதீத அறிவின்பாற்பட்டது பேச்சின் உச்சம் மௌனம் என்பதைப்போல.

அகவலி சார்ந்ததும் இயக்கம் சார்ந்ததுமான சுயபுலம்பல்களை கோஷங்களை புகார்களைக் கொண்டிருந்த தமிழ்க் கவிதைகளை வாசிப்பில் பன்மைத்துவம் கொண்டதும் கதைகளின் வெளியை அடைத்துக் கொண்டதுமான இன்றைய கவிதைகளின் தளத்திற்கு அழைத்து வந்ததில் ரமேசுக்கும் பிரேமுக்கும் பெரும்பங்கு உண்டு. ஒரு வாசிப்பில் பான்டசியாகவும் அடுத்த வாசிப்பில் தீவிர அரசியலைப் பேசுவதுமான கவிதைகள் அவர்களின் தொகுப்புகளில் பெரும்பான்மையான இடத்தை அடைத்துக் கொண்டுள்ளன. ரமேஷ் பிரேதனின் சாராயக் கடையிலும் இத்தகைய கவிதைகளை அடையாளம் காணமுடியும் (எ.கா. தாதா பீட்டர் சிவம்).

நீரில் நனைந்த பறவை தன் உடல் சிலிர்க்க உதறிக்கொள்வது போல வாழ்ந்து பெற்ற அனுபவத்தின் அந்தரங்கத் தன்மையை உதிர்த்துவிட்டு சித்த மருத்துவனின் கைவண்ணத்தில் செய்த மூலிகைகளாலான குழல்மாத்திரையாகச் சுருங்கி விடும்பொழுது கவித்துவத்தை உடுத்திக்கொள்கிறது மொழி. மொழியின் அத்தகைய சாத்தியப்பாட்டைப் பல தொனிகளில் பல வடிவங்களில் பல சொல்முறைகளில் நிகழ்த்திப் பார்க்கிறது இத்தொகுப்பு. சாக்லெட் நகரம், சாராயக் கடை - நெம்பர் 13 - உழவர்கரை கொம்யூன், நடைப்பயிற்சி, மாமது போற்றுதும், என் மகளின் அம்மாவுக்கு முதலான கவிதைகளை ஒரே வாசிப்பில் படித்து முடிக்கையில் இதனை உணர முடியும். பீர் பாட்டில் முதலான கவிதைகள் மாறுபட்ட ஒப்பீடுகள் மூலம் வாசக மனதில் பல புதிய திறப்புகளை ஏற்படுத்திவிடுகின்றன. இளங்கோவடிகள், புதுமைப்பித்தன் என வேறு சிலரின் பிரதிகளை ஞாபகப்படுத்துவதன் மூலம் எழுத்துக்கு வெளியே தன் பிரதிகளை எழுதிச் செல்கிற கவிதைகளும் இத்தொகுப்பில் உண்டு (எ.கா. கோவலன் புலம்பித் தீர்த்த காதை, சாத்தானும் கந்தசாமியும்).

இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் முதல் நாவற்கொம்பு வரை வெளிவந்த ரமேஷ் பிரேமின் கவிதைகளில் நிலவியல் சார்ந்த அடையாளங்கள் வெகு சொற்பமே. (பொதுவாகவே நவீன தமிழ்க் கவிதைகள் நிலவியல் சார்ந்து எழுதப் படுவதல்ல என்ற முடிவுக்கும் வர இடமுண்டு). குருவிக்காரச் சீமாட்டி பரதேசி தொகுப்புகள் தவிர்த்த வேறெந்தப் புனைவுகளிளும்கூட இத்தகைய அடையாளங்களைக் காண்பதரிது. ஆனால் சாராயக்கடை தொகுப்பு பாண்டிச்சேரியின் கடல் காற்றும் சாராய வாடையும் வீசும் நிலவியலை வரைந்து காட்டுகிறது. தொகுப்பின் முதல் கவிதை புதுச்சேரியின் வெள்ளை நகரத்தில் தொடங்கி கடைசிக் கவிதையில் பூர்வ புதுச்சேரியான அரிக்கமேட்டை ஒட்டிய வீராம்பட்டினம் கிராமத்தில் முடிகிறது. வெள்ளை நகரத்தைச் சூழ்ந்துள்ள பகுதிகளும் வெள்ளை நகரத்தின் சாயலில் மாறிக் கொண்டிருக்கிற பின்காலனியச் சூழலின் வன்மத்திலிருந்து மீண்டு பூர்வ அடயாளங்களுக்குள் செல்ல வேண்டிய எத்தனிப்பைப் பேகிற கவிதைகளாக இவற்றை வாசிக்க முடியும்.

விளிம்பு நிலை மனிதனின் அழகியலைக் கட்டமைக்கும் இக்கவிதைகளை ஒட்டுமொத்தமாகத் திரட்டிக்கொள்வோமெனில் பின் நவீன சூழலின் குரூரங்களைப் பேசும் மூண்றாமுலக மனிதனின் ABSURD கவிதைகள் என்பதாக வரையறுத்துக் கொள்ளலாம்.ஆழ்மனத்தின் எண்ண ஓட்டங்களைத் தணிக்கை இல்லாமல் வெளித்தள்ளுவதில் எதிர்கொள்கிற அதிர்ச்சியை இக்கவிதைகளின் வாசிப்பிலும் எதிர்கொள்ள நேர்ந்துவிடுகிறது.

- மனோ.மோகன்

(புதுப்புனல் அக்டோபர் 2009 மாத இதழிலிருந்து)