'இத ஏன் நீ என்கிட்ட முதல்லயே சொல்லல?'.

'அதுக்கு சான்ஸே இதுவரைக்கும் வரல‌, சந்த்ரு'.

'புவனா, நாம ரெண்டு வருஷமா லவ் பண்றோம். இந்த ரெண்டு வருஷத்துல ஒரு தடவ கூடவா அதுக்கு சான்ஸ் வரல? ப‌ழ‌க‌ ஆர‌ம்பிச்ச‌ப்போ சொல்லிருக்க‌லாமே'.

'ப்ச், ரெண்டு வ‌ருஷ‌த்துக்கு முன்னாடி நீ யாரோ, நான் யாரோ. அப்போதான் பாத்திருந்தோம். ப‌ழ‌க‌ ஆர‌ம்பிச்சிருந்தோம். ப‌ர்ச‌ன‌லான‌ விஷ‌ய‌த்தை, அதிக‌ம் ப‌ழ‌க்க‌ம் இல்லாம‌ உன்கிட்ட‌ எப்ப‌டி சொல்ற‌துனு சொல்ல‌ல‌டா'.

'ச‌ரி, அதுக்க‌ப்புற‌ம் சொல்லியிருக்கலாம்ல‌'.

' நானே ப‌ழைய‌ விஷ‌ய‌த்தையெல்லாம் ம‌ற‌க்க‌ணும்னு நினைச்சிருந்தேன். உன் கூட‌ ப‌ழ‌க‌ ஆர‌ம்பிச்ச‌த்துக்க‌ப்புற‌ம் அந்த‌ ப‌ழைய‌ நினைப்பெல்லாம் சுத்த‌மா ம‌ற‌ந்துட்டேன்டா. அத‌னால‌ சொல்ற‌துக்கான சான்ஸே கிடைக்க‌ல‌'.

'எல்லாத்துக்கும் ஒரு ரீஸ‌ன் வ‌ச்சிருக்க‌ புவ‌னா'.

'ப்ச், இப்ப‌ என்னை என்ன‌தான் ப‌ண்ண‌ சொல்ற‌'.

'.......' ச‌ந்த்ரு ஏதும் பேசாம‌ல் அமைதியாயிருந்தான். அவ‌ன் மெள‌ன‌த்தைக் க‌லைக்கும் வித‌மாக‌ புவ‌னாவின் அலைபேசி சினுங்கிய‌து. புவ‌னா த‌ன் அலைபேசியை எடுத்து யாரென்று பார்த்தாள். புவ‌னாவின் அம்மா.

'அம்மா, தோ கிள‌ம்பிட்டேன்மா. இன்னும் ஒரு முப்ப‌து நிமிஷ‌த்துல‌ வீட்ல‌ இருப்பேன்மா.... ஆங்.. ம்ம்ம் ஆமாம்மா... ஒகே மா ம்ம்ம் வ‌ச்சிடு பை'.

புவ‌னா அம்மாவிட‌ம் பேசிவிட்டு நிமிர்ந்தாள். ச‌ந்த்ரு இப்போதும் அதே அமைதியுட‌ன் த‌ன‌க்கு முன் விரிந்திருந்த‌ க‌ட‌லை வெறித்திருந்தான். கடல் அலைகள் தங்கள் வழக்கமான பேரிரைச்சலுடன் அவர்கள் பேச்சை அவ்வப்போது கரைக்கு ஒதுங்கி ஒட்டுக்கேட்டுக்கொண்டிருந்தது. ச‌ந்த்ருவின் அமைதி அந்த‌ நேர‌த்தில் அவ‌ளை பெரிதும் க‌வ‌லை கொள்ள‌த் துவ‌ங்கியிருந்த‌து. அம்மா வேறு கூப்பிடுகிறாள். வீட்டிற்கு கிள‌ம்ப‌ வேண்டும். ஆனால், ச‌ந்த்ருவைப் பார்த்தால் இப்போது விடுப‌வ‌ன் போல‌த் தோன்ற‌வில்லை. அவ‌னைச் சொல்லிக் குற்ற‌முமில்லை. அவ‌ளும் ச‌ந்த்ருவும் பேசிக்கொண்டிருந்த‌ விஷ‌ய‌ம் அப்ப‌டி. இர‌ண்டு வ‌ருட‌த்தில் அவ‌ள் அதை அவ‌னிட‌ம் ஒரு முறை கூட‌ சொல்லியிருக்க‌வில்லைதான். இன்னும் ஏதாவ‌து அவ‌ன் கேட்க‌ப்போய் விஷ‌ய‌ம் வேறுவித‌மாய்ப் போய்விடுமோ என்ற‌ ப‌ய‌ம் வ‌ந்திருந்த‌து புவ‌னாவிற்கு.

'நீ கிள‌ம்பு புவ‌னா. அம்மா கூப்பிட‌றாங்க‌ல்ல‌. நீ கிள‌ம்பு. வீட்டுக்கு ப‌த்திர‌மா போன‌தும் என‌க்கு மெஸேஜ் ப‌ண்ணு போதும்' ச‌ந்த்ரு க‌ட‌லைப் பார்த்திருந்த‌ முக‌த்தைத் திருப்பாம‌ல் பேசினான்.  அவன் தன்னைப் பற்றிக் கவலைப்படும் விதமாக, அந்த விஷயத்தைப் பற்றிய உரையாடலுக்குப் பின் இப்போதும் பேசியது அவளுக்கு ஒரு வகையில் நிம்மதியாக இருந்தது. ச‌ந்துரு அப்ப‌டிச் சொன்ன‌து ஒரு வ‌கையில் அவ‌ளுக்கு சாத‌க‌மாய் இருப்ப‌தாய்ப் ப‌ட்ட‌து அவ‌ளுக்கு. மேற்கொண்டு வார்த்தைக‌ள் த‌டிப்ப‌த‌ற்க்குள் இப்போதைக்கு கிள‌ம்பிவிடுவ‌தே உசித‌ம் என்று ப‌ட்ட‌து அவ‌ளுக்கு.

'ச‌ரிடா, நான் கிள‌ம்ப‌றேன். நாளைலேர்ந்து என‌க்கு ட்ரெய்னிங் இருக்கு. அத‌னால‌ வ‌ர‌ முடியாது ஒரு வார‌த்துக்கு. நான் அப்ப‌ப்போ கால் ப‌ண்றேன் ச‌ரியா. பை'.

மெரினா கடற்கரையின் வழக்கமான பரபரப்புக்களுக்கிடையே புவ‌னா க‌ட‌ற்க‌ரை ம‌ண‌லைத் த‌ட்டிவிட்டு எழுந்து த‌ன் ஸ்கூட்டியை நோக்கி ந‌ட‌க்க‌ தொட‌ங்கியிருந்தாள். இந்த நேரத்தில் இப்படிக் பாதி உரையாடலுடன் கிளம்பிப் போவது சரியா என்று தெரியவில்லை. அவன் வேறு ஏதாவது நினைத்துவிடுவானோ என்றும் பட்டது அவளுக்கு. அதே சமயம், இங்கேயே இருந்தால் வேறு ஏதேனும் பேசப்போக பெரிய பிரச்சனையாகிவிடுமோ என்றும் பட்டது. இதற்கு முன் இப்படி பேசிப்பழக்கமில்லாததால், அதற்காகவேனும் கிளம்பிவிட்டது நல்லதென்று பட்டது அவளுக்கு.

ச‌ந்த்ரு, வெகு நேர‌ம் கடலையே வெறித்திருந்தவன், திரும்பி புவ‌னா செல்வதையே பார்த்தான். அவ‌ள் ச‌ற்று தூர‌த்தில் மிள‌காய் ப‌ஜ்ஜி, சொம்சா விற்றுக்கொண்டிருந்த‌ க‌டைக‌ளைச் சுற்றி நின்றுகொண்டிருந்த‌ கூட்ட‌த்தை ஊடுறுவி காணாம‌ல் போகும்வ‌ரை பார்த்திருந்தான்.

இவ‌ள் உண்மையைச் சொல்கிறாளா அல்ல‌து ச‌மாளிக்கிறாளா என்று புரிய‌வில்லை. ஆனால் அவளாக‌ச் சொல்ல‌வில்லைதான். அலுவ‌ல‌க‌ சுற்றுலாவுக்காக‌ ஊட்டி சென்ற‌போது அங்கே டூரிஸ்ட் ஸ்பாட்டில் காமிராவும் கையுமாக‌ போவோர் வ‌ருவோரைக் ப‌ட‌மெடுத்து காசு ச‌ம்பாதிக்கும் சில‌ சிறுவ‌ர்க‌ள் ப‌ழைய‌ குப்பையென‌ வீசிவிட்டுப்போன‌ சில‌ பிலிம் சுருள்க‌ள் ய‌தேச்ச‌யாக‌ இவ‌ன் கால‌டியில் ப‌ட‌, போர‌டித்து உட்கார்ந்திருந்த‌ நேர‌த்தில் பொழுதுபோக்கிற்கு அவ‌ன் சில‌ நெக‌டிவ்க‌ளை, அங்கே கிடைக்கும் ப்ளாஸ்டிக்கினால் ஆன‌ ஃபிளிம் மாணிக்க‌ளில் பார்க்க‌ அதில் புவ‌னாவும் இன்னொரு பைய‌னும் எடுத்துக்கொண்ட‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் சிக்கின. முற்றிலும் தற்செயல் நிகழ்வுதான். தனக்கு இந்த விஷயம் தெரியவரவேண்டும் என்பதற்காகவே இப்படி நடந்ததாக தோன்றியது. எதற்கு இப்படி நடந்தது என்று புரியவில்லை. இது நல்லதற்கா? தீயதற்க்கா? தெரியவில்லை. ஆனால், அத‌ன் மூல‌ம்தான் அவ‌ளுக்கு, த‌ன‌க்கும் முன்பே ஒரு காத‌ல‌ன் இருந்ததும், அவனுடன் ஊட்டி வந்து புகைப்படம் எடுத்துக்கொண்டதும் தெரிய‌ வ‌ந்திருக்கிற‌து. அதைப் ப‌ற்றிக்கேட்க‌ப்போய்த்தான் க‌ட‌ற்க‌ரையில் வைத்து இந்த‌ உரையாட‌ல்.

அந்த‌ப் பைய‌னுட‌ன் க‌ருத்துவேறுபாடு கார‌ண‌மாக‌ பிரிந்திருக்கிறாள். அத‌ன் பிற‌கு ஒரு வ‌ருட‌ம் க‌ழித்துத் த‌ன்னை ச‌ந்தித்திருக்கிறாள். ஆனால், த‌ன‌க்கு ஒரு காத‌ல் முன்பு  இருந்த‌து ப‌ற்றியோ, அது ஊட்டி வ‌ரை சுற்றுலா செல்வ‌து வ‌ரை இருந்த‌து ப‌ற்றியோ, அது பிற்பாடு முறிந்த‌துப‌ற்றியோ அவ‌ள் ஏதும் சொல்லியிருக்க‌வில்லை.  ஏன் சொல்ல‌வில்லை என்பத‌ற்குக் கார‌ண‌ம் பிடிப‌ட‌வில்லை.

அவளின் முந்தைய முறிந்த காதல் பற்றி சொல்லியிருந்தால் தனக்கு அவளை இன்னும் அதிகம் பிடித்திருக்குமோ என்று பட்டது அவனுக்கு. சந்த்ருவிற்கு அவ‌ள் தன் முந்தைய காதல் பற்றிச் சொல்லியிருக்க‌லாம் என்றே ப‌ட்ட‌து. ஆனால் அவ‌ள் சொல்ல‌வில்லை. ஏன் சொல்ல‌வில்லை. சொல்லியிருந்தால் என்ன‌வாகியிருக்கும். த‌ன‌க்கு அவ‌ள் மேல் காத‌ல் வ‌ந்திருக்குமா? இந்த‌க் கேள்விக்குப் ப‌தில் ச‌ர்வ‌ நிச்ச‌ய‌மாக‌ அவ‌ளுக்குத் தெரியாம‌ல்தான் இருந்திருக்க‌வேண்டும். அத‌னால்தான் சொல்ல‌வில்லையோ? யோசித்திருப்பாளோ? எத‌ற்கு சொல்லிக் குட்டையைக் குழ‌ப்ப‌வேண்டும் என்று நினைத்திருக்க‌லாம்? எது எப்ப‌டியோ.

ஆனால் இது நாள்வ‌ரை அவ‌ளைப் ப‌ற்றித் தான் கொண்டிருந்த‌ அபிப்ராய‌ம் ச‌ற்றே மாறித்தான் போயிருக்கிற‌து. இதுவும் ந‌ல்ல‌தா? கெட்ட‌தா? தெரிய‌வில்லை. த‌ன‌க்கு ஏன் இது நிக‌ழ்கிற‌து என்றும் விள‌ங்க‌வில்லை.உண்மையில், இந்த‌ விஷ‌ய‌ம் அவ‌னுக்கு முன்பே தெரிய‌ வ‌ந்திருந்தாலும் அவ‌ன் அவ‌ளைக் காத‌லித்தே இருந்திருப்பான்.அப்ப‌டியிருக்க‌, இந்த‌ விஷ‌ய‌ம் கால‌ந்தாழ்த்தி இப்போது ஏன் தெரிய‌ வ‌ர‌வேண்டும். அதுவும் முற்றிலும் த‌ற்செய‌லான‌ ஒரு ச‌ம்ப‌வ‌த்தின் மூல‌ம். அந்த‌ ச‌ம்ப‌வ‌த்தை நினைத்துப்பார்த்தால் ஏதோ த‌ன‌க்கு இது தெரிய‌வேண்டுமென‌வே நிக‌ழ்ந்த‌து போல‌ இருந்த‌து.

இது நிக‌ழ்ந்த‌பின்ன‌ர் த‌ன‌க்கும் புவ‌னாவிற்குமான‌ காத‌லில் ஏதோ ஒரு செய‌ற்கை அந்நிய‌மாய்ப் புகுந்துவிட்ட‌து போல‌வே இருந்த‌து. அது வெகு தாம‌த‌மாய்த் தெரிய‌ வ‌ந்த‌ உண்மையால்தான் என்றே தோன்றிய‌து. ச‌ந்த்ரூவின் ம‌ன‌த்தால் இந்த‌ செய‌ற்கையை முற்றிலுமாக‌ ஏற்க‌முடிய‌வில்லை. ஊட்டி வ‌ரை சுற்றுலா செல்ல‌வேண்டிய‌ அள‌விற்கு நெருக்க‌மான‌ ஒரு உற‌வை புவ‌னாவால் ம‌ற‌க்க‌ முடிந்த‌தாக‌, அத‌னால் சொல்லாம‌ல் விட்டுவிட்ட‌தாக‌ச் சொன்ன‌தை முற்றிலுமாக‌ ஏற்க‌முடிய‌வில்லை.

தன்னைப் பொருத்தவரை, இது ஏமாற்றமே. அதில் சந்தேகமேயில்லை. தவறு எங்கே நடந்தது? இரண்டு வருடத்திற்குமுன் அவளை சந்தித்தோம். முதலில் பரிச்சயம், நாளடைவில் ஸ்னேகம். ஆனால், தன் பார்வையில், அந்தப் பரிச்சயமோ, ஸ்னேகமோ தன்னையும் அவளையும் மட்டுமே கொண்டிருந்தது. அவளுக்கு அதற்கு முன் ஒரு காதல் இருந்திருக்கும் என்றோ, காதலன் இருந்திருப்பான் என்றோ, அவனுடன் நெருக்கம் அவளுக்கு இருந்திருக்கும் என்றோ தான் நினைக்கக்கூட இல்லை. ஏனேனின் அவள் அப்படி ஏதும் சொல்லவுமில்லை. அப்படி யோசிக்க, எதுவும் நடந்ததாக எதுவும் அப்போது தன் கவனத்திற்கு வர‌வுமில்லை. அப்படியிருக்க அவ்வாறு நினைப்பதோ, யோசிப்பதோ யாருடைய வேலையாக இருக்க முடியும்?

இப்போது அவள் அதிக‌ம் ப‌ழ‌க்க‌ம் இல்லாததால் எப்படிச் சொல்வதென்று சொல்லவில்லை என்று சொல்கிறாள். அப்படியானால், அவள் பரிச்சயமான நேரம், அவளுக்கு அவள் வாழ்க்கையின் முற்பகுதியில் வேறொரு காதல் இருந்திருக்கலாமென்கிற கோணத்தில் யோசிக்க வேண்டியது தன் வேலையா?. ஏனேனில், அப்படி ஆகியிருந்தால், இந்த நொடி இந்த ஏமாற்றமோ, அல்லது அவளுடனான காதலில் ஒரு செயற்கை உணர்வோ இப்போது வந்திருக்காது. ஆனால், அப்படி நான் நினைத்திருந்தால், அவளுடன் தனக்கு காதல் வந்திருக்குமா?

பொதுவாக இந்த வந்திருக்குமா, போயிருக்குமா கேள்விகள் சற்றே சிக்கலானதுதான். இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். ஆனால், எது எப்படி இருந்தாலும் ஏமாற யாரும் தயாராக இல்லை. ஏமாற்றம் யாருக்கும் பிடித்தமில்லை. அவளுடன் பரிச்சயமான நேரம், தான் புதியவன் என்பதால் தன்னிடமிருந்து சில விஷயங்களை அவள் மறைத்திருக்கலாம் என்கிற சிந்தனை, கால ஓட்டத்தில் பிற்பாடு ஒரு ஏமாற்றத்தை தவிர்த்திருக்கும் சக்தி படைத்ததாக அல்லவா இருக்கிறது. அப்படி நான் நினைத்திருந்தால் நிச்சயம் இப்போது இந்த புதிய விஷயம் தன்னை பாதித்திருக்காது என்றே தோன்றியது சந்த்ருவுக்கு.

ச‌ந்த்ரு நீண்டதொரு பெருமூச்செறிந்தான். அவன் முன் கடல் பரந்து விரிந்து கிடந்தது. உஸ் உஸ்ஸென்று அலைகள் கரையோர மனலை நொடிக்கொருதரம் வாரிக்கொண்டிருந்தன. தூரத்தில், இருபதுகளில், ஒரு ஆணும் பெண்ணும் சற்றே இடைவெளி விட்டு நின்று பேசிக்கொண்டிருந்தனர். சந்த்ரு அவர்களையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களினிடையே தெரிந்த இடைவெளி, அவர்கள் வெகு சமீபத்தில் பரிச்சயமானவர்கள் என்று சொல்லாமல் சொல்லியது. சந்த்ரு அவர்களைப்பார்த்து மெலிதாக புன்னகைத்ததை அவர்கள் கவனியாதவர்களாய் தங்களுக்குள் பேசுவதில் சுவாரஸ்யமாய் இருந்தனர். 

 - ராம்ப்ரசாத் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)