முதல்தரமான குதிரை! கால் சுத்தமாக இருக்கின்றது. சவுக்கு ஒடுக்கவே தேவையில்லை. "டிராக்" கம்பீரமாக இருக்கிறது. பக்கத்திலே வண்டி வரும் சத்தம் கேட்டால் கண்களிலே ஒரு மிரட்சி. கால்கள் துடிக்கின்றன. காற்று வேகமாகக் கிளம்புகிறது. முகத்திலே களையும் இருக்கிறது. குதிரை சிலாக்கியமானதுதான். ஆனால் வண்டி மட்டும் ஏற்றதல்ல. ரப்பர் டயர் இருக்கிறது. ஆனால் குதிரையின் போக்கைச் சமாளிக்கும் சக்தி இல்லை வண்டிக்கு. வேறே வண்டியாக மட்டும் இருந்தால், ஜோர்தான்!

மிராசுதார் மீனாட்சிசுந்தரர் அலைந்து திரிந்து, பல சந்தைகளுக்கு ஆள்விட்டுப் பார்த்து, அதிக பொருட்செலவில் பெற்றார் அந்தக் குதிரையை! வண்டி, பரம்பரைச் சொத்து, விற்கவேண்டிய அவசியமில்லை. எனவே, புதிய புரவியைப் பழைய வண்டியிலே பூட்டினார். குதிரையின் விசேஷத்தைப் புகழ்ந்தவர்கள், வண்டியின் வளைவைக் கூறினர். மீனாட்சிசுந்தரரும் "ஆமாம்" என்றார். வேறு வண்டிக்கு ஆர்டர் கொடுத்தார். பட்டறையிலிருந்து புது வண்டி வருவதற்குள் பழைய வண்டியை உபயோகித்துக் கொண்டிருந்தார். வழக்கமாகவே குதூகலமாக வாழ்பவர். மிராசுதார், அவருக்கென்ன ஆனந்தத்துக்குக் குறைவா? அந்த ஊரே அவருடையது; ஆள் அம்பு ஏராளம், வருவாய் அமோகம். வாட்டம் ஏது? வருத்தம் ஏது? வாழ்க்கை அவருக்கோர் விருந்து. அதிலும், புதிய குதிரை கிடைத்த பிறகு ஆனந்தம் முன்பிருந்ததைவிட, மும்மடங்காயிற்று. மிராசுதாரருக்குச் சந்தோஷமூட்டிய குதிரைக்கு மேய்ப்புத் தேய்ப்புக்கு, புல், கொள் வகைக்குக் குறைவா? கோதுமைக் கஞ்சி, சில வேளைகளிலே வேறு வேறு விதமாக வலிவூட்டும் உணவுகள் அந்தக் குதிரைக்கு. அழகான அலங்காரங்கள். இரவிலே பனி படாதிருக்க, பட்டுப்போர்வை. குதிரையின் வாழ்வு குஷிதான்! பாதி இராத்திரி இரயிலுக்குள் பத்தணாவாவது சம்பாதித்துத் தீரவேண்டிய, பாட்டாளிக் குதிரையல்லவே அது. பாடுபட்டப் பலரிருக்கப் பானகம் போன்ற வாழ்வு ருசியைப் பருகிடும் மிராசுதாரரின் குதிரையன்றோ. முதுகிலே அடியோ, முட்டிகளிலே புண்ணோ, கண்ணிலே காயமோ, கடிவாளத்திலே முள்ளோ இல்லை. ஜாம் ஜாமென வாழ்ந்து வந்தது.

மீனாட்சிசுந்தரரின் மகள் மதுரவல்லி, தந்தை அடைந்தது போன்ற சந்தோஷப்பட்டாள். குதிரை மாளிகையிலே குடிபுக வந்ததும், வேலையாட்கள் புடை சூழ அந்தச் சிற்றிடையாள் சென்று, குதிரையின் முதுகைத் தடவிக் கொடுப்பாள். முகத்தைத் தன் மிருதுவான கரங்களால், அணைத்துக் கொள்வாள். முத்தமிடுவாள். அதன் கண் தன்னையே நோக்குவதாகச் சொல்வாள். கழுத்துக்குத் தங்கமணி கட்டவேண்டுமென்று கூறுவாள். வண்டிதான் புராதனம், இதற்கு ஏற்றதல்ல என்றுரைப்பாள். ஊர் முழுவதுமே, இதேபோலத் தான் பேசிற்று. வண்டி பழையது குதிரை புதியது; குதிரைக்கு ஏற்ற வண்டியல்ல என்று. சவாரி மட்டும் நடந்துகொண்டுதான் இருந்தது. "என் அருமை பெருமைகளைக் கண்டு புகழ்கிறீர். வண்டி எனக்கேற்றதல்லவே என்றும் சொல்கிறீர். சொல்லியும் அதிலேயே என்னைப் பூட்டி ஓட்டுகிறீரே இது முறையா?" என்று எப்படிக் கூறும்!

குதிரைக்குத்தான் கூறிடும் திறமையில்லை. குமரிகளுக்கு வாயிருந்தும் தமக்குக் கிடைக்கும் வாழ்க்கை வண்டிகளின் வக்கிரமத்தை எடுத்துக் கூறி, வேண்டாம் என்று கூற முடிகிறதா? குதிரையை இழுத்து வண்டியிலே பூட்டுவதைப் போலத்தான், குமரிகளையும் பிணைத்து விடுகிறார்கள். வாழ்க்கைச் சவாரியும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. விபத்துக்கள் நேரிடும்போது, இருக்கவே இருக்கிறது, "விதி" என்ற வெட்டிப் பேச்சு!

மகாளிப்பட்டி மிட்டாதார், மீனாட்சிசுந்தரரின் தூரபந்து. பழைய பாத்தியதை விட்டுவிடாமல் இருக்கச் செய்வதுடன், நெருங்கிய நேசம் உண்டாகச் செய்யவே மதுரவல்லி உதித்தாள் என்று மாகாளிப்பட்டி மகிபாலர் மனதில் எண்ணினார். முதலிலே அவருக்குத் தன் கடனும், மீனாட்சிசுந்தரரின் அயன் நிலங்களும், இந்த நினைப்பைத் தந்தன. பிறகோர் நாள் மதுரவல்லியையும், கண்டார்; கண்டதும் நினைப்பு உறுதியாய்விட்டது. மதுரவல்லி யாரையும் மயக்க வேண்டுமென்று கருதுபவளல்ல. அப்படி யாரையாவது மயக்கித்தான் வாழ வேண்டுமென்று நிலையா அவளுக்கு! மிராசுதாரரின் ஏக புத்திரி! அவள் மேனியும் முகவெட்டும் அமைந்திருந்த விதம், பிறரை மயக்கும் விதமாக இருந்தது. அதோ கொடியிலே கூத்தாடும் மலரின் மணம், வண்டுகளை இழுக்கவில்லையா? கானாற்றின் ஒலி காட்டு மிருகங்களுக்கு கீதமாகவில்லையா? வானத்திலே ஒளி வீசும் நட்சத்திரங்கள், கண்களுக்கு விருந்தளிக்கவில்லையா? அதுபோலத்தான், மதுரவல்லி காண்போர் கண்களுக்கு விளங்கினாள்.

வெறும் செல்வன் வீட்டுப் பெண்ணல்ல. கொஞ்சம் படித்தவள். அதிகம் தெரியாதென்றாலும், ஆடை அணிகளிலே புது 'பாஷன்', மினுக்குப் பொட்டுகளிலே புதுரகம், ஜடை சீவலிலே புதிய முறை கற்றுக்கொள்ளும் அளவு தெரிந்துவிட்டது. அந்தஸ்து, அழகு, அலங்காரம் என்னும் மும்மணிக்கோவையாளுக்குக் கொவ்வை இதழ், குளிர்மதிப் பார்வை, குறுநகை கோகில த்வனி இவ்வளவும் கூட்டுச் சரக்காயின. மாகாளிப்பட்டியார் மனதிலே அலைமோதியதிலே ஆச்சரியமென்ன! மிட்டாதாரரின் விருப்பத்தை; மிராசுதாரருக்கு முதன்முதல் கூறியபோது அவர் புதுக் குதிரையின் விஷயமாகக் கவனம் செலுத்திக் கொண்டிருந்ததால், "பார்ப்போம்! அதற்கென்ன! செய்வோம்" என்று சம்பிரதாயமாகக் கூறினார். மாகாளிப்பட்டியார் மகா சந்தோஷமுற்றார். இனி நமக்கென்ன குறை! கடனும் தீரும், கனியும் கிட்டும் என்றெண்ணிக் களித்தார். ஆனால் அவர் பழைய வண்டி! மதுரத்துக்கு ஏற்றவரல்ல!

மாகாளிப்பட்டியார் ஜரூராகத் திருமண கோலத்திலே கவனம் செலுத்தி வரலானார். நரைமயிர் கருக்குந்தைலங்களென்ன, நவஜீவன் லேகிய வகைகளென்ன. சில்க் மேலாடைகளும், சீமைக் கமல மோதிரங்களும், சிறிய சைஸ் கைக்கடிகாரமும், சிங்கமுகத் தங்கப்பூண் போட்ட கைத்தடி ஆகியவைகளென்ன, மாகாளிப்பட்டியாரின் மாப்பிள்ளைக் கோலம் மலர்ந்துவிட்டது. மேலும் அவருக்கு அது புதிதுமல்ல; பழக்கமுண்டு! இரண்டாவதாகவே, இந்த இன்பவல்லியைத் தேடினார். முதலாமவள் தனது மூலக்கருத்தை கூறிட மார்க்கமேயின்றி, மூண்ட கோபத்தையும் சோகத்தையும் மூடிமூடி வைத்து, மங்கி மாண்டாள் பாவம்! அதனாலென்ன? அவள் "வினை" அது!

மாகாளிப்பட்டி மகாலிங்க ஐயர் மகாசமர்த்தர். வேத சாஸ்திரத்தில் விற்பன்னர் என்று வேதியக் கூட்டம் கூறும். மற்றதுகளுக்கு என்னது தெரியும் அந்த வேத பாஷை! எனவே "அப்படிங்களா! அவர் முகத்திலே சரஸ்வதி தாண்டவமாடுகிறாள்" என்று கூறினர். அவர் தான் கிளம்பினார், முகூர்த்தம் நிச்சயிக்க. வந்தவருக்கு மிராசுதார் உபசாராதிகள் செய்து குசலம் விசாரித்து குருக்கள் வீட்டிலே போஜனை ஏற்பாடு செய்து வைத்தார். பிராமணாளிடம் விசேஷ மரியாதை இரு குடும்பத்திலும். "இலட்சுமி புத்ராள், ஞானஸ்தாள்" என்று வயிறார உண்ட புரோகிதர் வாயாரப் புகழ்ந்தார். வந்த காரியத்தைக் கூறினார். வம்பு விளைந்ததை மிராசுதார், அப்போதுதான் உணர்ந்தார். "ஏதோ சொன்னேன், ஆனால் மாகாளிப்பட்டியார் பிடிவாதமாக இருப்பாரென்று கருதவே இல்லையே. மதுரத்துக்கும் அவருக்கும் வயதிலே, அதிக வித்தியாசமிருக்குமே" என்று கூறினார். புன்னகை புரிந்தார். புரோகிதர் "வயது வித்தியாசம் பார்த்தால், வம்சாவளிக்கு ஏற்றவிதமாகக் காரியம் நடக்கவேண்டாமோ? வயதைப் பற்றி தள்ளுங்கோ, ஸ்ரீராமரை விட சீதா பிராட்டியார் வயதிலே மூத்தவளென்று தான் இதிகாசம் கூறுகிறது. மாகாளிப்பட்டி சம்பந்தம் இலேசானதல்ல. நீண்ட காலமாகன்னோ நடந்து வருகிறது" என்று சமாதானங் கூறினார்.

வேலையாளொருவன் ஓடோ டி வந்தான் அப்போது. "எஜமான்! பெரிய ஆபத்தாயிடுத்துங்களே! வண்டி மரத்திலே மோதி, தூள் தூளாயிட்டுதுங்கோ, குதிரைக்கும் பலமான அடிப்பட்டதுங்க. எதுவோ ஒரு மாடு மிரண்டு ஓடி வந்துங்க, குதிரை காலைக் கிளப்பியடித்தது. அடக்க முடியலே. வண்டிதான் பழசாச்சிங்களே, மரத்திலே மோதி..." என்று விபத்து விபரத்தைக் கூறிக்கொண்டிருக்கையிலே, மிராசுதார், வேகவேகமாகச் சென்று விபத்து நடந்த இடத்திலே, வண்டியும், குதிரையும் கண்டு கஷ்டப்பட்டார். குதிரை அவரைப் பார்த்த பார்வை, என் மீது தவறு இல்லை! எனக்கேற்ற பாரமான பலமான வண்டியைப் பூட்டவில்லையே, அது உங்கள் தவறு" என்று வாதாடுவது போலிருந்தது. குதிரையின் காலில் பலமான அடி. பிறகு அது சரியான சவாரிக்கு இலாயக்குள்ளதாக இருக்கவே முடியாது என்று மிருக வைத்தியர் கூறிவிட்டார். அருமையான குதிரை போச்சு என்று ஆயாசப்பட்டார் மிராசுதார். ஆயாசமேலீட்டால் அதிகம் பேசவும் முடியாதிருந்த நேரத்திலே மாகாளிப்பட்டி பார்ப்பனர், மிட்டாதாரரின் சம்பத்து விசேஷத்தைப் பற்றிச் சரமாரியாக அளந்து மிராசுதாரரைச் சரிப்படுத்திவிட்டார். கல்யாணத்துக்குத் தேதி குறிக்கப்பட்டது. அந்த வட்டாரமே கண்டு அதிசயிக்கும்படியான ஆடம்பரத்துடன் கல்யாணம் நடந்தது. கல்யாணத்துக்கு வந்தவர்கள் விருந்து, வேடிக்கை, கேளிக்கைகளை அனுபவித்துவிட்டு, காயமுற்ற குதிரையைக் கண்டு பரிதாபப்பட்டு, பின்னர் வீடு சென்றனர். ஐம்பது வயதுக் கிழவருக்கு அந்த இருபதாண்டு இளமங்கையை பெண்டாக்கினதைப் பற்றி, பேச முடியுமா! பெரிய இடமாயிற்றே, நமக்கேன் பொல்லாப்பு! என்று வாயை மூடிக்கொண்டனர். அவர்கள் தான் பேசவில்லை, மதுரவல்லியாவது பேசினாளா? அவளுக்கு மனம் வரவில்லை! கண் மட்டும் இருந்தது, கருத்துக் குறட்டையிலிருந்தது. மிராசுதார் மகள் மிட்டாதாரருக்கு வாழ்க்கைப்படுவது, ஜெமீன் வீட்டுப்பெண், மற்றோர் ஜெமீன் வீட்டில் மருமகளாவது சகஜமான சம்பவம். ஆகவே மாகாளிப்பட்டிக்கு மதுரவல்லி, மனதிலே எந்தவிதமான தொல்லையும் இல்லாமல்தான் பிரவேசித்தாள். பிரவேச விழாவுக்கு மாகாளிப்பட்டியார் பிரத்யேகமான ஏற்பாடுகள் செய்திருந்தார்.

அந்தஸ்துக்கு ஏற்றபடி ஆடம்பரம் இருக்கவேண்டாமா! ஊர்வலம் பிரபல நாதஸ்வரத்துடன்! பெரிய அலங்காரக் கொட்டகையிலே, அன்றிரவு சதிர்க்கச்சேரி. சபையினர் சதிர்க்கச்சேரியைக் கண்டு ரசித்தனர். கலை உணர்வால் அல்ல; ஆடின அணங்குகள், கண்டவரின் ஆசையைத் தமது விழிகளால் கிளறிக்கொண்டிருந்ததால். மாகாளிப்பட்டியார் அன்று அமர்ந்திருந்த காட்சி அற்புதமாக இருந்தது. அவருடைய அந்தரங்கக் காரியதரிசி அனியூர் ஜெமீனில் மானேஜராக இருந்து "டிஸ்மிஸ்" செய்யப்பட்ட, வேதாந்தம் என்னும் பார்ப்பனர். அவர், மாகாளிப்பட்டியார் காதிலே குசுகுசுவென்று பேசிக்கொண்டே இருந்தார். வேதாந்த ஐயரின் பேச்சைக்கேட்டு ரசிப்பதும், கனைப்பதும், மீசையை முறுக்குவதும், ஆடலழகிகளை முறைத்துப் பார்ப்பதுமாக இருந்தார் மிட்டாதார்! சபையிலே இருந்த மற்றவர்கள், மாகாளிப்பட்டியார் தங்களைப் பார்க்காத சமயமாகப் பார்த்து, ஆடலழகிகளைக் கண்டுகளித்தனர்.

அன்றிரவு 12 மணிக்கு மேலாகிவிட்டது விழா முடிய. மாகாளிப்பட்டியாரின் தர்ம பத்தினியான மதுரவல்லிக்குச் சேடிகள், படுக்கை தயாரித்துக் கொடுத்துவிட்டுத் துணைக்கு இருக்க உத்திரவு கேட்டனர். மதுரவல்லி, துணை வேண்டாம்; வேண்டுமானால் கூப்பிடுகிறேன் என்று கூறிவிட்டு, அலுத்து படுத்துவிட்டாள் அழகான மஞ்சத்திலே. விழாவின் விமரிசையிலும், மிட்டாதாரரிடம் பலரும் காட்டிய மரியாதையான போக்கிலும் கவனம் செலுத்திய மதுரவல்லிக்கு, ஒரு சீமாட்டியின் வாழ்க்கைக்குத் தகுந்த இடமே கிடைத்தது என்ற திருப்தி ஏற்பட்டது. தூங்கும்போது மதுரவல்லியின் முகத்திலே திருப்தியின் தாண்டவம் தென்பட்டது.

நடுநசி! தடால் என்ற சத்தம் கேட்டு அலறி எழுந்தாள் மதுரவல்லி! விளக்கைப் பெரியதாக்கினாள். வெடவெடவென்று உடல் நடுங்க, வியர்வையும் கண்ணீரும் பொழிய, பெண் ஒருவள் நிற்கக் கண்டாள். சிமாட்டியின் சத்தத்தைக்கேட்டு வேலையாட்கள் ஓடிவந்தனர் உதவிக்கு. அந்தப்பெண், மதுரவல்லி காலில் விழுந்து கும்பிட்டு, "என்னைக் காப்பாற்றுங்கள்! அவர்கள் கண்களில் நான் பட்டால் என்னைக் கொன்று போடுவார்கள். எனக்கு உயிர்ப்பிச்சை அளியுங்கள்!" என்று அழுகுரலிற் கேட்டாள். வேலையாட்கள் விரைந்து வருவது தெரிந்தது. மதுரவல்லிக்கு அந்தப் பெண்ணிடம் பரிதாபம் பிறந்தது. உடனே, அவளைத் தன் கட்டிலுக்கு அடியிலே ஒளிந்து கொள்ளச் செய்துவிட்டு, அறையின் வாயிற்படி அருகே நின்றுகொண்டு ஓடிவந்த வேலையாட்களை நோக்கி, "என்ன சத்தம்!" என்று கேட்டாள். "இங்கேதான் ஏதோ சத்தம்; யாரோ ஓடிவந்தது போல் ஒரு சத்தம் கேட்டது. அதனால் தான் நாங்கள் வந்தோம்" என்று வேலையாட்கள் கூறினர்.

"புத்தியைக் காணோமே உங்களுக்கெல்லாம், சத்தம் எந்தப்பக்கமிருந்து வருகிறது என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியவில்லையா? ரொம்ப இலட்சணம்! போய் தோட்டத்துப் பக்கம் பாருங்கள்!" என்று மதுரவல்லி கோபமாகக் கூறி வேலையாட்களை விரட்டினாள். அவர்கள் போய்விட்ட பிறகு கதவை மூடித் தாளிட்டுவிட்டு, "எழுந்து வா இப்படி" என்று நிதானமான குரலிலே கூறினாள். கட்டிலடியிலே ஒளிந்து கொண்டிருந்த காரிகை வெளியே வந்தாள். மறுபடி ஒரு தடவை வணங்கினாள்.

"அடி, நீயா? நீதானே சதிர் ஆடினவள்!"

"ஆமாம், அம்மணி! நான் தான் ஆடியவள்"

"மற்றொருவள்?"

"அவள் என் அக்கா! அதாவது கூட ஆடுபவள்"

"சரி! நடு ராத்திரியில் நீ ஓடி வரவேண்டிய காரணம்?"

"ஐயோ! இதைத் தெரிந்து கொள்ளவில்லையா தாங்கள்?"

"ஏதாவது களவாட முயற்சித்து, கண்டுபிடிக்கப்பட்டு, ஓடிவருபவளாக நீ ஏன் இருக்கக்கூடாது?"

"அம்மா! நான் கள்ளியுமல்ல, களவாடவும் இல்லை"

"கதை பேசாதே! உன்னை நான் அந்த வேலையாட்களிடமிருந்து தப்பச் செய்ததாலேயே, உன்னை நான் ஒரு தர்ம தேவதை என்று நம்பிவிடுவேன் என்று நினைக்காதே. நடுநிசியிலே, அலங்கோலமாக இங்கே ஓடி வரவேண்டிய காரணம் என்ன?"

"ஒரு பெண், இந்த நேரத்திலே, இப்படி நடுநடுங்கிக் கொண்டு, அபயமளிக்கும்படி கேட்கிறாள் என்றாள், அதன் பொருளை அறிந்து கொள்ள முடியாதா?"

"கள்ளி! விடுகதை பேசி வீண் பொழுது ஓட்டாதே. ஆடிப் பிழைக்க வந்த சிறுக்கிக்கு அர்த்தராத்திரியிலே நடமாட்டம் ஏன்? உண்மையைச் சொல்."

"ஆடத்தான் நான் இங்கு வந்தேன், ஆடினேன். ஆனால் உன் கணவர் என்னை..."

"உன்னை...? என்னடி உளறுகிறாய்! சொல் சீக்கிரம்."

"இன்றிரவை நான் அவருடன் கழிக்க வேண்டுமென்று கூறி வற்புறுத்தினார்..."

"அவர் வற்புறுத்தவே நீ சாவித்திரிதேவி, இந்தத் தீயகாரியத்துக்கு உட்பட முடியாது என்று கூறிப் பயந்து ஓடோ டி வந்துவிட்டாயா? ஏண்டி, ஏது நீ பலே கைக்காரி போலிருக்கே, யாரிடம் இந்தக் கதை பேசுகிறாய்? ஒரு மிட்டாதாரர் அழைத்தால் உன்னைப் போன்றதுகள், தலை கீழாக நடந்து கொண்டு வரும். என்னமோ அவர் அழைத்தார், வற்புறுத்தினார், நான் மறுத்தேன் என்று பத்தினிப்பல்லவி பாடுகிறாயே; உண்மையைச் சொல்லுகிறாயா, வேலையாட்களைக் கூவி அழைத்து, உன்னைப் பிடித்துக் கொண்டு போய்த் தக்க தண்டனை தரச் சொல்லட்டுமா? இரண்டே நிமிஷம்! இதற்குள் தீர்மானித்துவிடு."

"அந்தக் காமக்குரங்குக்கு ஏற்றவளாகத்தான் வந்து சேர்ந்திருக்கிறாய். என் பேச்சை நம்பாவிட்டால் எனக்கொன்றும் நஷ்டம் இல்லை. பொழுது போக்காகப் பேசிக் கொண்டிருப்போம் வா என்று வற்புறுத்தி அழைத்தான், உன் கணவன், காமவெறி பிடித்த கிழம். கொஞ்ச நேரத்திற்கெல்லாம் என்னை இம்சிக்கத் தீர்மானித்தான். தடுத்துப் பார்த்தேன், தலைவலி என்றேன், தகாது என்றேன், கிழவன் விட மறுத்தான்; வேறு வழி இல்லை, ஓடிவந்தேன் அவனை ஏய்த்துவிட்டு, இது உண்மை!"

"உண்மையா? உன்னைத்தான் கேட்கிறேன். நீ ஏன் அவருடைய இஷ்டத்திற்கு மறுத்தாய்? யார் நம்புவார்கள் இந்தப் பேச்சை? அவர் மிட்டாதாரர், நீ ஒரு விலைமகள். அப்படியிருக்க அவருடைய இஷ்டத்திற்கு நீ மறுக்க வேண்டிய காரணம் என்ன?"

"அந்தக் கிழட்டுக் காமுகனிடம் யாருக்கம்மா இஷ்டம் பிறக்கும்? உன்னைப் போல வேண்டுமானால் அந்தக் கிழவரை கல்யாணம் செய்துகொள்ளச் சில பெண்கள் சம்மதிப்பார்கள். அது வேறு விஷயம். பிரேமைக்குப் பாத்திரமாக முடியுமா அந்தக் கிழவன்?"

"என் எதிரிலே என் கணவரை கிழவர் என்று கூறுகிறாய் துணிச்சலாக! உன்னை என்ன செய்யப் போகிறேன் தெரியுமா?"

"தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமே இல்லை. அந்தக் காமுகனிடமிருந்து எப்படி என்னால் தப்பித்துக் கொள்ள முடிந்ததோ அது போலவே, நீ எனக்கு உண்டாக்க விரும்பினாலும் என்னால் தப்பித்துக் கொள்ள முடியும்."

இந்தப் பேச்சுக்குப் பிறகு, அந்தப் பெண் தைரியம் கொண்டவள்போலக் கட்டிலின்மீது உட்கார்ந்து கொண்டு "இதோ இப்படி வா. நாம் ஏன் சண்டை போடவேண்டும். நீயும் ஓர் அபாக்கியவதிதான். உன் கணவனைக் கிழவன் காமுகன் என்று திட்டிவிட்டேன் என்று கோபிக்காதே, ஆத்திரம் எனக்கு, என்றாலும் அறிவில்லாத பேச்சல்ல நான் சொன்னது. மாகாளிப்பட்டி மிட்டாதார் வயது என்ன தெரியுமா உனக்கு" என்று கொஞ்சம் அன்பு கலந்த குரலிலே கேட்கலானாள். சற்று முன்பு நடுநடுங்கியவள், இவ்வளவு தைரியம் பெற்றதைக் கண்டு மதுரவல்லி ஆச்சரியமடைந்தாள்.

ஒரு சமயம், தைரியம் இருப்பதுபோல் பாசாங்கு செய்கிறாள் போலும் என்று நினைத்துக் கோபக் குரலிலே "என்னிடம் உன்னுடைய மாயமெல்லாம் நடவாது. மரியாதையாக நடந்துகொள். அவர் கிழவர், அதுபற்றி உனக்கென்ன கவலை" என்று கேட்டாள்.

"உனக்குக் கவலை இல்லாமலிருக்கலாம். எனக்கென்னமோ உன்னைப் பார்த்த பிறகு, எப்படி இவ்வளவு இளமையும் அழகும் கொண்ட பெண், அதிலும் ஒரு மிராசுதாரர் மகள், இப்படி ஒரு பொருத்தமற்ற கலியாணத்துக்கு ஒப்புக்கொண்டாள். இவனைக் கட்டிக் கொண்டு, இவள் வாழ்க்கையிலே எப்படிச் சுகமடைய முடியும்? என்ற கவலை அதிகமாகிவிட்டது. அந்தக் கவலையிலே என் கவலையைக்கூட மறந்துவிட்டேன்" என்று பேசியபடி, மதுரவல்லியின் கையைப் பரிவுடன் பிடித்து இழுத்து கட்டிலிலே, தன் பக்கத்திலே உட்கார வைத்துக் கொண்டு, எதிரே இருந்த பெரிய கண்ணாடியிலே தெரிந்த உருவங்களைக் காட்டி, "இப்போது நாம் இருவரும் ஏறக்குறைய சகோதரிகள் போலிருக்கிறோமல்லவா?" என்று கேட்டுக்கொண்டே மதுரவல்லியை அணைத்துக் கொண்டாள். மதுரவல்லியின் ஆச்சரியம் இன்னும் அதிகமாகிவிட்டது.

"சாகசக்காரியடி நீ! என் கோபத்தைக்கூட மாற்றி விடுவாய் போலிருக்கிறதே!" என்று கேட்டுக் கொண்டே ஆடலழகியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளினாள்.

"இதோ இப்போது, உன் விளையாட்டு எனக்கு எவ்வளவோ இன்பமாக இருக்கிறது. அப்பப்பா! நினைத்துக் கொண்டாலே எனக்கு வெறுப்பாக இருக்கிறது, உன் கணவனின் சேஷ்டையை. வயதாகிவிட்டாலே ஆண்களுக்கு இப்படித்தான் பெண் பித்தம் தலைக்கேறிவிடும். குரங்குக் கூத்துக்கள் நடக்கும்" என்று சொன்னாள்.

"அடி! உன் பெயரைக் கூடக் கேட்க மறந்து விட்டேன். ஏதோ குழந்தைப் பருவ முதல் பழகியவர் போல இப்படி விளையாடுகிறோமே" என்று மரகதவல்லி கேட்டுவிட்டுச் சிரித்தாள். உண்மையிலேயே அந்தப் பெண் மஹா மாயக்காரி! எப்படியோ மயக்கிவிட்டாள். கன்னத்தை கிள்ளுகிறாள், கூந்தலைக் கோதுகிறாள், புருவத்தைத் தடவுகிறாள், அணைத்துக் கொள்கிறாள், முத்தம் கூடத் தருகிறாள்! அடா! அடா! இவள் சின்னக்குழந்தையிலிருந்தே மகா குறும்பு போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டாள் மதுரவல்லி. எவ்வளவு கோபம் முதலிலே இருந்ததோ அதைவிட அதிக அளவு சிநேகம் உண்டாகிவிட்டது, அவ்வளவு விரைவிலே. பக்கத்திலே அந்தப் பாவை உட்கார்ந்திருப்பதும், விளையாடுவதும், பேசுவதும், மதுரவல்லிக்கு ஏதோ ஓர் காந்த சக்தி போலிருந்தது.

"என் பெயர் என்ன என்று கேட்கவில்லை, நானும், சொல்லவில்லை. என் பெயர் ஆயிரம் உண்டு. எதைச் சொல்ல உனக்கு" என்று கேட்டாள் அந்த ஆடலழகி.

"போடி குறும்புக்காரி! பெயரைச் சொல்லடி என்றாள் விகடம் பேசுகிறாள். உன் பெயர் என்னடி" என்று கொஞ்சும் குரலிலே கேட்டாள் மிட்டாதாரரின் மனைவி.

"நான் உண்மையைச் சொன்னாலே உனக்கு ஏனோ நம்பிக்கை பிறக்கவில்லை. அடி, பைத்தியமே! நிஜமாகவே சொல்கிறேன், எனக்கு ஒரு பெயர், இரண்டு பெயர் அல்ல, பல பெயரிட்டு என்னை அழைப்பார்கள். ஒவ்வொரு சமயம் ஒவ்வொரு பெயர் எனக்கு" என்றாள் ஆடலழகி.

"சரி சரி! உனக்குப் பூஜை கொடுத்தால் தான் வழிக்கு வருவாய். வேலையாட்களைக் கூப்பிட்டு, இதோ இந்தக் கள்ளி என் அறைக்குள் நுழைந்து, திருடப் பார்த்தாள் என்று சொல்லிவிடுகிறேன். பார் அப்போது உனக்கு நடக்கப் போகிற வேடிக்கையை" என்று மிரட்டினாள் மதுரவல்லி, விளையாட்டாக.

"நீயும் கூப்பிட்டு என்னைப்பற்றிச் சொல்லு, நானும் சொல்கிறேன்" என்று சவால் விடுத்தாள் சாகசக்காரி.

"பழைய கதைதானே! படுக்கை அறைக்கு மிட்டாதாரர் இழுத்தார். பத்தினி நான் பயந்து ஓடிவந்தேன் என்று தானே சொல்லப்போகிறாய்? தாராளமாகச் சொல்லு. மிட்டாதார் பயப்படமாட்டார். மற்றவர்கள் அதுகேட்டு அவருடைய மதிப்பைக் குறைத்து விடமாட்டார்கள்" என்று மதுரம் கூறினாள்.

"அதையா சொல்வேன்? உன்னைப்பற்றியல்லவா ஒரு சேதி சொல்வேன்."

"என்னைப்பற்றி என்ன இருக்கிறது! நீ சொல்ல?"

"எவ்வளவோ இருக்கிறது! இல்லாவிட்டால்தான் என்ன? ஏதாவது ஒரு பழி சுமத்துகிறேன்."

"என் மீது பழி சுமத்தத்தான் முடியுமா? அப்படி என்னடி பழி சுமத்துவாய்? சொல்லடி கேட்போம்!"

"சேச்சே! வேண்டாம். விளையாட்டே வினையாகிவிடும் என்று சொல்வார்கள், வேண்டாம்!"

"சொல்லடி கள்ளி! தலை ஒன்றும் போய்விடாது சொல்லு."

"அவ்வளவு தைரியம், வந்துவிட்டதா உனக்கு? பேஷ்! மிட்டாதாரரின் மனைவி என்ற தைரியம். ஆனால் பாவம், பதறிவிடுவாய் நான் உன் மீது குற்றம் சுமத்தினால்."

"சுமத்து பார்ப்போம். பதறவும் மாட்டேன், கதறவும் மாட்டேன். நான் என்ன குழந்தையா?"

"குழந்தை மட்டுமா நீ! பைத்தியக்காரக் குழந்தை! பக்குவமறியாத பெண்! பயனில்லாத வாழ்க்கை! பரிமளமில்லாத புஷ்பத்தைப் போன்று இருக்கும் உன் வாழ்வு! நீ விஷயமுணர்ந்தவளாக இருந்தால், கிழவனுக்கு வாழ்க்கைப் படச் சம்மதிப்பாயா?"

"என்னடி பெயரைக் கேட்டால், பழிசுமத்துவேன் என்று கூறினாய். என்னடி பழிசுமத்த முடியும் என்று கேட்டால், கிழவன் குமரன் என்று பேசுகிறாய். பேச்சை மாற்றி என்னை ஏமாற்றுகிறாய். உன் பெயர்தான் என்ன சொல்லடி."

"எத்தனை தடவை சொல்வது, எனக்கு ஒரு பெயர் இரண்டு பெயரல்ல, பல உண்டு. என்னைச் சாவித்திரி என்று கூப்பிடலாம், அனுசூயா என்று அழைக்கலாம், வசந்தசேனா என்று சொல்லலாம். சீதா, அல்லி, பவளக்கொடி, ருக்மணி என்று கூப்பிடலாம். இன்று மலர்க்கொடி, நாளைக்கு என்ன பெயர் கிடைக்குமோ தெரியாது!"

"இந்தப் பெயரெல்லாம் உனக்குப் பொருந்தாது. வாயாடி என்று பெயர் வைத்துக்கொள், அதுதான் பொருத்தம்."

இந்தப் பேச்சுக்குப் பிறகு இரண்டு அணங்குகளும், படுத்துத் தூங்கலாம் என்று தீர்மானித்தனர். முதலிலே தூங்கிய மாது மதுரவல்லிதான். மலர்க்கொடிக்குத் தூக்கம் வரவில்லை. கட்டிலின் மீது உட்கார்ந்து கொண்டு தூங்கும்போது கூட அழகுடன் காணப்பட்ட மதுரவல்லியைப் பார்த்தபடி ஆழ்ந்த சிந்தனையில் ஈடுபட்டிருந்தாள்.
*****

பொழுது விடியுமுன், மலர்க்கொடி, தூங்கிக் கொண்டிருந்த மதுரவல்லியை எழுப்பி விடை பெற்றுக்கொண்டு தனது ஜாகைக்குப் போய்விட்டாள். அவள் போன பிறகுதான், மதுரவல்லிக்கு மிட்டாதாரரின் காமச் சேட்டை பற்றிய கவனமும், கோபமும் வந்தன. "அந்தக் கிழம்! காமக்குரங்கு சேட்டைகள் செய்தான்! ஆடவந்தேன் அலங்கோலப் படுத்த நினைத்தான்!" என்று மலர்க்கொடி கூறிய வாசகங்கள் மதுரவல்லி முன்பு உருவெடுத்து நின்று கூத்தாடுவதுபோலத் தோன்றின. "யோக்கியதையற்றவன். விழாவுக்காக ஆட வந்தவளை, அவனுடைய இஷ்டத்திற்கு மாறாக இம்சிப்பதா? அவள் தற்செயலாக என்னிடம் ஓடிவந்து முறையிட்டாள். வேறு யாரிடமாவது சொன்னால், இவருடைய யோக்கியதையைப் பற்றி ஊர் சிரிக்காதா? சேச்சே! இருக்கட்டும்! இருக்கட்டும்! என்னிடம் வருவாரல்லவா, இளித்துக்கொண்டு பேச, அப்போது பேசிக்கொள்கிறேன்" என்றெல்லாம் நினைத்து வருந்தினாள்.

"எங்கேயடி போய்விட்டாய் இரவெல்லாம்?"

"நானா? அக்கா! அந்த வெக்கக்கேட்டை ஏன் கேட்கிறாய்!"

"என்ன நடந்தது? எங்கேயோ தோட்டத்துப் பக்கம் போனாய் என்று எண்ணிக் கொண்டு நான் தூங்கிவிட்டேன். என்ன நடந்தது?"

"என்ன நடக்கும், நமக்கும்! ஆள் விட்டான் அந்தக் கிழவன்."

"எந்தக் கிழவன்?"

"மாப்பிள்ளைக் கிழவன் தான்"

"சீ வாயாடி! மிட்டாதாரரைச் சொல்கிறாயா அப்படி?"

"ஓஹோ! மிட்டாதாராக இருந்தால் வயதானாலும் வாலிபரா? எனக்குத் தெரியாது அந்த நியாயம்! என் கண்ணுக்கு ஒரு கிழ உருவம்தான் தெரிகிறது, அவனுடைய மிட்டா தெரியவில்லை!"

"சரி அழைத்து..."

"அழைத்து, அடி அம்மா மலர்க்கொடி! நீயும் உன் அக்காவும் ஆடின ஆட்டமிருக்கே அதைக் கண்டு நான் ஆனந்தமாகிவிட்டேன். உங்களுக்குத் தேவையான வரம் கேளுங்கள் தருகிறேன் என்று கூறினான். அதுதானே உன் நினைப்பு; பைத்தியம் நீ. அழைத்தான், கட்டிலறைக்கு வா என்று இழுத்தான். அந்தக் கிழக்குரங்கை ஏமாற்றிவிட்டு நான் ஓடினேன்."

"எங்கே ஓடினாய்?"

"அதுதான் வேடிக்கை. அவனுடைய மனைவி இருக்கிறாளே, பாவம், நல்ல வயது, குணமும் அழகும் பொருந்திய பெண், அவள் படுக்கை அறைக்குப் போனேன் தற்செயலாக."

"அடப்பாவி! பிறகு?"

"பிறகு என்ன? அந்தப் பாதுகாப்பு அறைக்குள் அவன் எப்படி வருவான்? விடியும்வரை அவளோடு தங்கி இருந்துவிட்டு வந்தேன்."

"அவள் உன்னை ஒன்றும் கேட்கவில்லையா?"

"ஒன்றா? ஒன்பதாயிரம் கேட்டாள். நானும் உன் புருஷன் யோக்யதையைப் பாரடி என்று சொல்லிவிட்டுத் தான் வந்தேன். அக்கா! காசுக்காக வாழும் எனக்கே அவன் பீடையாகத் தெரிகிறானே, பாவம் அந்தப் பெண் பத்தரை மாற்றுத் தங்கப் பதுமைபோல் இருக்கிறாள், கள்ளமற்ற சுபாவக்காரி, கலகலவெனச் சிரித்துப் பேசுகிறாள், அவளுக்கு எப்படித்தான் மனம் சம்மதிக்கும் இந்தக் கிழக்குரங்குடன் வாழ?"

"அந்த வேதாந்தத்தையும் அவளுக்குப் போதித்துவிட்டு வருவதுதானே, வீண் வேலைக்குத்தான் நீ முதல் தாம்பூலம் வாங்குபவளாச்சே."

மலர்க்கொடி மற்றோர் ஆடலழகியுடன், மிட்டாதாரரின் காமவெறி பற்றியும் தன்நிலை பற்றியும் பேசிக்கொண்டிருப்பாள், இருவரும் சேர்ந்து சிரிப்பார்கள், என்று மதுரவல்லி நினைத்தாள். நினைத்ததும் அந்தக் காட்சியே கண்முன் தெரிவது போலிருந்தது. கோபம் அதிகரித்தது. அன்று பகல் விருந்திலே மதுரவல்லி கலந்து கொள்ளவில்லை. படுக்கை அறைக்கே சாப்பாடு கொண்டுவரப்பட்டது. அதை அவள் தொடவும் இல்லை. மிட்டாதாரர் விருந்தைப் பகிஷ்கரிக்கவில்லை. நடுநிசி விருந்து நடைபெறாததால் இருந்த விசாரத்தை அவர், பான வகைகளால் கழுவி விட்டார். மதுரவல்லி விருந்துக்கு வராமலிருந்தது மட்டும் கொஞ்சம் மனவருத்தமளித்தது.

அன்று பகல், மாளிகையிலே இருக்க மனமின்றி மிட்டாதார், வேட்டையாடச் சென்றுவிட்டார். போகுமுன், சதிராட வந்தவர்களை, அனுப்பிவிடக்கூடாது என்று உத்திரவு பிறப்பித்து விட்டார். மலர்க்கொடியும் மாணிக்கமும், தங்கி இருந்த ஜாகைக்குக் காவலும் போடப்பட்டது. மிட்டாதாரரைத் தேடி அலைந்தார் வேதாந்தாச்சாரி. வேட்டைக்குப் போன விஷயம் தெரிந்தது. காட்டுக்குப்போய்வர மனமின்றி, மாளிகையிலேயே காத்திருந்தார். இருட்டிய பிறகே வந்து சேர்ந்தார் மிட்டாதாரர், இரண்டு காடைகளுடன்! பகலெல்லாம், கோபமும் சோகமும் கொண்டு படுத்து புரண்டிருந்த மதுரவலிக்கு, மாலையிலே ஓர் யோசனை தோன்றிற்று. மிட்டாதாரரின் காமச்சேட்டையைப் பற்றி வெளியே யாருக்கும் கூறாதிருக்கும்படி, மலர்க்கொடியைக் கேட்டுக் கொள்ள வேண்டுமென்று எண்ணினாள் அவள். தன் வேண்டுகோளை நிராகரிக்க மாட்டாள் என்ற நம்பிக்கை உண்டாயிற்று.

"மலர்க்கொடி போய்விட்டாளா?" என்று மதுரவல்லி பணிப் பெண்ணைக் கேட்டாள். போகவில்லை என்பது தெரிந்ததும், "நேற்று இரவு நடந்த விஷயத்தை யாரிடமும் கூறாதே, தயவு செய்து அவருடைய பெயருக்குப் பங்கம் வரக்கூடாது. நமக்குள் ஏற்பட்ட சிநேகத்தினால், உன்னை வேண்டிக்கொள்கிறேன். என் பொருட்டு நீ இரகசியத்தைக் காப்பாற்றுவாய் என்று நம்புகிறேன். நான் அடுத்த மாதம், என் தகப்பனார் மாளிகைக்குப் போகிறேன். தயவு செய்து அங்கே வந்து என்னைக் காண வேண்டுகிறேன். ஒரே இரவிலே நீ என் மனதையே கொள்ளை கொண்டாய் - மதுரவல்லி" என்று கடிதம் எழுதிக் கடிதத்துடன், ஒரு தங்கச் சங்கிலியும் தந்துப் பணிப்பெண் மூலம், மலர்க்கொடிக்கு அனுப்பினாள்.

பணிப்பெண், மலர்க்கொடியிடம் இக்கடிதத்தைக் கொடுக்கும் நேரத்திலே, மிட்டாதாரர் தலைவிரிக்கோலமாக வேதாந்தத்துடன் அங்கு வந்து சேர்ந்தார். வேலைக்காரி பயந்தாள், பதறிக் குளறினாள். கடிதத்தை வாங்கிப் படித்தார் மிட்டாதாரர். "கள்ளி! அடி பாதகி! மோசம் போனேனே!" என்று கூறினார். மலர்க்கொடி தவிர மற்றவர்கள் நடுங்கினர். அவள் மட்டும், அஞ்சவே இல்லை.

"நேற்று இரவு, நீ மதுரவல்லியுடனா இருந்தாய்?" என்று கோபத்தோடு கேட்டார் மிட்டாதாரர்.

"ஆமாம்! நேற்றிரவு முழுவதும், உன் மனைவியுடன் பேசிக்கொண்டிருந்தேன். மிக நல்லவள்" என்று மலர்க்கொடி கூறினாள். அந்தக் குரலிலே ஓர் வித வீரம் தொனித்தது. மிட்டாதாரர் வேதாந்தத்தைப் பார்த்தார். வேதாந்தம் மலர்க்கொடியை முறைத்துப் பார்த்தார்.

"உன் சூது யாருக்கும் தெரியாது என்று நினைத்தாய். எங்களை ஏமாற்றினாய்" என்று கர்ஜித்தான். மலர்க்கொடி சிரித்துக் கொண்டே, "ஏமாந்தீர்கள்! ஏமாற்றவில்லை, அதுவும் இந்தக் கள்ளி, கூறித் தெரிந்துகொண்டிருப்பீர்கள்" என்று கூறிக்கொண்டே, மற்றோர் நடன மாதை நோக்கினாள். கோபத்துடன் அவள், "ஆமாம், நான் தான் உன் சூதைச் சொன்னேன், உன்னுடைய தைரியம் எப்படிப்பட்ட காரியம் செய்தாய்? நினைத்துப்பார்! மிட்டாதாரர் மனைவியின் படுக்கை அறையிலே நேற்றிரவு பூராவும் போயிருந்து கொண்டு..." என்று கூறிக்கொண்டே கண்களைக் கசக்கியபடி நின்றாள்.

"வேதாந்தம்! எனக்கு ஆத்திரம் அடங்காது. இருவரையும், புளிய மரத்திலே கட்டிவைத்துத் தலையாரியைவிட்டு, மிலாரினால் அடித்தாலொழிய என் மனம் திருப்தி அடையாது" என்று மிட்டாதார், வெறிப்பிடித்தவர் போலக் கூறினார்.

"போய், மதுரவல்லியை அழைத்துக்கொண்டு வாரும், வேதாந்தாச்சாரியாரே! சாட்சாத் மிட்டாதாரர், கட்டளை பிறந்துமா, சும்மா இருக்கிறீர்! ஒரு பேச்சு கேட்டாரோ இல்லையோ, உடனே நேற்றிரவு ஓடிவந்தீரே, தோட்டத்துக்கு என்னை அழைத்துக்கொண்டு போக. இப்போது ஏன் மரம்போல நிற்கிறீர்? மதுரவல்லி இந்தக் கிழக்குரங்குடன் வாழ்வதைவிடப் புளிய மரத்திலே கட்டிவைத்து அடிக்கப்படுவது, பெரிய துன்பமல்ல" என்று ஆத்திரமும் ஆணவமும் கலந்த குரலிலே, மலர்க்கொடி பேசினாள். மிட்டாதாரர் எதிரிலே ஓர் ஆண் மகன் கூட இப்படிப் பேசத் துணியமாட்டான். ஒரு பெண், அதிலும் சதிராட வந்தவள், இவளுக்கு எங்கிருந்து இவ்வளவு துணிவு பிறந்தது என்று பணிப்பெண் ஆச்சரியமுற்றாள்.

"இவ்வளவு விபரீதமும் உன்னால் விளைந்தது" என்று மிட்டாதாரர் வேதாந்தத்தின் மீது பாய்ந்தார்.

"மிட்டாதாரரே! என் மீது கோபிக்கப்படாது. சின்னக் குட்டியைத் தோட்டத்துக்கு அழைத்துவரச் சொன்னீர்கள், உத்திரவுப்படி செய்தேன். உங்க இரண்டு பேரையும் தோட்டத்திலே இருக்கச் செய்துவிட்டு நான் பொழுது போக்காகப் பெரியவளிடம் பேசிக்கொண்டிருக்க வந்தேன். அந்தத் தடி முண்டையும் நேக்கு முதலிலே விஷயத்தைச் சொல்லலே, ரொம்ப நேரம் கழித்த பிறகுதான் சொன்னாள். உடனே பதறினேன். அடடா! என்ன அபச்சாரம், என்ன கிரகசாரம் என்று சோகமடைந்தேன். நான் என்ன செய்யட்டும், என்னை க்ஷமிக்கவேணும்" என்று வேதாந்தாச்சாரி கூறிக்கொண்டே மிட்டாதாரரின் காலில் விழப்போனார். மிட்டாதாரரோ அங்கோர் ஆசனத்தில் சாய்ந்தார். தலை மீது அடித்துக் கொண்டார். கடிதத்தை வேதாந்தாச்சாரியிடம் காட்டி "படித்துப் பாரய்யா! என் மானம் போகுதே, உயிர் துடிக்குதே! அந்தப் படுபாவி, மனதைப் பறிகொடுத்தேன் - மறக்காதே - வெளியே சொல்லாதே - அடுத்த மாதம் வா - என்றெல்லாம் எழுதி இருக்கிறாளே. இன்னும் என்ன ருஜு வேண்டும். நான் வாழ்ந்த வாழ்வு என்ன! எனக்கு இப்போது வந்திருக்கும் இடி என்ன! அட ராமச்சந்திரா!" என்று ஆயாசப்பட்டார்.

"கோபப்படாமல் கேட்கவேண்டும் ஒரு விஷயம். கடிதமோ நம்மிடம் இருக்கு. இந்தக் கழுதைகளை விரட்டி விடுவோம். விஷயம் எதுவும் வெளிவர மார்க்கமில்லை. வீணாக மனக்கிலேசம் அடையத் தேவையில்லை" என்று வேதாந்தாச்சாரியார் கூறினார். மிட்டாதாரரின் பெருமூச்சு, அது பயனில்லாத யோசனை என்பதை அறிவித்தது.

"நீ இரு இங்கே. இதோ நான் வருகிறேன்" என்று கூறிவிட்டுக் கடிதத்துடன் ஓடினார் மிட்டாதாரர் மதுரவல்லியின் அறைக்கு. கதவு உட்பக்கம் தாளிடப்பட்டிருந்தது. தடதடவெனத் தட்டினார். கதவு திறக்கப்பட்டது. தன் எதிரிலே, மிகக் கோபத்துடன் மிட்டாதாரர் நிற்கக் கண்டாள் மதுரவல்லி. அவரைக் கண்டதும் அடக்கி வைத்திருந்த கோபம் கரையைப் பிளந்துகொண்டு வரும் வெள்ளம் போலாகிவிட்டது. மீண்டும் கதவை மூட முயற்சித்தாள். மிட்டாதாரர், முரட்டுத்தனமாகத் தடுத்து "கள்ளி! உன் வேலையை இங்கே காட்டாதே!" என்று மிரட்டினார்.

"நீர் ஒரு மிட்டாதாரர், மிரட்ட தெரியும் உமக்கு. நான் ஒரு மிராசுதாரர் மகள், எனக்கு இந்த மிரட்டல் பார்த்துப் பார்த்துச் சலித்துப்போன காட்சி. என்னிடம் காட்டவேண்டாம் உமது வீராவேசத்தை" என்று உறுதி கலந்த குரலிலே, தீப்பொறி பறக்கப் பேசினாள் மதுரவல்லி. மின்சாரத்தால் தாக்குண்டவர் போலானார் மிட்டாதாரர். கோபம் பயத்துக்கு இடமளித்தது. "இவள் சாமான்யமானவளல்ல! பயம் காணோம்! பதறக்காணோம்! நடப்பது நடக்கட்டும் என்ற துணிவு கொண்டவளாக இருக்கிறாள்" என்று தோன்றிற்று. திகிலும் அதிகரித்தது. கடிதத்தைக் காட்டி, "நீதானே இதை எழுதினாய்?" என்று கேட்டார். "ஆமாம்" என்று சுருக்கமாகப் பதிலளித்தாள் மதுரவல்லி. "ஏன்" என்று மறுகேள்வி கேட்டார் மிட்டாதாரர். அறைக்கு வெளியே விழுந்தடித்து ஓடும்படி, வேகமாக கதவைச் சாத்தினாள். கதவு மோதி மிட்டாதாரர் அறைக்கு வெளியே விழ, கதவைத் தாழிட்டுக் கொண்டாள் மதுரவல்லி. கண்களிலே உதிரத் தொடங்கிய நீரையும் துடைக்கவில்லை.

விழா முடிவதற்குள், தனக்குப் பழக்கமான ஒரு உருப்படியைத் தேடிக்கொண்டு போயிருந்த மிராசுதாரர் மீனாட்சி சுந்தரர், மிட்டாவுக்கு அதே நேரத்தில் தான் வந்து சேர்ந்தார். மிட்டா மாளிகையிலே ஒரே அமர்க்களமாக இருக்கக் கண்டார். சதிராட வந்தவளுக்கும் மிட்டாதாரருக்கும் சண்டை என்று மட்டும் இருந்தால், விஷயம் விளங்கிவிட்டிருக்கும். மதுரவல்லிக்கும் மிட்டாதாரருக்கும் சண்டை என்றாலும் பொருள் விளங்கும். இந்தச் சண்டையோ மிட்டாதாரர், மதுரவல்லி, மலர்க்கொடி மூவருக்குள் என்கிறார்கள். இதற்கு அர்த்தமே விளங்கக் காணோம் என்று ஆச்சரியமடைந்த மிராசுதாரர், மிட்டாதாரரிடம் விஷய விளக்கம் கேட்டார். தகப்பனார் வந்த விஷயம் தெரிந்ததும், மதுரவல்லி அறையைவிட்டு வெளியே வந்தார்.

தகப்பனாரைப் பார்த்து, "அப்பா! இனி இங்கே நான் இருக்க முடியாது" என்று கூறினாள். "உன்னை இங்கே மானங்கேட்டு வைத்திருக்க எந்த மடையனும் சம்மதிக்கப் போவதில்லை" என்று மிட்டாதாரர், போர் முரசு கொட்டினார். மிராசுதாரர் வாள்வீச்சு ஆரம்பித்தார். "நாக்கை அடக்கிப் பேச வேண்டும். நான் கோபக்காரனல்ல! ஆனால் கோபம் வந்துவிட்டதோ பிறகு நான் மனிதனல்ல" என்றார் மிராசுதார். மகள் பக்கம் சேராமல் இருப்பாரா தகப்பனார். "ஊர் சிரிக்கும் உன் பெண் யோக்யதை தெரிந்தால், இந்தக் கடிதத்தைப் பார்" என்று கூறிக்கடிதத்தைக் கொடுத்தார். மிராசுதாரரிடம் மிட்டாதாரர் கொடுத்த கடிதத்தைப் படித்துவிட்டுக் கொஞ்சம் பதறி மகளைப் பார்த்து "நீயா இது போல எழுதினாய்? யாருக்கு?" என்று கேட்டார் மிராசுதாரர். வேதாந்தாச்சாரி அதே சமயத்தில் மலர்க்கொடியைப் பிடித்து இழுத்துக்கொண்டு வந்தார் களத்துக்கு.

"இவளுக்குத்தான்" என்று மதுரவல்லி பதிலளித்தாள் நிதானமாக.

"சதிர் ஆடினவள் தானே" என்று கேட்டார் மிராசுதாரர் குழம்பிக்கொண்டே.

"ஆமாம் அப்பா! சதிராடிய இவளை நடுநிசியிலே இந்த யோக்கியர் சரசமாட அழைத்தார். இவள் என் அறைக்குள் ஓடி வந்துவிட்டாள்" என்று கூறினாள் மதுரவல்லி.

மிட்டாதாரரை மிராசுதாரர் முறைத்துப் பார்த்தார், "இது யோக்யதையா?" என்று கேட்பதற்கு பதிலாக.

"இவள் தங்கமானவள்? வேடிக்கைக்காரி இரவு முழுவதும் என்னிடம் தமாஷாகப் பேசிக்கொண்டிருந்தாள். வெளியே போய் இவருடைய யோக்யதையைச் சொல்லிவிட்டால், மானம் போகுமே என்பதற்காக, நான் கடிதம் கொடுத்தனுப்பினேன்" என்று மதுரவல்லி கூறினாள். மறுபடியும் மிராசுதாரர் மிட்டாதாரரை முறைத்துப் பார்த்தார். "உன்னுடைய மானத்தைக் காப்பாற்றத்தானே என் மகள் முயன்றாள், இதற்கு அவள் மீது கோபிக்கிறாயே முட்டாள்" என்று பார்வை பேசிற்று.

"என்ன இரவெல்லாம் அவளுடன் பேசிக்கொண்டிருந்தாய் நீ?" என்று மிட்டாதாரர் மலர்க்கொடியைக் கேட்டார். அவள் புன்னகையுடன், "பல விஷயங்கள் பேசினோம். உன்னைப்பற்றி, உலகத்தைப்பற்றி, கிழவனுக்குக் குமரி வாழ்க்கைப்படுகிற வேதனையைப்பற்றி பல விஷயம் பேசினோம். மிட்டாதாரரே! எனக்கு நேற்றிரவுதான் ஆனந்த இரவு? அவளுக்கும் இன்ப இரவு அது ஒன்றுதான்! மீண்டும் எங்கள் இருவருக்கும் அந்த இன்ப இரவு கிடைக்காது" என்று மலர்க்கொடி கூறினாள். குரலிலே சோகம் கப்பிக்கொண்டிருந்தது. புதுமையாகவுமிருந்தது மதுரவல்லியின் செவிக்கு.

"இதற்கு ஏன் இவ்வளவு பிரமாதப்படுத்துகிறீர்?" என்று மிட்டாதாரரை மிராசுதாரர் கேட்டார். மிட்டாதாரர் வேதாந்தத்தையும் மலர்க்கொடியையும் மாறிமாறிப் பார்த்தார் மிரட்சியுடன். விளக்கம் ஏதும் கூறவில்லை. மிராசுதாரருக்குக் கோபம் அதிகரித்தது.

"வயது ஆயிற்று, இவ்வளவு. கிளிபோல எனக்கு ஒரே மகள் உனக்குக் கொடுத்தேன். நீ சதிராட வந்தவளைச் சரசமாட அழைத்தாய். அவளுக்கு உன் கிழச்சேட்டை பிடிக்கவில்லை. அவளைச் சமாதானப்படுத்தினாள் என் மகள். அதற்கு அவள் மேல் பாய்கிறாய் நாய்போல. உனக்கு மனைவி ஒரு கேடா?" என்று மாளிகை அதிரும்படி கூவினார். தன் மிராசு ஆட்களை அழைத்தார். இரட்டை வண்டிகள் தயாராயின!

வேதாந்தமும் மிட்டாதாரரும் குசுகுசுவென்று பேசலாயினர்.

"எப்படி விஷயத்தைச் சொல்வது?"

"சொன்னால் நமக்குத்தானே மானக் குறைவு."

"சொல்லாவிட்டால் மிராசுதாரர் கோபம் அடங்காதே."

"சொல்லிவிட்டால், நம்மைப்பற்றி என்ன நினைப்பார்?"

"கோபித்துக்கொண்டு பெண்ணை அழைத்துக்கொண்டு போய்விடுகிறாரே, பிறகு அனுப்பாவிட்டால் என்ன செய்வது?"

"கோபம் குறைந்த பிறகு அனுப்புவார் என்று சும்மா இருந்து விடுவோமா இப்போது."

"நாம் சும்மா இருந்துவிட்டால், விஷயம் அவனாலேயே தெரிந்துவிட்டால்."

இவ்விதம் வேதாந்தமும், மிட்டாதாரரும் மந்திராலோசனை நடத்திக்கொண்டிருக்கும்போதே மிராசுதாரர், பிரயாணத்துக்குத் தயாராகிவிட்டார். மதுரவல்லி ஒரு வண்டியிலே அமர்ந்துகொண்டு மலர்க்கொடியையும் கூட வரும்படி அழைத்தாள். மிட்டாதாரர் கலங்கினார். மிராசுதாரரிடம் ஓடினார். "நான் பிறகு சொல்கிறேன்! தயவு செய்யுங்கள்! உங்கள் காலில் விழுகிறேன். பெண்ணை வேண்டுமானால் அழைத்துக்கொண்டு போங்கள். இந்த மலர்க்கொடியை மட்டும் கூட அழைத்துச் செல்லாதீர்கள். என் பேச்சை இந்த ஒரு விஷயத்திலே கேளுங்கள்" என்று கெஞ்சினார்.

"பைத்தியக்காரன் நீ, உன் பேச்சும் பார்வையும் நடத்தையும் எனக்குத் துளிகூடப் பிடிக்கவில்லை. மலர்க்கொடி சம்மதித்தால் நீ மகராஜனாக நிறுத்திக்கொள்" என்று மிராசுதாரர் கூறினார். இவ்வளவு பகிரங்கமான பிறகுகூட, மலர்க்கொடியிடம் மோகம் பிடித்து இவன் அலைகிறானே என்று மிராசுதாரருக்குக் கோபம் அதிகப்பட்டது. மலர்க்கொடி, மறுத்துப் பேச முடியவில்லை. மதுரவல்லி, அவளை அணைத்துக்கொண்டு, "வந்தால்தான் விடுவேன்" என்று வற்புறுத்தினாள். வண்டி புறப்பட்டது! "சக்கரத்தின் அடியிலே படுத்துச் சாகிறேன்" என்று கூறினார் மிட்டாதாரர். அப்படியே செய்துவிடுவார் போலுமிருந்தது.

"இதேது சனியனாகப் போச்சு! ஏனய்யா இப்படி உயிரை வாங்குகிறீர்? உமது போக்கே மகா மோசமாக இருக்கிறதே. மலர்க்கொடியை நான் அழைத்துக்கொண்டு போய் உன்னைப் போலக் காமக்கூத்தாடவா எண்ணுகிறேன். விடு சக்கரத்தை. மகளோடு அவள் இருக்கப் போகிறாள் இரண்டோ ர் நாள்" என்று சமாதானமாகக் கூறினார் மிராசுதார்.

"அதுதான் கூடாது. என் பேச்சைத் தட்ட வேண்டாம். உங்கள் மகளோடு, மதுரவல்லியோடு, அவனை..." என்று அழுகுரலில் கூறினார் மிட்டாதாரர்.

"அவனையா? எவனை" என்று கேட்டார் மிராசுதாரர். மிட்டாதாரருக்கு நிஜமாகவே பைத்தியம் பிடித்துவிட்டது என்று தீர்மானித்து. மிட்டாதாரர் மிராசுதாரின் கேள்விக்குப் பதில் கூறமுடியாமல், மலர்க்கொடியைச் சுட்டிக் காட்டினார்.

"இவளைத்தானே அழைத்து..."

"இவனைத்தான்"

"இவனா?"

"ஆமாம்! மலர்க்கொடி, பெண்ணல்ல!"

மாமனார் மருமகப்பிள்ளையின் உரையாடலிலே வேதாந்தச்சாரி கலந்து கொண்டு, மிராசுதாரைத் தனியாக அழைத்து "கோபப்படாம என் வார்த்தையைக் கேளுங்கோ. மலர்க்கொடி பெண்ணல்ல, ஆண்! மனமோகன் தாஸ் கம்பெனியிலே ஸ்திரீபார்ட் போடுபவன். அசல் பெண் போலவே வேஷம், பேச்சு, நடிப்பு இருக்கும். அவனுடைய ஆசை நாயகியும் அவனும், நேற்றுச் சதிராடினா. அவ பேர் மாணிக்கம்; இவன் பேர் சீதாபதி. இது எனக்கு நேற்று தெரியாது, அவருக்கும் தெரியாது. உம்ம குழந்தைக்கும் தெரியாது. சதிராடும்போது சகலரும் இவனை மாணிக்கத்தின் தங்கை என்றே எண்ணிக்கொண்டனர். மிட்டாதாரரும் அப்படியே எண்ணித்தான் இஷ்டப்பட்டார். தோட்டத்துக்கு வரச்சொன்னார். இவன் போனான். மிட்டாதாரர் தமது இச்சையைச் சொன்னதும் பயந்துபோய், அவரைவிட்டு ஓடிப்போய், மதுரவல்லி அம்மையார் அறையிலே போய்ச் சேர்ந்தான். அங்கேயும் அம்மா இவனைப் பெண்ணென்றே எண்ணிக்கொண்டு அபயம் அளித்தார்கள். இரவெல்லாம் அங்கேயே இருந்திருக்கிறான். நேக்கு இவன் பெண்ணல்ல என்ற விஷயத்தை மாணிக்கம் சொன்னாள். பிறகு மிட்டாதரருக்குத் தெரிந்தது. ஒரு இரவு முழுவதும் மதுரவல்லி அம்மையாரின் கொட்டடியிலே இருக்க நேரிட்டது தெரிந்து மிட்டாதாரருக்குக் கோபம் வந்தது. அதே சமயம் இந்தக் கடிதம் வந்தது. எரிகிற நெருப்பிலே எண்ணெய்போலாயிற்று" என்று கூறினார். பிரமித்துப் போனார் மிராசுதாரர். அதே சமயத்திலே, சீதாபதி மதுரவல்லியிடம், மெள்ள மெள்ள விஷயத்தை விளக்கி விட்டான். மதுரவல்லி ஆச்சரியமுற்று, சீதாபதியை விறைக்க விறைக்கப் பார்த்தாள். எவ்வளவு நேர்த்தியான நடிப்பு! மலர்க்கொடி, ஆண்! அவனுடன் ஒரு இரவு முழுவதும், விளையாடினோம், அணைத்தான், கன்னத்தைக் கிள்ளினான், முத்தம் கூடக் கொடுத்தானே! சாகசக்காரக் கள்ளன்!! - என்று மதுரவல்லி எண்ணினாள். கோபம், அதைத் துரத்தி அடிக்கும் வேகத்திலே ஆச்சரியம், அந்த ஆச்சரியத்தை அப்புறப்படுத்தி விட்டுப் பரிதாபம், அந்தப் பரிதாபத்தைப் பறக்க அடித்தது பிரேமை!

"என் மீது தப்பு இல்லை. நிலைமை அப்படியாகிவிட்டது. இப்போது உன் தகப்பனாரிடம் மிட்டாதாரர் கூறிவிட்டிருப்பார். நீங்கள் போய்விட்ட பிறகு, என் வேஷத்தைக் கலைத்துவிட்டு, ஆத்திரம் அடங்கும் மட்டும், என்னை ஆட்களை விட்டு, அடிக்கச் சொல்வார்கள். மதுரவல்லி! என் வாழ்க்கையே விசித்திரமானதுதான்! இரவு நான் இராணி! பகலிலே, ஏழை! இரவு வேளைகளிலே மாளிகை, உப்பரிகை, தாதிகள், மண்டியிடும் மன்னர்கள்! பொழுது விடிந்ததும், பழையபடி உழைப்பாளி! இந்த விசித்திரத்தை எல்லாம்விட, நேற்று எனக்கு இன்ப இரவு. இனி எனக்கு வரப்போகிறது, இடி மேல் இடி. ஒரு வேளை மரணமே வந்தாலும் வரக்கூடும் மதுரவல்லி! நான் வேண்டுமென்றே உன்னை ஏமாற்றினேன் என்று மட்டும் எண்ணாதே. என்னை மன்னித்துவிடு. நான் நிரபராதி!" என்று உருக்கமாகக் கூறினான் சீதாபதி.

"நீயா நிரபராதி" என்று கேட்டாள் மதுரவல்லி, கோபத்துடன் அல்ல, புன்சிரிப்புடன், புதுப்பார்வையுடன்.

விஷய விளக்கம் பெற்ற மிராசுதாரர், வண்டி அருகே வந்தார். "இறங்கு கீழே" என்று கொஞ்சம் கண்டிப்பான குரலிலே கூறினார், சீதாபதியை நோக்கி. மதுரவல்லியைப் பார்த்து, "அம்மா! மலர்க்கொடி இங்கே இருக்கட்டும் நான் விஷயத்தைப் பிறகு சொல்கிறேன்" என்று மகளிடம் சொன்னார். மதுரவல்லி, "எனக்கே விஷயம் தெரியும், இப்போதுதான்! ஆனால் அப்பா! இவளை இங்கே நிறுத்திவிட வேண்டாம், கொன்று விடுவார்கள்" என்று கூறினாள்.

மலர்க்கொடியை, மிராசுதாரர் தன் வண்டியிலே ஏற்றிக் கொண்டார். வண்டிகள் புறப்பட்டன. முன்னால் நாலு காவலாளிகள் தீவர்த்தி சகிதம் கிளம்பினர். அவை போகும் திக்கு நோக்கியபடி திகைத்து நின்றார் மிட்டாதார்.

*****

மதுர மனோரஞ்சி சபையின் பிரதம நடிகராகச் சீதாபதி புகழ்பெற்றார். "தெரியுமோ விஷயம்! சீதாபதிக்கு, வரப்பிரசாதம், மதுரவல்லித் தாயார் கடாட்சத்தால் கிடைத்தது" என்று ஊரிலே, பலர் வம்பு பேசினர். அதாவது சீதாபதி என்ற நடிகனுக்கும் மிராசுதாரர் மகள் மதுரவல்லிக்கும் தொடர்பு என்று வம்பளப்பு! அதனுடைய உண்மை யாருக்குத் தெரியுமோ! மதுரவல்லி மட்டும், கடைசிவரை மிட்டாதாரர் மாளிகைக்குப் போக மறுத்துவிட்டாள்! மதுர மனோரஞ்சித சபை நாடகங்களுக்குப் போவதற்கும் தவறுவதில்லை!! அந்தக் கம்பெனியார், "காமக் குரங்கு" என்ற நாடகத்தை எந்த ஊரிலே நடத்தும்போதும், மதுரவல்லியைக் காணலாம். அந்த நாடகத்தை நடத்தாமலிருக்கச் செய்ய மாகாளிப்பட்டி மிட்டாதாரர் எவ்வளவோ முயன்றார், முடியவில்லை என்றும் ஊரிலே வதந்தி. ஆனால் அந்த நாடகம்தான் அக்கம்பெனியின் முதல்தர நாடகம், வைர விழா நாடகம்! அவ்வளவு ஆதரவு அதற்கு!