1. கதையின் களம்- லிபரல் பாளையம். லிபரல் பாளையம் என்றதும் அது எங்கேயிருக்கிறது என்று உலக வரைபடத்தை விரித்துவைத்து பூதக்கண்ணாடியின் துணைகொண்டு தேடுவதை விடுத்து எடுத்தயெடுப்பில் நேரடியாக கதையைப் படிக்கத் தொடங்குதல் நலம். இந்த நாடு மூன்றுபக்கமும் சூழ்ந்திருக்கும் கடலில் மூழ்கப் போகிறதா அல்லது நாலாப்பக்கமும் சூழ்ந்திருக்கும் கடனில் மூழ்கப்போகிறதா என்ற பட்டிமன்றங்களும் பந்தயங்களும் பலகாலமாய் நடந்துகொண்டிருந்த நிலையில், குளோபலாண்டி சுவாமிகளின் அருளுரையின் பேரில் இந்தநாட்டின் பெயர் லிபரல் பாளையம் என்று மாற்றப்பட்டதை தாங்கள் ஏற்கனவே அறிவீர்கள் (காண்க- லிபரல்பாளையம் கட்டப்பஞ்சாயத்தார்க்கு காவனோபா வழங்கியத் தீர்ப்பு- ஆதவன் தீட்சண்யா ).

Bush dollar

2. கதையின் காலம்- கி.பி.2008 தான் என்று திட்டவட்டமாக சொல்லிவிட முடியாது. அதற்கும் முன்பிருந்தே லிபரல்பாளையத்தை உருவாக்கும் முயற்சியில் ஆட்சியில் பங்குபற்றியிருந்த பலரும் முயற்சித்தே வந்துள்ளனர். ஆனால் 2008ல் தான் முழுமையாக தமக்குத்தாமே விலைகூறிக்கொள்வதில் வெற்றி பெற்றுவிட்டதாக அறிவித்துக் கொள்ள முடிந்துள்ளது.

3. கதைமாந்தர்- இப்பத்தியில் குறிப்பிடப்படுபவர்கள் கதாநாயகர்/வில்லன்/ வில்லனின் கையாள்/ காமெடியன் என்று எந்தப் பாத்திரத்திற்கும் பொருந்தும் பாங்குகளை பயின்று பெற்றிருப்பவர்கள்.

அ) இவர்களில் முதலாவதாய் வருகிற வெளியுறவுத்துறை அமைச்சர் உண்மையில் பரிதாபத்திற்குரியவர். அரசியலில் அவர் எப்போதும் மாப்பிள்ளைத் தோழன் என்றே அழைக்கப்படுகிறவர். தான் ஒருபோதும் மாப்பிள்ளையாக முடியாது என்ற கவலை அவரை நிரந்தரமாய் பீடித்திருக்கிறது. இவரது பெயரை வேண்டுமானால் பி.எம் என்று சுருக்கியழைக்க முடியுமே தவிர ஒருநாளும் இவர் பி.எம்மாக முடியாது என்பது உலகறிந்த ரகசியம். சிக்கலான பிரச்னைகளை விவாதிக்க வேண்டி வரும் போதெல்லாம் நாக்கு சுளுக்கிக்கொண்டதாக ஆஸ்பத்திரியில் போய் பிரதமர் படுத்துக் கொள்ள அவருக்காக இவர் பேசி பலரிடமும் வாங்கி கட்டிக்கொள்ளும் வழக்கம் இவரது இயல்பிலேயே இருக்கிறது.

ஆ.) மத்திய சுகாதார அமைச்சர். பொதுஇடத்தில் தும்மக்கூடாது என்று தடைச்சட்டம் கொண்டுவந்ததற்காக பரபரப்பாக பேசப்பட்டவர். இந்த தடைச்சட்டத்தை கொண்டு வருவதற்கு அவர் முன்வைத்த வாதங்களுக்கு எந்த அஞ்ஞான, விஞ்ஞான, மெய்ஞான அடிப்படையும் இல்லையெனவும், தும்மல் தடுப்பு மருந்துக் கம்பெனியொன்று வழங்கிய ‘மொய்’ஞானமே காரணமென்றும் புலனாய்வுப் பத்திரிகைகள் அம்பலப்படுத்தியதை உலகறியும். எல்லா மந்திரிகளையும் போலவே பாத்ரூமைத் தவிர மற்றெல்லா இடங்களுக்கும் தொண்டர்கள் புடைசூழ செல்வதையே இவரும் வழக்கமாகக் கொண்டிருப்பவர். ஏழேழு தலைமுறைக்கு சம்பாதித்துவிட்ட நிலையில், இதுவரை சம்பாதித்ததை காப்பாற்றிக் கொள்ளவாவது மந்திரியாக நீடித்திருக்க வேண்டும் என்ற பதைப்பில் இருப்பவர்.

இவரது தந்தையார் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான். இவரது பல்வேறு உரைகளை நீங்கள் தொலைக்காட்சிகளின் காமெடி டைம் நிகழ்ச்சிகளில் கண்டு களித்திருக்கலாம். ஆயிரம் கோடி ரூபாயில் ஒரு கம்பெனி ஆரம்பிக்கலாம் என யோசிக்காமல் அம்பது ரூபாயில் ஒரு கட்சியைத் தொடங்கி சகல அதிகாரங்களையும் வருமானங்களையும் அதன் வழியாகவே தேடியடைந்திருக்கும் அரசியல் வித்தகர்.

இ) அடுத்து வருகிற தொலைதொடர்புத்துறை அமைச்சர் பற்றி சொல்வதற்கொன்றுமில்லை. அவரது கட்சி மந்திரிமார்களின் பெரிய குரூப் போட்டோவின் கடைசிவரிசைக்குத் தள்ளப்பட்டிருந்தவர். கட்சித்தலைவரின் பங்காளி பாகாளிச் சண்டையில் திடுமென ஒருநாள் முன்வரிசையில் நிறுத்தப்பட்டவர். தொலைத்தொடர்புத்துறைக்கு பொறுப்பேற்றதிலிருந்து அதை தொலைத்துக் கட்டும் ஊழல்களில் ஈடுபடவே நேரம் போதாமல் அல்லாடிக்கிடக்கிற இவரும் இக்கதையில் முக்கிய பங்கு வகிக்கிறவர்.

ஈ) உள்துறை அமைச்சரின் பாடு அத்தனை எளிதானதல்ல. அவர் முந்நாளைய நிதிமந்திரி என்ற வகையிலும், இந்நாள் உள்துறை அமைச்சர் என்ற அடிப்படையிலும் நம் கதைக்குத் தேவைப்படுகிறவர். அதிமுக்கியமான கேள்விகள் எதற்கும் பதில் சொல்லாமல் அடுத்த வேலையைப் பார்க்கப் போய்விடுவதுதான் அவருடைய சாமர்த்தியமாய் இருக்கிறது. என்ன இருந்தாலும் பிரிட்டனில் படித்த அறிவாளியாயிற்றே...? இப்படி மானங் கெட்டுப் பிழைக்கவா அங்கெல்லாம் போய் படித்தது எனக் கேட்டால், படித்ததே மானங்கெட்டு பிழைப்பது எப்படி என்பதைத்தான் என்று முதலாளிகள் மாநாட்டில் வெளிப்படையாக கூறி கைத்தட்டல் பெறுகிறவர். தங்கள் நாட்டில் கள்ளநோட்டு புழங்குவதற்கு பாகிஸ்தானை இந்தியா குற்றம் சாட்டிவிடுவதைப்போல, நாமும் எல்லாத்துக்கும் காரணம் அல்கொய்தாதான் என்று அடித்துவிட்டால் என்ன ஆகும்? எல்லாப்பயலும் இறுக்கி மூடிக்கொண்டு அமைதியாகிவிடுவார்கள் தானே என்று குயுக்தியாக யோசிப்பவர். நாலேமுக்கால் வருஷம் நிதியமைச்சராயிருந்து நாட்டை கடனாளியாக்கிய சிகாமணி. இவரால் உள்துறை எப்படி உளுத்துப் புழுத்து நாறப்போகிறது என்பது இனிதான் தெரியும்.

4. திருவாளர் லிபரப்பன்- கஷ்டநஷ்டங்களிலிருந்து காப்பாற்றும் என நம்பி குலதெய்வத்தின் பெயரை சூட்டிக்கொள்கிற நாட்டார் மரபு மற்றும் அதற்கிசைந்த உளவியல்படியே, லிபரலைசேஷன் என்ற வார்த்தையின் சில கூறுகள் இவரது பெயரில் காணக் கிடைக்கின்றன. டீ சர்ட், ஏழெட்டு பாக்கெட் வைத்த பெர்முடா டவுசர் அணிந்து ஸ்டைலாக ஏ.டி.எம்மில் நுழைந்து கார்டை சொருகி பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வரும் ஒவ்வொரு முறையும் தான் மிகமிக நவீனமானவனாக மாறிக்கொண்டிருப்பதைப் போன்ற பெருமித உணர்வில் திளைத்துப் போகிறவர். இவரது துணைவியார் பரிதாபசுந்தரி, மகள் கன்ஸ்யூமரேஸ்வரி, மகன் டாலராண்டி இவர்கள் வழியாகத்தான் இந்த கதையை சொல்லவிருக்கிறோம். உலகமே உறங்கும் இந்த நடுநிசி வேளையில் இந்தியா விழித்தெழுந்து வாழ்வும் விடுதலையும் பெறுகிறது... என்று இந்திய விடுதலை குறித்து ராகுல்காந்தியின் கொள்ளுத்தாத்தாவும் மற்றவர்களுக்கு எப்போதும் மாமாவுமான நேரு கூறியதற்கு நேர்மாறாக, ஒரு நட்டநடுராத்திரியில் தன் வாழ்வையும் விடுதலையையும் தொலைத்த லிபரல்பாளையத்தின் கதை இது.

1
ஏடிஎம்மிலிருந்து வெளியே வந்த பணத்தாள்களில் தேசப்பிதாவின் படத்திற்கு பதிலாக புஷ்ஷின் படம் அச்சாகியிருப்பதைக் காணும் ஒருவர் இயல்பாக எந்தளவிற்கு பதற்றமடைய வேண்டுமோ அதைவிடவும் ஆயிரம் மடங்கு கூடுதலாக திருவாளர். லிபரலப்பன் பதறிப் போனதற்கு காரணங்கள் இல்லாமலில்லை. அவரைப் பொறுத்த வரை ஏடிஎம் என்பது வெறும் இயந்திரமல்ல. அது பணம் கொட்டும் தெய்வம். கையடக்க அட்டையை உள்ளிழுத்து பணத்தை வெளித்தள்ளும் அற்புதங்களின் பெட்டகம். அவர் ஒவ்வொரு ஏடிஎம் மையத்தையும் வழிபாட்டுத்தலமாகவே பாவித்து வந்திருக்கிறார் இதுகாறும். ரிசர்வ் வங்கியிலிருந்து ஆகாய மார்க்கமாகவோ அதலப்பாதாள வழியாகவோ ஏடிஎம்முக்குள் அப்பழுக்கற்ற பணம் நேரடியாக நிரப்பப்படுகிறதென்றும் அதில் பழுதான ஒருவிசயமும் நடக்காதென்பதும் அவரது நம்பிக்கை. எனவே தேசப்பிதாவின் படமிருந்த இடத்தில் புஷ்ஷின் படம் அச்சடிக்கப்பட்ட இந்த பணத்தாள்களை இயல்பானதொரு நடைமுறைத் தவறாகக் கருதி அவரால் சமாதானம் அடைய முடியவில்லை. கதவுக்கருகில் போய் நின்று கொண்டிருந்துவிட்டு அப்போதுதான் நுழைவதைப் போன்ற பாவனையை தனக்குத்தானே வலிந்து உருவாக்கிக்கொண்டு மீண்டும் ஒருமுறை அட்டையைச் சொருகினால், வெளிவந்த அத்தனைத் தாள்களிலும் புஷ்ஷின் படம்.

லிபரலப்பன் கள்ளநோட்டைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறாரேயன்றி அது கறுப்பா சிவப்பா என்று இதற்குமுன் அறிந்திலர். எனவே வழக்கத்துக்கு மாறானதாகத் தோன்றும் இவை கள்ளநோட்டுகள் தான் என்ற முடிவுக்கு வர அவருக்கு நெடுநேரம் தேவைப்படவில்லை. இப்படியும் உண்டா ஓர் அட்டூழியம்? ஏடிஎம்மில் கள்ளநோட்டா? ஒரு இயந்திரம் தனக்குத்தானே கள்ளநோட்டை அச்சடித்துக் கொள்ள முடியுமா? வங்கி ஊழியர்கள் யாரேனும் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பார்களோ? இந்த நம்பிக்கை துரோகத்தை எப்படி சகித்துக்கொள்வது? நல்ல முட்டைய தின்னுட்டு ஊளைமுட்டைய கொண்டுவா என்ற சிறுபிள்ளை விளையாட்டாய் ஆகிவிட்டதோ தன் சேமிப்பிலிருந்த தொகையெல்லாம்? ஒருவேளை நூதனத்திருடர்கள் யாராவது போலி அடையாள எண்ணை அழுத்தி மொத்தப் பணத்தையும் லவுட்டிக்கொண்டு இப்படி கள்ளப்பணத்தை ரொப்பிவிட்டுப் போய்விட்டனரா? ம.சி, ப.சி ஆட்சியில் இப்படியெல்லாம்கூட நடக்குமோ... நோ சான்ஸ் என்று தலையை உலுக்கிக் கொண்டார் லிபரலப்பன். மீண்டும் மீண்டும் சோதித்துப் பார்க்க அட்டையை சொருகிசொருகி இழுத்ததில் அவருடைய இருப்புத்தொகையில் சொற்பம் தவிர முழுவதையும் எடுத்துவிட்டிருந்தார். ஒருநாளைக்கு 25 ஆயிரத்துக்கு மேல் எடுக்க முடியாதென்ற கட்டுப்பாடும்கூட விலக்கிக் கொள்ளப்பட்டுவிட்டதே என்ற அதிர்ச்சியும் சேர்ந்துகொண்டது அவருக்கு.

இன்னொருமுறை சோதித்துப் பார்ப்போம் என்று அவர் இம்முறை தன் மனைவி பரிதாபசுந்தரியின் ஏடிஎம் அட்டையை சொருகினார். (பெண் ஊழியர்களின் ஏடிஎம் அட்டைகள்- அவற்றின் ரகசிய குறியீட்டு எண்ணுடன்- அவர்தம் கணவர்மாரால் கைப்பற்றப்பட்டுவிட்டதை நாடறியும். நவீனமயம் பெண்ணின் சம்பாத்தியத்தியம் முழுவதையும் ஆண்கள் அபகரித்துக்கொள்ள வாய்ப்பளித்திருக்கிறது என்ற உண்மையை இந்த வரிகளின் மூலம் கண்டறிவது பெண்ணிய நோக்கிலான ஆய்வாளர்களின் வேலை. நான் எழுதுவதை நானே பேசுவது ஜெயமோகத்தனம்). மனைவி தன்னிடம் கொண்டுள்ள அதே பதிபக்தியை, மனைவியின் அட்டையிடமும் எதிர்பார்ப்பது கொஞ்சம் ஓவர்தான் என்றாலும், அவர் அவ்வாறான மனநிலையோடுதான் அட்டையை சொருகினார். ஆனால் ஒன்றும் கதை நடக்கவில்லை. இதற்கு வெளிவந்த பணத்தாள்களிலும் புஷ் படம்தான் அச்சாகியிருந்தது. இம்முறை அவருக்கு கிடைத்த கூடுதல் அதிர்ச்சிக்கு காரணம் என்னவென்றால், புதுநோட்டுகள் தீர்ந்துபோன நிலையில் வெளிவந்த பழைய நோட்டுகளிலும் புஷ் படமே இருந்ததுதான். அப்படியானால் புஷ் படம் அச்சடிக்கப்பட்ட இந்த பணத்தாள் நீண்டகாலமாக புழக்கத்தில் இருந்து கொண்டிருக்கிறதா.... தான் உட்பட யாருமே இதை கவனிக்காமல் போனதெப்படி? அல்லது இதுதான் இப்போது அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளா?

ஏடிஎம் மீது தான் வைத்திருந்த நம்பிக்கை இப்படி நட்டநடுராத்திரியில் பொய்த்துக் கொண்டிருப்பது குறித்து மிகுந்த அலைக்கழிப்புக்குள்ளானது அவரது மனம். தன்கையில் இருக்கும் தாள்கள் தெரிவிக்கிற உண்மை என்னவென்பதை அறியத் துணியாமல் அல்லாடினார். ஏதோவொரு கொடிய மர்மத்தின் பிடியில் மாட்டிக்கொண்டது போன்ற தத்தளிப்பு அவரை பிடித்து விழுத்தாட்டியது. உள்ளேயிருக்கும் தைரியம் வியர்வையாக வெளியேறி உலர்ந்துகொண்டிருந்தது. இதை உடனடியாக யாரிடமாவது தெரிவிக்கலாமென்றால் அங்கே ஒருவருமில்லை.

லிபரலப்பன் திண்டாடித்தான் போனார். வீட்டுக்குத் திரும்பும் எண்ணமெல்லாம் பின்னுக்குப் போய் இந்த ரூபாய் நோட்டுகளை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்ற நினைப்பே அவரை ஆட்கொண்டது. விடிந்ததும் பால்வாங்குவதிலிருந்து எல்லாவற்றுக்கும் பணம் தேவையாயிருக்கிறபோது இந்த பொம்மைச் சீட்டுகளை யார் ஏற்றுக் கொள்வார்கள்...? பணம் எடுத்ததற்கான ரசீதுகளை திரும்பவும் கவனமாகப் படித்துப் பார்த்தார். வங்கியின் பெயர், நாள், நேரம், மொத்தமுள்ள தொகை- எடுத்தத் தொகை- மீதமுள்ள தொகை என்பதெல்லாம் தெளிவாகத்தான் அச்சாகி வந்திருந்தது. அப்படியானால் எங்கே நடந்திருக்கும் இப்படியான கோளாறு என்று எவ்வளவு தீவிரமாக யோசித்தும் விளங்கிக்கொள்ள முடியவில்லை. நீண்டநேரமாக அந்த அறைக்குள்ளேயே இருக்கவும் அவருக்கு பயமாக இருந்தது. புஷ் ஒவ்வொரு தாளிலும் ஒவ்வொரு வகையாக சிரிப்பதுபோலிருந்தது. அந்த சிரிப்பில் வெளிப்பட்ட ஏளனமும் இளக்காரமும் அந்த அறை முழுக்க நிரம்பி உன்னால ஒண்ணும் பண்ண முடியாது என்று பரிகசித்தபடி பிடறியில் கைவைத்து வெளியே நெட்டித் தள்ளுவதைப்போல உணர்ந்தார் லிபரலப்பன். ஏதேனும் மோசடிவேலைக்காக தான் அங்கேயிருப்பதாக யாராவது நினைத்துக் கொண்டாலும் மானக்கேடாகிவிடுமே என்ற எண்ணம் அவரை மேலும் நடுக்குறச் செய்தது.

அவசரமாக வெளியேறி ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டார். தான் நிதானத்தில் இல்லை என்பது அவருக்கே நன்றாகத் தெரிந்தது. இந்நேரத்திற்கு வந்தால்தான் ஏடிஎம்மில் கூட்டம் இருக்காது என்று நினைத்து 12 மணிக்கு வந்து இப்படியொரு இக்கட்டில் மாட்டிக்கொள்ள நேர்ந்ததே என்று தன்னைத்தானே நொந்துகொண்டார். வங்கிக்குள் போய் வரிசையில் நின்று பணம் எடுக்கவும் கொடுக்கவும் ஆயிரத்தெட்டு சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் செய்வதில் எரிச்சலுற்று, எதிர்ப்படும் ஊழியர் ஒருவரிடமாவது சண்டையிட்டு, சமாதானமாகாமல் வீட்டுக்கு வந்து வீட்டிலிருப்பவர்களிடமும் எரிந்துவிழும் சள்ளையிலிருந்து விடுபடும் பொருட்டு தமது நிதிசார் நடவடிக்கைகளை இப்படி ஏடிஎம்முக்கு மாற்றிக்கொண்ட முதல் தலைமுறையைச் சார்ந்தவர் இந்த லிபரலப்பன். ஒவ்வொருமுறை பணம் எடுக்கும்போதும், போய் சீக்கிரமா செலவழிச்சுட்டு பத்திரமா திரும்பி வரணும் என்று ஏடிஎம் மிஷினே வாசல்வரை வந்து கையாட்டி வழியனுப்பிவைப்பதைப் போன்ற பிரமைக்குள் லிபரலப்பன் வாழ்ந்துவந்த காலம் ஒன்றிருந்தது.

எதற்கும் இருக்கட்டுமே என்று ஆயிரம் ஐநூறை கையில் வைத்துக்கொள்ளும் பழக்கம் ஏ.டி.எம்.முக்கு மாறிய பிறகு லிபரலப்பனிடம் அடியோடு இல்லாமல் போய்விட்டிருந்தது. ‘முக்குக்கொரு ஏடிஎம் இருக்கிறப்ப சேஃப்டி இல்லாம பணத்தை ஏன் கையில் வச்சிருக்கணும்.... தேவைன்னா ஒரு நிமிஷத்துல எடுத்துக்கலாம்...’ என்று வியாக்கியானம் செய்துகொண்டிருந்த காலமாக அது இருந்தது. வங்கிக்குப் போய் வரிசையில் நிற்பவர்களைப் பார்த்தால், இன்னும் இப்படி கட்டுக்குடுமி ஆசாமிகளாய் இருக்கிறார்களே என்று இவருக்கு கடுப்பாக இருக்கும். தன்னைப்போல் நவீனத்துக்கு மாறாமல் இப்படி லோல்படுகிறார்களே என்று அடுத்தவர்களை இளக்காரமாய்ப் பார்க்கும் இவரது பெருமித உணர்வு நெடுநாள் நீடிக்காமல் சடுதியில் காணாமல் போகத்தொடங்கியது. ஏடிஎம் மையங்களில் எப்போதும் நீண்டவரிசைகள் தென்படத் தொடங்கின. சம்பள பட்டுவாடாவிற்காக தனியே எதற்கு பணியாட்கள் என்று கம்பனி நிர்வாகங்களும் அரசாங்கங்களும் தங்களது ஊழியர்கள் கையில் ஏடிஎம் கார்டைத் திணித்துவிட்டதில் ஆரம்பித்ததுதான் இந்த கெடுதலின் தொடக்கம். அவர்களோடு நில்லாது வங்கியில் கணக்கு வைத்திருக்கும் எல்லோருமே கையில் கார்டையும் வைத்திருந்தனர். கணக்கில் பணம் இருக்கிறதோ இல்லையோ, ஏடிஎம்முக்குள் நுழைந்து கார்டைச் சொருகி உதட்டைப் பிதுக்கிக்கொண்டே வருவது அவர்களது வாடிக்கையாயிருந்தது.

முன்புபோல் நினைத்தநேரத்திற்கு சென்று பணத்தை எடுத்துக்கொண்டு வரமுடியாத நிலை உருவாகி விட்டது. வங்கியில் என்றால் நிழலாவது இருக்கும். மெத்துமெத்தென்ற இருக்கைகள் இருக்கும். இங்கு எதுவுமில்லை. இயந்திரம் மட்டும் குளிரூட்டப்பட்ட அறையில். தன்னைப்போன்ற மதிப்புமிக்க வாடிக்கையாளர்கள், மழையோ வெயிலோ வெட்டவெளியில் கால்கடுக்க வரிசையில் நிற்க வேண்டியிருக்கிறதே என்று அலுத்துக் கொண்டபடியே தனக்கு முன்னும் பின்னும் நீண்டு கிடக்கும் வரிசையில் கரைந்துபோவதைத் தவிர அவருக்கு வழியன்றும் இருந்திருக்கவில்லை. ச்சே... நம்ம பணத்தை எடுக்க நாய்போல காத்துக்கிடக்க வேண்டியிருக்கே... என்று நினைத்து நினைத்து மருகத் தொடங்கினார்.

கண்டவனுக்கெல்லாம் கார்டு கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்... மினிமம் பேலன்ஸ் பத்தாயிரம் இருபதாயிரம்னு வைக்கணும். அப்பத்தான் இந்த சில்லரைகளெல்லாம் கழியும். அப்படி கழித்துக் கட்டும் துணிச்சல் இல்லையென்றால் வாடிக்கையாளர் நலனை முன்னிட்டு கூடுதலான இடங்களில் இயந்திரங்களை நிறுவணும் என்று வங்கி நிர்வாகத்துக்கு புகார் கடிதங்களை அனுப்பிவிட்டு அதன் நகல்களை ஆங்கில நாளிதழ்களின் ஆசிரியர்களுக்கு அனுப்புவதும் அவரது வேலைகளில் ஒன்றாகியது. எவ்வளவு அற்புதமானதொரு இயந்திரத்தை இப்படி எடைபார்க்கிற மிஷின்போலவும் ஜாதகம் கணிக்கிற கம்ப்யூட்டர் போலவும் ஆக்கிவிட்டார்களே என்ற ஆதங்கத்தில் அவர் சிலநேரங்களில் ரத்தக்கொதிப்பு வந்தவர்போலக்கூட ஆகிவிடுவதுமுண்டு. தனக்கு மட்டுமே சொந்தமாயிருந்த ஏடிஎம்மை தராதரமில்லாத மற்றவர்கள் வந்து ஆக்கிரமித்துக் கொண்டதாக பாவித்துக்கொண்டு எப்போதும் பொருமும் மனநிலைக்குள் அவர் வீழ்ந்தது இந்தகாலத்தில்தான். எனவே யாருமறியாமல் தன் ஆசைக்கிழத்தியை கண்டு வருகிறவரைப்போல, இரவு உணவுக்குப் பிறகு சற்றே கண்ணயர்ந்துவிட்டு நடுநிசி வேளையில் எழுந்து ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு தெருமுக்குக்கு கிளம்புவார். யாருமற்ற கண்ணாடிஅறைக்குள் இவருக்காகவே தனித்தேங்கிக் காத்திருப்பதைப் போன்று நிற்கும் ஏடிஎம்முக்குள் நுழைந்து, இப்படி அளவளாவிக் கிடந்த நம்மை பிரித்துவிட்டார்களே பாவிகள் என்று புலம்புவார். இந்த புலம்பல் உச்சமாகி ஏடிஎம் இயந்திரத்தை ஆதூரமாய் தடவிக்கொடுத்துவிட்டு பணம் எடுக்காமலேகூட திரும்பிவிட்ட நாட்களுமுண்டு.

ஆனால் எல்லாவற்றுக்கும் இன்று ஒரு முடிவு வந்துவிட்டதுபோல் உணர்ந்தார். தேசப்பிதாவுக்கு பதிலாக புஷ் படம் அச்சடிக்கப்பட்ட அந்த தாளைப் பார்க்கப்பார்க்க அவருக்கு பைத்தியம் பிடிப்பது போலானது. பலவிதமான யோசனைகளின் நெருக்குதலில் தன்னிலை மறந்து பிதற்றம் கண்டுவிட்டது அவருக்கு. புத்தம்புது தாள்களாயிருந்தால்கூட இப்போதுதான் இந்த தவறு நடந்திருக்கிறது என்று நினைத்துக் கொள்ளலாம். ஆனால் அத்தனையும் பழைய நோட்டுகள். அப்படியானால் வெகுநாட்களாய் இந்த நோட்டுகள் புழக்கத்திலிருப்பதாகத்தானே அர்த்தம்? என்று திரும்பத்திரும்ப தனக்குத்தானே கேட்டுக்கொண்டார். இந்த அட்டூழியத்தை எப்படி இதுநாள்வரை யாருமே கண்டுகொள்ளவில்லை? கள்ளநோட்டு என்றால் ராத்திரியில் எங்காவது மூத்திரச்சந்தில் அரைவெளிச்சத்தில் புழங்கக்கூடியது என்று கேள்விப்பட்டிருந்த நிலை மாறி இப்படி ஜகஜ்ஜோதியாய் அலங்கரிக்கப்பட்டுள்ள ஏடிஎம்முக்குள் இருக்கக்கூடியதாக மாறியிருக்கிறதென்றால் என்ன நடக்கிறது இந்த நாட்டில் என்று தாறுமாறாய் ஓடின பல கேள்விகள்.

தனது ஆதங்கம் பணத்தாளில் புஷ் படம் இருப்பது குறித்ததா அல்லது அது கள்ளநோட்டாய் இருப்பது குறித்ததா என்ற அடுத்தக்கேள்வி அவரை மறித்தது. அவரைப் பொறுத்தவரை, தனிப்பட்ட முறையில் புஷ் அபிமானிதான். புஷ்ஷைப் போன்ற ஒரு ஆற்றல்மிக்கத் தலைவன் லோகத்திலேயே இல்லை என்பது அவரது அபிப்ராயம். ஒரு அஞ்சு வருஷம் மிலிட்டிரி ரூல் வந்தாத்தான் நாடு உருப்படும் என்றோ, மறுபடி ஒரு தடவை எமர்ஜென்சி வந்தாத்தான் எல்லாம் கரெக்டாகும் என்றோ உளறித் திரியும் அரசியல் அரைவேக்காடுகளை மிஞ்சும் வகையில் இவர், உலகத்தையே ஒரு அஞ்சு வருஷத்துக்கு புஷ் கையில் ஒப்படைக்கணும் என்று வாதிடுகிற கட்சிக்காரர். அஞ்சு வருஷத்தில் புஷ் உலகத்தையே வல்லரசாக்கிவிடுவாராம். அதன்பிறகு நாடுகளுக்குள் சண்டைகள் வராமல் சமாதானம் நிலவுமாம். இந்த உலகத்துக்கும் வேறு உலகத்துக்கும்தான் சண்டை நடக்குமாம். ஆப்கன், ஈராக் என்று அடுத்தடுத்து பலநாடுகளை ஆக்ரமிப்பது இந்த நோக்கத்திற்காகத்தானாம்.... அதுவும்கூட, சண்டை சச்சரவில்லாமல் பலநாடுகளில் உள்ளேநுழையும் ‘இரண்டாம் பாதை’ திட்டத்தை அவர்கள் ஏற்க மறுத்ததால்தான் போர்தொடுக்க வேண்டியிருந்ததாகவும் மற்றபடி புஷ்ஷைப் போன்ற ஒரு சமாதான விரும்பியை இந்த பூலோகத்தில் காணமுடியாது என்பதும் அவரது வாதம்.

உலகம் முழுவதும் சுடுகாட்டு அமைதியை புஷ் நிறுவத்துடிப்பதாக குற்றச்சாட்டுகள் எழும்பிவந்த நிலையிலும்கூட, புஷ்சுக்கு அமைதிக்கான நோபல் பரிசு தரப்பட வேண்டும் என்பதும் அவரது தனிப்பட்டக் கருத்தாயிருந்தது. எனவே அவர் ஒரு புஷ் எதிர்ப்பாளரல்ல என்பதை எடுத்தயெடுப்பிலேயே புரிந்துகொள்ள வேண்டும். மட்டுமல்லாமல், புஷ்ஷின் சீட்டு டர்ராகி ஒபாமா வந்துவிட்டப் பின்னும்கூட அவரது மனவுலகத்தில் அமெரிக்காவுக்கும் அகில உலகத்துக்கும் புஷ்ஷே ஜனாதிபதியாக வீற்றிருந்தார்.

இந்த நோட்டு, தேசப்பிதாவையும் தனது அபிமானத் தலைவரான புஷ்ஷையும் ஒருசேர அவமதிக்கிற வகையில் அச்சடிக்கப்பட்டிருப்பது குறித்த தனது புகாரைத் தெரிவிக்க காவல் நிலையம் சென்றார்.

காவல்நிலையம் பகலில் உள்ளதைவிட சுறுசுறுப்பாக இருந்தது. இரவுநேரங்களில் பெண்களை மட்டுமே இழுத்துவருவதை பொதுலட்சணமாய்க் கொண்டிருக்கும் இந்த காவல் நிலையங்களுக்கு அவரது வம்சத்தில் இதுவரை யாரும் படியேறியதில்லை. எனவே அவருக்குள் ஒரு நடுக்கம் பரவியது. வளர்த்ததா ஒட்டவைத்ததா என்று பிரித்தறிய முடியாதபடி பெரிய மீசையுடன் இருந்தவர்- அவர்தான் அதிகாரியாயிருக்கக்கூடும்- என்னய்யா உனக்கு இந்நேரத்துல என்று மரியாதையாகக் கேட்டார். அவரது தோரணையில் நிலைகுலைந்த லிபரலப்பன் சர்வமும் ஒடுங்கிய நிலையில் பணத்தாள்களை எடுத்து மேசைமேல் விரித்தார். மேசைக்கு கீழாகவே பணம் வாங்கிப் பழக்கப்பட்டிருந்த அதிகாரி, மேசைமேல் துளியும் கூச்சமின்றி பரப்பிவைக்கப்பட்ட பணத்தை முதன்முதலாகப் பார்த்ததும் ஒன்றும் விளங்காமல் முழித்தார். ஏதோ பெரிய குற்றத்திலிருந்து தப்புவதற்காகத்தான் இவ்வளவுத் தொகையை வைத்து ஆசைகாட்டுகிறான் இந்த ஆள் என்று அனுமானித்த அதிகாரி என்ன விசயம் என்பதுபோல புருவத்தை நெரித்தார். பதற்றமும் பயமும் கலந்த குரலில் நடந்தவற்றை விவரித்தார் லிபரலப்பன்.

(சினிமாக்களில் கண்ட கண்டிப்பான/ கொடுமைக்கார/ மெயின்வில்லனின் கையாளான ஒரு காவல் அதிகாரியை இவ்விடத்தில் கற்பனை செய்துகொண்டால் இன்னும் கொஞ்சம் எளிதாக இருக்கும்) அதிகாரியின் முகம் இறுகியது. லிபரலப்பனின் ஏடிஎம் கார்டு, பணம் எடுத்ததற்கான ரசீது, இவரின் தோற்றம் மற்றும் தொனி எல்லாவற்றையும் ஒரு தேர்ந்த புலனாய்வு நிபுணரைப்போல பரிசோதித்தப்பின் தானொரு ஸ்காட்லாந்து யார்டு பரம்பரையைச் சேர்ந்தவனாக்கும் என்கிற தோரணையில் விசாரணையைத் தொடக்கினார். ‘ஏண்டா, சின்னப்பசங்க செட்டு சேர்த்து விளையாடற பொம்மை நோட்டுங்களக் கொண்டாந்து ஏடிஎம்முல இருந்து எடுத்ததுன்னு சொல்லி பேங்க்ல பணம் புடுங்க ட்ரை பண்றியா? என்று எடுத்தயெடுப்பிலேயே ஒரு அறை விழுந்தது. (போலிஸ் மொழியில் இதை அட்மிஷன் அடி என்று சொல்வது வழக்கம். இப்படி அடி கொடுப்பதன் மூலம் ஏதேனும் புகார் கொடுக்க வருகிறவர்கள் எல்லா தவறையும் தாமே செய்துவிட்டதாகவும் அதற்குத்தான் இந்த தண்டனை கிடைத்திருக்கிறதென்றும் நம்பிக்கொண்டு ‘அய்யா சொல்றத கேட்டுக்கிறேங்க.. என்று பணிந்து நிற்கும் மனநிலையை உருவாக்கமுடியும்)

‘இல்ல சார், அதுவந்து...’ என்று லிபரலப்பன் பதில்சொல்ல முயன்றபோது ‘எதுத்தா பேசறே ங்கோத்தா’ என்று மரியாதையாக மறு அறைவிழுந்தது. ‘புகார் கொடுக்க வந்தா அடிப்பீங்களோ... நான் இதை லேசில் விடப்போறதில்ல.. மனித உரிமை ஆணையத்துல முறையிடப் போறேன்’ என்றவரிடம், ‘மனித உரிமை ஆணையமாவது ... மயிர் புடுங்குற ஆணையமாவது... ஹைகோர்ட்டுக்குள்ள பூந்து ஜட்ஜ்க்கே லாடம் கட்டுனவங்க நாங்க... மூடிக்கிட்டு இருடா...’ என்று தாக்குதல் தொடர்ந்தது.

இந்த தாக்குதலிலிருந்து தப்பிக்க ஒரேவழி இதுதான் என்று இங்கிலீசுக்குத் தாவினார் லிபரலப்பன். அதிகாரியும் இப்போது கொஞ்சம் மிரண்டுபோய் காதுகொடுக்கத் தலைப்பட்டார். ராபர்ட் கிளைவ் தொடங்கி, ஹர்ஷத்மேத்தா, டெல்ஜி, ‘சத்யம்’ ராமலிங்க ராஜூ, சுக்ராம் வரை எல்லா ஃப்ராடுகளுக்கும் இங்கிலிஷ் தெரியும் என்கிற விசயம் அந்த கணத்தில் ஞாபகம் வராமல் போய்த்தொலையவே, இவ்வளவு சரளமாக ஆங்கிலம் பேசுகிற ஒருவர் இப்படியான மோசடிகளில் ஈடுபடமாட்டார் என்ற மூடநம்பிக்கை அவரை வழிநடத்தியது. எல்லாவற்றையும் கேட்டு முடித்ததற்கு ஒப்புதல் போலவும் தனக்கும் ஆங்கிலம் புரியும் அல்லது தெரியும் என்பதைக் காட்டவும் ‘ஐ ஸீ...’ என்று பொத்தாம்பொதுவாக சொல்லிவைத்தார் அதிகாரி. அதற்குப் பிறகு கனத்த மௌனம். ‘வாங்க அந்த ஸ்பாட்டுக்குப் போய்ட்டு வருவோம்’ என்று லிபரலப்பனையும் அள்ளிப்போட்டுக்கொண்டு ஜீப்பைக் கிளப்பினார். மறக்காமல் ஒரு காலை வெளியே தொங்க விட்டுக் கொண்டார். அப்படி போனால்தானே அவர் அவசரமாகப் போகிறார் என்பதை மற்றவர்கள் அறிந்துகொள்ள முடியும்.

அந்நேரத்துக்கு ஏடிஎம்மில் ஒருவருமில்லை. எவ்வளவோ வாஞ்சையோடு வந்துபோய்க் கொண்டிருந்த அந்த சின்னஞ்சிறு அறை இப்போது ஒரு திகில்மாளிகைபோல பயமூட்டியது லிபரலப்பனுக்கு. நானிருக்கேன் தைரியமா உள்ளே வாங்க என்று காவல் அதிகாரி ஒன்றுக்கும் மேற்பட்ட தடவைகள் வற்புறுத்திய பிறகே அரைமனதோடு உள்ளே நுழைந்த லிபரலப்பன் இம்முறை தன்மகள் கன்ஸ்யூமரேஸ்வரியின் கார்டை சொருகி ரகசிய எண்ணையும் அழுத்தினார். தொடுதிரையில் எல்லாமே கச்சிதமாக மின்னின. ஆனால் வெளிவந்ததென்னவோ புஷ் படம் அச்சடிக்கப்பட்ட பணத்தாள்கள்தான். அதிகாரி குழம்பித்தான் போனார். ஓருவேளை அந்த ஏடிஎம் கார்டு போலியாகவே இருந்தாலும் அதற்காக நோட்டு எப்படி மாற முடியும் என்று யோசித்தபடியே அதிகாரி தனது கார்டை எடுத்து சொருகினார். அவருக்கு வந்த நோட்டிலும் அதேகதிதான்.

இப்படித்தான் ஆகும் என்ற முன்னனுபவம் இருந்ததால் லிபரலப்பன் இதை எதிர்பார்த்துதானிருந்தார். பதற்றமும் கொஞ்சம் தணிந்தவராயிருந்தார். ஆனால் அதிகாரியால் அப்படி இருக்க முடியவில்லை. தன் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இப்படியரு மோசடி நடப்பதை ஒப்புக்கொள்ள முடியாமல் அவர் மூச்சுத்திணறல் கண்டவர் போலாகி மீசையை முறுக்கிவிட்டுக் கொண்டார். போதாக்குறைக்கு இந்தாளை வேறு அடிச்சுத் தொலைச்சிட்டமே... என்று சித்தம் கலங்கியது. ‘எதற்கும் இன்னொரு ஏடிஎம்மில் ட்ரை பண்ணலாமா?’ என்று ஜீப்பை அடுத்த தெருவுக்கு விட்டார். அங்கும் புஷ்தான் பல்லிளித்தார்.

இதற்கு வங்கியின் பொறுப்பான அதிகாரிகள் தான் பதில் சொல்லவேண்டும். ஆனால் இந்நேரத்துக்கு யாரைப் பிடிப்பது என்று காவல் அதிகாரிக்குத் தெரியவில்லை. வண்டி காவல்நிலையத்திற்கே திரும்பியது. பெரிய வேட்டைக்குப் போன அய்யா திரும்பி வந்துட்டாங்க என்று ஆவல்பொங்க ஓடிவந்த ஏட்டய்யாவிடம் நடந்ததை சொல்லும்போது அதிகாரியின் குரல் மிகவும் பலவீனமாயிருந்தது. அவ்வளவுதானா எல்லாம்... இனி நல்ல நோட்டையே பார்க்க முடியாதா... என்று பிதற்றியவாறே தன் சட்டைப்பையில் சாயங்காலம் திணித்துவைத்திருந்த பணத்தை எடுத்தவர் அடுத்த அதிர்ச்சிக்கு ஆளாக வேண்டியிருந்தது. அந்த நோட்டுகள் பூராவும் இந்த புஷ் நோட்டுக்களாக மாறியிருந்தன. பதற்றத்தோடு இன்னொரு பாக்கெட்டிலிருந்ததையும் எடுத்துப்பார்த்தால் அவையும் தப்பவில்லை.

ஏடிஎம்மில் எடுத்த நோட்டுதான் கள்ளநோட்டென்றால் தன் சட்டைப்பையிலிருக்கிறவை எப்படி இப்படி மாறமுடியும்? ஒரு பாக்கெட்டிலிருந்தது சாராய சாஸ்திரிகள் கொடுத்தது. மற்றது கஞ்சா விற்கிற சர்மா கொடுத்தது. எண்ணி வாங்கி வைக்கும்போது சரியாகத்தானே இருந்தது? ஒருவேளை மாமூல் தருவதுதானேன்னு இப்படி ஏமாத்திட்டானுங்களா? அப்படி மட்டும் ஏமாத்தியிருந்தா அவனுங்கள என்கவுண்டர்ல போட்டுத் தள்ளிட வேண்டியதுதான் என்று குறுக்கும்மறுக்குமாக ஓடியது யோசனை. ‘சார் அந்த பெஞ்ச்ல கொஞ்சநேரம் படுங்க... எதுவா இருந்தாலும் விடிஞ்சாத்தான் பதில் கிடைக்கும்போல’ என்று லிபரலப்பனிடம் கூறிவிட்டு தன் இருக்கையில் சரிந்து தொய்வாக உட்கார்ந்து கண்ணை மூடிக்கொண்டார் அதிகாரி. திடீரென நினைப்பு வந்தவர்போல, சார் நீங்க எதுக்கும் ஒரு கம்ப்ளய்ண்டு எழுதிக் குடுத்துட்டு தூங்குங்களேன் என்ற அதிகாரி, கார்பன் வைத்த வெள்ளைத்தாளையும் பேனாவையும் நீட்டினார்.

மற்றவர்கள் மீது ஓயாமல் புகார் சொல்லிக்கொள்வது லிபரலப்பனுக்கு வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும் அவர் இதுவரையிலும் யார்மீதும் காவல் நிலையத்தில் புகாரிட்டவரில்லை. ஆனால் இன்று வேறுவழியுமில்லை. யார் என்றே தெரியாத எதிரிமீது புகார் தருவதும் ஒருவகையில் பாதுகாப்பானதுதான் என்ற சமாதானத்தோடு தாளின் தலைப்பில் பிள்ளையார் சுழி இட்டபோது அது சிறு கலங்கலுக்குப்பின் ஒரு கிராபிக்ஸ் எஃபக்டுடன் ‘புஷ்’ என்று தானே மாறிக்கொண்டது. ஏதோ ஒரு மாந்திரீக வலைக்குள் மாட்டிக்கொண்டதைப்போல நடுக்கம் கொண்ட லிபரலப்பன் பெருத்த குரலெடுத்து அதிகாரியை விளித்து தாளைக் காட்டினார். அவரது நடுக்கம் அதிகாரியையும், அவரது சகாக்களையும், தேவைப்படும்போது வல்லாங்கு செய்வதற்காக அடைத்துவைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களையும், இன்னபிற கைதிகளையும் பீடித்துக் கொண்டது.

லிபரலப்பன் வெடவெடத்துக்கொண்டிருந்தார். அவருக்கு மூத்திரம் முட்டிக்கொண்டு கசிந்தது. பள்ளிக்கூட மாணவனைப்போல சுண்டுவிரலை நீட்டினார் அதிகாரியைப் பார்த்து. மற்ற நேரமாயிருந்தால் ஒரு சட்டியைக் கொடுத்து அதிலேயே பெய்யவைத்து தாகமெடுக்கிறபோது அதையே குடிக்கவும் வைக்குமளவுக்கு கருணை கொண்டிருக்கும் அந்த அதிகாரி இப்போது தன்னிலை பிறழ்ந்திருந்ததால், போய்ட்டுவாங்க என்பதுபோல் தலையை ஆட்டினார். வெளியே போக பயமாயிருக்கு சார், துணைக்கு வர முடியுமா என்றார் லிபரலப்பன். அது ஒன்னுதான் பாக்கி, வாங்க... என்று எரிச்சலோடு அழைத்துப்போனார் ஒரு காவலர். கழிப்பறைச் சுவற்றில் ஆண்கள் பிரிவுக்கு திரும்புமிடத்தில் வரையப்பட்டிருந்த படம் புஷ்சினுடையதாகவும் பெண்ணின் படம் காண்டலிசா ரைஸ்ஸினுடையதாகவும் மாறியிருந்ததைக் கண்டு காவலர் அலறியதில், பயத்தின் அளவுகூடி லிபரலப்பன் தன்மீதே மூத்திரம் பெய்துகொண்டார் என்பது ஒரு முக்கிய விசயமல்ல. அதற்கடுத்து நடந்தவைதான் பிரச்னையின் தீவிரத்தை மேலும் மேலும் அதிகரிக்க வைத்தன.

நனைந்துவிட்டிருந்த கீழாடைகளை காயவைத்துக்கொண்டு காவல்நிலைய வாசலில் நின்று கொண்டிருந்த லிபரலப்பனுக்கு தன் மனைவி பரிதாபசுந்தரியுடன் உடனடியாக பேச வேண்டும் போலிருந்தது. ஒருவேளை இந்த இரவு இப்படியே என்றென்றைக்குமாக நீண்டு அவளை இனி பார்க்கவே முடியாமல் போய்விடுமோ என்ற பயமும் சேர்ந்து விரட்ட அவசரமாய் செல்போனை எடுத்து வீட்டின் எண்களை அமுக்கியபோதுதான் அடுத்த வில்லங்கம் தொடங்கியது. அவர் அமுக்கிய தொலைபேசி எண்களுக்கு முன்பாக 0011 என்ற ஐஎஸ்டி எண்ணும் தானாகவே சேர்ந்து கொண்டு திரையில் மின்னியது. ஆனால் அவருக்கு அது உறைக்கவேயில்லை. பழக்கதோஷத்தில் அமெரிக்காவில் இருக்கிற தன் மகன் எண்ணை டயல் செய்துவிட்டதாக நினைத்துக்கொண்டு மீண்டும் மீண்டும் மேற்கொண்ட முயற்சிகளில் தோல்வியையே தழுவ நேர்ந்தது. எனவே அவர் மீண்டும் மீண்டும் ராங் நம்பராகவே வருகிறதென்று அழித்தழித்து எண்களை அமுக்கிக் கொண்டிருந்தார். பதறின காரியம் சிதறத்தானே செய்யும் என்று ‘ஆர்ட் ஆஃப் டையிங்’ ஆன்மீக முகாமில் சுவாமி சுருட்டலானந்தா சொன்னதை நினைத்துக் கொண்டவர் சிறிதுநேரம் கண்களை மூடி அமைதியாய் இருந்தார். பின் முக்தியடைந்தவரின் முகபாவத்தோடு ஒரு தெளிவு பெற்றுவிட்டதான நினைப்போடு மீண்டும் எண்களை அழுத்தினார். 0011 என்றேதான் மாறின. தொழில்நுட்ப மொழியில் சொல்வதாயிருந்தால் அமெரிக்காவின் தொடர்பு எல்லைக்குட்பட்ட ஒரு பிராந்தியமாக லிபரல்பாளையம் மாறிவிட்டிருந்தது.

காவல் அதிகாரி இந்த தொலைபேசி எண் மாற்றம் குறித்தும் ஒரு புகாரை எழுதித்தரும்படி கோரினார். இம்முறை பிள்ளையார் சுழிக்குப் பதிலாக சிவமயம் என்று தொடங்கினார் லிபரலப்பன். அவர் எதிர்பார்த்து பயந்தது போலவோ அல்லது பயந்து எதிர்பார்த்தது போலவோ புகாரின் கடைசிவரியை எழுதி முடித்தபோது சிவமயம் தானே புஷ்மயம் என மாறிக்கொண்டது. இதற்குமேல் தன்னால் எதுவும் முடியாது என்று பேனாவை விசிறியடித்துவிட்டு லிபரலப்பன் அழத்தொடங்கிவிட்டார். கடவுளே எனக்கு மட்டும் ஏனிந்த சோதனை? என்று வாய்விட்டுக் கதற, தன்னிடமிருந்த லஞ்சப்பணமெல்லாம் கள்ளப்பணமாய் மாறிவிட்ட சோகத்தை எண்ணி காவல் அதிகாரியும் கதற, அதிகாரி அழும்போது தாங்கள் சும்மா இருப்பது மரியாதைக் குறைவான செயல் என்று காவலர்களும் அழத்தொடங்கினர். ஸ்டேசனுக்குள் இதுவரை தாங்கள் மட்டுமே அழுதுவந்த நிலைமை மாறி போலிஸ்காரர்கள் அழத் தொடங்கியிருப்பது நல்லமாற்றத்திற்கான அறிகுறிதான் என நினைத்த கைதிகள் தமக்குள் கமுக்கமாக சிரித்துக்கொண்டார்கள்.

அழுதுமுடித்து ஆசுவாசம் கண்ட அதிகாரி வயர்லஸ்சில் தலைமையிடத்துடன் தொடர்புகொண்டு விலாவாரியாக விவரித்த நொடியிலிருந்து அங்கும் களேபரம் பரவத் தொடங்கியது. மாநிலம் முழுவதையும் உஷார்படுத்தி தகவல்களும் ஆணைகளும் பிறப்பிக்கப்படுவதற்கு முன்பே எல்லாவிடங்களிலும் பீதி பரவிவிட்டிருந்தது. நைட் ரவுண்ட்ஸ் போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்த அதிகாரி ஒருவர் நேருக்குநேராய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே முச்சந்தியில் இருந்த தேசப்பிதா சிலை புஷ் சிலையாக உருமாறுவதைக் கண்டு மூர்ச்சையாகி இன்னும் மயக்கம் தெளியாமல் பிதற்றிக் கொண்டிருப்பதாய் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன. போலிஸ் தலைமையகத்தின் சுவற்றில் நடுநாயகமாக மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தில் தேசப்பிதாவுக்கு பதிலாக புஷ் சிரிக்கத் தொடங்கியிருந்தார். ரூபாய் நோட்டில் இருந்த அதேபடம். காவல் நிலைய கக்கூஸ் சுவற்றில் சிரித்த அதே படம். எங்கும் எங்கும் புஷ். காற்றும்கூட விஷ் என்று வீசுவதற்கு பதிலாக புஷ்சென்று வீசுவதாக ஒரு குறுஞ்செய்தி கவித்திலகம் தன் அரைவேக்காட்டை அதற்குள்ளாகவே அவிழ்த்துக்கொட்டியது.

விடிவதற்குள் விஷயம் நாட்டின் மூலைமுடுக்கெங்கும் பரவிவிட்டிருந்தது. ஊடகக்காரர்கள் லிபரலப்பனை மொய்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்மீது வீசும் முத்திரவாடையையும் பொருட்படுத்தாமல் அவரை ரவுண்டு கட்டி பேட்டியெடுக்கத் தொடங்கியிருந்தார்கள். அவரும் பெருமிதம் பிடிபடாமல் விளக்கி விளக்கி சொல்லிக்கொண்டிருந்தார். தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை எல்லாவற்றிலும் அவரது பேட்டிதான். ஹெச்1பி விசாவை வாயில் கவ்விக்கொண்டு பிறந்து எல்ஐடியில் (லிபரல்பாளையம் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி) படித்து அதன் நியமத்திற்கேற்ப அமெரிக்காவில் வேலை பார்த்துவந்த அவரது மகனிடம் வெளிநாட்டுத் தொலைக்காட்சியொன்று பேட்டி கண்டு வெளியிட்டது.

2.

Bush dollar எங்கும் புஷ்மயமாகி ஊரும் நாடும் உருண்டு புரண்டு கொண்டிருந்த அந்த அதிகாலைப் பொழுதில் ஒரு பெண்ணின் மரணஓலம் நிகர்த்த கதறல் யாரைத்தான் நிம்மதியாக உறங்கவிடும்? அலறியடித்து விழித்தெழுந்து ஓடிவந்தனர் அக்கம்பக்கத்தவர். லிபரப்பனின் மகள் கன்ஸ்யூமரேஸ்வரிதான் அப்படி கதறிக் கொண்டிருந்தவள். பிரம்மமுகூர்த்தத்தில் கூடுவதை வழக்கமாகக் கொண்டிருந்த அவளது கணவன், என்ன நடந்தது என்று விளங்காமல் மலங்க மலங்க முழித்தபடி தன் ஆடைகளை சரிசெய்து கொண்டிருந்தான். அவளது கதறலும் நின்றபாடில்லை. லிபரப்பனின் ஏடிஎம் புகாரை விசாரிக்கும் அதே காவல்துறையினரும் மருத்துவக்குழுவினரும் வந்துவிட்டிருந்தனர். கலவியின் உச்சத்தில் தன்னுறுப்பை வெறிநாயொன்று கவ்வியதுபோலிருந்தது என்றும் அப்போதிருந்து கடுத்துக் கடுத்து ஏற்படும் வலியில் உயிர்போகிறதென்றும் அழுகையினூடாக தெரிவித்தாள். தீவிர பரிசோதனைக்குப் பிறகு அவளது உறுப்பின் ஓரங்களில் பற்கள் பதிந்திருப்பதை கண்டறிந்தது மருத்துவக்குழு.

அவளது கணவன் மீது சந்தேகம் கொண்ட மருத்துவர்கள் அவனை தனியே அழைத்து விசாரித்தபோது, அண்டைநாட்டிலிருந்து வெளியாகும் இந்தியா டுடே பத்திரிகையில் வந்த ஒரு அதிமுக்கிய ஆய்வுக்குப் பிறகு ஓரல் செக்ஸில் ஈடுபட வேண்டும் என்ற ஆர்வம் தனக்கிருந்தாலும் தன் மனைவி அதற்கு இணங்குவதில்லையாதலால் அவ்வாறான முயற்சியில் தான் ஒருபோதும் ஈடுபட்டதில்லை என்று பிள்ளைகள் மீது சத்தியம் செய்து வாக்குமூலம் தந்தான். அவ்வாறானால் பற்குறி பதிந்தது எவ்வாறென்ற அடுத்தக்கட்ட ஆராய்ச்சியில் இறங்கிய மருத்துவர்குழு, அவன் பயன்படுத்தியிருந்த ஆணுறையின் மீது புஷ் உருவம் அச்சிடப்பட்டிருந்ததைக் கண்டறிந்து அதிர்ச்சியடைந்தது.

அன்றிரவு பயன்படுத்தப்பட்ட பல்வேறு ஆணுறைகளை தேடியெடுத்து நுண்ணோக்கி வழியாக கூர்ந்து கவனித்ததில் புஷ்ஷின் கடைவாயில் கோரைப்பற்கள் முளைத்திருந்ததை காணமுடிந்தது. குறிப்பிட்ட அந்த நேரத்தில் கலவிகொண்டிருந்த பெண்கள் அனைவருமே கன்ஸ்யூமரேஸ்வரிக்கு நேர்ந்து போன்றே தம்முறுப்பையும் திடீரென ஒரு வெறிநாய் கவ்வியதைப்போல் வலிகண்டு அலறியதாக கொடுத்த வாக்குமூலங்களின் அடிப்படையில் வலிக்கான காரணம் புஷ் படம்தான் என்ற முடிவுக்கு வந்தது நிபுணர்குழு.

வீட்டின் அலமாரிகளில் பிள்ளைகளின் கண்ணுக்குப்படாமல் ஒளித்துவைத்திருந்த ஆணுறைகளைத் தேடியெடுத்து சோதித்தபோது பயன்படுத்தப்படாத அவற்றிலும் புஷ் உருவம் அச்சாகிவிட்டிருந்தது தெரியவந்தது. கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஆணுறைகளும் அதேகதிக்கு மாறியிருந்தன. அந்த உறையை மாட்டிக்கொள்ளும் பட்சத்தில் தன் மனைவியோடு கூடுவது தான்தானா அல்லது உறைமீது அச்சாகியிருக்கும் புஷ்ஷா என்ற கேள்வி எல்லா ஆண்களையும் நிம்மதியிழக்கச் செய்துவிட்டது. எல்லா ஆண்களும் ஒரேமாதிரியான உளைச்சலில் வெந்து கந்தலாகிக் கொண்டிருந்தார்கள். வெறும் படம் என்கிற நிலையிலிருந்து கொஞ்சங் கொஞ்சமாக பேருருவெடுத்து புஷ் தன்வீட்டு படுக்கையறையை ஆக்கிரமித்துக் கொண்டதாக நினைத்து நடுங்கத் தொடங்கினர்.

பெண்களைப் பொறுத்தவரை இந்தப் பிரச்னைக்கு ஒரு முடிவுகட்டாமல் ஆண்களை பக்கம் சேர்ப்பதில்லை என்ற தீர்மானத்திற்கு வந்திருந்தார்கள். படுக்க வருகிறவன் கூடவே இன்னொருத்தனையும் இழுத்து வந்திருப்பதைப்போல புருசனை பரிகாசமாகவும் அருவறுப்பாகவும் பார்க்கத் தொடங்கினர். இது கூட்டிக்கொடுக்கிற வேலையா அல்லது தன் மனைவியின் அந்தரங்க உறுப்பைக் காட்டிக்கொடுக்கிற வேலையா என்று கிணற்றடியிலும் பணியிடங்களிலும் வாதப்பிரதிவாதங்கள் கிளம்பி அனல் பறந்துகொண்டிருந்தது. முதல்ல அவனை விரட்டி வெளியேத்திட்டு வாடா ஆம்பிளை என்பது போன்ற பார்வையின் உக்கிரம் தாங்காமல் தலைகவிழ்ந்து திரிவது ஆண்களின் இயல்பாயிற்று. வீட்டில்தான் அண்டமுடியாமல் போய்விட்டதே என்று வெளியே போனால், ‘அமெரிக்காவுடன் கூட்டு, தொழிலில் பங்குதாரர்னு இதைத்தான் இத்தனைநாளா பீத்திக்கிட்டு திரிஞ்சிங்களாடா’ என்று பாலியல் தொழிலாளிகள் அடித்த நக்கலில் நாண்டுக்கொண்டு சாகலாம் போலிருந்தது.

பணத்தாளில் குளறுபடி ஏற்பட்ட அதே நேரத்திலிருந்துதான் ஆணுறைப் பிரச்னையும் தொடங்கியிருக்கக்கூடும் என்று மருத்துவ மற்றும் தடயவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

பிள்ளையை பெறுவதே அமெரிக்கா அனுப்பத்தான் என்ற கனவில் சஞ்சரிக்கிறவர்களாக கிட்டதட்ட எல்லோருமே இருந்தபடியால் பணத்தாளிலும் கக்கூஸ் சுவற்றிலும் இன்னோரன்ன பொதுஇடங்களிலும் புஷ்ஷின் படம் தென்படத் தொடங்கியதும் பலரும் உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள். தங்கள் வீட்டு தொலைபேசி எண் அமெரிக்காவின் எண்ணாக மாறிவிட்டதை, தங்கள் நாடு அமெரிக்காவின் ஒருபகுதியாக இணைக்கப்பட்டுவிட்டதற்கான சமிக்ஞையாகவே பாவித்து அவர்கள் உள்ளூர மகிழ்ச்சிதான் கொண்டார்களேயன்றி வித்தியாசமாக எதையும் உணராமல்தானிருந்தனர். ஆனால் இந்த ஆணுறை விவகாரம் அப்படியல்லவே?

ஏற்கனவே கற்பு என்கிற காப்புவேலிக்குள் அடைக்கப்பட்ட தன்வீட்டுப் பெண்களின் குறிக்குள் ஒரு அயலான் சென்று வருவதை எப்படித்தான் தாங்கிக்கொள்ள முடியும்? அது என்னதான் புகைப்படமாய் இருந்தாலும்கூட தாங்கள் போற்றிவந்த கற்புநெறிக்கு பங்கம் விளைவிக்கிற மானக்கேடுதான் என்று ஆண்களின் குமைச்சல் பெரும் அரசியல் சிக்கலாக மாறிவிட்டிருந்தது நாட்டுக்குள். காணும் இடங்கள் தொடங்கி கண்ணுக்குத் தெரியாத அந்தரங்கம் வரை புஷ்ஷால் ஊடுருவ முடிந்ததென்றால் அது ஆட்சியாளர்களின் துணையின்றி சாத்தியமாகி இருக்க முடியாது என்று மக்கள் விவாதிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆணுறைகளிலிருக்கும் புஷ் படத்தை உடனே நீக்கவேண்டும் அல்லது அவற்றை எரிக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் முன் இருபத்திநான்கு மணிநேரமும் இடையறாத முழக்கங்கள் ஒலிக்கத்தொடங்கின. மக்களை எதிர்கொள்ள முடியாமல் அமைச்சரகத்திலேயே முடங்கிக் கிடந்த சுகாதார மந்திரி பின்வாசல் வழியாக தப்பியோட முயற்சிக்கும்போது அவரது வாகனத்திற்கு முன்பும் பக்கவாட்டிலும் திரண்டு புரள்கிறது பெருங்கூட்டம்.

வண்டியை மேற்கொண்டு ஒரு அங்குலம்கூட நகர்த்த முடியாதபடி கூட்டம் சூழ்ந்தேறியது. மந்திரியின் காரை மறித்தது மந்தையாய் அலைகிற மாடுகளோ எருமைகளோ அல்ல. மக்கள். குறிப்பாக பெண்கள். அப்பன் தயவில் ராஜ்யசபா எம்பியாகவோ மாமனார் தயவில் பத்திரிகையாசிரியராகவோ ஆவதற்கு வக்கற்றுப்போன வெறும் பெண்கள். மந்திரி மீது அவர்கள் சரமாரியாய் வீசிய அத்தனையும் ஆணுறைகள். அதுவும் பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள். சகித்துக்கொள்ள முடியாத துர்வாடையுடன் தன்மீது வந்து விழுகிற ஆணுறைகளை தடுக்க அவர் மேற்கொண்ட தடுப்பு நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை. காயாமல் உறைகளுக்குள் தேங்கியிருந்த விந்துத்துளிகள் அவரது முகமெங்கம் தெறித்து வழிந்ததை நல்லவேளையாக அவரது குடும்பத் தொலைக்காட்சி படம் பிடிக்கவில்லை. ஆனால் புஷ் மீது முண்டாஸர் ஷூ வீசியதற்கு இணையாக இந்த ஆணுறை வீச்சும் சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக காட்டப்பட்டது.

தாக்குதலால் நிலைகுலைந்த அமைச்சர் நட்டநடுரோட்டில் கூட்டத்தின் முன்னே மண்டியிட்டு அழத்தொடங்கினார். ‘இப்படி ஆணுறைகள் மீது புஷ் படம் பொறிக்கப்படுவதற்கு நானோ என் தந்தையோ என் குடும்பத்தாரோ இதில் சம்பந்தப்பட்டிருந்தால் நடுத்தெருவில் நிற்க வைத்து சாட்டையால் அடித்து சவுக்கால் வெளுத்து தண்டியுங்கள்...’ என்றார். உனக்கும் உங்கொப்பனுக்கும் இதைவிட்டா வேற பொய்யே தெரியாதா என்று எரிச்சலோடு கத்தியக் கூட்டம் கைவசம் மிச்சமிருந்த ஆணுறைகளை அவர்மீது எறிந்துவிட்டு பாராளுமன்றத்தை முற்றுகையிட கிளம்பியது.

தன் ஆண்மைக்கும் மனைவியின் கற்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக புஷ் மாறிவிட்டதாக அன்னாடங்காய்ச்சி தொடங்கி அமைச்சர் பெருமக்கள்வரை எல்லோருமே அஞ்சத் தொடங்கியதால் விஷயம் பாராளுமன்றத்தின் விவாதத்திற்கும் வந்துவிட்டிருந்தது. இதற்கென கூட்டப்பட்ட சிறப்புக்கூட்டத்தொடர் உலகெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பிவிட்டிருந்தது.

3.

லிபரல் பாளையத்தின் பாராளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக பணம் வாங்காமலே கேள்வி கேட்பதற்காக அனைத்து உறுப்பினர்களும் ஆஜராகியிருந்தனர். பதவி பிரமாணம் எடுத்துக்கொண்ட நாளுக்குப் பிறகு அவையின் மொத்த உறுப்பினர்களும் பங்கேற்கிற கூட்டத்தொடர் இதுவாகத்தான் இருக்கும் என்று ஊடக ஆய்வாளர்கள் வியப்பு தெரிவித்தனர். பார்வையாளர் மாடங்களில் இருந்து யாரேனும் ஆணுறைகளை வீசிவிடுவார்களோ என்ற பயம் எல்லோரையுமே பீடித்திருந்தது. அவை உறுப்பினராயிருந்த பெண்கள் ‘இது ஆம்பிளைங்க சமாச்சாரம்’ என்பதுபோல அமைதிகாத்தனர். அரங்குநிறைந்த காட்சிகள் அடுத்தடுத்து அரங்கேறும் களமாக பாராளுமன்றம் மாறிக்கொண்டிருந்தது.

சபாநாயகர் பழக்கதோஷத்தில் ‘ப்ளீஸ் டேக் யுவர் சீட்’ என்று தொண்டைத்தண்ணீர் வற்ற கத்திக்கொண்டிருந்த போதும் புஷ் எதிர்ப்பாளர்கள் சிலரைத் தவிர பிரதமர் உள்ளிட்ட பெரும்பான்மையான உறுப்பினர்கள் நின்றுகொண்டே இருந்தனர். சபாநாயகர் இருக்கைக்கு பின்புறமிருந்த சுவரில் தொங்கிக்கொண்டிருந்த புஷ்ஷின் புகைப்படத்திற்கு முன்பாக உட்காருவது மரியாதைக்குறைவான செயல் என்பதாலேயே தாங்கள் நின்று கொண்டிருப்பதாக ஆளுங்கட்சி கொறடா தெரிவித்தக் கருத்தை எதிர்க்கட்சிக் கொறடாவும் ஆமோதித்தார். கடைசியில், புஷ்ஷின் புகைப்படத்துக்கு முன்பு இருக்கையில் உட்கார மறுக்குமளவுக்கு விசுவாசம் கொண்டவர்கள், வேண்டுமானால் தரையில் முட்டி போட்டுக்கொண்டு பங்கேற்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, வீட்டுப்பாடம் முடிக்காத பள்ளிக்கூட பிள்ளைகளைப்போல முட்டி போட்டிக்கொண்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கெடுத்த அக்கூட்டத்தொடரின் லட்சணங்கள் உலகில் முன்னெப்போதும் நடந்திராதவை.

லிபரல்பாளையம் நாடாளுமன்ற அலுவல்விதி பன்னிரண்டின் கீழ் ஏழின்படி விவாதத்தை எதிர்க்கட்சித் தலைவர்தான் துவக்கிவைத்துப் பேசவேண்டியிருந்தது. ‘எங்கள் ஆட்சியில் லிபரல்பாளையம் டாலடிக்கிறது’ என்று அவர் சொன்னதை ‘எங்கள் ஆட்சியில் லிபரல்பாளையம் டல்லடிக்கிறது’ என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்ததாகப் புரிந்துகொண்டு கடந்தத் தேர்தலில் மக்கள் அவரது கட்சியை தோற்கடித்துவிட்டதால் பிரதமராகும் வாய்ப்பை இழந்துவிட்ட சோகம் அவரை நிரந்தரமாய் பீடித்திருந்தது. எனவே இப்போதெல்லாம் அவருக்குப் பேசுவதில் பெரிய அளவுக்கு நாட்டம் இருப்பதில்லை. தூக்கத்திலிருந்து விழித்தவர்போல அவ்வப்போது ‘கொல்லை தாண்டிய குதர்க்கவாதத்தை கட்டுப்படுத்தவேண்டும்’ என்று அறிக்கை விடுவதோடு தன் அரசியல்பணி முடிந்துவிட்டதாக அமைதி பூண்டிருந்தவர், விரைவில் வரப்போகும் தேர்தலை முன்னிட்டு கொஞ்சம் சுறுசுறுப்படைந்துவிட்டார். எனவே அமெரிக்கா சம்பந்தப்பட்ட பிரச்னையில் தங்கள் கட்சியின் விசுவாசத்தை மிகத்துல்லியமாக எடுத்துரைக்கக்கூடிய வல்லமை தனக்கு மட்டுமே உண்டென வாதிட்டு பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் சுருக்கம் வருமாறு-

இந்த நாட்டின் தந்தையென்றும் குழந்தைகளால் தாத்தா என்றும் ஏற்கனவே அறியப்பட்டிருந்த நபர்மீது உண்மையில் எனக்கோ என் இயக்கத்திற்கோ எந்த மரியாதையும் எப்போதும் இருந்தது கிடையாது. இதே காரணத்தால்தான் எங்களது இயக்கத்தைச் சேர்ந்த ஒருவரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று அறிவிப்பதில் நாங்கள் எப்போதும் பெருமை கொண்டிருக்கிறோம். ஆனாலும் புகைப்படமாகவும் சிலையாகவும் நாட்டின் பலபாகங்களிலும் நீடித்திருந்து அவர் ஏற்படுத்திக் கொண்டிருந்த உறுத்தலை எங்களது அன்புக்குரிய புஷ் வந்து இப்போது மாற்றிவிட்டார் என்ற செய்தி ஆயிரம் மசூதிகளை இடித்த மகிழ்ச்சியைத் தருகிறது. நேற்றுவரை இருந்த ஒன்றை இன்று அப்பட்டமாக வேறொன்றாக மாற்றிவிடும் மோசடியை எங்களைப் போலவே புஷ்சும் திறம்பட செய்து முடித்திருப்பதற்காக அவரைப் பாராட்டுகிறோம்.

நாங்கள் இங்கேயிருக்கிறவர்களுக்குத்தான் எதிர்க்கட்சியயொயழிய புஷ்சையோ அல்லது இப்போது ஜெயித்து வந்திருக்கக்கூடிய ஒபாமாவையோ- அவ்வளவு ஏன்- பிற்காலத்தில் அமெரிக்காவை ஆளக்கூடிய யாரோவொரு மிஸ்டர் எக்ஸ்சையோ எதிர்க்கக்கூடியவர்கள் அல்ல என்பதை முதலில் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இன்னும் சொல்லப்போனால், ‘அகண்ட’, ‘ஒற்றை’ ஆகிய எங்களின் கனவு அவர்களின் கனவுடன் மிக இயல்பாகவே ஒத்துப்போவதால் நாங்களும் அமெரிக்க ஆட்சியாளர்களும்தான் இயல்பான கூட்டாளிகளாக இருக்கமுடியும். ஒரு பழிபாவமும் அறியாத அப்பாவிகளை கொன்றொழிக்கும் மனோதிடத்தை நாங்கள் அவர்களிடமிருந்தே பெற்றுக்கொண்டோம் என்பதை இவ்விடத்தில் நன்றியுடன் நினைவு கூர்கிறோம்.

தேர்தலை மனதில் வைத்துக்கொண்டு எல்லாக்கட்சிகளும் இந்த ஆணுறை விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு திடீரென சுதேசிவெறியை கிளப்பிவிட்டு நாடகமாடுவதை எங்கள் கட்சி ஏற்கவில்லை. வழக்கமாய் அந்த நாடகத்தை நடத்துகிற நாங்களே சும்மாயிருக்கும்போது மற்ற கட்சிகளெல்லாம் இப்படி நடந்துகொள்வது ஓவர் ஆக்டாகத் தெரிகிறது. எங்களைப்போல அவர்களுக்கு இயல்பாக நடிக்கத் தெரியவில்லை என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறு ஆணுறையின் மீது படம் அச்சடிக்கப்படுவதில் தவறொன்றுமில்லை என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஏற்கனவே பல நிறுவனங்கள் ரிப், டாட்டேட், சென்டேட் என்றெல்லாம் பல பெயர்களில் அறிமுகப்படுத்தியிருக்கும்போது நமது பிரியத்திற்குரிய தலைவர் புஷ்சின் படம் அச்சடிக்கப்பட்ட ஆணுறைகளை பிரிண்டட் காண்டம்ஸ் என்று புழக்கத்திற்கு விடலாமே?

நமது அண்டைநாடான இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங், புஷ்சை சந்திக்க தன்நாட்டு மக்கள் பேராவலுடன் காத்திருப்பதாக கூறியிருப்பதை இவ்விடத்தில் நினைத்துப் பாருங்கள். அவர்கள் புஷ்சுக்காக இன்னும் காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் நம் லிபரல்பாளையத்தின்மீது பெருமதிப்பும் பிரியமும் கொண்டிருக்கிற புஷ் நம் ஒவ்வொருவரின் வீட்டிலும் படுக்கையறையிலும் வெட்கத்தை விட்டுச் சொல்வதாயிருந்தால் நம்நாட்டுப் பெண்களின் யோனிக்குள்ளும் விஜயம் செய்யும் தாராள மனம் கொண்டவராயிருப்பது கொண்டாட்டத்திற்குரிய விசயமில்லையா?

எதிர்க்கட்சித் தலைவரின் தொடக்கவுரையால் எரிச்சலடைந்த உறுப்பினர்கள் பலரும் ‘அமெரிக்கான்னு வந்துட்டா ஆளுங்கட்சி எது எதிர்க்கட்சி எதுன்னு வித்தியாசமில்லாம ஆயிடுதே என்று குழம்பிப்போயினர். நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த அசம்பாவிதங்களின் பின்னே இருக்கும் மர்மங்கள் குறித்து அடுத்தநாள் அரசின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்ற அறிவிப்புக்குப் பிறகு அவை மறுநாளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தநாள் கூட்டத்தை நேரடி ஒளிபரப்பில் நாடும் உலகமும் பார்த்துக்கொண்டிருக்க, அறிக்கையுடன் வந்த அமைச்சர்கள் உள்ளுக்குள் உதறலோடுதான் இருந்தனர்.

அமைச்சர்கள் தந்த விளக்கங்கள் யாருக்கும் திருப்தியளிக்கவில்லை என்ற நிலையில் அவையின் ஆயுட்காலமே முடிவடைந்துவிட்டது. அன்று நள்ளிரவில் அவை தன் கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் தருவாயில், இப்பிரச்னை முழுக்க முழுக்க புஷ் சம்பந்தப்பட்டதால் அமெரிக்காதான் விளக்கமளிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை நிறைவேற்றி ஒபாமாவுக்கு அனுப்பிவைத்தது. ஒபாமாவின் பதிலுக்காக உலகமும் லிபரலப்பனும் காத்துக்கிடந்தனர்.

புஷ்சுக்கும் தனக்கும் தோலைத்தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை என்று நிரூபிப்பதா அல்லது இருவருக்குமிடையில் தோல் மட்டுமே வித்தியாசமில்லை என்று நிரூபிப்பதா என்ற பெருங்குழப்பத்தில் இருந்த ஒபாமா லிபரல்பாளையத்தின் தீர்மானம் புதிய தலைவலியாக வந்து சேர்ந்திருந்தது. வெள்ளைமாளிகையின் புல்வெளியில் சர்வதேச செய்தியாளர்கள் குவிந்துநிறைந்தனர். சற்றே இறுகிய முகத்துடன் காணப்பட்ட ஒபாமா அதிகம் பேசவில்லை.

வெள்ளைமாளிகை சார்பாக செய்தியாளர்களுக்கு பத்திரிகைச் செய்திக் குறிப்புடன், ஒப்பந்தம் ஒன்றின் நகலும் பூதக்கண்ணாடியொன்றும் தரப்பட்டது. முந்தைய அதிபர் புஷ்சும், லிபரல்பாளையம் சார்பாக ம.சியும் ப.சியும் கையெழுத்திட்டிருந்த ஒரு ஒப்பந்தத்தின் நகல் அது. ஒப்பந்தத்தின் முதற்பக்கத்து கடைசிவரியில் பொடியாக ஒரு நட்சத்திரத்தைப் போட்டு ‘டெர்ம்ஸ் அண்ட் கண்டிசன்ஸ் அப்ளை’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாம் பக்கத்திலிருந்து தொடங்கி அடுத்துவந்த 900 பக்கங்களிலும் பொடி எழுத்தில் டெர்ம்ஸ் அண்ட் கன்டிஷன்ஸ் நிரம்பிக்கிடந்தது. அவற்றைப் படித்துப் பார்க்கத்தான் பூதக்கண்ணாடி கொடுத்திருந்தார்கள்.

‘லிபரல்பாளையத்தில் நடந்துவரும் மாற்றங்கள் எதுவும் தங்களுக்குத் தெரியாது என்று அந்நாட்டின் அமைச்சர்கள் கூறுவதை ஏற்றுக் கொள்ளமுடியாது. குறிப்பிட்ட நாளின் நள்ளிரவு 12 மணியிலிருந்து லிபரல்பாளையத்தின் எல்லாமே அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டு அதன் நேரடி கண்காணிப்பில் இயங்குவதற்கு சம்மதம் என்று அந்நாட்டு அமைச்சரவை சார்பாக இந்த ஒப்பந்தத்தில் ம.சியும் ப.சியும் கையெழுத்துப் போட்டிருப்பதை நீங்களே பாருங்கள். அந்தநாள் வந்ததும் ஒப்பந்தப்படி தானாகவே எல்லாம் மாறத்தொடங்கி விட்டன. இனி புஷ்சே நினைத்தாலும் அதை மாற்றவோ தடுக்கவோ முடியாது. நிபந்தனைகளைப் படிக்காமல் காட்டுகிற இடத்திலெல்லாம் கையெழுத்துப் போட்டுவிட்டு இப்போது எல்லாத்துக்கும் காரணம் அமெரிக்கான்னு குற்றம்சாட்டும் பொறுப்பற்ற செயலை லிபரல்பாளைய அமைச்சர்கள் உடனே நிறுத்திக்கொள்ளவேண்டும்’ என்று ஒபாமா சொல்லி முடித்தபோது டிவி பார்த்துக்கொண்டிருந்த மேற்படி அமைச்சர்கள் ‘யெஸ் பாஸ்’ என்று எழுந்து நின்று சல்யூட் அடித்தனர்.

இன்னும் என்னென்ன அழிமானங்களுக்கு கையெழுத்துப் போட்டிருக்காங்களோ தெரியல. இப்பவாச்சும் அந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முழுசா படிச்சுப் பார்ப்போம் என்று லிபரல்பாளையத்தின் தேர்தல் களத்தில் சூடாக நடந்துகொண்டிருக்கும் விவாதத்தில் பங்கெடுப்பதா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கிறார்கள் நமது லிபரலப்பனும் அவரது குடும்பத்தாரும்.

(நன்றி: உயிரெழுத்து)

- ஆதவன் தீட்சண்யா (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)