அந்த நல்ல செய்தி அன்றைய தபாலில் வந்தது. நான் தபாலை முழுமையாக படித்து முடிப்பதற்குள் எம் ஆர் மூலமாக பள்ளிக்கூடம் முழுமைக்கும் செய்தி பரவிவிட்டது. ஆசிரியர்கள் அனைவரும் தலைமை ஆசிரியர் அறையில் கூடிவிட்டனர். எனக்கு ஏற்பட்ட சந்தோஷத்தில் எல்லோருக்கும் டீயும் வடையும் வாங்கி வரச்சொல்லி ஒரு பையனை அனுப்பி வைத்தேன்.

School விஷயம் இதுதான்.

கைகாட்டி அரசினர் உயர்நிலைப்பள்ளிக்கு மூன்று வகுப்பறைகள் கொண்ட கட்டிடம் கட்டிக் கொள்ள நாலரை லட்ச ரூபாய் ஒதுக்கியிருப்பததாகவும், பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போட்டு அனுப்ப வேண்டுமென்றும், கல்விக்குழு அமைத்து தலைமை ஆசிரியரின் மேற்பார்வையிலேயே கட்டிடம் கட்டிக் கொள்ளலாம் என்று மேலிடத்து அறிவுரை. பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தீர்மானம் நாளை மாலை நேரடியாக முதன்மைக் கல்வி அலுவலரிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் உத்தரவு.

இதேபோன்று நேரடியாக முதன்மைக் கல்வி அலுவலரிடம் தபாலை ஒப்படைக்க வேண்டும் என்று பல சந்தர்ப்பங்களில் உத்திரவு வந்தது உண்டு. அவ்வாறு செய்யாமற்போனால் தலையை வெட்டிவிடுவோம் என்ற தொனியிலும் உத்திரவு வந்தது உண்டு. தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருக்கும் நான் தட்டுத்தடுமாறி பதில் தயாரித்துக்கொண்டு மாலை நாலுமணிக்கே பதறி அடித்துக்கொண்டு கல்வி அதிகாரியின் அலுவலகத்தை ஓடிப்பிடித்து ஆளில்லா நாற்காலிகள் மின்விசிறியின் சுகத்தை அனுபவித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஓடிக்களைத்த ஒரு பியூன் வாசலுக்கு வெளியே இருந்த வாய்பிளந்த பெட்டியில் அந்த தபாலை போட்டுவிட்டுப் போகும்படி எனக்கு கைகாட்டுவார்.

என்றாலும் இன்றைய விஷயம் சாதாரணமில்லையல்லவா?

புதிய கட்டிடத்தில் பெரிய கரும்பலகை நிறைய கணக்குப்போட்டு, சொல்லித்தரும் சுகம் அனுபவித்தால்தான் புரியும்.

மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதற்கு எனக்கு ஆலோசனை தேவைப்பட்டது. தலைமை ஆசிரியர் பொறுப்பில் இருக்கும்போதெல்லாம் நான் எம் ஆரின் ஆலோசனையை தவறாமல் கேட்பேன். அந்தப் பள்ளிக்கூடம் தொடக்கப் பள்ளியாக இருந்த காலம் முதல் எம் ஆர் அந்த ஊரில் வேலைசெய்கிறார். ஊரில் நிறைய பேர் அவரிடம் படித்தவர்கள். எட்டாம் வகுப்புவரை எல்லா பாடங்களையும் நன்றாக சொல்லித் தருவார். எதிரில் உள்ளவர் பொடி போட்டால் அவரிடம் பொடி வாங்கி இவரும் போடுவார். எதிராளி வெற்றிலை போட்டால் இவரும் வெற்றிலை எடுத்துக் கொள்வார். முதல் பீயரியட் பாடம் நடத்தி முடித்தவுடன் எனக்குப் பசிக்கும். பக்கத்து டீக்கடையில் ஐம்பது காசுக்கு சுண்டல் பொட்டலம் வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவேன். ஐம்பது காசுக்கு அவ்வளவு அதிகமான சுண்டல் தமிழ்நாட்டில் எங்கேயும் கிடைக்காது என்பது என் அபிப்பிராயம்.

ஒரு சிரிப்பும் விசாரிப்புமாக எம் ஆர் அங்கே வருவதும் கைநிறைய சுண்டலை அள்ளிக் கொள்வதும் வாடிக்கை. நல்ல கிறிஸ்துவர். தன்னுடைய இரண்டு பெண்களையும் பாதிரிமார்களின் அனுகிரகத்தினால் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படிக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் கொஞ்ச காலத்தில் தன்னுடைய கஷ்டம் குறைந்துவிடும் என்றும் நம்பிக்கொண்டிருந்தார். நாள் மணி சுத்தமாக ஆறுமாதம் கணக்குப்பார்த்து பி எப் லோனுக்கு விண்ணப்பம் கொடுத்துவிடுவார். பள்ளிக்கூட எழுத்தர் ''ராஜா வீட்டுக் கன்னுக்குட்டி''. அதாவது அவர் முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகத்தில் வேலை பார்த்தவர் என்பதால் பள்ளிக்கூடத்திற்கு அவ்வப்போது வந்து போவார். அதுமாதிரியான சந்தர்ப்பங்களில் எம் ஆரே பில் எழுதி கருவூலத்திற்கு சென்று அன்றே காசாக்கிவிடுவார். வகுப்பறையில் எம் ஆரின் மேஜைமேல் ஒரு மூலையில் வெள்ளை நிற துணிப்பை மடித்துவைக்கப்பட்டிருக்கும். மாலையில் டியூஷன் என்ற பெயரில் சில மாணவர்கள் அவரிடம் வருவதும் போவதுமாக இருப்பார்கள். வீட்டிற்குப் போகும்போது சைக்கிள் கேரியரில் அந்தப்பை உட்கார்ந்திருக்கும். கேழ்வரகோ, சோளமோ, கடலைக்காயோ, அரிசியோ அதில் நிறைந்திருக்கும்.

இன்றுவந்த தபால் விஷயமாக உடற்கல்வி ஆசிரியரையும் கலந்து கொள்ளுமாறு எம் ஆர் ஆலோசனைகூறி அவரையும் கூட்டிவந்தார். உடற்கல்வி ஆசிரியர் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர். அக்கம்பக்கத்து பள்ளிகளிலேயே பணியாற்றி பழம் தின்று கொட்டை போட்டவர். அந்த ஊரில் அவரை சிலர் பங்காளி என்றும் பலர் மாப்பிள்ளை என்றும் அழைப்பதை நான் கேட்டிருக்கிறேன். அவருடைய வயலுக்குப் போகும் வழியில் பள்ளிக்கூடம் இருப்பதாக அவரே என்னிடம் ஒரு முறை கூறியிருந்தார். ஆனால் பள்ளிக்கூடம் போகும் வழியிலும் அவருக்கு வயல் இருப்பதாக எம் ஆர் சொல்லித் தெரிந்துகொண்டேன்.

அடுத்தநாள் மாலை நான்குமணிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெறும் என்று ஊரில் உள்ள முக்கியஸ்தர்களுக்கு பியூன் மூலம் தகவல் தெரிவிப்பது என்றும், பெற்றோர்களுக்கான தகவலை மாணவர்கள் மூலம் அனுப்பிவிடுவது என்றும் முடிவாயிற்று.

அந்த உயர்நிலைப்பள்ளி பிறந்ததில் இருந்து இதுவரை நடைபெற்ற காரியங்கள் அனைத்தும் பள்ளி வளர்ச்சிக்குழுவின் உதவியினால்தான் நடைபெற்று வந்தது. குழு என்றவுடன் ஏதோ பத்து இருபது பேர்கள் இருப்பார்கள் என்று நினைத்துவிட வேண்டாம். எல்லாமே தலைவர்தான். அதுவும் ஒருகாலத்தில் பஞ்சாயத்துத் தலைவராக இருந்தவர். இப்போதைய பஞ்சாயத்துத் தலைவர் ஒரு பெண்மணி. தலைவர் உட்காரவேண்டிய இடங்களில் பெண்மணியின் கணவர்தான் உட்கார்ந்து இருப்பார். அவருடைய பெயர் எனக்குத் தெரியாது. பள்ளிக்கூட பிள்ளைகள் அவரை கூஜா என்று அழைப்பார்கள். அந்தம்மாள் பஞ்சாயத்துத் தேர்தலில் கூஜா சின்னத்தில் நின்று ஜெயித்ததாகவும் அவரது கணவர் வாக்காளர்களுக்கு கூஜா கொடுத்து ஓட்டுக்கேட்டதாகவும் மாணவர்கள் மூலம் தெரிந்து கொண்டேன். இன்னும் ஒரு முக்கிய நபர் சொசைட்டி பிரசிடெண்டு.

என்னுடைய மாணவர்களுக்கு பிரசிடெண்டு வேறு, தலைவர் வேறு. அரிசியும் மண்ணெண்ணெயும் தரும் சொசைட்டி தலைவரை பிரசிடெண்டு என்று சொன்னால்தான் தெளிவாகப் புரியும். அவரும் பள்ளி வளர்ச்சிக் குழுவில் முக்கியமானவர். இந்த ஆண்டு ஆசிரியர் தினத்தன்று எல்லா ஆசிரியர்களுக்கும் ஸ்வீட்டும் காரமும் பொட்டலம் போட்டு அனுப்பிவைத்தார். அந்தக் குழுவில் கல்லூரிவரை படித்தவர் அவர்தான். அதிகம் பேசமாட்டார். தலைவரைப்போலவே பிரசிடெண்டும் அரசியல் செல்வாக்கு உள்ளவர் என்று எம் ஆர் சொல்லியிருக்கிறார்.

பள்ளிக்கு பொதுமக்கள் தொடர்பு என்பது தலைவர், கூஜா, பிரசிடெண்டு இவர்களோடு சரி. முக்கியமான முடிவுகள் எடுக்கும்போது காலனி வார்டு உறுப்பினர் அனா ருனாவும் அங்கு இருப்பார். இந்த நான்கு பேருக்குமே அந்தப் பள்ளியில் படிக்கக்கூடிய பிள்ளைகள் யாரும் இல்லை. பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மாணவர்களின் பெற்றோர்களாக இருக்கவேண்டும் என்பதுதான் கல்வித்துறையில் சட்டம். அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரை தலைவர்தான் எல்லாவற்றிலும் தலைவர். பெற்றோராக இல்லாத ஒருவரை பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக என்னுடைய அதிகாரிகள் ஏற்பார்களா என்று எனக்கு குழப்பமாக இருந்தது. இதனால் பள்ளிக்கூடத்திற்கு புதிய கட்டிடம் கிடைக்காமற் போய்விடுமோ என்று கவலை வேறு. அந்தக் குழப்பத்தோடுதான் அன்றைய கூட்டத்தில் உட்கார்ந்திருந்தேன்.

களத்தில் கதிர்கட்டு கிடப்பதாகவும் இவர்போய்த்தான் கூலி அளக்கவேண்டும் என்றும் உடற்கல்வி ஆசிரியர் போய்விட்டார். எம் ஆருடைய சைக்கிள் கேரியரில் அன்று அரிசி உட்கார்ந்திருந்தது. அரிசியை தொட்டுக்காட்டி அன்று தான் வேகமாக வீட்டிற்கு போகவேண்டும் என்று எம் ஆரும் போய்விட்டார். பள்ளியில் உள்ள ஆசிரியைகளை அவர்களுடைய கணவன்மார்கள் பரோலில் வந்த கைதியை அழைத்துப்போவதுபோல மோட்டார் சைக்கிள்களில் கால் ஊன்றி காத்து நின்று அழைத்துப் போய்விட்டனர். ஆக ஆசிரியர் தரப்பில் நான்மட்டும் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டத்தில் உட்காரும்படி ஆகிவிட்டது.

தலைவர் இன்னும் வரவில்லை. கூஜாவும் பிரசிடெண்டும் சரியான நேரத்தில் வந்துவிட்டனர். பள்ளிக்கூடத்திற்கு பக்கத்து வீட்டுக்காரன் நீளமாக துண்டு போட்டுக் கொண்டு வந்து உட்கார்ந்தான். அவனுடைய வீட்டு வேலியில் மாணவர்கள் ஒண்ணுக்குப் போவதாகவும் அதுபற்றி தலைவரிடம் புகார் சொல்ல வேண்டுமென்பதும் அவனுடைய நோக்கம்.

கோலமாவுக்காரன் அவனுடைய துருப்பிடித்த சைக்கிளை வாசலில் நிறுத்திவிட்டு உள்ளே வந்து உட்கார்ந்தான். அன்று காற்று வேகமாக அடித்ததால் வியாபாரத்திற்கு போகமுடியவில்லை என்று சலித்துக் கொண்டான். வருகிற தீபாவளிக்குள்ளாகவாவது அவனுடைய பெண்களுக்கு இலவச பாவாடை சட்டை கிடைக்குமா என்று தெரிந்துகொண்டு போகவேண்டும் என்பது அவனுடைய நோக்கம்.

முன்னாள் மாணவர்கள் சிலர் வெற்றுடம்பில் லுங்கியும் கழுத்தில் அருவித்துண்டுமாக மண்வெட்டியுடன் வாசலை மறைத்து நின்று கொண்டிருந்தனர். பள்ளிக்கூடத்திற்கு பின்னால் இருந்த கடலைக்கொல்லைக்கு தண்ணீர் கட்டிக் கொண்டிருந்ததாகவும் கூட்டம் எப்படி நடக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டு வந்ததாகவும் பியூனிடம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

பக்கத்து டீக்கடை பெஞ்சில் ஒரு கூட்டம் குசு குசு வென பேசிக்கொண்டு உட்கார்ந்திருந்தது. புதியதாக பள்ளிக்கூடம் கட்ட தலைமை ஆசிரியரிடம் இன்று நாலரை லட்ச ரூபாய் வந்திருப்பதாகவும் அன்றைய கூட்டத்திலேயே யாராவது ஒரு காண்ட்ராக்டரிடம் ஒப்படைக்கப்போவதாகவும் எவனோ கிளப்பிவிட்ட செய்தியை நம்பி அந்த உள்ளூர் காண்ட்ராக்டர்கள் கூட்டம் உட்கார்ந்திருந்தது.

எப்போதும்போல் தலைவர் தாமதமாகத்தான் வந்தார். அனா ருனாவின் வெஸ்பாவும் அப்போதுதான் உள்ளே வந்தது. காலனித் தெருவில் இருந்து நிறைய பேர் கூட்டத்திற்கு வருவார்கள் என்று எதிர்பார்த்தேன். அனா ருனாவைத் தவிர யாரும் வரவில்லை. அன்றாடம் கூலி வேலைக்குப்போய் ஆறுமணிக்கப்புறம் கூலிவாங்கி குடும்பம் நடத்துகிறவர்களுக்கு பெற்றோராவது ஆசிரியராவது கழகமாவது! அவர்கள் கலந்து கொள்கிறமாதிரி கூட்டம் நடத்துவது என்றால் ராத்திரி பத்துமணிக்குமேல்தான் நடத்தவேண்டும். அதெல்லாம் அரசாங்கப் பள்ளிக்கூடத்தில் நடக்கிற காரியமா? நாலுமணி கூட்டத்திற்கே நான் மட்டும்தான் ஆசிரியப் பிரதிநிதியாக உட்கார்ந்திருக்கிறேன்.

நான்குபேர் உட்கார்ந்திருக்கும் இடத்திற்கு தலைவர் வருவதே ஒரு நாடகம்போல் இருக்கும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு கார்களில் வருவார். பள்ளிக்கூடத்து வாசலில் உள்ள மரத்தடியில்தான் காரை நிறுத்துவார். மரத்தடியில் உட்கார்ந்து மனப்பாடப் பாடலை வானத்தையும் பூமியையும் மாறிமாறிப் பார்த்து எழுதிக்கொண்டிருக்கும் என் மாணவர்களின் மனம் கூடுவிட்டுக் கூடுபாய்ந்து காருக்குள் ஏறி உட்கார்ந்துகொள்ளும். அதற்குப் பிறகு மாணவர்கள் கண்களால் பேசிக்கொள்வதைப் பார்க்க எனக்க சுவாரசியமாக இருக்கும். வெள்ளைக் கதர் உடையில் தலைவர் கம்பீரமாக இறங்குவார். தலைவர் நான்குபேர் மத்தியில் உட்கார்ந்திருக்கும் நேரம் பார்த்து டிரைவர் ஒரு தோல்பையை பக்கத்தில் கொண்டுவந்து வைப்பார். பையைத் திறந்து கைத்துண்டை எடுக்கும் சாக்கில் ஒரு நூறு ரூபாய் நோட்டுக்கட்டை வெளியே எல்லோரும் பார்க்கும் வகையில் எடுத்து வைத்துவிட்டு மீண்டும் பைக்குள் வைப்பது அவர் வாடிக்கை. கூட்டத்தில் அவருக்கு எதிரானவர்கள் இருந்தால் அவர்களுக்கு அவர்விடுக்கும் செய்திதான் அந்த நாடகம். தலைவருக்கு அந்த கிராமத்திலேயே ஒரு குடும்பமும் நகரத்தில் ஒரு குடும்பமும் உண்டு. நகரத்து மனைவி ஒரு பிரபலமான வக்கீல். ஏதோ ஒரு பலவீனமான சந்தர்ப்பத்தில் அந்தம்மாளை இவர் வளைத்துப் போட்டுவிட்டார். இவருடைய நிலபுலமும் அந்தம்மாளுடைய பின்புலமும் அந்தக்கிராமத்தின் நிரந்தரத் தலைவராக அவரை ஏற்றுக்கொண்டுவிட்டது.

கூட்டம் ஆரம்பமாகிவிட்டது. வெளியில் நின்று கொண்டிருந்தவர்கள் தலைவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு உள்ளே வந்து உட்கார்ந்தார்கள். முந்தைய நாள் வந்த கடித விவரத்தை கூட்டத்தில் எடுத்துச் சொன்னேன். பெற்றோர் ஆசிரியர் கழகம் அமைக்கப்படவேண்டும் என்றும் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கவேண்டும் என்றும், செயலாளராகவும் பொருளாளராகவும் தலைமை ஆசிரியரே இருப்பார் என்றும் மற்ற பதவிகளுக்கும் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் விபரம் கூறினேன். தற்போது பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் மட்டும்தான் பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் உறுப்பினர்களாக இருக்கவேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறிவிட்டு அமர்ந்தேன்.

யாரும் பேசவில்லை. எல்லோரும் தலைவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். கூஜா மட்டும் சிரிப்பதுபோல் முகத்தை வைத்திருந்தார். அவருக்கு வெளிமூலம் என்றும் மூலம் தள்ளி வலி எடுக்கும்போதெல்லாம் அவர் பல்லை இளிப்பது எனக்கு சிரிப்பதுபோல் தோன்றியிருக்கிறது என்று அடுத்த நாள்தான் எம் ஆர் விபரம் சொன்னார்.

மாணவர்களின் பெற்றோர் யார் யார் வந்திருக்கிறார்கள் என்று என்னிடம் தலைவர் கேட்டபோது நான் கோலமாவுக்காரனைக் கைகாட்டினேன். கூட்டத்தில் எல்லோரும் சிரித்தார்கள். கோலமாவுக்காரனும் சிரித்தான். வேறு யாரும் பேச முன்வராததால் தலைவர்தான் பேசினார். பேச்சை முடித்து வைக்கும் தொனியிலேயே பேசினார்.

நடுநிலைப்பள்ளியை உயர்நிலைப்பள்ளியாக மாற்றவேண்டும் என்று கிராமப் பஞ்சாயத்தில் தீர்மானம் போட்டது..... பின்னர் ஊராட்சி ஒன்றியத்தில் தீர்மானம் போட்டது... உயர்நிலைப்பள்ளிக்கான இடத்தைப் பார்க்கவந்த அதிகாரியிடம் எதிரில் வறண்டு கிடந்த குளத்தையும் மாடு மேய்ந்து கொண்டிருந்த கோவில் திடலையும் காட்டியது...... பணம் கட்டவேண்டும் என்று அரசாங்க கடிதம் வந்த அன்றே தன்னுடைய சொந்தப் பணம் பத்தாயிரத்தை முன்பணமாகக் கட்டியது.... புதிதாக வந்த உள்ளூர் அதிகாரி உயர்நிலைப்பள்ளி வழங்க விதிகளில் இடமில்லை என்று கைவிரித்தபோது மேலிடத்தை நெருக்கி ஒரே நாளில் உத்தரவு பெற்றது..... மேலிடத்து உத்திரவுப்படி உள்ளூர் அதிகாரியே எல்லோருக்கும் முன்னதாக வந்திருந்து அந்தப் பள்ளியை திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கியது..... அமைச்சரும் அவரும் ஒரே படுக்கையில் படுத்துக்கொண்டு அரசியலை அலசி ஆராய்ந்தது.... எல்லாவற்றையும் கூட்டத்திற்கு சொல்லிவிட்டு உட்கார்ந்தார்.

அங்கு இருந்த அமைதியைத் துரத்துகிறமாதிரி அனா ருனாதான் பேசினார். தலைவர் பழைய கதையையே பேசிக் கொண்டிருப்பார் என்றும் இனிமேல் செய்யப் போவதைப் பேசட்டும் என்றும் வேண்டுகோள் வைத்துவிட்டு என்னை அர்த்தத்துடன் பார்த்தார்.

பள்ளி மாணவர்களுக்கு சம்பந்தமில்லாத ஒருவரை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவராக ஏற்றுக்கொள்ள நான் தயாராகிக் கொண்டிருந்தேன்.

கல்வி அதிகாரிகள் இதை ஏற்பார்களா என்றும் கட்டிடம் கிடைக்காமற் போய்விடுமோ என்றும் நான் குழப்பத்தில் இருந்தேன். தொடர்ந்து தலைவர்தான் பேசினார்.

அரசாங்கம் கொடுக்கப் போகிற நாலரைலட்ச ரூபாயில் கட்டிடம் கட்ட வேண்டுமென்றால் கோவில் நிலத்தில்தான் கட்டவேண்டும். அதற்கு அறநிலையத்துறை விலை நிர்ணயம் செய்யவேண்டும். அதன்பிறகு அறநிலையத் துறையிடமிருந்து கிராமத்தினர் பொதுப்பணத்தைக் கொடுத்து இடத்தை கிரயம் வாங்கி முதன்மைக்கல்வி அலுவலர் பெயருக்கு கிரயப்பத்திரம் செய்து கொடுக்கவேண்டும். அதன்பிறகுதான் கட்டிட வேலை ஆரம்பிக்க முடியும் என்று எனக்கும் கூட்டத்திற்கும் புரியுமாறு கூறினார்.

இந்தக் காரியங்களையெல்லாம் வேறு யாராவது செய்ய முடியுமானால் அவரையே தலைவராக எழுதிக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு புறப்பட்டுவிட்டார். அனா ருனா என்னை அர்த்தத்துடன் பார்த்துவிட்டு அவரும் புறப்பட்டார்.

கூட்டம் ஏற்கனவே கலைந்து போயிருந்தது. இருட்டத் தொடங்கிவிட்டது.

கோலமாவுக்காரன் எப்போது இடத்தைக் காலி செய்தான் என்பதே தெரியவில்லை.

தலைமை ஆசிரியர் அறையில் அமர்ந்து முதன்மைக் கல்வி அலுவலர்க்கு அறிக்கை தயார் செய்தேன். தலைவருக்கு இன்னுமொரு பதவி கூடியது. அது கைகாட்டி அரசினர் உயர்நிலைப் பள்ளிக்கு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பதவி!

- மு.குருமூர்த்தி, இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)';document.getElementById('cloak136c988485f6ca701d32da3fed9b6130').innerHTML += ''+addy_text136c988485f6ca701d32da3fed9b6130+'<\/a>';
ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்,
101, காவேரிநகர் மேற்கு, தஞ்சாவூர் – 613005