கிட்டத்தட்ட நடைப்பயிற்சி முடியும் நேரம்.

மாலை கருக்கலில்... சற்று நேரத்தில் மழை வரக்கூடும். மனதுக்குள் ஒரு வகை சூடு. ஆனாலும் நெற்றியில் ஒரு வகை படபடப்பு. எங்கோ பார்த்த கண்கள்... எதற்கோ நிலை குத்தி நின்றன. கூட்டத்தில் நகர்ந்து கொண்டிருந்த... தனித்த அடர் நீல சட்டை இன்னும் கொஞ்சம் நிறம் கூடி இருந்தது போல தெரிந்தது. உணர்ந்த நொடியில் உள்ளூர ஒரு நிலை நெருக்கம். காந்தம் கொண்ட நிறம் அதனால்... என்று முதலில் நம்பினாலும்... இல்லையே.. வேறு எதுவோ இழுக்கிறதே என்று உள்ளிருந்து ஒரு குழப்பம். அல்லது வெளியிருந்து ஒரு தெளிவு.

படபடவென மனதுக்குள் இருந்த கூட்டம் விலக்கி... வரிசையாய்... குறுக்கு நெடுக்காய்... தனித்த மிடுக்காய்... கூட்டத்தோடு கூட்டமாய் நகர்ந்த சட்டைகளில்... அந்த அடர் நீலம் என்னை வேகமாய் இழுத்துக் கொண்டது. எங்கும்... எந்த கூட்டத்திலும்.. ஒரு சட்டை போல இன்னொரு சட்டை இருக்கலாம்.. ஆனால்... அதே சட்டை துணியில் இன்னொருவன் அணிந்து.... காண்பது அபூர்வம்.

என் அடர் நீல வண்ண சட்டை போலவே இருந்த இந்த சட்டை படபடவென நெருங்க வைத்தது போல. நெருங்க நெருங்க மனதுக்குள்ளே ஒரு சிக்கல். நெருங்க நெருங்க மூளைக்குள்ளே ஒரு சிலந்தி வலை. நெருங்கிய பின் சட்டென கவ்விக் கொண்ட ஒரு துக்கம்.

கவிக்குயில் போன வாரம் சொன்னது... இதோ இப்போது தான் கேட்கிறது. சில விஷயங்களை காது கேட்கும்.... மனம் வாங்கி வைத்துக் கொள்ளாது. அந்த சிலதில் ஒன்று... போடாத சட்டையெல்லாம் எங்கயோ... யாருக்கோ தருவதாக... அந்த தூரத்து குரல் இப்போது மிக கிட்டத்தில் கேட்பது பாறையை காது பக்கம் உருட்டுவது போல இருக்கிறது. உருள உருள உயிர் அருகே சிராய்ப்பு.

இரு இரு.. இரு என்று என் கால்களை சம நிலைப்படுத்தி... அந்த சாய்ந்த மரத்தில்.... சாய்ந்து நின்று... கூர்ந்து கவனித்தேன். கவனிக்க கவனிக்க.... வண்ணம் வழியே நுழைந்த கண்களில் பளிச்சென விஷயம் புலப்பட்டது.

அந்த அடர் நீல சட்டை... என் சட்டை போல அல்ல. நன்றாக தெரிந்தது. அது என் சட்டையே தான். பாக்கெட் பட்டையில்...கழுகு சிம்பல் இருக்கும். இருக்கிறது.

ஐயோ என மனதுக்குள் நெற்றியைப் பற்றியது தொந்தரவு. அப்போது தான் கவனித்தேன். அந்த சட்டையை அணிந்திருத்தவன் இப்போது என்னை பார்த்த மாதிரி நடக்கிறான். என் கண்கள் அசையவில்லை. காட்சியை அசைத்துக் கொண்டே வரும் அவன் வாய் கோணி கால் கூட ஒரு பக்கமாக ஏறி இறங்கி.... இப்போது கவிக்குயில் சொன்னது நன்றாகவே கேட்டது. கருணை இல்லத்துலருந்து வந்துருக்காங்க... பழைய துணி இருந்தா தாங்கன்னு கேக்கறாங்க. இவ்ளோ இருக்குல்ல... குடுக்கறேன்... பேசிக்கொண்டே ஒரு நல்ல ஞாயிறை ஆசீர்வதித்துக் கொண்டிருந்தாள். நாம் வழக்கம் போல பேச ஒன்றுமின்றி யோசனைக்கு பதில் இன்றி எழுதிக் கொண்டிருந்தோம். அப்போது காதோடு போனது இப்போது நெஞ்சோடு சுழன்றது. நினைவில் தெளிவு. நடந்தது புரிந்தது.

ஓஹ்... எத்தன முறை சொல்லிருக்கேன்.... போட்ட ட்ரெஸ்ஸ யாருக்கும் குடுக்காத...வேணும்னா புதுசா வாங்கி குடுன்னு...

முழுதாய் அந்த சட்டையின் சித்திரம் எனக்குள் தெளிந்து விட்டது. என் சட்டையை அந்த ஆதரவற்ற பையன் போட்டிருக்கிறான். பார்க்க பார்க்க தலைக்குள் ஒரு வித ஓங்காரம் சூழ்ந்தது. சட்டென எதற்குள்ளாகவோ மாட்டிக்கொண்ட உணர்வு. நானே அவனாக அந்த பூங்காவில் அங்கும் இங்கும் நடப்பது போன்ற பாவனையில்... இந்த மாலை வேளையை களைத்து கொண்டிருக்கிறேன். கண்கள் ஏன் கலங்குகின்றன. காற்றில் அழுத்தம் கூடி விட்டதாக நம்பினேன். எல்லாரும் என்னையே பார்ப்பது போல இருந்தது. நானும் கூட என்னையே தான் பார்த்துக் கொண்டிருந்தேன். அவனொரு நானாக... நானொரு அவனாக ஸ்தம்பித்து ஸ்தம்பித்து... உலகை சுழற்றுவது கடினமாக இருந்தது. சட்டென அவனாக ஆகி விட்டதில் உடலுக்குள் பொழியும் தனிமையை... உள்ளத்துள் நிகழும் தவிப்பை தொண்டைக்குள் அடை காப்பது பெரும் கஷ்டம். துக்கமும் துயரமும்... அந்த சட்டையின் வழியாக எனக்குள் நிறைந்து கொண்டே இருக்க.... இந்த உலகத்தில் நாங்கள் மட்டுமே இருப்பதாக ஓர் எண்ண சுழற்சி.

கண்களில் நிரம்பிய என்னை... துடைத்துக் கொண்டே வேகமாய்... பூங்கா கேட்டில் ஒன்னு நூறு ரூபாய் ரெண்டு எடுத்தா நூத்தம்பது என்று கத்திரிக்காய் குவியல் போல சட்டைகளை போட்டு விற்றுக் கொண்டிருந்தவனிடம் ஓடினேன்.

மனதுக்குள் பெரும் ஆறுதல் சட்டென கிளம்பியது. அது இன்னும் முழுமையடைய இரண்டு விஷயங்கள் நடக்க வேண்டும். ஒன்று... அடர் நீல வண்ணம் இல்லை என்றாலும்... ஒரு மாதிரி நீல வண்ண சட்டை அந்த சட்டை குவியலில் கிடைக்க வேண்டும். நான் வாங்கி கொண்டு உள்ளே செல்லும் வரை... அந்த பையனை இல்லத்துக்காரர்கள் கூட்டிக் கொண்டு சென்று விடக்கூடாது...

பொல பொலவென உதிர்ந்து கொண்டிருந்த சாரல் துளிகளில் தெரிந்த ஏழு மணி இருள்.... அடர் நீல வண்ணத்தில் மிதக்க ஆரம்பித்திருந்தது.

- கவிஜி