‘சின்னஞ் சிறு கிளியே கண்ணம்மா...’ என்ற பாடலை உதிர்ந்தது அலைபேசி.

‘எப்போ கட்டணும்?... இந்த வாரமா ... எவ்ளோ சொன்ன... என்பதாயிரமா...

‘சரிடா கட்டிரலாம்’ தன் இரண்டாம் பெண்ணிடம் வந்த அலைபேசியை துண்டித்துவிட்டு தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள் விஜயலக்ஷ்மி.

அந்த அலுவலகத்தில் ஒரு புறாவின் சிறகெனத் துடித்த தட்டச்சின் ஒலி அங்குள்ள சுவர்களை மோதிக் செவிகளை அடைத்துக் கொண்டிருந்தன.

‘விஜி மேடம் நேத்து புதுசா வந்த கிளைண்ட்டுக்கு இன்னைக்கு மதியம் இரண்டு மணிக்குள்ள டேட்டா அனுப்புச்சாகனும், இத வேற யார்கிட்டையாவது கேட்டா அவ்வளவு சீக்கிரமா வேல நடக்காது...’

விஜயலட்சுமியின் குறுநகைப்பில் வேலை முடிந்துவிட்ட நிறைவுடன் நகர்ந்து போனான் பாலன்.

தினமும் பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலிருந்து வந்து அலுவலக பணியைக் கவனித்துக் கொள்கிறாள் விஜியலக்ஷ்மி. இரண்டு மகளுடன் சேர்த்து தன் பெற்றோர் என தன் வாழ்க்கையின் குடைக்குள் ஒற்றை பயணியாய் கடந்து வந்தாள். எதோ ஒரு காரணத்தால் விலகியே இருந்தான், அவள் கணவன்.

வளர்த்த இருவரையும் ஏரோனாட்டிகள் துறையில் படிக்க வைத்தாள். மாநிறம் கொண்டவள் முகத்தில் கருமை நிறமென சிறு புள்ளிகள் பகல் நட்சத்திரியமாய் படர்ந்திருந்தது.

அரையடி கூந்தலில் தினமும் அழகாய் அமர்ந்துக் கொள்ளும் ஒற்றை வெள்ளை ரோஜா, எப்போதும் முறுவல் தொலைத்திராத முகம்.

யாரையும் அதட்டிராத குரல் அன்று பேசும்போது பெரும் சுமையுடன் வார்த்தைகளை ஈன்றது.

‘விஜி மேடம் ஒன்னும் கவலைப்படாதீங்க எப்படியாவது காலேஜ் பீஸ் கட்டிருவோம்... எங்காவது வட்டிக்குப் பணம் கிடைக்குதான்னு பாப்போம்...’

‘அதுக்கில்ல பாலா சார்... இந்த சனிக்கிழமையோட கடைசி தேதி முடியுது... அது தான்... இந்த மாசம் வாங்கின பதினைந்தாயிரம் ரூபால வீட்டு வாடகை, வீட்டு செலவு போக ரெண்டாயிரம் ரூபா தான் மிச்சமாச்சு... அதுல ஆறுமாசத்திருக்கு முன்னாடி வாங்கின கடன கட்டணும்...’ இவை சொல்லிக் கொண்டிருக்கும்போது கூட அவள் விரல் ரேகை தட்டச்சில் தேய்ந்து கொண்டுதான் இருந்தது. அவள் எங்கும் எதற்கும் முடங்கிப் போகவில்லை நகர்தல் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

‘என்னக்கா இன்னைக்கும் புளிசாதமா…’ என்று மலையாள வாடை கலந்த தமிழில் கொஞ்சினாள் ஜென்சி.

‘ஆமாப்பா... அது தான் சீக்கிரமா செய்ய முடிஞ்ச ஒரே சமையல்…’ என்று தன் இல்லாமையை ஒற்றை வாக்கியத்தில் ஒழித்துக் கொண்டாள்.

உணவுக்கு சிறு குழுவென அமர்ந்திருந்தவர்களை அசைபோட்டுக் கொண்டிருந்தது, அன்றைய மதிய பொழுது.

யாருடனும் அதிகம் பேசாதவள் அன்று கணிப்பொறியுடன் விரல்களால் வெகுநேரமாய் பேசிக் கொண்டிருந்தாள். மாலை பொழுதில் யாருமற்று அலுவுலகம் வெறுமையென அவளை நிறைத்திருந்தது.

கூடுதல் ஊதியத்திற்காக அதிக நேர பணியைத் தொடர்ந்தாள். வீட்டுக்குத் தனி ஆளாக தான் பயணிக்க வேண்டும். தன் பயண நெடுகிலும் தனி ஆளாகப் பயணித்தவளுக்கு இருட்டு ஒன்றும் பொருட்டு அல்ல.

‘எனக்கு தெரியாது மா... ஒவ்வொரு க்ளையண்ட்டையும் புடிக்க எவ்ளோ கஷ்டப்பட்டிருப்பேன் தெரியுமா... நீ பாட்டுக்கு லேட்டா வந்தா எப்படி... கேட்டா கத கதையா சொல்லறே... இன்னைக்கு நீ அனுப்ப வேண்டிய பைல் அந்த கம்பெனிக்கு போகாம எவ்ளோ போன் எனக்கு காலைல இருந்து வந்துச்சு தெரியுமா...’ பத்து நிமிடம் தாமதமாக வந்த விஜியலக்ஷ்மியை திட்டி தீர்த்துக் கொண்டிருந்தார் மேலாளர். அனைவரும் அதை ஒரு விந்தையென பார்த்துக் களித்தனர்.

உடைந்து விழுவது போல இருந்தது, கண்களில் தேங்கியிருந்த நீர். அவை உடைபடாமல் அவளுக்குள் கரைந்துவிட்டது.

அன்றிலிருந்து அவளிடம் குறை மட்டுமே தேடியவாறு இருந்தான் மேலாளர்.

லாக்டௌன் என்பதால் வேறிடத்தில் வேலை கிடைப்பது என்பது சிரமமான காலகட்டமாக இருந்தது. பற்றாக்குறைக்கு இது போன்ற மேலாளர்கள் எத்தனை வீட்டின் அடுப்புகளை ஊதி அணைத்தார்களோ.

அன்று யாரிடமும் முகத்தைக் கூட காட்டாமல் கணிப்பொறியில் அகப்பட்டுக் கிடந்தாள் விஜியலக்ஷ்மி.

‘மேடம் நீங்க திருப்பிப் பேசிருக்கணும்… ஏன் பேசாம விட்டுட்டீங்க, இந்த மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் பதில் பேசுனாதான் அடங்கி போவானுங்க...’ஆறுதல் என நினைத்துக் கொண்டு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சிக் கொண்டிருந்தான் பாலன். .

இதற்கு ஏதும் பதில் தராதவள், மௌனமென திறந்திருந்தாள். புரிந்து கொண்டவன் போல எழுந்து போய்விட்டான் பாலன்.

மறுநாள் பணிக்கு வந்தவள் பணி நாற்காலிகள் காலியாக இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டாள்.

அனைவரும் மேலாளர் அறையில், மேலாளரை சூழ்ந்த வண்ணம் இருந்தனர்.

ஏதோ சிக்கல் இவளை பெரிய அளவில் வரவேற்பதாக தெரிந்தது அவர்கள் நின்றிருந்த தோரணையில், மனதைத் தேற்றிக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

இங்க பாரு விஜி நீ வேற வேலை எங்கயாவதுப் பார்த்துக்கோ... நீ நேத்து பார்த்த வேலைக்கு... உனக்கு புடிக்கலைன்னா வேற வேலைக்கு போக வேண்டியது தான, ஏன் இங்க வந்து என் உயிர எடுக்கற...’

என்ன என்று இவள் கேட்பதற்குள் பதில் வந்தது

‘நீ நேத்து டைப் பண்ணுனதுல... நிறைய மிஸ்டேக்ஸ்...’

அந்த வேலையை செய்தது விஜயலக்ஷ்மி அல்ல என்பது பாலனுக்குத் தெரியும், இவை பாலனுக்குத் தெரியும் என்பது மேலாளருக்கு தெரியும். கட்டம் கட்டப்பட்டவள் ஏது மறியாதவளாய் நின்றாள்.

‘சார் நான் கண்டிப்பா தப்பு பண்ணிருக்க மாட்டேன்‘

‘அப்படியா... கண்டுபுடிச்ச நான் என்ன முட்டாளா... மொதல்ல போ மா வெளியே‘

‘சார் இப்போ இருக்கற நிலைமையில நான் எங்க வேலைக்கு போக முடியும்...’

‘என்ன எதிர்த்து பேசற இரு இன்னைக்கு ‘எம் டி’ வருட்டும் உன்ன அப்பவே வெளிய தொறத்திறேன்.’

வேலை தன் கைகளை விற்றுப் போய்விடுவது போல உணர்ந்தாள். அவளைச் சுற்றி உள்ள சுமை அதிக வலிமைபெற்று தலையில் அமர்ந்து கொண்டது. சுயநினைவில் சூனியம் நகமென துளிர்த்துக் கொண்டது. அவளை அன்று சுற்றிக் கொண்ட சூழலின் அகல திறந்த கண்களில் வெட்கிக் குறுகினாள். எழுந்து ஓய்ந்த அலையென களைந்துக் கொண்டது அந்த அறைக்குள் அவளுக்குள்ளிருந்த குமுறல்.

சமூகத்தில் இப்படியும் ஒரு அழுத்தம் பெண்களைப் பெரிதும் முடக்கிப் போடுகிறது விளைவை தினசரிகள் வாரி வழங்குகிறது. குட்டு பட்டே வாழவேண்டும் என நினைக்கிறது ஒரு கூட்டம். அழுத்தம் எத்தனை பரிமாணங்கள் எடுத்தாலும் வலி ஒன்று தான்.

வலியில் துடிப்பவர்களுக்கு வழிய கைகொடுப்பவர்கள் எதையோ எதிர்பார்த்து நீட்டுவதில் தான் மிகைத்து காணப்படுகிறார்கள். தனி ஆளென ஒரு பெண் நின்று கொள்வதை இந்த சமூகம் ஏற்க மறுக்கிறது.

‘அம்மா நீ எவ்வளவோ சொல்லி கேக்காம உன்னக்கு சப்போர்ட்டா எதாவது பண்ணனும்னு ஒரு ஹோம் பேஸ்டு டைப்பிங் ஜாபுக்கு சேர்ந்தேன்... நான் டைப் பண்ணுன டாக்குமெண்ட் தப்பா இருக்குனு... என்கிட்ட பெனால்டி கேட்டு மிரட்டறாங்க... கோர்ட்ல இருந்து நோட்டீஸ் வரும்னு பயப்படுத்தறாங்க... பயமா இருக்குமா...’ என்று அவளுடைய முதல் மகள் குரல் அலைபேசியில் கேட்டதும்...

அவன் நம்பர் குடுமா என்று வாங்கிக் கொண்டாள்.

அலுவலகத்தின் வாசலுக்கு தொலைபேசியுடன் நடந்தாள்... எதிர் முனையில் ஆண் குரல்...

‘சொல்லுங்க மேடம்... ஆமா மேடம் உங்க டாட்டர் நிறைய மிஸ்டேக் பண்ணுனதால ஒரு முப்பதாயிர ரூபா கட்டணும் இது எங்க கம்பெனி ரூல்ஸ்...’

‘அடிங்க...யாரு காச யாருடா கேக்கறது... இப்படியெல்லாம் மிரட்டுனா நாங்க பயந்திருவமா... டேய் பிராடு பயலே தைரியமிருந்த நேருல வாடா... ஏன்டா பொண்ணுங்கனா அவ்வளவு இளக்காரமா போச்சா... இல்லீகல் பிஸ்ன்ஸ் பண்ற உனக்கே இவ்வளவு திமிறிருந்தா நேர்மையா பொழைக்கிற பொம்பள எனக்கு எவ்வளவு இருக்கும்… நான் நேருல வந்தேன்னு வெய்யு… உன்ன நாறு நாற கிழிச்சுப்புடுவேன்...’ என்று பேசி முடித்தும் அந்த இடம் அதிர்ந்து கொண்டிருந்தன.

அவளுக்கென்று இல்லாமல் ஒட்டுமொத்த பெண்குலத்தின் அடுக்குமுறைக்கு எதிராக தொனித்தது அந்த சீற்றம். கரைந்த கண்ணீர் வீரியம் கொண்டு வடியத் தொடங்கியது. அவள் தலையில் அமர்ந்திருந்த வெள்ளை ரோஜா சற்று சிவந்திருந்தது.

அதிர்வலையிலிருந்து மீளாமல் இருந்தது அலுவலகம், மேலாளரின் நாடி சற்று விலகித் துடித்தது.

அவள் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பணியைத் துவங்கினாள், விரல்களின் தட்டச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் கணினியின் நாக்கு திரைக்கு வெளியில் தெரிந்தது.

‘சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா...‘ அலைபேசி அலறியது.

 - சன்மது