கண்ண உருட்டிகிட்டு.... மூக்கில்லாமல்.. வாலுடனா பேய் வரும்....?

மீசையை ஜம்முனு அழகுபடுத்தி... கிராப் வெட்டிய முகத்தோடு கண்ணாடி போட்டு....டை கட்டி....வெள்ளையும் நீலமுமான உடையில் கூட பேய் வரும்.

மிக அற்புதமாக பேசும். மன மாற்றம் செய்யும். நம்பிக்கை கொடுக்கும். உங்களை ஆக சிறந்த வேலைகளை எல்லாம் செய்ய வைக்கும். பிறகு மிக நுட்பமாக பெரும் பெரும் தவறுகளில் உங்களை மாட்டி விட்டு சிரிக்கும்.

"வல்லவன்.... இது சரியே இல்ல... என்ன நினைச்சிட்டு இருக்கான் பாக்தாத் திருடன்.."

"எவ்ளோ திருடறான் தெரியுமா.... இங்க கொஞ்சம் அங்க கொஞ்சம்,... முதலாளிகிட்ட கொஞ்சம்......முதலாளி பையன்கிட்ட கொஞ்சம்.. முதலாளி சம்சாரத்துக்கிட்ட கொஞ்சம்.......வெளியூர் டூர் போனா... லோக்கல்ல சுத்தினா......இப்டி எல்லா பக்கமும் அடிக்கறான். இதுவரை 50 கிட்ட அடிச்சிருப்பான் வல்லவன். இப்போ உங்க கண்ட்ரோல்ல இருக்கற செக் புக்ல கூட மாத்தி எழுதிருக்கான்னு கேள்விப் பட்டேன். கவனமா இருக்கனும்... ரெம்ப மோசமான ஆளு..." தேவசகாயம் பேசிக் கொண்டிருக்கும் போதே பாக்தாத் திருடன் உள்ளே வந்து விட....

ஸீன் அப்படியே மாறியது.

அதை கவனித்து விட்ட தேவசகாயம்... "அதான..... அப்டி ஆச்சுன்னா... என்னதான் செய்ய... அதான்... சுரேஸ்ஸா ....... " சொல்லிட்டு இருந்தேன்.... பையன்... அதான்.... இந்த......இந்த முரளிப்பையன் ஒரு வேலையும் செய்றது இல்ல..... அதான்... அதான் போனஸ் குறைக்க சொல்லி வல்லுகிட்ட (வல்லவன் சார்ட் பார்ம் ) சொல்லிட்டு இருந்தேன்.அவன்கிட்ட எப்படி வேலை வாங்கணும்னு..சொல்லணுமில்லையா....அதான்...." கண்களை உருட்டிக் கொண்டே பேச்சை மாற்றியதை வல்லவன் உள்ளம் நடுங்க பார்த்தான்.

பாக்தாத் திருடன் என்ற சுரேசன் ... அதே மாக்கான் சிரிப்பில்....மனதுக்குள் திட்டம் போட்டான். அவன் அறிந்த மாயங்கள் அவன் அறிந்திடாத ஒன்றில் இருந்ததை அவன் உளறுவது வழக்கம். ஒருமுறை வல்லவனை குடிக்க அழைத்து சென்று விஷயம் கறக்க ஏற்பாடு செய்தான். விஷயம் இது தான். முரளித்தம்பிக்கும்.. முட்டாள் ஓட்டுனனுக்கும்.... என்ன உறவு என்பது. குடித்து சரிந்த போதும் வல்லவன்.. நடித்து சமாளித்தான்.

முட்டாள் ஓட்டுனனுக்கு எட்டு காதுகள். எல்லாவற்றிலும்... விஷம் வைத்துக் கொண்டலையும் சமத்தன். இங்கிருப்பதை அங்கு சொல்வான். அங்கிருப்பதை இங்கு சேர்த்து சொல்வான். இந்த முட்டாள் ஓட்டுனன் தான்... முரளித்தம்பியைக் கெடுப்பது என்று சொல்லிக் கொண்டே.. ஒரு நாள் முரளித்தம்பியை அறைந்து கழுத்து திரும்புவதாக சபதம் எடுத்துக் கொண்டிருக்கையில்.....கடவுள் இருக்கான் குமாரு என்பது போல கனக்கச்சிதமாக முரளித்தம்பி ஏடாகூடமாக உள்ளே வந்து விட்டான். "அப்புறம்.. படம் முடியற நேரம்... நான் நினைச்சே பாக்கல.... அவ்ளோ பயம்" என்று பற்கள் காட்டி சிரித்து மழுப்பிய சுரேசன்... தில்லாலங்கடியில் டாக்டர் பட்டம் பெற்றவன். வலிந்து பேச்சை மாற்றி கண்ணாடியை சரி செய்த போது முரளித்தம்பியை பாத்ரூம்க்கு அழைத்து சென்ற 'பத்து ரூபாய் திருடன்' தேவசகாயம் " பாக்தாத் திருடன் உன்னைப் பத்தி தான் பேசினான்.....அதுக்கு இந்த புதுசா வந்த வல்லு சப்போர்ட் பண்ணுது.. நீ இனி வல்லுக்கு ஹெல்ப் பண்ணி கொடுக்காத.....என்றான். வந்ததே முரளித்தம்பிக்கு கோபம். மூக்கை விடைத்துக் கொண்டு செல் போனை நோண்டியபடியே பஸ் ஸ்டேண்டில் தொலைந்து போனான்.

பிறகு அவனை யாரும் கண்டு கொள்ளாமல் விட்ட ஒரு நாளில் அவனே.... வந்து மீண்டும் வேலையில் சேர்ந்து கொண்டான். தேவசகாயம் வேலை விஷயமாக வெளியே சென்று, தான் செலவு செய்யாத 2 ரூபாய் 49 பைசாவை கணக்கு போட்டு வாங்குகையில் படக்கென்று மனதுக்குள் தெளிவாகத் தோன்றியது. இவனுக்கு பத்து ரூபாய் திருடன் என்ற பெயர்காரணம் ஏன் வந்ததென்று.

ஒருவன் இல்லாத போது இன்னொருவன் அவனை பற்றி பேசி அவன் இல்லாத போது இன்னொருவன் இவனைப் பற்றி பேசி.. மொத்தத்தில் எல்லாருக்கும் எல்லார் பற்றியும் பேசுவது தெரிந்தும்... அந்த எல்லாரும் மதியம் ஒன்றாக அமர்ந்து ஆம்லெட் வாங்கி உண்ணும் இவர்களுக்குள் பேய் இருக்கிறதா....இல்லையா.... யோசித்த பொழுதொன்றில்.. வந்த தொலைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தான் வல்லவன்.

எடுத்து ஹெலோ ஹெலோ என்றால்... சொல்லுங்க என்று எதிர் முனை சொல்கிறது

"சொல்லுங்க... நீங்க தான் கூப்டீங்க!!!!" என்று வல்லவன் சொல்ல.. அதே மாதிரி எதிர்முனையும் சொல்கிறது.

ஒன்றும் புரியாமல் ரிஸீவரை காற்றில் வைத்து ஒரு முறை பார்த்துக் கொண்டே போனில் வைத்து போனின் நிர்வாணம் மறைத்து வேலையை பார்க்கையில் பாக்தாத் திருடனும்.... பத்து ரூபாய் திருடனும் ஒருவரையொருவர் கள்ளத்தனமாக பார்த்து சிரித்துக் கொண்டார்கள்.

பிறகு ஒரு நாள் வல்லவன் கண்டு பிடித்தான். ரகசியம் எதுவெனில்..பாக்தாத் திருடன்... போனில் ஒரு நம்பரை அழைத்து விட்டு அதை மடை மாற்றி வல்லவன் எக்ஸ்டன்ஷனுக்கு இணைத்து விட்டு சத்தமில்லாமல் ரிஸீவரை வைத்து விடுகிறான். அது தெரியாமல் தனக்கு வந்த அழைப்பு என்று
வல்லவன் போனில் தடுமாறுகிறான். அது மட்டுமல்ல. வல்லவன்... சீட்டில் இருக்கையில் வேறு யாரிடமாவது பேசினால் அந்த பேச்சை களைக்கும் பொருட்டு இந்த வேலையை சுரேசன் செய்வது வழக்கமாகி கொண்டிருந்தது. சிரிப்பை அடக்கிக் கொண்டு ரசிப்பது தான் சுரேசனின் பெரிய பொழுது போக்கு...." என்று சொன்ன முரளிப்பையன்.... உங்களுக்கு முன்னாள் இருந்தவரிடமும் இம்மாதிரி தான் செய்வார்கள்..... என்று சொல்லி அவனும் சிரித்தான். அவனுக்கு எதற்கு சிரிக்க வேண்டும் எதற்கு சிரிக்க கூடாது என்று இந்த 35 வயதிலும் தெரியாமல் இருப்பது சத்திய சோதனை தான்.

அப்புறம் இன்னொன்றும் செய்வார்கள் என்றான். அதாவது பழைய காகிதங்களை....... செய்தித்தாள்களை......... இன்னும் குப்பைகளை கொண்டு வந்து டேபிளில் வைத்து விட்டு தெரியாத மாதிரி அமர்ந்து கொள்வார்களாம். அடுத்த நாள் வந்து பார்த்து விட்டு அந்த குமாரசாமி சார் அப்படி கத்துவார். இவர்கள் வாய் பொத்தி சிரிப்பார்கள்.... என்றான். போன வாரத்தில் வல்லவன் மேசையிலும் இம்முறை நிகழ்ந்திருந்ததை நினைத்துப் பார்க்கையில் குமட்டிக் கொண்டு வந்தது.

முரளிப்பையனைப் பார்த்தான். அவன் அவனைப் பார்ப்பது போல தான் இருந்தது. ஆனால் அவன் எங்கோ பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தான்.
முரளிப்பையன் தனக்கென்று ஒரு உலகம் வைத்திருந்தான். அதில் அவன் செய்வது..... அவன் யோசிப்பது.... அவன் இயங்குவது மட்டும் தான். தான் செய்வது மட்டும் தான் சரி என்ற மொக்கத்தனமான உருவகம் கொண்டிருந்தான். மிக மிக மோசமான கதவடைப்பு அவனுள்ளே நிகழ்ந்து கொண்டிருந்தது. அவன் என்ன செய்கிறான் என்று அறியாமல் செய்து கொண்டிருக்கிறான். அவர்கள் அறிந்தே அவனை .ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவனும் அவர்களை கிடைக்கும் இடைவெளியில் எல்லாம்... கொல்ல காத்துக் கொண்டு தான் இருக்கிறான். அவனுக்கு 500 ரூபாய் அதிகமாக கொடுத்ததற்கு எம் டி க்கு மொட்டை கடிதம் போட்டவர்கள் தான் அவர்கள். கெட்டு போன குழம்பை வீண் பண்ண கூடாது என்று அவனுக்கு கொடுத்த மனிதன் தான் பத்து ரூபாய் திருடன்.

என்ன மாதிரி மனிதர்கள் இவர்கள்....

மாற்றி மாற்றி சொற்களினால் அடித்துக் கொண்டு கடந்த 20 வருடங்களாக ஒரே அலுவலகத்தில் குப்பை கொட்டுகிறார்கள். குப்பைகளோடு குப்பையாய்.... வாழ்வு முளைத்துக் கொண்டே இருக்கிறது.

நினைக்க நினைக்க.. ததும்பும் மனதுள்.. தொலைபேசியைத் தூக்கி ஒரு நாள் அடித்தான் வல்லவன். அடித்து விட்டு பாக்தாத் திருடன் கழுத்தில் எட்டி உதைத்தான். நல்லா விழட்டும் என்பது போல.. பத்து ரூபாய் திருடனும்.... முரளிப்பையனும்... மூன்றாம் பிறை வில்லனைப் போல இருக்கும்.... வாரம் ஒரு முறை வரும் விசித்திரகுப்தனும்....... கண்டும் காணாமல்... அலைபேசிக்குள் முகிழ்ந்திருந்தார்கள். பிறகு பத்து ரூபாய் திருடனை பஸ் ஸ்டேண்டில் விட்டு விரட்டி விரட்டி அடித்து துவம்சம் செய்ய முரளிப்பையன் உதவி செய்தான். பாக்தாத் ரெண்டு நாள் விடுமுறை எடுத்து சிரித்ததாக கேள்வி பட்டான்.

எல்லாருக்கும் பாத்ரூம் கிளீன் செய்யும் பெண் மீது மோகம் இருந்ததை கண்டு பிடித்தான் வல்லவன். வல்லவனுக்கு அதை தட்டி கேட்டதில் தான் வம்பு ஆரம்பித்தது. அந்த பெண்ணை கையைப் பிடித்து இழுத்து விட்டான் என்று கதை கட்டினார்கள். மற்றவர்களும் நம்பினார்கள். உண்மையின் நம்பிக்கையை விட பொய்யின் நம்பிக்கைக்கு பலம் அதிகம். எல்லாரும் சேர்ந்து திட்டமிட்டு வல்லவனை வேலையை விட்டு தூக்கினார்கள்.

பேய் இல்லை என்று எவன் சொன்னது. பேய் இருக்கு. அது பேய் தானான்னு தெரிந்து கொள்ள நாம் மனிதனாக இருக்க வேண்டி இருக்கு. எது பற்றியும் தெரிய வேண்டாம் என்பது போல முறைத்துக் கொண்டு திரிந்தாலும்.. இன்னமும் போண்டா வடை வாங்கி கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறான் முரளிப்பையன்.

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தான்.

"காகிதப்பூ" தொடரும்..

- கவிஜி