டீக்கடையில் ஆங்காங்கே நின்றவர்கள்... அமர்ந்திருந்தவர்கள் பட்டென்று பரபரக்கும் கண்களோடு பார்த்தார்கள். வெப்பச்சலனம் வீரியமெடுக்கும் நேரம் அங்கே மிதந்து கொண்டிருந்தது. அனிச்சை செயலாய் அவரவர் கை அவரவர் அலைபேசியை எடுத்தது. கண்களில் நவநாகரிக வறட்சி.

"ம்ம்ம்ம்... என்ன பாக்கறீங்க... அதான் பாதி ஆரம்பிச்சாச்சில்ல.... நடக்கட்டும். லைவ்ல கூட போட்ருங்கப்பா..... ஒன்னும் பிரச்னை இல்லை.... அதுல ஒரு கிளுகிளுப்பு வரும்ல.... அது ரெம்ப முக்கியம். அட மனுஷங்களா.... ஒரு புள்ள அம்மணமா அடிபட்டு வந்துருக்காளே.. என்னாச்சு ஏதாச்சுனு ஓடி வந்து கேட்டு....உடம்ப மறைக்க முயற்சி பண்ணுவானுங்களா..... இப்டி வெறிக்க வெறிக்க பாக்கறீங்களே....!"

கூட்டத்தில் சலசலப்பு இருந்தாலும்.... ஈ மொய்க்கும் கண்கள் அவள் பால் உறுப்புகளை மொய்த்தன.

"சிட்டிக்கு நடுவுல இத்துனூண்டு காடு... அதுக்குள்ள சாயந்தரம் அஞ்சு மணிக்கு குடிச்சிகிட்டே கையில சரக்கு பாட்டலோட விரட்டி விரட்டி ரேப் பண்ண ட்ரை பண்றானுங்க.... டிரஸ்ச உருவி அம்மணமா ஓட விடறானுங்க...மானம் போனா மயிறு போச்சுன்னு தப்பிச்சு உயிரை கைல பிடிச்சிட்டு ஓடி வந்தா.... மனுஷங்க பதறி போய் சட்டையை கழட்டிட்டு......துண்டை அவுத்துக்கிட்டு ஓடி வந்து மேல சுத்தி விடுவாங்கன்னு ..பார்த்தா.. கண்ணுல குறி முளைக்க செல்போன்ல படம் பிடிக்கறீங்களே.... அசிங்கமா இல்ல...? ஏன்.....! வேற ஊர்ல ரேப் நடந்தா தான் கோபம் பொங்குமா....சொந்த ஊர்னா லைக் விழுகாதா...."

தலை விரி கோலமாய் நின்றவள் முதுகில் பிராண்டிய நகக்கீறல்கள் குடிகார ஆண்மையை விரித்துக் காட்டின. வெள்ளை சதை தெரிய ரத்தம் உறைந்திருந்தது...சுதந்திர தின கவிதை போல துருத்திக் கொண்டிருந்தது.

"உங்கள சொல்லி குத்தம் இல்ல... நம்ம அம்மாக்கு இருக்கற குறி தான்.... மற்றவளுக்கும் இருக்குங்கிற இயல்பை பழக்கப்படுத்தாம விட்ட சாபம்.... எப்போ கேப் கிடைச்சாலும்... அது மாரா இருந்தாலும் சரி.... தொடையா இருந்தாலும் சரி...இடுப்பா இருந்தாலும் சரி....எட்டிப்பாக்கற வக்கிர மனநிலையத்தான் ஊத்தி ஊத்தி வளத்துருக்கு. காட்டுக்குள்ள வெச்சு மேட்டர் பண்ண நினைச்ச அந்த இடியட்ஸை விட.......கேமராவும் கையுமா நல்லவங்களா நின்னு வேடிக்கை பாக்கற நீங்க ரெம்ப கொடூரமா தெரியறீங்க... அதுவும் இத்தனை தாய்மார்கள் சுத்தி நின்னு பாக்கறீங்க. ஒருத்திக்கு கூடவா என்னை சுத்தி மறைக்கணும்னு தோணல. அந்த குடிகார கூமுட்டைங்கள விரட்டி புடிப்பாங்கன்னு பார்த்தா... குரங்கை வேடிக்கை பார்க்கற மாதிரி பாக்குறீங்க... கேட்டா.. புலிய முறத்தால அடிச்சு விரட்டுன கூட்டம்னு வாய் கிழிய முகநூல்ல பேசுவோம்...."

அவள் உடல் நிமிர்ந்த நேர்கொண்ட பார்வையில் இருந்தது. நிர்வாணம் பொதுவென்ற கண்கள் அவளுக்கு வாய்த்திருந்தது. 'கிடக்குது கழுதை' என்பது போலத்தான் இருந்தது அவள் உடல் மொழி.

"எப்போ எது கிடைக்குமோ அதை படம் புடிச்சு நெட்ல விட்டு அதுல ஒரு அற்ப சந்தோசத்தை அடைய நினைக்கறதெல்லாம் இந்த நூற்றாண்டின் மனச்சிதைவுன்னு தான் சொல்லணும். எல்லாமே வேடிக்கை தான். வக்கிரம் தீர மென்னு கூழாக்கி துப்பிட்டு போறதுல ஒரு சுய திருப்தி..... இல்லையா......? டெக்னாலஜி உலகம்.....அம்மணத்தை வீடியோ எடுக்க இல்ல....நண்பர்களே..."

அவள் பேசிக் கொண்டிருக்கும் போதே ஒருவன் கையை ஆட்டுவது போல அலைபேசியில் மறைத்து மறைத்து வீடியோ எடுத்துக் கொண்டிருந்தான். அவனருகே ஒரு பைத்தியக்காரியைப் போல சென்றவள்...." நல்லா எடு...நல்லா கிளியரா தெரியணும்... எடுத்து.... 'பட்ட பகலில் அட்டூழியம். பெண்ணை நிர்வாணமாக்கி கொடூர செயல்... குற்றவாளிகள் கிடைக்கும் வரை பகிரவும்'னு ஸ்டேட்டஸ் போடு. லைக்ஸ் அள்ளும். அவனாவது ஒருதரம் தான் நிர்வாணமாக்கினான். உன்ன மாதிரி ஆளுங்கதான் ஒவ்வொரு முறையும் அம்மணமாக்கறீங்க. ரேப்புல மீண்டவ கூட உங்க பேஸ் புக் பேஜ்ல சாகனும் போல......" என்று சிரித்தாள். சிரிப்பெல்லாம அழுகை.

கையில் டீ பிளாஸ்க்கோடு நின்ற பாழ் கிழவி ஒன்று அவளருகே வந்து தன் நைந்த மாராப்பை இழுத்து பாதி கிழித்து அவள் இடுப்பில் கட்டி விட்டது. பாழ் கிழவியின் முதுகில் காலத்தின் கிறுக்கல்கள். அருகில் நின்றிருந்த தன் கிழட்டு கணவனின் தோளில் கிடந்த கிழிந்த துண்டை உருவி அவள் கழுத்தில் போட்டு விட்டது.

"இப்போ பேசு.... பேசிக்கிட்டே...... இந்தா.....இந்த டீயை அந்த படம் புடிக்கறவன் மூஞ்சில ஊத்து" என்றது. பொக்கை வாய் முழுக்க ஆவேச எச்சில் தெறித்தது.

டீயை நிஜமாலுமே கூட்டத்தை நோக்கி விசிறி அடித்தாள். கூறுகெட்ட சமூகத்தின் மீது ஆசிட் ஊற்றியது போல இருந்தது.

("காகிதப்பூ" தொடரும்)

- கவிஜி