திங்கட்கிழமை விடியற்காலை. ஆறு மணி. மொபைலில் அடித்த அலாரத்தை ஸ்னூஸ் செய்து விட்டு புரண்டு படுத்தாள். தூக்கத்திலிருந்து எழுவதற்கு முன்பே பசி வயிற்றைக் கிள்ளி எடுத்தது ரேணுகாவிற்கு. உடல் அசதியுடன் தூக்கமும் சேர்ந்து கண்களைத் திறக்க விடாமல் அமுக்கிய‌து. பசி ஒரு பக்கம் தூங்க விடாமல் தொந்தரவு செய்த‌து. கண்கள் மட்டும்தான் மூடிக் கொண்டிருந்த‌ன. 

ரேணுகாவிற்கு தன் கணவன் மேல் அவ்வளவு கோவம் வந்தது. ஞாயிற்றுக்கிழமை அமுதா மிஸ் குழந்தையின் முதல் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுவிட்டு கூடுவாஞ்சேரியில் இருந்து மேடவாக்கம் வர பத்து மணியாகி விட்டது. பெருங்களத்தூர் சிக்னலில் மட்டும் அரை மணி நேரத்துக்கு மேல் நிற்க வேண்டியிருந்தது. அவ்வளவு டிராபிக். ஏழு மணிக்கு வெட்டப்படவிருந்த கேக் எட்டு மணிக்குத்தான் வெட்டப்பட்டது. நல்ல கூட்டம். இரண்டு பந்தி முடிந்து மூன்றாவது பந்தியில்தான் ரேணுகாவும் தினேஷும், தினேஷ் மடியில் கிஷோரும் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். அமுதா டீச்சர், ரேணுகா வேலை பார்க்கும் பள்ளிக்கு சேர்ந்து ஆறு மாதங்கள்தான் இருக்கும். அமுதா மிஸ் பிறந்த நாள் விழாவிற்குக் கூப்பிட்ட போது கூட ரேணுகா முழு மனதோடு போக முடிவெடுக்க வில்லை. 

ஞாயிற்றுக் கிழமை பெரும்பாலும் வீட்டில் இருக்கவே விரும்புவாள் ரேணுகா. அந்த வாரத்திற்குத் தேவையான காய்கறி, மளிகை சாமான் வாங்குவது, இட்லிக்கும் தோசைக்கும் மாவரைத்து வைப்பது, ஃப்ரிட்ஜ்ஜில் இருக்கும் பழைய பொருட்களைக் கழிப்பது, வாங்கி வைத்த மளிகை சாமான்களை அந்தந்த டப்பாக்களில் போட்டு வைப்பது, சமையலறை அலமாரியில் டப்பாக்களுக்கு அடியில் இருக்கும் கிழிந்து போய் தொங்கும் செய்தித்தாள்களை மாற்றி வேறு செய்தித்தாளை போட்டு அதன் மேல் டப்பாக்களை அடுக்கி வைப்பது .. இவற்றில் எதையாவது மாற்றி மாற்றி செய்வது என ரேணுகாவின் ஞாயிற்றுக் கிழமைகள் கழியும். இந்த வேலைகளில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் அதற்கான எரிச்சல் அடுத்த வார இறுதி வரை தொடரும். அதனாலேயே ஞாயிற்றுக் கிழமைகளில் எங்காவது போவதை முடிந்த வரை தவிர்த்து விடுவாள் ரேணுகா. 

தினேஷ் அடம் பிடித்து எப்போதாவது சினிமாவுக்கோ மாலுக்கோ அழைத்துச் செல்வான். ஆனால் அமுதா மிஸ் வீட்டு விசேஷத்திற்கு மற்ற எல்லா ஆசிரியர்களும் போய், தான் மட்டும் போகாமல் இருந்தால் நன்றாக இருக்காது.. ஞாயிற்றுக் கிழமை மாலை வராமல் இருப்பதற்கு வேறு எந்தக் காரணமும் சொல்ல முடியாது. பிரகாஷ் சார், பீ.டி சார் சண்முகம், மெர்சி மிஸ், ஜெயந்தி மிஸ் என மற்ற எல்லா ஆசிரியர்களும் குடும்பத்துடன் வருகிறார்களா என்று விசாரித்து விட்டு, பிறகுதான் தானும் போகலாம் என்று முடிவு செய்தாள். 

உணவு சாப்பிட்டு அனைவரிடமும் சொல்லி விட்டு விழா நாயகனான ஒரு வயது குழந்தையுடன் அமுதா டீச்சரும் அவர் கணவரும் நிற்க, அவர்களுடன் ரேணுகாவும் தினேஷும், தினேஷ் கையில் இரண்டரை வயது கிஷோரும் சேர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக் கொண்டனர். முன்னூறு ரூபாய்க்கு பரிசளிக்கும் வகையில் அந்தக் குழந்தை விளையாடுவதற்கு ஒரு கனமான, நிறைவான விளையாட்டுப் பொருள் கிடைக்காததால் .. முன்னூறு ரூபாயை ஒரு கவரில் போட்டு குழந்தையின் கையில் கொடுத்துவிட்டு வந்தாள் ரேணுகா. 

கண்கள் மூடிய படியே நேற்று நடந்தவை எல்லாம் நினைவில் வந்தது ரேணுகாவிற்கு. ஞாயிற்றுக் கிழமை மூன்று மணிக்கெல்லாம் மாவரைத்து விட்டாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு வெளியே செல்வதால் கொஞ்சம் உற்சாகமாகத்தான் கிளம்பினாள் ரேணுகா. தினேஷ் தங்கள் முதல் திருமண நாளுக்கு வாங்கி கொடுத்த பச்சை நிற பார்டருடன் ஆரஞ்சு நிற காட்டன் சேலையும், அதற்கேற்ப கைகளில் கண்ணாடி வைத்து முதுகுத்தண்டு தெரிகிற மாதிரி டைமண்ட் வடிவில் டிசைன் செய்து பச்சை நிறத்தில் பளபளக்கும் நாடா வைத்த ஜாக்கெட்டும் அணிந்தாள். கிஷோர் பிறப்பதற்கு முன்பு அணிந்த ஜாக்கெட் இப்போதும் அவளுக்குப் பொருந்துவது கூடுதல் மகிழ்ச்சி. அந்த நீல நிறப் புடவையுடன் தலையில் கொண்டை போட்டு பள்ளிக்குப் போய் பழக்கப்பட்ட ரேணுகா, இன்று குதிரை வால் கூந்தலுடன் தயாரானாள். 

புறப்படத் தயாராகும் முன் தினேஷ் ரேணுகாவைப் பார்த்து 'செமயா இருக்க' என்று புன்னகைத்தான். கிஷோரை வண்டியின் முன் அமர வைத்து விட்டு கூடுவாஞ்சேரிக்குப் போகும் வழியில் மெட்ராஸ் கிறிஸ்டியன் காலேஜ் மதில் சுவரை ஒட்டி, தாம்பரம் மேம்பாலம் ஏறுவதற்கு முன் பூ விற்கும் கிழவியின் கடையருகே வண்டியை நிறுத்தி இரண்டு முழம் மல்லிகைப் பூ வாங்கி ரேணுகாவிடம் கொடுத்தான் தினேஷ். பத்து மணிக்கு வீடு வந்து சேர்ந்ததும்தான், ரேணுகா தூங்கிக் கிடந்த கிஷோர் காலில் போன வாரம் அவன் அழுது அடம் பிடித்ததால் நானூறு ரூபாய்க்கு வாங்கிய காலணி அவன் காலில் இல்லாததைக் கவனித்தாள். உணவு சாப்பிடும்போது நாற்காலியில் சம்மணமிட்டு கிஷோர் அமரும் போது காலணிகளைக் கழட்டி விட்டு அமர்ந்தான். அதை மறுபடியும் அணியவே இல்லை. பத்து மணிக்கு மேல் அமுதா டீச்சருக்குப் போன் செய்தாள். நல்ல வேளை அவர்கள் இன்னும் அந்த ஹோட்டலை விட்டு கிளம்பவில்லை. அமுதா டீச்சரிடம் சொல்லி "அது புது ஷு . போன வாரம்தான் நானூறு ரூபாய்க்கு வாங்கினோம்" என்று தயங்கித் தயங்கிப் பேசி, அதை மறுநாள் பள்ளிக்குக் கொண்டு வர முடியுமா என்று கேட்டாள். அமுதா டீச்சருக்கு நன்றி சொல்லிவிட்டு, அரைத்த மாவை ப்ரிட்ஜில் வைத்து விட்டு, சமையல் மேடையைத் துடைத்து விட்டு, உறங்கத் தயாரானாள். 

அறையின் உள்ளே சென்று தாழிட்டு, புடவையிலிருந்து நைட்டிக்கு உடை மாற சேலையைக் கலைந்த போது, தினேஷ் மெல்லிய குரலில் "நான் வேணா ஹெல்ப் பண்ணட்டா ? " என்றான். 

"இவ்ளோ நேரம் கிச்சன்ல இருந்தேன். அப்பல்லாம் ஹெல்ப் பண்ண வேண்டியதுதானே.. இப்ப ஒன்னும் உங்க ஹெல்ப் வேணாம்" 

"அந்த ஹெல்ப் எனக்குத் தெரியாதே ... இதுதான் எனக்குத் தெரியும்" .

"மணி பத்தே முக்கால் ..எனக்குத் தூக்கம் வருது. நாளைக்கு திங்கட்கிழமை . எனக்கு காலைல பர்ஸ்ட் பீரியட் க்ளாஸ் இருக்கு. ஒழுங்கா தூங்குங்க" 

"அடுத்த வாரம் எனக்கு நைட் ஷிப்ட்... " என்று தினேஷ் இரண்டு புருவங்களையும் உயர்த்தி தலையை ஒரு பக்கம் சாய்த்து இன்னும் மெல்லிய குரலில் சொன்னான். மருத்துவர் உட்பட ஆஸ்பத்திரியில் வேலை பார்ப்பவர்களின் இரவுகளை அவர்கள் முடிவு செய்யவே முடியாது. ஒரு ஆஸ்பத்திரியின் மருந்தக ஊழியனாக இருக்கும் தினேஷ் மட்டும் விதி விலக்கா என்ன ?! சில நொடிகளில் முகம் மாறிய ரேணுகா "சரி. ஹெல்ப் பண்ணுங்க.. " என்று சிரித்தாள். 

ரேணுகா அப்போது சிரித்தாள்தான். அனால் இப்போது அவளுக்கு தினேஷ் மேல் கோவம் வருகிறது. அலாரம் பதினைந்து நிமிடம் கழித்து இன்னொரு முறை அடிக்க ஆரம்பித்தது. மறுபடியும் அதை அணைத்தாள். கண்கள் மூடியபடியே பசியில் இருந்தவள்.. நேற்று அரைத்த புது மாவு இருந்தது கொஞ்சம் உற்சாகம் கொடுத்தது. அதில் தோசை ஊற்றி அவளுக்குப் பிடித்த வெங்காய சட்னி செய்து சாப்பிட வேண்டும் என்று நாவும் வயிறும் ஏங்கத் தொடங்கி விட்டது. 

ரேணுகாவின் வெங்காய சட்னி அவள் குடும்பத்தில் அவ்வளவு பிரபலம். அவள் வைக்கும் வெங்காய சட்னி மட்டும்தான் அவள் அம்மா சமைப்பது போல் இருப்பதாக ரேணுகாவே பல சமயங்களில் நினைத்திருக்கிறாள். ஒரு முறை தினேஷுடைய தாய் மாமன் வீட்டுக்கு வந்த போது வைத்த வெங்காய சட்னிக்காக ரேணுகாவை அப்படிப் பாராட்டினார். சென்னையின் அவசரமாக பெரிய வெங்காயத்தில் செய்யும் வெங்காய சட்னி அல்ல அது. புதுக்கோட்டையில் அவள் அம்மா செய்த வெங்காய சட்னியை அவள் சென்னையில் செய்வாள். அவள் அம்மா வெங்காய சட்னிக்கு ஒரு போதும் பெரிய வெங்காயம் பயன்படுத்தியது இல்லை. அப்பாவிற்கு விவசாயம் செய்ய இருபது ஏக்கரா நிலம் இருந்தது. அம்மா நிதானமாக சின்ன வெங்காயம் உரித்து அரிந்து சட்னி செய்ய நேரமிருந்தது. அது அப்படியே ரேணுகாவிற்கும் தொற்றிக் கொண்டது. 

தோசை சட்னி செய்து விட்டு, கிஷோருக்கு பருப்பு வேக வைத்து, அத்தையிடம் கொடுத்து அந்தக் கீரை ஆயச் சொல்லி, கீரைக் குழம்பும், கிஷோருக்கும் அத்தைக்கும் கொஞ்சம் ரசமும் அனைவருக்கும் சேர்த்து சாதமும், உருளைக் கிழங்கு பொறியல் செய்து முடித்தால் இந்தக் காலையை கடந்து விடலாம் என்று எண்ணியவாறே ரேணுகாவின் கண்கள் மூடிக் கிடந்தன. அத்தை கீரை ஆயும் நேரத்தில் காபி போட்டு அரிசி வேக வைத்து, ரசம் வைத்து விட்டால், அத்தை கீரை கொடுத்தவுடன் கீரைக் குழம்பும் கடைசியில் தோசையும் செய்து விடலாம் என்று திட்டமிட்டாள். திடீரென எழுந்து பார்த்தால் மணி 6.50. அப்பொழுதுதான் தெரிந்தது 6.30 க்கு அடித்த அலாரத்தை தினேஷ் அமர்த்தி இருக்கிறான் என்று. தூக்க‌ மயக்கத்தில் அலாரம் அடித்ததும் அவளுக்குக் கேட்கவில்லை. 

அவசர அவசரமாக எழுந்து பல் தேய்த்து, அவளது காலை கடன்களை முடித்து மூன்று டீ போட்டாள். கிஷோரையம் தினேஷையும் எழுப்பி, கிஷோருக்கு பால் கொடுக்கச் சொன்னாள் தினேஷிடம். அத்தையிடம் கீரை ஆயக் கொடுத்தாள். கொடுத்து விட்டு கடிகாரத்தைப் பார்த்தாள். மணி 7.15. 8.30க்கு அந்த மஞ்சள் நிற வண்டி வீட்டருகே வந்து விடும். குக்கர் வைத்து விட்டு, தனக்கான வெங்காய சட்னியை செய்து விடலாம் என்று முடிவெடுத்தாள். பசி அவ்வாறு முடிவெடுக்க வைத்தது. எவ்வளவு அவசரமாக இருந்தாலும் ரேணுகா சின்ன வெங்காயத்தில்தான் சட்னி செய்வாள். உரித்து பொடிப் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயமும், சிறியதாக நறுக்கிய தக்காளியும் சம அளவில் எடுத்துக் கொண்டு, வாண‌லியில் கொஞ்சம் நல்லெண்ணெய் ஊற்றி, கொஞ்சம் கடலைப் பருப்பும் ஐந்து வரமிளகாயும் வறுத்து, அதன் மேல் வெங்காயத்தைப் போட்டு பொன் நிறத்தில் வறுத்து கொஞ்சம் உப்பு போட்டு அதை இறக்கி வைத்தாள். கை நிறைய பூண்டுப் பற்கள் எடுத்து கொஞ்சம் சீரகம் சேர்த்து அதையும் வறுத்து, அதன் மேல் தக்காளியைப் போட்டு வறுத்தாள். அந்த வாசம் ரேணுகாவின் பசியை இன்னும் தூண்டிவிட்டது. அதற்குள் குக்கர் விசில் வந்து விட்டது. பிறகு இரண்டையும் மிக்சியில் போட்டு அரைத்தாள். வெங்காய சட்னி தயார். மணி 7.35. 

அத்தை ஆய்ந்த கீரையை எடுத்து ஒரு அடுப்பில் வேக வைத்து, அதற்குள் குக்கரில் வேக வைத்திருந்த பருப்பையும் உருளைக் கிழங்கையும் எடுத்து விட்டு இன்னொரு அடுப்பில் ரசம் வைத்தாள். உருளைக் கிழங்கை தோலுரித்து வைத்தாள். மணி 7.50. இன்னும் தோசை ஊற்றி, உருளைக் கிழங்குப் பொரியல் செய்து அதைக் கேரியரில் போட்டு குளித்து தயாராகி, அந்த மஞ்சள் நிற வண்டியில் 8.30க்கு ஏற வேண்டும். ரசத்தை இறக்கிவிட்டு, சட்டென தோசை ஊற்ற ஆரம்பித்தாள். அத்தைக்கு மூன்று தோசை, தினேஷுக்கு நாலு கிஷோருக்கு ஒன்று, இவளுக்கு மூன்று. மொத்தம் பதினொன்று. ஐந்து தோசை ஊற்றியவுடன், கீரைக் குழம்பை இறக்கி வைத்து விட்டு, உருளைக் கிழங்கு பொரியல் செய்யத் தொடங்கினாள். ஒரு அடுப்பில் தோசை, இன்னொரு அடுப்பில் உருளைக் கிழங்கு பொரியல். மணி 8.05. இன்னும் மூன்று தோசை ஊற்றி விட்டு குளிக்கச் சென்றாள். "ஏங்க .. இன்னும் ஒரு மூணு தோசை மட்டும் ஊத்தறீங்களா? நான் குளிச்சிட்டு வந்துட்றேன்".

குளியலறைக்குச் சென்றவுடன் ரேணுகாவிற்கு ஆல்பர்ட் ஐன்ஸ்ட்டின் மீது காரணம் புரியாமல் எரிச்சல் வந்தது. தியரி ஆப் ரிலேட்டிவிட்டிக்கு உதாரணமாக "ஒரு அழகான பெண்ணுடன் இரண்டு மணி நேரம் அமர்ந்தால், அது ஒரு நிமிடம் போலவும், அடுப்பின் மேல் ஒரு நிமிடம் அமர்ந்தால், அது இரண்டு மணி நேரம் போல தெரியும்" என்று அவர் சொன்னதற்குப் பதில் "காலையில் ஐந்து நிமிடம் தூங்கினால் அது முக்கால் மணிநேரம் போலவும், சமையலறையில் இரண்டு மணி நேரம் சமைத்தால் அது கால் மணி நேரம் போலவும் தெரியும்" என்று சொல்லியிருக்கலாம் என்று நினைத்தாள். BSc இயற்பியல் படித்தவளுக்கு ஐன்ஸ்ட்டின் மீது எரிச்சல் வர உரிமை இருக்கிறது என்றே நினைத்தாள். 

குளித்து தயாராகி வந்தவுடன், தினேஷ் ஊற்றிய மூன்றாவது தோசை கருகியிருந்ததைப் பார்த்து எரிச்சலுற்றாள். இரண்டு நல்ல தோசையையும் ஒரு கருகிய தோசையையும் ஒரு டப்பாவில் போட்டு வெங்காய சட்னியை ஒரு சிறிய டப்பாவில் போட்டாள். அவசர அவசரமாக மதிய உணவையும் கேரியரில் கட்டினாள். 8.30க்கு வீட்டிலிருந்து இறங்கி விட்டாள். நல்ல வேளை, மஞ்சள் நிற வண்டி இவள் போன பிறகுதான் வந்தது. வண்டி ஏறிியதும் பேருந்திலேயே  தோசையை சாப்பிட்டு விடலாமா என்று யோசித்தாள். ஆனால் ஏனோ அதற்கு மனம் வரவில்லை.

9.10க்குப் பள்ளி சேர்ந்து, ஆசிரியர் அறைக்குச் சென்றாள். 9.30க்குத் தான் பர்ஸ்ட் பீரியட். அதற்குள் சாப்பிட்டு விடலாம் என்று தன் கைப்பையை திறந்தாள். அப்பொழுதுதான் தெரிந்தது அந்த தோசை டப்பாவை வீட்டிலேயே வைத்துவிட்டு வந்து விட்டாள். ஒரு நிமிடம் அமைதியாய் அமர்ந்தாள். அந்த அறையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கடகடவென ஒரு பாட்டில் தண்ணீரையும் குடித்துவிட்டு, முதல் வகுப்பு பாடமெடுக்க வகுப்பறை நோக்கி நடந்தாள் ரேணுகா. 

- ஞானபாரதி