அந்த மனிதர்கள் எலும்பும் தோலுமாக இருந்தார்கள். அந்த மனிதர்களிடம் எலும்பும் தோலும் தான் இருந்தது.

நெஞ்சில் இருக்கும் எலும்பை உருவி ஊன்றி நடக்கும் அளவுக்கான உடல்வாகு. வானத்தின் நிறத்தில் வெம்மை மட்டுமே அப்பியிருந்தது. யாவரின் கண்களும் உள்ளொடுங்கிய தகிப்பைக் கொண்டிருந்தன. பூமியின் சுழற்சி சற்று கூடுதலாகவோ குறைவாகவோ மாறி இருப்பதாகத் தான் உணர முடியும். ஒரே மாதிரியான உருவ சாயலில்.. யாவருக்கும் பசித்த பற்கள். அண்மையில் தொலைந்து விட்ட தூரத்தை சுமந்து கொண்டு அலையும் அவர்களின் முதுகில் காலத்தின் சுமை அளவுக்கதிகமாக. பாறைகளின் இடுக்கில் இருந்து எழுந்து வந்த கோட்டோவியங்களைப் போன்ற நமநமப்பு அவர்களிடம் பிசுபிசுத்தது.

காற்றின் குறுந்தகவல்கள் அறவே அற்றுவிட்ட பெருங்காலத்து இடைவெளியின் வாசத்தில் நெடி சொட்டும் வெளியின் ஓட்டைகள் குருதிகளாலும் குமட்டல்களாலும் நிரம்பியிருந்தன. எங்கு காணினும் வெடித்த பூமியின் பிறழ்ந்த திறப்பு. அவர்களுக்குள்ளாகவே அவர்கள் முனங்கிக் கொண்டார்கள். நேரம் ஆகிக் கொண்டிருக்கிறது என்பது தான் வாய் அகன்ற மொழியின் கீச்சொலி. ஈரமற்ற நெஞ்சின் வடுக்களில் ஈயத்தின் சாயத்தில் வெயிலின் உருகுநிலையைக் காண முடிந்தது.

"தினமும் இது நடக்குது. தாமதிச்சா எதிர்பக்கம் நீ நின்னுடுவ. முந்தினோரே மூத்தோர் ஆவார்..." பெருசுகள் இளசுகளை உற்சாக மூட்டிக் கொண்டிருந்தனர்.

சாம்பல் பூத்த மூளையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தில் வாய் கிழிந்த சிரிப்பை அத்தனை அருகில் காணச் சகியவில்லை. வரவேண்டிய கடவுள்கள் எல்லாம் வந்து போய் விட்டன....என்று தலை விரிந்த கிழவி ஒருத்தியின் ஒப்பாரி... தனக்கானது என்று தான் முதிர் கண்கள் தேடின.

வயிறு ஒட்டிய வாழ்வின் விளிம்பை கூவி கூவி மிரண்டு சொல்லும் காகங்களின் நிறம் சிவப்பைக் கூட்டி இருந்தன. வீதிகளின் தோற்றத்தில் பதுங்கு குழிகள் பூத்திருந்தன. மரங்களின் கிளைகளில் குச்சிகளின் கரடு முரடு காட்சி.. குத்தி கிழிக்கும் பரிணாமத்தின் பின்பக்கத்தைக் வரைந்திருந்தன.

"சரி சரி....... புறப்படுங்கள்"

கூட்டத் தலைவன் தொண்டைக்கு முந்திய இடத்திலிருந்து கத்தியதும்.... அந்தக் கூட்டம் கண்களற்ற பூமியைத் துழாவிக் கொண்டு முன்னேறியது. வெகு தூரம் ஊர்ந்து கொண்டே வந்து விட்ட கூட்டம் பாறைகளின் இடுக்கில் சரிந்து அமர்ந்து கொண்டு கழுகின் மூச்சிரைப்போடு வெயிலை உரிந்து கொண்டே காத்திருக்கத் தொடங்கியது. நிசப்தமான பகலின் மூச்சிரைப்பு அத்தனை கடுமையாக குடலை புரட்டிக் கொண்டிருந்தது. அது கனத்த காலத்தின் மூடியை முட்டி முட்டி திறக்க முயற்சிப்பதாக குதித்துக் கொண்டிருந்தது.

நீண்ட நெடிய தவத்தின் சருகுகள் பசித்த நொடிகளை உடைத்து நொறுக்குவதாய் சொர சொரத்த நாவில் தடவிக் கொண்ட கூட்டத்தில் முதலில் கண்டவனின் கண்கள் பிரகாசித்தன. சூரியனின் சொல்லில் நீண்ட அவன் பார்வையின் நீட்சி அவன் காட்டிய திசையில் கூட்டத்தை கழுத்து வரை பேராசை கொண்டு ஓட செய்தது. ஓடி சென்று கழுத்தில் வியர்வை சொட்ட சுற்றி வளைத்து நிற்க வைத்தது.

எங்கிருந்தோ அவ்வழியே வந்து அவர்கள் நடுவில் மாட்டிக் கொண்ட அந்த வேறு கூட்ட மனிதனை இந்த மனிதர்கள் நொடிகளில் பிளந்து தின்ன ஆரம்பித்தார்கள்.

காட்சி கண்ட கழுகு தவற விட்ட கல்லில் கி பி 3000 என்று காலம் கத்தியது.

- கவிஜி