இரவின் கணம் ஒரு பெரிய நிசப்தத்தில் விரிகிறது.

நிலவின் துணை கொண்டு பயணிக்கிறது வானம்.

செங்கப்பள்ளியிலிருந்து கோவைக்கு வரும் இருவழி சாலையின் முடிவில் உள்ள நீலம்பூரில், அந்த சுங்கச் சாவடி இருந்தது. அது கேரள மாநிலத்தை அடையும் ஒரு வழி சாலை. அதில் ஒரு புறம் பழுதானதால் கேரள மாநிலத்தில் இருந்து கோவைக்கு வரும் வாகனம் வேறோரு பாதை வழியாக கோவை வந்து அடைந்து இருந்தது. ஆனால் சென்னை மற்றும் சேலத்திலிருந்து கேரள மாநிலம் வரும் வாகனம் நீலாம்பூர் சுங்கச் சாவடியை கடந்தே ஆக வேண்டும்.

ஒரு பழுப்பு நிற ஸ்வெட்டரை அணிந்து கொண்டு சுங்கச் சாவடியின் பணம் வசூலிக்கும் அறையில் தனியாக அமர்ந்து கொண்டு வாகனத்தை எதிர்நோக்கி தன் இரவுப் பணியைத் தொடங்கக் காத்திருந்தான் குமார். ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த குமாருக்கு, ஊர் பன்னிமடை, காதல் திருமணம் மனைவியின் பெயர் வள்ளி, இவர்களது எட்டு மாதக் குழந்தை தீக்ஸ்சா.

தனிக்குடித்தனத்தில் பெற்றோர் துணையில்லாமல் வாழ்வது காதலுக்கு விதிக்கப்பட்ட சாபக்கேடு.

மணி இரவு ஒன்பதைத் தொட்டிருந்தது. நான்கு வாகனத்தின் பணம் வசூலித்த களைப்பில் உணவு உண்ண முற்பட்டான். இன்னொரு வாகனம் வருவதற்குள் தன் உணவை முடிக்கவேண்டும் என் கட்டாயத்துடன் உண்ண ஆரம்பித்தான்,

அவன் அலைபேசி சிணுங்கியது.

“ம்……. இப்போ தான் சாப்படறேன்.. தீக்சு என்ன பண்ணறா ….."

“சரி…….நான் அப்பறம் கூப்பிடுறேன் ……. ஒரு வண்டி வர மாதிரி இருக்கு ……." என்று அவசர அவசரமாய் தன் மனைவியுடனான உரையாடலைத் துண்டித்தான்.

தின்ற பாதி சோற்றுடன் வாகனத்திற்கான வசூலை வாங்கத் தயாரானான். இரவுப் பணியில் இருவர் மட்டுமே அமர்த்தப்படுவர். அவனுடன் பணியில் இருக்கும் ஒருவர் வராததால், இன்று வேலை அவனுக்கு சற்றுக் கடினமாக இருந்தது.

இரவு இன்னும் தன்னை கருமையாக்கி அழகு பார்த்திருந்தது. தன் நாற்காலியில் அமர்ந்து சாலையின் வெறுமையைப் பார்த்திருந்தான் குமார். நேரம் ஆக ஆக வெறுமையின் மௌனம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. யாரும் இல்லாத அந்த சாலை ஒவ்வொரு வினாடியும் மிரட்சியின் உச்சத்தில் இருந்தது.

குமார் சற்று பயந்தே காணப்பட்டான்.

காற்றின் குரலும் சற்று ஓங்கி இருந்தது.

வாகனம் எதுவும் வராததால் , தன் தனிமையை நடையில் கழித்தான்.

மணி பதினொன்றை எட்டியிருந்தது. வண்டியை எதிர்நோக்கி தூங்கிப் போனான்.

“என்னப்பா தனியா இங்க உட்கார்ந்து என்ன பண்ணற, நீ நினைக்கிற மாதிரி இங்க வண்டி எல்லாம் வராது. போப்பா போய் நேரங் காலமா வீடு சேரு…………….." என்று கர்ஜித்து ஒரு குரல்

திடுக்கிட்டு விழித்துக் கொண்ட குமார் பின்னால் திரும்பிப் பார்த்தான்.

யாரும் இல்லை. தான் கண்டது கனவென்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, தனது வலது பக்கம் திரும்பினான்.

ஒரு நொடி அதிர்ந்து போனான்.

சுங்கச் சாவடியின் நுழைவாயிலில் ஒரு பாரவண்டி ஒன்று விகாரமாக நின்றிருந்தது.

தன் அறையை விட்டு வெளியில் வந்த குமார், அந்த வண்டியை நோக்கி நடந்தான். அந்த வண்டியின் ஓட்டுநர் இருக்கையில் யாரும் இருப்பது போலத் தெரியவில்லை. அந்த வண்டி சென்னையிலிருந்து ஏதோ சரக்கை ஏற்றி வந்திருப்பதாகத் தெரிந்தது. வண்டியை ஒரு முறை சுற்றி வந்து பார்த்தான். யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.

தன் கண் தேடும் தொலைவில் யாரும் தென்படவில்லை.

மணி பனிரெண்டைக் கடந்திருந்தது

நேரம் போய்க்கொண்டே இருந்தது.

வேறு எதாவது வாகனம் வந்தால் கூட இந்த சுங்கச் சாவடி நுழைவாயிலைக் கடக்க முடியாத அளவிற்கு இந்தப் பாரவண்டி நுழைவாயிலை ஆக்கிரமித்திருந்தது.

குமாருக்கு பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது.

அந்த வாகனத்தில் எழுதியிருந்த அலைபேசியை அழைத்துப் பார்த்தான் குமார்.

'நாட் ரீச்சபிள் ' என்று எதிர்க்குரல் கேட்டது.

அன்று வெயில் அல்லாத இரவு கூட வேர்வையை சுவைத்திருந்தது.

பதற்றம் கலந்த பயத்துடன் குமார் அங்கும் இங்கும் நடந்து சாலையை வெறித்துக் கொண்டிருந்தான். யாரும் வருவது போலத் தெரியவில்லை.

அந்த வாகனத்தின் முன்புறத்தை நெருங்கினான்.

திடீரென்று அந்த வாகனத்தின் முன்புறம் உள்ள சிறிய வண்ண விளக்கு எரியத் தொடங்கியது. குமார் மேலும் படபடத்தான்.

மெதுவாக அந்த வாகனத்தின் அருகில் சென்று பார்த்தான். அந்த விளக்கைத் தொட எத்தனித்தான்

டப்பென்று விளக்கு அணைந்தது.

திரும்பிப் பார்க்காமல் குமார் அங்கிருந்து ஓட்டம் பிடித்தான்.

சற்று தூரம் ஓடிய பிறகு ஓர் இடத்தில் நின்று, தன் மூச்சை சமநிலைப்படுத்திக் கொண்டு திரும்பவும் அந்த வாகனத்தை உற்றுப் பார்த்தான்.

அவன் ஓடி உதவி கேட்பதற்கும் அங்கு யாரும் இல்லை.

தனிமையின் ஓங்காரமும், இருளின் ஆதிக்கமும் அங்கு நேர்கோட்டில் பயணித்திருந்தது.

கடந்த ஆறு மாதம் எந்த வேலையும் கிடைக்காமல் கடைசியாக இந்த வேலை கிடைத்திருந்தது. அவன் இருக்கும் குடும்ப சூழல் அவன் பணத்தேவைக்கான அழுத்தத்தை உணர்த்தியது. அதனால் கிடைத்த வேலையை தக்க வைத்துக் கொள்வதை அவன் கோட்பாடாகக் கொண்டிருந்தான். இப்படி இருக்கும் வேளையில் இந்தச் சூழல் அவனை மிகவும் வாட்டியது.

தன் அலைபேசி எடுத்து யாருக்கு அழைப்பதென்று தேடிக் கொண்டிருந்தான்.

தன் மனைவியின் எண்ணை அழைக்க அவன் விரல்கள் முந்திக் கொள்ளும்போது, அவளின் அதீத பய உணர்ச்சிகள் அவனைத் தடுத்தது.

அவனுடைய மேலதிகாரிக்குத் தொடர்பு கொண்டால்…

“சுவிச் ஆப் ….” என்று வந்தது.

இருட்டு ஒரு புறம், வாகனத்தின் அச்சுறுத்தல் மறுபுறம்.

என்ன செய்வதென்றே தெரியாமல் கூனிக்குறுகி வசூலிப்பு அறையின் முன்புறம் அமர்ந்தான் குமார். இருக்கும் தெய்வங்களை எல்லாம் அழைத்துப் பார்த்தான். கனவாகனம் அவனை மிரட்டும் பெரிய பிசாசு போல தெரிந்தது.

வண்டி அருகில் செல்லத் தயங்கி சற்று தூரத்தில் இருந்தே அந்த வண்டியைப் பார்த்திருந்தான் குமார். வண்டி சற்று மெதுவாக அவனை நோக்கி நகர்வது போல இருந்தது. திரும்பவும் அதன் எதிர்த் திசையில் ஓடத் தயாரானான். ஆனால் இப்பொது திரும்பவும் உற்றுப் பார்க்கையில் வண்டி நகர்வதாகத் தெரியவில்லை.

குமார் பயம் கலந்த ஆத்திரத்தோடு வண்டியின் அருகில் அடியெடுத்து வைத்தான். இப்போது வண்டி அமைதி காத்த வனம் போலத் தோற்றமளித்தது. அருகில் சென்றவுடன் மெதுவாக தனது இடதுகையால் வண்டியின் முன்புறத்தைத் தொட்டான் குமார். தன்னுடைய படபடப்பு மட்டும் காதுகளை நிறைந்திருந்த வேளையில்

“பா…………………………………..ம்……….ம்…………………………………..ம்ம்” என்று பெரும் சத்தம்.

வாகனத்தின் ஒலியெழுப்பானிலிருந்து வந்தது. இந்த முறை கால்தவறி கீழே விழுந்து தட்டுத் தடுமாறி, அந்த இடத்தைவிட்டு ஓடினான்.

தூக்கம் தொலைத்து, வாய் அடைத்து ஒரு பித்தனைப் போல தன்னுடைய வசூலிப்பு அறையில் அமர்ந்து கொண்டு அந்த வண்டியைப் பார்த்திருந்தான். கடந்த நான்கு மணிநேரம் எந்த வண்டியும் அந்தச் சாவடியைக் கடக்காதது குமாருக்கு சாதகமாக இருந்தது.

இரவின் உறுமல் காற்றின் அலைவரிசையை ஆராய்ந்திருந்தது.

"டாய் தம்பி என்ன தூங்கிட்டு இருக்க… நாங்கெல்லாம் போக வேண்டாமா? யாருடைய வண்டி அது…. இப்படி நிறுத்திருக்கு…….நீ என்ன வேல செய்யற" என்ற ஓர் அதட்டல் குரல்

திடுக்கிட்டு தன் தூக்கத்தில் இருந்து எழுந்தான் குமார்.

அந்த கனரக வாகனம் அங்கேயே இருந்தது. அதற்குப் பின்னால் இருபது வாகனங்கள் ஒலி எழுப்பியதுடன் கூச்சலிட்டுக் கொண்டு இருந்தன.

அவரவர் பாஷையில் திட்டிக் கொண்டிருந்தார்கள்.

குமார் தன் முன்னால் நின்றிருந்த ஒருவரிடம்

“சார்…….. ஒரு அஞ்சு நிமிஷம் பொறுங்க, நான் எதாவது பன்றேன்” என்று கம்மிய குரலில் கேட்டுக் கொண்டான்.

நேற்றைய திகில் சம்பவத்தில் மன்றாடி தூங்கிப் போனது நினைவுக்கு வந்தது.

என்ன செய்வதென்றே தெரியாமல் வண்டியின் அருகில் சென்றான். இந்த முறை ஒரு போர் வீரனைப் போல முன்னேறினான். அருகில் சென்றவுடன் வண்டி சிறிய உறுமலோட நகரத் தொடங்கியது. அவன் ஆச்சர்யப்படுவதற்குள் உள்ளிருந்து ஓர் ஓட்டுநர் “தம்பி…….. சாரிப்பா.. நேத்து இந்த வண்டி கொஞ்சம் மக்கர் பண்ணுச்சு. தானாவே லைட் எரியுது, திடீருனு அதுவே ஸ்டார்ட் ஆகுது. அப்பறம் கரைக்ட்டா டோல்கேட் வாசல் வந்தவுடனையே நின்னு போச்சு… ஒரு பிரெண்டுக்குப் போன் பண்ணி அவன்கூட பைக்குல போய் மெக்கானிக்கைத் தேடி கடைசில ஒரு வழியா கிடைச்சு…. இப்போ சரி பண்ணியாச்சு…. உன்ன நேத்து எழுப்பிப் பார்த்தேன்.. நீ எந்திரிக்கல. அதனால நான் உடனே கிளம்பிட்டேன்” என்று ஒரு படத்தின் கடைசிக் காட்சியில் திருந்திய வில்லன் பேசும் வசனம் போல இருந்தது குமாருக்கு.

நேற்றைய பயம் கலந்த அதிர்ச்சியை விட இன்றைய பயம் தெளிந்த அதிர்ச்சி குமாரை உலுக்கியது.

மணி ஆறை எட்டி இருந்தது.

இருள் மெல்ல விலகிக் கொண்டிருந்தது…. குமார் மட்டும் இருளை விட்டு விலகாமல் நின்றிருந்தான்…..

- சன்மது