கண்களைக் காண முடியாது குறித்த முதல் தடுமாற்றத்தை அடைந்தான் அமுதன். 
 
மீண்டும் மீண்டும் எட்டி பார்த்தவனுக்கு ஜன்னல் முழுக்க தெரிந்ததெல்லாம் கட்டிலில் எழுந்தமறந்து லூசு மாதிரி கத்திக் கொண்டிருக்கும் ருக்மணிதான். அவள் ருக்மணி என்றெல்லாம் தெரியாது அவனுக்கு. அவனை பொறுத்தவரை ருக்மணி ஓர் அவள்.
 
அவள் கத்த கத்த இரண்டு மூன்று செவிலியர் ஓடி வந்து அவளின் கால் கைகளை பிடித்து அழுத்தி படுக்கையில் சாய்க்க.......வெளியே இருந்து ஓடி வந்து தலையை ஆதரவாக பிடித்து படுக்க வைத்தான் கணவன் இளம்பரிதி. உள்ளே நடக்கும் சில பல சம்பாஷணைகளில்... அது வழக்கமாய் நடக்கும் ஹிஸ்டீரியாதான் என்று தெரிய வருகிறது. சட்டென கழுத்தை திருப்பிக் கொண்டு ஜன்னல் பக்கம் இருந்த பெஞ்சில் அமர்ந்து நகம் கடித்தான் அமுதன். நாட்களை கடிப்பது போல இருந்தது.
 
கூட்டம் கலைந்ததை போல ஒரு பிம்பம் மனதுக்குள் காலத்தை கணக்கிட......மெல்ல எழுந்து மீண்டும் எட்டிப் பார்த்தான் அமுதன். தலை கொஞ்சம் மேலெழும்பிய மாதிரி சரிந்து படுத்திருந்தாள் அவள். அருகே இரு தொட்டில்கள். கண்களை தூக்கி கம்பிகளுக்கு இடையே சிமிட்டினான். குழந்தைகள் கண்களுக்கு அகப்படவில்லை. 
 
"மச்சா இங்க என்ன பண்ணிட்டு இருக்க... ஆக்சிடென்ட் வார்டு அந்த பக்கம் இருக்குடா ..." என்று  அமுதனை அழைத்துப் போனான் நண்பன் நெப்போலியன்.
 
மனதுக்குள் அந்த அரசு மருத்துவமனைக்குள் சுற்றிக் கொண்டிருந்த சுண்டெலிகள் பிராண்டி வைப்பது போல உணர்ந்தான் அமுதன். 
 
"அவ தானா... கிட்டத்தட்ட ஒரு வருஷம் இருக்குமே...!"
 
காதுக்குள் பெயர் தெரியாத வண்டொன்றின் சப்தம் குறுகுறுத்தது. பாவத்தின் சம்பளம் வண்டின் குறுகுறுப்பு தான் போல. வீட்டில் அவனால் அடைபட முடியவில்லை. இரவைத் துளைத்துக் கொண்டு வீதியில் துழாவினான். வீதியைத் துளைத்துக் கொண்டு சாலையில் துழாவினான். சாலையைத் துளைத்துக் கொண்டு வானத்தில் துழாவினான். நினைப்புக்கு ரெக்கை முளைத்த போது குடித்த போதை ஜிவ்வென்று இருந்தது. வாசலில் படுத்துக் கொண்டான். நாய் போல படுத்துக் கிடப்பது அவனுக்கு பிடிக்கும். அன்று அப்படி படுத்துக் கிடந்தது மிகவும் பிடித்திருந்தது.
 
விடிகையில்... அழுகை வந்தது. காரணமே இல்லாமல் அழுகை வருவது அப்படி ஒரு தோற்றம் தானே தவிர காரணமின்றி சிறுநீர் கூட வராது என்பது தான் அறிவியல். கண்ணாடியில் முகத்தைக் காணுகையில்... கண்களற்று பார்ப்பது போல உணர்ந்தான். மூளைக்குள் முக்காடிட்டு அமர்ந்திருந்த பாவம்.. முதுகில் சாட்டை கொண்டு அடித்தது. சுளீர் சுளீர் என்று அதற்கு இதயத்தில் வலித்தது. வினையும் எதிர் வினையும் வெகு தூரத்தில் இருப்பதில்லை என்று நினைத்த போது.. மீண்டும் அந்த அரசு மருத்துவமனையில் அதே ஜன்னல் ஓரம் நின்றிருந்தான். குழந்தை திருடுபவன் போல எட்டி பார்த்தான். அந்த பெட்டில் அவள் இல்லை. வேறு ஒரு பெண் படுத்திருந்தாள்.
 
சுண்டெலி செத்து விழுந்தது போல இருந்தது. மூளையைப் துடைத்து பார்த்தான். அது அவள் இல்லை. 
 
"என்ன செய்வது... என்ன ஆச்சு....?"  தெரிந்து கொள்ளும் ஆர்வம் இன்னும் இன்னும் கூடியது. மனித ஆர்வத்துக்கு ஈடு சாவின் விளிம்பில் நிற்கும் பேராசையை உள்ளடக்கியது. அவன்  சுண்டெலியாகவே அங்கும் இங்கும் அலைந்தான். தொப்புள் காட்டிக் கொண்டு தொப்பையையும் காட்டிக் கொண்டு செவிலி ஒருத்தி அவனை நோட்டமிட்டுக் கொண்டே இருந்தாள். ஒரு கட்டத்தில், "என்ன...! ஏதும் குழந்தை தூக்க வந்திருக்கியா..?" என்றாள். தலை மேல் தலையைக் கொண்டு முட்டியது போன்ற பயம் திக்கென்று எழும்பியது அமுதனுக்கு. 
 
"ஐயோ......இல்ல....!" என்றான். 
 
எச்சில் விழுங்கலாம் என்றது அருகில் இருந்த மரத்தில் சரசரவென கீழே வந்து விட்டு மீண்டும் சர சரவென மேலே ஏறிய அணில் ஒன்று.
 
"அப்போ கிளம்பு..." என்று காட்டமாக சொன்னவள்.....அவனை ஏற இறங்க பார்த்தாள். 
 
வெள்ளை முடி கலந்த தாடி.... தொங்கும் மீசை... சுருட்டி விட்ட சட்டை.. கிழிந்த ஜீன்ஸ் பேண்ட்.. சிவப்பேறிய கண்கள்... சிகரெட்டுக்கு கறுத்துப் போன உதடு... கோபம் வந்தால் படக்கென்று வயிற்றுக்குள் இருந்து கத்தியை உருவி சொருகி விடும் உடல் மொழி....
 
"என்ன....? என்னப்பா.........வேணும்... ஏன் இங்கயே நிக்கற......?" இன்னும் கொஞ்சம் அதட்டினாள். 
 
பட்டென்று அருகில் வந்து 500 ரூபாய் தாள் ஒன்றை அவளிடம் நீட்டினான். செவிலிக்கு எதுவோ புரிந்து விட்டது. கண் காட்டினாள். அந்த மரத்துக்கு பின்னால் ஒரு கைவிடப்பட்ட கட்டடம் இருந்தது. அங்கே மறைவுக்கு கட்டியது போலவே இருந்த தூணுக்கு பின்னால் சென்று வசதியாக நின்று கொண்டு..." சொல்லு.. என்ன வேணும்....?" என்றாள். தீர்க்கம் 500 ரூபாயை மடக்கி மார்போரத்தில் வைப்பதிலும் இருந்தது.
 
நேற்று பார்த்த பெண் பற்றி கேட்டான்.
 
மெமரியை குலுக்கி கண்டடைந்து விட்டு...." ஓஹ் அவளா........! இன்னைக்கு காலைல தான் டிஸ்சார்ஜ் ஆகி போனா...." என்றாள் வாய் சிவந்த செவிலி.
 
கண்கள் சிவக்க பார்த்தவனுக்கு சற்று உடல் நடுங்கியது. மீண்டும் ஒரு 500 ரூபாய் தாளை அவனாகவே இன்னோர் மார்புக்குள் சொருகினான்.
 
உள்ளே சென்று நிமிடத்தில் வந்த செவிலி.......ருக்மணியின் முகவரியை நீட்டினாள்.
 
*
 
கதவு தட்டினான். 
 
விரல்கள் தானாக சுதி சேர்த்தன. "வீடு சரி தானா....! யார் திறப்பார்கள்.....?" போன்ற சுற்றும் முற்றும் பார்வையை முதல் சுற்றிலேயே திறந்த கதவு நிறுத்தியது. 
 
ருக்மணி வெளுத்திருந்தாள். உள்ளொடுங்கிய முகத்தில்.... கண்கள் மட்டும் வளைந்து பார்த்தன. நான்கு கண்களும் சந்தித்த மறு கணம்... சட்டென பின்னோக்கி நடுங்கிக் கொண்டே ஓர் இயந்திரத்தைப் போல நகர்ந்தாள். 
 
"அது... வந்து.. சொல்றத கொஞ்சம் கேளுங்க...." என்று வார்த்தைகளைக் கோர்த்துக் கொண்டே வீட்டுக்குள் அனிச்சையாய் சென்று விட்டான் அமுதன். அவன் கண்கள் அவளையும் தாண்டி குழந்தைகள் மீது விழுந்தது. பட்டென்று அறைந்த கைகள் அவன் முகத்தில் இருந்து எகிறியது. அவன் என்ன ஏதென்று நிதானிப்பதற்குள்...  ருக்மணி அமுதனை சரமாரியாக அடித்துக் கொண்டிருந்தாள். அடக்கி அடக்கி வைத்த கோபத்தின் வெளிப்பாடு வெறி கொண்டு அவளுள் கிளம்பியிருந்தது. கத்தினாள். கடித்து வைத்தாள். கன்னத்தில் மாறி மாறி அறைந்து கொண்டேயிருந்தாள். நிலை தடுமாறி கீழே விழுந்த அமுதன் மேல் கால்களை நன்றாக அகட்டி வைத்து இறுக்கமாய் அமர்ந்து கழுத்தைப் பிடித்து நெறித்தாள்.
 
அவளின் கண்களில்.... வெறி இருப்பது போன்ற பிரமையை அவன் கடந்து விட்டதால் எந்த எதிர்ப்பும் காட்டவில்லை. கழுத்தில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கி விட்டது. வயிற்றில் மிதித்த போது ஒருமுறை தலையும் கால்களும் மேல் எழும்பி தரையில் சரிந்தன. அவன் முகம் வலியில் விலகிக் கூடியது. பேச்சற்ற மூச்சு மேலும் கீழும் வேக வேகமாய் நீண்டது. அவன் அவளைத் தள்ளி விட்டு வேகமாய் எழுந்து குழந்தைகளின் அருகே சென்றான். தொட்டிலை எட்டிப் பார்த்தான். பார்த்த குழந்தையின் கண்களில் சற்று முன் கண்ட ருக்மணியின் அதே வளைந்த கண்கள் சிரித்தன. 
 
ருக்மணி அவனை பின்னாலிருந்து உதைத்து தள்ளினாள். அவன் எதிரே இருந்த கட்டிலில் விழுந்து புரண்டான். அப்போது வெளியே இருந்து வீட்டுக்குள் வந்த கணவன் இளம்பரிதி... திகைத்து நிற்க.... கண்களில் கதை சொன்னாள் மனைவி. விஷயத்தைப் புரிந்து கொண்ட அவனும் அமுதனைத் தாக்கத் தொடங்கினான்.
 
புருசனும் பொண்டாட்டியும் மாறி மாறி அடித்தார்கள். உதைத்தார்கள். வாய் கிழிந்து.....காலை கட்டில் கம்பி கிழித்து ரத்தம் சொட்ட......முகம் கோணி கீழே ஒரு கிறுக்கனைப் போல அமர்ந்திருந்தான் அமுதன். இனி முடியாது என்பது போல அகன்று நீண்ட கால்களோடு தலை கவிழ்ந்து ரத்தம் சொட்ட இருந்தது அவன் தோற்றம்.
 
மிக ரகசியமாக ஒரு களேபரம் நடந்து முடிந்தபோது மூவருமே களைப்புற்றிந்தார்கள்.
 
அந்த அறை முக்கோணத்தில் ஆளுக்கொரு மூலையைக் கொண்டிருந்தது. மூன்று கோணங்களால் மட்டுமே கட்டப்பட்ட அறை போல காணப்பட்டது. மூவருமே மிக ரகசியமாக மூச்சு வாங்கினார்கள். தலை கவிழ்ந்தே இருந்தது மூவருக்கும். பேச்சுக்கள் வேண்டாதது போல இருந்தது. கனத்த மௌனத்தில் குழந்தைகளின்......." ங்கே...."  மட்டும் இரண்டு இரண்டு முறை எழும்பியது. துணைக்கு சுவர்க் கடிகாரத்தின் டிக் திக் டிக் திக் சத்தம் மட்டுமே.
 
முகம் வீங்கி... உதடு கிழிந்து கண்கள் மூடிய சதை வீக்கத்தின் வடிவோடு....மெல்ல மேல் எழுந்தான்...அமுதன். எழுந்தவாக்கிலேயே குழந்தைகளிடம் சென்றான். ருக்மணியும் இளம்பரிதியும் மெல்ல கண்களைத் தூக்கி கண்டார்கள். காட்சி கறுப்பு வெள்ளைக்கு மாறியது. அவன் எதுவும் பேசாமல்... குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு  வெளியேற முற்பட்டான்.
 
அவர்கள் இருவரும் கதவு பக்கம் நின்று கொண்டு போக விடாமல் மறைத்து நின்றார்கள். 
 
"நர்ஸ் எல்லாத்தையும் சொல்லிட்டா..." என்றான்..அமுதன். கிழிந்த சொற்கள் அந்த அறையை ஆவியைப் போல சுற்றியது.
 
மெல்ல புன்னகைத்தது போல இருந்தது அவன் கிழிந்த வாய். மறுகணம் இருவரும் அவன் காலில் விழுந்து அழத் தொடங்கினார்கள். நின்று நிதானமாக இருவரையும் கண்டான். ஆற அமர பார்த்த பார்வை அது. அவன் கண்கள் அவளை ஆராய்ந்தது. அவள் கண்களில் எதையோ தேடியது. கனிவு கொட்டும் நல்பார்வையின் ஊடாக அவன் அவளை ஊடறுத்தான். அவன் கண்கள் மண்டை ஓட்டில் இருந்து எழும்பி வந்த காலத்தில் நிறைந்தது போல இருந்தது.
 
இரு கைகளிலும் இருந்த இரட்டைக் குழந்தைகள் ஒரு சேர அவன் கன்னத்தை தடவின. அவன் கண்கள் கலங்கின. ஆளுக்கொருவரிடம் குழந்தையை கொடுத்து விட்டு மெல்ல வீட்டை விட்டு வெளியேறினான்.
 
*
ஒரு வாரத்துக்கு பின் கை நெற்றி கால் என்று ஆங்காங்கே பிளாஸ்திரி போட்டுக் கொண்டு வந்து கதவைத் தட்டினான் அமுதன். சில தட்டல்கள் தாலாட்டைப் போல லயத்தோடு அமைந்திருந்தது. 
 
கதவைத் திறந்து விட்ட இளம்பரிதிக்கு என்ன மாதிரியான முக பாவனையை வைத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை. கண்டும் காணாத மாதிரி..... சிரித்தும் சிரிக்காத மாதிரி... இருந்தும் இல்லாத மாதிரி மெல்ல தடுமாறி தடுமாறி நகர்ந்து அருகில் இருந்த கட்டிலில் அமர்ந்து கொண்டான். உள்ளே வந்த அமுதனுக்கும் அதே தடுமாற்றம்தான். எந்தளவுக்கு உள்ளே செல்லலாம் என்று தெரியவில்லை. ஆனாலும்.. கண்கள் சுற்றிய அறைக்குள் சற்று தள்ளி இருந்த சேரில் பட்டும் படாமல் அமர்ந்தான். சமையல் அறையிலிருந்து வெளியே வந்த ருக்மணி...... அனிச்சையாய் புன்னகையைக் கொடுத்து விட்டு சட்டென வாயை இழுத்து அடைத்துக் கொண்டாள்.
 
கைகளை சேலை தலைப்பில் துடைத்துக் கொண்டே அவளும்.. கட்டிலின் இன்னொரு ஓரத்தில் அமர்ந்தாள். 
 
மீண்டும் மூவரும் மூன்று திசையில் சிற்பம் செதுக்கிக் கொண்டிருந்தார்கள். நேரம் ஓடிக்கொண்டிருந்தது. மூன்று பேரும் மின்விசிறியில் சுற்றுவது போல இருந்த மூவருக்குமே கிறுகிறுப்புதான். கனத்த மௌனம். கதவு கொஞ்சம் அடைத்தும் அடைக்காமல் கால்வாசி இடைவெளியில்.. வீதி காற்றை விதியே என உள்ளே அழைத்துக் கொண்டிருந்தது.
 
யார் முதலில் பூனைக்கு மணி கட்டுவது.. மணி தேடும் கிண்கிணிகளை குழந்தைகளின் காலில் சத்தமிட்டிருந்தார்கள். படக்கென்று எழுந்த ருக்மணி குழந்தைகளை அள்ளிக் கொண்டு வந்து அமுதனிடம் கொடுத்தாள். அவளின் முகம் பார்க்காமலே.....குழந்தைகளை வாங்கிய அமுதன்.... கன்னத்தோடு அழுத்திக் கொண்டான். இரண்டும் நான்கு விழிகளில்.. படக் படக்கென்று சிமிட்டின. அப்படியே ருக்மணியின் கண்கள். ருக்மணிக்கு நான்கு கண்களா என்று மேல் நோக்கி தேடும் கண் பார்வையில் பார்த்தான்.  கட்டிலில் அமர்ந்திருந்த இளம்பரிதி பூனை போல எழுந்து மெல்ல வெளியேறியிருந்தான். யானை போலவும் அவன் போயிருக்கலாம்.
 
வெளியேறிய கணவனைக் கண்ட ருக்மணியின் கண்களில் கலக்கம் சிறு துளி நிரம்பியது. குழந்தைகளை வாங்கிக் கொண்டவள் தொட்டிலில் கிடத்தி விட்டு திரும்பிய போது பின்னால் மிக அருகில் மூச்சு படும் இடைவெளியில் அமுதன் நின்றிருந்தான். திக்கென்று பின் வாங்கினாள். படக்கென்று அவளை இழுத்து அணைத்து முத்தமிடத் தொடங்கினான்.
 
அவன் அணைப்பில் இருந்து துள்ளி தடுமாறி....சாய்ந்து என்ன செய்தாலும் அவள் கத்த மட்டும் இல்லை. வாய் திறக்காமல் பற்களைக் கடித்தபடியே,..."  விடு.... சொன்னா கேளு......விடுடா......குடிகாரா......." என்று மாறி மாறி அவனை அறைந்தாள். அவன் கழுத்தில் படர்ந்திருந்த தன் கைகள் கொண்டு முதுகில் குத்தினாள். சற்று தலையை பின்னோக்கி இழுத்து அதன் போக்கில் இடைவெளி உருவாக்கிக் கொண்டு அவன் நெஞ்சில் அடித்தாள். அவன் அவளின் இடுப்போடு வளைந்திருக்கும் தன்  கைகளை இன்னும் இறுக்கினான். எத்தனை முறை அவன் பின்னால் நகர்ந்து தடுமாறினாலும் அத்தனை முறையும் அவளை வாரி முன்னோக்கி அணைத்துக்  கொண்டேயிருந்தான். அவள் சத்தம் இல்லாமல் அழுதாள். அழுகை அவளை அவன் மார்பில் ஆழமாக புதைய வைத்தது. உள்ளிருந்து எதுவோ கட்டிக்கோ என்று அவள் காதில் வேதம் ஓதியது. சாத்தானோ கடவுளோ.... காதலோ... காமமோ... தனியோ.. கூட்டோ.... வெளியே... உள்ளோ... அரூபம் ஒன்று அசரீரி செய்து ஆட்டுவிக்கும் சுயத்தை, தான் என்ற முடிவை, மலட்டு மனதை மொத்தமும் நீயே மாற்றிக் கொள் என்பதாக நம்ப வைத்தது. பிரிந்திருந்த சட்டையை கொத்தாக இழுத்து நெஞ்சினில் முகம் முட்டினாள். அவன் காதில் முத்தமிட்டான். பின் கழுத்தில் மூச்சு விட்டான். அவன் கைகள் அவள் முதுகை துழாவின. அழுக்கில் மணக்கும் எதுவோ.. சிறுநீர் வாசத்தில் தான் சிருஷ்டி என்ற வளையும் தத்துவத்தில்.... கொஞ்சம் கெட்டுத்தான் போகிறேன் என்ற போது முலையில் கிரீடம் வந்து விட்டது போல தோன்றியது. நடு முதுகில்... மூளை இறங்கிக் கொண்டது போல இருந்தது. இடை நுழைந்த கைகளில்... யார் கொடுத்ததோ வீணை. மீட்ட மீட்ட சுடி பிளந்தது. முடி பிளந்தது. அடி பிளந்தது. செடி நட்டியது யாரோ,... குடை விரிந்தது. குளம் சரிந்தது. உடல் நடுவே உயிர் ஒடுங்கியது.
 
வெளியில் இருந்து கால்வாசி திறந்திருந்த கதவை சத்தம் எழும்பாமல் நன்றாக அடைத்த இளம்பரிதியின் நடுங்கும் கைகள் அதன்பிறகு உள்ளங்கைக்குள் நடமாடின.
 
அவனின் கைகளுக்குள் அவள் பூமி என சுற்றினாள். பூமி பந்துகள் அவன் கை பட்டு மலர்ந்தன. நட்டு வைத்த பூச்செடிகள் கணத்தில் மலர்ந்தன. அவளுள் எதுவோ உடைந்தது. அவள் ஆசை தீர உடைய சம்மதித்தாள். கண்களில் நேர் பெருக்கெடுத்தது. அவளின் எச்சில் அழுகையின் பிசுபிசுப்போடு அவன் வாய் நிறைத்தது தாகம்.
 
வாய் நிறைய......கண்களில்....... கடந்த காலம் ஈ மொய்த்தன. நினைவுக்கு ஆடை எதற்கு...?
 
"எத்தனை போராட்டம் பண்ணி என்ன பிரயோஜனம்.. ஒன்னும் நடக்கல...இந்த டாஸ்மாக்கை தூக்க முடியலல... அது தான் ஆட்சியின் பலம்..." யாரோ பேசிக் கொண்டு போனார்கள்.
 
"அட கொலை பண்ணி போட்டா கூட தெரியாதுப்பா... கரெக்ட்டா முட்டு சந்துக்குள்ள இருக்கு... இவனுங்க குடிச்சிட்டு கத்தற கத்து தாங்கல..."யாரோ பேசிக் கொண்டு வந்தார்கள்.
 
"போற வாற பொம்பள புள்ளைங்களுக்கு பாதுகாப்பு இல்லப்பா..." யாரோ பேசியபடி போய்க்கொண்டும் வந்து கொண்டுமிருந்தார்கள்.
 
தினமும் போகும் வழிதான். இதுவரை எந்த பிரச்சனையும் இல்லை. மஞ்சள் புடவையில்... அந்த இருட்டில் ஜோதி ஏற்றிக் கொண்டு போவது போல நடந்து கொண்டிருந்தாள் ருக்மணி. வழக்கத்துக்கு மாறாக மனதுக்குள் ஏதோ திக் திக். சில போது காரணங்கள் அதுவாகவே  காரியங்களை அரங்கேற்றும். காலக்கணக்கு சரியாகத்தான் போடுகிறது.
 
சுளீரென எதுவோ முதுகில் வந்து அடித்தது. மார்புக்குள் அதிர்வு தக தகத்தது. பட்டென்று திரும்பினாள். சற்று தூரத்தில் இருந்த திட்டில் தலை கவிழ்ந்து ஒருவன் அமர்ந்திருப்பது பாட்டிலுக்குள் விழுந்த ஈ யாக தெரிந்தது.
 
"குடிகார நாய்...." மனதுக்குள் முனங்கி விட்டு நடக்கத் தொடங்கினாள். 
 
மீண்டும் ஒருமுறை அதே போன்ற எதுவோ இன்னும் பலமாக முதுகில் பட்டு விழுந்தது. முதுகை முன்நோக்கி தூக்கி ஒரு கணம் ஸ்தம்பித்து விட்டவளின் கண்கள் தானாக கலங்கி இருந்தன. திரும்பி குனிந்து முதுகில் பட்டு குத்திய காகிதத்தை கீழே இருந்து எடுத்து பிரித்தாள். உள்ளே.......அடித்தால் மண்டை உடையும் அளவுக்கு இருந்த கல்லைக் கீழே விட்டு விட்டு சுருங்கி இருந்த காகிதத்தை கோப கோபமாய் நீவினாள். அவளின் கைகள் படபடத்தது. உடலுக்குள் கோப சுரப்பிகள்... தாறுமாறாக பிபி ஏற்றின. சுயம் இழந்ததாக வந்த நினைப்பை மண்டைக்குள் ஏற விட்டாள். பழுப்பு நிற வெளிச்சம் தூரத்தில் இருந்து மினுக் மினுக்கென்று படிக்கும் அளவுக்கு இருந்தது. மஞ்சள் வெளிச்சத்தில் தெரிந்த சிவப்பு எழுத்து அது.
 
நேராகவே கேள்வி கேட்கப் பட்டிருந்தது. 
 
ஓர் ஆபாச படம். ஆணும் பெண்ணும் அம்மணமாய் இருக்கும் கோட்டோவியம். அம்பு விட்டிருந்தது. "வர்றியா... காசுக்குத்தான்.... டீல் ஓகேன்னா பின்னால இருக்கிற மூங்கில் புதருக்கு வா..."
 
வந்த கோபத்துக்கு செருப்பை கழட்டிக் கொண்டாள். வேகமாய் சென்றவள் தலை கவிழ்ந்து அமர்ந்திருந்த அமுதனை சரமாரியாக அடித்து நொறுக்கினாள். அடித்த அடியில் தவம் கலைத்தது போல போதை படக்கென்று காணாமல் போனது. தடுத்துப் பார்த்தான். தடுக்க தடுக்க விழுந்த அடியோடு சந்தன வாசம் அவளிடமிருந்து பீறிட்டு கிளம்பியது. அடிக்க கையைத் தூக்கிய போது அக்குளில் வியர்த்திருந்த வாசனை அவனை போதையோடு கிறங்க வைத்தது. மிதமிஞ்சி குடிக்கையில்... கொலையும் சாத்தியம். மது குப்பியில் சுத்திக் கொண்ட மூடியாய் அவளை சுற்றி சுற்றி பார்த்தான். வனப்பு மிகுதியான உடல். வாளிப்பு மிகுந்த கனம். மார்பு குலுங்குதல் முறைப்படி நடந்தது. அவள் வாய் பேசிய கெட்ட வார்த்தைகளில் உள்ளுக்குள் எதுவோ உடைந்தது. பயம் அற்ற உடல் விடுதலையை அவன் அடைந்திருந்தான். விழுகின்ற ஒவ்வொரு செருப்படியும்...இனித்தது. அடிக்கு அடி ஆதி வயிற்றில் எதுவோ கரை புரண்டோடியது. வெட்கம் அற்ற மானம் நட்டுக் கொண்டு நின்றது. கை கலப்பில் அவள் வயிறு அவன் கையில் பட்டபோது சாத்தான் எல்லா திசையில் இருந்து கண்கள் விரித்தான்.
 
சுற்றும் முற்றும் பார்த்தான். சில குடிகார நாய்கள் தலை குப்புற விழுந்து  கிடந்தார்கள் .அவள் இதோ முப்பதாவது முறையாக குடிகார நாய் என்று சொன்ன பதம் மண்டைக்குள் வழுக்கிக் கொண்டு சென்றது. இரவு கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது வசதியாக ஆனது. படக்கென்று அவளுதட்டை பிதுக்கி சாராய நெடி அடிக்கும் தன் வாயோடு அப்பினான். அவள் திமிறி கத்த முயற்சித்து முனங்கி... தடுமாற.. கன்னத்தில் பளார் பளாரென நான்கு அறைகள் விட்டான். மயங்கி சரிந்தவளை தூக்கி சென்று பின்னால் இருந்த மூங்கில் காட்டில் லுங்கியை விரித்து கிடத்தி வெறிக்க வெறிக்க புணர்ந்து தள்ளினான். 
 
அக்குள் கிறக்கத்தில் அவள் கழுத்தோரம் முகம் புதைந்துக் கிடந்தவனை ஒதுக்கி விட்டு அவள் எப்போது எழுந்து சென்றால் என்று தெரியவில்லை. அதன் பிறகு அவன் கண்டது மருத்துவமனையில். அவள் கண்டது கடந்த வாரம் வீட்டில். 
 
*
 
கதவு தள்ளி திறக்கையில்.... ஆளுக்கொரு மூலையில் அமுதனும் ருக்மணியும் அமர்ந்திருந்தார்கள். எல்லாம் தெரிந்தவன் தெரியாதது போல தான் இருப்பான். இளம்பரிதியும் அப்படித் தான் வீட்டுக்குள் வந்து அமர்ந்தான். 
 
மீண்டும் முக்கோண சுழற்சி அவ்வறையில் சுழன்றது.
 
"ஒரு கொழந்தைய பெத்து குடுக்க முடியல... மலட்டு பொம்பள... எங்க வம்சத்தையே அழிக்க வந்திருக்கு சனியன்...." இளம்பரியின் அம்மா......சித்தி.....பாட்டி.... பெரியம்மா.... கொழுந்தியா..... தூரத்து வேலைக்காரி என்று எல்லாரும் அவரவர் மொழியில் பேசியதெல்லாம் ருக்மணி காதில் சங்கை போல ஊதியது.
 
"தப்பா நினைக்காதீங்க... மனச திடமா வெச்சுக்கோங்க.. என்ன பண்ணினாலும் உங்களுக்கு குழந்தை வாய்ப்பே இல்ல. பேசாம தத்தெடுத்துகோங்க.. இல்ல.. ஸ்பெர்ம்  டோனர்கிட்ட வாங்கி பெத்துக்கோங்க..... அதெல்லாம் இப்போ சகஜம் ஆகிடுச்சு. .யாருக்கும் ஏதும் தெரியாது..." டாக்டர் சொன்னது இன்னும் காதுக்குள் பற்சக்கரங்கள் கொண்டு ஓடுகிறது இளம்பரிதிக்கு.
 
"பொம்பள தனியா இருட்டுல போனா.. படுக்க கூப்பிடுவியா.. நாயே...." என்று அவள் கத்தியது ஏன் என்று இன்றுவரை அமுதனுக்கு புரியவேயில்லை. நான் எங்க  கூப்பிட்டேன் .... நீயா தான் வந்து அடிச்ச என்று தான் அவன் மனம் முனகியது. மற்றபடி குடிபோதையில்.... காமம் கண்ணை... கனிவை.. வெட்கத்தை மறைத்தது உண்மை தான். மானசீகமாக ருக்மணியை காதலிக்கவும் தொடங்கி இருந்தான்.அமுதன்.
 
குழந்தைகள் சிணுங்க மூவரும் எழுந்து கிட்ட ஓடினார்கள். மூவருக்கும் வாழ்வின் உண்மை அழகாய் புரிந்து விட்டது.
 
ஒருவர் மீது ஒருவருக்கு இருந்த கோபமோ..... தயக்கமோ.. தாழ்வு மனப்பான்மையோ இல்லாமல் போனது போன்ற தோற்றம் அங்கே சிறு குழந்தைகளாக சிணுங்கியதை உணர்ந்தார்கள்.
 
*
 
தீர்க்கமாய் ஒரு முடிவெடுத்திருந்தாள் ருக்மணி.
 
அமுதன் கையில் ஒரு குழந்தையை எடுத்துக் கொடுத்தாள். கணவன் கையில் ஒரு குழந்தையை எடுத்து கொடுத்தாள். அதன் பிறகு வாரம் ஒருவர் வீட்டில் வசிக்கத் தொடங்கினாள்.
 
வாழ்வு அழகாய்தான் இருக்கிறது இன்றும்....!
 
*
முதுகில் அடித்த கல் சுருட்டிய கோட்டோவிய காகிதம் வீசியது மட்டும் யாரென்று தெரியவேயில்லை. குடிகார நாய்களுக்கா பஞ்சம்...!
 
- கவிஜி