கவுண்டர் வீட்டு பொடக்காலியில், ஆங்காங்கே சிதறிக் கிடந்த சிரட்டைகளை, ஒரு இடத்தில் குவிக்கத் தொடங்கினான் மலையப்பன். அவனுக்கு விவரம் தெரிந்த நாள் முதல் கவுண்டர் வீட்டு பொடக்காலியில்தான் அவன் வாழ்வை கடத்தியிருக்கிறான். அவன் தந்தை கருப்பசாமி, கவுண்டர் வீட்டில் வேலைக்கு சேர்ந்தபோது இவனுக்கு பத்து வயது. நிறைய நாட்கள் பள்ளி முடித்து கவுண்டர் வீட்டிற்குத்தான் வருவான் மலையப்பன்.

கவுண்டர் வீட்டில் இருக்கும் ஆச்சி, தான் சாப்பிடும் போது, மலையப்பனுக்கும் இரண்டு வறுக்கி கொடுப்பாள். அந்த இரண்டு வறுக்கியை சாப்பிடுவதற்காகவே, அவனுக்கு கவுண்டர் வீட்டுக்கு அந்த மாலை நேரத்தில் வருவது பிடித்திருந்தது. வறுக்கியை முழுங்கி விட்டு உடனே தன் குடிசைக்குப் போகாமல் அப்பாவிற்கு உதவியாக சிறு சிறு வேலைகளையும் செய்து கொண்டிருந்த மலையப்பன், தன் தந்தை இறந்த பிறகு மலையப்பனும் பள்ளிப் படிப்பை நிறுத்தி விட்டு கவுண்டர் வீட்டிலேயே வேலைக்கு சேர்ந்து விட்டான். வீட்டு வாசல் திறந்தே இருந்தாலும் கருப்பசாமிக்கும் மலையப்பனுக்கும், பொடக்காலிதான் முன் வாசல், பின் வாசல் எல்லாம். கவுண்டர் வீட்டைப் பொறுத்த வரைதான் அவர்களுக்கு அது பொடக்காலி. மலையப்பனுக்கும், கருப்பசாமிக்கும் அதுவே பத்து பதினைந்து வீடுகளுக்கு சமம். இருக்காதா என்ன ? அந்த நீளமான தெருவின் தொடக்கத்தில் வாசல் ஆரம்பித்து அந்த தெருவின் இறுதி வரை வீடு. அந்த 200 வருட வீட்டின் முன் பக்கம் மட்டும் காலத்துக்கேற்றது போல சிமெண்ட்டும், பளிங்கு கற்களும் கொண்டு மாற்றப்பட்டு, மீதமிருக்கும் வீடு பழைமை மாறாமல் அப்படியே இருக்கிறது. அப்படியே பின் பக்கம் பல ஏக்கர் கணக்கில் தென்னந் தோப்பு. பொள்ளாச்சியிலேயே மிகப் பழைமையான வீடு இதுதான்.

இப்போது மலையப்பனுக்கு நாற்பத்தி ஐந்து வயது இருக்கும். அந்த பொடக்காலியில் அடி எடுத்து வைத்த நாள் முதல் அந்த இடம் அவனை வசீகரித்துக் கொண்டே இருந்தது. தேங்காய் நார், எப்பொழுதும் குவிந்து கிடக்கும் சிரட்டைகள், உரித்த தேங்காய், உரிக்காத தேங்காய், பக்கத்தில் இருக்கும் அடுப்பங்கரையில் இருந்து எப்பொழுதும் வரும் மயக்கும் வாசம், இரண்டு ஆள் உயரமுள்ள நெற்குதிர், சில மர சாமான்கள், சில மரப் பெட்டிகள், அந்தக் காலத்து இரும்புப் பெட்டிகள், அச்சாணியுடன் இரண்டு மாட்டுச் சக்கரங்கள், மண்வெட்டி, கடப்பாரை என மலையப்பனை வசீகரிப்பதற்கு கவுண்டர் வீட்டு பொடக்காலி தவறியதே இல்லை. தன் சிறு வயதிலேயே அந்த நெற்குதிருக்குள் என்ன இருக்கிறது என்று அவன் அப்பாவிடம் கேட்டிருக்கிறான், அந்த ஆச்சியிடம் கேட்டிருக்கிறான், அந்த வீட்டில் உள்ள அனைவரிடமும் கேட்டிருக்கிறான்... அதில் இப்போது ஒன்றும் இல்லை என்றும், பல வருடங்களுக்கு முன்பு அது நெல் சேமிக்கப் பயன்பட்டது என்றும் தான் எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். எப்படியாவது அந்த நெற்குதிருக்குள் ஒருமுறை குதித்துப் பார்த்திட வேண்டுமென்பது அவன் பால்ய காலத்தில் இருந்த அடங்கா ஆசை. கவுண்டருக்குப் பயந்து அதை ஒரு நாளும் முயற்சித்ததே இல்லை. எப்படியோ மலையப்பன் அந்த ஆசையைக் கடந்து வந்து விட்டான்.

இத்தனை வருடங்களுக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக் கிழமை அவன் பொடக்காலியில் படுத்துக்கொண்டு தன் பால்யத்தின் நினைவலைகளில் தவழ்ந்தபோது, அந்த நெற்குத்திருக்குள் குதித்துப் பார்க்கத் தோன்றியது. சட்டென்று அங்கிருந்த மரப்பெட்டிகளையும், இரும்புப் பெட்டிகளையும் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி மெதுவாக அதன் மேல் ஏறி சட்டென்று உள்ளே குதித்தான். குதித்து சில நிமிடங்களுக்கு தும்மிக் கொண்டே இருந்தான். சில நிமிடங்கள் கழித்துதான் தான் ஒரு மரப் பெட்டியின் மேல் நிற்பதை உணர்ந்தான். மரப்பெட்டியில் இருந்து இறங்கி, அந்த குறுகிய இடத்தில் நின்றுகொண்டு அந்த மரப்பெட்டியை தொட்டுப் பார்த்தான். அதன் மேல் நிறைய நெற்பயிர்கள் கிடந்தன. மறுபடியும் தும்மல் வந்து விட்டது. தும்மி முடித்து விட்டு அந்த மரப்பெட்டியை தூக்கி மிகுந்த சிரமத்துடன் தோளில் சுமந்து, இரண்டு கால்களையும் குதிரின் சுவற்றில் ஊன்றி, ஊன்றி மேலே வந்து விட்டான். அடுக்கி வைத்திருந்த பெட்டிகளின் மேல் இந்த மரப் பெட்டியையும் தூக்கிப் போட்டுவிட்டு நெற்குதிரிலிருந்து குதித்தான்.

அந்த மரப்பெட்டியின் வயது அந்த வீட்டின் வயதை விட அதிகமாக இருக்கக் கூடும். இது ஏதோ தங்கப் புதையலாக இருக்குமோ என்று சந்தேகித்து, அவசர அவசரமாக பெட்டியைத் திறக்க ஆரம்பித்தான். பூட்டில்லாமல் இருந்த அந்தப் பெட்டியைத் திறந்தவுடன் ஒரு விசித்திரமான நெடி அடிக்கத் தொடங்கியது. நின்று போயிருந்த அவன் தும்மல் மறுபடியும் ஆரம்பித்து விட்டது. ஒரு மொடமொடப்பான துணி மூட்டை இருந்தது. அதைத் தொட்டவுடன் மடமடவென உடையத் தொடங்கியது. அதனுள் பல செம்புத் தகடுகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன.

அடுக்கி வைக்கப் பட்டிருந்த செம்புத் தகடுகளை பார்த்ததும் இவனுக்குப் பெரும் ஏமாற்றமே மிஞ்சியது. கவுண்டர் வீட்டில் இருந்தவர்களை அழைத்து இதைக் காண்பித்தான். " ஏன்டா .. இருக்கற ஜோலிய வுட்டுப் போட்டு, பழைய குப்பைய நோண்டிகிட்டிருக்க??" என்று சொல்லிவிட்டாள் ஆச்சி. ஆனாலும் இதை வைத்து ஏதேனும் பணம் ஈட்ட முடியுமா என்று யோசிக்கத் தொடங்கினான். பொள்ளாச்சியில் நடக்கும் பல கூட்டங்களில் மைக்கில் பேசும் முருகன் என்றவரை மலையப்பனுக்குத் தெரியும். தனது காலனியில் இருக்கும் பலருக்கு முருகனைத் தெரியும். காலனியில் பல உதவிகள் செய்திருக்கிறார். தனக்குத் தெரிந்தவர்களில் அவர்தான் கொஞ்சம் படித்தவர், விஷயம் தெரிந்தவர். அவரிடம் இது பற்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தான். இந்தச் செம்புத் தகடுகளை ஒரு துணியில் போட்டு கட்டி எடுத்துக் கொண்டு, முருகன் வீட்டிற்குச் சென்றான். முருகன் இந்த செம்புத் தகடுகளை ஆச்சர்யத்துடன் பார்த்தார். அது ஏதோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பது மட்டும் முருகனுக்குப் புரிந்தது. ஆனால் அதற்கு மேல் அந்தத் தகடுகளை அதில் இருக்கும் எழுத்துக்களை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை. தனக்கு தெரிந்த நண்பர் சிவசுப்ரமணியம் கோவை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராக இருப்பதாகவும், அவரிடம் இதைக் காண்பித்தால் இது பற்றி அறிந்து கொள்ள முடியும் என்றும் முருகன் சொன்னார். "நானும் உங்க கூட வரலாமா .... " என்று தயங்கியபடியே கேட்டான் மலையப்பன். "போலாமே .. இப்பவே போலாமா?" என்று மலையப்பனைப் பார்த்துக் கேட்டவுடன் அவனுக்கு அதில் ஏதோ சொல்லத் தெரியாத மகிழ்ச்சி. முருகன் தன் தபால் பையை எடுத்து மாட்டிக் கொண்டார். முருகனின் ஆக்டிவா வண்டியில் இருவரும் அந்தத் துணியில் கட்டப்பட்ட செம்புத் தகடுகளுடன் கோவை புறப்பட்டனர்.

வீட்டு வெளிவராந்தாவில் ஒரு புத்தகத்தோடு அமர்ந்திருந்த சிவசுப்ரமணியம் முருகனைப் பார்த்ததும் " அட.. வாங்க தோழர் " என்று அன்புடன் வரவேற்றார். சிவசுப்ரமணியம் தமிழ்ப் பேராசிரியர் என்றாலும் அவர் தமிழ்நாட்டில் உள்ள தொல்பொருள் ஆய்வாளர்களில் மிக முக்கியமானவர். அரசே அவரிடம் பல ஆய்வு உதவிகள் கேட்டு, அரசு சார்பில் பல முக்கிய தொல்பொருள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளார். முருகன் மலையப்பனைப் பற்றியும், செம்புத் தகடுகளை பற்றியும் சொன்னதும், ஆர்வமாக அந்த துணி மூட்டையைப் பிரித்து அதைப் பார்க்கத் தொடங்கினார். ஒவ்வொரு தகடாக சில நேரம் பார்த்து விட்டு, மறுபடியும் முதல் தகடை எடுத்து, "மைதிலி .. என் லென்சை கொண்டு வரியா செத்த? " என்கிறார். லென்ஸ் வந்ததும், முதல் தகடை எடுத்து மீண்டும் மீண்டும் லென்சை வைத்து பார்த்துக் கொண்டே இருந்தார். சிறிது நேரத்தில் திகைத்துப் போன பேராசிரியர் " தோழர் .. இது ரொம்ப முக்கியமான ஆவணம். ரொம்ப நன்றி இதை என்னாண்ட காமிச்சதுக்கு. " என்று சொல்லி விட்டு முருகனின் கைகளையும், மலையப்பனின் கைகளையும் இறுகப் பற்றிக் கொண்டு மீண்டும் மீண்டும் நன்றி தெரிவித்தார். "அப்படி என்னங் சாமி இருக்கு இதுல?" என்றான் மலையப்பன். "சொல்றேன் .. சொல்றேன் .... " என்று சொல்லிவிட்டு மீண்டும் அந்த லென்சைக் கொண்டு அடுத்தடுத்த தகடுகளைப் படிக்கத் தொடங்கினார். மைதிலி, தோழர் முருகனுக்கும், மலையப்பனுக்கும் தேநீர் கொடுத்து உபசரித்தார். தேநீரையும் குடித்து விட்டு நீண்ட நேரம் அமைதியாகவே இருந்தனர் மலையப்பனும், முருகனும். அவ்வளவு நேரமும் அந்தத் தகடுகளையே பார்த்துக் கொண்டிருந்தார் பேராசிரியர்.

"ஓ .. அப்படியா ?? ... அய்யோ ... " என்று அந்தத் தகடுகளைப் பார்த்து ஆச்சர்யத்துடன் உணர்ச்சிப் பெருக்கில் தனக்குத் தானே பேசிக் கொண்டார் சிவசுப்ரமணியம்.

"தோழர் .. எங்களுக்கும் கொஞ்சம் என்னன்னு சொல்லுங்களேன்" என்கிறார் முருகன்.

"தோழர் .. இது தமிழில் இருக்கும் மநுஸ்மிருதி. அநேகமா இது கி.மு. 500ஆம் ஆண்டுல எழுதப்பட்டிருக்கும்னு நினைக்கிறேன்."

"ஓ .. "

"சம்ஸ்கிருதத்தில் இருக்கும் மநுஸ்மிருதி கிமு 2 ஆம் நூற்றாண்டுல இருந்ததுக்கான சான்றுகள் இருக்கு. ஆனா இது அதுக்கும் முன்னாள் கிமு 5ஆம் நூற்றாண்டச் சேர்ந்ததா இருக்க நிறைய வாய்ப்பிருக்கு"

"அப்படியா .. "

"அதைவிட முக்கியமான அதிர்ச்சிகள் இதுல இருக்கு. இத்தனை நாள் வர்ணாசிரம தர்மம்னு மநுவின் படி நாம நினைக்கிறது எல்லாமே இதுல வேற மாதிரி இருக்கு. இயற்கையா பிறந்த மக்களுக்கு சேவை செய்யத்தான் வர்ணாசிரமத்தைச் சார்ந்த மக்கள் பிரம்மன் உடம்புல இருந்து பிறந்திருக்காங்கனு சொல்லுது"

"அடேயப்பா ... அப்படியா "

என்று முருகனும் சிவசுப்ரமணியனும் ஆர்வத்தில் பேசிக் கொண்டிருக்க, "சாமி .. அதுல என்னங் சாமி இருக்கு? எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்" என்றான் மலையப்பன் அப்பாவியாக.

சிவசுப்ரமணியம் மெதுவாக மலையப்பனைப் பார்த்து "மனுஸ்மிருதினு ஒரு புத்தகம் இருக்கு. அதுல என்ன சொல்லி இருக்குன்னா ... பிரம்மனோட தலைல இருந்து அய்யர்களும், தோளில் இருந்து சத்ரியர்களும், தொடைல இருந்து வைசியர்களும், கால்ல இருந்து சூத்திரர்களும் பொறந்திருக்காங்க. இவங்களுக்கு சேவை செய்யத்தான் மத்த சாதிக்காரங்க பொறந்திருக்காங்கனு சொல்லுது. அந்த புக்குல இருக்குறத வெச்சுதான் அய்யர் ஒசந்த சாதின்னு சொல்றாங்க ..."

"அந்த புத்தகத்த எழுதுன ஆளு எந்த சாதிங்க??"

சிவசுப்பிரமணியன் சிரித்துக் கொண்டே " அய்யர்தான் " என்கிறார்.

"இது என்னங் சாமி நியாயம்? அய்யர் சாதி ஒசந்ததுன்னு அய்யரே எழுதி வெச்சிட்டு போய்ட்டாப்டி. அதத்தான் நாமளும் நம்புறோமா??"

முருகன் பேராசிரியரைப் பார்த்து "கேட்டான் பாருங்க கேள்வி!" இருவரும் சத்தமாக சிரித்தனர்.

"அதத்தான் இந்த செம்புத் தகடு இல்லங்குது. இயற்கையா பிறந்த மக்களுக்கு சேவை செய்யத்தான் வர்ணாசிரமத்தைச் சார்ந்த மக்கள் பிரம்மன் உடம்புல இருந்து பிறந்திருக்காங்கனு சொல்லுது" என்று சொல்லிவிட்டு "நான் இந்த செம்புத் தகடு கிடைச்ச இடத்தை உடனே பாக்கணுமே" என்றார் பேராசிரியர்.

பேராசிரியர் அவருடைய காரில் செல்ல முருகனும், மலையப்பனும் கவுண்டர் வீட்டுக்குச் சென்றனர். பேராசிரியரையும் முருகனையும் வரவேற்று உபசரித்தனர். அந்த வீட்டின் பொடக்காலியில் கிடைத்த செம்புத் தகடுகள் ஒரு முக்கிய ஆவணம் என்று கவுண்டரிடம் சொல்லிவிட்டு, அந்த நெற்குதிரையும், அந்த பொடக்காலியையும் தனது காமிராவில் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தானே அதை அரசாங்கத்தின் தொல்பொருள் ஆய்வுத் துறைக்கு கொடுத்து விடுவதாகவும் சொன்னார்.

இரண்டு வாரங்கள் கழித்து கிமு 500ஆம் நூற்றாண்டின் மநுவை முழுவதுமாகப் படித்து விட்டு பல முக்கிய அதிர்ச்சியூட்டும் தகவல்களை அவர் கண்டறிந்தார். கிமு 500லேயே ஒரு மநுஸ்மிருதி இயற்றப்பட்டு, அந்த மநுஸ்மிருதியின் படி சூத்திரர்கள் பிரம்மாவின் தலையில் இருந்தும் , வைசியர்கள் பிரம்மாவின் கையில் இருந்தும், ஷத்ரியர்கள் பிரம்மாவின் தொடையிலிருந்தும், பார்ப்பனர்கள் பிரம்மாவின் காலில் இருந்தும் பிறந்ததாக கிமு 500 மநுவில் கூறப்பட்டிருப்பதை அறிந்தார்.

கீழ் சாதி பார்ப்பனர்களை அடையாளம் காட்டவே அவர்கள் கழுத்தில் வெள்ளை நூலை மாலை போல அவர்கள் அணிந்திருக்க வேண்டுமென்றும், பார்ப்பனர்கள் தீண்டாத் தகாதவர்கள் என்றும், அவர்களை மற்ற சாதிக்காரர்கள் யாரும் தொடக் கூடாதென்றும் கிமு 500 மநுவில் சொல்லப் பட்டிருந்தது .

அப்படி பார்ப்பனர்கள் அவர்கள் கழுத்தில் மாலை போன்று போட்ட நூல் பழக்கம் பிற்காலத்தில் அந்த நூலை உடல் பூராவும் அணிவித்துக் கொண்டார்கள் என்றும், உடல் பூராவும் நூல் போட்டதால்தான் பிற்காலத்தில் "உடல்பூரா நூல்" என்று அழைக்கப்பட்டதென்றும், "உடல்பூராநூல்" தான் பிற்காலத்தில் மருவி "பூணூல்" என்று அழைக்கப் பட்டதென்றும் தனது ஆய்வில் கண்டறிந்தார். திருமணத்தின் போது பெண்கள்தான் ஆண்களுக்கு தாலி காட்டும் வழக்கம் இருந்ததாகவும் கிமு 500 மநுவில் எழுதப் பட்டிருந்தது. இந்த மநு அந்த நாட்களில் இருந்த வாழ்க்கை முறையை ஒட்டி மட்டுமே எழுதப்பட்டிருக்கிறதென்றும், இது புனைவு அல்ல என்றும் அந்த மநுவிலேயே குறிப்பிட்டிருந்தது.

கிமு 500ல் இயற்கையாக பிறந்த ஒரு மனிதனால் எழுதப்பட்ட மநுவை, அந்த வீட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்த சுமதி பார்கவா என்னும் ஒரு தீண்டத்தகாத பார்ப்பனன் படித்து விட்டு, இன்னும் சில தீண்டத் தகாத பார்ப்பனர்களுடன் சேர்ந்து பழைய மநுவை அழித்துவிட்டு புதியதாக ஒரு மநு எழுதியிருக்கக் கூடும் என்றும், அப்படி பார்ப்பனர்கள் எழுதியது கிமு 200ல் கிடைத்ததாகவும் பேராசிரியரின் ஆய்வு சொல்கிறது. அப்படி அந்தப் பார்ப்பனர்கள் செய்த சதி மற்றும் சூழ்ச்சியின் காரணமாகத்தான் கிமு 200ல் கிடைக்கப் பெற்ற மநுவை மக்கள் பின்பற்றியதால்தான், அன்று தீண்டத் தகாதவர்களாக இருந்த பார்ப்பனர்கள் இன்று உயர்ந்த சாதியாகவும், அன்று உயர்ந்த சாதியாக இருந்த மற்றவர்கள் இன்று கீழ்சாதியாகவும் மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்றும் சிவசுப்பிரமணியன் ஆய்வில் கண்டறிந்தார். அன்று இயற்கையாக பிறந்தவர்கள்தான் இன்று தலித் என்று அழைக்கப்படுவதாக பேராசிரியர் கூறுகிறார்.

இது போன்ற பல அறிய அதிர்ச்சியூட்டும் தகவல்களைத் தொகுத்து ஒரு பெரிய கட்டுரையாக்கி அவர் வழக்கமாக எழுதும் பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தார். அந்தக் கட்டுரையை பிரசுரம் செய்ய முடியாதென்று தெரிவித்து விட்டனர். வேறு பத்திரிகையும் பிரசுரம் செய்ய முடியாதென்று சொல்லிவிட்டது. பேராசிரியர் அந்தப் பத்திரிகைகளின் ஆசிரியர்களான கிருஷ்ணமூர்த்தி மற்றும் வைத்தியநாதன் ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார். அவர்கள் நிச்சயம் இந்தக் கட்டுரையை அவரின் ஆய்வறிக்கையைப் பிரசுரம் செய்ய மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் பல சிறு பத்திரிகைகளுக்கு அந்தக் கட்டுரையை அனுப்பினார். சிறு பத்திரிகைகள் அதைப் பிரசுரித்தன. தனது பேஸ்புக் சுவரிலும் தனது வலைப் பதிவிலும் அந்தக் கட்டுரையை பதிவேற்றினார். சில நாட்களில் அந்தக் கட்டுரை வைரலானது.

இந்தக் கட்டுரை அரசின் கவனத்திற்கு வந்து, முதலமைச்சர் மற்றும் தொல்பொருள் துறையின் உயர் அதிகாரிகள் பேராசிரியர் சிவசுப்ரமணியனைச் சந்தித்துப் பேசினர். தன் கட்டுரையில் கூறியிருக்கும் உண்மைகள் மலையப்பனுக்கு கிடைத்த செம்புத் தகடுகளில் இருந்ததென்று கூறி அந்த செம்புத் தகடுகளையும் காண்பித்தார். இதனைத் தொடர்ந்து உயர்மட்ட அமைச்சரவை கூட்டத்தை முதல்வர் கூட்டினார். அமைச்சர்கள் கிமு 500 மநுவைப் பின்பற்றுவதுதான் சிறந்ததாக இருக்குமென்றும், கிமு 300 போலி மநுவை உடனே நிராகரிக்க வேண்டும் என்றும் முடிவெடுத்தனர். அமைச்சரவை கூடினாலும் முதற்கட்டமாக சில முக்கிய முடிவுகளையும் முதலமைச்சர் தனியாகவே எடுத்தார். அதன்படி, தலைமைச் செயலாளரான அனுபமா பாலகிருஷ்ணனை வேறு துறைக்கு மாற்றி பக்கிரிசாமியை முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கல்வித்துறை செயலர் கிரிதரன் கோஆப்டெக்ஸ் தலைவராக மாற்றப்பட்டு மணிமாறன் கல்வித்துறை செயலராக நியமிக்கப் பட்டார். பெண்கள் மற்றும் சமூக நலத்துறை செயலர் ஸ்ரீதரன் சுற்றுலாத்துறைக்கு மாற்றப்பட்டு, சிவகாமி அந்தத் துறை செயலராக நியமிக்கப் பட்டார். இன்னும் சில முக்கிய செயலர்களும் மாற்றப் பட்டனர்.

அதற்குள் மக்களிடையே மிகுந்த சலசலப்பும் குழப்பமும் நிலவியது. திருமணம் நடத்த யாரைக் கூப்பிடுவதென்று குழப்பமடைந்தனர். கிமு 500 மநுவின் படி ஒரு கீழ் சாதி பார்ப்பனனை எப்படி கூப்பிடுவதென்று மக்கள் குழப்பம் அடைந்தனர். இதனால் வந்திருந்த விருந்தினர்களில் ஒரு தலித்தை அழைத்து தாலி எடுத்துக் கொடுக்கச் சொல்லப் பட்டது. சில கல்யாணங்களில் யாரையும் அழைக்காமல் மணமகனின் பெற்றோரும், மணமகளின் பெற்றோரும் தாலி எடுத்து கட்டச் சொன்னார்கள். கிமு 500 மநுவின் படி ஆண் தாலி கொள்வதா, கிமு 300 மநுவின் படி பெண் தாலி கட்டிக் கொள்வதா என்ற குழப்பம் தீரவே இல்லை. கிமு 500 மநுவில் சொன்னாலும் ஆண்கள் தாலி கட்டிக் கொள்ளத் தயாரில்லை என்பதனால் பழைய பழக்கமே தொடர்ந்தது. சில பார்ப்பனர்கள் தங்கள் பூணூலை கழற்றி வைத்துவிட்டு தாங்களும் கிமு 500 மநுஸ்மிருதியின் படி உயர்சாதிதான் என்று சொல்லிக் கொண்டார்கள். இதனால் கோயிலுக்கும் வழக்கமாக வரும் ஐயர்கள் வரவில்லை. இவ்வாறு மக்களின் இயல்பு சாதி முறை வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப் பட்டது.

இந்த அசாதாரண மற்றும் குழப்பமான சூழ்நிலையைப் போக்க புதிதாக நியமிக்கப்பட்ட செயலர்களுடன் முதல்வர் கூட்டம் நடத்தினார். "நாம் இப்போது என்ன செய்வது ? எந்த மநுவைப் பின்பற்றுவது. கோவில்களில் கிமு 500 மநுவில் சொல்லியபடி தலித்துகள் அர்ச்சகராக உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்." என்கிறார். பக்கிரிசாமி மெதுவாக சொன்னார் "அரசாங்கம் மநுவைப் பின்பற்றவே கூடாது. மநுவை பின்பற்ற வேண்டும் என்றும் எங்குமே சொல்லவில்லை. அதை நாம்தான் தேவையில்லாமல் பின்பற்றி வருகிறோம்.. மநுவைப் பின்பற்றுவது என்பதே தவறு. அதிலும் புதிய மநு, பழைய மநு என்று இதில் குழப்பமே வேண்டாம். " என்றார். மேலும் "தலித்துகளை அர்ச்சகர்களாக்க அதற்கான சட்டம் எல்லாம் ஏற்கனவே இயற்றப்பட்டு விட்டதென்றும் அதை நடைமுறைப்படுத்தினாலே போதும்." என்றார். முதல்வரும் கிமு 500 மநுவை பின்பற்றும் ஆர்வத்துடன் பயிற்சி பெற்ற 60 தலித்துகளை கோயில் அர்ச்சகர்களாக்க உத்தரவிட்டார்.
.
இதற்கிடையில் அவிநாசி தொடக்கப் பள்ளியில் சமையல் வேலை பார்க்கும் ஒரு மாமி சமைத்ததை தங்கள் குழந்தைகள் உண்ண விட மாட்டோம் என்றும், கிமு 500 மநுவின் படி ஒரு தலித் பெண்தான் சமையல் செய்ய வேண்டுமென்றும் போராட்டம் செய்தனர். திராவிடக் கட்சி இந்த போராட்டத்திற்கு மிகுந்த கண்டனங்களைத் தெரிவித்து மாமி சமைத்ததை தாங்கள் உண்டு பதில் போராட்டம் நடத்தினர். அங்கு வந்த பத்திரிகையாளர் "சில மாதங்கள் முன்பு வேறொரு இடத்தில் தலித் பெண்ணுக்கு இதே மாதிரி பிரச்சினை எழுந்த போதும் இதையே செய்தீர்கள். மாமிக்குப் பிரச்சினை என்றாலும் இதையே செய்கிறீர்கள் . நீங்கள் மாமி பக்கமா? தலித் பக்கமா?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அந்த அமைப்பாளர் "மாமியோ தலித்தோ யார் சமைத்தாலும் பிள்ளைகள் சாப்பிட வேண்டும். இருவருமே மனிதர்கள்தான். எந்த மனிதனும் கீழ் சாதி இல்லை. இரண்டு மநுவையும் கொளுத்துவோம்" என்று பதில் சொன்னார். மேலும் இந்த கிமு 500 மநு நாடெங்கும் பரவி விட்டது. அனைத்து மாநிலங்களிலும் தலித் அர்ச்சகர்கள் நியமிக்கப் பட்டனர்.

சமூக ஆர்வலர்கள் சிலர் "இன்னும் சில நாட்கள் கழித்து கிமு 600 மநுஸ்மிருதி கிடைத்தால் என்ன செய்வது?" என்று கேள்வி எழுப்பினர். சிலர் இரண்டு மநுவும் வேண்டாம், புதிதாக ஒரு மநு எழுதப்பட வேண்டுமென்று வாதிட்டனர். மநு என்ற வார்த்தையே மனிதர்களுக்கு எதிரானது. புதிதாக "மனிதம்" என்று ஒன்று இயற்றப் பட வேண்டுமென்றும் அதையே பின்பற்ற வேண்டுமென்றும் விவாதம் செய்தனர். இது நல்ல யோசனை என்று மற்ற சமூக ஆர்வலர்களும் ஆமோதித்தனர் .

உச்சநீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப் பட்டது. அவ்வழக்கில் இரண்டு மநுவையும் தடைவிதித்து விட்டு புதிதாக ஒரு மநுவை இயற்ற வேண்டும் என்று கேட்கப் பட்டிருந்தது. இதற்கு எதிராக வேறொரு அணியினர் மலையப்பனுக்கு கிடைத்த கிமு 500 மநுவைப் பின்பற்ற வேண்டும் என்றும் வேறு ஒரு அணியினர் ஏற்கனவே உலகத்தில் உள்ள கிமு 300 மநுவைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வழக்கு தொடுத்திருந்தனர். உச்சநீதி மன்றம் மூன்று வழக்குகளையும் சேர்த்து விசாரிக்க முடிவெடுத்தது. அதில் மலையப்பனையும் பேராசிரியரையும் சாட்சிகளாக சேர்த்து, அவர்களையும் நீதிமன்றம் விசாரித்தது.

நீதிபதி, பேராசிரியர் சிவசுப்ரமணியனை தீர விசாரித்தார். இந்த கி.மு 500 மனுஸ்மிருதியைப் பற்றியும் அதற்கான வரலாற்றுச் சான்றுகள் பற்றியும் விசாரித்தார். பேராசிரியர், கிமு 2ஆம் நூற்றாண்டு வரை பௌத்த மதமே உயர்ந்த மதமாகக் கருதப்பட்டதென்றும், கிமு 2ஆம் நூற்றாண்டில் புஷ்யமித்ரா சுங்கா என்னும் மன்னன் தான் பௌத்த மதத்தை அழித்து பார்ப்பனர்களை முன்னிலைப்படுத்தியதற்கான வரலாற்றுச் சான்றுகள் உள்ளதாகவும், இந்த மன்னன் பௌத்த துறவிகளின் தலைக்கு 100 பொற்காசுகள் சன்மானம் வழங்கி பௌத்த துறவிகளைக் கொன்றொழித்ததாகவும், அப்படித்தான் பௌத்த மதம் இந்தியாவில் அழிந்ததாகவும் ஆதாரங்களுடன் விளக்கினார். அதே கிமு 2 ஆம் நூற்றாண்டில் தான் சுமதி பார்கவா என்பவர் இந்த (கிமு 2ஆம் நூற்றாண்டு மநு ) மநுவைப் பார்ப்பனர்களை முன்னிலைப்படுத்தி இயற்றிய வரலாற்றையும் நீதிபதியிடம் சொல்லி விட்டு, இப்போது கிடைத்த மநுஸ்மிருதி கிமு 500ல் கிடைத்திருப்பதால், சுமதி பார்கவா கிமு 2ஆம் நூற்றாண்டில் அதை எல்லாம் திரித்து எழுதியிருக்க வாய்ப்பிருப்பதாகவும் தன் விளக்கத்தை வைத்தார்.

அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்ட நீதிபதி "இரண்டு மநுவிலும் சொல்லப்படும் வாழ்க்கை முறை சட்டப்படி நீதிக்கு எதிரானது. மநுஸ்மிருதி சொல்லும் வாழ்க்கை முறை முற்றிலும் அநீதியானது. அதே போல் புதியதாக மநுஸ்மிருதி இயற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்க முடியாது. அப்படி ஒரு புத்தகம்தான் ஏற்கனவே அம்பேத்கரால் எழுதப்பட்டு அரசியல் அமைப்புச் சட்டமாக பின்பற்றி வருகிறோம். எனவே "மனிதம்" என்று புதிய மநுஸ்மிருதி போன்ற விதிமுறைகள் கொண்ட புத்தகம் எதுவும் தேவையில்லை. அம்பேத்கர் எழுதிய அரசிலமைப்புச் சட்டத்திலேயே மனிதகுலம் சமத்துவமாக வாழ்வதற்கான அனைத்து விதிமுறைகளும் கொடுக்கப் பட்டுள்ளன" என்று தன் தீர்ப்பை தெரிவித்தார்.