புனையப்பட்ட குற்ற வழக்கிற்க்காக நீதிமன்றங்களின் படிகளில்..

நடந்து..

நடந்து….

நடந்து……..

police tortureவழக்குரைஞர்களிடம் வழிந்தும்.. இரக்கமாகவும்… பலவித குரல்களில்.. வழக்கின் நிலை பற்றி..

கேட்டு..

கேட்டு…

கேட்டு….

இருபத்து அய்ந்து ஆண்டுகளாக கிரிமினல் வழக்காக அலைக்கழித்து நொந்து நூலாக்கிக் கொண்டு இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன் சொன்ன தீர்ப்பில் விடுதலை கிடைத்தது. இப்பொழுது அந்த வழக்கின் தொடர்ச்சியாக சர்வீஸ் (பணி விதிமுறை) வழக்காக மாறி, சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பாயத்தில் நடந்து கொண்டிருக்கிறது. அந்த வழக்கிற்காக பூபதி இப்பொழுது நடையாய் நடந்து கொண்டு கொண்டிருக்கிறார்.

சென்னை கடற்கரை நோக்கி மின்சார இரயில் தடக் தடக் தடக் என்று சென்றது. அதற்கு இசைந்தவாறு பூபதியின் மன ஓட்டங்களுக்கு தாளம் போட்டு கொண்டு சென்று கொண்டிருந்தது.

ஏதோ ஒரு இரயில் நிலையத்தில் நின்றது. பூபதி நின்று கொண்டிருந்த இடத்திற்கு அருகில் அமர்ந்து இருந்தவர் எழுந்து இரயில் இருந்து இறங்கினார். உடனே பூபதியைத் தள்ளி விட்டு விட்டு அந்த இடத்தை ஒருவர் பிடிக்க முயற்சித்தார். விழித்துக் கொண்ட பூபதி சட்டென்று அந்த இருக்கையில் அமர்ந்தார்.

வண்டி மீண்டும் ஓடத் துவங்கியது. பூபதி பக்கத்தில் அமர்ந்து இருப்பவர் காலை நாளிதழை மேய்ந்து கொண்டிருந்தார். எட்டிப் பார்க்காமலேயே நாளிதழில் தலைப்புகள் எளிதாக பூபதியால் படிக்க முடிந்தது. அதை அநாகரிகம் என்று நினைத்தவர் சிறிது நேரத்தில் தலைப்புகளை சுவாரசியமாக வாசிக்க ஆரம்பித்து விட்டார்.

நாளிதழ் சொந்தக்காரரும் தான் பெற்ற இன்பம் பக்கத்தில் அமர்ந்திருப்பவரும் பெறட்டும் என்று நாளிதழ் இரண்டு பக்கங்களையும் அகல விரித்துப் படித்தார். பூபதியின் பாதி தொடை மீது அந்த நாளிதழின் ஒரு பக்கம் இருந்தது இன்னும் வசதியாகப் போனது.

அவர் ஒவ்வொரு பக்கங்களாகப் புரட்ட பூபதியை அவருடன் சேர்ந்து செய்திகளை வாசிக்க ஆரம்பித்து விட்டார். அந்த செய்தித் தலைப்பு அவரை ஈர்த்தது.

"டிஎஸ்பி மூளைக் கட்டியால் அகால மரணம்"

தீப்பொறி தட்டியது போல உணர்ந்த பூபதி தனக்கும் அந்த செய்திக்கும் ஏதோ தொடர்பு இருப்பதை உணர்ந்தார். தலைப்பில் இருந்து செய்திக்குள் சென்று வாசிக்க ஆரம்பித்தார்.

சென்னை அண்ணாநகர் காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் மூளையில் ஏற்பட்ட கட்டியினால் நேற்று மருத்துவமனையில் அகால மரணம் அடைந்தார் என்றும், அவர் பெயர், அவரின் பராக்கிரமங்கள், அவர் இளம் வயதில் அதாவது 40 வயதில் மரணம் அடைந்ததையும், அவர் பிள்ளைகளுடன் குடும்பத்தை விட்டு சென்றதற்கு அனுதாபத்தையும், காவல் துறை தலைமை அதிகாரியின் அஞ்சலியையும் பூபதி படித்து முடித்தார்.

பூபதியின் மனம் மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தது. அந்த மகிழ்ச்சித் துள்ளல் அவர் பக்கத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் தெரிந்தது. அவர்கள் என்னவோ ஏதோ என்று அந்த நாளிதழை எட்டி எட்டிப் பார்க்க ஆரம்பித்தனர். நாளிதழ் சொந்தக்காரருக்கு பூபதியை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கிய செய்தி என்னவாக இருக்கும் என்று திரும்பத் திரும்ப செய்திகளுக்குள் தேடினார்.

அவருக்கு எதுவும் அப்படி பிடிபடவில்லை. பூபதியின் முகத்தைப் பார்த்து கேள்விக்குறியாக்கி வினவுவதாக அந்தப் பார்வை இருந்தது. பூபதியின் முகமெல்லாம் பல்லாகி இளித்துக் கொண்டு இருந்தது. அதற்குள் கடற்கரை இரயில் நிலையம் வந்து விட்டது.

பூபதி நன்றிப் பெருக்கில் நாளிதழ் வைத்திருந்தவருக்கு புன்னகையுடன் விடை கொடுத்தார். அவர் ஒன்றும் புரியவில்லை. பணிக்கு நேரமாகி விட்ட அவசரத்தில் பிளாட்பாரத்தில் இறங்கி ஓடிக் கொண்டிருந்தார்.

ஒரே ஒரு நாளிதழ் வாங்குவதற்குக் கூட யோசனை செய்யும், சோம்பேறித்தனம் செய்யும் பூபதி அன்றைய சென்னையில் இருந்து வரும் அனைத்து தமிழ், ஆங்கில நாளிதழ்களை வாங்கினார்.

"டிஎஸ்பி மூளைக் கட்டியால் அகால மரணம்" செய்திகளை ஒவ்வொரு தினசரியாக பரபரப்புடன் இரயில் நடை மேடை பெஞ்சில் அமர்ந்து தேடிப் படித்து முடித்தார்.

என்னை கிள்ளினியா .. பார் பதிலுக்கு உன்னை நான் கிள்ளி விட்டேன் என்ற குட்டிப் பசங்க குதூகலம் அவரிடம் நிறைந்து இருந்தது.

அந்த காலை நேரத்தில் பாரிமுனையின் தெருக்களில் மக்கள் நிற்கக் கூட நேரம் இல்லாமல் கூட்டமாக ஓடிக் கொண்டிருந்தனர். கடந்த முப்பது ஆண்டுகளில் மனிதர்கள் கூட்டம், கூட்டமாக சென்னையை அடைத்துக் கொண்டு விட்டனர். அந்த மனிதக் கூட்டம் எப்படி யந்திரங்களாக மாறி முடுக்கிவிட்ட பொம்மைகளாகி விட்டிருக்கிறார்கள் என்று வியந்து கொண்டு சென்றவர் தன்னிச்சையாக ஒரு இனிப்பு கடைக்குள் புகுந்தார்.

தனக்குப் பிடித்த ஆர்லிக்ஸ் மைசூர் பாக்கை நூறு கிராம் வாங்கி இரசித்து சுவைத்து சாவைக் கொண்டாடி கொண்டாடி மகிழ்ந்தார். நல்ல சாக்லேட்கள் பாக்கெட் ஒன்றை வாங்கினார்.

அதைப் பிரித்த பூபதி முதல் சாக்லேட்டை அந்த கடைக்காரருக்கு கொடுத்தார்.

புன்னகையுடன் அதை வாங்கிக் கொண்ட அந்தக் கடைக்காரர், "என்ன சார் உங்க பிறந்த நாளா இன்று? வாழ்த்துக்கள் சார்.." என்றார்.

"இல்ல.. நமக்கு வேண்டப்பட்டவர் இன்று மண்டையப் போட்டு விட்டார்.. அதற்குத் தான் இது…" என்று இளித்தவாறு பூபதி கூறினார்

"சார்.. இது சரியில்ல.. இந்தாங்க உங்க சாக்லேட் எனக்கு வேணாம்... சாவுக்கு எவனாவது சாக்லேட் தருவானா..."

அவர் திருப்பி அளிக்க கையை நீட்டினார்.

"சும்ம்மா சாப்பிடுங்க சார்… என்னை உயிரோடு கொன்று போட்டவன் இன்று செத்து இருக்கான் .. அந்த நல்ல விசயம் இல்லையா . ஹா ஹாஹா."

பூபதி சத்தமாக சிரித்துக் கொண்டு சென்றார்.

அதிர்ச்சியில் உறைந்து போன கடைக்காரர் மெல்ல எட்டிப் பார்த்தார். பூபதிக்கு கால்கள் இருக்கிறதா என்று உற்று கவனித்தார். கால்கள் இருந்தன.

"பிசாசு இல்ல.. மனுசன் தான்.. லூசா இருப்பாரோ" என்று முணுமுணுத்தது பூபதிக்குக் கேட்டது. வேறு சமயம் என்றால் சட்டையைப் பிடித்து உலுக்கி இருப்பார். தகராறுக்கு செல்லும் மனநிலையில் இன்று அவர் இல்லை.

மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி

பூபதிக்கு பாரிமுனையில் தெருக்களில் செல்லும் மனிதர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதைப் போன்று நினைத்துக் கொண்டு துள்ளல் நடையில் நடந்தார்.

மக்கள்திரள் இயக்கத்தில் இருந்து செயல் ஊக்கத்துடன் சேவை புரிந்ததால் அவருக்கு உயர்நீதி மன்றத்தின் வழக்குரைஞர்கள் பலரும் நட்பு வட்டாரத்தில் பழக்கத்தில் இருந்தனர்.

இனிப்பு வாங்கச் சென்றதால் பூபதி பார்க்க வந்த வழக்குரைஞர் நீதிமன்றத்திற்கு வேறு ஒரு வழக்கில் ஆஜராக சென்று விட்டார். அதனால் நீதிமன்றத்திற்குள் பழக்கமான வழக்குரைஞர் அறைக்கு சென்றார். அது ஆறு வழக்குரைஞர்கள் அமர்வதற்கு ஒதுக்கப்பட்ட அறை. நான்கு வழக்குரைஞர்கள் இருந்தனர். அவர்களுக்கு சாக்லேட் கொடுத்தார். பூபதியின் பிறந்த நாள் என்று நினைத்துக் கொண்டு அவர்கள் வாழ்த்து கூறினர்.

அவரது நண்பரான வழக்குரைஞரின் முன் இருக்கையில் அமர்ந்த பூபதி உரத்த குரலில், "ஒரு போலிஸ் அதிகாரி மண்டையப் போட்டுட்டான். அதற்குதான் ஸ்வீட்.." சத்தம் போட்டு சொன்னார்.

அவர்கள் அனைவர் முகங்களும் இறுகி ஒருமாதிரி மாறி விட்டன.

"தோழர்.. இது சரி இல்ல.. இது சரி கிடையாது.."

…….. …. …..

"என்ன…? என்னை உயிரோடு நடைபிணமாக்கிய ஒருத்தன் மீது இந்தக் கோபம் கூட எனக்கு வரக்கூடாதா என்ன?"

"அதில்ல.. அப்படியே இருந்தாலும் வெளிப்படையா இப்படி சாக்லேட் கொடுத்து கொண்டாடுவது சரி கிடையாது.."

"புரியுது… ஆனா……"

"தீபாவளி பெரும் திருவிழாவா இந்த நாட்டு மக்களால் கொண்டாடப்படுகிறது.. ஏன்? மகாபலி மன்னன் கொல்லப்பட்ட நாள் ஓணம் பண்டிகையாக கேரளாவில் அத்தப்பூக்கள் கோலமிட்டு கொண்டாடுவது .. ஏன் தோழர்.."

…………… ………………….

சில நிமிடங்கள் அங்கு கனத்த மவுனம் நிலவியது.

அந்த மவுனத்தின் பின்புலத்தின் ஆழம் வழக்குரைஞர்களுக்கு புரிந்து கொள்ள முடிந்தது. பூபதி பல ஆண்டுகளாக இந்த வழக்கிற்கு நாயைப் போல் அலைவது அவர்களுக்குத் தெரியும். ஆனாலும் இது சரியில்லை என்பது போன்று அவரைப் பார்த்தனர்.

பேச்சு வேறுபக்கம் திசை திருப்பப் பட்டது.

பூபதி வழக்கை நடத்திக் கொண்டிருக்கும் வழக்குரைஞருக்கு கைப்பேசியில் தொடர்பு கொண்டார். மணி ஒலித்தது. அவர் கைப்பேசியை எடுக்கவில்லை. நீதிமன்ற அறைக்குள் இருப்பார். கைப்பேசியை அணைத்து வைத்திருக்க வாய்ப்பு உள்ளது.

வழக்குரைஞர் சுப்புவுக்கு போன் செய்து அவர் எந்த சேம்பரில் இருக்கிறார் என்று விசாரித்தார். அவரைப் பார்க்க புறப்பட்டார். சுப்பு கிரிமினல் வழக்குகளை நடத்தும் வழக்குரைஞர். பூபதிக்கு பிணை எடுத்தவர் அவர். செல்லும் வழியில் பார்க்கும் வழக்குரைஞர் நண்பர்களுக்கும் அவர்களின் நண்பர்களுக்கும் இனிப்புகளை கொடுத்துக் கொண்டு சென்றார்.

எதற்கு என்று விசாரித்தவர்களிடம் சிலருக்கு காரணம் சொன்னார்.

"குற்றுயிராய் தினம் தினம் என்னை சிதைத்துக் கொன்றவன்… இன்று அவர் செய்த பாவத்தின் பலனை அனுபவிக்கிறார். என்னை மட்டும் அல்ல.. அதற்காக இது " என்றார் பலரிடம்.

"இன்று எனக்கு சிறப்பான நாள்.. ஸ்பெஷல் டே.. என் மனத்திற்கு ஆத்ம சாந்தி கிடைந்த நாள் அதனால் தான் இந்த ஸ்வீட் " என்று புன்னகையுடன் சொல்லிக் கொண்டே விரைந்தார்.. அவர்களுக்கு ஒன்றும் புரியாமல் கிடைத்த சாக்லேட்டின் சுவைக்காக ஆனந்தம் அடைந்தனர்.

பிரிட்டிஷ் பாணி கட்டிட கலை நுணுக்கத்துடன் கட்டப்பட்ட சென்னை உயர்நீதிமன்றக் கட்டிடம். கடற்கரை காற்று சுழன்று அதனுள் புகுந்து விளையாடும்படி கட்டப்பட்ட சிறப்பான வடிவமைப்பைக் கொண்டது. அதற்குள் நுழைந்து படிகளில் ஏறி இரண்டு கட்டடிங்களுக்கு இடையில் பாலமாக இணைக்கும் வராந்தாவில் சிறிது நேரம் நின்றார். வெயிலும் சில்லென்று கடற்கரை காற்றும் ஆளைத் தூக்குவது போல் அங்கு நுழைந்து வெளியேறியதை ஆனந்தமாக சில நிமிடங்கள் அனுபவித்தார். மூன்றாவது கோர்ட் அறையை அடைந்தார்.

சுப்பு அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அவரைச் சுற்றி இளம் வழக்குரைஞர்கள் சிலர் நின்று கொண்டு இருந்தனர். ஏதோ ஒரு வழக்கு தீர்ப்பினை விவரித்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் பூபதி சென்று வழக்கம் போல் வணக்கம் வைத்தார்..

பூபதி இனிப்பை இளம் வழக்குரைஞர்களுக்குக் கொடுத்தார். சாக்லேட் பாக்கெட்டை சுப்புவிடம் நீட்டினார்.

"ஹாப்பி பர்த் டே.." என்று பூபதி கையை சுப்பு குலுக்கினார்.

"நோ..நோ.. தோழர் இது ஹாப்பி டெத் டே..க்காக" என்று குறும்பாக சிரித்தார்.

"மூன்று ஆண்டுக்கு முன் சும்மா என்னை கூட்டுப் போய் சாகடிச்ச அந்த டிஎஸ்பி இன்று மூளைக் கட்டி வந்து மேலே போய் சேர்ந்து விட்டார்." என்றார்.

அப்பொழுது அங்கு வந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் சுப்புவிடம் ஏதோ வழக்கு சம்மந்தமாகக் கேட்டார்.

"சாருக்கு சாக்லேட் குடுப்பா.." என்றார் சுப்பு

பூபதி கொடுத்த சாக்லேட்டை வாங்கி விட்டு கையைக் கொடுத்து வாழ்த்து சொல்லிக் கொண்டே வேகமாக கோர்ட் அறைக்குள் ஓடினார்.

கண்களை சிமிட்டி சுப்பு கள்ளதனமாக புன்னகைத்தார்.

"நான் முப்பது வருசத்துக்கு முன் உனக்கு ஜாமீன் எடுத்தேனே அந்த அதிகாரியா" ஏதோ நினைவில் மீண்டும் கேட்டார்.

"இல்ல இல்லை ஒரு வீணாப் போனவன்… நீங்க கூட ஹேபியஸ் கார்ப்பஸ் கேஸ் என் மனைவி பெயரில் போட்டு, பின்பு அந்த அதிகாரி என்னை மிரட்டியதற்குப் பிறகு வாபஸ் வாங்கினீங்கலே.. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நினைவில்லையா?"

"ஓ … அந்த போலிஸ் அதிகாரியா.. விவரமானவனாச்சே… செல்போன் கால் வந்த செல்போனில் கூப்பிடுபவரின் எண் வரும்.. ஆனா அழைப்பார் எண் வராமல் போன் செய்யும் டெக்னிக் செய்து தனது போன் நம்பரை மறைத்த கில்லாடி அவன். போனில் வழக்கை வாபஸ் வாங்க வைத்து மிரட்டியவனாச்சே…. மறக்க முடியுமா அந்த ஆளை..?"

---------------------------------------------------------------------------

மறக்க முடியாதவன் மறக்கக் கூடாத ஜன்மம் அவன்!

ஒரு மனிதன் உயிருடன் இருக்கும் பொழுதே செத்து நடைப்பிணமாக்கும் நுட்பத்தை அந்த அதிகாரியிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்!

வெள்ளிக்கிழமை கடவுளுக்கு விஷேச நாள்! போலிஸ் துறைக்கும் அப்படித்தான் அன்று ஸ்பெஷல் நாள்! ஆனால் நேரம்தான் மாறுபடும். கடவுளுக்கு அதிகாலை பூஜை.. போலிஸ் நள்ளிரவில்தான் தனது பூஜையை ஆரம்பிக்கும்!

யார் கதவையும் தட்டும் .. அல்லது கதவை உடைக்கும். பூபதி வீட்டுக் கதவு உடைபடும் ஓசை கேட்டு மகளின் குழந்தை அலறியது. பூபதியும், அவர் மனைவியும், வீட்டிற்கு வந்த மகளும் என்னவோ ஏதோ என்று கதவைத் திறந்தனர்.

அய்ந்து நபர்கள் இருளில் அங்கு நின்று கொண்டிருந்தனர். நொடியில் சட்டென்று இருவர் பூபதியின் தோள்பட்டைகளை வலுவாகப் பிடித்து கொண்டனர்.

"அய்யா.. வரச் சொல்லி இருக்காரு.. போய்யிட்டு உடனே திரும்பிடலாம்.. சின்ன என்கொயரிதான்…"

பூபதிக்கு ஒன்றும் புரியவில்லை.

"அய்யான்னா யாரு… நீங்க யாரு.."

"எங்களைப் பார்த்தா தெரியவில்லையா..?"

கொழுத்துப் போன குண்டர்கள் போல் தெரிகிறது என்று சொல்லாம் என்று நினைத்தார். அவன் இறுக்கிப் பிடித்த தோள்பட்டை வலி உயிரை எடுப்பது போல் இருந்தது.

"மீசையும், ஆளு சைஸைசும் பார்த்தா தெரியல்லையா… போலிஸ்காரங்க.. டிஎஸ்பி அய்யா ஓர் என்கொயரிக்கு உன்னை கூப்பிட்டு வரச் சொன்னாரு." என்று ஒரு போலிஸ்காரன் மீசையைத் தடவினான்.

சில ஆண்டுகளுக்கு முன் இயக்கத்தை விட்டு தனிப்பட்ட காரணங்களுக்காக வெளியேறி இருந்தார். அப்படி இருக்கும் பொழுது ஏன் தன்னை இந்த நள்ளிரவில் அழைக்கிறார்கள் என்று பூபதிக்கு குழப்பமாக இருந்தது.

அதற்கு மேல் அவரை எதுவும் மறு பேச்சு பேச அந்த போலிஸ்காரர்கள் விடவில்லை. ஜட்டியைப் போட்டு சட்டையை மாட்டுவதற்குள் தள்ளிக் கொண்டு வெளியே போய்விட்டார்கள்.

"பயப்படாத.. வந்துடுவேன்.. .." என்றார் மனைவியிடம்..

"சார்.. எந்த போலிஸ் ஸ்டேஷன்.." என்று மனைவி கேட்டதற்கு எந்தப் பதிலையும் அவர்கள் தரவில்லை. அப்படிக் கேட்பதே கொலை குற்றம் போல் பூபதி மனைவியை முறைத்தனர்.

தெருக்கோடி முனையில் வெள்ளை வேன் காத்திருந்தது.

வெள்ளை வேனில் ஏறியதும் பூபதி கண்களை கறுப்புத் துணியால் இறுக்கமாக கட்டி விட்டனர். இப்படியான விசாரணைகளுக்கு ஓரிரு தடவைகள் பூபதிக்கு பழக்கம் இருந்தது. ஆனால் யாரும் கண்களை குருடாக்குமாறு கட்டவில்லை.

போகின்ற இடத்தை கண்டுபிடிக்கக் கூடாது என்பதற்கு என்று பூபதி நினைத்தார். ஆனால் அதுக்கும் மேலே அது என்பது அடுத்தடுத்த நாட்களில் அவருக்குப் புரிய வைத்தது.

ஒரு மணி நேரத்திற்குப் பின்பு மேடு பள்ளங்கள், படிக்கட்டுகள், வராண்டா என்று கண் தெரியாதவர் கையைப் பிடித்து இழுத்துச் செல்வது போல் சென்றனர்.

மனிதம் அழுகிக் கொண்டிருக்கும் வாசனை வரும் ஓர் அறைக்குள் சென்றனர்.

கைகளைப் பின்புறமாக வளைத்து இரும்பாலான கைவிலங்கை மாட்டினர். பூபதி எதிர்ப்பு தெரிவித்தார்.. ஒத்துழைக்க மறுத்தார். எல்லாம் சில வினாடிகள்தான்!

இரண்டு தட்டுகள்…. ….

ஒரு லாக்கப் அறையின் எங்கோ ஒரு மூலையில் அவர் இருந்தார். கிட்டத்தட்ட பத்து நாட்கள் இப்படியாக கண்கள் கட்டப்பட்டு, கைகளைப் பின்புறமாக வளைத்து விலங்கு மாட்டப்பட்ட நிலையில் கிடத்தப்பட்டார்.

சாப்பிடுவதற்கும், கக்கூஸ் போவதற்கு மட்டும் போலிஸ்காரர்கள் கை விலங்கைத் தளர்த்தினர். கண் கட்டை அவிழ்க்கக் கூடாது தடவித் தடவித்தான் உணவை சாப்பிட வேண்டும்.

வேண்டுகோள் விடுத்தால் சில சமயங்களில் சிறுநீர் கழிப்பதற்கும், மலம் கழிப்பதற்கும் அந்த லாக்கப் அறைக்குள்ளே இருந்த கக்கூஸ்க்கு இழுத்து(அழைத்து)ச் சென்று காவலுக்கு இருக்கும் போலிஸ்காரர் விடுவார். ஆனால் கண்கள் மட்டும் அப்பொழுதும் கட்டப்பட்ட நிலையில்தான் இருக்க வேண்டும்.

அந்த லாக்கப்பில் முணுமுணுக்கப்பட்ட ஒலிகளில் இருந்து ஆறு அல்லது ஏழு நபர்கள் அதற்குள் இருந்தது தெரிந்தது. அனைவரும் கண்கள் கட்டப்பட்டு முதுகுப்புறம் கைகள் இழுத்து விலங்கு மாட்டப்பட்டு இருப்பதை அரை நாளுக்குள் பூபதி உணர்ந்து கொள்ள முடிந்தது.

மறுநாள் பகல் பொழுதும் எதுவும் நடக்கவில்லை. நினைவுகள் இருளில் கடந்த காலத்திற்கும் நிகழ்காலத்திற்கும் நிலையில்லாமல் அலைந்து கொண்டிருந்தன. இயக்க வாழ்வும், பல ஆண்டுகளுக்கு முன் கைதாகி லாக்கப்பில் இருந்ததும், பொய் வழக்கில் சிக்க வைக்கப்பட்டதும், நீதிமன்ற விசாரணை வழக்குக்காக அலைக்கழிக்கப்பட்டதும் நினைவில் சுழன்றன.

பட்டாம்பூச்சி நாவலின் ஹென்றிவாரியர் கானா சிறைச்சாலை இருட்டு தனிமைச் சிறை ஏனோ நினைவில் பூபதிக்கு வந்தது. அவரைப் போல் தைரியமாக இருப்போமா என்று யோசித்தார்.

"குற்றத்தை ஒத்துக் கொள்ளுங்க… உண்மையப் பேசுங்கடா.."

காவல் போலிசின் தடித்த மிரட்டல் குரல்கள் மட்டும் சீரான இடைவெளிகளில் விட்டு விட்டு முறைவைத்து கேட்டது.

எந்தக் குற்றத்தை ஏற்றுக் கொள்வது? ஒன்றும் புரியவில்லை.. அவர்களுக்கு குற்றவாளிகளைப் பிடிக்க முடியாவிடில் கையில் சிக்கும் யாரையும் குற்றவாளியாக மாற்றும் மந்திர வித்தை தெரிந்திருந்தது.

தலையைப் பிய்த்துக் கொள்ள வேண்டும் போல பூபதிக்கு இருந்தது. ஆனால் அவரால் முடியவில்லை. அரிப்பெடுத்ததால் இடம் சொறி சொறி என்று கதறிக் கொண்டு இருந்தது. ஒன்று முடியாமல் போனால் மூளை பலமாகப் போராடும் போல.. இறுதியில் வேறுவழியின்றி அது தோற்று விட்டது.

நள்ளிரவில்.. டமால்..டமால் என்று யாரையோ மாட்டை அடிப்பது போல் அடிக்கும் சத்தம் கேட்டது.

"அய்யோ .. அய்யோ.. என்னை விட்டுங்க .. விட்டுங்க .." என்று அலறல் சத்தங்கள் இருளைக் கிழித்தது. நிசப்தத்தில் ரீங்காரமிட்டுக் கொண்டு இருந்த இரவுப் பூச்சிகள் இந்த அலறலில் வாயை மூடின.

பூபதியும், மற்றவர்களும் துள்ளத் துடித்து எழுந்தனர். அந்த இரவு முழுவதும் இப்படியான விசாரணை, அடிகள், அலறல்கள் தொடர்ந்து கேட்டன. கண்கள் கட்டப்பட்டநிலையில் அந்த சித்ரவதை அலறல்கள் மட்டுமே அவர்களின் புலன் உணர்வுகளில் மிகுந்து அனைத்துமாக மாறிப் போனதை விவரிக்க வார்த்தைகள் கிடையாது.

தூக்கம் தொலைந்து போனது.. லாக்கப் திறந்து மூடும் கிரீச் கிரீச் ஒலிகள் கேட்டன.

லாக்கப் அறையில் இருந்துதான் யாரையோ இழுத்துப் போய் அடிக்கிறார்களோ என்று பூபதி நினைத்தார். அடுத்து நாமாக இருக்குமோ என்று அவர் நினைக்கும் பொழுதே மெல்ல நடுக்கம் உடலில் பூச்சியாக ஊர்ந்து மூளைக்கு சென்று குடைவது போன்று உணர்ந்தார்.

இப்படி இரண்டு மணி நேரம் நடந்தது. அதற்குப் பிறகு இருளின் அமைதி.. தூக்கம் கலைந்து கொட்டக் கொட்ட கண்கள் கட்டப்பட்ட நிலையில் கைகள் பின்னால் விலங்கிடப்பட்ட நிலையில் உடலைக் கீழே கிடத்த முடியாமலும் சிரமப்பட்டுக் கிடந்தார்.

விடிந்தது. ஆனால் அவர்களின் விடியலுக்கான உணர்வு வன்முறையாக நசுக்கப்பட்டு விட்டது அப்பொழுதான் பூபதிக்குப் புரிந்தது.

காவல் போலிஸ்காரர் மாற்றப்பட்டு வேறு போலிஸ்காரர் வந்தார். காகம், சிட்டுக்குருவி, மைனாக்களின் இனிய காலைக் குரல்களும், எப்பொழுதும் கரகரத்துக் கொண்டு இருக்கும் போலிஸ் நிலைய ஒயர்லஸ் ஒலி அறிவிப்புகளும், வெவ்வேறு ஒலிகளை எழுப்பும் பூட்ஸ்கால்கள் ஒலிகளும் என துல்லியமாக பூபதிக்குக் கேட்டது.

இத்துடன் அன்று விடியலை நான்கு இட்லிகளும் சேர்ந்துதான் அவருக்கு அறிவித்தன. இல்லையெனில் இருள் உலகிலேயேதான் பூபதி வாழ்ந்திருக்க முடியும்.

பார்க்காமலேயே தொட்டுத் தடவி உணர்ந்து கொள்ள, சுவைத்து உண்ண ஒரிரு நாட்களில் அவர் பழக்கப்படுத்தப்பட்டார். உணவுக்காக எங்கிருந்தோ வரும் ஈக்கள் பறக்கும் மெல்லிய ஒலியைக் கூட துல்லியமாய் இப்பொழுது அவருக்கு கேட்க ஆரம்பித்து விட்டது

பூட்ஸ் கால் நடக்கும் ஒலிகளும் லாக்கப் திறக்கும் ஒலியும் கேட்டது.

"பூபதி ..எழுந்திரு.."

"எல்லாருடைய கண்களும் சரியாக கட்டிருக்க பாரு.. எவனாவது கட்டைத் தளர்த்தி ஒரக்கண்ணால் பார்க்கப் போறான். டிஎஸ்பி பார்த்தால் தொலைந்தோம் நாம.."

"எஸ்..சார்.."

இன்னொரு முறை எல்லாருடைய கண்களில் கட்டப்பட்ட கருப்பு துணிகளின் முடிச்சுகள் கண்கள் வலிக்கும்வரை இறுக்கப்பட்டன,

வந்திருந்தவர் சப்-இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டும். அவர் பூபதியை குருடனை அழைத்துச் செல்வது போல் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றார். மாடிப் படிகள் கண்ணால் பார்க்க முடியாததால் கால்களால் தடவி தடவி மெல்ல ஏறினார்.

ஊதுவத்தி வாசனையும், கதம்ப மல்லி மணமும் நிறைந்திருந்த ஏதோ ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார்..

கண்களின் கட்டுகளை அவிழ்க்காமலே விசாரணை செய்தனர். கேள்விகள் வந்த திசை நோக்கி பதில்களை பூபதி சொன்னார்.

சட்டென்று மடார் மடார் என்று யாரையோ அறையும் சத்தம் கேட்டது.

"அந்தக் குற்றத்தை யார் யார் செய்தது..?"

ஆனால் கேள்விகள் பூபதி நோக்கி வந்தன.

"எப்படி செய்தீர்கள்..?"

"உன் கூட்டாளிகள் எங்கே பதுங்கி இருக்கானுங்க..?"

ஒரு மணி நேரம் விசாரணை நடந்தது.

பூபதிக்கு தெரியாத ஒரு நிகழ்வை, குற்றத்தை தெரியும் என்று போலிஸ் அதிகாரிகளாகவே ஊகித்துக் கொண்டு அதை ஏற்றுக்கொள்ள வைக்க மாற்றி மாற்றி கேள்விகள் கேட்டு சாதகமான பதில்களை மட்டுமே பேச வைக்க முயற்சித்தார்கள்.

அரை மணி நேரத்திற்குப் பிறகு பூபதி கண் கட்டுகளை அவிழ்த்து விட்டார்கள். இரண்டு நாட்கள் வெளிச்சத்தைப் பார்க்காமல் கண் கூசியது. இயல்பான பார்வைக்கு வர நேரம் பிடித்தது. உண்மையை சொல்லப்போனால் இயல்பாக அவரால் இருக்க முடியவில்லை. அவரை ரிமோட் மூலம் எதிரில் உள்ள டிஎஸ்பி இயக்குவது போலவே அவருக்குத் தெரிந்தது.

"உண்மையைப் பேசுகிற வரைக்கும் விடமாட்டோம்… இப்ப கூட்டிப் போயிட்டு அடுத்த அக்குஸ்ட்டை கூட்டி வாங்க" என்றார்.

பூபதி எழுந்து நடந்தார். அந்த அறையின் வாசலுக்கு எதிரில் இருந்த அறையின் பெயர் பலகையில் அதிகாரியின் பெயரும், அத்துடன் டாக்டரேட் இன் சைக்காலைஜி என்ற பலகை தங்க வண்ணத்தில் மின்னின. உளவியலில் அந்த துணைக் கண்காணிப்பாளர் முனைவர் பட்டம் பெற்றுள்ளதை பெருமையாக அது காட்டியது.

ஏட்டு, பூபதி கண்களை கறுப்புத் துணியால் மிகவும் இறுக்கமாகக் கட்டினார்.

"சார்..வலிக்குது ரொம்ப இறுக்காதிங்க" என்று பூபதி சொன்னதற்காக இன்னும் அதிகமாக இறுக்கினார்.

"சே..இவனெல்லாம் ஒரு மனுச ஜன்மம்.. தூ.."

மீண்டும் இருள் உலகத்திற்குள்….

படிகளில் தட்டுத் தடுமாறி இறங்கினார்.

மீண்டும் கைகளை பின்பக்கம் வளைத்து விலங்கைப் பூட்டி லாக்கப்பில் அடைத்தார். லாக்கப்பில் இருந்த யாரையோ அவர் அழைத்துச் சென்றார். இப்படியே மதியம் இரண்டு மணி வரை நடந்தது.

இரவு பகல் அவர்களிடம் இருந்து பறிக்கப்பட்டது. காகங்களும், குருவிகளும் இல்லாமல் இருந்தால் பொழுதுகள் பற்றி உணர்ச்சி முழுவதுமாக அற்றுப் போய் இருக்கும்.

மீண்டும் நள்ளிரவுக்கு முன்பே பக்கத்து அறையில் சித்ரவதைகள் அதன் தொடர்ந்த அலறல்களுமாக இரவு கழிந்தது. ஒரு பொட்டுத் தூக்கம் கூட வரவில்லை.

எந்த வினாடியிலும் தன் மீது வன்முறை பாயலாம் என்று அந்த இருளின் அலறல் மணி அடித்துக் கொண்டு இருந்தது.

தூக்கமற்றுப் போனது. அதிகாலையில் தூக்கம் உடலை, மனதை வலிந்து இழுத்துக் கொண்டு சென்று விட்டது.

அடுத்த நாள் பூபதியிடம் விசாரணை ஏதும் இல்லை, மற்றவர்களிடம் இருந்தது. விசாரணைக்குப் போய் வந்த ஒருவர் அரற்றும் வலி மனதைப் பிசைந்தது.

ஆனால் சில சமயத்தில் இவை பிரம்மையாகக் கூட இருக்கலாம் என்று தோன்றியது.

ஒன்றரை வயது குழந்தையை வைத்துக் கொண்டு மனைவி என்ன செய்வாள்? தன்னைக் காப்பாற்ற வழக்குரைஞர் மூலம் நீதிமன்றம் சென்று இருப்பாரா என்று பூபதி சிந்தனை செய்து கொண்டிருந்தார். கைகள் பின்புறம் கட்டப்பட்டதால் கீழே படுக்க முடியவில்லை. அவஸ்தை பட்டுக் கொண்டிருந்தார்.

நள்ளிரவில்... பூபதி மனைவியின் குரலும் அவரை மிரட்டும் போலிஸ் அதிகாரியின் குரலும் பக்கத்து அறையில் இருந்து கேட்டது. பளார்..பளார் என்ற கன்னத்தில் அறையும் சத்தம் வந்தது. மகளின் அழுகுரல் கேட்டது. மகளின் குழந்தை வீறிட்டு அழுவதை பூபதி கேட்டுத் துடித்தார்.

"குழந்தையை என்னடா பண்ரீங்க.."

பொறுக்க முடியாமல் சத்தம் போட்டார். எழுந்திருக்க முயன்றார். உடனே லாக்கப் திறக்கப்படும் ஒலி கேட்டது. அடுத்த வினாடி பூட்ஸ் காலால் ஒரே மிதி. பூபதி சுவரில் போய் முட்டி கீழே விழுந்தார்.

"வாயை, சூத்த பொத்திக்கிட்டு கிடக்கனும்‌.. பேச்சு சத்தம் கேட்டா அவ்வளவுதான்.." அந்த குரூர குரல் பூபதியின் சப்த நாடியை ஒடுக்கியது.

அடுத்த நாள் பகல் விசாரணை மோசமாக, வன்மமாக, ஆபாசமாக, அசிங்கமாக இருந்தது.

தனது மனைவியை, மகளை, பேரக் குழந்தையை விட்டு விடும்படியும், தனது எதுவும் தெரியாது என்றும் பூபதி அரற்றினார். அதெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகவே அந்த போலிஸ் துணை கண்காணிப்பாளருக்கு இருந்தது.

அன்று இரவும் வேறு ஒருவரின் அலறல் சித்ரவதை கேட்டது. லாக்கப் அறையில் இருந்த இன்னொருவர் உறவினர் போல.. அவர் புழு போல் துடித்தார்.

பூபதிக்கு அவரது மனைவியை, மகளை, குழந்தையை விட்டு விட்டார்களா என்று எந்தத் தகவலும் சொல்லவில்லை.

எட்டு நாட்கள் கடந்து இருக்குமா என்று பூபதி நாட்களை மனத்திற்குள் கணக்கு போட்டு பார்த்தார். ஒவ்வொரு நாளையும் நினைவுக்கு கொண்டு வர முயன்றார். நாட்களுடன் வலியும் கணக்கில் சேர்ந்து கொண்டிருந்தது பெரும் துயரமாக இருந்தது.

திருதிராஷ்டரன் மனைவி காந்தாரி கண்ணை கட்டிக் கொண்டு மகாபாரத்தில் போர்க்களத்தில் படுகொலை செய்யப்படும் மகன்களுக்காக அலறுவது, அழுவது போலவே பூபதியின் மனமும் நாளும் பதைபதைத்தது.

எட்டாவது நாள் காலையில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் பூபதி.

இன்று புதியவிதமாக விசாரணை இருந்தது. வானத்தில் இருந்து பூமிக்கு மக்களை காக்க வந்த இரட்சகராக துணைக் கண்காணிப்பாளர் புதிய அவதாரம் எடுத்து காட்சி அளித்தார்.

கண்களைக் கட்டி இருந்த கருப்புத் துணியை அவிழ்த்து விட்டனர். கைவிலங்கை அகற்றி விட்டனர். பூபதிக்கு சூடான தேநீர் கொடுக்கப்பட்டது. அந்த தேநீரின் சுவை விவரிக்க முடியாதது. தினமும் நான்கு தேநீர் குடித்தவன் ஒரு வாரத்திற்கு மேலாக குடிக்காமல் குடித்தால் இப்படிதான்!

"உன்னுடைய மனைவி ஹேபியஸ் கார்ப்பஸ் வழக்கை அய்க்கோர்ட்டில் போட்டிருக்கா.. முப்பது வருசத்திற்கு முன்னாடி உன் மேல எங்க ஆளுங்க போட்ட வழக்கு பொய் கேஸ்ன்னு உன்னை கைது செய்யும் பொழுதே எனக்குத் தெரியும்.. ஏதாவது க்ளூ கிடைக்காதா என்பதற்குத் தான் இப்படி செய்தேன்.. உன்னை ஒரு நாளாவது நாங்க அடித்து இருக்கோமா…"

அடித்தார்களா?

அடிக்கவில்லைதான்!

ஆனால்..

"அடித்தால் கூட பரவாயில்லை.. அடிக்காமலே உயிரை எடுத்து விட்டீர்களே" என்று பூபதி முணுமுணுத்தார்.

"என்ன சொன்ன.. இப்ப கூட நாலு பேப்பர் செலவுதான் எனக்கு.. இந்த குற்ற வழக்கில் சேர்த்து குண்டாஸ் போட்டு விடுவேன்.. வயசான காலத்தில் கோர்ட்டு கேஸ்ன்னு அலைய செத்துப்புடுவே.. ஒழுங்கு மயிரா.. வக்கீலுக்குப் போன் செய்து வழக்கை வாபஸ் வாங்கச் சொல்லு.."

………

மவுனம்

"என்ன.. வாபஸ் வாங்கிறீயா ஜெயிலுக்குப் போறியா..? "

"வக்கீலுக்குப் போன் போடுங்க " என்றார் பூபதி. அத்துடன் பத்து வெற்று வெள்ளைத் தாள்களில் அவரை கையெழுத்துப் போடச்சொல்லி வற்புறுத்தினர் .

"எங்களுக்கு ஒரு பிடிமானம் வேணாமா.. அதான். கையெழுத்துப் போட்டு விட்டு வீட்டுக்கு போயிட்டே இரு.."

உயிரற்ற நடைப்பிணமாக பூபதியை அந்த சிவப்பு கட்டிடம் வெளியே தள்ளியது.

வழக்கை திரும்ப பெற்றதற்க்காக வழக்குரைஞர் பூபதியை கிண்டல் செய்தார். அவர் மனைவியை, மகளை, பேரக் குழந்தையை போலிஸ் நிலையமே கொண்டு செல்லவில்லை என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டார்..

அந்த நள்ளிரவு அலறல்.. எல்லாம் பிரம்மையா… உண்மையா..?

அந்த போலிஸ் அதிகாரிக்கும், அவருக்கு ஒத்துழைத்த போலிஸ்க்காரர்களுக்கும் தான் அது வெளிச்சம்!

அந்த எட்டு நாட்களை திரும்ப நினைவுபடுத்திக் கொள்ள பூபதி முயன்றார். எவ்வளவு நுணுக்கமாக தனது மனோதத்துவ அறிவையும், அதிகாரத்தையும், பதவித் திமிரையும் அந்த அதிகாரி காட்டி உள்ளான்…… இன்னும் அந்த நாட்களின் பல விசயங்கள் இப்பொழுது புரிந்து கொள்ள முடிகிறது. எது உண்மை.. எது பொய்.. எது நடிப்பு என்பதை இன்னும் கூட பூபதியால் புரிந்து கொள்ள முடியவில்லை.

தனது ஆளுமையை சிதைத்து தன்னை நடைபிணமாக்கும் சைக்காலாஜி உத்திகளை துணைக் கண்காணிப்பாளர் கையாண்டது பூபதிக்கு வியப்பை அளித்தது.

இதையெல்லாம் அந்த மரணத்திற்கு "ஸ்பெஷல் டீரிட்" கேட்ட வழக்குரைஞர் நண்பருடன் பூபதி டாஸ்மார்க் பாரில் வைத்து பகிர்ந்தும், விவாதித்தும் கொண்டிருந்தார். நடைபிணமாக மன அழுத்தத்தில் குடியில் மூழ்கிய நாட்களை அவரிடம் விரிவாக விளக்கினார். மனபாரம், அழுத்தம் கரைந்து கொண்டிருந்தது.

"பகைவனின் பிணம் எப்பொழுதும் நறுமணம் வீசும் என்று அய்ரோப்பிய பழமொழி இருப்பது தெரியுமா… இவன் மரணத்தைக் கொண்டாடுவோம்…" என்றார் பூபதி.

மாலை நெருங்கிய பின்பு தான் அவர்கள் டாஸ்மார்க் பாரில் இருந்து வெளியே வந்தனர்.

உயர்நீதி மன்றத்தின் எதிரில் உள்ள குறுகலான தெருக்களில் பல நடைபாதை குடும்பங்கள் குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தது. அப்படியான ஒரு நடைபாதை குடும்பத்தில் யாரோ இறந்ததை அம்மக்களில் சிலர் குத்தாட்டங்களுடன் கொண்டாடினர். சிலர் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருந்தனர்.

குடிபோதையில் அந்த வழக்குரைஞர் ஆலோசனைப்படி மீண்டும் ஒரு சாக்லேட் பொட்டலம் பூபதி வாங்கினார். பூபதியும் அவரது நண்பரான வழக்குரைஞரும் நீதிமன்றத்தில் அன்று மாலை இனிப்பை வருவோர், போவோர் அனைவருக்குக்கும் கொடுத்து கொண்டாடிக் கொண்டிருந்தனர்.

ஆனால் பூபதி இன்று ஒரு பெக் கூட குடிக்கவில்லை!

இருப்பினும் அவர் முழு போதையில் மனம் இலகுவாகுவாகி வானில் மிதந்து பறந்து கொண்டிருந்தார்!

- கி.நடராசன்