ஒன்றிலிருந்து ஐந்து வரை திரும்பத் திரும்ப எண்ணிக்கொண்டே குறுக்கும் நெடுக்குமாக அந்தச் சிறிய அறையில் நடந்து கொண்டிருந்தார் கடவுள். தன்னை அனைத்தும் அறிந்த ஒப்பில்லா அவதாரமாக படைத்த மக்கள் தன்னைவிட பலசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பதில் உள்ள நகைமுரணை எண்ணித் தனக்குத்தானே சிரித்துக்கொண்டார். மங்கலான வெளிச்சத்தில் காணப்பட்ட அந்த சிறிய அறையே அவருக்குப் போதுமானதாக இருந்தது. இதைவிடச் சிறிய புகை படர்ந்து பிசுபிசுப்புடன் இருக்கும் அறைகளில் கூட துளியும் முகம் சுளிக்காமல் பல காலங்கள் அவர் இருந்திருக்கிறார்.

“சாமி, ரெண்டு நாளா நீங்க எதுவும் சாப்பிடலை. ஏதாவது சாப்பிட வாங்கி வரவா? நீங்க எது கேட்டாலும் வாங்கித் தர சிறை மேலதிகாரி சொல்லியிருக்கிறார்”

அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு அந்த சிறை வார்டன் கடவுளைப் பார்த்துக் கேட்டான்.

“உனக்கு எது பிடிக்குமோ அதையே வாங்கி வா” என்றார் கடவுள்.

“சாமி, சைவமா இல்லை அசைவமா?” என்று கேட்ட வார்டனைப் பார்த்து கண்ணடித்துச் சிரித்தார் கடவுள்.

சிறிது நேரம் யோசித்துவிட்டு “நீ இன்று காலை என்ன சாப்பிட்டாயோ அதுவே போதும் எனக்கு” என்றார் கடவுள்.

தன் இரண்டு கைகளையும் தேய்த்து அதை முகர்ந்து பார்த்த வார்டன் முகம் சுளித்தான்.

அனைத்தும் நொடியில் நடந்தேறி விட்டது. அதுவும் கண் இமைக்கும் நேரத்திற்குள்ளே. இந்தத் தண்டனையைக் கடவுள் எதிர்பார்த்திருந்தார் என்றாலும், அதற்கான தைரியம் தன்னைப் படைத்த மனிதர்களிடம் இருக்காது என்று சிறிது மெத்தனமாக இருந்துவிட்டார்.

கடவுள் சிறைக்கு வந்து இன்றோடு இரண்டு நாட்கள் ஆகிவிட்டது. முதலில் இருந்து நடந்தவைகளை கோர்வைப்படுத்தி மீண்டும் நினைத்துப் பார்த்தார் கடவுள்.

காலை பத்து மணி. கோர்ட் வளாகத்தில் காலையிலிருந்தே மக்கள் குழும ஆரம்பித்து விட்டார்கள். இன்றைக்கு எப்படியும் தீர்ப்பு வந்து விடும் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தார்கள். இதுவரை 107 சாட்சியங்களை விசாரித்த தலைமை நீதிபதி ஒரு முடிவிற்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருந்தார். இது வரை விசாரித்ததில் குற்றத்தை நேரடியாகப் பார்த்ததாக 107 சாட்சியங்களும் ஒப்புக்கொள்ளவில்லை. அனைத்து பத்திரிக்கைகளிலும் இதை முன் கூட்டியே திட்டமிட்டு அரங்கேற்றிய சதிச் செயலாக எழுதியிருந்தார்கள் . ஐந்து வருடங்களாக நடந்து கொண்டிருந்த இந்த வழக்கு இன்றோடு ஒரு முடிவிற்கு வரவேண்டிய கட்டாயத்தில் இருந்தது. குற்றம் இழைத்தவர்களும், அதனால் பாதிக்கப்பட்டவர்களும் அவரவர்களுக்குச் சாதகமான தீர்ப்பை ஆவலும் எதிர்பார்த்திருந்தார்கள். சர்க்கார் வக்கீல் எவ்வளவோ முயன்று வாதிட்டும் குற்றத்தை சாட்சியங்களுடன் நிறுவ முடியாமல் போராடினார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் வக்கீல் இதைத் தன் மைல் கல் வெற்றியாகக் கொண்டாட அனைத்து ஏற்பாடுகளையும் முன்னரே செய்திருந்தார்.

கடைசியாக வாதப் பிரதிவாதங்களைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி ஒரு முடிவிற்கு வந்தார். முதலில் தான் ஏற்கனவே தயாரித்து வைத்திருந்த கோப்பில் இருந்து இந்த வழக்கு குறித்து சுருக்கமாக உரையாற்றினார்.

“தகுந்த சாட்சியங்கள் இல்லாத காரணத்தால் குற்றம் சாட்டப்படவர்களாகக் கருதும் திருவாளர்கள் 1.……………………………2………………………3………”

வரிசையாகப் பெயர்களைப் படித்துக்கொண்டே வந்தார். அதற்கு முன் கடைசி வரிசையில் பொறுமை இழந்த பார்வையாளராக நின்று கொண்டிருந்த கடவுள் யாருடைய அனுமதிக்கும் காத்திராமல் கூண்டில் ஏறி நின்றார்.

வலது கையை வழக்கமாக தான் மக்களை ஆசீர்வதிக்கும் பாணியில் உயர்த்தி சத்திய வாக்குமூலம் கொடுத்தார். “கடவுளாகிய நான் கூறுவது அனைத்தும் உண்மையே. உண்மையைத் தவிர வேறெதுவும் இல்லை.”

வளாகத்தில் இருந்த அனைவரும் அமைதியானார்கள். ஆங்காங்கே சிறிய சலசலப்பு இருந்தாலும் அனைவரின் பார்வைகளும் கடவுளை நோக்கியே இருந்தது.

“ஆறு வயதுச் சிறுமியை வன்புணர்வு செய்து கொலை செய்தவர்கள் இவர்கள்தான். என்னையோ அல்லது நான் அளிக்கும் வாக்குமூலத்தையோ நீங்கள் துளியும் நம்பமாட்டீர்கள் என்று எனக்குத் தெரியும். 107 வலுவில்லாத சாட்சியங்களைக் கடந்து வந்த நீங்கள், அடுத்து உங்களின் எதிரே கூண்டில் நிற்கும் 108 வது சாட்சியாக என்னையும் ஏற்றுக்கொண்டு தயை கூர்ந்து மேற்கொண்டு பேச அனுமதியுங்கள். நான் கூறுவது அனைத்தும் உண்மை”.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு மீண்டும் கடவுள் தொடர்ந்தார்.

“முதலில் நான் தான் கடவுள் என்பதை உறுதிப்படுத்த நீதிபதி அவர்கள் எனக்கு ஒரு சந்தர்ப்பம் அளிக்க வேண்டுகிறேன்”

குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்காக வாதாடும் வக்கீல் உடனே இதை ஆட்சேபிக்க, இடைமறித்து அமரச் சொன்னார் தலைமை நீதிபதி. கடவுளின் கோரிக்கையைக் கேட்ட தலைமை நீதிபதி தலையசைத்து தன் சம்மதத்தைத் தெரிவித்தார்.

“சிறுமியைக் கதறக் கதற வன்புணர்வு செய்து கொலை செய்த இவர்களுக்கு நிர்க்கதியான அந்தச் சிறுமி அனுபவித்த அதே வேதனையைக் சிறிது நேரத்தில் கொடுக்கப் போகிறேன்” என்றார் கடவுள்.

அனைவரும் குற்றவாளிக் கூண்டில் இருக்கும் அனைவரையும் ஒரு சேரப் பார்த்தார்கள். முதலில் ஒருவன் வலி தாங்காமல் கதற ஆரம்பித்தான். மற்றொருவன் தன் நாக்கைக் கடித்து ரத்தத்தை உமிழ்ந்தான். அடுத்தவனோ தாயின் கருவில் இருக்கும் குழந்தை போல உடலைச் சுருக்கி கீழே விழுந்து புரண்டு ஆர்ப்பரித்தான். இப்படியாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் தாங்க இயலாத வேதனையில் அழுது புரள கடவுளை நோக்கி கையசைத்தார் தலைமை நீதிபதி.

முதலில் இருந்து கடைசிவரை ஒவ்வொரு நிகழ்வாக அனைத்தையும் சீராகத் தொகுத்து கடவுள் விவரித்துக்கொண்டே வந்தார். பல இடங்களில் அவரின் குரல் தழுதழுத்ததை தலைமை நீதிபதியும் மற்றவர்களும் கவனிக்கத் தவறாமல் இல்லை. கடைசியாக கடவுளே கண் கலங்குவதைக் காணச் சகியாமல் அனைவரும் வாய் பொத்தி பொங்கி வரும் அழுகையை நிறுத்த அதிகம் போராடினார்கள்.

அனைத்தையும் கேட்டறிந்த தலைமை நீதிபதி குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கான அதிகபட்ச தண்டனையை பரிந்துரைத்து கடவுளையே உற்றுப் பார்த்தார். தலைமை நீதிபதியின் கண்களை நேருக்கு நேராகப் பார்க்கத் துணிச்சல் இல்லாத கடவுள் கூண்டில் மௌனமாக நின்று கொண்டிருந்தார்.

வளாகத்தில் குழுமியிருந்த மக்கள் கைகளைக் கூப்பி தங்களின் நன்றியை கடவுளுக்குத் தெரிவித்துக் கொண்டே அவரைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் அவரைக் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியில் சப்தம் போட்டு அழ ஆரம்பித்தார்கள். விற்பனைக்கான ஒரே யுக்தியுடன் பக்கங்களை நிரப்பும் பத்திரிக்கையாளர்களிடமிருந்து கடவுளைக் காப்பாற்றி தலைமை நீதிபதியின் தனி அறையில் இருக்கச் செய்தார் தலைமைக் காவல் அதிகாரி. அன்று அந்த அறையில் இருக்கும் குளிர்சாதனப் பெட்டி வழக்கத்திற்கு மாறாக அதிக இரைச்சலுடன் ஓடியது.

“பார்த்தீர்களா இந்த அப்பாவி மக்களை. எந்த அளவிற்கு உங்களை இன்றும் முழுவதுமாக நம்புகிறார்கள். உங்களின் கண் எதிரிலேயே அந்தக் கொடுஞ்செயல் நடததேறியிருக்கிறது. ஏன் அந்தச் சிறுமியை உங்களால் காப்பாற்ற முடியவில்லை? இப்போதாவது கூறுங்கள். அந்த அப்பாவிச் சிறுமியைக் காப்பாற்றும் உங்களின் வல்லமையை எந்த சக்தி கட்டிப்போட்டது? உங்களின் முன்னிலையில்தானே அனைத்தும் நடந்தேறியிருக்கிறது? உங்களால் நிச்சயம் தடுத்திருக்க முடியும்தானே? மனிதச் செயலற்ற இந்த கொடூரத்தை கடவுளாகிய உங்களின் முன்னால் நடக்க எப்படி அனுமதித்தீர்கள்? இந்தக் குற்றத்திற்கு நீங்கள் உடந்தையாக இல்லை என்பதை நீங்கள் நிரூபிக்கும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள்”. தலைமை நீதிபதி கைக்குட்டையால் நெற்றியில் துளிர்த்த வியர்வையை துடைத்துக் கொண்டே கடவுளின் பதிலிற்காகக் காத்திருந்தார்.

அமைதியாக விசும்பிக் கொண்டிருந்த கடவுள் எதுவும் கூறாமல் தலைமைக் காவல் அதிகாரியை நோக்கி நடந்தார். மக்களை எப்பொழுதும் ஆசீர்வதித்த தன் உள்ளங்கைகளை வழக்கத்திற்கு மாறாக வானத்தை நோக்கி உயர்த்தி நிர்க்கதியாய் நிற்கும் தன் இயலாமையை உணர்த்தியவாறு சரணடைந்தார்.

அடுத்த நாள் நாளிதழில் வந்த முக்கிய செய்திகள்:

எதிர்க் கட்சிகள் கொடுத்த நெருக்கடியால்தான் கடவுளையே கைது செய்யும் நிலைக்கு ஆளும் கட்சி தள்ளப்பட்டது.

பிணையில் வெளியே வர கடவுள் மறுப்பு. ஆளும் கட்சியின் சதி என்று எதிர்க்கட்சிகள் வெளி நடப்பு.

விரைவில் மீண்டும் தேர்தலை எதிர்பார்க்கலாம்.

தானியங்கி காசு வங்கியில் பணப் பற்றாக்குறை. வழக்கம் போல மக்கள் அவதி.

- பிரேம பிரபா