நான் ஏறிய நிறுத்தத்திலிருந்து எட்டாவது நிறுத்தத்தில் ஏறினான் அவன். அந்தப் பேருந்தில் பல இருக்கைகள் காலியாக இருந்தன. ஏறியவன் சுற்றுமுற்றும் பார்த்தான். கடைசியாக என்ன நினைத்தானோ தெரியவில்லை. எனக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்துகொண்டான். வேகமாகவும் மெதுவாகவும் தேவைப் படும்போது ஹாரன் ஒலியை எழுப்பிக் கொண்டும் போய்க்கொண்டிருந்தது அந்தப் பேருந்து. முன்னும் பின்னும் பல வாகனங்கள் கடந்து போய்க்கொண்டிருந்தன. இரண்டு சக்கர ஓட்டிகள் அந்தப் பேருந்தை மிகவும் வேகமாகக் கடந்து போய்க்கொண்டிருந்தார்கள். பல நேரங்களில் அவர்களைப் பார்க்கும்போது எனக்குத் தோன்றும் நாமும் ஒரு பைக் வாங்கிவிடலாம் என்று. இருந்தாலும் அந்த மாதத்தின் ஒன்றாம் தேதிதான் எனது நிதிநிலைமையே எனக்கு நினைவிற்கு வரும். பிறகு பைக் கனவு பறந்துபோய்விடும். நான் ஓட்டுநரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் அந்தப் பேருந்தை ஓட்டிச்செல்லும் லாவகத்தை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன்.

பல நேரங்களில் என்னையும் ஒரு ஓட்டுநரைப் போல கருதிக்கொண்டு மனதிற்குள்ளேயே ஒரு வண்டியை ஓட்டிக்கொண்டு செல்லக்கூடியவன் நான். அப்படித்தான் என் கவனம் முழுவதும் ஓட்டுநர் மேல் குவிந்திருக்கும். இந்த காரணத்திற்காகவே எவ்வளவு கூட்டமிருந்தாலும் அவர்களை முண்டியடித்துத் தள்ளிவிட்டு ஓட்டுநருக்குப் பக்கத்தில் இருக்கும் சீட்டிற்கு குறிவைக்கும் பழக்கம் எனக்கு எப்போதும் உண்டு. இன்றைக்கு என் கவனத்தையெல்லாம் பக்கத்தில் இருந்தவன் திருப்பிவிட்டான். அவனது சோகம் படிந்த முகம் அவனை என்னைக் கவனிக்க வைத்தது. அவனது மனதிற்குள் ஏதோ பிரச்சினை ஓடிக்கொண்டிருந்ததை அவன் முகம் தெளிவாக எனக்குக் காட்டியது. அவனிடம் என்ன பிரச்சினை என்று கேட்கத் துடித்துக்கொண்டிருந்தன என் உதடுகள். இருந்தாலும் ஏதோ தடுத்தது. அவன் கையில் ஒரு சிறிய பாட்டிலை வைத்திருந்தான். அதில் ஏதோ ஒரு மருந்து திரவத்தன்மையில் இருந்தது. அவன் உடுத்தியிருந்த ஆடை கொஞ்சம் அழுக்கேறிதான் இருந்தது. காலையில் குளித்திருக்க மாட்டான் என்பதை அவன் மீதிருந்து வந்த வியர்வை வாடை வெளிப்படுத்தியது. இப்போது காலியாய்க் கிடந்த ரோட்டைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வேகத்தைக் கூட்டி இயக்கிக்கொண்டிருந்தார் ஓட்டுநர். எப்படியும் அலுவலகத்திற்குப் பத்து நிமிடத்திற்கு முன்பாகவே போய்விடலாம் என்ற நம்பிக்கை எனக்குள். என் பக்கமாகத் திரும்பிய அவன்,

            “யார் செஞ்சாலும் தப்பு தப்பு தான்னே” என்றான்.

            “ஆமாம்”

            “அது அம்மாவா இருந்தாலும் தானே”

            “….ஆமா..அதுல என்ன சந்தேகம்”

            “தப்பு செய்யிறவங்கள மன்னிக்கலாமா?”

            “கண்டிப்பா… மன்னிக்கலாம். மன்னிக்காம இருந்தாதான் தப்பு…”

கேள்வி கேட்பதைச் சற்று நேரம் நிறுத்திய அவனது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. தூங்கி எழுந்து அப்படியே முகம் கூட கழுவாமல் வந்திருக்கிறான். அவன் கண்களில் இருக்கும் அழுக்கும் சேர்ந்து கண்ணீரில் கலந்து வந்து முகத்தில் ஒட்டிக்கொண்டிருந்தன. காலையிலிருந்து பலமுறை அழுதிருக்கிறான் என்பதை மட்டும் என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. கண்களைத் தனது சட்டை நுனியால் துடைத்துக் கொண்டவன் மீண்டும் பேசத் தொடங்கினான்.

            “அப்பா செத்து ரெண்டு வருஷமாச்சிணே!”

            “……”

            “அம்மா தொல்ல தாங்க முடியல”

            “என்ன?...தொல்ல”

            “தெனமும் ஒருத்தன்”…கதறினான் அவன். அவன் தோள்மீது எனது வலது கை விழுந்தது. அவனை அமைதிப்படுத்த முயன்றேன். கட்டுப்படுத்திக்கொண்டான். இருந்தாலும் அவன் உடம்பெல்லாம் குலுங்கிக் குலுங்கி நடுங்கியது. அவன் சொல்ல வந்தது எனக்கு எளிதாகப் புரிந்துவிட்டது. அதற்குமேல் எனக்கு அவனிடம் கேள்வி கேட்க விருப்பமில்லை. அவனும் நான் புரிந்துகொண்டதை உணர்ந்துகொண்டான். ஆனாலும் தனது பேச்சைத் தொடங்கினான்.

            “எனக்கு வாழ விருப்பமில்லைணே”

            “எதற்கு?... நீ சாகனும்…”

            “இனிமே எங்கம்மா மொகத்துல முழிக்க முடியாது….அதனாலதான்”

            “அதுக்கு செத்துப்போறதுதான் தீர்வா”

            “……..”

            “ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒருத்தன் செத்துப் போகணும்னு முடிவெடுத்தா…         இந்த உலகத்துல மனித இனமே இருக்காது தெரியுமா”

            “பெத்தவ என் கண்ணெதிர்லயே…தப்பு பண்ணத என்னால மறக்க முடியல”

            “உனக்கு தப்பா தெரியுறது…அவுங்களுக்கு சரினும்போது நீதான்       ஒதுங்கிக்கணும்”

            “அதெப்பிடி முடியும்”

            “எங்கப்பாவுக்கு அவுங்க துரோகமில்ல பண்றாங்க”

            “செத்துப்போனவருக்கு எப்படிப்பா துரோகம் பண்ணமுடியும்?” அவனால் பதில் சொல்ல முடியவில்லை. கையிலிருந்த அந்த பாட்டிலையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தான். மீண்டும் தொடர்ந்தேன்.

            “உங்கம்மாவ பிடிக்காட்டி எங்காச்சும் கண்காணாத இடத்துக்குப் போய்       பொழச்சிக்கோ…அத விட்டுட்டு அவங்க உணர்ச்சியைக் கட்டுப்படுத்த           நினைக்கிறது            முட்டாள்தனம்”

            “அப்ப அவுங்க செய்யிறது நாயமா?...”

            “உன்னளவில நியாயம் இல்லதான்… இருந்தாலும் உணர்ச்சின்னு ஒன்னு    இருக்கே… அதனாலதான நீ இப்படி வருந்துற…”

அந்தப் பேருந்து நான் இறங்க வேண்டிய நிறுத்தத்தை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது. அவனை என்னால் முடிந்தவரை சமாதானப்படுத்திவிட்டேன். இதற்குமேல் அவன் வாழ்க்கை அவன் கையில்தான் என்று நினைத்துக்கொண்டேன். பக்கத்திலிருந்தவனை விலக்கிக்கொண்டு வெளியில் வருவதற்கு முன் அவன் சொன்னான் ‘நான் சாவத்தானே போறேன்…’ எனக்கு இதற்குமேல் என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவன் கூடச் சென்று அவனை சாகவிடாமல் தடுக்கலாம் தான். என் அலுவலகத்தில் எத்தனையோ கோப்புகள் என் கையொப்பங்களுக்காகவும் பரிந்துரைகளுக்காகவும் காத்துக்கிடக்கும்போது சாத்தியமாகக் கூடிய காரியமல்ல என்பது எனக்குத் தெரியும். இவனைப் போன்றவர்களுக்குப் பாடமெடுப்பதற்கு ஒருநாள் மட்டும் போதாது என்றும் தோன்றியது எனக்கு. இவன் தனது தாயை நேரில் பார்த்துவிட்டதால் இப்படிப் பொங்குகின்றான். எத்தனையோ சம்பவங்கள் இலைமறைக் காய்மறையாக நடந்துகொண்டுதான் இருக்கின்றன. யார் கட்டுப்படுத்தமுடியும் உணர்ச்சிகளை. உணர்ச்சிகளை உணச்சிகளால் கட்டுப்படுத்திவிட முடியுமா என்ன.

            பேருந்தை விட்டு இறங்கி என் அலுவலகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன கால்கள். ஒருவேலையும் ஓடவில்லை. அவன்மீதே என் நினைவெல்லாம் சுற்றித் திரிந்துகொண்டிருந்தன. வீட்டிற்குப் போகும்போது ஒரு செய்தித்தாளை வாங்கிப் புரட்டிப் பார்த்தேன். அவன் சொன்னதைப் போன்றோ நான் நினைத்ததைப் போன்றோ எதுவும் செய்தியில்லை. நிம்மதிப் பெருமூச்சு விட்டது என் மனம்.

- சி.இராமச்சந்திரன்