அட்டைப்பெட்டிக்குள்ளேயிருந்து புதிய பென்சில் ஒன்றை உருவி நீட்டினேன். “இதோட லாஸ்ட்டு, இனிமேலு தொலைஞ்சுபோச்சு கானோம்-னு வந்து நின்னு கதை சொல்லிட்டு இருந்த பிச்சுப்போடுவேன் பாத்துக்க..” இந்த கல்வியாண்டு துவங்கியதிலிருந்து இது எத்தனையாவது பென்சில் என்று கணக்கு சொல்ல முடியாது. சிலநாள் பத்திரமாக வரும், அல்லது சீவி சீவி கரைந்து சிறியதாகி வரும், இன்னும் சில நாட்கள் பென்சில், ரப்பர், ஸார்ப்பனர் என்று அனைத்தையும் தொலைத்துவிட்டு வருவான்.

village father and sonமாலையில் வீட்டுப்பாடம் எழுதும்போதோ காலை பள்ளிக்கு கிளம்பும்போதோ இல்லை என்று தெரிந்தாலும் புத்தகப்பையிலிருந்து அலமாரி முதல் அடுப்படிவரை இங்குமங்கும் மாற்றி மாற்றி ராவிக்கொண்டிருப்பான். கடைசியாக என்னிடம் வந்து நிற்பான். தொலைந்துபோன பொருட்களின் விசாரனையோடு வசவோ கூடப்போனால் இரண்டொரு அடியோ தந்துவிட்டு பென்சிலையோ ரப்பரையோ மீண்டுமாய் கொடுத்தனுப்புவேன்.

“சொன்னது யாபகம், புதூ பென்சிலு சாயங்காலம் பத்தரமா கொண்டுவரனும். சரியா..!” பள்ளிப்பேருந்துக்கு நேரமாகிவிட்டது. நானும் வேலைக்கு கிளம்பனும். நிமிந்தாள் ரவியும் வந்துவிடுவான்.  “ஏய் வாங்கப்பா” இரண்டாம் வகுப்பு படிக்கும் அவனையும் பாப்பாவையும் அழைத்துக்கொண்டு அவசர கதியாக நிறுத்தத்திற்குப்போக சரியாக இருந்தது. திரும்பி வரும்போது வெளித்திண்ணையிலே ரவி காத்திருந்தான். “ரெண்டு நிமிசம் சாப்புட்டு வந்துர்ரேன்”

அவள் பொறித்து வைத்திருந்த பூரியை குருமா கலந்து அவதியாய் அள்ளிப்போட்டுவிட்டு சாமான்களை ஒவ்வொன்றாக வெளியே எடுத்து வைத்தேன். மட்டக்கம்பு, தட்டு மண்வெட்டி, டைல்ஸ்கட்டர், கரண்டிசாமான்பை அனைத்தையும் பைக்கிலே இடுக்கிக்கொண்டு ரத்தினாநகர் புறப்பட்டோம். “ போய்ட்டு வாரேம்ப்பா”

முன்புற டேங்க்கவரின் மேலே ஒரே பொதியாய் கட்டிவைக்கப்பட்ட சாமான்பை ஒரு நிலையில்லாமல் உளைந்துகொண்டே வந்தது. வண்டியை ஓட்டிக்கொண்டே பை-யை சரிசெய்யும் ஒவ்வொரு முறையும் அதிலே ஏதோ ஒன்று குறைவதுபோன்ற உணர்வில் மனம் நிறைவில்லாமலே இருந்தது.

கட்டிடம் எங்களுக்காகவே டைல்ஸ் ஒட்டக் காத்துக் கிடந்தது. வாட்ச்மேன் வரவேற்றார். மணல் சலிக்க, கல்லுகளைப் பிரித்தெடுக்க, போனது வந்தது குப்பை கூளங்களை அள்ளிப்போட்டுவிட்டு தளங்களை ரசமட்டம் பார்த்து முடித்து பாத்ரூமிலே டைல்ஸ் ஒட்டுவதற்கான வேலையைத் துவங்க மணி பனிரெண்டாகிவிட்டது.

பதினாறு தட்டு மணலுக்கு ஒருமூடை சிமெண்ட். பூச்சுக்கான கலவை போட்டு பாத்ரூம் சுவரிலே அப்பியாகிவிட்டது. மட்டக்கம்பால் உரசிவிட்டு மணியாஸ்கட்டை போடுவதற்காக பையிலே தேடியபோதுதான் அது இல்லாதது தெரியவந்தது. “நல்லா பாருப்பா ரவி”

“எல்லாத்தையும் கீழகொட்டி பாத்துட்டேன். இல்லண்ணே.. வீட்ல ஏதும் வச்சுட்டீங்களா..?”

“இல்லையேப்பா போனவாரம் போடியில வேலை முடிச்சுட்டு பையகட்டி எடுத்துட்டு வந்ததுதான. அப்படியேதேன் தூக்கிட்டு வந்துருக்கோம்”

“அப்ப மணியாஸ போடியிலயே போட்டுட்டீங்களா..”

“ஜயய்யோ.. நாந்தான சாமான எடுத்துவச்சேன். எப்புடிப்போச்சு.!”

மற்றநாட்களில் வேலை முடிகிறபோது நிமிந்தாள்தான் பொருப்பாக எல்லாபொருட்களையும் எடுத்துவைப்பார். “உளி சுத்தியல மறந்துராத.. கரண்டி மொத்தம் ஆறு, தூக்குகுண்டு லெவல்டீப்பு கரெக்டா இருக்கா” மீண்டும் மீண்டும் நான் கேட்கும்போது “ண்ணேய் எல்லாஞ்சரியா இருக்கு. எடுத்து வச்சுட்டேன். வேனும்னா செக்பண்ணிகோங்க.”-னு சொல்லுவான்.

ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை வேலை முடிந்து கிளம்புகையில் சாமான்களை ஒன்றினைத்து நான்தான் பைக்கட்டை நிரப்பினேன். எல்லாம் இருக்கிறது அந்த மணியாஸ்கட்டை மாத்திரம் எப்படி விடுபட்டது என்று தெரியவில்லை. சுவர் பூச்சுக்கு அது இல்லாமல் சுத்தப்படாது.

டைல்ஸ் ஒட்டுவதற்கு மாத்திரமல்ல , கட்டிடத்தின் பூச்சுவேலைகள் அனைத்திற்கும் மணியாஸ்கட்டை இன்றியமையாதது. கலவையை சுவற்றிலே அப்பியபின்பு மட்டக்கம்பு மூலமாக மட்டமாக உரசுவோம். பின்பு சின்னஞ்சிறு சொட்டைகளை அடைத்துவிட்டு அல்லது மட்டி காய்ந்திருந்தால் மீண்டும் கலவையை தண்ணியாக வாரியடித்துவிட்டு இந்த மணியாஸ்கட்டை கொண்டு பக்குவமாக சுற்றி தேய்ப்போம். அப்பொழுது பதமாக இருக்கும் சுவரில் உள்ள சின்னஞ்சிறு மேடுபள்ளங்களும் திகட்டல்களும் நீங்கி மட்டமாகும். மேலும் சிமெண்ட் தளம் போடுவதற்கும் பார்டர்கள் கட்டுவதற்கும் படிக்கட்டுகள் பூசுவதற்குமென கொத்துக்கரண்டிக்கு அடுத்தபடியாக இது அத்தியாவசியமான ஒன்றாய் இருக்கிறது.

பாக்கெட்டிலிருக்கும் கைபேசிபோல கொத்தனாரின் சாமான் பட்டியலிலும் என்றும் நீங்கா இடம்பெற்றிருக்கும் இந்த மணியாஸ்கட்டை. ஈரோடு, சென்னை மற்றும் சில பகுதிகளில் இதனை கைக்கட்டை எனவும், இன்னும் சில இடங்களில் தேய்ப்புப்பலகை என்றும், கேரளப்பகுதிகளில் கைப்பாணி எனவும் சொல்லுவர். தேனி, அல்லிநகரம், போடி, பெரியகுளம், ஆண்டிபட்டியான எங்கள் சுற்றுப்புறங்களில் இதை மணியாஸ்கட்டை என்றே சொல்லுவோம்.

தொலைந்ததைத்தவிர பழையதும் தேய்ந்ததுமான மேலும் இரண்டு மணியாஸ்களும் என்னிடத்தில் உண்டு. அவை பெரும்பாலும் வீட்டிலேதான் கிடக்கும். தற்சமயம் வேலை துவங்கியாயிற்று வீட்டிற்குப்போய் எடுத்து வருவதென்பது ஆகாத காரியம். அருகிலேயே வேறு கட்டிட வேலைகளும் நடக்கிறது. இன்று ஒருநாளைக்கு அவர்களிடம் இரவல் கேட்டால் தரமாட்டேனென்றா சொல்லப்போகிறார்கள்.

“ரவி பக்கத்து கட்டடத்துல போயி கொத்தனாருகிட்ட கேட்டு ஒரு மணியாஸ் வாங்கிட்டு வா. மட்டி அடிச்சுட்டு குடுத்துரலாம். நாளைக்கு வீட்ல இருக்கறத எடுத்துக்குவோம்.”

அவனும் இரவல் வாங்கிவர வேலை நடந்தது. பூசப்பட்ட பாத்ரூம் சுவர்கள் டைல்ஸ் கற்களால் அலங்காரம் பெற்றுக்கொண்டிருந்தன. பொதுவாக வேலை செய்வதற்கான பொருள் ஏதாவது தொலைந்தாலோ, திருடு போனாலோ பலநாட்கள் மனம் அதை எண்ணி ஏங்கித்தவிக்கும். ஆரம்ப காலங்களில் கைலிவேஷ்டியுடன் சேர்த்து சாமான்பையே கூட காணாமல் போயிருக்கிறது. அப்பொழுதெல்லாம் இந்த மனநிலை இருந்ததா என ஞாபகமில்லை. ஆனால் இப்போது போடியிலே தொலைத்துவிட்டு வந்த மணியாஸ்கட்டையை நினைக்கையில் மனசு சற்றே வலிக்கத்தான் செய்கிறது. பலவருடங்களாக பத்திரமாக கூடவே கிடந்தது.

ஏழு வருடங்களுக்கு முன்பு அல்லிநகரம் அக்ரகாரத்திலே ஒரு கட்டிடத்திலே மார்பில் பதிக்கிற வேலை. அப்பொழுது அங்கே கார்பெண்டர் சீனிவாசனும் இருந்தார். நிலை ஜன்னல்களுக்கு கதவு செய்யும்படி மரச்சக்கைகளை இழைத்து ராவி காடியெடுத்து ஒன்றிணைத்துக் கொண்டிருந்தார். புதிய பழக்கமாக இருந்தாலும் டீ குடிக்கும்போதும், மதிய உணவின்போதும் “வாங்கணே சாப்டலாம்” என்று நட்போடு அழைப்பார்.

நட்பை வளர்த்துக்கொண்ட நாங்கள் வேலையின் இடையிடையே அவ்வப்போது தொழில் பற்றியும், பிற காரியங்கள் குறித்தும் சுவாரஸ்யமாய் பேசிக்கொள்வோம். பலஜாதி மரங்களும், நீளச்சக்கைகளும், துண்டுப்பலகைகளும் அவரின் கைவேலையில் நிலை ஜன்னல்களாக, கதவுகளாக மேலும் அழகிய வேலைப்பாடாக மறுவாழ்வு பெறுவதைப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

கார்பெண்டர் ஒருவர் கிடைத்துவிட்டால் போதும். கொத்தனார்களாகட்டும், நாங்களாகட்டும் “அண்ணே ஒரு மட்டக்கம்பு ரெடிபண்ணிக் குடுங்க.. மணியாஸ்கட்ட செஞ்சு குடுங்கு.. முக்காளி ஒன்னு போட்ரலாமா” என இயல்பாகவே கேட்டுவிடுவோம். மார்பில் கிரானைட் வேலைகளின்போது பலர் என்னிடம் வந்து ‘சப்பாத்திக்கல்லு வேனும், சோப்பு வைக்க கல்லு ஒண்ணு வெட்டி குடுங்க’ என்று கேட்டு வாங்கிப்போவதும் உண்டு.

அப்படி அக்ரகாரத்திலே வேலைசெய்யும்போது ஒருநாள் “சீனிவாசன்ணே உங்க பேர் சொல்றமாதிரி ஒரு மணியாஸ்கட்டை செஞ்சு குடுங்கண்ணே..” எனக் கேட்டிருந்தேன். “அப்புடியா போட்ருவோம்” என இசைந்த அவர் ஒருநாள் மதிய உணவு இடைவேளையின்போது அறுத்துப்போடப்பட்ட ஒரு தேக்குமரத்துண்டிலே அழகாக அதை செதுக்கலானார்.

ஒரு அடி நீளமும், ஐந்து அங்குலம் அகலமும், ஒரு அங்குலம் கனமுமாயிருந்தது. முன்புறத்திலும் பக்கவாட்டிலும் நன்றாக இழைத்து அனைத்து முனைகளையும் மலுங்க உருட்டினார். பின்புறத்திலே கைப்பிடிக்கு வசதியாக சரியாக நடுமையத்திலே நீளவாக்கில் இரண்டு அங்குல உயரத்திலே இருபுறத்திலும் சாய்ந்து வளைவாக வெட்டிய  கட்டை ஒன்றையும் பொருத்தினார். வேலைப்பாடு முடிகையில் கனமாகவும், கச்சிதமாகவும், அழகாகவும் இருந்தது. “இந்தாங்க புடிங்க தலைவரே... நீங்க கேட்ட மணியாஸ்.. வைரம்பாஞ்சகட்ட காலகாலத்துக்கு கெடக்கும். பத்தெரமா வச்சுக்குங்க.” எனப் பெருமிதத்தோடு கொடுத்தார்.

புதுச்செருப்பு கடிக்கும் என்பதுபோல புதிதாக இழைத்த மட்டக்கம்பானாலும் மணியாஸ்கட்டையானாலும சரி, பூசிய மட்டி வெட்டத்தான் செய்யும். மணலிலேயும் சுவற்றிலேயும் போட்டு கரகரவேன நான்கு இழுப்பு இழுத்தால் எல்லாம் சரியாக வரும். கார்பெண்டர் சீனிவாசனின் மணியாஸ்கட்டையும் அப்பயிற்ச்சிக்குப்பின் கட்டிடம் கட்டிடமாக நல்ல உழைப்பு உழைத்தது.

இன்றுவரை அவரின் பெயர் சொல்லும் படியாக இத்தனை ஆண்டுகள் வேலைக்குத் தோதுவாக என் கைக்குப் பழகிய மணியாஸ்கட்டை இப்போது இல்லாமல்போனது துரதிர்ஷ்டம்தான். போடியிலிருந்து கிளம்பிவந்து நான்குநாட்களாகிவிட்டது. அங்கே கிடக்கும் என்று உறுதியாய் சொல்ல முடியாது. இருக்கலாம் அல்லது வேறொருவருடையது என்றெண்ணி யாராவது எடுத்துச் சென்றிருக்கலாம். இல்லாமலேகூட போகலாம். இனி என்ன செய்வது. அதற்காக பைக்கிலே நூறு ரூபாய்க்கு பெட்ரொல் போட்டு போய்வர முடியுமா..! இல்லை ஒருநாள் பிழைப்பைக் கெடுத்து பேருந்தில் பிரயாணப்பட்டுப் போய் நேரத்தை வீணாக்க முடியுமா! போனது போனதுதான். ஒருவேளை என்றைக்காவது ஒருநாள் எதிர்பாராமல் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

இன்றையநாள் இரவலில் வேலை நடந்துவிட்டது. நாளைக்கு மறக்காமல் வீட்டிலிருப்பதை எடுத்து வரவேண்டியதுதான்.

“ரவி நாளைக்கு நீ நேரா கட்டடத்துக்கே வந்துரு. வந்து ட்ரம்முல டைல்ஸ்ஸ ஊறப்போட்டுட்டு கலவய கிலவய ரெடி பண்ணிவை.. அப்பறம் இன்னொன்னு காலைல நீ கௌம்புரப்போ எனக்கு ஒரு போன் போட்டு யாவகப்படுத்து.. மணியாஸ எடுத்துட்டு வந்துர்ரேன்.”

மறுநாள் காலை பிள்ளைகளை பள்ளிக்கு கிளப்பும் பரபரப்பு. “யூனிபார்ம்  போடுங்க.. டை பெல்ட் எங்க.. ஐ-டி கார்ட மறந்துராம போட்டுக்கங்க.. டேய் பேக்க ரெடிபண்ணிட்டியா? அங்க என்னடா பண்ற..  அம்மாகிட்ட டைரியில கையெழுத்து வாங்கிட்டீங்களா இல்லையா.. எடு சீக்கிரம் சாப்டுங்க பஸ் போயிறப் போகுது.” இயந்திர கதியான வாழ்க்கையில் அனுதின காலைகளில் பிள்ளைகளைக் கத்தி விரட்டும் அதே வசனங்கள்.

கிளம்புவதற்குத் தயாரானவன் டைரியை விரித்து தயங்கி, தயங்கி என்னிடம் நீட்டினான். “என்னடா கையெழுத்தா? பதில் பேசுடா எதுக்கு உம்முன்னு பாத்துக்கிட்டு நிக்குற.!” வாங்கிப்பார்த்தேன். ஏற்கனவே அவள் கையெழுத்து போட்டிருந்தாள். ஆனால் அதற்கு மேலே சிவப்பு மையிலே அவனது வகுப்பாசிரியர் ஒன்றை எழுதியிருந்தார். அதிலே...

‘Dear parents,                                                                                                         kindly send pencil everyday’ என்றிருந்தது.

“ஏம்பா என்னா எழுதியிருக்காங்க!” அடுப்படியிலிருந்த அவளை நோக்கினேன்.

“ம் டெய்லி பென்சில் குடுத்து விடவாம். நேத்து பென்சில் இல்லாம அவங்க மேக்ஸ் மிஸ்கிட்ட திட்டு வாங்கியிருக்கான். கேளுங்க அவெங்கிட்ட”

“என்னாது பென்சிலு இல்லையா?” வேகமாய் விட்ட சத்தத்தில் மீண்டும் பள்ளிப்பையை திருதிருவென முழித்துக்கொண்டு ராவினான். “நேத்து ஸ்கூலுக்குப் போகும்போதுதானடா ஒரு புதூ பென்சிலு குடுத்துவிட்டேன். அதுக்குள்ள என்னடா செஞ்ச? எங்க போட்ட  சொல்றா” கடுங்கோபம் தலைக்கேறியது. அடிப்பதற்கு கை முணுமுணுத்தது. “சொல்லுடா எங்க போட்ட” பயந்து பின்னாடியே மெதுவாய் போனான்.

“இப்ப கொஞ்ச நேரத்துல ஒன்னய நல்லா வெளுத்தப்போரேன் பாரு. பென்சிலு என்னா மரத்துலயா காய்க்கிது. இல்ல உங்கப்பனும் தாத்தனும் பென்சிலு பேக்டரி ஏதும் வச்சிருக்காங்கன்னு நெனைச்சியா.. ஒரு நாளாவது உருப்படியா கொண்டு வந்துருக்கியாடா. வாடா பக்கத்துல” விளாசிய கை அவனது தோள்பட்டையில் சுரீரென பட்டது.

கண்ணீர் பொங்க ஆ-வென சத்தமிட்டு இரு கைகளையும் என் முகத்துக்கு நேராக அசைத்தபடி “வேண்டாம்பா வேண்டாம்பா”-என அழுதான்.

“அழுகாதடா.. எங்கடா போட்ட? வாடா பக்கத்துல” மீண்டுமாய் அடிக்க கை ஓங்கினேன். அந்தநேரம் கைபேசி இசைத்தது. ‘ரவி காலிங்’ எதுக்கு இன்னேரம் ஃபோன் போடுறான். லீவ கீவ போட்டுட்டானோ? படுபாவிப்பய..

“அலோ என்னா ரவி!” பரபரப்புடன்.

“அண்ணே மணியாஸ்கட்டைய மறந்துராதீங்க. இன்னைக்கு பக்கத்துல யாரும் வேலை பாக்கல. ஓசி வாங்க முடியாது. ஞாபகப்படுத்த சொன்னீங்கள்ல. நா நேரா கட்டடத்துக்குப் போரேன். வச்சுரவாண்ணே”

‘ஓ! அதுக்கா நல்லவேளை’ மணியாஸ்கட்டையொன்றை எடுத்து பைக்கின் பக்கவாட்டுப் பெட்டியிலே போட்டுவிட்டேன். தாமதித்தால் மறந்துகூட போய்விடலாம்.

“ஏய் என்னப்பா செய்றீங்க. பஸ்-க்கு நேரமாச்சு சீக்கிரமா வாங்க போகலாம்” பள்ளிப்பையை தோளில் மாட்டிக்கொண்டு கண்ணீர் வடிய பைக்கின் அருகே போய் நின்றிருந்தான் பையன். பார்க்க ஒரு மாதிரியாக இருந்தது.

‘வருசக்கணக்குல வச்சு வேலை பாத்த பொருளயே மறந்து எங்கயோ போட்டுட்டு வந்து பொலம்புற.. பாவம் பச்சப்புள்ள, விளையாட்டுப்பய தெரியாம தொலைச்சிட்டு வந்ததுக்கு இப்புடி போட்டு அடிச்சு வஞ்சிக்கிட்டு கெடக்குற. தொலைக்கனும், பள்ளிக்கூடத்துலயும் ஓங்கிட்டயம் பேச்சு வாங்கனும்னு அவனுக்கென்ன ஆசையா! வளர வளர விவரந்தெரிஞ்சா எல்லாஞ்சரியாப் போயிரப்போகுது’

சிறு வயதிலே நானும் இதுபோல் பள்ளியிலே வாட்டர்பாட்டில், சாப்பாட்டு பாத்திரமெல்லாம் தொலைத்து வந்திருக்கிறேன். அப்போது அம்மாவிடம் செமக்க அடி வாங்கியது, பாட்டி வந்து விலக்கி கண்ணீரை துடைத்துவிட்டு கடைக்கு அழைத்துச் சென்றது, மிட்டாய் வாங்கிக் கொடுத்தது எல்லாம் நினைவில் வந்து போனது. மனசு உறுத்தியது.

பேருந்து வருவதற்கு நேரம் நெருங்கியது. பைக்கை எடுப்பதற்குமுன் வேகமாய் உள்ளே சென்று பீரோவைத் திறந்து கையிருப்புக்குத் தயாராக வாங்கி வைக்கப்பட்டிருந்த புதிய பென்சில்களில் ஒன்றை அட்டைப் பெட்டிக்குள்ளேயிருந்து உருவிவந்து அவன்முன்னே நீட்டினேன். “ஸாரிப்பா அப்பா அடிச்சதுக்கு"

- மொசைக்குமார்

(நன்றி: வண்ணக்கதிர்)