வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் பலதரப்பட்ட சோதனைகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் எனக்கு இப்படி 'தேங்காயில்' ஒரு சோதனை எழும் என்று எண்ணியதில்லை. வீட்டு உபயோகத்திற்காக எத்தனையோ சாமான்கள் கடைகளிலிருந்து வாங்கி வருகிறேன். பிரச்சினைகள் பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால் தேங்காய் வாங்கும்போது மட்டும் ஏன் இப்படி ஓர் போராட்டம்?

man worriedதினமும் வாழ்வில் பொருளாதாரப் போராட்டங்களுக்கு கூட முடிவு எட்டி விடுகிறது; காலம் கனிந்து விடுகிறது. ஆனால் நான் தாலி கட்டிய தாரத்துடன் தேங்காய் பிரச்சினையில் 'காய்' விட வேண்டியதிருக்கிறது என்பதுதான் வேதனை.

உருளை வடிவில் பெரியதாய் தேங்காய் வாங்கி வந்தால், " துவையல் அரைப்பதற்கு ஏன் இப்படி முத்தலாய் தேங்காய் வாங்கி வந்திருக்கிறீர்கள்? கொஞ்சம் இளசலாய் வாங்க கூடாதா?" என்பாள் என் மனைவி. அதே ஞாபகத்தில் இன்னொரு சமயம், கொஞ்சம் சின்னதா வெள்ளையாய் காய் வாங்கி வந்தால், " ஏன் இப்படி இளசாய், வழுக்கையாய் வாங்கி வந்திருக்கிறீர்கள்? வெறும் தண்ணீர்தான் இருக்கிறது. காய் கொஞ்சம் கருப்பாய், பெரியதாய் இருப்பதாய் பார்த்து வாங்கத் தெரியாதா?" என்பாள்.

அதையே நினைவில் வைத்துக்கொண்டு அடுத்தமுறை அதே மாதிரி ஒரு தேங்காயை வாங்கி வந்தால், " ஏன் இப்படி அழுகியதாய்ப் பார்த்து வாங்கினீர்கள்? தேங்காயின் கண்கள் மூடியதாய் குடுமி உள்ள காயாகப் பார்த்து வாங்கியிருக்கக் கூடாதா?" என்று குரலை உயர்த்துவாள். அப்படியே ஒரு காயை அடுத்த தடவை வாங்கி வந்தால், "ஏன் உங்கள மாதிரியே முகம் நீண்ட காயாய் வாங்கிட்டு வந்திருக்கீங்க? கடைக்காரன்கிட்ட நல்ல காயாய் கேட்டு வாங்கி வரவேண்டியதுதானே?" என்று வதைப்பாள்.

இன்னொருமுறை கடைக்குச் சென்றபோது, "அண்ணாச்சி! ஒரு நல்ல தேங்காயை நீங்களே பார்த்து எடுத்துக் குடுங்க அண்ணாச்சி."

அவரும் ஒரு காயை கையிலே உருட்டி, உருட்டிப் பார்த்து , விரல் மடக்கி நகத்தால் 'டொக்...டொக்குன்னு நல்லா சத்தம் வருவது மாதிரி தேங்காயைக் கொட்டிப் பார்த்துக் கொடுத்தார். 'அப்பாடி' என்று ஒரு திருப்தியுடன் வீடு வந்து என் மனைவியிடத்தில் கொடுத்தேன். அந்தக் காயை வாங்கி ஒடைச்சவ, "மாசக் கணக்கு ஸ்டாக்குல கெடந்த அழுகுன காயை ஒங்க தலையிலக் கட்டிட்டாரு அந்த அண்ணாச்சி." என்று அவருக்கும் சேர்த்து அபிஷேகம் பண்ணினாள்.

நானும் கண்ணதாசன் எழுதிய, 'அத்திக்காய் ....காய்...காய் ; ஆலங்காய் வெண்ணிலவே!' என்ற பாடலையும் ஒருமுறை கேட்டுப் பார்த்தேன். ஆனாலும் தேங்காய்க்கு எந்த விமோசனமும் கிடைக்க வில்லை.

எம்மனசுல என்னென்னவோ ஓடுது. கல்யாணத்துல தாலி கட்டி முடிஞ்சதுக்குப் பின், மாப்பிள்ளையும் பொண்ணும் தேங்காயை உருட்டி, உருட்டி விளையாடற சடங்கு ஒண்ணு இருக்குதே. அந்த சடங்கை கல்யாணத்துக்கு பொண்ணுப் பார்க்க வாரப்பவே தேங்காயை உருட்டி நல்ல தேங்காயான்னு சோதிச்சுப் பழகியிருக்கலாம். இப்படியெல்லாம் சொல்றதுனால எம்பொண்டாட்டி ரொம்ப மோசமானவன்னு நெனச்சுடாதீங்க. அவ என்னவோ பிரியசகிதான். ஆனா தேங்காய் பிரச்சினையில மட்டும் என்னவோ பிரிவினையாகி விடறது.

என் அலுவலகத்துலகூட சில விவாதங்களின்போது "யோவ்! நீ எதையும் தேங்காயை உடைக்கிற மாதிரி பட்...பட்டுன்னு சொல்லிடுறயா, எங்களுக்கெல்லாம் அது முடியல்ல" என்று சொல்றப்ப மனசுக்குள்ள ஒரு பெருமிதம். அந்த நினைவு வந்ததும் மனசுக்குள்ள ஒரு அற்ப ஆசை எழுந்தது. ஆபிசுல இருந்து வீடு திரும்பறப்போ வழியில 'ஆனந்த விநாயகர்' கோவிலுக்குப் போனேன்.

பக்கத்துல உள்ள கடையில எதையும் சோதிச்சுப் பார்க்காம பதினோரு தேங்காய்களை வாங்கினேன். பிள்ளையாரைப் பார்த்து வேண்டினேன்.

'பிள்ளையாரப்பா! என் வாழ்க்கையில கவலை படற மாதிரி எத்தனையோ பிரச்சினைகள் இருக்கு. அதெல்லாம் தீர்த்து வையுன்னு உன்னை நான் கேட்கல. ரோட்டுல நின்னு கேட்குறேன். வீட்டுக்குள்ள இருக்கும் இந்த தேங்காய் பிரச்சினையை மட்டும் தீர்த்து வையப்பான்னு' மனதுக்குள் தீர்க்கமாய் வேண்டியவாறு வாங்கிய பதினோரு தேங்காய்களையும் படார்....படார்ன்னு சிதறு தேங்காயாய் வெடலைப் போட்டேன்.

அவைகளை ஓடி விழுந்து பொறுக்கிய சாலையோர சிறுவர்களில் ஒருவன் அதைக் கடித்து தின்றவாறு "எவண்டா இவன். சாமிக்கு ஒடைக்குறோமே...கொஞ்சம் நல்ல தேங்காயா பார்த்து ஒடைக்கலாமில்ல. இப்படி அழுகுனதையெல்லாம் ஓடைக்கிறானே.... என்று என் காதுபடவே வார்த்தையால் கடித்தான். இரத்த அழுத்தம் வேற. சற்று மயக்கமாய் இருந்ததால் நடைமேடையில் விளிம்பில் அமர்ந்தேன்.

' மனம் ஒரு குரங்கு!' எனக்கா? என் மனைவிக்கா?

- நெல்லை சுதன்