old man sad

"நான் யாரையும் பேச விடவே மாட்டேன். நான் பேசும் போது நான் தான் பேசுவேன். அதுதான் என்னோட பலம்" என்றான் விகாரமாய் இருந்தவன்.

"அது பலம் இல்ல தம்பி, பரிதாபம்" என்று சொல்லி கடந்த சுப்பையா அடுத்தவரிடம் மெல்ல சிரித்தபடி நின்றார்.

"இவனளவுக்கு முட்டாளாக இல்லாமல் இருந்தால் சரி" என்பது சுப்பையாவின் திக் திக் மனக் குமுறல்.

அவனை விட ஓர் அண்ணன் அமர்ந்திருந்தான். அவன் காலடியில் சில பூக்கள் உதிரவும் முடியாமல் உணரவும் முடியாமல் நசுங்கிக் கிடந்தன.

"என் பொழுது போக்கே என் பொண்டாட்டிய பத்தி கேவலமா மத்தவங்ககிட்ட பேசறதுதான்" என்றான் நசுங்கிப் போனவன்.

ஏனோ செருப்பை கழட்டி அடிக்கத் தோன்றியது. இவனை அடித்து விட்டு சென்றால் பாவம் பின்னால் தொடரும் என்று முழுதாக நம்பினார் சுப்பையா.

ட்ரவுசர் பாக்கெட்டில் வைத்திருந்த சரக்கு பாட்டிலை எடுத்து அதில் தேங்கிக் கிடந்த கடைசி திரவத்தை குபுக்கென ஒரே மடக்கில் குடித்தார். அவர் கண்கள் சுற்றும் முற்றும் தேடின.

'எனக்கு இரக்கமே கிடையாது. நான் யோகி" என்றான் ஒருவன். அடுத்த நொடி படக்கென கேட்டு விட்டார் சுப்பையா.

'உன் வீட்டு மரணத்துக்கு நீ என்ன செய்தாய்.....?"

"கடைசி மரணம் என் அம்மாவுடையது. இன்னும் துக்கம் தீரவில்லை" என்றான் அவன்.

"இனி யோகி என்று சொல்லாதே மகனே' என்று கடந்தார். காரி உமிழவும் மறக்கவில்லை.

அடுத்து ஒருவன் குடித்துக் கொண்டு இருந்தான்.

"ஏன்" என்று கேட்டார்.

"தெரியவில்லை" என்றான். "பெயர் உத்ரன்" என்றான்.

கொஞ்சம் வந்திருந்த போதை படக்கென இதயம் திறந்தது.  "உன் புருவங்கள் பேசுகின்றன..." என்றபடியே அவனருகே அமர்ந்தார் சுப்பையா...

அவன்.... அடுத்த சுற்றுக்கு சரக்கையும் நீரையும் சரியாக கலந்து கொண்டிருந்தான். நிறைந்த கோப்பையில்.... அவனுக்கென்றே ஒரு முத்துக்குமார்  முளைத்தது போல இருந்தது. மெல்ல முணு முணுத்தான்....

"எனக்கு பிடித்த பாடல் அது உனக்கும் பிடிக்குமே..."

"செம லவ் போல இருக்கு..." குறுக்கே கதை செதுக்கினார் சுப்பையா. கவிதை தடம் மாறி நாவலுக்கு முன் மாதிரியாக கண்கள் விரித்தன.

"காதல்...? எனக்கு...! அது தூரம்...." என்றான் உத்ரன்.

கண்கள் விரிய மனம் திறந்து கை நீட்டினார். நீட்டிய கையில்... வாய் விரிந்த பசியோடு.... நெகிழி கோப்பை.

இடக்கையில்.... சரக்கு ஊற்றி வலக்கையில் நீர் ஊற்றினான்.

அடுத்த கணம் சபை குலுங்கியது. வயிறு நிரம்பியது. கண்கள் துலங்கியது. காரணம் ஒன்றுமில்லை, போதை என்றது சுப்பையாவின் சிரிப்பு..

பேச்சின் ஆரம்பமே 2000 ரூபாய் பற்றியும்... 500, 1000 செல்லாதது பற்றியும்.

"கவலை இல்லை" என்றார் சுப்பையா. "கனவும் இல்லை" என்றான் உத்ரன்.

கேள்விக்கு தயாராக இருந்த பதிலில்... "இப்படியாவது, இருக்கும் கறுப்பு பணம் போகட்டும். நல்ல மனம் வாழட்டும்" என்றான்.

அரசியல் தொடங்கிய பேச்சு... வல்லரசு இந்தியா பற்றி பேசி..... கனவு.. ஹவாலா... என்று தொடர்ந்து... கடைசியில் காதலில் வந்து நின்றது.

இருவருக்கும் அடுத்த சுற்று பலமான சவாலாக இருந்தது. கண்களை அழுந்த திறக்க வேண்டி இருந்தது.

திறந்தார்கள். கூடவே மனமும் திறந்திருந்தது.

"அயோ... காதலா... போங்க சார்... அது வாய்க்கவும் இல்லை. இந்த வாழ்க்கை எனக்கு வழங்கவும் இல்லை" என்றான் கண்கள் சிவந்த உத்ரன். அவன் கண்களில் நொடி நேரத்தில் வந்து போன காதல் பற்றிய ஆசை ஒரு நூறு முயல்களை அவன் கண்களில் இருந்து திறந்து விட்டது போல இருந்தது. உணர்ந்த சுப்பையாவின் கண்களில்... ஆகச்சிறந்த கணம் வடிந்தது.

ம்ம்ம்... என்று சொல்ல வந்ததுக்கு முன் யோசிக்க "உத்ரா" என்றான் தன்னை சற்று உள்வாங்கி.

பெயருக்கு ஒரு புன்னகையை சிந்தி விட்டு "உத்ரா..... காதலை உணர ஒருமுறையேனும் காதலித்துதான் ஆக வேண்டும்... நீ வாலிபன்... உனக்கு சொல்ல வேண்டியது இல்லை என்றே நம்புகிறேன்" என்றார் சுப்பையா.

திடும்மென அவரின் போதை இறங்கி விட்டது போல இருந்தது. ஆனால் காதல் போதை ஏறி விட்டது போல இருந்தது. பேச்சில் வேகம் பிடித்தது. காற்றில் போதை நடித்தது.

"சிலருக்கு காதல் தானாக வரும். சிலருக்கு காதலை தேடினால்தான் வரும். நீ தேடு. உனக்கான காதலை தேடி எடுத்துக் கொள்"

"புரியவில்லை................."

"காதலும் புரியாதது தான் உத்ரா. எல்லாமே புரிய வேண்டியது இல்லையே இந்த பரந்த பூமியில்.  சிறு புல்லின் சூட்சுமம் அதற்கு 'தான்' என்பது தான். நீ ஏன் அதை கேட்கிறாய். உன் வெளி எங்கும் இருக்கிறது சாளரக் கூடுகள். திற...பற. உன் கண்ணில் தேவதை விழுந்தால் அது அவளின் பாக்கியம். தேவதை கண்ணில் நீ விழுந்தால்.. அது காதலின் பாக்கியம்....." என்றபடியே கடைசி மிடறை வேகமாய் கவிழ்த்தினார் சுப்பையா.

அதிகாலை நேரம்....

தூரத்தில் எங்கோ இளையராஜா பனி தாண்டி மிதந்து கொண்டிருந்தார். உள்ளுக்குள் புரளும் நதியலை சிலு சிலுத்து ஓடிக்கொண்டிருக்க இரு கைகள் கொண்டு ஒன்றோடொன்று உரசி கன்னம் வைத்துக் கொண்டான் உத்ரன். அவனுக்குள் இனம் புரிந்த சந்தோசம். ஓர் இரவுக்குள் முளைத்து விட்ட இன்பமயம். நேற்றிரவு சுப்பையா "ஜன்னல் திற" என்று கூறிய முதல் நொடியில் அனிச்சையாய் திறந்த கண்களில்... ஆதுரமாய், நித்திய ஓவியம் ஒன்றாய் நடந்து வந்து கொண்டிருந்த அவளை கண்ட நிமிடங்கள் சிலதான். கண்டம் தாண்டிய நிமிடங்கள் பல. கானகம் தாண்டிய ஒற்றை சிறகை எங்கனம் சூட என்று மெய் சிலிர்த்த கணங்கள் அடுத்து சில.

பனி விழும் இரவு. புற்களின் மீதுலாவும் முன்னிரவு நறுமணம். குடித்த குடிலின் மேல் விழுந்த பொன்னிற வெளிச்சம் பார்வை சிதறும் சிறு தூரத்தில். தூரத்து மலையிலிருந்து வந்திருக்க வேண்டிய தேவதை. கடந்து போகையில்.. மனதை கடைந்தும் போனாள். இரவின் வெளிச்சத்தில் பொன்னிற வெளிச்சம் இணைகையில் கிடைத்த புதுவித வெளிச்சம் ஒன்றில் ஓவியம் சுவர் விட்டு இறங்கி அசைந்தசைந்து போவது போல நம்பினான். மறுகணம் புரிந்து விட்டது. சுப்பையா வாக்கு இத்தனை சீக்கிரமா பலிக்கும். அனுபவம் அனுபவம்தான். மனம் துள்ளியது. மனதுக்கு பிடித்த பெண்ணை காணவே முடியாதா என்ற ஆழ் மன ஏக்கம் இப்போது யாழ் மீட்டியது. ஒரு நொடிதான். உன் பூக்கள் பூத்து விடவும் ஒரு நொடிதான் என்று நேற்றிரவு கூறிய சுப்பையா கடவுளாக தெரிந்தார்.

மாநிறம். இடது பக்கம் மூக்குத்தி அணிந்திருந்தாள் . இடது பக்கமே வகிடு எடுத்து தலை வாரியிருந்தாள். நீண்ட சதுர முகம். நித்திரையை எப்போதும் சுமக்கும் விழிகள். மெலிதான காற்றுக்கு இடை தாண்டிய கூந்தல் பூந்தென்றல் பரிமாறியது. எதற்கோ அவள் திரும்பிய கணம் ஒன்றை திரும்ப திரும்ப பார்த்ததில்.. நாசி கொஞ்சம் ஜப்பான் உறவு. ஆனாலும் தித்திக்கும் ஜுவாலை. நீண்ட கழுத்தில் அணிவதற்கு ஏங்கி நிற்கும் கோடி மாலைகள் என்று நொடியில் பூத்து விட்ட கவிதையை நொடிக்குள் பறித்தும் விட்டான். அவள் போக போக அவன் அவனுக்குள் வந்து கொண்டிருந்தான். தூரத்து பாலைவனமதில் ஒட்டகம் மேய்த்துக் கொண்டிருந்த மனதுக்குள் கிட்டத்து அருவி ஒன்று பெண் நீர் மழை பொழிந்தது.

விடிவதும் தெரிந்தது. விடியாத எதும் புரிந்தது. காலையை எழுப்பி விட்டவன் சூரியனின் மெய்மறத்தலில் அதே மாளிகை கடந்து போக வருவாள் என்றே நின்றான். மதுக் குடிலின் காலை நேரம் குமட்டலாக இருந்த போதும்... நேற்றிரவு நொடி பொழுதே சுவாசித்த அவள் காற்று அங்கே நிரந்தமாக தங்கி விட்டதென அவன் ஆண் மனது நம்பியது. சுவாசித்தது. பாதையைப் பார்த்தே தின்றான். தினமும் இப்படித்தானே என்பது போன்ற உடல்மொழியில் அவள் தண்ணீர் எடுக்க வந்து போனாள். உள்ளம் படபடக்க இரவில் பார்த்த அவளை இறைவனே பார்ப்பது போல காலையில் பார்த்தான். ஆர்வம் படக்கென்று முடிந்து நின்றது. படக்கென முறிந்த தன்னை குழப்பத்தோடே கொண்டு வந்தான். அவள் நீர் கொண்டு போயிருப்பாள். தேவதைகள் எப்போதும் தேங்குவதில்லை. குடில் கொண்ட மது அதுபாட்டுக்கு வரி சொல்லியது.

இரவுக்குள் மீண்டும் கோப்பைக்கு அருகே வெறித்திருந்தான்.

"காசில்லை" என்றபடியே வந்து கொண்டிருந்த சுப்பையாவை கை பிடித்து அழைத்து அமர்ந்தான் உத்ரன்.

"காசு ஒரு மேட்டரே இல்ல. இப்போ போதை கூட ஒன்னுமே இல்லை. ஆனா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்"  என்றபடியே வெள்ளை சரக்கை அவரின் கோப்பையில் நிரப்பினான். மறுகணம் ஆழமாக முகர்ந்தபடியே அருந்தினார். தெய்வம் மீண்டு வந்தது.

சுற்று இரண்டை ஒரே சுற்றில் முடித்து விட்டு கண்களை ஒரு நிலையில் நிறுத்தினார்.

"புள்ள தேவதைதான். புத்தி முழுக்க நிறைஞ்சிருக்கா.... ஆனா உயரமா இருக்கா..." -சொல்ல சொல்லவே முதல் சுற்றை ஒரே மூச்சில் முடித்தான் உத்ரன்.

படக்கென்று சிரித்தார். தொடர்ந்து சிரித்தார். சுப்பையா... அவரின் மனம் அலை மேல் நடக்கும் பாதங்களை ஒத்திருந்தது.

"என்ன சிரிக்கறீங்க...?" என்பது போல கோப்பையை நங்கென வைத்தான் உத்ரன்.

தலையில் விழுந்த கொட்டாக சற்று சிரம் தாழ்த்தி தன் சுருங்கிய கண்கள் இன்னும் சுருங்க சிரிப்பதாக காட்டிக் கொண்டு..." உத்ரா நீ இன்னும் சின்ன பையனாவே இருக்க... உனக்கு ஒண்ணுமே தெரில...போ..."  என்ற பீடிகையோடு கோப்பையை வாய்க்குள் வைத்தார்.

சுதி ஏற தாளம் லயித்தது. வார்த்தை உதிர்ந்தது. வானத்தை எட்டிப் பார்த்துக் கொண்டார். வாக்கியம் கிடைத்தது.

"உயரமான பெண் மிக அழகானவள். உனக்கு கிடைக்கும் இரண்டாவது அன்னை. அவள் உன்னை தவிர வேறு யாரையும் ஏறெடுத்து பார்க்க மாட்டாள். மிக நீண்ட வாழ்வியலின் கலையை தானாகவே பெற்றவள் உயர்ந்த பெண். அவளோடு நீ நடக்கையில் ஒருவேளை கேலி செய்ய ஒரு கூட்டம் இருக்கும். ஆனால் உன் வாழ்க்கை முழுவதும் வேலி செய்து கிடப்பவள் அவளே..."- அவருக்கு போதை ஏறியிருந்தது.

"என்ன என்னென்னமோ உளர்றீங்க...."-அவனுக்கு இறங்கி இருந்தது.

"உளரவில்லை உத்ரா உண்மை. உயரமான பெண்கள் பாதுகாப்பு உணர்வை தருகிறார்கள் என்று மனோதத்துவம் கூறுகிறது. உயரம் உடலுக்கு மட்டுமல்ல அது உள்ளத்துக்கும் நாள் ஆக ஆக வந்து விடும்."- சட்டென அவன் காதை வாங்கி ஏதோ ரகசியம் கூறினார்.

அவன் கோப்பையை கீழே வைத்து விட்டு ஜன்னல் வழியாக அவள் வரும் வழியைப் பார்க்கத் தொடங்கினான்.

"அப்போ சொல்லிடலாமா....?" -முகம் சாளரத்தில் கிடந்தது. குரல் சுப்பையா முன் கவிழ்ந்தது.

"சொல்லி பார். அவளுக்கு பிடித்திருந்தால் தொடர்ந்து காதல் செய். இல்லை என்றால் திரும்பி பார்க்காமல் வந்து விடு. உயரமான பெண்களுக்கு நேர்மை மிகவும் பிடிக்கும். இது நான் சொன்னது" என்று சொல்லி மெல்ல சிரித்தார். அர்த்தமுள்ள சிரிப்பை அள்ளிக் குடிக்க கோப்பையாக வேண்டும். மது தீரும் நேரத்தில் வந்து நின்றிருந்த நிலவை உருட்டிக் கொண்டே வீடு சென்றவன் கனவுக்கும் இடமில்லை. காத்திருக்க முடியா இரவில் இருட்டுக்கும் நிலையில்லை.

விடியலில் பூத்திருந்தான்.  மலை உச்சி புல்வெளி தேசம். எட்டி குதித்தால் தலை இடித்து விடும் வானத்தில் ஒரு முறை பறந்து பார்த்தான். அவனுக்கு வேண்டிய திஇசையில் காற்று அடித்தது. காற்றுக்குள் உடல் செய்து பூத்துக் கொண்டே வந்து விட்ட மாயத்தை நீலவேணி செய்தாள். மிகையில்லை. மிடுக்குதான். மாநிறத்தில் செதுக்க செதுக்க வந்து விட்ட சிலையெனவே... தெரிந்தாள். சுப்பையாவின் உதடுங்களில்....கண்களில்... பேச்சில் நீலவேணி... உடலாகி உயிராகி மிதந்தாள்.

நேர் கொண்ட பார்வை. நிமிர்ந்த உடல் வாகு. கொஞ்சம் உயரம் குறைவு தான். ஆனாலும் ஆம் என்ற திமிரோடு நின்றான்.  வழி மறைக்கவில்லை. பாதி வழியில்... மிதந்திருந்தான்.

அடிக்கடி எங்கேயோ பார்த்த முகம் என்பது போல பார்த்தபடியே நின்றாள் நீலவேணி. மடியில் கட்டியிருந்த பூக்கள் காற்றுக்கு மூன்றாம் மார்பென கண்கள் தீண்டியது. காற்று தீண்டிய முதல் வரியில்...இரவு கவிதை ஒன்று செய்ய வேண்டும் என்று இடையே பிறந்த வாலிபத்தை உடன் சேர்த்த படியே உள்ளம் திறந்தான்.

எங்கிருந்தோ வந்து அவனை மோதி கடந்து போன சுழல் காற்றோடு கடை சேர்ந்திருந்தான் அபி. முகம் முழுக்க அப்பிக் கிடந்த பூக்களின் வாசத்தை உணர்ந்தபடியே குடித்துக் கொண்டிருந்தார் சுப்பையா.

"நான் என்ன பேசிட்டு இருக்கேன். நீங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..." கடிந்து கொண்டான் உத்ரன்.

"உன்னை விட மூன்று வயது கூடுதலாக இருப்பது ஒரு விஷயமே இல்லை..... அவளொன்றும் உன்னை பிடிக்கவில்லை என்று கூறவில்லையே.... வயது அதிகம் என்று தானே கூறினாள்" என்றார் சுப்பையா அழுத்தமாக.

"ஆமா" என்பது போல ஜன்னலைப் பார்த்துக் கொண்டே தலை அசைத்தான் உத்ரன்.

எங்கிருந்தோ விட்ட இடத்தை ஆரம்பிப்பது போல ஆரம்பித்தார்.

"எல்லா தரப்பு நகர்தலும் அவளிடம் இருந்தே ஆரம்பிக்கும் உத்ரா. பேராண்மையை பெண்மையிடம் காணுதல் வரம். அது இங்கே நிறைய பேருக்கு கிடைக்கவில்லை. உனக்கு கிடைத்திருக்கிறது. அனுபவி ராஜா அனுபவி.."என்றபடியே கண்கள் சிமிட்டினார்.

அவன் சற்று குழம்பித்தான் போயிருந்தான்.

"ஜாதகம்" என்று மூணு முணுத்தான்.

"அதை தூக்கி குப்பையில் போடு"

"செவ்வாய் தோஷமாம்...."

"அந்த குப்பையை தூக்காமலே கட...."

*****

நீலவேணி.... கண்களை நேராக பார்த்துக் கூறினாள்.

"எங்க வீட்ல பிரச்சினை. ஒத்துக்க மாட்டிக்கறாங்க. மூணு வயசு சின்னவன். வேற சாதி. வேற சாமி.  ஒரு வேளை சோறு கூட உழைச்சா தான் நமக்கு கிடைக்கும், அவன் அப்டி இல்ல. உன்னால அவுங்க வீட்ல போய் வாழ முடியாது. புரிஞ்சுக்கோ..." அப்படியே ஒப்பித்த தேவதை கிழிந்த உடையில் பாவமாக நின்றிருந்தாள். அவளின் மாநிறம் இன்னும் கருப்பாக தெரிந்தது. அவளின் உடல் நெடு நெடுவென வளர்ந்திருந்தது. தேவதையின் உடல் நடுக்கம் காதலை சிதறிக் கொண்டிருந்தது.

சற்று நேரம் ரசித்து பார்த்த உத்ரன் நீலவேணியை அள்ளி எடுத்து ஆறத் தழுவிக் கொண்டான்.

"என்னடா இப்டி ஒருத்தியை புடிச்சிருக்க" என்று நண்பன் கூறிய நேற்றில் கூட அவனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

"ஏன் நல்லாதானே இருக்கா... இதுக்கு மேல என்ன.....வேணும்?'- உத்ரன் தானாக முணுமுணுத்துக் கொண்டே நண்பனைக் கடந்து வந்தான்.

அவனுக்கு காதல் இருக்கிறது. அவளை தன் உயிருக்கு மேல் பிடித்திருந்தது. சுப்பையா சொன்ன பிறகுதான் காதலிக்கத் தொடங்கினான். ஆனால் காதலில் பொய் ஏதும் இல்லை. அது அழகிய சிறகை அவனெங்கும் பொருத்திக் கொண்டேதான் இருந்தது. அது அற்புதமான அன்பை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருந்தது. அவன் அவளை உள்ளங்கையில் தாங்கவே காத்திருந்தான்.

இருவரும் இறுக கட்டிக் கொண்டார்கள். தாள லயத்தில் முத்தங்கள் பரிமாறப்பட்டன. ஒரு ஆகச்சிறந்த அணைத்தல் வழியே அவளின் தாங்குதல் அவனை ஒரு குழந்தையாக்கி அவளின் மார்பில் முகம் புதைக்க வைத்தது. அத்தனை பாதுகாப்பான உணர்வை அவன் கொண்டான். இரவில் மிணுங்கும் அவளின் தேக வரத்தில் அவள் தேவதைதான்.  சந்தேகம் இன்றி சிரித்தான்.

வேறு வழி இல்லை. அன்றிரவே தொடுவானத்தின் முதல் அடியில் கால் வைத்து நடக்கத் தொடங்கினார்கள். இரவின் வெளிச்சம் அவர்களை சூழ்ந்து முன்னும் பின்னும் வழி நடத்தி சென்றது. நட்சத்திர பொழிவை உணர்ந்தபடி அவளின் தோள் மீது தலை சாய்த்து அவன் கண்டது அற்புத பூமியை. அதிசய வானத்தை. சுப்பையாவுக்கு மனதுக்குள் நன்றி கூறினான்.

தன் காதலை கடைசி வரை ஒத்துக் கொள்ளாத தன் அப்பா சுப்பையாவை நினைத்து மனதுக்குள் அழுதாள். கொஞ்சம் கோபம் கூட வந்தது. திட்டினாள். கல்யாணம் பண்ணிட்டு வந்து நின்றால் செத்த தன் பிணத்தைதான் பார்ப்பாய், எங்காவது கண் படாமல் போய் விடு. இங்கிருந்து என் மானத்தை வாங்கி என்னை அணு அணுவாக சாக வைக்காதே....." என்று கூறிய அப்பாவின் முன் வந்து விடவே கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.

"யார் மூலமாவது தெரிய வேண்டும். நீலவேணி நன்றாக வாழ்கிறாள் என்று" என்றும் மனது யோசித்தது.

தூரத்தில் இருக்கும் குடில் சாளர அருகினில் மறைந்து நின்று அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த சுப்பையா கீழே விழுந்து புரண்டு அழுதார். அவரின் கண்களில் காலத்துக்கும் சுமந்த வறுமை ஊசலாடியது. சிறு வயதில் போராட்டம்... கலகம்.... ஜெயில்.... அரசியல் என்று வீட்டை கவனிக்காமல், குடும்பத்தை கவனிக்காமல் சென்று விட்ட, தான் பலமென்று நினைந்த பலவீனத்தை நினைத்துக் கதறினார். ஒரு நல்ல கணவனாக இல்லை என்பதற்கு தன்னை விட்டு ஓடி போன தன் மனைவியே சாட்சி என்று வருத்தப்பட்டு பாரம் சுமந்தார். ஒரு நல்ல அப்பாவாக தான் இல்லை என்பதற்கு தானே நாடகமாடி தன் பிள்ளைக்கு ஒரு வரன் பார்த்ததை எண்ணி வெட்கப்பட்டார்.

அழுகை போதவில்லை. அங்காரமாகக் கத்தினார். குடிக்க இனி ஒன்றும் இல்லை. வாழ்நாள் முழுக்க குடித்து விட்டார். பிச்சை எடுத்தும் கூட குடித்து விட்டார். மானம் கடந்த பசியை ஒன்றும் செய்ய முடியாத போது பருவம் வந்த மகள் அக்கம் பக்கத்துக்கு வீட்டு வேலைகளுக்கு சென்று கஞ்சி ஊற்றினாள்.

தேவதையை கையில் ஏந்திய நாள் அப்பாவாகி சந்தோஷப்பட்ட நாள் செருப்பாக மாறி, மாறி மாறி அறைந்தது...

"என்ன செய்ய...?  பெண்ணுக்கு ஜாதகப் பிரச்சினை. உயரம். கருப்பு நிறம். பற்றாக்குறைக்கு பணமே இல்லை. வீடு இல்லை. வாசல் இல்லை. வீட்டில் அடுத்த வேலைக்கு அரிசி இல்லை. யார் கட்டிக் கொள்வார்கள்." வெதும்பினார் சுப்பையா

தினம் ஒருவனைக் கட்டிக் கொள்ள வாய்ப்பு வந்தது. முடியாது என்றே சொல்லி இருப்பாள் என்றே நம்பினார் அப்பா.

வயது 29. சித்தார்தனா.....? வெளியேறி விட. யசோதரை ஆயிற்றே.

"குடித்த பொழுதில் இட்ட திட்டம் உத்ரன் மூலமாக நிறைவேறியது. தன் பிள்ளை வாழ எவர் பிள்ளையையோ ஏமாற்றி விட்டேன்" என்று கதறினார். அவனிடம் பச்சை துரோகம். அவளிடம் பச்சை நடிப்பு. இருவரும் மன்னிக்க மாட்டார்கள். எடுத்த முடிவுதானே என்று நிதானமாக வீட்டு உத்திரத்தில் வேட்டியை மடித்து போட்டு கழுத்தில் முடிச்சிட்டு வெற்றிடத்தில் கால்கள் உரச சடக்கென்று பூமி விட்டு வெளியே தொங்கத் தொடங்கினார்.

கை விட்டது கடவுள் அல்ல. காலம்.

மிகப் பெரிய சிலுவையை இறக்கி வைத்து விட்டது போல சற்று நேரத்தில் இறுக்கமாக தொங்கிக் கொண்டிருந்தது சுப்பையா என்றொரு அப்பாவின் உடல்.

- கவிஜி