வெகுநாட்களாய் ஒரே அறையில் தூங்கிக்கொண்டிருந்தவள் சமீபத்தில், தான் பயன்படுத்தும் பொருட்கள், அலமாரி உள்பட அனைத்தையும் அந்த அறையிலேயே விட்டுவிட்டு அதற்கு எதிர்த்தாற்போல் இருந்த படுக்கை அறைக்கு உறங்கச் சென்று கொண்டிருந்தாள் நிவேதிதா. தற்போது மாறியிருக்கும் அந்த அறை கிட்டத்தட்ட பழையது பிடித்துப்போனது.. அதாவது அழுக்குப்படிந்த சுவர்கள்,மூலைகளில் ஓட்டடடைகள், கதவிற்குப் பின்னால் எப்போதோ போடப்பட்டிருந்த பழைய கட்டில்.. இந்தக் கட்டிலை இதற்கு முன்பு வயதானவர்களுக்கும், நாள்பட்ட நோயாளிகளுக்குமே பயன்படுத்தியிருக்க வேண்டும் ... அப்படியொரு நிர்மூல வசப்பட்டிருந்தது... இவள் சென்று உறங்கும் நாட்கள் இன்றோடு தொடருமானால் இரண்டு ஆகிருக்க வேண்டும்.. இதோ சாப்பிட்டு முடித்து எல்லோரும் அவரவர் அறைகளுக்கு திரும்பியானது... இவளும் ...

காலையில் அம்மா சீக்கிரமே எழுந்துவிடுவாள் ... அதற்கும் முன்னால் நிவேதிதா நடைபயிற்சிக்குச் சென்றுவிட்டாள்.. அதனாலோ என்னவோ இதுவரை எந்த கேள்வியும் யாரிடமிருந்தும் அசைக்கவில்லை அவளை.. நடைபயிற்சி முடிந்து வீட்டுக்கு திரும்பியவள் அம்மாவிடம் கிரீன் டீ கேட்டு வாங்கிக்கொண்டாள்... வியர்வை வழியும் முகத்தை துண்டால் ஒற்றியபடி அலைபேசியைத் திறந்துவிரலை முகநூலில் நியூஸ் பீட்சை ஒவ்வொன்றாக மேலே தள்ளிக்கொண்டே இருந்தாள்... வாசலில் விக்கி வந்து நின்றான்.. இவள் அவனைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை...

அம்மா ... அழைத்தான் விக்கி.. ஏய் விக்கி வந்திருக்காண்டி ... இது அம்மாவின் குரல் சமையலறையிலிருந்து .... அவள் காதில் எதுவுமே விழவில்லை.. அடுத்தமுறை குரலுக்கு வேலையே இல்லாமல் அருகில் வந்து அவளது தோலைப்பற்றி விக்கி எனக் கைகாட்டி சாதுரியமானாள் மும்முரமாய் ஏதோ படித்துக் கொண்டிருக்கிறாளே என்று .... அவளும் ம்ம் தவிர வேறேதும் கொடுக்கவில்லை பதிலுக்கு... வீட்டிற்குள் வந்தவன் அவளருகில் தான் அமர்ந்தான்... என்ன விக்கி என்றவளிடம் கனிவும் அதுவரை எதுவுமே நடக்காத ஒரு சாவகாசமும்.. விக்கி, நிவேதிதா இன்னும் கொஞ்ச நாள்ல பேங்க் எக்ஸாம் வருது,ப்ரீபர் பண்ணனும் அப்பாவியாய்க் கசிந்தான்... சரி என்று இழுத்தாள்... அம்மா மீண்டும் இட்லி தட்டோடு விக்கியின் முன் வைத்துவிட்டு நீ எப்போ சாப்டற ? அப்பறம் சாப்டறேன் உச்சென்று கொட்டினாள் நிவேதிதா .... விக்கி, அருண்,ரமேஷ் அப்பறம் சாரு எல்லாரும் ஒரு டூர் பிளான் பண்ணிருக்கோம் நீயும் வரணும் ஓகே என்றாள் அழுத்தமாக .. மென்றுகொண்டே, எங்க நிவேதிதா எப்படி போறோம் எப்ப போறோம் ... சொல்றேன், கண்டிப்பா இந்த தடவ எந்த மிஸ்அண்டர்ஸ்டாண்டிங்கும் வரக்கூடாது.. தொண்டையை செருமிக் கொண்டான் விக்கி.. இந்த செருமலுக்கு பழைய நிவேதிதா விளையாட்டாய் அடிக்கக் கை ஓங்கிக் காட்டியிருக்க வேண்டும்.. எத்தனையோ அப்படிச் செய்திருக்கிறாள் ... ஆனால் பாவம் விக்கிக்குக் கண்கள் தெரியாது.. கருப்பு நிறத்தில் அணிந்திருக்கும் அவனது கண்ணாடிக்குப் பின் அத்தனை ஸ்மார்ட்னஸ். அவனைப் பார்க்கும் யாருக்கும் இந்த குறை தெரிய வாய்ப்பே இல்லை.... யாராவது வாய் தவறிச் சொன்னால் தான் உண்டு... பக்கத்து வீடு தான்... பல வருடப் பழக்கம், நட்பு எல்லாம் கிட்டத்தட்ட நண்பர்களுக்கும் மேலாக உறவினராகவே மாறிவிட்டனர்... அருண், ரமேஷ் நிவேதிதாவிற்கு கசின் முறை வேண்டும் .... சாரு தங்கை... உறவுமுறை, அந்நியம், சொந்தம் கடந்த அன்னியோன்ய நட்பு இவர்களிடம் இருந்தது.... .

நூலகம் வரை சென்றவர்கள் தேவைப்படும் புத்தகங்களோடு வீடு வந்து சேர்ந்தார்கள் ... அப்படியே மதிய உணவு, எக்ஸாம் ப்ரிபரேஷன் நாள் ஓடியதே தெரியவில்லை.... காபி அருந்திவிட்டு விக்கி கிளம்பியதும், இரவு உடைக்கு மாறிவிட்டு மாலை ஆறு மணியிலிருந்தே உறங்குவதற்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள் ... அண்ணி சப்பாத்தி சுட்டுக்கொண்டிருக்கும் வாசம் சமையற்கட்டிற்கு இழுத்தேவிட்டது...

அண்ணி எனக்கு பசிக்குது சீக்கிரம் போடு தட்டை நீட்டினாள்.. என்ன இப்போலாம் சாப்ட மட்டும் தான் வர்றீங்க போல ... சீக்கிரமா தூங்க போற மாதிரி வேற இருக்கு.. ஆமா அந்த ரூம்ல எப்படி படுத்திருக்க... ஃபேன் இல்லாம, மூச்சு விட்றதுக்கே கஷ்டமா இருக்காது சப்பாத்தியை தட்டில் அடுக்கிக்கொண்டே நக்கலாகவும் தெரிந்து கொள்ளும் ஆர்வமாகவும் தொனித்தாள் அண்ணி.... ஆனால் நிவேதிதாவிடமிருந்து எந்த சலனமும் இல்லை... சட்னியா செஞ்சுருக்க அது எடுத்து போடு சகஜமாகினாள்.. உனக்கு தான் லவ்வுக்கு க்ரீன் சிக்னல் கூட விழுந்துருச்சே.. அப்டி என்ன லவ் பன்றீங்க அந்த இருட்டு ரூம்ல தொடர்ந்திருந்தாள் அண்ணி ... அண்ணே எப்போ வருவாரு , அப்பா வந்தாச்சான்னு கேட்டுட்டு சாப்பிட்டபடியே இருந்தாள் ... ஏய் நிவேதிதா நான் பேசுனது காதுல விழுகவே இல்லையா நான் என்ன கேட்டுட்டு இருக்கேன் இந்த முறை இருவரும் முகத்தோடு முகம் சந்தித்தனர்.. என்ன கேட்ட, இப்பதான பேசுற தட்டைப் பார்த்தவள் மீண்டும் அண்ணியை பார்த்தாள்.... அண்ணி சுஜாவிற்கு அதற்குமேல் என்ன பேசுவது எப்படி பேசுவதென்ற குழப்பம் ஒருபுறம் என்றாலும், நிவேதிதாவின் முகத்தில் விளையாடும் அறிகுறியோ, வேண்டுமென்றே அவமதிப்பது போன்ற சாயலோ படர்ந்திருந்தபடித் தோன்றவில்லை.... நிவேதிதா தோழி குணமுடையவள் என்பது அனைவரும் அவள் குடும்பத்தில் அறிந்ததே.. எதையும் மனதில் வைத்துக் கொள்ளும் ஒளிவும் இல்லை... கோபம், மகிழ்ச்சி, வெறுப்பைக் கூட வெளிப்படையாக இடம் பொருளின்றி தோற்றுவிக்கும் அதே சமயம் நிதானமும் வாய்த்தவள்... சுஜா, வேற எதோ ஞாபகத்துல இருந்துருப்பா போல ஆறுதலாகிவிட்டவள் மீண்டும் சப்பாத்திக் கல்லிற்குத் திரும்பினாள்...

மூன்றாவது நாளாகவும் அதே அறை .. அதே பிசுக்கு பிடித்த கயிற்றுக் கட்டில் ... விடிந்தது நான்காவது நாள்... ஞாயிற்று கிழமை கொஞ்சம் தூக்கம் பிடித்தவளாய் எழுந்து வருகின்றாள் ஹாலில் அம்மாவிடம் எதிர்ப்பட்டு மாட்டிக்கொண்டாள்... என்னாடி இங்கருந்து வர்ற நடக்க கூடாதது நடந்த தொனியில் ஒருமாதிரி சிரித்தும் வைத்தாள்... அம்மாவிடம், இன்னைக்கு வெளில போறோம் அருண் கார் எடுத்துட்டு வரான் ஆபிஸ்ல குடுத்துருக்காங்க ... லாங் ட்ரைவ் போலாம்னு இருக்கோம்.. நான் கெளம்புறேன் அவளது அலமாரி இருக்கும் அறைக்குள் நுழைய முற்பட்டவளை பின்னாலிலிருந்து ஒருவாறு பார்த்துவிட்டு நகர்ந்தது அம்மாவின் விசித்திரம் கலந்த முகபாவம்..

வாசலில் ஹார்ன் சத்தம்... எல்லோரும் வண்டிக்குள் சன்னலைத் திறந்துவிட்டு உட்கார்ந்திருக்க அருண் கத்தினான் .. நிவேதிதா .... சீக்கிரம் வா டைம் ஆகிட்டே இருக்கு.... எப்பவுமே லேட்டு தான் ரமேஷ் சோம்பல் முறித்தான்... இன்னைக்கு ரொம்ப லேட் ஆகுதே அருண் கைகளில் ஸ்டியரிங்க் தாளம் வாங்கிக் கொள்ள சாரு காரில் ஏறிக்கொண்டாள்.... எங்கம்மா தாயி உங்கக்கா ரமேஷ் அசமந்தமாய் சாய்ந்தான் இருக்கையில்.... வருவா... வருவா.... அப்பாடி வந்துட்டா வண்டியைக் கிளப்ப காரில் ஏறி அமர்ந்துகொண்டாள் .. அருண் எங்க போறோம்.... . வண்டி போன போக்கிலே ஹஹாஹ் வெள்ளை நிறம், கூலிங் க்ளாஸ், க்ளாஸ் லுக் மிடுக்காய் திரும்பி ஒரு பார்வை... இரண்டு முறை மனதிற்குள்ளேயே உச்சுக் கொட்டியவள் நிமிர்ந்து அதுவும் நல்லாருக்கும்ல... கார் காற்றின் வேகத்திற்கு ஏற்ப விரைந்தாலும் நண்பர்களின் கலகலப்பில் மிதந்தது ...

மதிய வேளையில் ஓய்வெடுப்பது பாலாம்மாவிற்கு பழக்கம்.... நிவேதிதாவின் அம்மா.. ஒருக்களித்து படுத்தவாறு எதையோ யோசிப்பது தெரிந்தது... மாடியில் துணியைக் காயப் போட்டுவிட்டு வந்தாள் சுஜா ... என்னம்மா தூங்கலையா சோபாவில் கிடந்த மன்த்லி மேகஸின் கண்ணில் பட எடுத்துக்கொண்டு உட்கார்ந்தாள்... அம்மாவின் கவனம் திரும்பவேயில்லை.. ஏம்மா உங்களத்தான் கேட்டேன் தூக்கம் வர்லையான்னு .. கேட்டுட்டு தாண்டி இருக்கேன் ... அம்மாவிற்கு மகள் மருமகள் பாகுபாடு கிடையவே கிடையாது.... அதான என்னமோ நினைத்தவளாய் சிரித்துப் போனாள் சுஜா... அதை எதிர்பாராமல் பார்த்துவிட்டவள் , என்னாடி தனியா சிரிச்சுட்டு இருக்க, யாரு நானா சரி சரி பக்கங்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக பிரித்தபடி.... என்னாடி சரி சரின்னுட்டு.. இல்ல நேத்து நிவேதிதா நான் கேட்டதுக்குலாம் பதில் சொல்லாம, எதுவுமே கேக்காத மாதிரி வேற பேச்சா பேசிட்டு இருந்தா.... சரி வேற எங்கயோ கவனம் போலன்னு விட்டுட்டேன் .... அதே மாதிரி நீங்களும் ரெண்டாவது தடவ கேட்டப்போ தான் பதில் பேசுனீங்களா அதாம்மா சிரிப்பு வந்துச்சு.... ஏம்மா அவ ஏன் அந்த ஸ்டோர் ரூம்ல போயி தூங்குறா அதுவும் அந்த பழைய இத்துப் போன கட்டில்ல .. எப்டிதான் தூங்குறாளோ... அவசியமாய் எழுந்தவள் என்னாடி சொல்ற.. காலைல நானும் பார்த்தேன்.. அந்த ரூமுக்குள்ளர்ந்து தான் வந்தாளா, நானும் கேட்டேன் ... பதிலே சொல்லல .. வெளில போறேன்னு சொல்லிட்டு பார்க்க கூட இல்லடி... சரி ஏதாவது எடுக்க போயிருப்பான்னு அப்புறம் அத பத்தி யோசிக்கல... கெளம்பற அவசரமோ என்னமோ கவனிக்கல போலன்னு தான் தோணுச்சு ... எப்பருந்து தூங்குறா .... ரெண்டு நாளா பார்த்தேம்மா ... நான் கூட மேடம் லவ் பன்றாளே ஒருவேள தனியா பேசறதுக்குன்னு போயிருப்பாளா இருக்கும்னு கேட்டேன்.... ஒண்ணுமே சொல்லலமா சீரியஸாக மாறியது முகம்... ஆமாடி இப்பலாம் எங்கயாவது ஒரு இடத்துல ரொம்ப நேரமா உட்கார்ந்துருக்கா, கூப்ட்டா காதுலயே விழுகாத மாதிரி இருக்கா எந்த வேலையும் பாக்குறதில்ல... இதையும் தான் கேட்டேன் அதுக்கும் ரெஸ்பான்சே இல்ல... லவ் பன்றதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் இருக்கு... அவ ரூம்லேயே பேசலாமே .... கல்யாணத்துக்கு ஒத்துக்கிடாச்சு.... இனிமே என்ன ... மாறி மாறி குழம்பிக் கொண்டிருந்தார்கள்....

சாலையோரத்தில் நின்றிருந்தது கார் .. கையில் இளநீர், அன்னாசி துண்டு, மிளகாய்ப் பொடி தூவிய மாங்காய் ஆளுக்கொரு ஆசையுடன் நின்றிருந்தனர் .... . விக்கியும் ரமேஷூம் அருகிலுள்ள பெட்ரோல் பங்கில் ரெஸ்ட் ரூம் சென்றுவிட்டு திரும்புவது தெரிந்தது.. ரமேஷ் கைக்குட்டையால் பின் கழுத்தை துடைத்துக் கொண்டே வந்தான்.... இளநீரை உறிஞ்சியவாறு நிவேதிதா விக்கியை எதிர்பார்த்து ரமேஷின் பின்னால் எட்டிப் பார்க்க, விக்கி சாவகாசமாய் வருவது வியப்பளித்தது. அவனிடமிருக்கும் குறை கண்டறிவது இயல்பானதல்ல என்றாலும் நடை, உடை, நடவடிக்கைகளில் அப்பாவித்தனம் இழையோடும்... புருவங்கள் சுருங்கிக் குவிய, லாவகமாய் சாலையைக் கடந்து எதிர்ப்புறம் இருக்கும் தள்ளுவண்டிக்காரரிடம் ஓடியவன் எதுவும் வாங்காமல் சாதாரணமாய்த் திரும்பி வந்தவன் தன் கருப்புக் கண்ணாடியைக் கழட்டிக் கொண்டே வருகின்றான்... அவனது கண்களில் பார்வை வந்திருந்தது.... அதெப்படி .... இது எப்படி நடந்திருக்கும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்தேறிய இந்தக் காட்சியில் அவள் மீள்வதற்குள் அருகில் வந்தவன், நிவேதிதா என்ன பாக்குற என்ற அருணிடம், இவன் எப்படி பார்க்கிறான் ... எப்போ கண்ணு வந்துச்சு... என்கிட்ட யாரும் சொல்லல மென்று விழுங்கினாள் அமானுஷ்யப் பிடியுடன் .... . அருண் சிரித்தான் ஏய் மொதல்ல கண்ணு இல்ல இப்போ வந்துருச்சு அவ்ளோதான் இன்னும் கொஞ்சம் சிரித்தான்.... . இல்ல இழுத்தாள்... நெஞ்சம் முழுக்க பயம் நிரம்பியது.... வியர்க்கவும் துவங்கியது.... அருண் இயல்பாகவே தோன்றினான் .... . பல வருடங்களாய்ப் பார்வை இல்லாதவன், வரும்போது கூட யோசனை ஓடிக்கொண்டே தலைவலியைக் கிளப்ப ஒருவேள நான் வரும்போது பாக்கலையோ,எப்படி ஆபரேஷன் கூட நடந்திருக்க வாய்ப்பில்லையே நேத்தும் கண்ணு தெரியாமதான இருந்தான் சந்தேகமும் பீடிக்க, ரமேஷூம்,விக்கியும் இருக்கைகளில் சாய்ந்து உறங்குவதைப் பார்த்தாள்... விக்கி முன்பை விட ஆஜானுபாகு தோற்றமாய்க் காட்சியளித்தான்.... சாரு ஹெட் போனில் பாட்டுக் கேட்டபடியே வந்தாள்... அருண் அளவாய் வைத்திருக்கும் மீசையில் குறும்பு மிளிர முறுவலித்தான் நிவேதிதாவை ஏறிட்டு.... இப்போது கருப்புக் கூலிங் க்ளாஸ் அச்சுறுத்தியது ...

குழப்பமாகவே வாசலைத் தாண்டி உள்ளே வந்தவளை மேலும் இரண்டு குழப்பங்கள் வீட்டில் வரவேற்க காத்திருக்கும் என்பதை சற்றும் எதிர்பார்க்கவில்லை ... பிரவுன் நைட்டிக்கு மாறிக்கொண்டு ஹாலில் வந்தமர்ந்தவளிடம் எப்படி ஆரம்பிப்பது என டிவியை வெறித்துக் கொண்டிருந்த அம்மாவிடம் பதற்றமும் கலக்கமும் ஒருசேர,அம்மா விக்கிக்கு கண்ணு இருக்கும்மா என்றாள்.. அம்மா ம்ம்ம் என்று உம்மென்றிருக்க,பரிதாபமாகிப் போனாள் நிவேதிதா ... அம்மாவிற்குப் பக்கத்தில் சென்றவள் அவளைத் தொட்டு, அம்மா .. அம்மா எனக்கு பயமா இருக்கும்மா என்றாள்... பாலாம்மாவிற்கு மனம் இளகியோட என்னாடி, என்னாச்சுடி என்று பதற நிவேதிதாவின் உடல் முழுவதும் நடுங்கியது.... . அதை தன்னைத் தொட்ட நிவேதிதாவின் கைவழியே உணர்ந்தவளே வேதனையாகிப் போனாள்....

தொடர்ந்தாள் அம்மா .. என்னடி பிரச்சன என்று ஆரம்பித்து மதியம் அண்ணியும் தானும் பேசிக்கொண்ட விசயங்களைஒவ்வொன்றாகக் கொட்டித் தீர்க்க,அய்யோ இப்டிலாம் நடந்துருக்கா எனக்கு தெரியவே இல்ல.... என்ன நடக்குதுன்னே தெரியல அழுகாத குறை .... கீழே எங்கேயோ பாவமாய் பார்த்துக்கொண்டு உள்ளங்கைகளைப் பிசைந்தது அமானுஷ்யம்... ஏதோ ஒன்று அவளைச் சுற்றி குழப்பங்களை உருவாக்குவதை பயத்தை, ஒருவேள காலைல நடை பயிற்சிக்கு போகும் போது அங்க ஏதாவது (செல்லக் கூடிய நேரம் ஐந்து மணி இருளாக இருந்தது)என அம்மாவைப் பார்க்க, அவள் கூற வருவதைக் குறிப்புணர்ந்தவள் அப்டிலாம் எதுவும் இருக்காதுடி .. சரி எதையும் யோசிக்காத போ போய்ப் படு என்று ஆசுவாசப்படுத்தி அனுப்பி வைத்தாள்.... ஆனால் கடைசியாய் அம்மா கூறியது அவள் காதுகளில் விழாதது போல் தான் இருந்தது.... அவளுடைய அறைக்கே நிவேதிதா செல்வதைக் கண்டதும் ஓரளவு நிம்மதியுடன் உறங்கிப் போனாள் ....

அடுத்த நாள் தலை சுற்றியது அம்மாவிற்கு.... நிவேதிதா ஸ்டோர் ரூமில் தூங்கிக் கொண்டிருக்கின்றாள் ... அதைவிட பெரிய கூத்து அந்த அறை முழுக்க சாமிப் படங்கள் ... அம்மாவிற்கு பொறுமையே இல்லை கலக்கத்தோடு கதவிற்குப் பின்னால் கிடக்கும் கட்டிலில் நிவேதிதா அரைகுறை தூக்கத்தில் நெற்றியில் குங்குமம் வேறு...... எழுப்புவதற்குள் அவளே எழுந்துவிட்டாள்... அப்பொழுது அந்த அறை இருவருக்கும் சௌகரியகமாகப் படவில்லை.. அறையிலிருந்து அம்மா வெளியேறுவதைக் கண்டவள் பின்னாடியே வந்தாள் ... அம்மா எனக்கு பயமா இருக்கு... என்னமோ நடக்குது ... அம்மா அருணுக்கு வேற கண்ணு நல்லா தெரியுதும்மா என்றாள் அப்பாவியாய்.... அண்ணி குறுக்கிட்டாள் காபி தம்ளரோடு .... நிவேதிதா நாங்க பேசுறது எதுவுமே கேட்காம நீயா ஒண்ணு பேசுற தெரியுமா என்று குத்தினாள்... நான் அப்படிலாம் இல்ல ... நீங்க பேசுறத கேட்டுத்தான் பேசுறேன்... சிறு விவாதம் முற்ற கடைசியில் நொந்தே போனாள் நிவேதிதா.... நிச்சயம் எதோ தனக்குள் இருப்பதாகவும் அது தான் இது போல பிரச்சினைகளை உருவாக்குகிறது என்றும் யூகித்தாள்....

எங்கோ பார்த்தவளை தோளை அழுத்த திரும்பினாள் என்ன சரி தான என்றாள் அண்ணி .... என்ன என்று கேட்டாள் நிவேதிதா... எல்லாம் சரியாகிடும் கவலப்படாதன்னு சொன்னேன்.... சொன்னீங்களா இந்தமுறை மனதிற்குள் கேள்வி.... . அவளுக்கு திடீரென ஒரு யோசனை அம்மாவிடம் பேச்சுக் கொடுத்தாள்... இடை இடையே எங்கேயோ கவனிப்பதும் அம்மாவைப் பார்ப்பதுமாகத் தீவிர ஆராய்ச்சி .... . சரிம்மா குளிக்கப் போறேன் இன்னைக்கு நான் சமைக்குறேன்னு அந்த சூழலிலிருந்து தப்பித்தவளுக்கு ஒன்று மட்டும் தெளிவாகியது... அதாவது ஒருவர் பேசும்போது அவரை நேருக்கு நேராகக் கவனிக்கும் பட்சத்தில் அவர்கள் பேசுவது கேட்கிறது .... வேறு எங்காவது பார்க்கும் போது கேட்பதில்லை... இதுவும் அமானுஷ்யத்தின் வேலை எனவும் இதிலிருந்து எப்படி மீளப் போகிறோமெனக் கலங்கியபோது,இன்று தான் ரவீந்திரனின் நினைவு அவளைத் தின்றது.... . ரவி என்ன ஆனான் அவனும் என்னை அழைக்கவில்லையே .... . என்னை நினைக்கவே இல்லையா .. வேலை என்றாலும் ... அவனுக்கும் ஏதாவது ....... விறுவிறுவென அலைப்பேசியை எடுத்தாள் அவனது எண்ணிற்கு அழைத்தாள்.... எடுத்துப் பேசியவன் கொல்லிமலையில் இருப்பதாகக் கூறினான்... வந்து மூன்று நாட்களானது என்றதும் அழுத்தமாய்க் கலையத் துவங்கியது மதியநேரத் தூக்கம்......

- புலமி