மின்சாரம் நின்ற முன்னிரவு ஒன்றில்தான் அவளைச் சந்தித்தேன். மெழுகுவர்த்தியின் குறையொளியில் நெளிந்தபடியிருந்தது நகராத அவள் நிழலுருவம். மெழுகுவர்த்திச் சுடரை சுற்றிவரும் சிறுபூச்சி ஒன்றை இமைக்காமல் உற்று கவனித்துக் கொண்டிருந்தாள். சாண்டில்யனின் நாயகிபோல யவனமாக இருந்தாள். அவள் அணிந்திருந்த உடை சரித்திரநா வல்களின் ஓவிய இளவரசிகளை ஒத்திருந்தது. கதவு திறந்ததும் நேராக உள்ளே நுழைந்து சோபாவில் அமர்ந்து கொண்டாள்.

sword 345நான் மெல்ல குழப்பத்துடன் நின்றிருக்க, அருகில் அமரச்சொல்லி சைகை செய்தாள். நான் தயங்கினேன்.

"ஏன் அஞ்சுகின்றாய்? நானொன்றும் உன்னைக் கடித்து விழுங்கிவி டமாட்டேன் வா" என்றாள் புன்னகைத்தபடியே.

"தப்பா நெனைச்சுக்காதீங்க... நீங்க யாருன்னு"... கேட்டது நான் தான்.

"ஓ !! உனக்கு என்னை நினைவில்லையா"?

இப்பொழுது என் குழப்பம் அதிகரித்தது. ஏற்கனவே என் மனைவிக்கு என்பேரில் அளவற்ற நம்பிக்கை. இதில் இரவு நேரத்தில் ஒரு பெண்ணை வேறு கூட்டிவந்து வீட்டில் வைத்து பேசிக் கொண்டிருப்பது தெரிந்தால் பிரமாதமாக இருக்கும் என்றெண்ணிக் கொண்டேன்.

அவள் வாய்விட்டுச் சிரித்தாள். பிறகு, "உன் எண்ணங்களை என்னால் வாசிக்க முடிகிறது. பதறாதே. நான் வந்த பணி முடிந்ததும் கிளம்பி விடுவேன்"

என் பதற்றம் அதிகரித்தது. நான் நிர்வாணமாக இருப்பதுபோல் உணர்ந்தேன். என் எண்ணங்களை எல்லாம் வாசிக்க முடிகிறது என்கிறாளே.

"இல்ல நெஜமாவே எனக்கு உங்களத் தெரியலங்க. யார் நீங்க"?

அவள் என்னை ஊடுறுவுவதுபோல் பார்த்தாள்.

"சரி என்னை நினைவில்லாவிட்டால் பரவாயில்லை. கஸானையாவது ஞாபகமிருக்கிறதா"?

சுத்தம். எனக்கு இவளையே தெரியவில்லை. இந்த லட்சணத்தில் கஸானாம் கஸான். அது யாராக இருக்குமென்று யோசித்தேன்.

"அது சரி. என்னைத் தெரியவில்லை. கஸானைத் தெரியவில்லை என்றால், நிண்டூராவையும் மறந்திருப்பாய்"

நான் பதிலேதும் கூறாமல் தரையை வெறித்துக் கொண்டிருந்தேன். சட்டென்று மின்சாரம் வந்து மின்விசிறி சுழலத் துவங்கியது. அவள் கண்களைமூடி புழுக்கம் விரட்டிய காற்றை அனுபவித்தாள். வெளியே படிக்கட்டுகளில் என் பிள்ளையின் குரல் கேட்டது. அவனை அதட்டும் என் மனைவியின் குரலும். சட்டென்று ஒரு இறுக்கம் சூழ்ந்துகொள்ள, நான் வாசற்கதவை அகலத் திறந்து வைத்தேன். செருப்பைக் கழற்றியவாறே என் மனைவி என்னை முறைத்தாள். மகன் சோபாவில் அமர்ந்திருந்தவளை புருவம் சுருங்கப் பார்த்தபடி என் முழங்கால்களை கட்டிக் கொண்டான். மனைவி அவளைப் பார்த்து சம்பிரதாயமாக ஒருமுறை சிரித்து வைத்தாள். பிறகு உள்ளறைக்குச் சென்று எனக்கு ஜாடை செய்தாள்.

சோபாவிலிருந்தவள் என் மகனை ஏக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள். உள்ளறைக்குச் சென்றதும் என் மனைவி கேட்டாள்.

"யாருங்க அது"?

கேள்வி அடிக்குரலில் இறுகிய அவள் பற்களின் வழியே வழிந்ததை கவனித்துக் கொண்டேன்.

"யாருன்னு தெரியலடி பாப்பு. கதவத் தொறந்ததும் தன்னால உள்ள வந்து ஒக்காந்துகிட்டு என்னென்னமோ கேக்கிறாங்க"

அவள் பார்வையில் அவநம்பிக்கை வழிந்தது.

"யாருன்னு தெரியாமத்தான் நடு ஊட்ல ஒக்கார வச்சு பேசிட்டிருக்கீங்களாக்கும்"?

"அய்யோ பாப்பு என்னிய நம்பு. சத்தியமா அந்தப் பொண்ணு யாருன்னு தெரில"

அவள் ஹாலுக்குச் சென்று அவளிடம் காப்பி வேண்டுமா என்று விசாரித்தாள். பின்னாலேயே ஆடுபோல நானும் சென்று ஒரு சேரைப் போட்டுக்கொண்டு சோபாவிற்கு எதிரில் அமர்ந்து கொண்டேன். என் மனைவி சமையலறையில் காப்பி கலந்து கொண்டிருந்தாள். அவள் கண்களும் காதுகளும் ஹாலில்தான் இருந்தன. சோபாவிலிருந்தவள் ஒருமுறை சோம்பல் முறித்துக் கொண்டாள்.

"சரி வா சற்று வெளியில் சென்று வரலாம். எனக்கு உன்னிடம் தனிமையில் பேச வேண்டியிருக்கிறது"

சமையலறையில் பெரிய பாத்திரமொன்று டணாலென்று விழுந்ததன் காரணம் எனக்குத் தெரிந்ததுதான்.

"இல்லங்க. எதுனாலும் இங்கயே சொல்லுங்க" என்றேன் உஷாராக மனைவியைப் பார்த்துக் கொண்டு.

என் மகன் அர்ஜண்டாக ஆய் போக வேண்டுமென்று டிராயரை அவிழ்த்துவிட்டு வந்து நின்றான். அவனை அழைத்துச் சென்று டாய்லட்டில் உட்கார வைத்துவிட்டு மறுபடி சோபாவில் இருந்தவள் எதிரே வந்து உட்கார்ந்து கொண்டேன். அவள் ஒரு முடிவிற்கு வந்தவள்போல நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டாள்.

"உன்னை இந்த நிலையில் சந்திப்பேனென்று நினைக்கவில்லை கர்னோட்டா. சரி அது உன் விருப்பம். நீ அந்த வாளைக் கொடுத்துவிடு. இனி உனக்கு அது தேவைப்படாது"

சுவரோரம் நகரும் எறும்புகளின் நடைச்சத்தம் கேட்குமளவு மவனம் சூழ்ந்தது.

"நீங்க என்ன சொல்றீங்கன்னே புரியல. மொத நீங்க யாரு? என்ன வாளு? என்ன கேக்கறீங்கன்னே"....

நான் முடிக்குமுன்பே அவள் சரேலென்று சோபாவிலிருந்து எழுந்து இடையிலிருந்த குறுங்கத்தியை என்னை நோக்கி ஓங்கினாள். உள்ளே கிச்சனில் இப்போது நிறைய பாத்திரங்கள் உருண்டன. இத்தனையும் மைக்ரோ கணங்களில் நிகழ, அதிர்ச்சியில் ஆச்சரியத்தில் எனக்குச் சிரிப்புகூட வந்துவிட்டது. அவள் கண்கள் நெருப்பைப்போல பளபளத்தன. என் மனைவி பதற்றத்துடன் ஓடிவந்தாள். குறுங்கத்தியை சற்றும் தளர்த்தாமல் உதடுகுவித்து விசுக்கென்று சப்தமிட்டாள் அவள். வாசல்வழியே இரண்டு குண்டர்கள் ஈட்டியுடன் நுழைந்தார்கள்.

அவர்கள் என் மனைவியை இருபுறமும் பிடித்துக்கொள்ள, திமிறிய என் மனைவியின் கன்னத்தில் ஒரு அறைவிழ மயங்கி விழுந்தாள். அடித்தது அவள்தான். இத்தனை களேபரத்தின் நடுவில் டாய்லட்டிலிருந்து 'ஜப்பி ச்சீக்ஸ்' ரெய்ம்ஸ் வழிந்துகொண்டிருந்தது என் மகனின் குரலில். நான் சூழலை நிதானமாக உள்வாங்கினேன். பிரிட்ஜ் இருந்த மூலையில் நினைவின்றிக் கிடந்தாள் என் மனைவி. கைகளில் ஈட்டியை எறியத் தயாராய் நின்றிருந்தனர் இருவர். அசப்பில் பார்ப்பதற்கு நாடகக் கம்பெனியிலிருந்து ஓடிவந்தவர்கள் போலத்தான் இருந்தது. அவள் ஒருவேளை திரவுபதி வேடம் தாங்கியிருந்திருக்கலாம்.

அல்லது கீழ்ப்பாக்கத்திலிருந்தும் வந்திருக்க சாத்தியமுண்டு. முகவரி மாறியும் வந்திருக்கலாம். ஆனால் அவர்கள் கேட்கும் வாளுக்கு எங்கு செல்ல? என் தீவிர யோசனைகளை வாசித்துவிட்டதுபோல புன்னகைத்தாள் அவள். கத்தியை மறுபடி இடையில் சொருகிக்கொண்டு முகத்தில் சாந்தம் பொங்க என்னை நெருங்கினாள். உரிமையுடன் என் கைகளைப் பிடித்து அழைத்து சோபாவில் அமரச் செய்தாள். டாய்லெட்டிலிருந்து மகன் அலம்பிவிடச் சொல்லி கத்தினான்.

நான் அவள் அனுமதிக்கு காத்திராமல் சென்று மகனை சுத்தம்செய்து அழைத்துவந்து மடியில் உட்கார வைத்துக் கொண்டேன்.

"பார் கர்னோட்டா. மிக நீண்ட நெடும்பயணத்திற்குப்பின் உன்னை கண்டுபிடித்திருக்கிறேன். அத்தனை சுலபத்தில் விட்டுவிடுவேனென்று நினைக்காதே. வாளைக் கொடுத்துவிடு. என் வழியில் சென்று விடுகிறேன். அங்கே நிண்டூராவின் மக்கள் பெரும் அபாயத்தில் இருக்கிறார்கள். அந்த வாள்தவிர்த்து வேறெதனாலும் காப்பாற்ற இயலாது அவர்களை என்று உனக்குத் தெரியாதா? எனக்காக இல்லாவிட்டாலும் கஸானுக்காகவேனும் நீ இதைச் செய்துதான் ஆகவேண்டும்"

என் பிள்ளை சோபாவில் கிடந்த அவள் உடையின் நீட்சியிலிருந்த முத்துக்களை நிரடிக் கொண்டிருந்தான். அவளுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. எந்த வாள், யாருக்கு அபாயம், நிண்டூரா எங்கிருக்கிறது எதுவும் தெரியவில்லை. ஒரு பக்கம் நான் ஏதோ கனவிற்குள் விழுந்து விட்டேனோ என்றும் தோன்றியது. நெடுநேரப் போராட்டத்திற்குப்பின் மின்விசிறியின் காற்றில் அணைந்துவிட்ட மெழுகுவர்த்தியின் மணம் நாராசமாயிருந்தது. அவள் ஜாடை செய்ததும் அந்த ஈட்டி வைத்திருந்த குண்டர்கள் கதவைச் சாத்திக்கொண்டு வெளியேற, அவள் திடீரென்று அழ ஆரம்பித்தாள். விழிகளில் கண்ணீர்வழிய கோணலான அவள் உதடுகளின் வழி வார்த்தைகள் நடுக்கத்துடன் வெளிப்பட்டன.

"கஸானை அவர்கள் சிறை பிடித்துவிட்டார்கள் கர்னோட்டா. அவனை மீட்க வேண்டும். நீ வரமாட்டாய் என்பது எனக்குத் தெரியும். அவன் செய்த துரோகம் அப்படி. இருந்தாலும் அவனை பழி வாங்கும் நேரம் நிச்சயம் இதுவல்ல. ஒரு சுத்த வீரனான உனக்கு தர்மநியாயங்கள் நான் கூறித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை"

குனிந்து முதுகு குலுங்க அழும் அவளை விசித்திரமாகப் பார்த்தான் என் மகன். எனக்கும் அவளைப் பார்க்க பாவமாகத்தான் இருந்தது. என்ன செய்வதென்று தவித்தேன். என் மனைவியிடம் மெலிதான அசைவு தென்பட்டது. அருகில் சென்று பார்த்தேன். இன்னும் மயக்கத்தில்தான் இருந்தாள்.

"நிண்டூராவின் மக்கள் இன்னும் உன் பெயரைத்தான் உச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் கர்னோட்டா. நீ திரும்பவும் வருவாயென்று திடமாக நம்பிக் கொண்டிருக்கிறார்கள்"

நான் என்ன பேசுவதென்று தெரியாமல் அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தேன். பக்கத்தில் எவர் வீட்டிலிருந்தோ பழைய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தது. என் மகன் எழுந்து டீவியை ஆன் செய்தான். சீரியலில் யாரோ ஒரு குண்டுப்பெண்மணி அழுது கொண்டிருந்தாள்.

"நீ சென்றபின் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது. அவர்கள் நீ இல்லை என்றறிந்ததுமே துணிச்சல் பெற்று உள்ளே வந்துவிட்டார்கள். நம் வனங்களை வளங்களை எல்லாம் அழித்து....... என்னென்னவோ கொடுமைகள் நடந்தேறிவிட்டன. ஜாண்டூஸ் நதி முழுதும் நம் மக்களின் குருதி கலந்தோடியது. குரோமிதர் இறக்கும் வரை உன் வருகைக்காக நம்பிக்கையுடன் காத்திருந்தார். பாவிகள் அவரை நெருப்புக்கு இரையாக்கினார்கள்"

அவள் நிமிர்ந்து என் கண்களை ஒருமுறை பார்த்துவிட்டு, மறுபடி குனிந்து கைவிரல்களை பார்க்கத் துவங்கினாள்.

"பிடிபடும் முன்பு கஸான் ஓலையனுப்பியிருந்தான். ஒருவேளை தான் திரும்பாவிடில் கர்னோட்டாவை சந்திக்கும்படி அதில் எழுதியிருந்தான். எஞ்சியிருக்கும் உயிர்களையேனும் காக்கத்தான் எத்தனையோ அபாயங்களைக் கடந்து உன்னிடம் வந்தேன். மாபூகபர்களால் பூஜிக்கப்பட்ட அந்த வாளிற்கு மட்டுமே அவர்கள் அஞ்சுவார்கள். அதைக் கொடுத்துவிடு கர்னோட்டா. தாமதிக்கும் ஒவ்வொரு கணத்திற்கும் அங்கே அனேக உயிர்கள் பறிக்கப்பட்டு விடும்"

எனக்கு என் வீட்டின் பூஜையறையிலிருந்த பூர்வீக வாளின் நினைவு வந்தது. வழிவழியாக என் குடும்பத்தினர் பத்திரப்படுத்தி வைத்திருக்கும் வாள் அது. வாதாபி போரில் வென்று தீக்கிரையாக்கிய பின்பு திரும்பி வந்த பல்லவ சக்கரவர்த்தி நரசிம்மர், தனது யானைப்படை தளபதியான என் முன்னோரில் ஒருவருக்கு பரிசாகக் கொடுத்த வாள் என்று சொல்லிக் கொண்டிருந்தார் என் தாத்தா. யாருமே கழற்றிப் பார்த்திடாத துருப்பிடித்துக் கிடக்கும் அந்த வாளின் உறையின்மேல் வட்டெழுத்தில் வாதாபி வெற்றியைப் பற்றிய குறிப்புக்கள்கூட இருக்கும். நான் ஒரு முடிவுக்கு வந்தேன்.

பூஜையறையைத் திறந்து அந்த வாளை எடுத்துவந்து அழுது கொண்டிருந்தவள் தோளில் தொட்டேன். தலைதூக்கி என்னைப் பார்த்த அவள் கண்களில் அத்தனை பிரகாசம்.

"இப்பவும் சொல்றேன். எனக்கு உங்களையோ, இல்ல நீங்க சொன்ன .... கஸானா? அவனையோ தெரியல. எங்கிட்ட இருக்கிற ஒரே வாள் இதுமட்டுந்தான். இது பயன்படுமா பாருங்க. இல்லாட்டி நீங்க தப்பான எடத்துக்குத்தான் வந்திருக்கீங்க" என்றபடி வாளை அவளிடம் நீட்டினேன்.

அவள் சற்றே சந்தேகத்துடன் வாளை வாங்கி திருப்பித் திருப்பிப் பார்த்தாள். வாளின் உறையிலிருந்த எழுத்துக்களை விரல்களால் ஆசையுடன் தடவினாள். பிறகு எதிர்பாராதவிதமாக எழுந்து என்னை அணைத்துக் கொண்டாள். என் உடல் சிலிர்த்துக் கொண்டது. கண்களைத் துடைத்தபடி எனக்கு நன்றி கூறினாள். பிறகு வாளுடன் கதவைத் திறந்து கொண்டு வெளியேறினாள்.

நான் மூடிய கதவையே சில விநாடிகள் வெறித்துப் பார்த்துவிட்டு மகனுடன் என் மனைவியை நெருங்கினேன்.

***

"சொல்லு ஜெமி. காயா பழமா"?

"முற்றிய பழம். மெட்டீரியலை எங்க வந்து கலெக்ட் பண்ணிக்கிறீங்க"?

"ஒண்டர்புல் ஜெமி. தட் இஸ் ஒய் ஐ ச்சூஸ் யு. ஒன் அவர்ல ஸ்டேடியத்துல மீட் பண்ணுவோம்"

- ஶ்ரீரங்கம் மாதவன்