மூன்று தலைமுறைகளைப் பார்த்தது எங்கள் வீடு. எப்போதும் கேலியும், கிண்டலும், சண்டையும், சமாதானமுமாக தினமும் கழிந்து போகும். எப்போது யார் வீட்டிற்கு வந்தாலும் நிச்சயம் உணவிருக்கும். நிரந்தரமான புன்னகையுடன் பாட்டி வீட்டில் வளைய வருவாள். இது வரை பாட்டியின் காலம்.

chair 239அம்மாவின் காலத்தில் எதிலும் சிறிது கண்டிப்பு இருந்தது. திகட்டக் கூடிய அளவிற்கு இல்லை எனிமும், சராசரிக்கு மீறிய கண்டிப்பு. அன்றைய சமுதாய பொருளாதாரச் சூழ்நிலையில் அது போன்ற கண்டிப்பு எங்களுக்கும் தேவையாக இருந்தது. வீட்டிற்கு எந்தப் பொருள் வாங்க வேண்டி இருந்தாலும் அம்மாவின் அனுமதி நிச்சயம் வேண்டும். அப்பாவும் அப்படியே நடந்து கொள்வார். குடும்பத்தைக் காப்பாற்றி கரை சேர்த்ததில் அம்மாவின் கண்டிப்பை விட அப்பாவின் பொறுமைதான் முக்கிய காரணமாக இருந்தது.

தினமும் அலுவலகம் முடிந்து அப்பா அந்தப் பிரம்புக் கடையின் வழியாக வரும்போதெல்லாம், ஒரு நிமிடம் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுத்தான் வருவார். மிகுந்த போராட்டத்திற்குப் பிறகுதான் அப்பாவால் அந்தப் பிரம்பு நாற்காலியை வாங்க முடிந்தது. முதன் முதலில் பிரம்பு நாற்காலியை நடுக்கூடத்தில் எங்கு வைக்க வேண்டும் என்று எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு ரகசியத் தீர்மானம் இருந்தது, அப்பாவைத் தவிர. வாசலை நோக்கி இருந்தால் நல்லது என்ற என் பரிந்துரையை முழுவதுமாகத் துடைத்துப் போட்டது அம்மாவின் ஆள் காட்டி விரலின் அசைப்பு. கடைசியாக ஒரு வழியாகத் தீர்மானம் ஆனது. நடுக்கூடத்தில் நுழைந்தவுடன் இடதுகை பக்கத்தில் ஒரு சிறிய டீப்பாய் இருந்தது. அதன் மேல் மூன்று பேண்ட் மர்ஃபி ரேடியோ. கீழடுக்கில் அன்றைய செய்தித் தாள்கள். அதை ஒட்டி அப்பாவின் சிறிய புத்தக அலமாரி. அதற்கடுத்து இருந்த இடத்தில்தான் அந்தப் பிரம்பு நாற்காலி தன் நிரந்தர இடத்தைப் பதிவு செய்தது. கூடத்தின் எதிர்புறத்தில் ஜன்னல் இருந்ததால், அப்பா அங்கு உட்காரும் போது நல்ல காற்றுவரும் என்பதால் அப்பாவும் அதை ஏற்றுக் கொண்டார். இல்லையென்றாலும் ஏற்றுக் கொண்டிருப்பார்.

காலையில் எழுந்ததும் அப்பா அந்த பிரம்பு நாற்காலியில் கால் மேல் கால் போட்டு மிகவும் கம்பீரமாக உட்கார்ந்து காப்பி குடித்துக் கொண்டே செய்தித்தாள்களை படிப்பார். அப்பாவின் காலத்திற்குப் பிறகு, அம்மா தினமும் அப்பாவின் பிரம்பு நாற்காலியைத் துடைத்து அதையே உற்றுப் பார்ப்பாள். யாருமறியாமல் கண்களைத் துடைத்துக் கொண்டு “அன்னைக்கு ஒரு நாள் அப்பா” என்று ஏதாவது ஒரு நிகழ்வை எங்களுக்கு ஞாபகப்படுத்துவாள். அப்போது அவளின் முகத்தில் அப்படி ஒரு மலர்ச்சி தெரியும்.

எனக்கும் திருமணம் முடிந்து என் மனைவி புகுந்த வீட்டிற்கு முதன் முறையாக வந்த போது, முதலில் அவளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது அந்த பிரம்பு நாற்காலிதான். அதற்குப் பிறகு நடுக்கூடத்தில் எவ்வளவோ மாறுதல். ரேடியோவிற்குப் பதிலாக, சுவற்றில் மாட்டியிருக்கும் தட்டை தொலைக்காட்சிப் பெட்டி, விலையுயர்ந்த சோபா, நான்கு மூலைகளைப் பார்த்தவாறு இருக்கும் வேலைப்பாடமைந்த சிறிய யானை முகத்து டீப்பாய், குழல் விளக்கிற்குப் பதிலாக அலங்காரச் சர விளக்கு. இந்த எதிலும் எந்த வகையிலும் பொருந்தாதபடி அந்தப் பிரம்பு நாற்காலி அதே இடத்தில் தனிமைப்பட்டு தீண்டப்படாததாக இருந்தது.

நாளடைவில் அந்தப் பிரம்பு நாற்காலி எங்கள் வீட்டு செல்லப் பூனை ஜோவிற்கு நிரந்தர பகல் நேர ஓய்விடமாக மாறியது. ஜோ அந்த நாற்காலியில் உட்காருவதற்கு முன்பு ஒன்றிற்கு பல முறை முகர்ந்து பார்க்கும். தன் இரண்டு முன்னங்கால்களால் பிராண்டி சுத்தப்படுத்தும் போது அம்மா மிகவும் பதறிப் போவாள். எதுவும் நடவாதது போல உடம்பை சுருள் வில்லாக்கி நாற்காலியில் படுத்துக்கொண்டு பூனைகளுக்கே உரித்தான ஒரு ஏக்கப் பார்வையால் அம்மாவைப் பார்க்கும்.

என் மகனின் காலத்தில் அந்தப் பிரம்பு நாற்காலியின் முக்கியத்துவம் குறைந்து கொண்டே வந்தது. “என்னப்பா இந்த பழைய நாற்காலியை எத்தனை தலைமுறைக்கு இங்கேயே வெச்சிருப்பீங்க?” என்று என் மகன் குறைபட்டுக் கொள்ளும் போதெல்லாம், “மெதுவாகப் பேசுடா, பாட்டி கேட்டுடப் போறாங்க” என்று அவன் வாயை அடைப்பேன். எவ்வளவு போராடியும் என்னால் அந்தப் பிரம்பு நாற்காலியை காப்பாற்ற இயலவில்லை. ஒரு நாள் முதியோர் இல்லம் வண்டியில் ஏற்றப்பட்டு மௌனமாகக் கையசைத்து எங்களை விட்டுப் பிரிந்தது. என்னாலும், அம்மாவாலும் எந்த மறுப்பையும் என் மகனிடம் தெரிவிக்க முடியவில்லை.

அந்த நாற்காலி வீட்டை விட்டுப் போன பிறகு அம்மா வீட்டு விஷயங்களில் முன்பு போல தன்னை அவ்வளவாக ஈடுபடுத்திக் கொள்ளாமல் விட்டேத்தியாக இருந்தாள். ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளில் மும்முரமாக இருந்தோம். இரவில் அனைவரும் நடுக்கூடத்தில் கூடும் போது மட்டும் அம்மாவைப் பற்றி விசாரிப்போம். முன்பிற்கு தேவலாம் என்று தோன்றியது. அம்மா விரைவாக பழைய நிலைக்கு வந்துவிடுவாள் என்ற நம்பிக்கை எங்கள் அனைவருக்கும் இருந்தது.

அன்று சனிக்கிழமை. எல்லோருக்கும் முன்பு அம்மா குளித்து தயாராய் இருந்தாள். அடுக்களைக்குச் சென்று இரண்டு தோசை வார்த்து அதன் மேல் மிளகாய்ப் பொடியையும் தாராளமாக எண்ணையும் விட்டு மடித்து ஒரு எவர்சில்வர் டப்பாவில் எடுத்து அதை ஒரு பையினில் வைத்துக் கொண்டாள். யாரிடமும் எதுவும் பேசவில்லை. விறுவிறுவென்று நடுக்கூடத்திற்கு வந்து எல்லோருக்கும் கேட்கும்படி கூறினாள். “நான் அப்பாவைப் பாக்க ஆசிரமத்துக்குப் போறேன். சாயங்காலத்துக்குள்ளேயே வந்துடுவேன். யாரும் பயப்படாதீங்க” என்று யாருடைய பதிலுக்கும் காத்திருக்காமல் வாசலை நோக்கி விரைந்தாள்.

- பிரேம பிரபா