யாரோ ஒருவரின் முகத்தைப் பார்ப்பது போல இருந்தது.... இருந்தாலும்.. பார்த்துக் கொண்டேயிருந்தான் முகில் ... தெளிவாக இருந்த முகத்தில்... நிஜம் அணிந்து கொண்ட முகமூடியை ரசிப்பது போல இருந்த மனநிலையை சற்று தள்ளி நிற்க சொல்வது போல ஒரு பாவனையை வலிய வர வைத்துக் கொண்டு தலையை சீவினான்...
 
"எதுவும் நடக்கப் போவதில்லை... எல்லாம் சரியாவே நடக்கப்போகிறது... இனி ஒரு வழி செய்வோம்... என்பதை நிரூபிக்கும் நாள் இது... இது எனக்கான நாள்.... இங்கு நானே கடவுள்.... நானே சாத்தான்... சரியான கணக்கில் எல்லாம் சரியாக நடந்தால் நாளை முதல்.. என் வாழ்க்கை வேறு... போதும்.. எழுதி எழுதி குப்பையாக குவித்து குப்பையாகவே போய்விட்ட நான் மணி மகுடமாக வேண்டும்...."
 
man face 260முகில்.... மனதுக்குள் ஒரு பெரும் பயணத்தை வெகு துல்லியமாக தியானித்துக் கொண்டே கதவின் உள் பக்கமாக தாழ்பாள் போட்டான்... "இந்த தாழ்பாள் வந்த நாளில்தான் மனிதன் பொருளாகிப் போனான்" என்பது அவனின் திண்ணமான எண்ணம்... எத்தனை புரட்சி எழுத்துகளை எழுதியே தீர்த்தவன்.. வேறு வழியே இல்லை என்று கூற முடியாது... கொஞ்சம் இளைப்பாறிக் கொள்ளும் வழி என்பதால்... சட்டென அன்றி தீர்க்கமான எடுத்த முடிவோடுதான் கிளம்புகிறான்..பின் ஜன்னலைத் திறந்து கொண்டு வெளியே வந்து ஜன்னலை மூடி வைத்து விட்டு யார் கண்ணிலும் விழுந்து விடக் கூடாது என்று வீட்டுக்கு பின்புறம் உள்ள மரங்களின் ஊடாக நின்று, நன்றாக சுற்றும் முற்றும் பார்த்து யாருமே இல்லை என்பதை உறுதி படுத்திக் கொண்டு மெள்ள மெள்ள ஒரு திருடனைப் போல நடக்கத் துவங்கினான்...உள்ளுக்குள் இருக்கும் திருடன் எப்போதும் கதவடைத்தே கிடக்கிறான்.. எப்போதாவது கதவை உடைக்கிறான்.. அல்லது உடைக்காமலே வெளிவரும் சூட்சுமக் கரங்களின் உயிர்ப்போடு ஒரு காட்சி பிழையாக, கரைதலின் காற்றோடு அலையாகி வெளியேறுகிறான்....
 
முடிவெடுத்த பின் சமன்பாட்டு வட்டத்தில், முக்கோண சமன்பாடு யார் வரைந்தாலும் அதுவே.. என்பதாக அவனின் இந்தப் பயணம் இருக்கப் போகிறது.....
 
இன்று காலையிலேயே தெரு முனையில் இருக்கும் தேநீர் கடையில், இன்று ஒரு கதை எழுதுவதாகவும் அதனால் தேநீர் குடிக்க வர மாட்டேன் என்றும்.. கூறி இருந்தான்.. அவன் பொதுவாகவே கதையை யோசிக்க வாரக் கணக்கில் எடுத்துக் கொள்வான்..யோசிக்கும் நாட்களில், காலை 11 மணிக்கு ஒன்று மாலை 3 மணிக்கு என்று தேநீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்...  ஆனால் கதை முடிவாகி விட்ட பின் எழுதி முடிக்கும் வரை வீட்டை விட்டு வெளியே வர மாட்டான் என்பது நன்றாகவே அந்த தேநீர் கடைக்காரருக்கு தெரியும்.. இன்றும் அப்படியேதான் கூறி இருந்தான், செம்மையான ஒரு கொலைக் கதை எழுதப் போவதாக .... 
 
நடக்க நடக்க அவன் மனம் வெகு இயல்பு நிலையில் தியானித்திருந்தது......
 
நேற்றிரவு கலைந்த தேனீக்களைப் போல சூழ்ந்து கொண்ட வட்டத்தை ஒவ்வொரு முடிச்சாக அவிழ்த்து, போட்ட திட்டம்...... இதுவரை எந்த பிரச்சினையும் வரவில்லை... இனியும் வராது என்று தீர்க்கமாக நம்பினான்.... நம்பினோர் கைவிடப் படார் என்பது தானே மனதின் சூட்சுமம்...யார் கண்ணிலும் விழாமல் போவதுதான் முக்கியம்... அப்படியும், விழுந்தாலும் யார் இவன் என்று கேட்கும் அளவுக்குத்தான் பக்கத்தில் பழகி இருந்தான்..... மனிதர்கள் என்றாலே ஒதுங்கி வாழும் தனிமை மிருகமாகிப் போன ஒரு நாளில்தான் எழுதவே துவங்கினான்... எழுதி எழுதி மகாகவி ஆனாலும் காக்கைக்கு போட கூட அரிசி வேண்டுமே... அரிசி விளைவிக்கும் ஆட்களே தற்கொலைக்குள் சிக்கிக் கொண்ட பிறகு... எழுதிப் பிழைப்பது என்பது சாத்தியமா... யார் யாரோ புத்திமதி சொல்லும் அளவுக்கு விழுந்து கொண்டேயிருப்பதுதான் அவனின் உப தொழில்...அதை சரியாகவே செய்து கொண்டிருக்கிறான்....
 
மணி காலை 10
 
உக்கடத்தில் இருந்து சுந்தராபுரத்துக்கு, நகர பேருந்தில் ஏறினான்..... தொப்பி சகிதம்... முகம் பாதி மறைந்திருந்தது போல இருந்தது....கண்ணாடியும் அணித்து கொண்டதில் சற்று வேறு ஆள் போலத்தான் காட்டிக் கொண்டான்....ஜன்னல் ஓரம் அமர்ந்தவனுக்கு உக்கடம் குளம்... ஒரு வித இறகை அவனுக்குள் விதைத்தது...... கண்கள் பார்க்கும் இடமெல்லாம்.. நேரங்களாகவே இருந்தது... சரியான நேரம்... வந்து விட இன்னும் கொஞ்ச நேரங்களே இருந்ததை கையில் கட்டி இருந்த கடிகாரத்தைப் பார்த்து தெரிந்து கொண்டான்..... கண்கள் விரிய விரிய மனதுக்குள் பார்த்துக் கொண்டான்....... பார்த்ததைப் படித்துக் கொண்டான்..... படிப்பது எல்லாம் மனதுக்குள் இருந்து விட்டால் மீண்டும் எதற்கு படிக்க வேண்டும் என்ற புதிய சிந்தனைக்குள் ஒரு பழைய பார்வையாகவே ஊர்ந்தான்... நேரம் ஓட ஓட சுந்தராபுரம் வந்து விட்டது.. இறங்கிய வேகத்தில் மலுமிச்சம்பட்டி போகும்  நகர பேருந்தில் ஏறினான்.... 
 
தலையை ஜன்னல் பக்கம் வைத்தவாறே குளிர் கண்ணாடிக்குள் இருந்த கண்களை பேருந்துக்குள் முடிந்த வரை சுழல விட்டான்... எல்லாமே தெரியாத முகங்கள்தான்.... மெல்ல தலையை குனிந்து கொண்டான்.. மூளைக்குள் ஓடிய ரத்த துளிகளில் புது புது வண்ணங்கள் கலந்து கொண்டே இருப்பதை போல ஒரு பிரமைக்குள் பிரமிளின் கவிதையை நினைத்துக் கொண்டான்....ஒரு இறகாகிப் போன சுதந்திரம்... இந்த மனித வாழ்வுக்கு ஏன் இல்லாமல் போனது... எதற்கெடுத்தாலும் பணம்..... கடன் வாங்கிய அரிசியைக் கூட காக்கா குருவிக்கு போட்ட பாரதியின் முகம்.... மனதுக்குள் வந்து மீசை நீவியது.... தன் மீசையை  ஒரு முறை நீவிக் கொண்டான்...... இனி பட்டினிக்கு இடம் இல்லை... எழுவது என் தொழில்.... ஆனால் பிழைக்க வழி...? புரியாத கோரம் ஒன்றில் நின்று யோசித்த தருணத்தில்தான் அதுவாகவே வந்து விழுந்த இறகால் ஒரு மறதியைப் போல ஒரு நீண்ட வழி கிடைத்தது.... கரடு முரடான வழிதான்..... சரியாக பார்த்து பார்த்து கால் வைத்து, கடந்து விட்டால்.. தப்பித்துக் கொள்ளலாம்.. கடவுளுக்கு சில நேரம் பலி கொடுப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல..அது மானுட இயல்பு.. தகுதி உள்ளவைகள் தப்பி பிழைக்கும்..
 
இப்போது.... கிணத்துக்கடவு போகும் நகர பேருந்தில் அமர்ந்திருந்தான்.... ஒரு புள்ளிக்குள் குவிவதைப் போல, ஒரு சுழலை சுமப்பது போல உணரந்தபடியே மீண்டும் பார்வையை ஜன்னலுக்கு வெளியே விட்டான்....தூரத்தில் ஆடு மேய்க்கும் கூட்டம் ஒன்று மழையில் கரையும் ஓவியம் போல... வெற்றிடப் பரப்பில் கரைந்தபடியே இருக்க... அதற்குள் கிணத்துக் கடவு வந்து விட்டது.... 
 
ஒரு தேநீர் கடையில் நின்று தேநீர் அருந்தினான்.... கருப்பு தேநீரை ஆழமாக சுவைத்து அருந்தினான்.... அது புது தெம்பை தருவது போல நினைத்துக் கொண்டான்........ வாழ்க்கை முழுவதும் தனிமைக்குள் தகித்து கிடந்த மனதின் சுவர்களில் எல்லாம்... புரியாத கிறுக்கல்கள்..... யார் எழுதிய பின்னும்..... அழித்த கரும் பலகையாக இருப்பதில்தான் வெள்ளை மனம் வாய்க்கிறது....... இல்லையெனில் பௌதிக மாற்றம் போல... மாறிய இடமாகிப் போகிறது எதுவும்............ 
 
புகழ் யாருக்கு வேண்டும்.. பணம் இருந்தால்தானே... சோறு உண்ண முடியும்... பசிக்கு முன்னால் எல்லாமே.. ஒண்ணு தான்... எந்த இலக்கியவாதியும் பசியை தாண்டினால் தான் நிலைத்து நிற்க முடியும்......பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.... சுயம் கூட கலைந்து போகும் பசியை, ஒருநாள், மாற்றும் என்றால் அந்த நாளை ஏன் உபயோகித்துக் கொள்ள கூடாது....?.... சரி தவறுக்குள் மாட்டிக் கொள்ள விரும்பாத மனத்தை கழற்றிக் கொண்டே இருந்தான்... தொடர்ந்து கழன்று கொண்டே இருந்த மனதில் ஆடைகளே இல்லை என்பதுதான் உச்சம்... அதுவே மிச்சம்.........
 
"நான் வேறல்ல இந்த சமுதாயம் வேறல்ல.. இந்த சமுதாயம் என்ன எனக்கு கொடுத்தோ.. அதை நான் சமுதாயத்துக்கு திருப்பிக் கொடுக்கிறேன்..." முன்னுக்கு பின் பயணித்த மனதுக்குள் திட்டம் மட்டும்... தீ பிழம்பாய் கனன்று கொண்டிருந்தது........ கண்டிப்பாக வருவான்... சரி வந்தாலும்.. வேலை நடக்குமா.. அதுவும் நடக்கும்.. கண நேரம் தானே,  ஜேப்படி அடிக்கும் நேரம்....எப்படி முடிகிறது..... கவனம்.... அதுதான் தனக்கும் வேண்டும்.. 
கவனம்...." 
 
"கண்டிப்பாக கூட்டம் இருக்காது.... சரி எல்லாம் சரியாக நடந்தாலும்.... பணம் கிடைக்குமா.... நம்பிக்கைதான வாழ்க்கை....கண்டிப்பாக கிடைக்கும்... சரி மாட்டிக் கொண்டால்....?...ம்ஹும்....... கண்டிப்பாக மாட்ட மாட்டேன்.... தடயங்கள் இல்லாத எத்தனையோ தவறுகள் கவனத்துக்கு வராமலே போய்க் கொண்டுதானிருக்கின்றன........ சோர்ந்து போகாதே.. நில்... கவனி... செல்...."
 
சிக்னலில் இருந்து கிளம்பும் பொள்ளாச்சி  செல்லும் நகர பேருந்தில் இப்போது நின்று கொண்டு பயணிக்கத் தொடங்கினான்.....எத்தனை கூட்டம்... எங்கிருந்துதான் இத்தனை மக்கள் வருகிறார்களோ...?.....எங்குதான் போகிறார்களோ....! வருவதும் போவதும் போவதும் வருவதும்... தொடர்ந்து நடந்து கொண்டேயிருப்பதால், யார் வருகிறார்கள் யார் போகிறார்கள் என்று யாருக்குமே தெரிவதில்லை... இன்றும் தெரியாமல் இருப்பதில்தான் இன்றைய நாளின் முடிச்சை வெகு சுலபமாக அவிழ்த்து விட்டு போக முடியும்.... ஓர் இரவின் திரைக்கதை அரங்கேறும் மேடையாக இந்த தினம் இருப்பதில் திரை சீலைகள் விழுந்த வண்ணமாக இருந்து கொண்டே இருந்தன, மனதுக்குள்.... 
 
ஏனோ அருகில் நிற்பவரைப் பார்க்க கூட முடியாத தூரத்தில் கண்களை சுருக்கிக் கொண்டான் முகில்.. 
 
"பொள்ளாச்சி தங்களை அன்போடு வரவேற்கிறது" என்ற பலகையில்... முதல் முறையாக ஒரு வித திக் திக உள் வாங்கப் பட்டதை உணர்ந்தான்.... ஆழமாக மூச்சு இழுத்துக் கொண்டான்..."எல்லாமே சரியாகவே நடக்கும்... போ.. "-என்று அவனுக்குள் இருந்த பசி வழி நடத்தியது.......
 
மணி 12.30
 
சுங்கம் போகும் பேருந்தில் ஏறி அமர்ந்து கொண்டான்.....பேரலையின் முகத்திரையை கலைக்காமல், குலுக்காமல் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது போல... பேருந்தின் ஆட்டத்துக்கு சற்றும் அசையாமல் ஒரு மனித சிலை என இருந்தான்.... நேற்று மாலையிலிருந்தே.... மனம் ஒரு போக்கில் இல்லாமல் இருக்க... அதன் போக்கில் செல்லவும் முடியாமல்.. அறைக்குள்ளாகவே அங்கும் இங்கும் நடந்து ஒரு வழியாக சரி இன்று வெளியே சென்று சாப்பிடலாம் என்று முடிவெடுத்த பின் கால்கள் சரவணம்பட்டி நோக்கி நடந்தன.... துடியலூரில் இருந்து சரவணம்பட்டி செல்லும் குறுக்கு சாலை.. அத்தனை விசாலமானது.. லாரிகளின் வேகம் அசுரத்தனமாக இருக்கும்... ஆனாலும் சுற்றிலும் இருக்கும் மேட்டாங் காடுகள்... பக்கத்தில் இருப்பது போல தெரியும் மலைகள்... பார்க்க பார்க்க மாலை மயங்கும் வேளை எப்போதும் வரைந்து கொண்டே இருக்கும் ஓவியம் போல இருப்பதை உணரவே ஒரு நடை போதாது என்பான்.... நடந்தான்.... பாதை நீண்டு கொண்டே போனது... நீட்சிகளின் மறுவிதம் போல மறுகணம் மறுகணம் அவன் கணம் ஆகிக் கொண்டே கணம் எல்லாம் கனம் இல்லையென்பதாக துவங்கும் ஒரு ஆசுவாச நடை... 
 
பேருந்து சுங்கத்தில் நிற்க, இறங்கிக் கொண்டான்... 
 
பேருந்து நிற்கும் இடத்தை விட்டு சற்று தள்ளி நின்று கொண்டான்... சற்று நேரத்தில், ஆழியார் செல்லும் பேருந்து வர.. அதில் ஏறிக் கொண்டான்...ஆழியார் செல்லும் சாலையின் இரு புறமும், பரந்து கிடக்கும் மரங்களின் சூழலில்... நீளும் பாதை முழுக்க வழுக்கிக் கொண்டே செல்லும் காற்றின் அசைவுகளாகவே தோன்றியது... மனம் மிக மிக லேசானது போல உணர்ந்தான்.... அத்தனை காற்றும், சுகந்த வாசங்களில் அவனை வரவேற்பது போல இருந்தது.. அங்கிருந்தே, அவன் போக வேண்டிய மலை உச்சி, கண நேரத்தில் கண்ணுக்கு தெரிந்தது போல ஒரு பிழையற்ற காட்சிக்குள் போய் வந்த கண்களை ஒரு முறை மூடி திறந்தான்....
 
சரவணம்பட்டியில் உணவை முடித்துக் கொண்டு திரும்பவும் துடியலூர் நோக்கி நடக்கத் துவங்குகையில்..  மணி இரவு 10ஐ  தாண்டியிருந்தது..... வண்டிகளின் ஓட்டம் குறைந்திருந்தது.. ஆங்காங்கே  ஒரு வண்டி.. ஒரு மோட்டார் பைக் என்று வருவதும் போவதும்.. இரவை கிழிக்கும் ஒளியின் வேகத்தில் சற்று ஒதுங்கி நின்று, நின்று நடந்து கொண்டிருந்தான்....
 
நேரத்தைப் பார்த்துக் கொண்டான்.... ஆழியாரை நெருங்க நெருங்க... சுற்றுலா பயணிகளின் வண்டிகள்... கொஞ்சம் அதிகமாகவே வருவதும் போவதுமாக இருக்க... மனதுக்குள் ஒரு வித பூச்சிக் கூடுகள் சட்டென மூச்சு திணறலால் அறுபடுவது போல, சற்று ஜன்னலைத் தாண்டி வெளியே எட்டிப் பார்த்தான்.. ஆழியார் அணை நன்றாக தெரிந்தது.... மலைப்பிரதேசத்திற்கே உண்டான சிலு சிலு வாசம் அவனைத் தழுவிக் கொண்டது...........
 
மனம் மட்டும் ஒரு புள்ளியில் நின்று வியர்க்கத் துவங்கியது.....மூலையிலிருந்து கயிறு திரித்தான், மனம் என்னும் மாய வாசலை கட்டி வைக்க... காற்றின் வேகம் அதிகரித்ததோ.. சுவாச வேகம் அதிகரித்ததோ... அறியமுடியாத தோற்றத்தில் ஆழியார் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினான்.. யாரும் யாரையும் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை.. சுற்றுலாவை மிகவும் தவறாக புரிந்து கொண்ட பலரை அங்கு காண முடிந்தது....... எதற்கு வந்தோம் என்று தெரியாமல் போவதும்.. எதற்கு போகிறோம் என்று தெரியாமல் வருவதும், மனம் போன போக்கில் ஒரு நாளை செலவு செய்ய வேண்டும்... என்ற சுதந்திர வேட்கையின் பல ஆசைகளின் முனைப்போடு.... எதை முதலில் செய்வது என்றே தெரியாத தவிப்புகளின் கட்டுடைத்தலோடு அங்கும் இங்கும் அழைந்து கொண்டிருந்த கூட்டத்தோடு முகிலும் கலந்து கொண்டான்... ஜோடிகள்.. குடும்பங்கள்... சிறுவர்கள்.. எல்லாருக்கும் ஒரு காரணம் இருக்கிறது இந்த நாளில் வாழ்ந்து கிடக்க.....ஆழ் மனம் யோசித்து கிடக்க... வால்பாறை செல்லும் பேருந்து வந்து நின்றது.. ஒரு முறை யாராவது தன்னை கவனிக்கிறார்களா என்று பார்த்துக் கொண்டே ஏறிக் கொண்டான்.. குரங்கு அருவிக்கு பயணசீட்டை எடுத்தான்....
 
இன்னும் கவனம் தேவை.. என்பதாக மனம் ஒரு இரவுக்குள் தொலைவதாக நாடகம் ஆடிக் கொண்டே இருந்தது........
 
நேற்று இரவு சரவணம்பட்டி சாலையில் நடந்து வந்த போது நடந்த விஷயங்கள் மனதுக்குள் படம் போல ஓடின.... அதன் பிறகான திட்டங்கள் மீண்டும் முதலில் இருந்து சரியாக அதே நேர்கோட்டில் வந்து வந்து போய்க் கொண்டிருந்தன.... குரங்கு அருவியில் இறக்கி விட்ட பேருந்து அணத்திக் கொண்டே வளைந்த சாலையில், வளைந்து திக்கி திணறி மேல் நோக்கி போய்க் கொண்டிருந்தது.. குரங்கு அருவியில் ஆங்காங்கே சிலர் சிதறி நின்று கொண்டும்... பேருந்துக்கு காத்துக் கொண்டும்.... உள்ளே பாறைக்கு அடியே நின்று தண்ணீரில் விளையாடிக் கொண்டும் இருக்க.. தோல் பையில் இருந்த கேமராவை வெளியே எடுத்து புகைப்படம் எடுப்பவன் போல.. சாலையின் ஓரத்தில் நடந்தான்... சுற்றும் முற்றும் கவனித்து கூர்ந்து பார்த்துக் கொண்டான்..... யாரும் அவனைக் கண்டு கொள்வது போல் இல்லை.. ஒரு மூக்குத்தி பெண் சற்று தள்ளி தலை விரித்த நிலையில் தொடை தெரிய உடை அணித்து ஈர மேலாடையில் குரங்குகளோடு விளையாடிக் கொண்டிருக்க... குரங்கு மனக்காரர்களின் மொத்த கண்களும் அவளை மொய்த்துக் கொண்டிருந்தன......
 
சாலையின் வளைவைத் தாண்டியதில் குரங்கு அருவி அங்கு இருப்பதே தெரியாது போல.. யாருமே இல்லாத சாலையில் இருபுறமும் மரங்களும்... இடப்பக்கத்தில் ஆழியார் அணையின் நீர் தேக்கமும்.. அடித்துக் கொண்டிருந்த சிலு சிலு காற்றின் ரம்மியமும்... நிஜமாலுமே அவனை ஒரு சுற்றுலாக்காரனாக மாற்றியது. ஆங்கங்கே நடந்து கொண்டும்.. புணர்ந்துக் கொண்டும் இருந்த குரங்குகள் அவனை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.. புகைப் படங்களாக எடுத்துக் கொண்டே சாலையின் மேல் நோக்கி நடக்கத் தொடங்கினான்.... நடக்க நடக்க மனம் இன்னும் இன்னும் மிருதுவான சுமையாகிக் கொண்டிருப்பதை  உணர்ந்தான்...நேரத்தைப் பார்த்துக் கொண்டான்.... இன்னும் அரை மணி நேரம் இருக்கிறது... 2.30 முதல் 3 க்குள் அங்கு இருக்க வேண்டும்.. நடையைக் கூட்டினான்.... ஒரு ஆம்புலன்ஸ் அதிவேகமாக சைரனோடு அவனைக் கடந்தது... முகத்தை திருப்பிக் கொண்டான்... மனதுக்குள் பாறாங்கற்கள் மெல்ல உருளத் தொடங்கின....... 
 
அது மூன்றாவது கொண்டை ஊசி வளைவு....... "கற்கள் சிதறும் பகுதி. கவனமாக செல்லவும்"- என்ற பலகை அவன் கண்ணில் பட, தலையை மேல் நோக்கி தூக்கிப் பார்த்தான்..... ஆனைமலை அத்தனை உயரத்தில்.. அப்பப்பா....தென்னிந்தியாவின் மிக உயர்ந்த மலையில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்துக் கொண்டான்.... அருகே ஓடிய ஓடையில் நீர் அள்ளி பருகினான்.. அத்தனை குளிர்ச்சி....... மலையில் இருந்து நேராக ஓடி வருவதில் எத்தனை குதூகலம் இந்த நீரோடைக்கு.. மனம் கவிதை எழுதியது... உள்ளே நடமாடிக் கொண்டிருந்த திட்டம் கத்திக் கொண்டு கவிதையை பெயர்த்து வீசியது...
 
நான்காவது ஆறாவது வளைவுகளில் நடக்க நடக்க மூச்சிரைத்தது......உடல் வியர்த்துக் கொட்டியது.... ஓரிரெண்டு மோட்டார் பைக்குகளும் அவனைக் கடந்தன...... அவன் புகைப்படம் எடுப்பவன் போல... நீர் தேக்கத்தின் பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டான்.... இதுவரை எல்லாமே சரியாகத்தான் இருக்கிறது....இனியும் சரியாகத்தான் இருக்க வேண்டும்.... மனம் ஓடிக் கொண்டிருந்தது.......
 
6வது வளைவுக்கும் 8வது வளைவுக்கும் இடையே இருந்த மரங்களின் ஊடாக  குறுக்கு சாலையில் வேர்களையும் மரங்களையும்... கிளைகளையும் பிடித்து பிடித்து ஏறினான்.... அங்கிருந்து தெரிந்த இடைவெளியில் ஆழியார் அணை வெகு தூரத்தில் அதல பாதாளத்தில் இருப்பதைக் காண முடிந்தது.... கடல் மட்டத்துக்கு மேல் கிட்டத்தட்ட 500 அடியை தொட்டு விட்டிருந்தான்.... இன்னும் கொஞ்ச தூரத்தில் அந்த 9வது கொண்டை ஊசி வளைவை நெருங்கி விடுவான்..... 
 
விடாதே.. ஏறு..... ஏறு................. மனம் சொல்ல சொல்ல, சோர்ந்த உடலுக்கு மீண்டும் புத்துணர்வு வந்தது போல.... மனத்தை அடக்கி.... மூச்சை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து இன்னும் முழு வீச்சில் நடக்கத் தொடங்கினான்...... இதுவரை, காட்டுக்குள் இப்படி ஒற்றை ஆளாக நடந்து கொண்டிருப்பதை யாரும் பார்க்கவில்லை........ அதோ தெரிகிறது 9வது கொண்டை ஊசி வளைவு..... இரண்டு கார்களும் 3 மோட்டார் பைக்குகளும் நிற்க வண்டியில் வந்தவர்கள் இறங்கி ஆங்காங்கே நின்று புகைப் படம் எடுத்துக் கொண்டும்..... அங்கிருந்த வியூ பாய்ண்டில் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்று வட்டாரங்கள் மற்றும் ஆழியார் அணையை பார்த்துக் கொண்டும் இருந்தார்கள்........ 
 
முகில் மறைந்து நின்று அத்தனையையும் பார்த்துக் கொண்டிருந்தான்........
 
அங்கு சிதறி நின்று கொண்டிருந்த அனைவரும் செல்பி எடுப்பதிலும்... இயற்கையை கேமரா வழியாக ரசிப்பதிலுமே மூழ்கியிருக்க...... கண நேரத்தில் சாலையில் புகுந்து, அவர்களில் ஒருவனாக ஒரு ஓரத்தில் கலந்து விட்டான்.... அப்போதும் யாரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை....கண்டு கொண்டாலும் அவரோடு வந்தவர், இவர் என்றும் இவரோடு வந்தவர் அவர் என்றும் அவர்களுக்குள்ளாகவே நினைத்துக் கொள்ள வேண்டும் என்பது போல..... மெய்மறக்க செய்ததில் அலைபேசி செய்தது மிகப் பெரிய தியான புரட்சி என்பதை நினைத்து மெல்ல சிரிக்க கூடத் தோன்றியது.... ஆனால் மனதுக்குள் வளைவுகள் கண் கொண்ட பாம்பாய் துடித்துக் கொண்டிருக்க...... சுற்றிலும் ஒருமுறை பார்த்துக் கொண்டான்.... ஒவ்வொரு முறையும் ஒரு முறை என்பது போல....... 
 
அவனும் செல்பி எடுத்துக் கொண்டான்... கொண்டை ஊசி வளைவின் விளிம்பில் நின்று பார்த்தால்... கீழே ஆழியார் அணை பரந்து விரிந்து தன் தண்ணீர் சிறகுகளால் பறந்து கொண்டேயிருப்பது போல அத்தனை ஆழத்தில், அகலத்தில் மிதந்து கொண்டிருந்தது.... பார்க்க பார்க்க அத்தனையும் பரவசமாக இருப்பதை கண் கொண்டு மட்டும் அல்ல...மனம் கொண்டும் ரசிப்பது போல பார்த்தான்.... மூளையின் ஒரு மூலையில் அலாரம் அடித்துக் கொண்டேயிருப்பதை, காட்டிக் கொளாத முகத்தை அணிந்து கொண்டவன் போல... ஓரிடத்தில் நின்று ஆழமாய் கவனிக்கவும் மறக்க வில்லை...கடிகாரம் இதயத்தைப் போல அடித்துக் கொண்டிருப்பதை உள் வாங்கிக் கொண்டேயிருந்தான்.. பார்வையை மேலிருந்து கீழே இறங்கும் சாலையில் தவழ விட்டான்... 
 
மணி 2.30.... 
 
"இதுதானே நேரம்... ... இந்த சுற்றுலாவாசிகள் போய் விட்டால்தானே சுலபம்....... போக வேண்டும்.. போக வேண்டும்.........போய்தான் ஆக வேண்டும்"- மனம் ஒரே புள்ளியில் மெஸ்மரிசம் செய்யத் தொடங்கியது... 
 
"சீக்கிரம் கிளம்புங்க....... சீக்கிரம் கிளம்புங்க... யாரும் வந்து விடவும் கூடாது... இவர்களும் போய் விட வேண்டும்...."-முணங்கிய மனம் ஆழ் கடலில் முத்தெடுக்க மூச்சடைப்பது போல, மயான தேடலோடு... மரண சூன்யமாக குவிந்து கொண்டே, ஒரு கடவுளாவே ஒரு தவம் உயர்ந்து கொண்டிருந்தது...... கட்டளைக்கு கீழ் படிந்தவன் போல ஒரு பைக் மெல்லமாக நகர்ந்தது.... இன்னும் இரண்டு பைக்குகளும் ஒரு காரும்தான்..... கால்கள் நடக்கவே அச்சப்படுவது போல.... உள்ளங் கால்கள் கூட வியர்க்க... விழிகளின் மேற்புறம் வியர்த்து ஒழுகியது....... 
 
"மனமே கலங்காதிரு......... மனமே திடமாயிரு... இது உன் நாள்..இது உன் இடம்.. இங்கே, நீ தான் கடவுள்.. நீ ஆணை இடு.. இவர்கள் நகர்வார்கள்..."- ஆழமாக ஆழ்மனதில் கத்தினான்... "கிளம்புங்கடா....சுயநலவாதிகளா..... குடி... குடித்தனம்... இதுதான... இன்னைக்கு போட்டுக்கிட்ட நவ நாகரீக வட்டம்......"- சம்பந்தமே இல்லாமல் அலையடித்த மனதில் சொற்கள் கிளை ஒடிந்து தொங்கின...
 
சாலையின் தடுப்பு சுவருக்கு பக்க வாட்டில் விளிம்பில் கீழே இறங்க....... ஆங்காங்கே...... பாறை சந்துகளும்.... பாறை இடுக்குகளும்.. கைப் பிடி போல, கால் பிடி போல, அங்காங்கே பாறையின் முரட்டுப் பக்கம் பிடிமானமாக இருக்க மெல்ல மெல்ல கால் கொண்டு தழுவி தழுவி நகர்ந்தான் முகில்...
 
"ஹெலோ பாஸ்.. அது டேஞ்சரனா இடம்.. அங்க போகாதீங்க... சிலிப்பானா...... கீலதான்.. எதுமே கிடைக்காது" என்று சொல்லியபடியே ஒருவன்.. சற்று பின்னாலேயே நின்று கொண்டு எச்சரித்தான்... அவன் முகம் வெகு இயல்பாகவேதான் இருந்தது...
 
"நோ நோ... சும்மா....."- என்பது போல சிரித்துக் கொண்டே மீண்டும் மேலேறி வந்தான் முகில்...... 
 
"சரியான இடம்.... புன்னகை மன்னன் படத்தில் கமலும் ரேவதியும் செல்லும் கார் வெடித்து இந்த இடத்தில் இருந்துதானே விழ ஆரம்பிக்கும்..."-  நினைத்துக் கொண்டான்.... 
 
மதிய நேர சூடு... ஒரு பாதியாக வளைந்து வளைந்து கொண்டே  இருப்பது போல மலையின் சாலைகள்  போவதை ஆங்காங்கே தெரியும் மரக் கிளைகளின் இடைவெளியோடு பார்த்தான்.... நேரம் ஓடிக் கொண்டே இருக்க.... மனம் படு வேகமாய் ஓடிக் கொண்டிருந்தது... முகமெல்லாம் வியர்வை பயம்... உடலெல்லாம் மரண வியர்வை.......
 
"போங்கடா...... கிளம்புங்க... கிளம்புங்க..."- மனதுக்குள் உதடு முணு முணுப்பில்...... தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க..... சொல்லி வைத்தது போல, காரும்... பைக்குகளும் மெல்ல ஒன்றன் பின் ஒன்றாக சாலையில் மேல் நோக்கி நகரத் தொடங்கின.... 
 
"ஹஹஹா.......ஹஹ.......ஹா..."- என்று சத்தம் போட்டு சிரிக்க தோன்றியது... மன வலிமை.. கால வலிமை இணையும் புள்ளியில்... எல்லாமே சரியாக நடக்க போகிறது..... கீழே ஆழியாரின் முடிவினில் அட்டகட்டி சாலை ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு லாரி அணத்திக் கொண்டு வந்து கொண்டிருப்பதை முகிலால் இங்கிருந்து காண முடிந்தது..... திரும்பி இடது பக்கம்  வந்து கொண்டிருக்கும் சாலையில் பார்க்க.. கனக்கச்சிதமாக அந்தக் கார் வந்து நின்றது.....(விதியை யார் விட்டார்கள்)... 
 
காரின் பதிவு எண்ணை சரி பார்த்தான்...... அதே எண்தான்...எல்லாம் சொல்லி  வைத்தது போல நடப்பதை மனம் பதறியபடியே உள் வாங்கியது... பயம் மிகப் பெரிய சோலையாகி.... திடும் மென ஒரு வகை இருளை சூட்டியது.......மனம் கணக்கு போட்டுக் கொண்டே அடுத்த நகர்வுக்கு முன்னேறியது....... " இதுவரை எல்லாம் சரி.. இனி என்ன பயம்... ஆரம்பி..."- துடிக்க துடிக்க பார்வைக்குள் பூச்சிகள் பறப்பதை உணராதது போல கண்ணாடியைக் கழற்றி கண்களை தேய்த்துக் கொண்டான்..... காரும், காரில் இருந்து இறங்குபவனும்.... தெளிவாக தெரிந்தாலும் மனதுக்குள் ஏதோ திரை மூடி இருப்பது போலவே உணர்ந்தான்....சட்டென கவனம் கலைக்கும் எதுவும் இப்போது சிந்தனைக்குள் வரக் கூடாது என்று கட்டளையிட்டவனாக, மீண்டும் கண்ணாடியைப் போட்டுக் கொண்டு பள்ளத்தாக்கை ரசிப்பது போல நிற்க காரில் இருந்து இறங்கிய அந்த ஆள்... தடுப்பு சுவர்.. விளிம்பில் நின்று அரைவட்டம் அந்தப் பதக்கம் பார்த்தபடி தன்னை ஆசுவாசப் படுத்திக் கொண்டிருந்தான்........முகிலைக் கண்டு கொண்டது போல தெரியவில்லை...
 
"வயது 50 முதல் 55 வரை இருக்கலாம்... நல்ல உடல்வாகு... சரி அது எதற்கு இப்போது....... தேவை ஒரு மரணம்.... அதுவும்... தெளிவான திட்டமிட்ட மரணம்..." சட்டென முடிவை நெருங்கிய முடிவெடுத்த முகில்.. முதல் நின்ற அபாயமான இடத்திற்கே சென்றான்... கால்கள் நடுங்க,கைகள் தடுமாற... எட்டிப்பார்த்தான்.. கீழே குட்டி குட்டியாய் தெரிந்த மரங்களின் பரப்பில் தலை சுற்றியது..மனதை இறுக்கிக் கொண்டான்.... மௌனம் உதைத்து தள்ளினான்..... தடுமாறி விழுந்து விட்டவன் போல.... "சார்.... காப்பாத்துங்க ..... சாரி... காப்பாத்துங்க ... கால் மாட்டிகிச்சு ...."என்று கத்தத் துவங்கி தன் திட்டத்தை ஆரம்பித்தான்.......
 
அடுத்த கணம்... கார்க்காரன்...." என்ன.... என்ன.. என்னாச்சு....."என்றுக் கத்திக் கொண்டே சற்று முன் இங்கு நின்றவன் இப்போது காப்பாத்த சொல்லி கத்துவதை ஓரளவுக்கு புரிந்தபடியே முகில் தொங்குவதாக தொங்கிக் கொண்டிருந்த விளிம்பை நோக்கி வேகமாக ஓடி முன்னேறி மெல்ல தடுப்பு சுவரைத் தாண்டி நின்றவன்.......... "என்னாச்சு பிரதர்.... இங்க எல்லாம் இறங்கலாமா... கையப் பிடிங்க..... என்று பதறியபடியே நெருங்கி தன் கையை முகிலை நோக்கி நீட்டினான்...
 
அந்த 9 வது கொண்டைஊசி வளைவு மிகப்பெரிய சாட்சியாக வட்டமாக சுழன்று ஒரு பள்ளத்தாக்கில் கிடப்பதை ஒரு கணம் இருவருமே பார்த்தார்கள்....
 
முகிலின் இடது கை பாறை இடுக்கில் இருந்த இரும்பை நன்றாக பற்றிக் கொள்ள......வலது கையில் மாட்டிய கார்க்காரனின் வலது கையை நன்றாக பற்றி... ஒரே மூச்சில் கீழ்  நோக்கி இழுக்க.. முழு உடலையும் கீழ் நோக்கி சரித்து வளைந்து கொண்டிருந்த கார்க்காரன் நிலை தடுமாறி... நொடிக்குள் எதிர்பாராத விசையின் இழுப்பால்..... கீழ் நோக்கி பள்ளத்தாக்கில் விழத் தொடங்கினான்... அவனின் உயிர்கத்தல் வெகு தூரத்தில் கத்தும் கழுகில் ஓசையாகி காற்றெங்கும்.... மரணத்தை தூவியது.... அவன் சரிந்து விழ விழவே.. அவன் கை தன் கையை விட்டு விலகியதுமே.. இன்னும் பாறையோடு ஒட்டி ஒரு பெரும் பல்லியைப் போல உடல் கவிழ்ந்து நடுங்கிக் கொண்டே ஒட்டிக் கொண்டான்... 
 
கண நொடிகளுக்குப் பின் மீண்டும் எட்டிப் பார்த்தான்.... யாரும் அங்கு விழவே இல்லை என்பது போல ஒரு அமானுஷ்ய அமைதி....எப்போதும் போல பரவிக் கொண்டிருந்தது....
 
சட்டென மேலேறி ஓடிய முகில்.. காட்டுக்குள் காடாக மறைந்தான்...... வேகமாய் வேகமாய்......அதி வேகமாய் மூச்சிரைக்க.. முதல் முறையாக ஒரு மரணத்தை ஏற்படுத்திய உடல் நிலையோடு மன நிலை தாறுமாறாக பயணிக்க, ஓடினான்.. ஓடினான்... ஓடிக் கொண்டே.... சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டான்........ யாருமே இல்லை.. வெறும் காடு... வேறு காடாய் தெரிந்தது... கிளைகளிலும் மரங்களிலும் வேர்களிலும் உரசி விடாமல்.. தெளிவாக ஓடினான்.... குரங்கு அருவியில் இன்னுமும் அரை ட்ரவுசர்க்காரி இன்னும் பலத்த நனைதலோடு விளையாடிக் கொண்டுதான் இருந்தாள்.....பார்க்கவே ஒரு மாதிரிதான் இருந்தது.... பார்த்துக் கொண்டே கூட்டத்தோடு கூட்டமாய்.. கலக்க....... சற்று நேரத்தில் வால்பாறையில் இருந்த பொள்ளாச்சி நோக்கி வந்த பேருந்தில் எந்தவித பதட்டமும் இல்லாமல் ஏறிக் கொண்டான்.. மனம் மட்டும் குதித்துக் கொண்டேயிருந்தது.........
 
மனம் மீண்டும் ஒருமுறை பின்னோக்கி, நேற்று இரவு நடந்ததை சுற்றியது......
 
இருளின் சாலையில்.... விழியற்ற வெறுமை போல... இருந்த நடையில்.... ஏதோ  வெளிச்சம் நீண்டு வந்து பட்டதை, கூசிய கண்கள் உணர... ஒளி வந்த வழி பிடித்து நகர்ந்த மொழியின் கண்களில் ஒரு அலைபேசி கிடந்தது......... 
 
எதுவுமற்ற யோசனைக்குள், அலைபேசியின் ஆடை... கொஞ்சம் கொஞ்சம் அவிழ்ந்து எப்போதும் போல ஓர் ஆசையாகவே பட...மெல்ல குனிந்து எடுத்தான்..... அப்போதுதான் ஏதோ குறுஞ்செய்தி வந்த வெளிச்சம் அது.. சட்டென இருள் சூழ்ந்தது........ ஆனால் அருகில் யாரோ விழுந்து கிடப்பதை நன்றாக உள்ளுணர்வு உணர்ந்தது..... சுற்றும் முற்றும் இரவை துலாவியபடியே மீண்டும் அந்த அலைபேசியின் ஆன் பட்டனை அழுத்த, முகப்பு வெளிச்சம் பட்டென மின்னியது....
 
மனம் சொல்ல சொல்ல... அந்த புதரின் உள் பக்கவாட்டின் உள்புறம் நகர, மனம் சொன்னது சரிதான்...........ஒரு உருவம் கிடப்பதை இருட்டுக்குள் பரவும்... சூட்டோடு... அலைபேசியின் கண் சிமிட்டலின் உதவியோடு.. காண முடிந்தது.. திகைப்பதை விட... திடீர்... அருகாமை ஏதோ செய்தது....அன்னிச்சை செயலாக அலைபேசியின் வெளிச்சத்தை, கீழே சரிந்து கிடந்த உருவத்தின் மேல் பாய்ச்ச, அது அவன் முகத்தில் போய் நின்றது..... அசைவற்றுக் கிடந்த அவனை ஒரு மருத்துவனைப் போல கூர்ந்து கவனித்தான்....ஆள் அரவமில்லாத இரவு... இன்னும் இன்னும் அவனை நெருக்கிப் போர்த்திக் கொண்டதாக உணர்ந்தான் முகில்........ 
 
"என்ன செய்வது....? யாரிவன்.....?.. என்னாச்சு...என்னாவாகியிருக்கும்....ஏதும் விபத்தா...... இல்லை.. யாராவது கொலை செய்து போட்டிருப்பார்களா.......இல்லை குடித்து விட்டு விழுந்து கிடக்கிறானா..... என்ன செய்யலாம்"- என்று மனம் யோசிக்க.... அணைந்து விட்ட அலைபேசியின் முகப்பை.. மீண்டும் ஆன் செய்து எரிய விட்டு, குனிந்து விரலை அவனின் முகத்தருகே கொண்டு சென்றான்... அசைவற்றுக் கிடந்தவனின் கண்கள் அகல விரிந்து கிடந்தது இப்போது இத்தனை அருகில் பயம் ஊட்டியது..... பயத்தை மூச்சால் அடக்கி, கண்களைக் கூராக்கி.. அவனையே பார்த்தான்.. விரல்கள் நடுங்கியபடியே அவனின் மூக்கையே தொட்டு விடும் தூரத்தில் சுவாசம் தேடியது... ம்ஹும்..... சுவாசம் இல்லை....உணர உணர.. நன்றாகவே மூளைக்குள் விழுந்தது.... நிஜம்...... ம்ஹும்.. மூச்சு வரவேயில்லை.. 
 
சட்டென விரலை எடுத்தவன்..... நிஜம் துரத்துவது போல உணர்ந்த நொடியை துரத்திக் கொண்டே  தட தடவென அந்த இடத்தை விட்டு நகர்ந்தான்.......எதுவுமற்ற புள்ளியில் வேகமாய் நீண்டது பாதை... நடக்க நடக்க மனம் மட்டும் அவனிடமே நின்றது.....
 
"யார் அவன்.. ஒரு வேளை கொலையோ.... வண்டி கூட பக்கத்தில் இல்லையே... ஆக, விபத்தும் இல்லை.. நடப்பவன் மீது வண்டி ஏதும் மோதி இருக்குமோ......."- கேள்விகளின் வேகத்தில் பதிலைக் கண்டு கொள்ளாத நகருதலில்... வீடே வந்து விட்டான்.... கதவை அடைத்துக் கொண்டு... கட்டிலில் சாய்ந்தவன்.. ஏதோ கொலை செய்தவன் போலவே உணர்ந்தான்.......
 
"உயிரோடு இருந்தாலாவது ஆஸ்பத்திரிக்கு கொண்டு போலாம்... செத்தவனை என்ன பண்ண.....?... போலீஸ்ட்ட போனா.. என்கிட்டல்ல ஆயிரம் கேள்வி கேப்பானுங்க ...என் மேலையும் வீணா சந்தேகம் வந்து கோர்ட்டு கேசுன்னு அலைக்கழிச்சு.... அய்யோ ..... வேண்டாம்ப்பா.... . வம்பெதுக்கு.."- பசிக்கும் வாழ்வுக்கும் இடையில் மாட்டிக் கொண்ட காலத்தில் எதற்கு செய்யாத கொலை எல்லாம்... என்று யோசித்தவனுக்கு அப்போதுதான் உரைத்தது.. அந்த அலைபேசி ... தன் சட்டை பையில் இருப்பது...!
 
அலைபேசியை சட்டை பையில் இருந்து எடுக்கும் கை நிதானமாக இல்லை...இருந்தும் எடுத்தான்.... மத்திய தர வகை அலைபேசி.... அன்னிச்சையாக ஆன் செய்ய ஆன் ஆகிக் கொண்டது... ரகசிய எண்ணிலோ தொடுதலிலோ அலைபேசி பூட்டியிருக்கவில்லை.......  ஒரு வித தடுமாற்றத்தோடு.... பூட்டி வைக்காத அலைபேசியா.... என்று பலதரப்பட்ட யோசனையோடு...ஒரு வித ஆர்வக் கோளாறோடுதான், இன்னும் சொல்லப்போனால் செத்தவன் யாராக இருக்கும் என்று தெரிந்து கொள்ள கூடிய ஆர்வத்தால்தான் ...  மின்னிக் கொண்டிதிருந்த குறுஞ்செய்தியைத் திறந்தான்....
 
படித்தான்.. திக் கென்று வேர்த்தது.... 
 
அலைபேசியை கட்டிலில் வைத்து விட்டு முகத்தை துடைத்துக் கொண்டான்..... மீண்டும் மெதுவாக மீண்டும் ஒரு ஒருமுறை திறந்து படித்தான்......
 
ஆழியார்- 9வது வளைவு- நாளை - நேரம் 2.30 டு 3.00 PM- கார் நம்பர் *********-தனியாக வருகிறான்.... ஆளை முடித்து விடு.. நாளை இரவு 9 மணிக்கு ***** பாரடைஸ்ல 20 L வாங்கி கொள்.. டேபில் என் 9.
 
"என்னடா இது.... இது ஏதோ பெரிய விவகாரம் போல"- என்று முணங்கிக் கொண்டே வேறு செய்திகள் இருக்கிறதா என்று தேடினான்.. ம்ஹும்... இது ஒரே ஒரு செய்தி மட்டும்தான்.. வந்து போன அழைப்புக்களோ, ஹிஸ்டரிகளோ எதுவுமே இல்லை... சுத்தமாக இருந்த அலைபேசியை தீர்க்கமாக ஒரு முறைப் பார்த்த முகில், மீண்டும் மீண்டும் படித்தான்........ 
 
வீட்டுக்குள் அங்கும் இங்கும் நடந்தான்......மனம் தேவை இல்லாமல் குறுக்கே புகுந்தது..... 
 
"யாரோ யாரையோ கொலை செய்ய இவனை பயன் படுத்துகிறார்கள்... ஆனால் இவன் செத்துக் கிடக்கிறான்... இவன் செத்தது கொலை செய்ய சொன்னவர்களுக்கு தெரியுமா..... தெரியாதா........?"
 
குழப்பத்துக்குள் நடந்தான்.. ... "இது பற்றி நாமக்கு ஏன் இத்தனை யோசனை...."-  என்று யோசித்தான்... மனம் அந்த 20 Lல் நின்றதை உணர்ந்த கணம் எதிரே இருந்த நிலைக் கண்ணாடியில் அவன் உருவம் வேறு ஒருவனைப் போல காட்டியது...
 
மீண்டும் நடந்தான்.... காற்றினில் கணக்கு வரைந்தான்....கட்டிலில் அமர்ந்து ஆழமாய் கண்கள் மூடி யோசித்தான்...... அவனின் இதயத் துடிப்பை அவனே கேட்க முடிந்த தருணத்தில் ஒரு மிகப் பெரிய சிறகை காற்றினில் தூண்டில் போட்டு பிடிக்க முயலுவதாகவே பட்டது அவனின் சிந்தனை ஓட்டம்......
 
"இத்தனை தீர்க்கமாக ஒரு குறுஞ்செய்தி இருக்கிறதென்றால்..... சாக போகும் ஆள் கண்டிப்பாக அங்கு வருவான் என்பதை முன் கூட்டியே கவனித்து பின் தொடர்ந்துதான் திட்டம் தீட்டியிருப்பார்கள்...கண்டிப்பாக செத்தவனைப் பற்றி கொலை செய்ய சொன்னவர்களுக்கு இன்னும் தெரிய நியாமில்லை.... தெரிவதற்கு முன் இந்த வேலையை நாமே முடித்து விட்டால்........?......... சரியாக திட்டமிட்டால் கொலையும் நடந்து விடும்.. தப்பித்தும் கொள்ளலாம்....பணமும் கிடைத்து விடும்..... ஆனால் இது எதற்குமே ஒரு ஆரம்பமோ முடிவோ இல்லையே.. சாக போகிறவன் யார் என்றும் தெரியவில்லை...... கொலை செய்ய சொன்னவனும் யார் என்று தெரியவில்லை..ஆனால் ஒன்று மட்டும்... நிச்சயம்.... நாளை யாரையோ கொல்ல போகிற இந்த அலைபேசிக்கு சொந்தக்காரன்.... அதாவது இன்று சாலையில் செத்துக் கிடந்தவனுக்கும் கொல்ல சொன்னவர்களுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பது மட்டும் நிச்சயம்.. அப்படி இருந்தால் இத்தனை பெரிய விஷயத்தை ஏன் குறுஞ்செய்தியில் அனுப்ப வேண்டும்... குறைந்த பட்சம் இப்போது பார்த்துக் கொள்ளக் கூடாத, முடியாத சந்தர்ப்பத்திலாவது இருக்க வேண்டும்...எல்லாமே அனுமானம் தானே.... போகும் வரை போகட்டும்..."
 
"இந்த சூழ்நிலையில் நான் அவனுக்கு பதிலாக போனால் என்ன...?.... நான் போனால் யாருக்கு தெரிய போகிறது.... கண்டிப்பாக செத்தவன் வர போவதில்லை....சாக போகிறவனும் வரப் போவதில்லை.... பணம் கொடுக்க போகிறவனுக்கு யார் கொன்னால் என்ன... அவன் கணக்குபடி நாளை அந்த புள்ளி சாக வேண்டும்.. கொன்னவனுக்கு பணம் கொடுக்க போகிறான்...... கண்டிப்பாக கொலை நடந்து விட்டால்.. பணம் கிடைக்கும் என்று உள் மனம் கூறுகிறது.... போய்தான் பார்ப்போமே.... சரியாக திட்டமிட்டால் யாருக்கும் தெரியாமல் வேலையை முடிக்கலாம்....ஆனால் ஒரு வேலை சாக போகிறவன் நாளை வராமலும் போகலாம்.... வந்தாலும்.... கொல்ல முடியாத சூழ்நிலை அமையலாம்.... ஆழியார் 9 வது வளைவு என்பது சுற்றுலாவாசிகளின் வியூ பாய்ன்ட்......"
 
சரி.. இப்படி யோசிக்கலாம்.....
 
"ஒரு வேலை நாளை அந்த நேரத்துக்கு அங்கு யாருமே இல்லை என்றால்....? 
அந்த புள்ளி... சரியாக அந்த நேரம் வந்து அங்கு வந்தான் என்றால்..?
 
கொலையாளிகளின் திட்டப்படி.. அந்த புள்ளி கண்டிப்பாக 9வது வளைவில் நிற்பான், என்பது திட்டவட்டம்.
இல்லை என்றால் அந்த இடத்தை கொலையாளிகள் ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்...? 
ஒருவேளை எப்போது அந்த வழியாக வந்தாலும் நின்று சற்று இளைப்பாறி விட்டு போகும் பழக்கம் இருந்திருக்கலாம்.. 
அது திட்டத்துக்கு உதவி இருக்கலாம்.... அதன்படியே நடந்து விட்டால்......?
அங்கிருந்து கீழே தள்ளி விடுவது ஒன்றும் பெரிய காரியம் அல்ல... 
ஏன் முயன்று பார்க்க கூடாது...
நாளை கொலை செய்ய முடியுமா முடியாதா என்பதை அந்த நேரம்தான் தீர்மானிக்கும்.. முயன்று பாப்போம்..முடிந்தால் செய்வோம்.. இல்லையென்றால் அலைபேசியை வீசி எறிந்து விட்டு, ஆழியார் சுற்றிப் பார்த்து விட்டு வந்து விடலாம்... 
நாளை காலை வரை இந்த அலைபேசிக்கு எந்த தகவலும் மீண்டும் வர வில்லை என்றால் திட்டம் அடுத்த கட்டம் நகர வேண்டும் என்று பொருள்... நடத்துவோம்....." 
 
ஆழியார் போய் திரும்பும் வரை என் முகத்தை தெரிந்தவர்கள் யாருமே பார்த்து விடக் கூடாது .... எங்கும் பதிந்து விடக் கூடாது அவ்வளவு தான்.... மற்றபடி.. சாக போகிறவனும் எனக்கு தெரிந்தவனில்லை.... சாகடிக்க சொன்னவனும் எனக்கு தெரிந்தவனில்லை....சாட்சிகள் இல்லை என்றால்.... யாருமே கண்டு பிடிக்க முடியாத எப்போதும் போலான என் வாழ்கையை 20 L கொண்டு வாழ்ந்து கிடக்க முடியும்.....எல்லாமே அனுமானம்தான்.... அதன் போக்கில் போக... அனுமதிப்போம்...அனுமானங்களால் வெற்றி பெற்றவர் எத்தனையோ  பேர் உண்டு......  முடிந்தால் முடியட்டும்.. இல்லை.. விட்டு விடலாம்..." என்று யோசித்துக் கிடந்த இரவு முழுக்க அந்த அலைபேசிக்கு ஒரு செய்தியோ அழைப்போ வரவில்லை..... 
 
விடியலில் கிளம்பத் தொடங்கினான்....
 
எல்லாவற்றையும் முடித்து விட்டு திரும்பி கொண்டிருக்கும் பயணம் கோவையை நோக்கி இப்போது .....
கண்கள் மூடி தியானித்தவன் போல இருந்தவன் மனதில் நிழற்படங்களாக எல்லாமும் ஓடி முடிய, கோவையை வந்தடைந்திருந்தது பேருந்து......
 
நேரம் இரவு 8.30
 
பேருந்தை விட்டு இறங்கியவன்... நேராக சென்ற இடம் ******* பாரடைஸ் ஹோட்டலின் 9 நம்பர் டேபிள்..... 
ஏற்கனவே ஒருவன் அமர்ந்து குடித்துக் கொண்டிருந்தான்..... 
கொஞ்சம் கூட பயமோ நடுக்கமோ இல்லாமல்... சர சரவென சென்று எதிரே அமர்ந்தான்........ 
 
கண்டிப்பாக பணம் கிடக்கும்... என்று மனம் தீர்க்கமாக நம்பியது.. எந்த பிரச்சனையும் இங்கு ஆக போவது இல்லை.... என்று மனம் சொல்லிக் கொண்டிருக்கும் போதே வைட்டர் வந்து குடிக்க என்ன என்று கேட்க.... பீர் ஒன்று என்று கூறியபடியே எதிரே இருந்தவனை நோட்டம் விட்டான்.... அவன் சட்டென எழுந்து போய் விட்டான்.. ஆனால் இவன் பக்கம் ஒரு பேக் நகர்ந்து வந்திருந்தது........ 
 
கண்களில் விழுந்த பையில்... மனம் முழுக்க நிறைய.. மட மடவென குடித்த பீருக்கு காசு கொடுத்து விட்டு, பணப்பையோடு வெளியேறினான்...... 
 
வீடு நோக்கி நடந்த போது கொஞ்சும் போதை....கொலை பயத்தை தூக்கி வீச செய்து விட்டு பணத்தை அணைக்கக் சொன்னது... அந்த அலைபேசியை கழற்றி நினைவு அட்டையை உடைத்து பக்கத்தில்  ஓடிய சாக்கடைக்குள் வீசினான்... அலைபேசியை கல் கொண்டு அடித்து உடைத்து அதையும் எதிரே ஓடிய சாக்கடைக்குள் ஆங்கங்கே சிதறினான்...
 
அடுத்த நாள் வேறு மாதிரியான ஒரு விடியலாய் இருந்தது......... 
 
கதையை முடித்து விட்டு வெளியே வந்த முகில், வழக்கம் போல் தேனீர் கடையில் தேனீர் குடிக்க...." என்ன கதை ஆசிரியரே.. நேத்து முழுக்க ஆள் வெளியவே வரல...." என்று கேட்டபடியே தேனீர் ஆற்றிக் கொண்டிருந்தார் கடைக்காரர்... 
 
"எழுத உக்காந்தா எல்லாமே மறந்துடும் அண்ணே.... என்னைக்கு, எழுத உக்காந்த அன்னைக்கு டீ குடிக்க வந்திருக்கேன்....... இல்லையா....? என்று வெகு இயல்பாக எப்போதும் போல கேட்டான்.. கொஞ்சம் சிரிப்பையும் சேர்த்துக் கொண்ட முகில்........
 
"ஆமா.. ஆமா...... நான் சும்மா கேட்டேன் எழுத்தாளரே..... நீங்க எழுத உக்காந்தா இடியே விழுந்தாலும் எந்திரிக்கமாட்டீங்கன்னு தெரியாதா என்ன..." என்றபடியே அவரின் வேலையை தொடர.... அருகில் டீ குடித்துக் கொண்டிருந்த ஒருவர் பேப்பரும் படித்தார்....... 
 
"மணல் கொள்ளையில் கைதாகி பெயிலில் இருந்த  பிரபல தொழில் அதிபர்.. சரித்திரன்..மன உளைச்சலால் மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்..... ஒரு வேலை கொலை செய்யப்பட்டாரா என்றும் சந்தேகித்த காவல் துறையிடம், அவரின் மனைவியே "அவர் தற்கொலைதான் செய்து கொண்டார்.. பெயிலில் வந்த பிறகு தவறு செய்து விட்டதாகவும்... எப்படியும் தண்டனை பெரிதாக கிடைக்கும்" என்றும் புலம்பிக் கொண்டே இருந்ததாகவும் கூறினார்... அதன் பிண்ணனியில் அவர் தற்கொலைதான் செய்து கொண்டாரா... இல்லை.. ஒரு வேலை கொலைதான் செய்யப்பட்டாரா....." என்று அவரின் உடலைக் கண்டு பிடித்த பிறகே உறுதி செய்யப்படும்........ "
 
அதன் பிறகு எதுவும் முகிலின் காதில் கேட்கவில்லை.....நேற்று எழுத வேண்டிய கதையை தொடர வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினான்..... 
 
தூரத்தில் நின்று முகிலைப் பார்த்து மெல்ல சிரித்துக் கொண்டே நகர்ந்தான்.. நேற்று இறந்தவன் போல சரவணம்பட்டி சாலையில் புதருக்குள் விழுந்து கிடந்தவன்....
 
- கவிஜி