அந்த இடமே மிக ரம்யமாக இருந்தது.

man confused 216மாநகரத்திற்கு வெளியே, புறவழிச்சாலையின் வாகன சத்தங்கள், மனிதர்களின் சலசலப்புகளிலிருந்தெல்லாம் விலகி, சுற்றிலும் வயல்வெளிகளும் மரங்களுமாக, இயற்கையின் வண்ணம்பூசியிருந்தது அந்த ஆசிரமம்.

ஆண்களும் பெண்களுமாக நாங்கள் மொத்தம் நூற்றியெட்டு பேர்கள். குழந்தைகளை அழைத்து வரக்கூடாதென்று முன்பே கட்டாயமாக சொல்லிவிட்டார்கள்.

வந்திருwதவர்கள் அனைவரும் உயர் மற்றும் உயர்மத்திம வர்க்கத்து மனிதர்கள்.

இன்னும் சுலபமாகச் சொன்னால், நிறைய பணம் வைத்துக் கொண்டு நிம்மதி தேடுபவர்கள் மற்றும் சுமாரான வசதியில் அவர்களைப் போல காட்டிக் கொள்ள விரும்புபவர்கள்.

மைக்கில் பேசத் தொடங்கிய பெண்ணிற்கு இருபத்திரண்டு வயதிருக்கும். அழகாக ஆரோக்கியமாக இருந்தாள்.

இந்த ஐந்துநாள் ஆன்மீக அனுபவத்திற்கு எங்களை வரவேற்றாள். மூன்று வருடங்கள் முன்பு இந்த வகுப்பில் கலந்துகொண்டு தான் அடைந்த உன்னதங்கள் பற்றி உரையாடினாள். வகுப்புகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் கலந்து நடக்குமென்றாள்.

எனக்கு இதெல்லாம் புதிய அனுபவம். இதற்கு முன்பு இதுபோன்ற இடங்களுக்கெல்லாம் நான் சென்றதில்லை.

சிறுவயதில் ஒருமுறை திருப்பராய்த்துறை இராமகிருஷ்ணர் மடத்திற்கு மாமாவுடன் சென்று, எல்லோரும் வெகுநேரம் கண்மூடி அமர்ந்திருப்பதைப் பார்த்து சிரித்திருக்கிறேன். மற்றபடி எப்போதும் கோவில்களும் குழப்பமான பிராத்தனைகளும்தான்.

நண்பர்கள் இவரிடம் போ அவரிடம் போ என நிறைய பேர்களைப் பற்றிச் சொல்வார்கள். எங்கும் சென்றதில்லை.

ஒரு பரிசோதனை முயற்சியாகத்தான் இங்கு வந்தேன். செய்தித்தாளில் விளம்பரம் பார்த்ததும் முடிவு செய்து கிளம்பி வந்துவிட்டேன்.

அந்தப் பெண் பேசி முடித்ததும் கொஞ்சம் தயக்கத்தோடு கைகள் தட்டினோம். சற்றுநேரம் சளசளவென பேச்சு சப்தங்கள்.

திடீரென்று கம்பீரமான குரலில், வடமொழி ஸ்லோகமொன்றை சொன்னபடி அல்லது பாடியபடி அவர் வந்தார்.

'ஸ்வாமி தேவானந்தா'

ஒரு ஹைடெக் சாமியாருக்குண்டான அத்தனை அம்சங்களோடும் இருந்தார். அந்த ஹாலின் கடைசியிலிருந்து எங்களைப் பார்த்துக் கொண்டே நடந்துவந்து, எங்களுக்கு முன்பிருந்த சிறிய மேடையில் அமர்ந்துகொண்டார்.

தன்னை தேவா என அழைக்குமாறு கேட்டுக்கொண்டார். எங்கள் அனைவரையும் ஊர், பேர், தொழில் என சுருக்கமாக அறிமுகம் செய்து கொள்ளச் சொன்னார். செய்தோம்.

பெரும்பாலும் தொழிலதிபர்கள், உயரதிகாரிகள்.

அறிமுகப் படலம் அரை மணிநேரம் பிடித்தது. பிறகு மறுபடி எங்களிடம் மைக் கொடுத்து இந்த ஆன்மீக வகுப்பிற்கு வந்த காரணம் கேட்கப்பட்டது.

நிறைய காரணங்கள். உடல், மனக்கோளாறுகள் தொடங்கி, உறவுகளின் துரோகம் தொட்டு, பொதுவில் வாழ்வின் சலிப்புதான் காரணங்களாக இருந்தது. என்முறை வந்தபோது 'ஒரு சுவாரஸ்யத்திற்காக' என்றேன்.

எல்லோரும் ஒருமுறை என்னை திரும்பி விசித்திரமாகப் பார்த்துக் கொண்டார்கள். இறுதியாக தேவானந்தர் உரையாற்றத் தொடங்கினார்.

"இது ஒரு புராதனமற்ற ஆன்மீக வகுப்பு. இதை முற்றிலும் வடிவமைத்தவன் என்னும் முறையில் உங்களுக்கு சில விதிமுறைகள் தருகின்றேன். இந்த வகுப்பின் பெயர் உங்களுக்குத் தெரியும். 'வாழ்வது எப்படி'.

இனிவரும் ஐந்து நாட்களும் நீங்கள் அதைத்தான் கற்றுக் கொள்ளப் போகிறீர்கள். உரை முடிந்தபின் எனது சீடர்கள் உங்களுக்கென அடையாள அட்டைகள் வழங்குவார்கள். இனி அவைதான் உங்கள் பெயர்.

இந்த ஐந்துநாள் வகுப்பு முடியும்வரை, உங்கள் பெயர், தொழில், உறவுகள், இதுநாள்வரை நீங்கள் வாழ்ந்ததாக நினைவிலிருக்கும் உங்கள் வாழ்க்கை சம்பந்தப்பட்ட அனைத்தையும் மறந்து விடுங்கள்.

உங்கள் அட்டையிலிருக்கும் பெயர் மாத்திரமே நீங்கள். இதில் உங்களுக்கு ஒரு சலுகையுண்டு. உங்களுக்கு விருப்பமான பெயர்களை நீங்களே தேர்வு செய்துகொள்ளலாம்.

வகுப்பிற்காக நீங்கள் நிரப்பித் தந்த விண்ணப்பத்தாளில் குறிப்பிட்டுள்ளபடி உங்களுக்கு சைவ, அசைவ உணவுகள் வழங்கப்படும்.

நான், நீங்கள் எனது சீடர்கள் அனைவரும் சேர்ந்து நாம் மொத்தம் நூற்றிருபது பேர்கள் இங்கிருக்கின்றோம். இனி நாம் அனைவரும் ஒரே குடும்பம்.

பேசுவதாலேயே உலகத்தில் நிறைய பிரச்சனைகள். அதனால் நீங்கள் பேசவே கூடாதென்று சொல்லவில்லை. ஒரு நபரிடம் அதிகபட்சம் இரண்டு நிமிடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

உங்கள் மருந்து மாத்திரைகளை சீடர்களிடம் கொடுத்து தேவைப்படும்போது வாங்கிக்கொள்ளுங்கள்.

உங்கள் செல்போன் கைக்கடிகாரங்களையும் ஒப்படைத்துவிடுங்கள் ".

தேவா நிறைய சொல்லிக் கொண்டிருந்தார்.

அவர் பேசி முடித்தபின்பு அனைவருக்கும் பெரிய மூங்கில் தட்டுகளில் எங்களுக்கான அடையாள அட்டைகள் வந்தன.

அல்லி, முல்லை, மந்தாரை, கலிலியோ, ஐன்ஸ்டைன், ஹிட்லர், காந்தி, அவ்வையார், சிவவாக்கிய சித்தர் என விதவிதமான பெயர்கள் கொண்ட அட்டைகள்.

எனக்கு வலப்புறமிருந்த குண்டுப் பெண்மனி 'முள்ளங்கி' பெயரைத் தேர்வு செய்தாள். நான் 'நெல்சன் மண்டேலா'.

மதிய உணவு மிக பிரமாதமாக இருந்தது. ஒரு இரண்டுமணி நேர இடைவெளிக்குப் பிறகு மறுபடி தேவா வந்தார்.

இராமாயண மகாபாரத நிகழ்வுகள்பற்றி கொஞ்சம் புதிதாக, வித்தியாசமாக விவரித்தார்.

மாலை ஐந்துமணி அளவில் உள்ளிருந்த மைதானத்தில் நாங்கள் அனைவரும் சேர்ந்து, விதவிதமான விளையாட்டுகள் விளையாடினோம். இருபது பேர்கள் கொண்ட குழுக்களாக பிரித்துக்கொண்டு, பிடித்தமாதிரியாக தேர்ந்து விளையாடியதில் அனைவருக்குமே உற்சாகம் துள்ளியது.

ஏழுமணிக்கு குளித்துவிட்டு வந்து கொஞ்சம் இசை கேட்டுவிட்டு இரவுணவு முடித்தோம். உறங்கினோம்.

மறுநாள் அதிகாலை நான்கு மணிக்கு எழுப்பப்பட்டோம். அவரவர்க்குத் தெரிந்த உடற்பயிற்சிகளை மேற்கொண்டோம். காலை உணவிற்கு வேலைகள் செய்தோம். காய்கறி நறுக்குதல், தேங்காய் துறுவுதல் போன்ற வேலைகள்.

பிறகு அங்கிருந்த வாய்க்காலில் குளித்தோம்....

"அப்புறம்?” என்றான் என் நண்பன்.

"நா என்ன கதையா சொல்லிக்கிட்டிருக்கேன்? இப்ப எவ்ளோ ஃபிரஷ்ஷா இருக்கு தெரியுமா? அஞ்சுநாளும் அவ்ளோ ஜாலியா உற்சாகமா இருந்திச்சி. மனசு மறுபடியும் ஒரு சின்னப்பையன் மாதிரி ஆயிடுச்சி ".

நான் சீரியாஸான முகத்தோடு சொன்னதில் அவனுக்கு ஏதோ உறைத்துவிட்டதுபோல.

"சரி அந்த அஞ்சுநாளும் அப்படித்தானா? ஏதாச்சும் கத்துக்குடுத்தாங்களா?”

"புரியல"

"இல்லடா ஏதாவது யோகா தியானம் அந்தமாதிரி... " ?

நான் யோசித்துப் பார்த்தேன். இல்லை. சாப்பிட்டோம். தூங்கினோம். விளையாடினோம். நீச்சலடித்தோம். இசைகள் கேட்டோம். பாட்டுக்கள் பாடினோம். ஒன்றுகூடி நடனமாடினோம்.

"இல்லடா ஏன் கேக்குற?”

"போடா பைத்தியக்காரா. சரி இப்ப சொல்லு. இருவத்தஞ்சாயிரம் ரூவா பீஸ் குடுத்து அஞ்சுநாள் ஆன்மீக வகுப்பு.. என்ன பேரு ?... ஆங்.. வாழ்வது எப்படி. கத்துக்கிட்டியா?”

அப்போதுதான் எனக்கு உறைத்தது. நான் முட்டாளாக்கப்பட்டிருக்கிறேன். உடனடியாக நண்பனை அழைத்துக்கொண்டு ஆசிரமம் சென்றேன். அங்கு ஆசிரமம் இல்லை. அது ஒரு சாதாரண தென்னந்தோப்பு.

வெறும் பத்துநாட்களுக்கு மட்டும் வாடகைக்கு எடுத்து முகாம் நடத்தப்பட்டிருப்பது தெரிந்தது.

இது நடந்து பல வருடங்கள் கழித்து, போனவாரம் ஒரு விமான பயணத்தில் தேவானந்தரை சந்தித்தேன். தாடி, மீசை, ஜடாமுடி ஏதுமின்றி, ஒரு பக்கா கார்ப்பரேட் ஆசாமியாக.

ஆத்திரத்தில் எனக்கு உடம்பு நடுங்கியது. அவன் சட்டையைப் பிடித்து நாலு அறை விடவேண்டும் போலிருந்தது. மிகுந்த சிரமத்தோடு அடக்கிக்கொண்டு அவனிடம் பேச்சு கொடுத்தேன்.

ஊர் வரும்வரை நிறையப் பேசினான்.

இந்திய பாரம்பரியம் பற்றி, கலாச்சார சீரழிவுகள் பற்றி, அணு ஆயுதங்கள் பற்றி, உலக அழிவு பற்றியெல்லாம் விஸ்தாரமாகப் பேசினான். இறுதியாக நான் கேட்டேன்.

"இதெல்லாம் பேச, ஊரை ஏமாற்றும் உனக்கென்ன அருகதை இருக்கிறது?”

அவன் துளிகூட அதிர்ச்சியடையவில்லை. நான் வகுப்பில் கலந்து கொண்டவன் என்று தெரிந்தேதான் இத்தனை நேரமும் என்னுடன் பேசியிருக்கிறான்.

எனக்கு பணம் போனதைவிட முட்டாளாகியதுதான் அதிக ஆத்திரம் தந்தது.

விமான நிலையத்திலிருந்து வெளியேறுகையில் அவன் சொன்னான்.

"என்மீது கோபப்பட உங்களுக்கு நியாயமில்லை. நீங்கள் கொடுத்த பணத்திற்கு, உங்களுக்கு 'வாழ்வது எப்படி' என்னும் பாடத்தை கற்றுக் கொடுத்திருக்கிறேன்".

"எது? சப்பாத்தி போடவும், டான்ஸ் ஆடவும் தூங்கவுமா?”

அவன் சிரித்துவிட்டு சொன்னான்.

"இல்லை"

"பின்ன?”

நெருங்கிவந்து என் காதில்,

"வாழ்க்கை என்பது கற்றுக் கொள்ளக் கூடியதல்ல".

என்று சொல்லிவிட்டு நிற்காமல் சென்றான்.

- ஶ்ரீரங்கம் மாதவன்