வழக்கம்போல் ஒரு சிகரெட் பிடிக்கச் சென்ற வழக்கமான டீக்கடையில்தான் நான் கடவுளை சந்தித்தேன். மிக மட்டமான சுருட்டு ஒன்றைப் புகைத்து குபுகுபுவென புகைவழிய அவராகத்தான் முதலில் என்னிடம் பேசினார். கடையில் கூட்டம் குறைவாக இருந்தது. கடை ஓனர் பழைய செய்தித்தாள்களை பலகாரம் மடித்துக் கொடுப்பதற்காக துண்டித்துக் கொண்டிருந்தார்.

man confusedவெயிலின் உக்கிரம் தாளாமல் மாஸ்டர் அடிக்கொருமுறை காறித் துப்பிக் கொண்டிருந்தார். ஈ மொய்த்துக் கொண்டிருந்த பலகாரத்தை அசூசையாக பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் கைநீட்டி அவர் சொன்னார். "பை த வே.. ஐம் தி காட்" என்றார். வந்த சிரிப்பில் புகையுடன் புரைக்கேறியது எனக்கு. பாண்டிமடம் பார்ட்டிபோல என்று மனதுக்குள் நினைத்தபடி எதற்கு வம்பென்று கைகுலுக்கி வைத்தேன்.

மொபைலின் நோட்டிபிகேஷனை பார்த்துக் கொண்டிருந்த என்னிடம் கடவுள் நெருங்கி அமர்ந்து கொண்டபோது சற்று நெருடலாக உணர்ந்தேன். வெயில், அழையாத விருந்தாளி கொண்டுவந்த திண்பண்டமென கடைக்குள் நிரம்பி வழிந்தது. யாரோ ஒரு கிழவர் தள்ளாமல் நடந்துவந்து எங்களருகில் அமர்ந்து கொண்டார். கடவுள் என்னையே உற்றுப் பார்ப்பதை அறிந்து சங்கடத்தில் நெளிந்தேன்.

"நாம் சற்று வெளியில் சென்று பேசலாமா" என்றார் அவர். இருக்கிற வெம்மையில் இது என்னடா சோதனை என நினைத்தபடி. "இல்லங்க வெயில் ஜாஸ்தியாயிருக்கு. எதுனாலும் இங்கயே சொல்லுங்க" என்றேன்.

"நீ என்னை கடவுளென்று நம்பவில்லை என்பது உன் முகத்திலேயே ஒட்டியிருக்கிறது"

எனக்கு இதற்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. கடைக்காரரை ஓரக்கண்ணால் பார்த்தேன். அவர் ஒரு நமுட்டுச் சிரிப்புடன் நெற்றிப்பொட்டில் விரலால் சுற்றிக்காட்டினார். நான் கடவுளை திரும்பிப் பார்த்தேன். லெவி ஜீன்ஸும் அடிடாஸ் டீ ஷிர்டுமாக படு கேவலமான காமினேஷனில் உட்கார்ந்திருந்தார். காலில் அணிந்திருந்த அடி தடித்த ஷூவும் அவசியம் பிரான்டட்தான் என்று சொல்லியது.

நான் பேசாமல் மொபைலை நோண்டிக் கொண்டிருந்தேன்.

"இந்த சாதனம் மனிதர்களை அந்நியப்படுத்திவிட்டது இல்லையா?” என்றார் கடவுள்.

"அப்படியெல்லாம் இல்லங்க. சட்டுன்னு கம்யூனிகேட் பண்ண சவுரியம்னுதான் இத கண்டுபிடிச்சதே"

"ஆனால் தொடர்புகொள்வதைவிட அதிகமாக மனிதர்களைத் தவிர்ப்பதற்கே இது பயன்படுகிறது என்பது உண்மைதானே?”

இத்தனை லாஜிக்காக பேசுகிறாரே என்று பார்த்தேன். நிச்சயம் பாண்டிமடம் பார்ட்டி அல்ல என்று எனக்குள் ஏதோ பட்சி கூறியது. நான் அவர் பேசக் காத்திருந்தேன்.

"டீ சாப்பிடுகிறாயா?”

"இல்லங்க வேணாம். நீங்க வேணா குடிங்க"

அவர் டீயை ஒரு குழந்தைபோல வாய்வைத்து ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த முதியவர் எங்களை கவனிக்காததுபோல் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார்.

திடீரென்று கடவுள் கேட்டார்.

"நீ இன்னும் என்னை கடவுள்னு ஒத்துக்கலை",

நான் இதற்கு என்ன பதில் சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். கடை ஓனர் ஓரக்கண்ணால் எங்கள் பேச்சை கவனித்துக் கொண்டிருந்தார்.

"பாருங்க அடிடாஸ் கடவுள். எனக்கு ஏகப்பட்ட வேல கெடக்கு. இந்த கடவுள் பிஸ்னஸ்ல எல்லாம் எனக்கு இன்ட்ரஸ்ட் இல்ல" என்றேன்.

கடவுள் சிரித்தார். "உன்னை நம்பவைக்க முடியாது என நினைக்கின்றாயா?”

"நிச்சயமா இல்ல. இவ்ளோ பெரிய பிரபஞ்சத்துல எனக்கு புரிஞ்சுக்க முடியாத விஷயங்கள் கோடிக்கணக்கா இருக்கு. சோ என் அனுபவத்துல இல்லாத எதையாவது காமிச்சா நிச்சயம் நா பிரமிச்சுப் போவேன். பட் கடவுள்னு எப்டி ஒத்துக்க முடியும்?”

"நீ திறமையாகப் பேசுவதாக நினைக்கிறாய்"

"இல்லவே இல்ல. எனக்குத் தெரிஞ்சதை பேசறேன்"

"சரி என்ன செய்தால் நம்புவாய் என்று சொல்”

எனக்கு விஷயம் சீரியஸாக மாறிக்கொண்டிருப்பதுபோல தோன்றியது. இதற்குமேல் சென்றால் சண்டைகூட வர நேரலாம். எதற்கு வம்பு வழக்கு என்று கிளம்ப எழுந்தேன்.

"இப்போது ஈபி ஆபீஸ் கூட்டமாக இருக்கும். சற்றுநேரம் காத்திரு" என்றார் கடவுள்.

"கவர்மென்ட் ஆபீஸ் எல்லாம் எப்பவுமே கூட்டமாத்தாங்க இருக்கும். இத கண்டுபிடிச்சு சொல்ல கடவுள் எல்லாம் தேவையில்ல"

"நீ நிரம்ப உன்னை மூடிவைத்திருக்கிறாய். கொஞ்சமேனும் திறந்த மனத்துடன் இருந்தால்தான் சிலவற்றைப் புரிந்துகொள்ள இயலும்"

எனக்கு இப்போது லைட்டாக கோபம் வந்துவிட்டது.

"பாருங்க மிஸ்டர் கடவுள். நீங்க உங்க டைம வேஸ்ட் பண்றீங்க. கோயிலு மசூதி மடாலயம்னு மக்கள் பைத்தியம் மாதிரி உங்களுக்காக காத்திட்டிருக்காங்க. நீங்க அங்கபோய் உங்க அருளுரைகளை கொட்டினா வரவேற்கப்படலாம்"

"ஏன் இத்தனை வெறுப்பாக பேசுகிறாய்"

"ஆமாங்க. வெறுப்புத்தான். சுனாமின்ற பேர்ல எத்தனை உசுருங்க ? பசி பட்டினி நோய்னு எத்தனை உசுரு ? இதுக்கெல்லாம் என்ன வெளக்கம் வச்சிருக்கீங்க?”

கடவுள் சிரித்தார்.

"இவையெல்லாமே மாயவிளையாட்டுக்கள்தான்"

"யோவ் மூடிட்டு போயிரு. வாய்ல நல்லா வருது. எதோ தமாஷா பேசுறயேன்னு பேசுனா மென்டல் மாதிரி எதாச்சும் ஒளறிட்ருக்காத. இதெல்லாம் இறைவனின் லீலா வினோதம்னெல்லாம் டயலாக் விட்டன்னா கடுப்பாயி செவுள்லயே போட்ருவேன். இதுக்குப் பேரு லீலை இல்ல. சைக்கோத்தனம். தில்லைநகர் டென்த் கிராஸ்ல ஒரு டாக்டர் இருக்காரு போயி பாரு"

எனக்கே என் கோபம் பார்த்து ஆச்சர்யம்தான். நான் சட்டென்று இப்படியெல்லாம் கோபப்படுகிறவனல்ல. கடவுள் என்னையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். பக்கத்திலிருந்த முதியவர் மெல்ல எழுந்துகொண்டு கடவுளிடம் கேட்டார்.

"சாமி இந்த வெயிலுக்கும் அதுக்கும் எனக்கு தாங்கல சாமி. எனக்கு எப்ப கட்டை வேகும்னு சொல்லுங்க" என்றபடி அவர் காலில் விழுந்தார்.

"இன்றிரவோடு உன் கணக்கு முடிகிறது" என்று கடவுள் சொல்ல அந்த முதியவர் நடுங்கியபடியே மறுபடி ஒருமுறை வணங்கிவிட்டு நகர்ந்தார்.

கடவுள் பேசாமல் அமைதியாக இருந்தார். எனக்கு சற்று பாவமாக போயிற்று.

"சாரிங்க கொஞ்சம் டென்சனாயிட்டேன்" என்றேன்.

"பொறு முதலில் உனக்கு சற்று நம்பகமாக ஏதாவது செய்கிறேன். உனக்குப் பிடித்த ஒரு உருவத்தை சொல்"

எனக்கு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டு குறும்பாக சொன்னேன்.

"சந்திரமுகி ஜோதிகாங்க"

அடுத்து சில நொடிகள் ஜோதிகா உருவெடுத்து லகலகவென நாக்கைச் சுழற்றிவிட்டு பழைய உருவத்திற்கு வந்தார். பார்த்துக் கொண்டிருந்த கடை ஓனர் படாரென்று மயங்கி கல்லாவருகே விழ மாஸ்டர் பயந்துபோய் "என்னங்க என்னங்க" என்று பதறினார். எனக்கே சற்று பதட்டமாகிவிட்டது.

சத்தமில்லாமல் அங்கிருந்து வெளியே நகர்ந்தேன். பின்னாலேயே கடவுளும். பக்கத்திலிருந்த மாரியம்மன் கோவில் படிக்கட்டில் உட்கார்ந்து என்னை சமன் செய்துகொண்டேன். பின்னால் குரல் கேட்டது.

"இப்போது நம்புகிறாயா?”

டீக்கடையிலிருந்து அவசரமாக ஒரு ஆட்டோ கிளம்பிச் சென்றது. வெளியே நீட்டிக்கொண்டிருந்தன கடை ஓனரின் கால்கள்.

"மொத எனக்கு இந்த டிசைனே புரியலங்க. கடவுள்ன்றீங்க. என்னைமாதிரி மனுஷன் உருவத்துல இருக்கீங்க?”

"என்ன செய்வது. ஆகச்சிறந்த அனைத்து மொழிகளிலும் நான் பேசிக் கொண்டேதான் இருக்கிறேன். ஆனால் உங்களுக்கு இதுதானே புரிகிறது ? இந்த உருவமோ குரலோ இல்லை என்றால் என்னை உனக்கு உணர முடிந்திருக்குமா?”

எனக்கு அவர் பேச்சிலிருந்த லாஜிக் புரிந்தது.

"ஓடும் நதியாக நான் பேசிக் கொண்டிருக்கிறேன். மலர்களாக மழையாக வெயிலாக உயிர்களாக மினுங்கும் நட்சத்திரங்களாக நிலவாக அனல்கக்கும் சூரியனாக அனைத்து இயற்கையான வழிகளிலும் பேசிக்கொண்டிருக்கிறேன். நீங்கள் கவனிப்பதாகவே தெரியவில்லை"

"சரி அப்படி நீங்கள் கடவுள்னே வச்சுகிட்டாலும் என் கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லவேயில்ல"

"மரணங்கள் பற்றித்தானே?”

"ஆமாங்க"

"முதலில் நீ ஒன்றினைப் புரிந்துகொள். இங்கு எவரும் பிறப்பதுமில்லை இறப்பதுமில்லை. ஒன்று மற்றொன்றாக உருமாறுகின்றன அவ்வளவுதான்"

"புரியலங்க. நேத்து சாயந்திரம் ரோட் ஆக்ஸிடன்ட்ல நாலு வயசுப் பையன் செத்துப்போனான். அதுக்கு என்ன சொல்லி சமாதானம் செய்வீங்க"

"உனக்கு புரியும்படி சொல்கிறேன். இந்த பிரபஞ்சத்தை மூடிவைத்த பாத்திரமாக கற்பனை செய்துகொள். அதற்குள் சில விஷயங்கள் இருக்கின்றன. இப்போது அவற்றைத் தவிர வேறு எதுவும் உள்நுழைவதோ, அவை வெளியேறவோ சாத்தியமே இல்லை. இந்த பாத்திரத்தில் உள்ளவற்றையேதான் திரும்பத் திரும்ப உருமாற்ற இயலுமே தவிர இந்த பிரபஞ்சத்தில் இல்லாத புதிதான ஒன்றை உன்னால் உருவாக்கவே இயலாது"

"என்ன பாஸ். நீங்க படைச்ச உலகத்துல ராக்கெட்டு பிளைட்டு எல்லாமா வச்சிருந்தீங்க? அதெல்லாம் மனுசந்தானே கண்டுபிடிச்சான்?”

"குழந்தைபோல பேசாதே. எல்லா பொருட்களும் அணுக்களாலும் மூலக்கூறுகளாலும் ஆனதுதான் என்பது தெரியாதா உனக்கு? உதாரணமாக ஒரு தங்கத்தில் உள்ள மூலக்கூறுகள் என்னவோ, அந்த மூலக்கூறுகளை வைத்து நீ ஒரு தங்கத்தை உருவாக்கிவிட முடியும். எல்லாமே மூலக்கூறுகள்தான்"

நான் கடவுளையே பார்த்துக் கொண்டிருக்க அவர் தொடர்ந்தார்.

"கண்டுபிடிப்பது என்பது வேறு உருவாக்குவது என்பது வேறு. தேர் ஆர் சோ மெனி டிபரன்ஸ் பிட்வின் இன்வென்ஷன் அன்ட் கிரியேட்டிவ். விஞ்ஞானம் எதையும் உருவாக்கினேன் என்று கூறாது. கண்டுபிடித்தேன் என்றுதான் சொல்லும். கண்டுபிடிப்பது என்றாலே, அல்ரெடி இருக்கிற ஒன்று என்றுதான் பொருள். அப்படித்தான் நீ இறந்து போவதாக கவலை கொள்பவர்களும். ஏதோ ஒன்றாக இருந்தவர்கள் ஏதோ ஒன்றாக உருமாறுகிறார்கள் அவ்வளவே"

எனக்கு தலைசுற்றியது.

"அதெல்லாம் விடுங்க. இப்ப உங்களுக்கு என்ன வேணும். எங்கிட்ட எதுக்கு பிரபஞ்சம் பத்தியெல்லாம் கிளாஸ் எடுத்துட்டிருக்கீங்க?”

"என்னிடம் இது வேண்டும் அதுவேண்டும் என்று கேட்காத குறைவான நபர்களில் நீயும் ஒருவன். அதனால்தான் உன்னைத்தேடி வந்தேன். நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்"

நான் சிரித்துவிட்டேன்.

"ஏங்க நீங்க கடவுள்ன்றீங்க. உங்களுக்கு நா உதவி செய்யவா?”

"ஆமாப்பா. நா வெக்கேஷனில் செல்கிறேன். நான் வரும்வரை நீ கொஞ்சநாள் கடவுளாக இருக்க வேண்டும்"

எனக்கு இந்த காமெடி எத்தனை தூரம்தான் போகிறது பார்ப்போம் என்று தோன்றிவிட்டது.

"சரிங்க கடவுளே. நா என்ன செய்யனும்?”

"உன் மனதில் தகவல்கள் வரும். நீ செய்ய வேண்டியதும் அதிலேயே குறிப்புகளாக வரும். அதன்படி நடந்துகொள் போதும்" என்று கூறிவிட்டு சட்டென்று சொல்லாமல் கொள்ளாமல் மறைந்துவிடார்.
_________________

"அப்பறம்?” என்றார் டாக்டர்.

"அவ்வளவுதாங்க. நா நடந்து பஸ்டாப்கிட்ட போயிட்ருந்தேன். கொஞ்சநேரம் கழிச்சு புர்ர்புர்ருன்னுச்சி மைன்ட்ல. திருச்சில ஜூன் 27ந்தேதி சுனாமி வரும்னு தோணுச்சி. நா வீட்ல ஊருக்குள்ள எல்லார்கிட்டயும் சொன்னேன். யாரும் நம்பல. என்னை மென்டல்னு இங்க கொண்டாந்து சேர்த்துட்டாங்க. நீங்க படிச்சவரு. நீங்களாவது நா சொன்னதை நம்புறீங்களா டாக்டர்?”

"ஐ ஸீ ?

"எனக்கென்னவோ என் மைண்ட்ல வந்தது எல்லாம் நடக்கும்னு என் உள்மனசு சொல்லுது சார். ப்ளீஸ் எப்டியாச்சும் மக்களை காப்பாத்துங்க"

"சரிதாம்பா. ஆனா திருச்சில கடலே இல்லையேப்பா. எப்டி சுனாமி வரும்னு யோசிச்சியா?”

"பட் காவேரி இருக்கே சார். ஆத்துல சுனாமி வரக்கூடாதுன்னு இருக்கா சார்"

டாக்டர் தன் பைலில் எழுதிக் கொண்டிருந்த ஹாலூஸினேஷன் மாதிரியான வார்த்தைகள் அவன் மனதில் விழுந்து கொண்டிருக்க டாக்டர் எழுந்துகொண்டார்.

அவர் நகர்ந்ததும் மைண்டில் அலாரம் அடிக்க கண்மூடிப் பார்த்தான். அந்த டாக்டர் சில நொடிகளில் இறந்துவிடுவார் என்று தகவல் இருந்தது. அவன் அவசரமாக வராந்தாவரை ஓடினான். சற்று தூரத்தில் அவர் விழுந்துகிடக்க சுற்றிலும் கூட்டம் கூடியது.

- ஸ்ரீரங்கம் மாதவன்