"ப்ளீஸ் டாக்டர். இதோட எத்தனை முறை நடந்திடுச்சி. தயவுசெஞ்சு உண்மையச் சொல்லிடுங்க ப்ளீஸ்".

டாக்டர் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
---------------------------------------

1

split personality 350நீங்கள் இதை படித்துக் கொண்டிருக்கும் விநாடியில் நான் கொல்லப்பட்டிருக்கலாம்.

அதிக சமயமில்லை. அவர்கள் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறார்கள். எந்த நேரமும் அவர்கள் என்னை கோழிபிடிப்பதுபோல் அமுக்கிப் பிடித்து என் கழுத்தை திருகிப் போடக்கூடும். எனவே சுருக்கமாக என்னைப் பற்றி சொல்கிறேன்.

எனக்கு சொந்தஊர்... இல்லை. அதெல்லாம் பிழைத்துக் கிடந்தால் பிறகு சொல்கிறேன்.

ஆமாம் பிறந்து வளர்ந்து கொஞ்சம்போல படித்து கல்யாணம் செய்து பிள்ளைபெற்று… எல்லாமே பிறகுதான்.

பிழைக்கவென்று ஆரம்பித்ததிலிருந்து நான் டிரைவராக இருக்கிறேன். பதினைந்து வருடங்களாக டிரைவர்தான். இன்னும் இருபது வருடங்கள் கடந்தும் நான் டிரைவராகவே இருப்பேன் என்பதை எந்தக் கோவிலிலும் சத்தியம் செய்யத் தயாராக இருக்கின்றேன்.

ஏனெனில் நானிருப்பது இந்தியாவில். குறிப்பாக தமிழ்நாட்டில். இங்கு வெறும் உழைப்பில் ஒருவன் பெரிய மனிதனாக உயர்வது என்பதெல்லாம் சினிமாக்களில் மட்டுமே சாத்தியம்.

இங்கு உயரத்திற்கு வந்துவிடக் கூடிய தகுதிகள் என்றால், முதல் தகுதியாக இங்கு பிறந்திருக்கக்கூடாது. இரண்டாவது தமிழ் சுத்தமாக தெரிந்திருக்கக் கூடாது. குறைந்தபட்சம் தமிழை தப்புந்தவறுமாக கொச்சையாகவேனும் பேசத் தெரிந்திருத்தல் நலம்.

வேற்று மாநிலத்திலிருந்து கணிசமான தொகையோடு வந்திருந்தால் சாலச்சிறந்தது. மந்திரிகளின் தூரத்து உறவாயிருந்தால் ஓரளவிற்கு ஓகே, பொய் சூது தந்திரங்கள் கிடையாதென்றால் வேஸ்ட்.

என்னிடமுள்ள கெட்ட பழக்கங்களில் இதுவும் ஒன்று. சொல்ல வந்ததை விட்டுவிட்டு ஏதேதோ உளறிக் கொண்டிருப்பேன்.

அய்யய்யோ அவர்கள் வந்து விட்டார்கள். நான் காலி. பார்ப்போம் வாய்ப்பிருந்தால் அடுத்த ஜென்ம.... ஆ.. அய்யோ.. ஹக்....
-------------------------------------------
2

ஒரு சினிமா நடிகையாக இருப்பதன் மிக மோசமான வலிகளில் ஒன்று. நாம் விரும்பியதைக்கூட சாப்பிட்டுவிட முடியாது. கழுகு மூக்கை கொண்ட மேனேஜர் உடனடியாக ஓடிவந்து விடுவான்.

"மேம் மேம் மேம். ப்ளீஸ் மேம். நோ ஐஸ்க்ரீம்ஸ். வீ ஹவ் டப்பிங் டுடே".

நான் அவனை மிகக்கேவலமான ஒரு ஆங்கில வார்த்தையால் திட்டினேன். அத்தனை பெரிய புகழ்ச்சியை தன் வாழ்நாளில் கேட்டதில்லை என்பதுபோல என்னைப் பார்த்து சிரித்தான்.

சிறிதுகூட கோபப்படவில்லை; உணர்ச்சி வசப்படவில்லை; சுருக்கென்று பார்க்கவில்லை. வீட்டிற்குச் சென்றபின் மனதிற்குள் என்னை வெறித்தனமாக கற்பழிப்பானோ என்னவோ.

இவனிடமும் உதவியை எதிர்பார்க்க முடியாது. என்னை அரைநிர்வாணமாக ஆட்டம் போடவிட்டு அதில்வரும் கட்டுக்கட்டான பணத்தை ருசித்துப் பழகிய உறவென்னும் பெயரில் என்னைச் சுற்றியிருக்கும் அட்டைப்பூச்சிகளின் சொல்லுக்குத்தான் இவன் ஆடுவான்.

ஒரு போன் கால். ஒரேயொரு போன்காலுக்காகத்தான் காத்திருக்கிறேன். இதுவரையிலான என் வாழ்வை ஒட்டுமொத்தமாக மாற்றியமைக்கப் போகும் அவனுக்காக.

எல்லாம் திட்டப்படி நடந்தால் நாளைக் காலை திருச்செந்தூர் கோவிலில் அவனோடு திருமணம். நடந்தால் என்ன நடந்தால்... நடக்கும். நிச்சயம் நல்லபடியாக நடக்கும்.

என்றெல்லாம் எத்தனை ஆசையாக கிளம்பினேன். புல்ஷிட். அவன் வரவில்லை. அவன் சொன்னானென்று ஏர்போர்ட்டில் சென்று எத்தனைநேரம் காத்திருக்கிறேன்.

இந்த நொடிவரை வரவேயில்லை. ஏன் வரவில்லை? கடத்தப்பட்டானா? தாக்கப்பட்டானா? பயந்து ஓடிவிட்டானா?

நான் ஏன் அழவேண்டும்? என்ன தவறு செய்தேன் அழுவதற்கு? ஒரு நடிகை கடைசிவரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டுமா?

முகத்தோல் வறண்டு தொப்பை விழுந்து கிழவியாகி நாயகனாய் நடித்தவனுக்கே தாயாக, தவமிருந்த தயாரிப்பாளர்கள் அலைபேசியை எடுக்காதவரை நடித்துக் கொண்டேதான் இருக்க வேண்டுமா?

என் முடிவை நான் தேடிக்கொள்கிறேன். இந்த மாத்திரைகள் போதை தரக்கூடியவை. எண்ணிக்கை அதிகமானால் இந்த உடலிலிருந்து விடுதலையும் தரக்கூடியவை.

நான் மாத்திரைகளை விழுங்கும்போது அவர்கள் வந்து தடுத்துவிட்டார்கள்.
-------------------------------------
3

என்னை உங்களுக்குத் தெரிந்திருக்கும். இல்லாவிட்டால் சரித்திர நூல்களை புரட்டிப்பாருங்கள். ஏதேனும் சில பக்கங்களில் நான் நிறைந்திருப்பேன்.

என் தந்தை பிலிப்பின் ஆசைமனைவிக்குப் பிறந்தவன். சிறுவயதிலிருந்தே உசுப்பேற்றிவிடப்பட்டவன்.

அடர்ந்த காட்டிற்குள் எவருக்கும் அடங்காத அந்த புஸிபாலஸ் குதிரையை அடக்கியவன் நான் தான்.

அதன் சூட்சுமத்தை எனக்கு யாரேனும் சொல்லித் தந்திருக்கலாம். அல்லது நானாகவேகூட யோசித்திருக்கலாம். எனக்கு நியாபகமில்லை.

இப்போதைய என் ஞாபகமெல்லாம் என் படைகளைப் பற்றித்தான். என் வீரர்களைப் பற்றித்தான். மிகக்கடுமையான விஷஜுரத்தில் நடுங்கும் என் விரல்களைப் பற்றித்தான்.

உலகம் முழுவதையும் ஒரே அரசன் ஆண்டால் தேசங்களுக்குள், மக்களுக்குள் வேற்றுமைகளின்றி பிரச்சனைகளின்றி வாழமுடியுமென்ற என் ஆசான் அரிஸ்டாட்டில் கூற்றில் நம்பிக்கை வைத்து புறப்பட்டவன் நான்.

கடும்புயல்வீசும் இந்த பாலைவனத்தில் நோயுற்று கிடையாய் கிடப்பேன் என்று கனவிலும் நினைக்கவேயில்லை. இதைப்பற்றி என் ஆசான் எதையும் சொல்லவேயில்லை என்பதில் எனக்கு வருத்தம்தான்.

ஞானி டயோனிஜிஸ் மெல்ல சிரிப்பது அருகில் எங்கோ எதிரொலிக்கின்றது. மரணம் என்னை நெருங்கிக் கொண்டிருப்பதாக தோன்றுவதை வெற்று பிரமையென்று கொள்ளமுடியவில்லை.

உலகை வெல்லப் புறப்பட்டவன் வெறுங்கையோடு திரும்புகின்றேன் என்பதை தெரிவிக்க, எனது உள்ளங்கைகளை சவப்பெட்டிக்கு வெளியிலிருக்கும்படி எடுத்துச் செல்ல உத்தரவிட்டிருக்கிறேன்.

எனது சவ ஊர்வலத்தில் எவரேனும் சொல்லக்கூடும் இதோ மாவீரன் அலெக்ஸாண்டராக இருந்த உடல் செல்கிறதென்று.
-----------------------------------------
4

நான் ஆறாம்வகுப்பு படிக்கும்போதுதான் முதன்முதலாக அந்த மாற்றம் கவனம்பெற்றது. சிறுவனான என் உடலெங்கும் பெண்மையின் நளினங்கள் எங்கிருந்தோ வந்து ஒட்டிக்கொண்டன.

நடக்கும்போது கால்கள் மெல்ல பின்னிப்பின்னி நடந்தன. என் இடுப்பு ஒயிலாக ஆடின. மகிழ்ச்சியின்போதும் ஆச்சரியங்களின்போதும் என் கைகள் தானாக தட்டிக்கொண்டு முகவாயில் வைத்துக்கொண்டன.

உடன் படிக்கும் மாணவர்களெல்லாம் 'டேய் பெண்டுகச்சட்டிடா' என்று என் காதுபடவே கேலிசெய்தார்கள்.

மாணவிகளெல்லாம் முகம்சுளித்து விலகிச் சென்றார்கள். ஆத்திரப்பட்டு நான் ஒரு பெண்ணைப்போல கோணிக் கோணி அழுதபோது வாய்விட்டுச் சிரித்தார்கள்.

தெருவில், அக்கம்பக்கம் வீடுகளில் என எல்லா இடங்களிலும் நான் கேலிப்பொருளானேன். என் உடலெங்கும் ஊறிய பார்வைகள் ஊசியென துளைத்தன.

நான்கு வருடங்களாக நான் வாங்காத அடியுதைகளில்லை; வசவுகளில்லை. வாரக்கணக்கில் ஒரு அறையில் என்னை அடைத்து வைத்தார்கள். நான் என்ன செய்ய?

நிஜமாகவே என்னால் மாற்றிக் கொள்ளக்கூடியதென்றால், எல்லா சித்திரவதைகளையும் பொறுத்துக் கொள்ள தலையெழுத்தா என்ன?

எனக்கு அவ்விதமாக இருப்பதுதான் இயல்பாக சுலபமாக இருக்கின்றது. பெண்ணைப்போல உடுத்துக் கொள்ளவும் அலங்கரித்துக் கொள்ளவும்தான் ஆர்வமாக இருக்கின்றது.

அவமானமாக இருக்கிறதென்று அழுது அரற்றுகிறார்கள் என் குடும்பத்தினர். போகட்டும். எல்லாமே இன்னும் சிலநேரம்தான். அவர்கள் என்னை கொல்வதென்று தீர்மானித்துவிட்டார்கள்.

எனக்கும்கூட இந்த வாழ்வு வெறுத்துத்தான் போய்விட்டது. எவராலும் புரிந்து ஏற்றுக்கொள்ளப்படாத என் வாழ்வு இருந்தென்ன போயென்ன?

இதோ அவர்கள் வரும் ஓசை கேட்கின்றது. பேய்கள்கூட உறங்கும் இந்த நள்ளிரவில் என் அறைக்கதவை மெல்ல திறந்துகொண்டு உள்ளே வருகின்றார்கள்.

நான் மூச்சை இழுத்துப் பிடித்துக்கொண்டு அமைதியாக்க் காத்திருந்தேன்.
-----------------------------------------

டாக்டர் நன்றாக நிமிர்ந்து உட்கார்ந்து கொண்டதும் அவள் மறுபடி கேட்டாள்.
"ப்ளீஸ் டாக்டர். அவருக்கு என்னாச்சின்னு மறைக்காம சொல்லுங்க".

டாக்டர் தன் வழுக்கை விழாத தலையை சற்று சொறிந்துவிட்டு சொன்னார்.

"அவரு பிராப்ளத்துக்கு 'ஸ்கீட்ஷோபிரனியா'னு பேர்.

ஸ்பிளிட் பெர்ஸனாலிட்டி னுலாம் சொல்ற ஒருவித மனச்சிதைவு கோளாறு. உதாரணமா சொல்லனும்னா, பியூட்டிபுல் மைன்ட், ஷட்டர் ஐலன்ட் படங்கள்லாம் இந்த டிஸார்டர் பேஸ்ல எடுக்கப்பட்டதுதான். தமிழ்லகூட சந்திரமுகி அந்நியன்லலாம் கொஞ்சம் ஈசியா புரியறமாதிரி விளக்கிருப்பாங்க".

அவள் கொஞ்சம் குழப்பமாக வருத்தமாக,

"அய்யோ போனமாசம் வரை நல்லாதானே டாக்டர் இருந்தாரு. திடீர்னு இப்டி? அதும் தற்கொலைலாம் செஞ்சிக்கிற அளவுக்கு?"

டாக்டர் சத்தமின்றி சிரித்தார்.

"யாருக்கு வேணா எப்பவேணா இது வரலாம். ஹெரிடிட்டியாவும் இருக்கலாம். பெரும்பாலும் சிறுவயது பாதிப்புகள் தனிமை இதெல்லாம்தான் அதிகபட்ச காரணங்கள். அதுவும் உங்க ஹஸ்பன்ட் ஒரு ரைட்டர் வேற. எத்தனை கதைகள் எழுதிருக்காரு. அந்த கேரக்டர்ஸோட பாதிப்புகளாலகூட இதுமாதிரி ஆகிருக்கலாம்".

அவள் இப்போது அழத் தொடங்கினாள்.

"இது எப்ப சார் குணமாகும்? எங்க சொத்து மொத்தமும் வித்தாவது..."

அவள் முடிக்குமுன் டாக்டர் சொன்னார். “அவசரப்படாதிங்க. திஸ் இஸ் கன்ட்ரோலபிள் பட் நாட் கியூரபிள் நவ்".

அவள் இப்போது சத்தமாக அழுதாள்.
------------------------------------------
5

I may not be alive, when you read this.

Oh…I forgot to introduce myself. I'm one of the top ten multimillionaires in India. My family is very familiar known by the name 'The ambanis' .

And I am 'mukesh'. All these things happened because of my brother Anil. Yup. We have some problem.

This whole thing has been planned by my brother. His only motive is to rid me of all my resources. That's why he is trying to prove that I'm mentally ill calling it by some ‘hard-to-pronounce’ medical name.

The doctor too is a fraud.

The woman acting like my wife is also a part of this conspiracy.

Everybody is against me for money.

Wait. Actually I'm feeling crazy. I'm a Tamil writer. Confused? Ha ha ha !

I'm writing this is in English because I don't know Tamil. Then how can I think like that?

Whatever, I don't know Who you are, reading this but, please please please.....
go to police and tell them immediately that 'Anil' is the reason...if anything happens to me.

- ஸ்ரீரங்கம் மாதவன்