நான் மதியம் சாப்பாட்டுக்கு அமர்ந்தபோது காலி தட்டில் பூரான் இருந்தது.

அய்யோ..சாரி சாரி... பூரான் இருந்தது என்றா சொல்லிவிட்டேன்? அது தவறு.. பசியில் நா குழறுகிறது.. மீண்டும் சொல்கிறேன்.

நான் மதியம் சாப்பாட்டுக்கு அமர்ந்தபோது பூரா தட்டும் காலியாக இருந்தது.

'யம்மா.. சாப்பாடு செய்யலியா இன்னிக்கு?' கத்தினேன்.

'செய்யலைடா' அடுப்பங்கறையிலிருந்து பதிலுக்கு கத்தினாள் அம்மா.

'ஏன்ம்மா?'

'ஆமா... நீ சாப்பாட்டுக்கு உக்காருவ.. தொட்டுக்க ஒண்ணும் இல்லையான்னு கேப்ப.. உனக்கும் உங்க அப்பனுக்கும் தொட்டுக்க பண்ணி பண்ணியே உசுறு போகுது எனக்கு'

'இதைத்தானே பத்து நாள் முன்னாடி சொன்னன்னு வடாம் பண்ணிக்க சொன்னது?'

'ஆமா.. மாடியில வடாம் காய போடுறேன்.. சாயந்திரம் போய் பாத்தா ஒண்ணு விடாம காணாம போயிடுதுன்னு நானும் பத்து நாளா சொல்லிட்டு இருக்கேன்.. நீயும் சரி, உங்கப்பனும் சரி கேக்குறதில்லை.. நான் வடாமை பாக்குறதா, வீட்டு வேலையை பாக்குறதா? இன்னிக்கு அதுக்கு ஒரு வழி பண்ணலைன்னா நான் சமைக்கவே போறதில்லை.. நீயும் உங்கப்பனும் வெளியிலயே சாப்டுக்கோங்க'

'என்னம்மா பசி நேரத்துக்கு இப்படி சொல்ற?' என்றேன் நான் வெறுப்பாக.

வயிற்றில் எதுஎதுவோ உருண்டது.

'பின்ன என்னடா? நீ வீட்ல வெட்டியா தானே இருக்க.. நீயாவது பாக்கலாம்ல.. ஒண்டி ஆளா நானே எத்தனைக்கு தான் ஓடுவேன்'

அம்மா அதற்குபிறகு பேசவே இல்லை.

"வெட்டியா தானே இருக்க" என்ற வார்த்தைகள் என்னை கூராக கிழித்ததென்னமோ உண்மை.

நான் என்ன வேண்டுமென்றா வெட்டியாக இருக்கிறேன். என்ஜினியரிங் முடித்தாகிவிட்டது. கேம்பஸில் வேலை கிடைக்கவில்லை. பாங்க் தேர்வுகள், இந்திய கடற்படை தேர்வுகளுக்கெல்லாம் விண்ணப்பித்து எழுதிக்கொண்டிருக்கிறேன். வேலை கிடைக்கும்வரை பெற்றோர் தானே காப்பாற்றவேண்டும். அது தானே தமிழ் நாட்டின் கலாச்சாரம்!..

அவள் என்னமோ சொல்லிக்கொண்டே இருந்தாள் தான். அதெல்லாம் அவளுடைய வழக்கமான புலம்பல் என்று நானும் விட்டிருந்தேன். மதிய வேளைக்கு பசிக்கு சோறு கிடைக்காமல் செய்த போதுதான் அவள் எத்தனை தீவிரமாக சொல்லியிருக்கிறாள் என்பது புரிந்தது.

அது யாரது வடாமை லவட்டுவது? ஏதாவது காக்காய் குருவியாக இருக்கலாம். ஆனாலும் அம்மா, கொசு வலைக்கூடுக்குள் தான் வடாம் காய போடுகிறாள். காக்காய் குருவிகளால் கூட அதை தாண்டி வடாமை கவ்வ முடியாது. நிச்சயமாக பறவைகளின் வேலையாக இருக்காது. அக்கம் பக்கத்து வாண்டு தான் இந்தக் காரியத்தை செய்கிறது என்று தோன்றியது. பப்ளுவாகத்தான் இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன்

பிள்ளையாருக்கு கொளுத்திய ஊதுபத்தியை நிறுத்திவைக்க ஸ்டாண்டாக பயன்பட்ட வாழைப்பழத்தை பிய்த்து உள்ளே தள்ளினேன். வயிற்றுக்குள் கடமுடா கொஞ்சம் நின்றது. அம்மாவை கைக்குள் போட்டுக்கொள்ளவில்லையென்றால், வேலை கிடைக்கும் வரை சோற்றுக்கு திண்டாட்டம் தான் என்று தோன்றியது.

அந்த வாண்டு யாரென்று ஒரு கை பார்த்துவிடுவது என்று தோன்றியது. லுங்கியை இடுப்பில் கட்டிக்கொண்டு மாடிக்கு வந்தேன். அம்மாவின் பட்டு சீலை ரவிக்கை, எனது ஜீன்ஸ், டிசர்ட், எல்லாம் கொடியில் ஒரு ஓரமாய் காய்ந்து கொண்டிருக்க, மாடியின் மற்றொரு ஓரத்தில் நீர்த்தேக்கி அருகில் கொசுவலைக்குள் பத்திரமாக வெய்யிலில் சூரிய குளியல் எடுத்துக்கொண்டிருந்தது வடாம்.

நான் நீர்த்தேக்கியை பார்த்த திக்கில் வடாம் கண் முன்னே இருப்பது போல ஒரு மறைவான இடமாக பார்த்து அமர்ந்தேன். மதியம் மணி 2. சாயந்திரம் ஐந்து மணி வரை வடாமை நோட்டம் விடுவது என்று முடிவு செய்து கொண்டேன்.

thief 340போயும் போயும் வடாமை திருடும் அந்த களவாணிப்பயலை கொத்தமாக பிடிக்காமல் விடுவதில்லை என்று முடிவு செய்துகொண்டேன். என்ன கொடுமை?! உச்சி வெய்யிலில், பசியோடு வடாமை பாதுகாக்க வேண்டியிருக்கிறது. வேலை இல்லாத ஆம்பளை எப்படியெல்லாம் போராட வேண்டியிருக்கிறது பாருங்கள். விவரம் தெரியாதவன், எல்லாம் என் தலையெழுத்து என்று சலிப்பேன் என்று நீங்கள் நினைக்கலாம். நோ. நான் அப்படி இல்லை. இதற்கெல்லாம் நீங்களும் ஒரு காரணம். உங்களை யாரய்யா ஊருக்கு ஊர் தனியார் பொறியியல் கல்லூரி திறக்கச்சொன்னது? நீயெல்லாம் தொழிலதிபர் ஆகி, பண‌ம் பண்ண, நான் தானா கிடைத்தேன்? ஐம்பதாயிரம் காலியிடங்களுக்கு ஐந்து லட்சம் பொறியியல் படித்தவர்கள் இருந்தால் எங்கிருந்து வேலை கிடைக்கும்? என் அப்பா அம்மாவுக்கும் கொஞ்சம் கூட விவஸ்தையில்லை. உம்மைப்போன்றவர்கள் இருப்பது தெரிந்துகொண்டும், என்னை பொறியியல் படிக்க வைத்திருக்கின்றனர்.

நான் மறைந்து கொண்ட முப்பதாவது நிமிடத்தில் எதிர்வீட்டு லக்ஷ்மணன் மாமா பால்கனி ஓரமாக வந்தார். சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு, பால்கனி ஓரமாக வந்து பக்கவாட்டில் இருந்த வீட்டின் ஜன்னலை நோட்டம் விட்டார். அந்த வீட்டில் ஒரு ஆண்டி இருப்பது தெரியும். மாமா எதையோ ஆர்வமாக பார்த்து நின்றார். என்ன தான் பார்க்கிறார் என்று எட்டிப் பார்த்தேன். ஜன்னல் வழியே அந்த ஆண்டி தூங்கிக்கொண்டிருக்க, அவளது ஆடைகள் விலகி பொன்னிற தொடைகள் தெரிந்தன. மாமாவுக்கு வயது ஐம்பதுக்கு மேல். இத்தனை வயசுக்கு மேல் இதெல்லாம் இவருக்கு தேவையா என்று தோன்றியது.

அந்த பெண்மணி ஓங்குதாங்காக இருப்பார். இரண்டு பிள்ளைகள் பெற்ற உடல். எடை என்பதுக்கும் மேல். இந்த மாமாவுக்கு ரசனை மகா மட்டம் என்று நினைத்துக்கொண்டே மீண்டும் பதுங்கினேன். அரை மணி நேரம் கழித்து மாமா அவரது வீட்டு பாத்ரூமுக்குள் அவசரமாக நுழைவது தெரிந்தது. பார்த்ததற்கேவா என்று நினைத்துக்கொண்டேன். அடுத்த ஒரு மணி நேரத்துக்கு யாரும் வரவில்லை. வடாம் இப்போது வரை என் கண்ணெதிரே அப்படியே இருந்தது. மணி 4. இன்னும் ஒரு மணி நேரம் இருந்தது. எப்படியும் வடாமை காப்பாற்றிவிடலாம் என்றே தோன்றியது.

அப்போது கீழ் வீட்டு வாண்டு பப்ளூ வந்தான். நன்றாக தின்றே கொழுத்தவன். அவனுக்கு இருப்பது வாயா அல்லது வண்ணான் சாலா என்று எனக்கு ஒரு குழப்பம். எதையாவது மென்றுகொண்டே இருப்பான். அம்மா வடாம் காணாமல் போகிறது என்று சொன்னபோது எனக்கு சந்தேகம் வந்த வாண்டு இவனாக இருக்க, மிகப்பல சாத்தியக்கூறுகள் இருந்தன. நான் மெல்ல அவனை கவனிக்கத் துவங்கினேன்.

மொட்டை மாடிக்கு வந்தான். மாடியின் நுனியில் போய் நின்றான். அவன் நின்ற இடத்திலிருந்து அந்த எதிர்வீட்டுக்கு பக்கத்துவீட்டு ஆண்டி ஜன்னல் நன்றாகத் தெரியும். 'அடப்பாவி!! நீயுமாடா' என்று நினைத்துக்கொண்டேன். இவன் பத்தாவது தேறுவது கடினம் என்று தோன்றியது. சற்று நேரம் நின்று அங்கேயே வெறித்தவன், அங்கும் இங்கும் கொஞ்சம் நடந்தான். வடாம் காய்ந்து கொண்டிருந்த, கொசு வலை அருகே வந்தான். கிணற்றுக்குள் எதையோ எட்டிப் பார்ப்பவன் போல எட்டிப் பார்த்தான். பிறகு வந்த வழியே மாடிப்படியிறங்கி போய்விட்டான்.

எனக்கு ஏமாற்றமாக இருந்தது. ஒரு வேளை போய்விட்டு மொத்த வடாமையும் அள்ளிப்போக ஏதேனும் பாத்திரத்தோடு வருவானோ என்று தோன்றியது. அங்கேயே அமர்ந்திருந்து நோட்டம் விடுவதைத் தொடர்வது என்று முடிவு செய்துகொண்டேன்.

இன்னொரு கால்மணி நேரம் போனது யாரும் வரவில்லை. எனக்கு வியர்த்து கொட்டியது. குதிகாலில் மணிக்கணக்கில் அமர்ந்ததில், ரத்த ஓட்டம் குவிந்து கண் முன்னால் பூச்சி பறப்பது போலிருந்தது. ஐந்து மணியாக ஒரு அரை மணி நேரமே மீதமிருந்தது.

உட்கார்ந்த‌ வாக்கில் உடலை வளைத்து கொஞ்சம் புத்துணர்வு வரவழைத்துக்கொண்டு பதுங்கலை தொடர்ந்தேன். இன்னொரு அரை மணி நேரம் கடந்தது. அவன் வரவே இல்லை. வடாம் வடாமாகவே இருந்தது. எப்படியோ இன்றைக்கு வடாமை காப்பாற்றியாகிவிட்டது என்று நினைத்துக்கொண்டிருக்கையிலேயே அம்மா வந்தாள்.

நான் என் மறைவிடத்திலிருந்து எழுந்தேன். கால்களில் புது ரத்தம் பாய்வது போலிருந்தது. முதுகெலும்பில் ஒரு சுறுசுறுப்பு வந்தது. அம்மாவைப் பார்த்தேன்.

அவள் அங்குமிங்கும் எதையோ தேடிக்கொண்டிருந்தாள். நான்,

'என்னம்மா தேடுற, வடாமா? அதான் டேங்க் பக்கத்துல இருக்கே' என்றேன்.

'டேய் நீ என்னடா அங்கிருந்து வர்ற?' என்றாள்

'ஆமா, வடாம் காணாமப் போகுதுன்னு சொன்னல.. அதான் வந்து ஒளிஞ்சிருந்து பார்த்தேன். எவன் திருடுறான்னு. இன்னிக்கு அவன் வரலை போல' என்றேன்.

'மண்ணாங்கட்டி.. உங் கண்ணுல கொள்ளிக்கட்டைய வைக்க.. என் பட்டு சீலைய காணம்டா' என்றாள்.

அப்போது தான் கவனித்தேன். அந்தக் கொடியை. அம்மாவின் பட்டுசீலையையும் எனது ஜீன்ஸையும் கூட காணவில்லை.

- கெளதம் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)