ஒளிரும் அடர் நீலத்தில் பிரமாண்டமான அந்த கடல் நண்பகல் வெயிலில் ஜொலித்துக் கொண்டிருந்தது. கடலில் அலைகள் ஓயாமல் கரையை நோக்கி வந்து கொண்டு இருந்தன. ஓர் அலையை இன்னொரு அலை விழுங்குவது போல துரத்திக் கொண்டு வந்தததை செழியன் உற்று நோக்கிக் கொண்டு இருந்தார். ஒன்று… இரண்டு… மூன்று .. சுருள்களாக பெரும் சுருள்களாக புரண்டு வரும் அலைகளை அவர் தன்னையும் அறியாமல் எண்ணிக் கொண்டிருந்தார்…

நாற்பத்து ஒன்பது….. அய்ம்பது….

வீசிய பெரும் அலை நீர்த்திவலைகளை அவர் முகத்தில் வீசி நனைத்தது. செழியனின் பேரப்பிள்ளைகள் ஶ்ரீஜாவும், ஆகாஷூம் பயத்தில் அலறி அவரை சேர்த்து கட்டிப் பிடித்துக் கொண்டனர். அந்தப் பிள்ளைகளின் கைகள் நடுங்குவதை அவரால் உணர முடிந்தது.

“ஹா.. ஓ… ஓஓ.. ஹாஹா ..”

தொல்காப்பியனும் செம்மொழியும் கரையில் சேரும் அலைகளின் மீது குதித்து குதித்து விளையாடிக் கொண்டிருந்தனர். செம்மொழியின் பாவாடையும், தொல்காப்பியன் காற்சட்டையும் முழுமையாக நனைந்து விட்டதை உணரக்கூட அல்லது பொருட்படுத்தாமல் அண்ணனும் தங்கையும் ஈர மணலில் நுரைக்கும் வெண்ணிற அலைகளில் ஆடுவதும் ஓடுவதும் நீரை வாரி இறைப்பதுமாய் குதுகலித்துக் கொண்டிருந்தனர். தொல்காப்பியனும் செம்மொழியும் யதார்த்தமாகவும் அதேநேரம் எச்சரிக்கையாகவும் இருந்தார்கள். தங்கை உற்சாகத்தில் மெய்மறந்து சில அடிகள் முன்னே செல்லும் பொழுது அண்ணன் அவள் கைகளை அழுத்தமாகப் பிடித்துக் நகராமல் நிறுத்திக் கொண்டான்.

அவர்கள் ஶ்ரீஜாவையும், ஆகாஷையும்… “வா.. வாங்கடா..” என்று விடாமல் அழைத்து கொண்டிருந்தனர். தங்களுக்கு விளையாட ஒரு சோடி கிடைக்கும் என்ற அவர்கள் நம்பிக்கை அரை மணி நேரமாகியும் இன்னும் நிறைவேறவில்லை.

செழியனுக்கு ஆச்சரியமாக இருந்தது. தனது தாத்தாவையும் அம்மாவையும் போலிசார் கைது செய்து காவல்துறை வேனில் அழைத்துச் சென்றது பற்றி எந்த கவலைகளும் அந்த பிள்ளைகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை.

செழியனுக்குத்தான் என்ன செய்வது என்று புரியவில்லை. நேரம் செல்லச் செல்ல கவலை அதிகரித்தது. பயம், படபடப்பு, சங்கடம் என எல்லாமும் அதிகரித்தன. தேவையில்லாமல் இந்தப் பிரச்சனையில் சிக்கிக் கொண்டோமோ என்று கைகளை பிசைந்து கொண்டிருந்தார்.

இரத்தம் அழுத்தம் அதிகரிப்பது போன்ற உணர்வு அவரை ஆட்கொண்டது. முன் எச்சரிக்கையாக சிறிது தள்ளி வைக்கப்பட்டிருந்த தோல் பையில் இருந்து மாத்திரையை எடுத்துப் போட்டுக் கொண்டு தண்ணீரை எடுத்துக் குடித்தார்.

தொல்காப்பியனும் செம்மொழியும் ஆளுக்கு ஒரு புறம் ஶ்ரீஜாவையும், ஆகாஷையும் கைகளைப் பிடித்து கடலுக்கு இழுத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு அலைகளில் நனையவும் ஈரமணலில் ஆடவும் ஆசையாக இருந்தது. அதே சமயம் அந்தப் பெரிய அலைகளையும், பிரமாண்டமான கடலையும் கண்டு பயமாகவும் இருந்தது. தாத்தா அனுமதிக்காக நோக்கினார்கள்.

செழியன் தனது பேரப் பிள்ளைகள் அருகில் வந்து நின்றுகொண்டார். அலைகளுடன் விளையாடுவதுதான் எவ்வளவு சுகமானது என்பதை அந்த சிறுவர்களின் கொண்டாட்டங்கள் அவருக்கு உணர்த்தின. ஆனாலும் அவரின் நினைவுகளை அலைகள் கடலின் ஆழத்திற்கு இழுத்துச் சென்றன. அலைகள் இல்லாத கடலை அவர் மனக்கண்ணில் ஓட்டினார். ஆர்ப்பரிக்காத கடலை செழியன் தேடிக் கொண்டிருந்தார். புல்பூண்டுகள் இல்லாமல் உயிர்ப்பற்ற நிலத்தைக் காட்டிலும் ஆர்ப்பரிக்காத கடல் கொடுமையாக வெறுமையாக ஜீவனற்று இருப்பதை நினைத்து மனம் நொந்தார்.

“..சங்கே முழங்கு… சங்கே….. முழங்கு… செங்கொடுமை வைக்காட்டில் விளையாடும் தோள்கள் எங்கள் தோள்கள்…” என்ற பாரதிதாசன் பாடல் செல்போன் ரிங்டோனாக விட்டு விட்டு வேகமாக ஒலித்தது. வீசும்காற்றில் அலைகளின் முழக்கத்தையும் தாண்டி அந்தப் பாடல் ஒலித்தது. பதைபதைப்புடனும் நிம்மதியுடனும் வேகமாக சென்று பையில் இருந்த அலைபேசியை எடுத்தார். அந்த எண்கள்.. அதே எண்கள்.. உயிர்போய் உயிர் வந்தது அவருக்கு…

“விடுதலை செய்திட்டாங்களா முத்து..” படப்படப்புடன் பேசினார்.

“ இல்லப்பா… விடுதலையா.. சிறையான்னு ஒன்னும் தெரியல்ல.. மோடி அரசும் ..ஜெயா அரசும் எப்ப என்ன பண்ணுன்னு யாருக்குத் தெரியும்..பேரப் பசங்க என்ன பண்ராங்க.. சாப்பிட்டாங்களா..ரொம்ப தொந்தரவு பண்றாங்களா..”

செழியன் பசங்களை கவனித்தார். அவர்கள் அலைகளுடன் ஈரக்காற்றுடன் அய்க்கியமாகி விட்டு இருந்தனர்.

“..ஒன்னும் பிரச்சனை இல்ல… உங்களை விடுவாங்களா.. இல்ல ஜெயிலா… பசங்களை என்ன பண்ணட்டும்..”

சிக்னல் இல்லாமல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. நல்லமுத்து அலைபேசிக்கு தொடர் முயற்சி செய்தார். கிடைக்கவில்லை….

மணியைப் பார்த்தார். மதியம் இரண்டை நெருங்கிக் கொண்டிருந்தது. பசங்களுக்கு பசி, களைப்பு, குளிர் என்று எதுவும் தெரிந்த பாடில்லை. ஆவேசத்துடன் புரளும் அலைகளில் தங்களை மெய்மறந்து ஈடுபடுத்திக் கொண்டு இருந்தனர்.

பசங்களுடன் செழியன் சாப்பிடக் கிளம்பினார்.

மெரீனா கடற்கரை மணல் வெப்பத்தால் கொதித்துக் கொண்டிருந்தது. பசங்கள் ஓடி ஒடி வரிசையாக இருந்த கடைகளின் நிழலில் ஒதுக்கி கொண்டனர். பசங்களுக்கு ஈடாக தாத்தாவின் நடை வேகமாக இல்லை. அதோடு தாத்தாவின் நினைவுகளே அவருக்குப் பெரும் தடையாக இருந்தன. கண்ணகி சிலை அருகே வந்தனர். அங்கு அவரின் கார் நின்று கொண்டிருந்தது.

காலை 11 மணிக்கு செழியன் தந்து பேரப்பிள்ளைகளுடன் கண்ணகி சிலை அருகில் உள்ள தார் சாலையின் ஓரம் நிறுத்தினார். பேரப்பிள்ளைகளின் தொந்தரவிற்கு மட்டும் அல்ல ..தனக்காகவும் கூட அவர் கடற்கரைக்கு வந்திருந்தார்.

கண்ணகி சிலை அருகில் பதாகைகளுடன் சிலர் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அந்த கூட்டத்தை விட அதிகமாக போலிஸ் கூட்டம் இருப்பதாக செழியனுக்குத் தோன்றியது. நேரம் செல்லச் செல்ல பலர் வெவ்வேறு வண்ணப் பதாகைகளுடன் வந்து சேர்ந்து கொண்டிருந்தனர். போராட்ட அணி வகுப்புக்கு அணியமாகிக் கொண்டிருந்தனர்.

மணலில் பேரப்பிள்ளைகளுடன் செழியன் சென்று அமர்ந்தார். மேக மூட்டமாக இருந்ததால் வெயிலின் வெப்பம் அவ்வளவாக உரைக்கவில்லை.. ஶ்ரீஜாவும், ஆகாஷ்யும் பந்து வீசி எறிந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

ஆகாஷ் பந்தை வேகமாக உதைக்க அது வானில் பறந்தது. சாலையில் செங்கொடிகளை ஏந்தியவாறு வந்த கூட்டத்தில் இருந்த பெரியவர் கப்பென அந்த பந்தைப் பிடித்தார். அவர் கூடவந்த பசங்களை அவரின் பேரப்பிள்ளைகளாக இருக்கும்… அதை ஆவலுடன் பறித்துக் கொண்டனர்.

“டேய்.. பந்தை அவங்களாண்ட கொடுத்திடுடா….” என்று அந்த பெரியவர் நல்லமுத்து சொல்ல சொல்ல அவரின் பேரப்பிள்ளைகள் பந்தை எடுத்து கொண்டு தொல்காப்பியனும் செம்மொழியும் கூட்டத்தில் விட்டு விலகி மணலில் ஓடினர். அந்தப் பெரியவரும் அவர்களுடன் வேகமாக நடந்தார். சில நிமிடத் துளிகள் விளையாட்டிற்குப் பிறகு பந்தை பறித்துச் சென்று ஆகாஷிடம் கொடுத்தார். பறிக்காத குறையாக அவன் வாங்கிக் கொண்டான்.

திரும்ப நினைத்த பெரியவர், சட்டென பொறிதட்ட

“..நீ..நீ.. நீங்க செழியன் தானே..” என்று செழியனைக் கேட்டார்.

“நம்முடைய பெயரைச் சொல்கிறாரே..யார் இவர்..” என்று உற்று செழியன் பார்த்தார்.

கறுத்த உருவம்.. ஊடுறுவும் ஒளி பொருந்திய கண்கள்.. நிமிர்ந்த நேர் கொண்ட பார்வை.. அடர்த்தியான முடிகள் நரைத்து வெள்ளையாகி ..அந்த முகத்திற்கு வனப்பைத் தந்தன.

“எங்கேயோ பார்த்து பழகிய முகம்….ஆஹா..நீ..நீ.. முத்து… தானே..”

அய்ம்பது ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறார்கள். செழியன் நல்லமுத்துவை ஆரத்தழுவிக் கொண்டார்.

அதற்கு பிறகு தங்களின் வாழ்க்கையின் சில பக்கங்களை பகிர்ந்து கொண்டார்கள். .. ஶ்ரீஜாவும், ஆகாஷ்யும் தங்களுடன் பந்து விளையாட தொல்காப்பியன் செம்மொழி என்ற ஜோடி கிடத்த மகிழ்ச்சியில் திளைத்தனர். அதற்குள்..

“சமஸ்கிரத ஆதிக்கம் ஒழிக… தமிழ் வாழ்க..
இந்தி ஆதிக்கம் ஒழிக…. தாய்த்தமிழ் வாழ்க..”

முழக்கங்கங்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கின.

செழியனிடம் நல்லமுத்து விடை பெற்றார். தொல்காப்பியனையும் செம்மொழியும் அழைத்தார். விளையாட்டு தந்த உற்சாகத்தில் அந்த இடம் விட்டு அவர்கள் நகரத் தயாரில்லை.

“ இங்க தானே இருப்பிங்க.. பசங்க விளையாட ஆசைப்படுதுங்க. இங்க தா இருப்பீங்க..”

செழியன் தலையை ஆட்டினார்.

“ஒரு மணி நேரத்தில் ஊர்வலம் முடிந்து விடும்… காந்தி சிலை வரைதான்…” என்று கூறிக் கொண்டே செழியனிடம் அலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார்.

“காப்பியா.. இந்த தாத்தாவிட்டு எங்கும் போக கூடாது.. சீக்கரமா வந்திடுறேன்..” என்று கூறினார். தொல்காப்பியனும் செம்மொழியும் பலமாகத் தலையாட்டினர். நல்லமுத்து சிரித்துக் கொண்டே வேகமாக ஊர்வலம் நடக்கும் இடம் சென்றார். பசங்க விளையாட்டு மும்முரத்தில் இருந்தனர். முழக்கங்கள் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தன. அரை மணி நேரம் கழிந்திருக்கும்.. முந்நூறு.. நானூறு மக்கள் கூடி இருப்பர்.. நிறைய மக்கள் வேடிக்கை பார்த்தனர். செழியனும் அந்த மக்கள் கூட்டத்தில் ஒருவராக இருந்தார்…

ஊர்வலம் சில அடிகள் நகர்ந்திருக்கும். அதற்குள் பல வெள்ளை வேன்கள், கண்ணீர் புகை குண்டுகளை வீசும் வஜ்ஜிராத வண்டி அந்த ஊர்வலத்தை சுற்றி வளைத்தன.

ஊர்வலத்திற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டதாக அந்த போலிஸ் அதிகாரி இறுக்கமான முகத்துடன் கூறினார். கசமுச என்று சத்தம் எழுந்தது.

“மேலிட உத்தரவு.. மேலிட உத்தரவு….” என்ற பல்லவியை திரும்ப திரும்ப போலிஸ் அதிகாரிகள் பாடினார்.

“போலிஸ் அராஜகம் ஒழிக.. ஜெயா அரசின் அடக்குமுறை வீழ்க…

சமஸ்கிரத ஆதிக்கம் ஒழிக… தமிழ் வாழ்க..

இந்தி ஆதிக்கம் ஒழிக…. தாய்த் தமிழ் வாழ்க..”

தொடர்ந்து ஒலித்தன..

தள்ளு முள்ளு நடந்தது. சிறிய மோதல் சூழல் உருவானது.. போலிஸ் வேன்களில் அனைவரையும் ஏற்றினர். அந்த இடமே ஒரு சிறிய போர்க்களம் போல் தெரிந்தது.

நல்லமுத்துவும் அவரது மகளும் வேனில் ஏறும் பொழுது சாலை ஓரம் தள்ளி நின்ற செழியனுக்கு செய்கை காட்டினர். தாங்கள் அலைபேசி செய்வதாக செய்கை காட்டினர். செய்வதறியாது நல்லமுத்துவின் பேரப்பிள்ளைகளை திரும்பொ பார்த்தார்.

தொல்காப்பியனும் செம்மொழியும் தனது தாத்தாவிற்கும் அம்மாவிற்க்கும் டாடா காட்டிக் கொண்டிருந்ததை கண்டு செழியன் திகைத்துப் போய்விட்டார். எந்த நம்பிக்கையில் இந்தப் பிள்ளைகள் போலிசாரால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லும் தாத்தாவிற்கும் அம்மாவிற்க்கும் இயல்பாக வழி அனுப்ப முடிகிறது.

இரண்டு மணி நேரத்திற்கு முன்பு அங்கு நடந்த போராட்டத்திற்கான அறிகுறிகள், இறுக்கங்கள், பரபரப்புகள் எதுவும் இப்பொழுது இல்லை. இரண்டு போலிஸ்காரர்கள் மட்டும் கடனே என்று கடமையை செய்து கொண்டிருந்தார்கள்.

காதல் ஜோடிகள் காலாற நடந்து கரங்களை மெல்லப் பற்றி மணல் சமுத்திரத்தின் ஒரு மூலையில் வெயில் மறைப்பில் பதுங்கிக் கொள்ள முயன்று கொண்டிருந்தனர்.

குழந்தை குட்டிகளுடன் குடும்பங்கள் வந்து மணலில் பல வண்ணங்களையும் வாரி இறைத்து நிரப்பினர். ஏக்கப் பெருமூச்சுடன் தனித்து விடப்பட்ட சிலரும், தனிமையில் இனிமை காணும் ராசாக்களும் பரவிக் கிடந்தனர். திண்பண்ட கடைகளில், அலங்கார கடைகளில் கூட்டம் கூடத் தொடங்கின.

போராட்டம் நடந்ததற்கான ஒரே அடையாளமாக பிஞ்சுபோன செருப்பு மட்டும் அந்த தார்ச்சாலையில் கிடந்தது.

செழியன் பசங்களை ஓட்டலுக்கு தனது காரில் அழைத்துச் சென்றார். ஶ்ரீஜாவும், ஆகாஷ்யும் அது வேண்டும்..இது வேண்டும்… என்று சிணுங்கி வாங்கி பலதையும் கொண்டனர். கொரித்து கொரித்து தின்றனர். அப்படியும் பாதியைத்தான் அவர்கள் தின்றனர்.

தொல்காப்பியனும் செம்மொழியும் சமத்தாக எதையும் மிச்சம் வைக்காமல் மகிழ்ச்சியுடன் உண்டனர்.

அடுத்து என்ன செய்வது என்று யோசிக்க மெரீனா நீச்சல் குளம் அருகில் உள்ள பசும் புல்வெளியில் பசங்களுடன் அமர்ந்தார். அனைத்து மரநிழல்களையும் பலரும் ஆக்கிரமித்து இருந்தனர். செழியனுக்கு சிறிய நிழல்தான் கிடைத்தது. பிள்ளைகள் புல்லில் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

கைது செய்தவர்களை விடுவிப்பார்களா..? அல்லது சிறைக்கு அனுப்புவார்களா ? என்று குழம்பிக் கொண்டிருந்தார் செழியன்.
மணி நான்கை நெருங்கிக் கொண்டிருந்தது. போனை போடுவோம் என்று நல்லமுத்துவிடம் இருந்து வந்த எண்ணிற்கு அழைத்தார்.

“இன்னும் முடிவு சரியாகத் தெரியவில்லை தோழா..பசங்க தொந்தரவாக இல்லையே..” என்று நல்லமுத்து பேசிக்கொண்டே இருந்தார்.

யதேச்சையாக திரும்பிப் பார்க்க தொல்காப்பியன் விளையாடுவதை நிறுத்துவிட்டு செழியனை கவனித்துக் கொண்டு இருப்பதைக் கண்டார். விளையாட்டுப் பிள்ளை என்று நினைத்தது தவறு போல என்று அவர் மனது சொன்னது.

மீண்டும் கடலை நோக்கிச் சென்றனர். அந்த பிஞ்சுபோன செருப்பும் எஞ்சிய போலிஸ்காரர்களும் இப்பொழுது அங்கு இல்லை. மணல் சமுத்திரம் முழுவதும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியத் தொடங்கியது. எதுவும் நடக்காது போல மக்கள் அவரவர் பணிகளை செய்து கொண்டிருந்தனர்.

கடற்கரை காற்றில் சுதந்தரமாக இருக்கும் தனக்கே தர்மசங்கடமாக இருக்கும்பொழுது கைதாகி காவலில் இருக்கும் அந்தக் குழந்தைகளின் தாத்தாவும் அம்மாவும் எந்த மனநிலையில் இருப்பார்கள் என்ற சிந்தனைகள் செழியன் மனதில் ஓடிக் கொண்டிருந்தன..

கடல் அலைகள் இப்பொழுது அதிகமாக இல்லை. ஆனாலும் ஒரு அலையை இன்னொரு அலை துரத்திக் கொண்டுதான் இருந்தது. அலைகள் கரையில் மோதி மணலில் பரவும் இடத்தில் பேரப்பசங்களுடன் செழியன் நின்று கொண்டிருந்தார்.

எத்தனை முறைகள்..யார் யாருடன்.. இப்படி கடலுக்குள் ஈர மணலில் இருந்திருப்பேன் என அவர் கற்பனை குதிரை அலைகளில் தாவி பறந்து கொண்டிருந்தது.

சட்டென பெரியதாக அலை ஒன்று சுழன்று எழுந்து கரையை தாக்கியது. பிள்ளைகள் சேர்ந்து நின்றதால் அவர்கள் ஹா ஹா..என்று சத்தம் போட்டுக் கொண்டு நனைந்தனர்.

பின்னுக்கு இழுந்த அலையில் காலில் இருந்த மணல் கரைந்ததால் செழியன் தடுமாறி விழப்போனார். தொல்காப்பியன் அவரை தாங்கி இழுத்துப் பிடித்தான்.

அந்த இழுப்பு சட்டென அவரை அய்ம்பது ஆண்டுகள் பின்னோக்கி தள்ளியது.

1965 சனவர் 27….

மெட்ராஸ் மவுண்ட் ரோடு முழுக்க பல்லாயிரக்கணக்கில் மாணவர்கள் திரண்டு இருந்தனர். அலை அலையாக மாணவர்கள் திரண்டு இன்னும் வந்து கொண்டிருந்தனர். சென்னை நகர கல்லூரிகள் முழுக்க அங்குதான் இருந்தது.

“..இந்தி ஒழிக ..தமிழ் வாழ்க..”

எங்கும் முழக்கங்கள்… ஆர்ப்பாட்டங்கள்… கடல் போல் மாணவர்கள் ஆர்ப்பரித்தனர்.

hindi protestகுடியரசு நாளை துக்கநாளாக்கினர் தமிழ்நாட்டு மாணவர்கள். துணை இராணுவப் படைகள் எல்லா நகரங்களிலும், சிற்றூர்களிலும் குவிக்கப்பட்டு இருந்தனர். மாணவர்கள் மீது தடிஅடி தாக்குதல்கள், துப்பாக்கி சூடுகள் நடந்தன. இதை கண்டித்துதான் இந்தப் பேரணி கோட்டையை முற்றுகை இடச் சென்றது.

“இந்தப் படை போதுமா… இன்னும் கொஞ்சம் வேணுமா…

காங்கிரஸ் ஒழிக …தமிழ் வாழ்க….”

மாநில கல்லூரியை, சென்னை பல்கலைகழகத்தை தாண்டி மாணவர் பேரணி போர்பரணி செய்து கொண்டு சென்றது.

பாலத்தை அடைத்துக் கொண்டு காவல்துறையும் இரும்புத் தொப்பிகளுடன் துணை இராணுவமும் நின்று கொண்டிருந்தன. குதிரைப் படை வீரர்கள் கடற்கரை மணலில் அணிவகுத்து நின்றனர்.

என்ன நடந்து என்று தெரியவில்லை..யாரோ கல்லெறிந்தனர் என்றனர்.. போலிசும், துணை இராணுவமும் மாணவர்கள் மீது கண்முன் தெரியாமல் வெறிகொண்டு தாக்கினர்.

கடற்கரை சாலையில் இருந்த மாணவர்கள் மணல் பரப்பில் சிதறி ஓடினர். மெரீனா கடற்கரை முழுவதும் மாணவர்கள் தலைகள்தான் தெரிந்தனர். சில மாணவர்களுடன் செழியன் மணலில் ஓடிக் கொண்டிருந்தான். குதிரையில் இருந்த அந்த இந்திய துணை இராணுவ வீரன் அவனை வெறிக்கொண்டு துரத்தினான்.

நீண்ட தடிகளுக்கு, குதிரை குளம்பு மிதிகளில் இருந்து தப்பிக்க சில மாணவர்கள் கடலில் பாய்ந்தனர். தப்பிக்க பாய்ந்த செழியனை பெரும் அலை கடலுக்குள் இழுத்துச் சென்றது.

நீச்சல் தெரியாததால் செழியனுக்கு மூச்சு திணற தொடங்கினான். அவ்வளவுதான் வாழ்க்கை முடிந்தது என்று அவன் நினைத்தான்.

அவன் தலைமுடியை கொத்தாக ஒருகை பிடித்து அலைகளுக்கு மேலாக இழுத்தது. அவன் வகுப்பு தோழன் நல்லமுத்து அவனை இழுத்து கொண்டு அலைகளை எதிர்த்து நீந்தினான். கரையில் கடல்நீரை கக்கிய இவர்கள் தலைமுடிகளை இரண்டு குதிரை வீரர்கள் பிடித்து தகித்துக்கொண்டிருந்த மணலில் இழுத்து சென்றனர்.

செழியனும், நல்லமுத்துவும் இன்னும் பல மாணவர்களும் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். வகுப்பை விட போராட்டமும் சிறை வாழ்க்கையும்தான் அவர்கள் நெருக்கமாக்கின.

நூற்றுக்கனக்கான மாணவர்கள் உயிரைப் பலி வாங்கிய போராட்டங்கள் சில மாதங்களில் அமைதியாகி விட்டன. நேருவின் உறுதிமொழியை அண்ணாதுரை ஏற்றார்.

சைதாப்பேட்டை எம்.சி.ஆர் விடுதியிலிருந்து நல்லமுத்து கல்லூரிக்கு வந்து சென்றார். செழியன் வீட்டிலிருந்து வந்தார். அவர் தனது போராட்ட வாழ்க்கையில் தொடர்ந்து பயணித்தார். இவர் மனப்புழுக்கத்தில் போராட்டத்திற்கு இடையில் சுருண்டு சுருக்கி விட்டார்.

இன்று.. … குத்துக்கால்கள் இட்டு ஈரம் சொட்ட சொட்டப் பேரப்பிள்ளைகளுடன் அமர்ந்து இருந்த செழியன் ஆர்ப்பரிக்கும் கடலை நிர்மலமாய் வெறித்து கண்கள் நிலைகுத்த பார்த்துக் கொண்டிருந்தார்.

“அய்ம்பது ஆண்டுகளுக்கு முன் கடலில் கரைந்து போயிருந்தால் பரந்த இந்த கறுத்த உப்புநீரில் அலைகளாக வாழ்ந்திருப்பேன்.. இசை கூட்டி கரைகளை தாலாட்டி இருப்பேன்..” என்று குளிரில் கற்பனை கண்ணாபின்னாவென எகிறிக்கொண்டிருந்தன.

அதை அலைபேசி மணி கலைத்தது.

“வெளியே விட்டு விட்டார்களா..?..” என்று பதைபதைப்புடன் கேட்டார்.

“..இல்ல ங்கியா… நா அஜீதா பேச..றேன்.. காப்பியனாட்ட கொடுங்க..” என்று நல்லமுத்து மகள் அஜீதா கூறினார்.

“ ம்ம் ம்ம்ம் …ம்ம்ம்ம் ..சரிம்மா..” என்று தொல்காப்பியன் செல்போனை செழியனிடம் தந்தான்.

“ நன்றி ..தோழர் தாத்தா..” என்று கூறிவிட்டு அலைகளுடன் விளையாடும் நண்பர்களுடன் இணைந்து கொண்டான்.

“…… … ..”

பெருமூச்சு ஒன்று செழியனிடம் வெளிப்பட்டது

காலம் கரைந்து விட்டது. அலைகள் மட்டும் ஒயாமல் வீசிக் கொண்டிருக்கின்றன. அலைகள் இப்பொழுது பெரியதாகி கொண்டிருந்தன.. முழுபெரு நிலா கடலின் அடிஆழத்தில் மெல்ல உதித்து மேலே வந்துக் கொண்டிருந்தது.

சீறிக்கொண்டு வந்த விழுங்க வந்த அலை தொடுவதற்குள் இந்த அலை மக்கள் திரண்டிருந்த கரைக்குள் அய்க்கியமாகி விட்டது. அந்த தோற்றுப் போய் சிறுத்து பின் வாங்கியது.

அந்த அலைகள் ஒன்றை ஒன்று விழுங்க துடிக்கும் போராட்டம் எத்தனை ஆயிரம் ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றனவோ? அதற்குள் முழுபெரு நிலா ஒளிரும் பெரும்பாதையை கடலுக்குள் அமைத்து விட்டது. அலைகள் புரளும் ஒளிவெள்ள தாரைக்குள் அந்த குழைந்தைகள் குதூகலத்துடன் பயணம் செய்ய தயாராகுவதாக செழியனுக்குத் தோன்றியது.