நகரமே தூங்கிக் கொண்டிருக்கும் ஒரு நடு இரவு. சோடியம் விளக்கின் வெளிச்சம் பாய்ந்துக் கிடக்கும் சாலை ஒன்றில் ஒருத்தி தன்னந்தனியாக நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். வெண்மேகத்திலிருந்து இழையெடுத்து தைத்திருப்பார்கள் போல. அவ்வளவு வெள்ளையாக இருக்கிறது அவள் உடம்பை அலங்கரித்துக் கொண்டிருக்கும் ஆடை. சுற்றும் முற்றும் பார்க்கிறேன். அந்த சாலையில் என்னையும் அவளையும் தவிர வேறு யாரும் இல்லை.

beggarஅவள் வேகமாக நடந்து போய்க்கொண்டிருக்கிறாள். நான் மட்டும் அவள் அலங்காரத்தையும் அழகையும் அளந்துகொண்டு நிற்கிறேன். யாருமே இந்த வீதியில் இல்லை என்ற நினைப்பில் செல்கிறாளோ… இருக்காது அப்படி இருக்காது. அவள் பெரிய பின்புலம் கொண்டவளாக இருப்பாள். இல்லையென்றால் இத்தனை அழகுடைய ஒருத்தி நட்டநடு ராத்திரியில் இவ்வளவு சாவகாசமாக நடந்து செல்வாளா… என்னை நோக்கிக் கேட்டுக்கொள்கிறேன். இப்போது என் மனது அவளைப் பின்தொடரச் சொல்கிறது. கால்கள் அதற்கு முன் தயாராகி நிற்கின்றன. ஆம் எனக்குள் ஒரு அசாத்தியமான துணிச்சல் வந்துவிட்டது அவளைத் தொட்டுவிட. அவளைத் தொடுவது கூட ஒரு சுகம்தான். தொட்டால் என்ன செய்துவிடுவாள். மிஞ்சிப்போனால் கத்துவாள், கூச்சலிடுவாள், கத்தட்டும், கூச்சலிடட்டும் அதில் அவள் குரலின் அழகு வெளிப்படுமல்லவா. ஊரே உறங்கிக்கொண்டிருக்கும் இந்த ராத்திரியில் யார்தான் ஓடிவந்து அவளுக்கு உதவிவிடுவார்கள்.

இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம். இரவுநேரத்தில் உலாவரும் தேவதைகளிலிருந்து தனிமைப்பட்டு வந்துவிட்டவளாக இருப்பாளோ இவள். இருந்தாலும் இருக்கலாம். அவளைத் தொட்டவுடன் ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்வது. நான் என்னவாவேன். என்னவாக ஆனால் என்ன அவளைத் தொடவேண்டும் அவ்வளவுதான். உள்ளிருந்து கிளம்பும் ஆசை சொல்கிறது எது நடந்தாலும் பரவாயில்லை என்று. என் தைரியத்தை நினைத்தால் எனக்கே வியப்பாக இருக்கிறது.

கடிவாளம் மாட்டிய குதிரைபோல் எந்த பக்கமும் பார்க்காமல் முன்னோக்கி நடந்து கொண்டிருக்கிறாள் அவள். சீரான குதிரைவோட்டம்போல் இருக்கிறது அவள் செருப்பிலிருந்து வரும் ஓசை. யார் இவளை அழைத்திருப்பார்கள், யார் இவளை அனுப்பியிருப்பார்கள் தெரியவில்லை. அவளுக்கு வேண்டியவர்கள் யாராவது எதிரே வந்துவிட்டால் என் முயற்சி வீணாகிவிடுமோ என்னவோ. வீணாகாது என் வாழ்நாளில் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு இது. நழுவவிட்டால் இன்னொருத்தியை இந்த மாதிரி இரவில் இப்படி ஒரு அழகில் பார்க்கமுடியுமா. நிச்சயம் முடியாது.

ஒரு ஒளிக்கீற்றைப் போல் நகர்ந்துகொண்டே இருக்கிறாள். நானும் கற்பனையில் கரைந்துகொண்டே போகிறேன் அவள் பின்னால். இன்னமும் அவள் பின்புறம் திரும்பிப் பார்க்கவில்லை அவள். யாராவது பின்னோக்கி வந்தால் என்ன செய்வது என்ற பயம்கூட இதற்குக் காரணமாக இருக்கலாம். அவள் திரும்பிப் பார்க்காமல் செல்வதுதான் எனக்கு நல்லது. அப்போதுதான் அவளைத் தொட்டாவது பார்க்கமுடியும் என்னால். அதைத் தாண்டி நான் என்ன செய்துவிடப்போகிறேன் அவளை.

இப்போது வேகமாய் பறக்கின்றன அவள் கால்கள். நானும் ஓடுகிறேன் மூச்சிறைக்க. எதையோ இலக்கு வைத்துத்தான் அவள் ஓடிக்கொண்டிருக்கிறாள் என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அது என்னவாக இருக்கும் என்றுதான் புரியவில்லை. யாராவது தோழி வீட்டிற்கா, நண்பர் வீட்டிற்கா.. இல்லை மிகப்பெரிய நட்சத்திர விடுதிக்கா… இல்லை தன் சொந்த வீட்டிற்கா.. இதில் ஏதோ ஒரு இடத்திற்குத்தான் அவள் செல்கிறாள். எங்கு போனால் என்ன நான் அவளைத் தொட்டுவிட வேண்டும்.

போகப் போக நீண்டுகொண்டே இருக்கிறது அந்த சாலை. அவள் சாலையின் குறுக்குவழிகளில் செல்வதற்காகவும் திரும்புவதாகத் தெரியவில்லை. நல்ல வேளை எந்த வாகனமும் இந்த சாலையில் என்னையோ அவளையோ கடந்து செல்லவில்லை. இடையூறு இல்லாமல் அவள் மட்டும் செல்வதற்காக வாகனம் எதையும் அனுமதிக்காமல் இருப்பார்களோ. இருக்கலாம் இவள் ஒரு அமைச்சரின் மகளாகக் கூட இருக்கலாம். இப்படித் தனியாக நடக்க வேண்டும் என்ற தன் மகளின் ஆசையை நிறைவேற்றக்கூட இப்படி செய்திருக்கலாமல்லவா அந்த அமைச்சர். நம்மைக்கூட யாராவது வேவு பார்த்து பிடித்துவிட்டால் என்ன செய்வது. தேவையில்லாத கற்பனை இது.

இப்போது வேகமாக நடக்கிறாளே. அவள் சேரவேண்டிய இடம் வந்துவிட்டதோ. நானும் ஓடுகின்றேன் அவளை நோக்கி. வாட்டியெடுக்கும் குளிரில் உடம்பெல்லாம் நனைந்து வழிகிற வியர்வையை துடைப்பதற்குக் கூட ஒரு கிழிசல் இல்லாமல் என் கைகளால் வழித்தெறிகிறேன். அவளின் செல்பேசி ஒலிக்கிறது.. அதன் ஓசை என் காதுகளில் வந்துவிழுகிறது. ஏதோ கிசுகிசுக்கிறாள் அவள். ஏதோ பதட்டமானவளைப் போல ஓடத் தொடங்குகிறாள். அய்யோ என் ஆசை அவ்வளவுதானா. இல்லை இல்லை அவளை எப்படியாவது தொட்டுவிடவேண்டும். நானும் அவள் கால்தடத்தில் கால்பதித்து ஓடுகின்றேன். இப்போது அவளைத் தொட்டுப் பார்த்துவிடுவேன் என்ற நம்பிக்கை தகர்ந்து போகிறது எனக்குள். ஆமாம் அவளுக்கு ஐம்பதடி தூரத்தில் நல்ல வெளிச்சத்தில் ஒரு நட்சத்திர விடுதி தெரிகிறது. அதை நோக்கித்தான் அவள் போகிறாள்.

இப்போது நினைக்கிறேன் அவள் நிழலையாவது தொட்டுவிட முடியாதா என்று. நிழல் எதற்கு அவளைத்தானே தொட்டுப் பார்க்கவேண்டும். நான் எதற்கு என் முடிவில் பின்வாங்க வேண்டும். நுழைந்துவிட்டாள் அந்த நுழைவாயிலுக்குள். கால்களும் கைகளும் படபடக்க ஓடுகின்றேன் அவள் பின்னாள். சட்டென்று நான்கைந்து கைகள் கனமாக வந்து விழுகிறது என்மேல். திரும்பிப் பார்க்கிறேன், யாருடா… எதுக்கு இங்கு வந்தே என்ற தொனியில் இருக்கிறது அவர்களின் பார்வை. என் நினைவிலிருந்து அவள் விடுதலையான பிறகுதான் தெரிந்துகொண்டேன் அவர்கள் வாயில் காவலர்கள் என்பதை.

சர்வசாதரணமாக உள்ளே போன அவளுக்கு வழிவிட்டவர்கள் என்னை மறித்து விரட்டுகிறார்கள். நானும் தப்பித்தால் போதுமென்று புறப்படுகிறேன் அந்த இடத்தை விட்டு. என்ன என் ஆசை மட்டும் அந்த இரவின் இருளில் எங்கோ காணாமல் போய்விட்டது. இனி கிடைப்பது கடினம்தான். காவலர்களில் ஒருவன் என்னை நோக்கிச் சொல்கிறான். இன்னா நாத்தம் அடிக்குதுயா அவன்மேல… குளிச்சி எத்தனை நாள் ஆச்சோ தெரியல என்று.