இன்று

அவர் கூறினார்.

AR Rahman With Ilayaraja"சார்.... இளையராஜா ஐயா மாதிரியான இசை மேதைகள் இசையை உருவாக்குறாங்களே அதுல சந்தோஷம் அதிகமாக.... இல்லை அதை உருகி உருகி என்னை மாதிரி ஆட்கள் ரசிச்சு கேட்கிறாங்களே அதுல சந்தோஷம் அதிகமா??..."

எனக்கு பகீர் என்றது.

"உங்களுக்கு ஏழரை சனி, பார்த்து நடந்து கொள்ளுங்கள்" என்று கூறிய ஜோசியக்காரனை இழிவாகப் பேசி காசு கொடுக்காமல் வந்தது திடீரென எனக்கு நியாபகத்திற்கு வந்தது.

அவர் மீண்டும் அதே கேள்வியை முகத்தில் ரசனை மாறாமல் கேட்டார்...

நான் அந்த கேள்விக்கு பதில் கூற ஒருநாள் அவகாசம் வாங்கிக் கொண்டு வந்தேன்...

அவரைப் பற்றிய சிறு குறிப்பு :

ஒருநாள்: இசைமேதை இளையராஜாவின் தற்காலத்து இசை மேல் சற்றே அதிருப்தி கொண்ட பேஸ்புக் அன்பர் ஒருவர் சற்று காரசாரமாக இளையராஜாவைப் பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் விமர்சித்திருந்தார். அதைக் கண்டு சற்றே துணுக்குற்ற நண்பர் ஒரு 4 வார்த்தைகளில் திட்டி எதிர் பதிவிட்டார். (அதில் ஒன்று கெட்டவார்த்தை)... நான் மட்டும் என்ன மலேசியாகாரனா, மதுரைக்காரன்தாண்டா என்று மார்தட்டிக்கொண்டு வந்த அன்பர் சில வழக்கொழிந்து போன கெட்ட வார்த்தைகளை ஆங்காங்கே தூவி சற்று தூக்கலாக ஒரு பதிவிட்டார். எனக்கு அப்பொழுதுதான் தெரிந்தது எனது நண்பரும் மதுரைப் பக்கம் என்று... சுமார் 28 வார்த்தைகளைக் கொண்ட நண்பரின் பதிவில் 24 வார்த்தைகள் காதுகளால் கேட்கவே முடியாத... மகா மட்டமான...யோசித்துப் பார்க்கவே பயங்கரமான... இன்டீரியர் மதுரை பக்க கெட்ட வார்த்தைகள். அதன் பிறகு பேஸ்புக் அன்பர் என்ன கூறியிருப்பார் என்பதைப் பார்க்கக் கூடிய அளவுக்கு எனக்கு தைரியம் இல்லை என்பதால் 2 நாட்களுக்கு பேஸ்புக்குக்கு லீவு விட்டு விட்டேன். எனக்கு லேசாக ஜூரம் அடித்தது...

அது ஏன் என்று புரியவில்லை. இடை இடையே ஏ.ஆர். ரஹ்மானை வேறு திட்டியிருந்தார். என்னவோ எம்.ஜி.ஆர்-ன் எதிரி நம்பியார் என்பது போல... நண்பருக்குள் இவ்வளவு நாட்களாக ஒரு டிராகுலா ஒளிந்து கொண்டிருப்பதை அப்பொழுதுதான் புரிந்து கொள்ள முடிந்தது. நண்பரிடம் சற்று ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்துகொண்டேன்...

மற்றொரு நாள் : இளையராஜா பிறந்தநாளன்று அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் ஏதோ கலவரம் என்று கேள்விப்பட்டேன். நான் ஒன்றும் கலவரத்துக்கு காரணம் இல்லை என்று நண்பர் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் அணிந்திருந்த புதுச் சட்டை 7 இடத்தில் கிழிந்திருந்தது. அவர் தனது கையில் சிறிது வெண்பொங்கலை வைத்துக் கொண்டு அனைவரிடமும் பெருமையாகக் பேசிக் கொண்டிருந்தார்.

இது இளையராஜா வீட்டில் அவரது கையாலேயே தனக்கு வழங்கப்பட்ட பிரசாதம் என்று ஒருவர் பாக்கியில்லாமல் பெருமையாகக் கூறிக் கொண்டிருந்தார். காலையில் ஆரம்பித்த அவரது பிரச்சாரம் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. அன்று முழுவதும் விரதத்தில் இருந்த அலுவலக அன்பர் ஒருவர் சற்று ஆர்வ மிகுதியில் "இளையராஜா வீட்டில் வாங்கிய வெண்பொங்கலா" என்று சற்று எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.

அவ்வளவுதான்.... பூலோகம் அப்படியே ஸ்தம்பித்துப் போனது. கடல் சீற்றம் அப்படியே நின்று போனது. பறவைகள் பறப்பதை நிறுத்திக் கொண்டன. கோவில் மணி ஆடாமல் நின்று போனது. தென்னை மரங்கள் புயலில் ஆடின. சுனாமி வந்தது.

நான் வராத ஃபோனை எடுத்துக் கொண்டு 'ஹலோ ஹலோ என்று கூறியபடி வெளியேறி விட்டேன்.

சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு அலுவலகத்துக்குள் சென்றேன். ஆங்காங்கே சில முடிக்கற்றைகள் சிதறிக் கிடந்தன. அது விரதமிருந்த அலுவலக நண்பரின் தலையிலிருந்துதான் விழுந்துள்ளது என்பதை யூகிக்க வெகு நேரம் ஆகவில்லை. அவரது சட்டை இனிமேல் கிழிக்க முடியாது என்கிற நிலையை எய்தியிருந்தது. அவரது கால்சட்டையைப் பற்றி நான் கூற விரும்பவில்லை. ஆனால் ஒன்று மட்டும் கூறலாம். அவரது கால்சட்டை தனது கடமையை செய்யக்கூடிய தகுதியை இழந்திருந்தது. அவரது கன்னத்தில் ஆறு விரல்களின் தடம் தெரிந்தது. அன்றுதான் கவனித்தேன் நண்பருக்கு ஆறாவதாக ஒரு விரல் உள்ளது என்பதை. ஒரு விஷயம் உண்மை என்பதை இன்று தான் தெரிந்துகொண்டேன். ஓங்கி கன்னத்தில் அறைந்தால் வாயின் ஓரமாக ரத்தம் வடிவதை பழைய எம்.ஜி.ஆர். படங்களில் எல்லாம் பார்த்திருக்கிறேன். கிண்டல் கூட அடித்தது உண்டு. அதெப்படி கன்னத்தில் அடித்தால் வாயின் ஓரமாக ரத்தம் வழியும் என்று... ஆனால் அது உண்மைதான். அலுவலக அன்பரின் வாயின் ஓரமாக ரத்தம் கோடு போட்டதைப் போன்று வடிந்திருந்தது. இனிமேல் உண்மையை ஊடுருவி தெரிந்து கொள்ளாமல் இவ்வாறெல்லாம் கிண்டல் செய்யக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன்...

அலுவலக அன்பரின் காதோரமாக சென்று ரகசியமாக ஒரு விஷயம் கேட்டேன்...

"அந்த வெண்பொங்கல் என்ன ஆனது???"

அப்பொழுது ஒரு விஷயம் எனக்குப் புரிந்தது... அது... 'அவருக்கு இடது புறம் காது கேட்கவில்லை' என்பதாகும்...

வேறொரு நாள் : அன்று ஏ.ஆர். ரகுமானுக்கு 2 ஆஸ்கர் விருதுகள் வழங்கினார்கள். மேற்கு வங்காளத்தில் எனது அக்கா வீடு இருக்கிறது. அவர் என்னை வெகு நாட்களாக கூப்பிட்டுக் கொண்டிருந்தார். அலுவலகத்தில் விடுமுறை கிடைக்காததால் அங்கு சென்று வர நேரம் வாய்க்காமல் இருந்தது. ஆனால் இன்று... வேலையே போனாலும் பரவாயில்லை என்று கொல்கத்தாவுக்கு ரயில் டிக்கெட் புக் செய்து விட்டேன்... எனது கெட்ட நேரமோ என்னவோ எனது ரயில் டிக்கெட் கன்ஃபார்ம் ஆகவில்லை. வெயிட்டிங் லிஸ்ட்டில்லேயே வெகு நேரமாக இருந்து கொண்டிருந்தது.

வீட்டின் கதவு தட்டப்பட்டது. அடுத்த முறை வாடகை வீடு மாறும் போது பின்பக்க கதவு வைத்த வீட்டுக்குத்தான் மாற வேண்டும் என்று மனதிற்குள்ளாக சத்தியம் செய்து கொண்டேன். கதவைத் தட்டுவதிலிருந்தே தனக்கு எவ்வளவு கோபம் உள்ளது என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார் நண்பர். வேறு யாரோ என்று நினைப்பதற்கில்லை. போன பிறவியில் ஸ்பெயின் நாட்டில் காளையாக பிறந்திருப்பார் போல.... அவ்வளவு மூச்சு வாங்கினார் ஆவேசத்துடன்.

"சார், டேனி பாய்ல் அட்ரஸ் தெரியுமா சார்.."

"அவர் லண்டன்ல இருக்காருங்க"

"அப்போ, லண்டனுக்கு ஒரு விசா வாங்கிக் குடுங்க சார்"

"ஏன் என்னாச்சு"

"நேத்து வந்த பொடிப்பயனுக்கெல்லாம் ஆஸ்கார் அவார்டு கொடுக்குறானுக... ஏன் இளையராஜா அய்யாவுக்கெல்லாம் கொடுக்க மாட்டாங்களாம்மா? யாரு சார் அது ஏ.ஆர். ரகுமான், நேத்து மொளைச்ச காளான். அந்த பொடிப் பையன் வீடு எங்க சார் இருக்கு.. (ஐயோ) முதல்ல இதுக்கு ஒரு பைசல் பண்ணாம விடப் போறதில்ல... அந்தப் படத்த எடுத்த டைரக்டர மோதல்ல வெட்டுனாத்தான் அவனுங்களுக்கு புத்தி வரும் சார்" என்று கூறியவாறு முழுக்கை சட்டைக்குள் ஒளித்து வைத்திருந்த அரிவாளை சிறிது உருவிக் காட்டினார்.

உடலில் முதலில் நடுக்கம் வருவது தொடையில் தான் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்தேன்
.
"சார் ஏ.ஆர். ரஹ்மான் அமெரிக்காவுல இருக்காரு சார்"

"இந்தாங்க என்னோட பாஸ்புக். இதுல ஆறரை லட்சம் ரூபாய் இருக்கு. எவ்வளவு வேணுமோ எடுத்துக்கோங்க. இதுல அமெரிக்காவுக்கு ஒரு டிக்கெட்.... லண்டனுக்கு ஒரு டிக்கெட் எடுத்துக் குடுங்க."

சும்மா கோபத்தில்தான் பேசுகிறார் என்று பார்த்தால் நிஜமாகவே பாஸ்புக்கை எடுத்து காட்டுகிறார்.

"சார் அங்க போய், எங்க தேடுவீங்க"

"அங்க போய் நான் விசாரிச்சுக்கிறேன் சார்... எவனாவது கால் டாக்சிகாரன்கிட்ட கேட்ட கொண்டு போய் இறக்கிடுவான். அதை நான் பாத்துக்கிறேன். எனக்கு டிக்கெட் மட்டும் போடுங்க போதும்"

"சார் உங்களுக்கு குடும்பம் இருக்கு. 2 குழந்தைகள் இருக்காங்க, ஏன் இப்டி பேசுறீங்க"

"என் குழந்தைகளை அந்த ஆண்டவன் பாத்துப்பான். நான் முன்வச்ச காலை பின் வைக்கப் போறதில்லை"

"சார் அவங்க ரெண்டு பேரும் அடுத்த வாரம் சென்னைக்கு வர்றாங்க சார். சென்னைல அவங்களுக்கு பாராட்டு விழா நடத்துவாங்க... அங்க வச்சுக்கோங்க உங்க ரிவன்ச்சை"

"நிஜமாவா சார்"

"நிஜமாத்தான் சொல்றேன், அதை உள்ள வைங்க"

பாஸ் புக்கை வாங்கிக்கொண்டு வேகமாக நடந்து சென்றார்...

இன்று

"சார்.... இளையராஜா ஐயா மாதிரியான இசை மேதைகள் இசையை உருவாக்குறாங்களே அதுல சந்தோஷம் அதிகமாக.... இல்லை அதை உருகி உருகி என்னை மாதிரி ஆட்கள் ரசிச்சுக் கேட்கிறாங்களே அதுல சந்தோஷம் அதிகமா??..."

"மறுபடியும் கொல்கத்தா ரயில் டிக்கெட் வெயிட்டிங் லிஸ்ட் 72"

இந்த இரவு நேரத்தில் ஹைவேயில் எந்த லாரிக்காரனும் வண்டியை நிறுத்த மாட்டேன் என்கிறான்.