பள்ளி நுழைவாசலிலேயே சுகுணா டீச்சர் கவனித்துவிட்டார். வேறொரு வகுப்பறைக்கு அவசரமாய் மாறிப் போய்க் கொண்டிருந்தவர் நின்றார். "என்ன சார் இன்னிக்கு தேவி வரலையே…! என்னாச்சு அவளுக்கு? !" உண்மையிலேயே அவரது முகத்தில் கவலை படிந்தது.

"உடம்புக்கு முடியலைங்க டீச்சர் கொஞ்சம்போல வீசிங் இருக்குது!"

"நல்ல டாக்டரா பார்த்து காமிங்க சார்…! பொறுப்பா படிக்கிறவ..!"

"பார்த்துட்டுதான் இருக்கிறோம்… நமக்குத் தெரியாம கூலிங் தண்ணி அது இதுன்னு குடிச்சு வெச்சுடுறா. ஆமாம் டீச்சர் … தலைமை ஆசிரியர் இருக்கிறாரா பார்க்கனும்!" நான் தேவிக்கு 'லீவு' சொல்லி தன்னைப் பார்க்க வந்திருப்பதாக சுகுணா டீச்சர் நினைத்திருக்க வேண்டும்.

"இருக்கார் போங்க!" என்று யோசனை ஒன்றோடு அவர் நகரவும் தலைமையாசிரியர் இருந்த இடத்திற்கு திரும்பி நடந்தேன்.

தேவியை முதன்முதலில் ஒன்றாம் வகுப்பில் கொண்டுவந்து சேர்த்தது நினைவுக்கு வந்தது. எத்தனை அழுது ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்?!.

அவள் மட்டுமா?! பல பிள்ளைகள் அப்படித்தான் அழுது அடம்பிடித்தன. புதிய முகங்கள் புதிய. புதிய சூழல்…. எல்லாம் போகப்போக சரியாகிவிடும் என்று நினைத்தால் சில நாட்கள் போகமுடியாது என்று அவள் உட்கார்ந்து விட்டாள். பிறகு பள்ளிக்கு இழுத்து வந்து விடுவது சுலபமல்ல. அப்படியான நாட்களில் அவளை கட்டாயப் படுத்துவதில்லை என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறேன் சரி போகட்டும் இன்று ஒருநாள் மட்டும்தானே என்று ஆனால் அவள் அம்மாவோ அதற்கே தாம்தூம் என்று குதிப்பாள் நாளைக்கே அவள் கலெக்டராவது தடைபட்டதுபோல.

velu saravanan 340சில நாட்களில் இரு என்று சொன்னாலும் தேவி கேட்காமல் பள்ளிக்கு கிளம்பிவிடும் அதிசயமும் நடக்கும். அப்பொழுதெல்லாம் என் மனைவிக்கு அவள் கலெக்ட்டராகி விட்ட சந்தோசம்!.

பள்ளிக்கூடம் என்பது சிறையா?! சரணாலயமா?! பலரும் வற்புறுத்தியும் மனைவி உட்பட புகைந்து பொருமினாலும் தேவியை ஆங்கில பள்ளிகளில் விடாமல் தமிழ் வழியில் அரசு தொடக்கப்பள்ளியில் சேர்ப்பதிலே வெற்றிப் பெற்றேன் என்றுதான் சொல்ல வேண்டும்.

பள்ளியும் படிப்பும் ஒரு சுமையாக இல்லாமல் இருப்பதற்கும் மாலை நேர பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்தால் வீட்டுப்பாடம் அது இது என்று குழந்தையின் நேரத்தை விழுங்கிவிடாமல் விளையாடவும் ஆடவும் பாடவும் சுதந்திரம் என்பதை கொஞ்சமேனும் உணர்வதில் மற்றவற்றை விட அரசுப் பள்ளிகள் கொஞ்சம் தாராளமாகவே நடந்து கொள்கின்றன என்று தோன்றுகிறது.

ஆனாலும் ஆங்கிலப் பள்ளிகளுக்கு இணையாக பெற்றோர் மனக்குறையை போக்குகிறேன் என்று தற்போது அரசுப் பள்ளிகளும் போட்டியாக டை, சூ, ஆங்கிலவழி பாடப் பிரிவு என தம்முடைய அடையாளங்களை தொலைத்து வருவது மனதை வருத்துவதாக இருக்கிறது!. எப்படியோ அப்துல்ரகுமான் சொல்வதுபோல பாடப்புத்தகங்கள் குழந்தைகளை கிழித்துவிடாமல் இருந்தால் சரிதான்.

தலைமை ஆசிரியர் அறையில் சிறுவர்கள் இருவர் ஒருவர் காதை மற்றவர் பிடித்துக் கொண்டு மாற்றி மாற்றி 'கால்முட்டி' போட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று எழுந்து நின்றனர். புது ஆள் ஒருவரை கண்டுவிட்டதில் லேசான வெட்கம் பரவியது அவர்களிடம்.

ஏதோ கோப்பில் மூழ்கியிருந்த தலைமை ஆசிரியர் முட்டி போடும் தாளகதி நின்றதுதான் போதும் ஏறிட்டுப் பார்த்து அதட்டுவதற்கு வாயெடுத்தவர் வாசலில் நிழலாடுவதை கண்டதும் 'வாங்க சார்' எங்க இப்படி?!. என்றார்.

சிறுவர்களில் ஒருவன் ஓடிவந்து நாற்காலியை நாகர்த்தி வைத்தான். ஒரு கணம் பரிதாபமாகப் பார்த்துவிட்டு பிறகு ஓரமாகப் போய் தன் நன்பனுடன் வேலையைத் தொடங்கினான்.

தரையில் சிறுவர்களின் கால்கள் உரசும் சத்தம் மனதை எதுவோ செய்வதை முகத்தில் ஒருவாறு கண்டுகொண்ட தலைமை ஆசிரியர் "எல்லாம் திமிரடியான பசங்க சார்" எங்க காலம், உங்க காலம் போலெல்லாம் இப்ப இல்ல சார்!. வகுப்பு டீச்சர் வர்றதுக்குள்ள அத்தனை லூட்டி!". என்றார்.

"பசங்க தானே சார்!" என்று அவர்களைப் பார்க்கவும், பசங்களா?!. பற்களை கடித்தார் தலைமை ஆசிரியர்;.

உள்ளே வந்தவர் வேறு ஏதும் தங்களைப் பற்றி சொல்லாதது அந்த சிறுவர்களுக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும் என்பதை போடும் முட்டிகளின் தாளகதி சொன்னது.

கோப்புகளை மூடிவைத்த தலைமை ஆசிரியர், "சொல்லுங்க" என்று முகத்தை பார்த்தார்.

"சார் நாங்க பத்து பதினைஞ்சு நண்பர்கள் சேர்ந்து ஒரு இலக்கிய அமைப்பு வெச்சுருக்கோம். வருசத்துல ஒண்ணு, ரெண்டு அரங்க நிகழ்ச்சி ஏற்பாடு செஞ்சு படைப்பாளிகளை அதுல கலந்துக்க வெப்போம்.!".

பரவாயில்லயே….! இதெல்லாம் செய்யறீங்களா…! தலையாட்டிக்கொண்டார் உற்சாகமின்றி.

நானும்கூட உங்கவயசுல இப்படியெல்லாம் இலக்கியம்,கிலக்கியம்னுல்லாம் அலைஞ்சு திரிஞ்சவன்தான்.

"----------"அவரில்லை?! "------------"அவரையெல்லாம் கொண்டுவந்து விழா நடத்தி ஏக தடபுடல் செஞ்சிருக்கேன் சார்!" அதெல்லாம் அப்ப !.

அவர் சொன்ன அந்த "…………" அவர் எந்த வகையில் இலக்கியவாதி என்று புரியவில்லை! எனினும் கொடுமைக்காக மையமாக சிரித்து வைத்துவிட்டு "இப்போ, கொஞ்சம் புதுசா ஒரு நாடகம் போடலாம்னு இருக்கோம்!"

ஓகோ…! வேசமெல்லாம் கட்டுவீங்களா…! என்றார் சற்றே உரக்க சிரித்து. 'முட்டி' சிறுவர்கள் இப்போது திரும்பி பார்த்துவிட்டு தங்களுக்குள் கண்களால் சிரித்துக்கொள்வது போலிருந்தது.

"இல்ல சார் இதுக்குன்னு நண்பர்கள் இருக்காங்க, வெளில".-நான் நெளியவும்.

நாற்காலியை பின்னுக்கு நகர்த்தி கைகளை கோர்த்து உயர்த்தி முறித்துக் கொண்டே சிறுவர்கள் பக்கமாக தலைமை ஆசிரியர் திரும்பவும் அவர்களது அச்சம் சுருதியை வேகம் கூட்டியது.

"நாங்க ஏதாவது செய்யனும்னு நினைச்சு வந்திருக்கீங்க சரிதானே?" பற்கள் தெரிய தான் நினைத்தது சரிதான் என்பதுபோல சிரித்தார்.

"வேலுசரவணன்! – கேள்விபட்டிருக்கீங்களா…? அவருதான் !."

"யாரு சார்….. உங்கள் நண்பரா ?!" அவருக்கு வேலுசரவணனை தெரிந்திருக்கவில்லை என்பது புரிந்தது.

"குழந்தைகளுக்காக நாடகம் போடறவரு சார் !. நல்ல கருத்துகளோட, நகைச்சுவையா அற்புதமா மேடையேத்துறவர்…. கேள்விபட்டதில்லையா? நம்ம அமெரிக்க சனாதிபதி கிளிண்டென்லாம் பாராட்டினவர் சார்…!"

மேசை இழுப்பறையை திறக்கப் போனவர் நிதானித்தார். வேலுசரவணனின் நேர்காணல் வந்திருந்த ஒரு வார இதழை எதற்கும் இருக்கட்டும் என்று எடுத்து வந்தது நல்லதாயிற்று. கைப்பையைத் திறந்து எடுத்து நீட்டி,

"குழந்தைங்க மென்மையானவங்க அவங்க உலகம் வேற…. இப்படியான கருத்துள்ளவரு தன்னோட நாடகங்கள்ல அதுமாதிரியான விசயங்கள் நெறைய சொல்லிவர்றவர்…!."

தலைமை ஆசிரியர் தனது மூக்குக் கண்ணாடி வழியாக முழித்தார். என்ன விளங்கிக் கொண்டார் என்று புரியாவிட்டாலும், திடீரென்று என்ன தோன்றியதோ தெரியவில்லை, தாளகதியில் இயங்கிக் கொண்டிருந்த பையன்கள் இருவரையும் சைகை காட்டி நிறுத்தச் சொல்லிவிட்டு, வேலுவரவணன் இடம் பெற்றிருந்த பக்கத்தை எடுத்து "இவரா?!" என்றார்.

"ஓகோ பபூன் வேசமெல்லாம் போட்டு அசத்துராரே…! இது மாதிரியெல்லாம் ஜெமினி சர்க்கசுல பார்த்ததுதான் சார்….!."

தண்டனைக்குள்ளான 'முட்டிச்சிறுவர்கள்' தமது தயக்கத்தை உதறிக் கொண்டு இப்போது தலைமை ஆசிரியர் முன்னால் வந்து நின்று ஆவல் அடங்காமல் எட்டிப் பார்த்தனர். அவரோ எரிச்சலோடு கடிந்துகொண்டு இருவரையும் வகுப்பறைக்கு விரட்டியவர் அப்படியே 'முதல் பீரியட்' முடிஞ்சதுக்கான பெல்லை அடித்துவிட்டு செல்லுமாறு உத்தரவிட, பையன்கள் சந்தோசமாக முந்திக் கொண்டோடவும், "இதிலே நான் என்ன செய்ய வேணும்?!" என்றார் தலைமை ஆசிரியர்.

கூட்டிலே சிறைப்பட்ட பறவை விட்டோடுதல் போல அந்த சிறார் போன திசையை பார்த்திருந்துவிட்டு,

"இங்கே, நம்ம பசங்க பார்க்கறாப்போல வேலுசரவணன் நாடகம் ஏற்பாடு செய்யலாம்னு அமைப்புல முடிவு செய்தோம்….! உங்க அனுமதி வேனும்!"

"ஓகோ….!"

"செலவெல்லாம் எங்களோடது. ஒரு பள்ளிநாளா பார்த்து நேரம் ஒதுக்கித் தந்தாபோதும்!"

"முக்கியமா, கொஞ்சம் சுறுசுறுப்பான, தனக்குத் தேவையான பசங்களை நம்ம பள்ளிலேர்ந்தே தேர்ந்தெடுத்து தன்னோட நாடகத்துல சேர்த்துதான் செய்வாரு…!. நம்ம புள்ளைங்களுக்கும் ரொம்ப சந்தோசமா …. வித்தியாசமான அனுபவமா இருக்கும்…!."

தலைமை ஆசிரியர் கொஞ்சம்போல யோசித்தார். "எக்ஸாம் வேற நெருங்கிட்டிருக்கு…. ப்ராக்டிசு, அது, இதுன்னெல்லாம் இழுத்துக்கிட்டு போகுமே சார்!... அரசு பள்ளிக்கூடம் வேற… மேலேர்ந்து போட்டு புடுங்கிடுவானுங்க… ஏற்கனவே லொட்டு, லொசுக்குன்னு எதுக்கெடுத்தாலும் எங்களதான் புழிஞ்சு எடுக்குறாங்க!..."

"சரி சார் நீங்க யோசிச்சு சொல்லுங்க!".

தொடர்பு எண்ணை எழுதி கொடுத்துவிட்டு வரும் வரையிலும் அவர் ஆழ்ந்த யோசனையில் தெரிந்தார்.

அன்று மாலையே கொடுத்திருந்த அலைவரிசைக்குள் வந்தார் தலைமை ஆசிரியர். "சார் உங்க விருப்பம்போல நம்ம பள்ளிக்கூடத்திலேயே நாடகம் போடறதுல எனக்கு ஒண்ணுமில்லை….!. நீங்க என்ன செய்யறிங்கன்னா…. சி.ஈ.ஓ.-வை எதுக்கும் ஒரு தடைவ பார்த்துருங்க! எல்லாம் ரொம்ப சுலபமா முடிஞ்சுடும்.!. அவரு முறையா சொல்லிட்டாலே போதும்… நாம ஜம்னு நடத்திடலாம்.!."

"நம்ம ஆசிரியருங்களே டெக்கரேசன்லாம் வெளுத்து வாங்கிடுவாங்க… என்ன சொல்றீங்க?!"

லேசான சந்தேகம் துளிர்த்தது, "சார் அந்த நேர்காணல் படிச்சிங்களா… வாரஇதழ்ல!"

"படிச்சேன்….! படிச்சேன்…! நல்லா கவுண்டமணி, செந்தில் கணக்கா காமெடி பண்ணுவார் போல!. கலக்கிடுவோம்… கலக்கிடுவோம் சார்!"

மிக மிக எளிமையான பொருட்களோடும், வசதிகளோடும் தனது நாடகங்கள் நடத்தப்படுவதாக நேர்காணலில் வேலுசரவணன் சொல்லி வருகிறார். அலைபேசியை நிறுத்தி கீழே வைக்கவும் மனைவி புன்னகைத்தாள். நடைமுறை உலகம் தெரிந்தவள்.

'உதவி தொடக்கக் கல்வி அலுவலர்' பலகையை அடையாளம் கண்டு படியேறியபோதே தெரிந்த ஆசிரியர் ஒருவர் புன்னகை மாறாமல் எதிர்பட்டார்.

"என்ன சார் டிராமாவெல்லாம் போடுறீங்களாம்… எங்கள வெச்சு காமெடி கீமெடி பண்ணலியே!" என்றுவிட்டுப் போனார்.

செல்போனே இல்லையென்றாலும் கூட, மற்றவர்களை பார்க்கிலும் இந்த ஆசிரியர்களுக்குள் செய்திகள் சடுதியில் பரவிவிடுவது வியப்பான ஒன்னுதான்.

நண்பர் ஒருவரையும் கூடவே அழைத்துப்போனது நல்லதாயிற்று.

கல்வி அலுவலர் ஒடிசல் உடம்புடன் சற்றே நெடுடுப்பாக இருந்தார். தற்போதுதான் தான் பொறுப்பேற்று வந்துள்ளதை சொல்லி பேச்சைத் துவக்கினார்.

அவரது மேசையில் தலைமைஆசிரியரிடம் கொடுத்து வந்திருந்த அந்த வார இதழ் தன் அட்டை உதிர்ந்து கசங்கி கிடந்தது.

"இலக்கிய அமைப்பிலேர்ந்து வருகிறோம்" என்றதுமே, "சார் பேசினார்! இது அரசு பள்ளிக்கூடம் ஏன் இங்க நடத்த விரும்பறீங்க?" கேள்வியோடு புன்னகைத்தார்.

நண்பர் முகத்தைப் பார்க்கவும், "சார் அது, நான் படிச்சு வளர்ந்த பள்ளிக்கூடம், கலை இலக்கிய வகையில ஏதாவது இங்க செய்யலாம்னு ஒரு விருப்பம். வேலுசரவணன் குழந்தைகளுக்காக நல்லதா, சிறப்பா செய்யுறவர் அதான்!".

தலையையும், கால்களையும் ஆட்டியபடி சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தவர், குறுக்கிட்டார், "உங்க ஆர்வம் புரியுது நான் இதுக்கு முன்னாலே வேலுசரவணனா?! அவர் நிகழ்ச்சி ஏதும் பார்த்ததில்லை…. நாடகம், கலை நிகழ்ச்சின்னாலே பலரும் வருவாங்க போவாங்க கூடாதுன்னு தடுக்க முடியாதில்லையா…! திடுதிப்புன்னு அதிலே அரசியல், கிரசியல்லுன்னு ஏதும் பேசி வம்பாய்ட்டா சிக்கல்! அப்படியேதும் கிடையாதே?!."

அவசரமாக தலையாட்டி நாங்கள் மறுக்கவும், அவரே தொடர்ந்தார். "எங்க பகுதியில் நான் முன்னே வேலை செய்த ஸ்கூல்ல டான்சு, டிராமான்னு போடப்போய், அரசியல் பேசினதா கலாட்டா ஆயிடுச்சி சார்! ஏற்பாடு செஞ்சிருந்த ஆசிரியர் மேலேயே கைவெச்சுட்டாங்க!" அந்த நிகழ்வின் பாதிப்பு அகலாதவர் போல கண்விரித்து பேசினார் ஏ.ஈ.ஓ.

"சார் வேலுசரவணன் குழந்தை உலகத்தை தலைமேல் வெச்சு கொண்டாடுறவர் அதிலே நீங்க நெனைக்குற அரசியல் ஏதும் கிடையாது. இன்னும் சொல்லப்போனா 'மெசேஜ்'ன்னுல்லெம் தனியா கிடையாது. அவரே என்ன சொல்லுவார்னா போதனைங்கறதே தெரியாம செய்திகள் அரங்குலேர்ந்து குழந்தைகள் மனசுக்குள்ளார போய் சேர்ந்திடும்னு. குழந்தைங்க இயல்புக்கு மாறா, அந்நியமா துருத்திகிட்டு இருக்கிறாப்போல அவரது நிகழ்ச்சி இருந்தா அதுங்க கொஞ்சம் நேரம்கூட ஒரு இடத்துல உட்காராதுங்க சார்!"

அவர் முகத்தில் ஏதும் புரிந்ததற்கான பொருளை தேடுவதை நண்பர் இந்நேரம் கைவிட்டிருக்க வேண்டும்.

இப்போது நண்பர் முறை, "சார்! இதுக்கு முன்னால வேலுசார் நாடகம் பார்த்திருக்கோம் அதும் ஒரு ஸ்கூல்லதான் போட்டாங்க. தேவலோகத்து யானை அப்புறம்… கடல்பூதம்னு சில நிமிச நாடகங்கள்தான். இதுல கடல்பூதத்துக்கு நல்ல வரவேற்பு. பசங்க, பெற்றோர் எல்லாம்!".

"நடிக்கிறவங்க, பாக்குறவங்க மேடை… அப்படியெல்லாம் கிடையாது! இந்த கடல்பூதம் இருக்கே திடீர்னு மேலேர்ந்தோ, பக்கவாட்டிலோ, குழந்தைங்க சமுத்திரத்திலேர்ந்தோ படீர்னு கிளம்பும் பாருங்க!, புள்ளைங்க தானும் அந்த காட்சில ஒன்றிருவாங்க!" நண்பர், ஏதோ அந்த நாடகம் தன் கண்முன்னே நடப்பதுபோல உற்சாகமாக கைகளை ஆட்டி பேசினார்.

"அப்படி கடல்பூதம் ஆரவாரமா வரும்போது பல குழந்தைங்க சந்தோசத்துல குதிக்க ஆரம்பிச்சிடுங்க. சிலது நிசமோன்னு பயத்துல அழுதிடுங்க…ஆனா எளிமையான நாடகம் கூட குழந்தைங்களுக்கு பிருமாண்டமா தோணுறமாதிரி செஞ்சிடுவார் வேலு சார் !"

இப்போது உதவி கல்வி அலுவலுருக்கு முகம் சுருங்குவதைக் கண்டு, நண்பர் பேச்சை நிறுத்திக் கொண்டார்.

"என்ன சார் இது?! காமெடி, கலாட்டா அப்படி, இப்படின்னல்லாம் சொன்னீங்க! இப்ப என்னடான்னா குழந்தைங்க பயப்படும், அழும்ங்கறீங்க! ஹார்ட் வீக்கான குழந்தைங்க இருந்தா நிலைமை என்னாகும் சார்?!."

"கெவர்மென்ட், பேரண்ட்ஸ் அவங்கள விட்டா பலருக்கும் நாளைக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குமே!." பதறினார்.

நண்பருக்கு தான் ஏதோ வாய்விட்டு விட்டதாக தோன்றி தவித்தார்!

"சார் நீங்க என்ன செய்யறீங்க, பேசாம அது என்ன டிராமாவோ… வேலுமணியோ அவர்ட்ட ஸ்கிரிப்ட் வாங்கி வந்து குடுங்க பிறகு பார்க்கலாம் சரியா?!" எழுந்து கொண்டார்.

வீட்டுக்குள் நுழைந்ததுமே குழந்தை வந்து கட்டிக்கொண்டாள்.

"அப்பா…! வேலு மாமா எப்போ எங்க பள்ளி;கூடத்துக்கு வருவாங்க?! சிணுங்களோடு வந்தது கேள்வி.

நேற்றிரவு காய்ச்சல் குறைந்து, உதடுகள் காய்ந்து, முகம் வெளுத்திருந்தது. காய்ச்சல் அனத்தலிலும் கதை கேட்காமல் உறங்க முடியாது பிடிவாதம். இது வழமையானது ஏதாவது ஒரு கதை சொல்லியாக வேண்டும். அவளுக்கு சொல்லும் கதைகளில் தானும் இருக்கவேண்டும் என்பது செல்ல மகளின் ஒரே நிபந்தனை, அந்த கதைகள் இரவு, பகல் பாராது காடு மேடெல்லாம் சிறகு முளைத்து சுற்றிவரும் விசேடமாக எங்கள் கதைக்குள் வேலுசரவணன் என்ற வேலுமாமாவும் உண்டு. எங்கள் கதைக்குள் அவர் வந்து சேர்ந்ததே தனிக்கதை!.

"அய்ராப்பசியை வாசிக்கப்போக வேலுமாமாவை அவளுக்கு சொல்லவேண்டி வந்தது அதே நேரத்தில், வேலுமாமா தொலைக்காட்சியிலும் ஒரு தொடர் செய்து கொண்டிருந்தார். ஊர் தொலைக்காட்சியெல்லாம் குழந்தைகளுக்கானவை என்று கலாசார சீரழிவை மேற்கொண்டு காட்டப்படும் நிகழ்ச்சிகள் குழந்தைகளை கட்டிப்போட்டு அவர்களது பருவத்தை திருடிக்கொண்டிருக்க, மகள் தேவியையோ வேலுமாமாவே ஈர்ப்பதாகவிருந்தார். என்ன ஆனதோ… அவர் வந்துகொண்டிருந்த அந்த ஒரு உருப்படியான தொடரும் நின்றுவிட, வீட்டுத் தொலைக்காட்சிப்பெட்டி பார்க்க ஆளின்றி பரணுக்குப் போயிற்று. வேலுமாமா இல்லாத தொலைக்காட்சி குழந்தைக்குப் பிடிப்பதாய் இல்லை. அன்றிலிருந்துதான் இரத்தமும், சதையுமாக எங்கள் தேவிக்குட்டியின் கதைகளோடு ஒட்டிக்கொண்டார் வேலுமாமா.

வேலுமாமாவிடம் பேசப்போகிறேன் என்றதும் குழந்தை சந்தோசமாகி விட்டாள். கைவேலையாக இருந்த மனைவி எட்டிப்பார்த்து, "நிசமா பேசப்போறிங்களா…..இல்ல வேலுமாமா கதைபோல இதுவும் கப்சாவா!" என்றாள், கரண்டியை ஆட்டிக்கொண்டு.

"வேலுமாமா இருக்கீங்களா?!"

"சொல்லுங்க சார் ! வேலுமாமான்னு பேசினாலே அது நீங்கதான் தெரியும் சொல்லுங்க!"

"சொன்ன தேதியிலேயே நீங்க வரலாம்… இங்க அகலப்பாதை போடுறதால இப்ப ரயில் வசதி இல்லை…! பாண்டிச்சேரிலேர்ந்தே நம்ம ஊருக்கு பேருந்துதான் உண்டே..! வந்துருங்க. மத்ததை இங்கே பேசிக்கலாம்!.

"நிச்சயமா…! கட்டுமாவடி, மணல்மேடு மட்டுமில்ல கடலோரமெல்லாமே நம்ம சொந்த ஊர்தான் உங்க ஏரியாவும் அப்படித்தான்".

அழைபேசியை வைத்தும், வைக்காததுமாக நண்பர் அடித்தார்.

"பாலு…! என்னாச்சு ?!"

"இருக்குற ரெண்டு மூனு ஸ்கூல்லேயும் பேசி;ட்டேன்! யாரும் பிடி குடுக்க மாட்டேங்கறாங்க ! எந்த இடமா இருந்தாலும் ஒரே நடைமுறைதானாம்…! வேறொரு ஸ்கூலுக்கு ரோட்டைத்தாண்டி பசங்களை கூட்டிட்டு வர்றதெல்லாம் 'ரிஸ்க்கு', ஏற்கனவே பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துன்னல்லாம் செய்தி வருது. பசங்க விசயத்துல அரசு எச்சரிக்கையா இருக்கு, மேலே கல்வி அதிகாரிங்ககிட்ட பேசுங்கன்றாங்க.!" "அதோட பெற்றோர் ஆசிரியர் சங்கம், வார்டு உறுப்பினர், ஆளும்கட்சி வட்டச் செயலர் இவங்களையும் பார்த்து பேரெல்லாம் போட்டு அழைப்பிதழ் அடிக்கனுமாம் அப்புறம் முறையா அத…!" நண்பர் பேசிக்கொண்டே போக.

"பாலு..! வேலுசரவணனை வரச்சொல்லியாச்சு நம்ம நிகழ்ச்சி நடக்கும்!"

உறுதியான குரலுக்கு மறுமுனையில் பாலு திகைப்பதாக இருந்தது.

"நம்ம தெருவிலேயே கொஞ்சம் பசங்க இருக்காங்க…! பக்கத்துல, அங்க, இங்கன்னு திரட்டிக்கலாம். நம்ம வீட்டிலே ஒத்திகை! மாரியம்மன் கோயில் திடல் இருக்கில்லே… அங்தோன் தேவலோகத்து யானை வரப்போகிறது!"

செல்லை நிறுத்துவதற்குள்ளாகவே குழந்தை அருகில் நின்று நச்சரித்தாள்.

"அப்பா வேலுமாமா.?!"

"வருவாரும்மா..! இத்தனை நாள் நம்ம கதையிலதான வருவார் … இனி அவரு கதையில, நாடகத்துல நீ வரப்போற!"

"ஹய்யா…! மாமா வேலு கதையில நான் வர்ற கதையை சொல்லு !" என்றாள் கதை கேட்கும் அதே பிடிவாதத்தோடு.

- இரா.மோகன்ராஜன்