“தோழர் உங்ககிட்ட எத்தன நாளா கேட்டுகிட்டு இருக்கேன் பக்கத்து கிராமங்களுக்கு கூட்டிட்டுப் போங்கன்னு” சற்று செல்லக் கோபத்தோடு கேட்டேன்.

அவர் சிரித்துவிட்டு “அப்போ நாலரை மணிக்கு என்னை எழுப்பி விடுங்க” என்றார். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை!

எங்கள் கட்சி அலுவலகம் வாடிப்பட்டியில் இருக்கிறது. அவர் எங்கள் மாவட்டச் செயலாளர்.

மகிழ்ச்சிக்கு இரண்டு காரணங்கள்..... ஒன்று: கிராம மக்களோடு பழகுவதில் கிடைக்கும் அனுபவங்களும் அன்பும். இரண்டு: தோழரோடு நேரம் செலவழிப்பது. எங்கள் எல்லோருக்குமே உன்னதமான தருணம்.. அதை கல்வி கற்கும் காலம் என்று தான் குறிப்பிட வேண்டும்.

சரியாக மாலை ஐந்து மணிக்கு அலுவலகத்திலிருந்து கிளம்பினோம். முதலில் கச்சைகட்டி செல்வதாக திட்டம். பைக்கில் சென்றோம். மண் சாலை எங்களை சிறப்பாக வரவேற்றது.

நான் மதுரை வாசி.... நெரிசலையும் இரைச்சலையும் சகித்துக் கொண்டு வாழ்பவன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்த மண் சாலைகளையும் பரபரப்பு இல்லாத மனிதர்களையும் பார்த்து பெருமூச்செறிவதுண்டு.

ஒரு வழியாக முத்தம்மா தோழர் வீட்டை அடைந்தோம். சிறிது நேரத்தில் அருகிலுள்ள தோழர்களை சந்திக்க நாங்கள் மூவரும் நடையைக் கட்டினோம்.

“அந்த சந்துல இருக்குதுல்ல ரெண்டாவது வீடு.. நான் ஏற்கனவே சொல்லியிருந்தேனே..பதினாலு வயசுப் பொண்ணு. ஹ்ம்ம்.....ஒரு வருசம் ஆச்சு” என்றார் தோழர்.

“இப்போ அந்தப் பொண்ணு எங்க இருக்கா?”

“புருஷன் வீட்டுல தான்.”

அவர் முன்னரே அவளது கதையை சொல்லியிருந்தார். அதை என்னால் மறக்க முடியவில்லை. மிக ஆழமாக மனதில் பதிந்திருந்தது.

ஸ்கூலில் அன்று பி.டி பீரியட் இருந்தது. கோ கோ விளையாட்டில் அவள் கெட்டிக் காரி.. கீ கொடுக்க ஓடிக் கொண்டிருந்தவள் திடீரென வயிற்றை பிடித்துக் கொண்டு சுருண்டு விழுந்திருக்கிறாள்.
 
“ஒங்க பொண்ணு பெரியவளா ஆகிட்டா. பாத்து கூட்டிட்டுப் போங்க” என்றார் தலைமையாசிரியை.

மூன்று நாட்களுக்கு வீடே விழாக் கோலம் பூண்டு விட்டது. சடங்குகளும் முடிந்து விட்டது.

இரண்டு வாரங்கள் கடந்து விட்டது. இன்னமும் உதிரப் போக்கு நிற்கவில்லை.. அவள் நிலை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே இருந்தது.

வைத்தியம் பார்க்கலாம் என்று முடிவெடுத்து தோழரிடம் யோசனை கேட்டிருக்கிறார்கள்.

அவர் விஷயத்தைக் கேட்டதும் பதறிப் போய்விட்டார். மதுரையில் உள்ள கைதேர்ந்த ஹோமியோபதி மருத்துவரிடம் உடனே அழைத்துச் செல்லுமாறு வலியுறுத்தியிருக்கிறார்.

இரண்டு நாட்களில் அவளது உடல்நிலை சரியாகிவிட்டது. முதல் வேலையாக தோழரைப் பார்த்து நன்றி கூறியிருக்கிறார்கள். இதில் தான் அவர் வாழ்க்கையின் முழுமையை உணர்கிறார் என்பதை அவர் அருகில் இருந்து ரசித்து வியந்தவன் நான்!

ஆனால் அவரது மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. சில மாதங்களில் அவளது பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைத்தனர் என்பதை அறிந்த போது அவர் நொந்து போய்விட்டாராம்.

அவள் பெற்றோர் இன்று வரை தோழரை சந்திக்கத் தயங்குகிறார்கள். அவர் இதை விரும்பவில்லை என்பது அவர்களுக்குத் தெரியும்.

“தோழர் கொஞ்சம் நில்லுங்க”

என்ன என்பது போல் பார்த்தார்.

“பாப்பா ரொம்பக் கஷ்டப்படுறா. மேலு காலெல்லாம் வலிக்குதாம். டாக்டரு கிட்ட கூட்டிடுப் போவணும்” என்றாள். அவள் அந்தப் பெண்ணின் சித்தியாம். அவளது தாய் அருகில் தான் நின்று கொண்டிருந்தாளாம். ஆனாலும் தோழரை சந்திக்க அவளுக்குத் துணிவில்லையாம்.

“இப்போ தான் பாப்பானு தெரியுதா?” என்றார்.

அவள் தலை குனிந்தாள்.

“போன் பண்ணிக் கேட்டு சொல்றேன். சீக்கிரமாக் கூட்டிடுப் போங்க” என்று கூறிவிட்டு பதிலை எதிர்பார்க்காமல் நடந்தார்

“ஏன் இப்டில்லாம்?” எனக் கேட்டேன்.

“எல்லாம் பயம் தான்....கல்யாணம் பண்ணி வைக்கிறது சேப்டினு நினைச்சுக்குறாங்க”

“ஓ.ஹோ.....பிரச்சனையே புருஷன் தானே?”

“அக்கரைக்கு இக்கரை பச்சைனு அவங்க நினைக்குறாங்க .ஆம்பிளைங்களை நம்பாதீங்கன்னா எந்தப் பெண்ணும் கேக்குறது இல்ல” என்றார்.

இப்போது வரை அவள் பெயர்கூட எனக்குத் தெரியவில்லை. அவளுக்கு 15 வயதை தாண்டியிருக்க வாய்ப்பே இல்லை. உடல் இன்னும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் பருவம். அவள் எடை குறைந்த குழந்தை என்றும் அவர் கூறியிருந்தார். எந்த வகையிலும் உடலுறவில் ஈடுபட அவள் இன்னும் தகுதி பெறவில்லை.
 
“ஆனா ஒன்னு தோழர்.. பொண்ணாப் பிறக்கக் கூடாது. அப்டியே பிறந்தாலும் கிராமத்துல பிறக்கக் கூடாது” என்றேன்.

அவர் சிரித்தார்.