விழுந்தடித்துக்கொண்டு பார்த்தியை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போனபோது, ஆளைவிடு என்கிற மாதிரி பக்கத்து வீட்டுக்காரர் கழண்டு கொண்டார். ஆறுமாதத்தில் ஒரு உயிர் நண்பனை இப்படி பார்க்க முடியுமா?

அவன் வீட்டுக்கு சொல்வதா இல்லை பயமுறுத்துவதாகிவிடுமா? சுகா என்ன ஆனாள்? நான் டாக்டரைப் பார்க்க முயற்சித்தேன்.

இருளும் தனிமையும் பயமும் அலைக்கழித்தது. டீ குடித்ததை சாக்கடையில் ஓங்கரித்தேன். சுகாவிற்கு 'பார்த்தி நாட் வெல்' என்று மெசேஜ் போட்டேன். இந்த கடுமையான நிஜத்தைவிட, சுகாவிற்கும் பார்த்திக்கும் இடையிலான காதலுக்கு செல்வதற்கு மனம் ஏங்கியது.

சுகாவிடம் இருந்து பதில் இல்லை. தெரியாமல் போய்விட்டால் அவள் என்ன பாடுபடுவாள் ? மறுபடி 'பார்த்தி அட்மிட்டேட் இன் ஹாஸ்பிடல்' என்று மெசேஜ் செய்தேன்.

காதல், கடன், கல்யாணமாகாத அக்கா, பிரச்சனைகள் பலவிதம். உலகில் இருப்பதுதான். இந்த அடுத்தவர் பிரச்சனையை நம்மதாக செய்துகொள்வது ஒருவியாதி.

மேலும் இந்தமாதிரி கூட அழத் தயாரில்லாதவர்களை யாருக்கு பிடிக்கும்? அதிலும் இந்தப் பெண்கள்........

முதல் ஆப்பு பிரெண்ட்ஸ்க்குதான். எனக்கும் பார்த்திக்கும் இடைவெளி அதிகமானது.

சுகாவிடமிருந்து ஒரு மெசேஜ். டோன்ட் மெசேஜ். எனக்கு குப்பென்று ரத்தம் தலைக்கு ஏறியது. நான் பார்த்தி ஹாஸ்பிடலில் என்று போட்டேன். நீ போடுகிற ஒவ்வொரு மெசேஜிற்கும் அடி விழுகிறது என்று பதில் வந்தது.

அந்த இரவைக் கடப்பதற்குள் தன்னிரக்கமும், கோபமும், அவமானமும், காதலிப்பவர்களை ஒருநாள் முழுக்க இந்தமாதிரி இடத்தில் உட்காரச்செய்ய வேண்டும் என்று ஆங்காரமும் குழப்பியது.

நான் சுகாவைப்பற்றி ரொம்ப யோசிக்கவேண்டாம் என்று நினைத்துக் கொண்டே ஒரு அழுத்தமான சித்திரத்தை வரைந்து கொண்டிருந்திருக்கிறேன். பார்த்தி அவளிடம் பிடிவாதம் பிடித்தது, ஜெயித்தது, தொடர்ந்து ஜெயித்துக் கொண்டிருந்ததை சொல்லி இருந்தான். அவனை ஒரு மனிதனாகப் புரிந்துகொண்டு தன் வாழ்க்கையை நிச்சயித்துக் கொண்ட சுகா என்ன ஆனாள்? எது அவளை முற்றிலும் விலகச்செய்தது?

பார்த்தியை அவன் மனிதர்களிடம் விட்டுவிட்டு சுகா வீட்டிற்குப் போனேன். எனக்கு எதை நியாயப்படுத்திக்கொள்ள வேண்டும்?

நான் கேட் திறந்து உள்ளே போய் என்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும்போதே சுகாவின் அண்ணன் அடிக்கப் பாய்ந்தான். நான் அவன் கையை முறுக்கினேன். கொஞ்சநேரம் அந்த இடம் கூச்சலும் குழப்பமும் அவரவர் விடுதலையாகவும் இருந்தது.

சுகாவைப் பார்க்க முடியவில்லை .

நான் சுகாவை அதன்பின் பார்த்தது ஒரு பஸ் நிறுத்த மோட்டலில். இயல்பாக பேசிக்கொண்டிருந்தோம். பார்த்தியைப்பற்றி பேச்சு வந்தது.

சுகா மவுனமானாள். சேற்றை தாண்டிக்கொண்டு பாத்ரூமுக்கு போகிறவர்களை, மோட்டலின் முன் உள்ள கடையில் தொங்கும் புத்தகம் வாங்குபவர்களை, சிகரட் பிடிப்பவர்களை, டீ குடிப்பவர்களை, குழந்தைகளை சிறுநீர் கழிக்கச்செய்பவர்களை, வேர்க்கடலைக்காரனை ........
    
சுகா என்னிடம், "வீட்டில் அடிச்சாங்க". அந்த முதல் அடியின் வலியும் அவமானமும் அவள் கண்களில் வந்து போனது. "ஆனா......... அதெல்லாம் ஒண்ணுமில்ல .........". மறுபடியும் அழுத்தமான மவுனம். அப்போது அந்தப் பெண்ணின் மீதிருந்து ஒரு தீரா துக்கத்தின் மொழி அலைஅலையாய் வெளிப்பட்டது.

ஒன்றும் பேசாமல் சுகா தலையசைத்து கிளம்பிப்போனபோது என்மனம் லேசானது.
       
- இந்திரா பாலசுப்ரமணியன் (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)